ஸ்ரீ வைஷ்ணவம்:
லக்ஷ்மிநாதனான ஸ்ரீ மந் நாராயணனே பரம்பொருள்.
பகவத் கைங்கர்யம், பாகவத கைங்கர்யம், ஆச்சார்ய கைங்கர்யம் என்று ஸ்வாமி எம்பெருமானார் காட்டிய வழியில் நடப்பது .
” ஸ்ரீ வைஷ்ணவ லக்ஷணம் “
ஸ்வாமி எம்பெருமானார் சாதித்த ஸ்ரீவைஷ்ணவ லக்ஷணங்களில் சில:
1, ஸ்ரீ பாஷ்யத்தைக் கற்க வேணும், அல்லது
2. திருவாய்மொழி முதலான திவ்யப் பிரபந்தங்களைக் கற்க வேணும், அல்லது
3. திவ்ய தேசங்களில் வாசம் செய்ய வேணும், முடியாமல் போனால்
4. மேலக்கோட்டை என்னும் திவ்யதேசத்தில் ஓர் இரவாவது தங்கி எம்பெருமான் கைங்கர்யத்தில் ஈடுபடவேணும், முடியாமல் போனால்
5. மகாபாகவதர்களுக்கு கைங்கர்யம் செய்ய வேணும், அதுவும் முடியாமல் போனால்
6. த்வய மகா மந்திரத்தை அர்த்தத்தோடு எப்போதும் அனுசந்தானத்தில் கொள்ளவேணும்
7. ஸ்வாமி எம்பெருமானார் நமக்கு ப்ரசாதித்த அர்த்த விஷேஷங்களைத் நெறி தவறாமல் சிந்தனை செய்வோம்.
ஸ்ரீவைஷ்ணவன்/பஞ்ச ஸம்ஸ்காரம்
ஆசார்யரே ஜீவனையும் பரமனையும் இணைத்து வைப்பவர். இந்த ஜீவாத்மா-பரமாத்ம ஸம்பந்தம் மனைவி-கணவன் ஸம்பந்தம் போன்றதால், ஜீவாத்மா மற்ற தேவதைகளிடம் இருந்து விலகி இருக்க வேண்டியதை அறிவுறுத்தப் பட்டுள்ளது.
எம்பெருமானின் நித்ய விபூதியில் நித்ய கைங்கர்யம் செய்ய விரும்பிச் செல்வதே பிறவிப் பயன் என்பது இவ்வைஷ்ணவ சித்தாந்த ஸாரமாகும்.
பஞ்ச ஸம்ஸ்காரம் அல்லது ஸமாச்ரயணம் என்பது சாஸ்த்ரத்தில் ஒருவரை ஸ்ரீவைஷ்ணவர் ஆக நெறிப்படுத்தும் முறையாக விளக்கப்பட்டுள்ளது. இந்த ச்லோகம் இதை நன்கு விளக்குகிறது:
“தாபப் புண்ட்ர ததா நாம மந்த்ரோ யாகஸ் ச பஞ்சம:”
என்பதில் ஐந்து நடவடிக்கைகளும் சொல்லப்படுகின்றன.
- தாப: – உஷ்ணம் – சங்கமும் சக்ரமும் உஷ்ணப்படுத்தப்பட்டுத் தோள்களில் பொறிக்கப்படுவது; இதனால் நாம் எம்பெருமானுக்கு உடைமை என்பது தெரிவிக்கப் படுகிறது.
- புண்ட்ர – த்வாதச ஊர்த்வ புண்ட்ரங்களை உடலில் குறிப்பிட்ட பாகங்களில் தரித்தல்.
(கேசவாய நம-நெற்றி; நாராயணாய நம-நாபி; மாதவாய நம-மார்பு; கோவிந்தாய நம-நெஞ்சு; விஷ்ணுவே நம-வலது மார்பு; மதுசூதணாய நம-வலது புஜம்; த்ரிவிக்ரமாய நம-வலது தோள்; வாமனாய நம- இடது நாபி; ஸ்ரீதராய நம- இடது புஜம்; ரிஷிகேசாய நம- இடது தோள்; பத்மநாபாய நம- அடிமுதுகு; தாமோதராய நம-பிடரி)
- நாம – தாஸ்ய நாமம் தரித்தல். ஆசார்யனால் வழங்கப்படும் தாஸ்ய நாமம், மதுரகவி தாசன் அல்லது இராமானுச தாசன் அல்லது ஸ்ரீ வைஷ்ணவ தாசன் என்பது போல.
- மந்த்ர – மந்த்ரோபதேசம். ஆசார்யரிடம் மந்த்ரோபதேசம் பெறுதல். மந்த்ரம் என்பது உச்சரிக்குக்கும் நம் துயர்களைப் போக்குவது. திருமந்தரம், த்வயம், சரமச்லோகம் இம்மூன்றும் நம் ஸம்ஸாரத் துயரங்களைப் போக்குவன.
- யாக – இல்லத்தில் தினமும் எம்பெருமானைத் தொழத் திருவாராதனக் கிரமத்தை அறிதல்.
இவை ஐந்தனையும் குருவிடமிருந்து (ஆசார்யரிடமிருந்து) ஒரே சமயத்தில் பெறுதலே பஞ்ச சம்ஸ்காரம் ஆகும். பஞ்ச சம்ஸ்காரம் பெற்றுக் கொண்ட ஒருவர் வேத முறைப்படி வைணவராகிறார். இதன் மூலம் அவரது உடல், மனம், சொல், சிந்தனை அனைத்திலும் வைணவநெறிக்கான நல்வினைகளும், சிந்தனைகளும் அவர் மனத்தில் பதிய ஆரம்பிக்கும்.
பஞ்ச ஸம்ஸ்காரம்: அடிப்படைத் தகுதிகள்
எம்பெருமானைச் சரண் புகுமுன் நமக்கு வேண்டிய அடிப்படைத் தகுதிகள் இரண்டுளதாம். அவை:
- ஆகிஞ்சந்யம் – அடியேனுக்கு ஒரு நிறையும், தகுதியும் இல்லை எனும் பணிவு.
- அநந்ய கதித்வம் – எம்பெருமானைத் தவிர வேறு ஒரு புகலும் இல்லை, அவனே கரையேற்றிக் காப்பாற்றுவான் எனும் உறுதி.
பஞ்ச ஸம்ஸ்காரம் செய்தபின் வாழ்கை
ஸமாச்ரயணம் என்பது ஓர் எளிய சடங்கு. ஸ்ரீவைஷ்ணவ வாழ்வுக்கு இது ஒரு தொடக்கம் மட்டுமே. ஸ்ரீ மஹாலக்ஷ்மித் தாயாரோடு ஸ்ரீமன் நாராயணனுக்கு நித்ய கைங்கர்யம் திருநாட்டில் செய்ய வேணுமென்பதே ஒரே லக்ஷ்யம். ஆதலால் அதை அடைய ஆசார்ய அனுக்ரஹமும் பாகவத அனுக்ரஹமும் பெற்று எம்பெருமானின் கைங்கர்யத்தில் மகிழ்ச்சியோடு ஈடுபடப் பூர்வர்கள் காட்டிய நெறியில் அன்றாட வாழ்க்கையை அமைத்துக்கொண்டு நம்மை உயர்த்திக் கொள்வதே இதன் குறிக்கோள்.
பஞ்ச ஸம்ஸ்காரம் பெற்ற ஒரு ஸ்ரீ வைஷ்ணவனுடைய நடைமுறை எப்படி இருக்கும் என இதனைப் பிள்ளை லோகாசார்யர் முமுக்ஷுப்படி ஸூத்ரம் 116ல் தெளிவுபடுத்தியருளும் வகை இதோ:
- உலகியல் விஷயங்களில் எல்லா ஆசைகளையும் முற்றாக விட்டுத் தொலைப்பது.
- ஸ்ரீமன் நாராயணன் ஒருவனையே ஒரே அடைக்கலமாகப் பற்றுவது.
- நித்ய கைங்கர்யம் எனும் பேறு அவச்யம் கிட்டும் எனும் அசையா நம்பிக்கையில் உறுதியாய் இருப்பது .
- அந்தப் பேற்றை விரைவிலேயே அடைய வேண்டும் எனும் இடையறாத ஆசையோடு தவிப்பது.
- இவ்வுலகில் இருக்கும் வரை திவ்ய தேசங்களில் கைங்கர்யம் செய்தும் எம்பெருமானின் திவ்ய குணாநுபவம் செய்தும் பொழுது போக்குவது.
- இப்படிப்பட்ட குண சீலர்களான எம்பெருமானின் அடியார் பெருமை உணர்ந்து அவர்களைக் கண்டு மகிழ்வது.
- திருமந்த்ரத்திலும் த்வய மகா மந்த்ரத்திலும் நெஞ்சை நிலை நிறுத்துதல்.
- தன் ஆசார்யரிடம் அன்பும் பக்தியும் பெருகி இருத்தல் .
- ஆசார்யரிடமும் எம்பெருமானிடத்தும் நன்றி விச்வாசம் பாராட்டுதல் .
- ஸத்வ குண ஸம்பன்னரான மெய்ஞானமும் பற்றின்மையும் சாந்தமும் உள்ள ஸ்ரீவைஷ்ணவரோடு கூடியிருத்தல் .