இரண்டாம் பத்து
முதல் திருமொழி – வானவர் தங்கள்
1048:##
வானவர் தங்கள் சிந்தை போல* என் நெஞ்சமே! இனிதுவந்து*
மாதவம் ஆனவர் தங்கள் சிந்தை* அமர்ந்து உறைகின்ற எந்தை*
கானவர் இடு காரகில்புகை* ஓங்கு வேங்கடம் மேவி*
மாண்குறளான அந்தணற்கு* இன்று அடிமைத்தொழில் பூண்டாயே* (2) 2.1.1
1049:
உறவு சுற்றம் என்று ஒன்றிலா* ஒருவன் உகந்தவர் தம்மை *
மண்மிசைப் பிறவியே கெடுப்பான்* அது கண்டு என் நெஞ்சமென்பாய்*
குறவர் மாதர்களோடு * வண்டு குறிஞ்சி மருளிசை பாடும்*
வேங்கடத்து அறவ நாயகற்கு * இன்று அடிமைத்தொழில் பூண்டாயே* 2.1.2
1050:
இண்டையாயின கொண்டு * தொண்டர்கள் ஏத்துவார் உறவோடும்*
வானிடைக்கொண்டு போயிடவும் * அதுகண்டு என் நெஞ்சமென்பாய் *
வண்டுவாழ் வடவேங்கடமலை* கோயில் கொண்டதேனாடும்*
மீமிசை அண்டம் ஆண்டிருப்பாற்கு* அடிமைத் தொழில் பூண்டாயே* 2.1.3
1051:
பாவியாதுசெய்தாய்* என் நெஞ்சமே! பண்டு தொண்டு செய்தாரை *
மண்மிசை மேவி ஆட்கொண்டு போய் * விசும்பேறவைக்கும் எந்தை*
கோவிநாயகன் கொண்டல் உன்துயர் * வேங்கடமலையாண்டு *
வானவர் ஆவியாய் இருப்பாற்கு* அடிமைத்தொழில் பூண்டாயே* 2.1.4
1052:
பொங்கு போதியும் பிண்டியுமுடைப் * புத்தர் நோன்பியர் பள்ளியுள்ளுறை*
தங்கள் தேவரும் தாங்களுமேயாக* என்நெஞ்சமென்பாய்*
எங்கும் வானவர் தானவர் நிறைந்தேத்தும் * வேங்கடம் மேவி நின்றருள்*
அங்க நாயகற்கு * இன்று அடிமைத்தொழில் பூண்டாயே* 2.1.5
1053:
துவரியாடையர் மட்டையர் * சமண்தொண்டர்கள் மண்டியுண்டு பின்னரும் *
தமரும் தாங்களுமே தடிக்க * என் நெஞ்சமென்பாய்*
கவரிமாக் கணம் சேரும் * வேங்கடம் கோயில் கொண்ட கண்ணார் விசும்பிடை*
அமர நாயகற்கு * இன்று அடிமைத்தொழில் பூண்டாயே * 2.1.6
1054:
தருக்கினால் சமண் செய்து * சோறுதண் தயிரினால் திரளை*
மிடற்றிடை நெருக்குவார் அலக்கண் * அது கண்டு என் நெஞ்சமென்பாய்*
மருட்கள் வண்டுகள் பாடும் * வேங்கடம் கோயில் கொண்டு அதேனாடும்*
வானிடை அருக்கன் மேவி நிற்பாற்கு * அடிமைத்தொழில் பூண்டாயே* 2.1.7
1055:
சேயன் அணியன் சிறியன் பெரியன் என்பதும் * சிலர்ப்பேசக் கேட்டிருந்தே*
என் நெஞ்சமென்பாய்!* எனக்கொன்று சொல்லாதே*
வேய்கள் நின்று வெண் முத்தமேசொரி * வேங்கடமலை கோயில் மேவிய *
ஆயர் நாயகற்கு * இன்று அடிமைத்தொழில் பூண்டாயே. 2.1.8
1056:
கூடியாடி உரைத்ததே உரைத்தாய்* என் நெஞ்சமென்பாய்! துணிந்துகேள்*
பாடியாடிப் பலரும் பணிந்தேத்தி * காண்கிலார்*
ஆடு தாமரையோனும் ஈசனும் * அமரர்க்கோனும் நின்றேத்தும்*
வேங்கடத்து ஆடு கூத்தனுக்கு * இன்று அடிமைத்தொழில் பூண்டாயே* 2.1.9
1057:##
மின்னுமா முகில் மேவு* தண்திருவேங்கடமலை கோயில்மேவிய *
அன்னமாய் நிகழ்ந்த* அமரர் பெருமானை*
கன்னி மாமதிள் மங்கையர்க்கலிகன்றி * இன்தமிழால் உரைத்த*
இம்மன்னு பாடல் வல்லார்க்கு* இடமாகும் வானுலகே* (2) 2.1.10
இரண்டாம் திருமொழி – காசையாடை
1058:##
காசையாடை மூடியோடிக்* காதல் செய்தான் அவனூர்*
நாசமாக நம்பவல்ல * நம்பி நம்பெருமான்*
வேயினன்னதோள் மடவார் * வெண்ணெயுண்டான் இவனென்று*
ஏசநின்ற எம்பெருமான் * எவ்வுள் கிடந்தானே* (2) 2.2.1
1059:
தையலாள் மேல் காதல் செய்த* தானவன் வாளரக்கன்*
பொய்யிலாத பொன்முடிகள்* ஒன்பதோடு ஒன்றும்*
அன்றுசெய்த வெம்போர் தன்னில் * அங்கு ஓர் செஞ்சரத்தால் உருள *
எய்த எந்தை எம்பெருமான்* எவ்வுள் கிடந்தானே* 2.2.2
1060:
முன் ஓர் தூது * வானரத்தின்வாயில் மொழிந்து*
அரக்கன் மன்னூர் தன்னை * வாளியினால் மாள முனிந்து*
அவனே பின்னோர் தூது * ஆதிமன்னர்க்காகிப் பெருநிலத்தார்*
இன்னார் தூதனென நின்றான்* எவ்வுள் கிடந்தானே* 2.2.3
1061:
பந்தணைந்த மெல்விரலாள்* பாவைதன் காரணத்தால்*
வெந்திறலே ஏழும்வென்ற* வேந்தன் விரிபுகழ்சேர்*
நந்தன் மைந்தனாகவாகும்* நம்பி நம்பெருமான்*
எந்தை தந்தை தம்பெருமான்* எவ்வுள் கிடந்தானே* 2.2.4
1062:
பாலனாகி ஞாலமேழுமுண்டு* பண்டு ஆலிலைமேல்*
சாலநாளும் பள்ளிகொள்ளும்* தாமரைக் கண்ணன் எண்ணில்*
நீலமார் வண்டுண்டு வாழும்* நெய்தலந் தண்கழனி *
ஏலநாறும் பைம்புறவில்* எவ்வுள் கிடந்தானே* 2.2.5
1063:
சோத்த நம்பி என்று* தொண்டர் மிண்டித் தொடர்ந்தழைக்கும்*
ஆத்த நம்பி செங்கணம்பி* ஆகிலும் தேவர்க்கெல்லாம்*
மூத்த நம்பி முக்கணம்பியென்று* முனிவர்த்தொழுதேத்தும்*
நம்பி எம்பெருமான்* எவ்வுள் கிடந்தானே. 2.2.6
1064:
திங்களப்பு வானெரிகாலாகி* திசைமுகனார்*
தங்களப்பன் சாமியப்பன்* பாகத்திருந்த *
வண்டுண் தொங்கலப்பு நீண்முடியான்* சூழ்கழல் சூடநின்ற*
எங்களப்பன் எம்பெருமான்* எவ்வுள் கிடந்தானே* 2.2.7
1065:
முனிவன் மூர்த்தி மூவராகி* வேதம் விரித்துரைத்த புனிதன்*
பூவை வண்ணன் அண்ணல்* புண்ணியன் விண்ணவர்கோன்*
தனியன் சேயன் தானொருவனாகிலும்* தன்னடியார்க்கு இனியன் *
எந்தை எம்பெருமான்* எவ்வுள் கிடந்தானே. 2.2.8
1066:
பந்திருக்கும் மெல்விரலாள்* பாவை பனிமலராள்*
வந்திருக்கும் மார்வன்* நீலமேனி மணிவண்ணன்*
அந்தரத்தில் வாழும்* வானோர் நாயகனாய் அமைந்த*
இந்திரற்கும் தம்பெருமான்* எவ்வுள் கிடந்தானே* 2.2.9
1067:##
இண்டை கொண்டு தொண்டரேத்த* எவ்வுள் கிடந்தானை*
வண்டு பாடும் பைம்புறவில்* மங்கையர்க்கோன் கலியன்,
கொண்ட சீரால் தண்தமிழ்செய்மாலை* ஈரைந்தும் வல்லார்*
அண்டம் ஆள்வது ஆணை* அன்றேல் ஆள்வர் அமர் உலகே* (2) 2.2.10
மூன்றாம் திருமொழி – விற்பெருவிழவும்
1068:##
விற்பெரு விழவும் கஞ்சனும் மல்லும் * வேழமும் பாகனும் வீழ*
செற்றவன் தன்னை புரமெரி செய்த* சிவனுறு துயர்களை தேவை*
பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு* பார்த்தன் தன் தேர்முன் நின்றானை*
சிற்றவை பணியால் முடி துறந்தானைத்* திருவல்லிக்கேணிக் கண்டேனே* (2)
1069:##
வேதத்தை வேதத்தின் சுவைப்பயனை* விழுமிய முனிவர் விழுங்கும்*
கோதிலின் கனியை நந்தனார் களிற்றைக்* குவலயத்தோர் தொழுதேத்தும்*
ஆதியை அமுதை என்னையாளுடை அப்பனை* ஒப்பவரில்லா மாதர்கள் வாழும் *
மாடமா மயிலைத்* திருவல்லிக்கேணிக் கண்டேனே. (2) 2.3.2
1070:
வஞ்சனை செய்யத் தாயுருவாகி* வந்தபேய் அலறிமண் சேர*
நஞ்சமர் முலையூடு உயிர்செகவுண்ட நாதனைத்* தானவர் கூற்றை*
விஞ்சை வானவர் சாரணர் சித்தர்* வியந்து துதிசெய்யப் பெண்ணுருவாகி *
அஞ்சுவை அமுதம் அன்று அளித்தானைத்* திருவல்லிக்கேணிக் கண்டேனே*
1071:
இந்திரனுக்கென்று ஆயர்கள் எடுத்த* எழில்விழவில் பழநடைசெய்*
மந்திர விதியில் பூசனை பெறாது* மழைபொழிந்திடத் தளர்ந்து *
ஆயர் எந்தம்மோடு இனவா நிரைதளராமல்* எம்பெருமான் அருளென்ன*
அந்தமில் வரியால் மழை தடுத்தானைத்* திருவல்லிக்கேணிக் கண்டேனே*
1072:
இன் துணைப்பது மத்து அலர்மகள் தனக்கும் இன்பன்* நற் புவிதனக்கு இறைவன்*
தந்துணை ஆயர்ப்பாவை நப்பின்னை தனக்கு இறை* மற்றையோர்க்கு எல்லாம் வன்துணை*
பஞ்ச பாண்டவர்க்காகி* வாயுரை தூதுசென்றியங்கும் என்துணை*
எந்தை தந்தை தம்மானைத்* திருவல்லிக்கேணிக் கண்டேனே* 2.3.5
1073:
அந்தகன் சிறுவன் அரசர் தம் அரசற்கு இளையவன்* அணியிழையைச் சென்று*
`எந்தமக்கு உரிமை செய்‘எனத் தரியாது* `எம்பெருமான் அருள்!‘ என்ன*
சந்தமல் குழலாளலக்கண் நூற்றுவர்த்தம்* பெண்டிரும் எய்திநூல் இழப்ப*
இந்திரன் சிறுவன் தேர்முன் நின்றானைத்* திருவல்லிக்கேணிக் கண்டேனே*
1074:
பரதனும் தம்பி சத்ருக்கனனும்* இலக்குமேனாடு மைதிலியும்*
இரவும் நன்பகலும் துதிசெய்ய நின்ற* இராவணாந்தகனை எம்மானை*
குரவமே கமழும் குளிர்ப்பொழிலூடு* குயிலொடு மயில்கள் நின்றால*
இரவியின் கதிர்கள் நுழைதல் செய்தறியாத்* திருவல்லிக்கேணிக் கண்டேனே. (2)
1075:##
பள்ளியிலோதி வந்ததன் சிறுவன்* வாயில் ஓராயிர நாமம்*
ஒள்ளியவாகிப் போதஆங்கு அதனுக்கு* ஒன்றுமோர் பொறுப்பிலனாகி*
பிள்ளையைச்சீறி வெகுண்டு தூண்புடைப்பப்* பிறையெயிற்றனல் விழி பேழ்வாய்*
தெள்ளிய சிங்கமாகிய தேவைத்* திருவல்லிக்கேணிக் கண்டேனே. (2) 2.3.8
1076:
மீனமர் பொய்கைநாள் மலர் கொய்வான்* வேட்கையினோடு சென்றிழிந்த*
கானமர் வேழம் கையெடுத்தலறக்* கரா அதன் காலினைக் கதுவ*
ஆனையின் துயரம் தீரப் புள்ðர்ந்து* சென்று நின்று ஆழி தொட்டானை,
தேனமர் சோலை மாட மாமயிலைத்* திருவல்லிக்கேணிக் கண்டேனே* (2) 2.3.9
1077:##
மன்னுதண் பொழிலும் வாவியும் மதிளும்* மாட மாளிகையும் மண்டபமும்*
தென்னன் தொண்டையர்க்கோன் செய்த நன்மயிலைத்* திருவல்லிக்கேணி நின்றானை*
கன்னிநன் மாட மங்கையர் தலைவன்* காமருசீர்க் கலிகன்றி*
சொன்ன சொன்மாலை பத்துடன் வல்லார்* சுகம் இனிதாள்வர் வானுலகே.(2)2.3.10
நான்காம் திருமொழி – அன்றாயர்
1078:##
அன்றாயர் குலக்கொடியோடு* அணிமாமலர் மங்கையொடு அன்பளவி*
அவுணர் என்தானும் இரக்கமிலாதவனுக்குக்* உறையுமிடமாவது *
இரும்பொழில்சூழ் நன்றாய புனல்நறையூர் திருவாலிகுடந்தை* தடந்திகழ் கோவல்நகர்*
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தாற்கு இடம்* மாமலையாவது நீர்மலையே. (2)
1079:
காண்டாவனம் என்பதோர் காடு * அமரர்க்கரையன் அது கண்டவன் நிற்க*
முனேமூண்டார் அழலுண்ண முனிந்ததுவும் அதுவன்றியும் *முன்னுலகம்
பொறைதீர்த்துஆண்டான்*
அவுணனவன் மார்பகலம்* உகிரால் வகிராக முனிந்து அரியாய் நீண்டான் *
குறளாகி நிமிர்ந்தவனுகு இடம் * மாமலையாவது நீர்மலையே. 2.4.2
1080:
அலமன்னுமடல் சுரிசங்கமெடுத்து* அடலாழியினால் அணியாருருவின்*
புலமன்னு வடம்புனை கொங்கையினாள்* பொறைதீரமுனாள் அடுவாள் அமரில்*
பலமன்னர்ப்படச் சுடராழியினைப்* பகலோன்மறையப் பணிகொண்டு அணிசேர்*
நிலமன்னனுமாய் உலகாண்டவனுகு இடம்* மாமலையாவது நீர்மலையே. 2.4.3
1081:
தாங்காததோர் ஆளரியாய்* அவுணன் தனைவீட முனிந்து அவனால் அமரும்*
பூங்கோதையர் பொங்கெரி மூழ்கவிளைத்து அதுவன்றியும்* வென்றிகொள்வாள் அமரில்*
பாங்காக முன் ஐவரொடு அன்பளவிப்* பதிற்றைந்திரட்டிப் படைவேந்தர்பட*
நீங்காச்செருவில் நிறைகாத்தவனுக்கு இடம்* மாமலையாவது நீர்மலையே. 2.4.4
1082:
மாலும் கடலார மலைக்குவடிட்டு* அணைகட்டி வரம்புருவ*
மதிசேர்க்கோல மதிளாய இலங்கைகெடப்* படைதொட்டு ஒருகால் அமரிலதிர*
காலமிதுவென்று அயன்வாளியினால்* கதிர்நீள் முடிபத்தும் அறுத்தமரும்*
நீலமுகில் வண்ணர் எமக்கிறைவற்கு இடம்* மாமலையாவது நீர்மலையே. 2.4.5
1083:
பாராருலகும் பனிமால்வரையும்* கடலும் சுடரும் இவையுண்டும்*
எனக்கு ஆராதென நின்றவன் எம்பெருமான்* அலை நீருலகுக்கு அரசாகிய*
அப்பேரானை முனிந்த முனிக்கரையன்* பிறரில்லை நுனக்கெனும் எல்லையினான்*
நீரார் பேரான் நெடுமாலவனுக்கு இடம்* மாமலையாவது நீர்மலையே. 2.4.6
1084:
புகரார் உருவாகி முனிந்தவனைப்* புகழ்வீட முனிந்து உயிருண்டு*
அசுரன் நகராயின பாழ்பட நாமமெறிந்து அதுவன்றியும்* வென்றிகொள் வாளவுணன்*
பகராதவன் ஆயிர நாமம்* அடிப்பணியாதவனைப் பணியால் அமரில்*
நிகராயவன் நெஞ்சிடந்தானவனுக்கு இடம்* மாமலையாவது நீர்மலையே. 2.4.7
1085:
பிச்சச்சிறு பீலி பிடித்து* உலகில் பிணந்தின் மடவார் அவர்ப்போல் *
அங்ஙனே அச்சமிலர் நாணிலரா தன்மையால்* அவர்செய்கை வெறுத்து
அணிமாமலர்த்தூய்*
நச்சிநமனார் அடையாமை* நமக்கருள்செய் என உள்குழைந்து ஆர்வமொடு,
நிச்சம் நினைவார்க்கு அருள்செய்யுமவற்கு இடம்* மாமலையாவது நீர்மலையே.
1086:
பேசுமளவன்று இது வம்மின்* நமர்ப்பிறர் கேட்பதன்முன் பணிவார் வினைகள்*
நாசமது செய்திடுமாதன்மையால்* அதுவேநமது உய்விடம் நாள்மலர்மேல்*
வாசமணி வண்டறை பைம்புறவில்* மனமைந்தொடு நைந்துழல்வார்*
மதியில்நீசரவர் சென்றடையாதவனுக்கி இடம்* மாமலையாவது நீர்மலையே.
1087:##
நெடுமாலவன் மேவிய நீர்மலைமேல்* நிலவும்புகழ் மங்கையர் கோன்*
அமரில் கடமா களியானைவல்லான்* கலியன் ஒலிசெய்தமிழ் மாலை வல்லார்க்கு*
உடனே விடுமால்வினை* வேண்டிடில் மேலுலகும் எளிதாயிடும் அன்றியிலங்கொலிசேர்*
கொடுமாகடல் வையகமாண்டு* மதிக்குடை மன்னவராய் அடி கூடுவரே. (2) 2.4.10
ஐந்தாம் திருமொழி – பாராய
1088:##
பாராயது உண்டுமிழ்ந்த பவளத்தூணைப்* படுகடலில் அமுதத்தைப் பரிவாய்கீண்ட சீரானை*
எம்மானைத் தொண்டர் தங்கள் சிந்தையுள்ளே* முனைத்தெழுந்த தீங்கரும்பினை*
போரானைக் கொம்பொசித்த போரேற்றினைப்* புணர்மருதம் இறநடந்த பொற்குன்றினை*
காரானை இடர் கடிந்த கற்பகத்தைக்* கண்டதுநான் கடல்மல்லைத் தலசயனத்தே.
1089:##
பூண்டவத்தம் பிறர்க்கடைந்து தொண்டுபட்டுப்*
பொய்ந்நூலை மெய்ந்நூலென்றென்று மோதி மாண்டு*
அவத்தம் போகாதே வம்மின் *
எந்தை என்வணங்கப் படுவானை*
கணங்களேத்தும் நீண்டவத்தைக் கருமுகிலை எம்மான் தன்னை*
நின்றவூர் நித்திலத்தைத் தொத்தார்சோலை*
காண்டவத்தைக் கனலெரிவாய்ப் பெய்வித்தானைக்*
கண்டதுநான் கடல்மல்லைத் தலசயனத்தே. (2) 2.5.2
1090:
உடம்புருவில் மூன்றொறாய் மூர்த்திவேறாய்*
உலகுய்ய நின்றானை*
அன்றுபேய்ச்சி இடம்பருகு வித்தகனைக்*
கன்றுமேய்த்து விளையாட வல்லானை வரைமீகானில்*
தடம்பருகு கருமுகிலைத் தஞ்சைக்கோயில்*
தவநெறிக்கு ஓர் பெருநெறியை வையம்காக்கும்*
கடும்பரிமேல் கற்கியை நான்கண்டுகொண்டேன்*
கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.
1091:
பேய்த்தாயை முலையுண்ட பிள்ளைதன்னைப்*
பிணைமருப்பில் கருங்களிற்றைப் பிணைமான்நோக்கின்*
ஆய்த்தாயர் தயிர்வெண்ணெய் அமர்ந்தகோவை*
அந்தணர்தம் அமுதத்தைக் குரவைமுன்னே கோத்தானை*
குடமாடு கூத்தன் தன்னைக்*
கோகுலங்கள் தளராமல் குன்றமேந்திக் காத்தானை*
எம்மானைக் கண்டுகொண்டேன்*
கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.
1092:
பாய்ந்தானைத் திரிசகடம் பாறிவீழப்*
பாலகனாய் ஆலிலையில் பள்ளியின்பமேய்ந்தானை*
இலங்கொளிசேர் மணிக்குன்றன்ன*
ஈரிரண்டு மால்வரைத்தோள் எம்மான் தன்னை,*
தோய்ந்தானை நிலமகள்தோள் தூதிற்சென்று*
அப்பொய்யறைவாய்ப் புகப்பெய்த மல்லர்மங்கக் காய்த்தானை*
எம்மானைக் கண்டுகொண்டேன்*
கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.
1093:
கிடந்தானைத் தடங்கடலுள் பணங்கள்மேவிக்*
கிளர்ப்பொறிய மறிதிரிய அதனின்பின்னே படர்ந்தானைப்*
படுமதத்த களிற்றின் கொம்பு பறித்தானைப்*
பாரிடத்தை எயிறுகீற இடந்தானை*
வளைமருப்பின் ஏனமாகி*
இருநிலனும் பெருவிசும்பும் எய்தாவண்ணம் கடந்தானை*
எம்மானைக் கண்டுகொண்டேன்*
கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.
1094:
பேணாத வலியரக்கர் மெலிய அன்று*
பெருவரைத் தோளிறநெரித்து அன்று அவுணர்க்கோனை*
பூணாகம் பிளவெடுத்த போர்வல்லோனைப்*
பொருகடலுள் துயிலமர்ந்த புள்ðர்தியை*
ஊணாகப் பேய்முலைநஞ்சு உண்டான் தன்னை*
உள்ளுவார் உள்ளத்தே உறைகின்றானை*
காணாது திரிதருவேன் கண்டுகொண்டேன்*
கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே. 2.5.7
1095:
பெண்ணாகி இன்னமுதம் வஞ்சித்தானைப்*
பிறையெயிற்றன் அடலரியாய்ப் பெருகினானை*
தண்ணார்ந்த வார்ப்புனல்சூழ் மெய்யமென்னும்*
தடவரைமேல் கிடந்தானைப் பணங்கள்மேவி*
என்ணானை எண்ணிறந்த புகழினானை*
இலங்கொளிசேர் அரவிந்தம் போன்றுநீண்டகண்ணானை*
கண்ணாரக் கண்டுகொண்டேன்*
கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.
1096:
தொண்டாயர் தாம்பரவும் அடியினானைப்*
படிகடந்த தாளாளற்கு ஆளாய் உய்தல் விண்டானை*
தென்னிலங்கை அரக்கர்வேந்தை*
விலங்குண்ண வலங்கைவாய்ச் சரங்களாண்டு*
பண்டாய வேதங்கள் நான்கும்*
ஐந்து வேள்விகளும் கேள்வியோடு அங்கமாறும்கண்டானை*
தொண்டனேன் கண்டுகொண்டேன்*
கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.
1097:##
படநாகத் தணைக்கிடந்து அன்று அவுணர்கோனைப்*
படவெகுண்டு மருதிடைப்போய்ப் பழனவேலி*
தடமார்ந்த கடல்மல்லைத் தலசயனத்துத்*
தாமரைக்கண் துயிலமர்ந்த தலைவர் தம்மை*
கடமாரும் கருங்களிறு வல்லான்*
வெல்போர்க் கலிகன்றி ஒலிசெய்த இன்பப்பாடல்*
திடமாக இவையைந்துமைந்தும் வல்லார்*
தீவினையை முதலரிய வல்லார்தாமே. (2)
ஆறாம் திருமொழி – நண்ணாத
1098:##
நண்ணாத வாளவுணர்* இடைப்புக்கு*
வானவரைப்பெண்ணாகி* அமுதூட்டும் பெருமானார்*
மருவினிய தண்ணார்ந்த கடல்மல்லைத்* தலசயனத் துறைவாரை,*
எண்ணாதே இருப்பாரை* இறைப்பொழுதும் எண்ணோமே. (2) 2.6.1
1099:
பார்வண்ண மடமங்கை* பனிநன்மா மலர்க்கிழத்தி*
நீர்வண்ணன் மார்வத்தில்* இருக்கையைமுன் நினைந்து அவனூர்*
கார்வண்ண முதுமுந்நீர்க்* கடல்மல்லைத் தலசயனம்*
ஆரெண்ணும் நெஞ்சுடையார்* அவர் எம்மை ஆள்வாரே. 2.6.2
1100:##
ஏனத்தினுருவாகி* நிலமங்கையெழில் கொண்டான்*
வானத்திலவர் முறையால்* மகிழ்ந்தேத்தி வலங்கொள்ள*
கானத்தின் கடல்மல்லைத்* தலசயனத் துறைகின்ற*
ஞானத்திண் ஒளியுருவை* நினைவார் என் நாயகரே. 2.6.3
1101:
விண்டாரை வென்று ஆவி* விலங்குண்ண மெல்லியலார்*
கொண்டாடு மல்லகலம்* அழலேற வெஞ்சமத்துக்*
கண்டாரை கடல்மல்லைத்* தலசயனது உறைவாரை,
கொண்டாடும் நெஞ்சுடையார்* அவரெங்கள் குலதெய்வமே. 2.6.4
1102:
பிச்சச் சிறுபீலிச்* சமண்குண்டர் முதலாயோர்*
விச்சைக் கிறையென்னும்* அவ்விறையைப் பணியாதே*
கச்சிக் கிடந்தவனூர்* கடல்மல்லைத் தலசயனம்*
நச்சித் தொழுவாரை* நச்சு என்றன் நன்னெஞ்சே! 2.6.5
1103:
புலன்கொள்நிதிக் குவையோடு* புழைக்கைமா களிற்றினமும்*
நலங்கொள் நவமணிக்குவையும்* சுமந்து எக்கும் நான்றொசிந்து,*
கலங்களியங்கும் மல்லைக்* கடல்மல்லைத் தலசயனம்*
வலங்கொள் மனத்தாரவரை* வலங்கொள் என் மடநெஞ்சே! 2.6.6
1104:
பஞ்சிச் சிறுகூழை* உருவாகி மருவாத*
வஞ்சப்பெண் நஞ்சுண்ட* அண்ணல்முன் நண்ணாத*
கஞ்சைக் கடந்தவனூர்* கடல்மல்லைத் தலசயனம்*
நெஞ்சில் தொழுவாரைத்* தொழுவாய் என் தூய்நெஞ்சே! 2.6.7
1105:
செழுநீர் மலர்க்கமலம்* திரையுந்துவன் பகட்டால்*
உழுநீர் வயல் உழவர் உழ* பின்முன் பிழைத்தெழுந்த*
கழுநீர் கடிகமழும்* கடல்மல்லைத் தலசயனம்*
தொழுநீர் மனத்தவரைத்* தொழுவாய் என் தூய்நெஞ்சே. 2.6.8
1106:
பிணங்களிடு காடதனுள்* நடமாடு பிஞ்ஞகேனாடு*
இணங்கு திருச்சக்கரத்து* எம்பெருமானார்க்கு இடம்*
விசும்பில் கணங்களியங்கும்மல்லைக்* கடல்மல்லைத் தலசயனம்*
வணங்கும் மனத்தாரவரை* வணங்கு எந்தன் மடநெஞ்சே! 2.6.9
1107:##
கடிகமழு நெடுமறுகில்* கடல்மல்லைத் தலசயனத்து*
அடிகளடியே நினையும்* அடியவர்கள் தம்மடியான்*
வடிகொள் நெடுவேல்வலவன்* கலிகன்றி ஒலிவல்லார்*
முடிகொள் நெடுமன்னவர்தம்* முதல்வர் முதலாவாரே. (2) 2.6.10
ஏழாம் திருமொழி – திவளும்வெண்
1108:##
திவளும்வெண் மதிபோல் திருமுகத்து அரிவை* செழுங்கடல் அமுதினில் பிறந்த அவளும்*
நின்னாகத்து இருப்பதும் அறிந்தும்* ஆகிலும் ஆசைவிடாளால்*
குவளையங் கண்ணி கொல்லியம் பாவை சொல்லு* நின்தாள் நயந்திருந்த இவளை*
உன் மனத்தால் என்நினைந்திருந்தாய்* இடவெந்தை எந்தை பிரானே! (2) 2.7.1
1109:
துளம்படு முறுவல் தோழியர்க்கு அருளாள்* துணைமுலை சாந்துகொண்டு அணியாள்*
குளம்படு குவளைக் கண்ணிணை எழுதாள்* கோலநன் மலர்க்குழற்கு அணியாள்*
வளம்படு முந்நீர் வையம் முன்னளந்த* மாலென்னும் மாலின மொழியாள்*
இளம்படி இவளுக்கு என்நினைந்திருந்தாய்* இடவெந்தை எந்தை பிரானே!
1110:
சாந்தமும் பூணும் சந்தனக் குழம்பும்* தடமுலைக்கு அணியிலும் தழலாம்*
போந்தவெண் திங்கள் கதிர்சுடர் மெலியும்* பொருகடல் புலம்பிலும் புலம்பும்*
மாந்தளிர் மேனி வண்ணமும் பொன்னாம்* வளைகளும் இறைநில்லா*
எந்தன் ஏந்திழையிவளுக்கு என்நினைந்திருந்தாய்* இடவெந்தை எந்தை பிரானே.
1111:
`ஊழியின் பெரிதால் நாழிகை!‘ என்னும்* `ஒண்சுடர் துயின்றதால்!‘ என்னும்*
`ஆழியும் புலம்பும்! அன்றிலும் உறங்கா* தென்றலும் தீயினிற் கொடிதாம்*
தோழியோ!‘ என்னும் `துணைமுலை அரக்கும்* சொல்லுமின் எஞ்செய்கேன்?’ என்னும்*
ஏழையென் பொன்னுக்கு என்ன் நினைந்திருந்தாய்* இடவெந்தை எந்தை பிரானே!
1112:
ஓதிலும் உன்பேரன்றி மற்றோதாள்* உருகும்நின் திருவுரு நினைந்து*
காதன்மை பெரிது கையற உடையள்* கயல்நெடுங்கண் துயில் மறந்தாள்*
பேதையேன் பேதை பிள்ளைமை பெரிது* தெள்ளியள் வள்ளிநுண் மருங்குல்*
ஏதலர் முன்னா என்நினைந்திருந்தாய்* இடவெந்தை எந்தை பிரானே! 2.7.5
1113:
தன்குடிக் கேதும் தக்கவா நினையாள்* தடங்கடல் நுடங்கெயிலிலங்கை*
வன்குடி மடங்க வாளமர் தொலைத்த* வார்த்தைகேட்டு இன்புறும் மயங்கும்*
மின்கொடி மருங்குல் சுருங்கமேல் நெருங்கி* மென்முலை பொன்பயந்திருந்த*
என்கொடியிவளுக்கு என் நினைந்திருந்தாய்* இடவெந்தை எந்தை பிரானே!
1114:
உளங்கனிந்திருக்கும் உன்னையே பிதற்றும்* உனக்கன்றி எனக்கு அன்பொன்றிலளால்*
`வளங்கனி பொழில்சூழ் மாலிருஞ் சோலை* மாயனே!‘ என்று வாய்வெருவும்*
களங்கனி முறுவல் காரிகை பெரிது* கவலையோடு அவலம்சேர்ந்திருந்த*
இளங்கனி இவளுக்கு என்நினைந்திருந்தாய்* இடவெந்தை எந்தை பிரானே!
1115:##
`அலங்கெழு தடக்கை ஆயன்வாயாம்பற்கு* அழியுமால் என்னுள்ளம்!‘ என்னும்*
புலங்கெழு பொருநீர்ப் புட்குழி பாடும்* `போதுமோ நீர்மலைக்கு என்னும்*
குலங்கெழு கொல்லி கோமளவல்லிக்* கொடியிடை நெடுமழைக் கண்ணி*
இலங்கெழில் தோளிக்கு என்நினைந்திருந்தாய்* இடவெந்தை எந்தை பிரானே!
1116:
பொன்குலாம் பயலை பூத்தன மென்தோள்* பொருகயல் கண்துயில் மறந்தாள்*
அன்பினால் உன்மேல் ஆதரம் பெரிது* இவ்வணங்கினுக்கு உற்றநோய் அறியேன்*
மின்குலா மருங்குல் சுருங்கமேல் நெருங்கி* வீங்கிய வனமுலை யாளுக்கு*
என்கொலாம் குறிப்பில் என்நினைந்திருந்தாய்* இடவெந்தை எந்தை பிரானே!
1117:##
அன்னமும் மீனும் ஆமையும் அரியும் ஆய* எம்மாயனே! அருளாய்‘*
என்னும் இன்தொண்டர்க்கு இன்னருள் புரியும்* இடவெந்தை எந்தை பிரானை*
மன்னுமா மாட மங்கையர் தலைவன்* மானவேல் கலியன் வாயொலிகள்*
பன்னிய பனுவல் பாடுவார்* நாளும் பழவினை பற்றறுப்பாரே. (2) 2.7.10
எட்டாம் திருமொழி – திரிபுரம்
1118:##
திரிபுரம் மூன்று எரித்தானும்* மற்றை மலர்மிசை மேல் அயனும்வியப்ப*
முரிதிரை மாகடல் போல்முழங்கி* மூவுலகும் முறையால் வணங்க*
எரியன கேசர வாளெயிற்றோடு* இரணியனாகம் இரண்டுகூறா*
அரியுருவாம் இவரார் கொல்? என்ன* அட்ட புயகரத்தேனென்றாரே. (2) 2.8.1
1119:
வெந்திறல் வீரரில் வீரரொப்பார்* வேதம் உரைத்து இமையோர் வணங்கும்*
செந்தமிழ் பாடுவார் தாம்வணங்கும்* தேவர் இவர்கொல் தெரிக்கமாட்டேன்*
வந்து குறளுருவாய் நிமிர்ந்து* மாவலி வேள்வியில் மண்ணளந்த*
அந்தணர் போன்று இவரார்க்கொல்? என்ன* அட்ட புயகரத்தேனென்றாரே. 2.8.2
1120:
செம்பொனிலங்கு வலங்கைவாளி* திண்சிலை தண்டொடு சங்கமொள்வாள்*
உம்பரிருசுடராழியோடு* கேடகம் ஒண்மலர் பற்றி எற்றே*
வெம்பு சினத்து அடல் வேழம்வீழ* வெண்மருப்பொன்று பறித்து*
இருண்ட அம்புதம் போன்று இவரார்கொல்? என்ன* அட்ட புயகரத்தேனென்றாரே. 2.8.3
1121:
மஞ்சுயர் மாமணிக் குன்றம் ஏந்தி* மாமழை காத்தொரு மாயவானை அஞ்ச*
அதன்மருப்பன்று வாங்கும்* ஆயர்கொல் மாயம் அறியமாட்டேன்*
வெஞ்சுடராழியும் சங்கும் ஏந்தி* வேதம் முன் ஓதுவர் நீதிவானத்து*
அஞ்சுடர் போன்று இவரார்கொல் என்ன* அட்ட புயகரத்தேனென்றாரே. 2.8.4
1122:
கலைகளும் வேதமும் நீதிநூலும்* கற்பமும் சொற்பொருள் தானும்*
மற்றை நிலைகளும் வானவர்க்கும் பிறர்க்கும்* நீர்மையினால் அருள் செய்து*
நீண்ட மலைகளும் மாமணியும்*மலர்மேல் மங்கையும் சங்கமும் தங்குகின்ற*
அலைகடல் போன்று இவரார்க்கொல் என்ன* அட்டபுயகரத்தேனென்றாரே. 2.8.5
1123:
எங்ஙனும் நாமிவர் வண்ணம் எண்ணில்* ஏதும் அறிகிலம் ஏந்திழையார்*
சங்கும் மனமும் நிறைவும் எல்லாம்* தம்மனவாகப் புகுந்து*
தாமும்பொங்கு கருங்கடல் பூவைகாயாப்* போதவிழ் நீலம் புனைந்தமேகம்*
அங்ஙனம் போன்று இவரார்க்கொல் என்ன* அட்டபுயகரத்தேனென்றாரே. 2.8.6
1124:
முழுசிவண்டாடிய தண்துழாயின்* மொய்ம்மலர்க் கண்ணியும், மேனியும்*
சாந்திழிசிய கோலம் இருந்தவாறும்* எங்ஙனஞ் சொல்லுகேன்! ஓவிநல்லார்*
எழுதிய தாமரை அன்னகண்ணும்* ஏந்தெழிலாகமும் தோளும்வாயும்*
அழகியதாம் இவரார்கொல் என்ன* அட்டபுயகரத்தேனென்றாரே. 2.8.7
1125:
மேவி எப்பாலும் விண்ணோர்வணங்க* வேதம் உரைப்பர் முந் நீர்மடந்தை தேவி*
அப்பால் அதிர்சங்கமிப்பால் சக்கரம்* மற்றிவர் வண்ணம் எண்ணில்*
காவியொப்பார் கடலேயுமொப்பார்* கண்ணும் வடிவும் நெடியராய்*
என் ஆவியொப்பார் இவரார்கொல் என்ன* அட்டபுயகரத்தேனென்றாரே. 2.8.8
1126:
தஞ்சம் இவர்க்கு என்வளையும்நில்லா* நெஞ்சமும் தம்மதே சிந்தித்தேற்கு*
வஞ்சிமருங்குல் நெருங்கநோக்கி* வாய்திறந்து ஒன்று பணித்ததுண்டு*
நஞ்ச முடைத்திவர் நோக்கும்நோக்கம்* நான் இவர் தம்மை அறியமாட்டேன்*
அஞ்சுவன் மற்றிவரார் கொல்? என்ன* அட்டபுயகரத்தேனென்றாரே. 2.8.9
1127:##
மன்னவன் தொண்டையர் கோன்வணங்கும்* நீள்முடி மாலை வயிரமேகன்*
தன்வலி தன்புகழ் சூழ்ந்தகச்சி* அட்ட புயகரத்து ஆதிதன்னை*,
கன்னிநன் மாமதிள் மங்கைவேந்தன்* காமருசீர்க் கலிகன்றி*
குன்றா இன்னிசையால்சொன்ன செஞ்சொல்மாலை* ஏத்தவல்லார்க்கு இடம் வைகுந்தமே. (2) 2.8.10
ஒன்பதாம் திருமொழி – சொல்லுவன்
1128:##
சொல்லுவன் சொற்பொருள் தானவையாய்ச்* சுவை ஊறு ஒலி நாற்றமும் தோற்றமுமாய்*
நல்லரன் நான்முகன் நாரணனுக்கு இடந்தான்* தடம் சூழ்ந்து அழகாயகச்சி*
பல்லவன் வில்லவனென்று உலகில்* பலராய்ப்பல வேந்தர் வணங்குகழல் பல்லவன்*
மல்லையர்க்கோன் பணிந்த* பரமேச்சுர விண்ணகரமதுவே. (2) 2.9.1
1129:
கார்மன்னு நீள்விசும்பும்* கடலும் சுடரும் நிலனும்மலையும்*
தன் உந்தித்தார்மன்னு தாமரைக் கண்ணனிடம்* தடமாமதிள் சூழ்ந்து அழகாயகச்சி*
தேர்மன்னு தென்னவனைமுனையில்* செருவில்திறல் வாட்டிய திண்சிலையோன்,*
பார்மன்னு பல்லவர் கோன்பணிந்த* பரமேச்சுர விண்ணகரமதுவே. 2.9.2
1130:
உரந்தரு மெல்லணைப் பள்ளிகொண்டான்* ஒருகால்முன்னம் மாவுரு வாய்க்கலுள்*
வரந்தரு மாமணிவண்ணனிடம்* மணிமாடங்கள் சூழ்ந்து அழகாய கச்சி*
நிரந்தவர் மண்ணையில் புண்ணுகர்வேல்* நெடுவாயிலுகச்செருவில்முனநாள்*
பரந்தவன் பல்லவர்க்கோன் பணிந்த* பரமேச்சுர விண்ணகரமதுவே. 2.9.3
1131:
அண்டமும் எண்திசையும் நிலனும் *அலைநீரொடு வான் எரிகால்முதலா உண்டவன்*
எந்தைபிரானது இடம் * ஒளி மாடங்கள் சூழ்ந்து அழகாயகச்சி*
விண்டவர் இண்டைக்குழாமுடனே* விரைந்தார் இரியச்செருவில்முனைந்து*
பண்டொருகால் வளைத்தான் பணிந்த* பரமேச்சுர விண்ணகரமதுவே. 2.9.4
1132:
தூம்புடைத் திண்கைவன் தாள்களிற்றின்* துயர்த்தீர்த்து அரவம்வெருவ*
முனநாள் பூம்புனல் பொய்கை புக்கானவனுக்கு இடந்தான்* தடம்சூழ்ந்து அழகாயகச்சி*
தேம்பொழில் குன்றெயில் தென்னவனைத்*திசைப்பச் செருமேல் வியந்தன்றுசென்ற*
பாம்புடைப் பல்லவர்க்கோன் பணிந்த* பரமேச்சுர விண்ணகரமதுவே. 2.9.5
1133:
திண்படைக்கோளரியின் உருவாய்* திறலோனகலம் செருவில்முனநாள்*
புண்படப் போழ்ந்த பிரானதிடம்* பொருமாடங்கள் சூழ்ந்த அழகாயகச்சி*
வெண்குடை நீழல் செங்கோல் நடப்ப* விடைவெல்கொடி வேல்படை முன்உயர்த்த*
பண்புடைப் பல்லவர்க்கோன் பணிந்த* பரமேச்சுர விண்ணகரமதுவே. 2.9.6
1134:
இலகிய நீள்முடி மாவலி தன்பெருவேள்வியில்* மாணுருவாய் முனநாள்*
சலமொடு மாநிலங் கொண்டவனுக்கு இடந்தான்*தடம் சூழ்ந்து அழகாயகச்சி*
உலகுடை மன்னவன் தென்னவனை*கன்னி மாமதிள்சூழ் கருவூர்வெருவ,
பலபடை சாயவென்றான் பணிந்த* பரமேச்சுர விண்ணகரமதுவே. 2.9.7
1135:
குடைத்திறல் மன்னவனாய் * ஒருகால் குரங்கைப்படையா*
மலையால்கடலை அடைத்தவன் எந்தைபிரானது இடம்* மணி மாடங்கள் சூழ்ந்து அழகாயகச்சி*
விடைத்திறல் வில்லவன் நென்மெலியில்* வெருவச்செருவேல் வலங்கைப்பிடித்த,
படைத்திறல் பல்லவர்க்கோன் பணிந்த* பரமேச்சுர விண்ணகரம் அதுவே.
1136:
பிறையுடை வாணுதல் பின்னை திறத்து* முன்னே ஒரு கால்செருவில் உருமின்*
மறையுடை மால்விடையேழடர்த்தாற்கு இடந்தான்* தடம் சூழ்ந்த அழகாயகச்சி*
கறையுடைவாள் மறமன்னர்க்கெட* கடல்போல் முழங்கும் குரல்கடுவாய்*
பறையுடைப் பல்லவர்க்கோன் பணிந்த* பரமேச்சுர விண்ணகரமதுவே. 2.9.9
1137:##
பார்மன்னு தொல்புகழ்ப் பல்லவர்க்கோன் பணிந்த* பரமேச்சுர விண்ணகர்மேல்*
கார்மன்னு நீள்வயல் மங்கையர் தன்தலைவன்* கலிகன்றி குன்றாது உரைத்த*
சீர்மன்னு செந்தமிழ் மாலை வல்லார்*திருமாமகள் தன் அருளால்*
உலகில் தேர்மன்னராய் ஒலிமாகடல் சூழ்*செழுநீர் உலகாண்டு திகழ்வர்களே. (2)
பத்தாம் திருமொழி – மஞ்ஜாடு
1138:##
மஞ்சாடுவரையேழும் கடல்களேழும்* வானகமும் மண்ணகமும் மற்றும் எல்லாம்*
எஞ்சாமல் வயிற்றடக்கி ஆலின் மேலோர்* இளந்தளிரில் கண்வளர்ந்த ஈசந்தன்னை*
துஞ்சாநீர் வளஞ்சுரக்கும் பெண்ணைத் தென்பால்* தூயநான் மறையாளர்
சோமுச்செய்ய*
செஞ்சாலி விளைவயலுள் திகழ்ந்து தோன்றும்* திருக்கோவலூர் அதனுள் கண்டேன்
நானே.
1139:
கொந்தலர்ந்த நறுந்துழாய் சாந்தம் தூபம்*
தீபம்கொண்டு அமரர்த்தொழப் பணங்கொள்பாம்பில்*
சந்தணி மென்முலைமலராள் தரணிமங்கை*
தாமிருவர் அடிவருடும் தன்மையானை*
வந்தனைசெய்து இசையேழ் ஆறங்கம்*
ஐந்துவளர்வேள்வி நான்மறைகள் மூன்று தீயும்*
சிந்தனைசெய்து இருபொழுது மொன்றும்*
செல்வத் திருக்கோவலூர் அதனுள்கண்டேன் நானே.
1140:
கொழுந்தலரும் மலர்ச்சோலைக் குழாங்கொள் பொய்கைக்*
கோள்முதலை வாளெயிற்றுக் கொண்டற்கெள்கி*
அழுந்திய மாகளிற்றினுக்கு அன்றாழியேந்தி*
அந்தரமே வரத்தோன்றி அருள் செய்தானை*
எழுந்த மலர்க்கருநீலம் இருந்தில் காட்ட*
இரும்புன்னை முத்தரும்பிச் செம்பொன்காட்ட*
செழுந்தட நீர்க்கமலம் தீ விகைபோல் காட்டும்*
திருக்கோவலூர் அதனுள்கண்டேன் நானே.
1141:
தாங்கரும்போர் மாலிபடப் பறவை யூர்ந்து*
தராதலத்தோர் குறைமுடித்த தன்மையானை*
ஆங்குஅரும்பிக் கண்ணீர்சோர்ந்து அன்புகூரும்*
அடியவர்கட்கு ஆரமுதமானான் தன்னை*
கோங்கரும்பு சுரபுன்னை குரவார் சோலைக்*
குழாவரிவண்டு இசைபாடும் பாடல் கேட்டு*
தீங்கரும்பு கண்வளரும் கழனி சூழ்ந்த*
திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே.
1142:
கறைவளர்வேல் கரன்முதலாக் கவந்தன் வாலி*
கணையொன்றினால் மடிய இலங்கைதன்னுள்*
பிறையெயிற்று வாளரக்கர் சேனையெல்லாம்*
பெருந்தகையோடு உடந்துணித்த பெம்மான்றன்னை*
மறைவளரப் புகழ்வளர மாடந்தோறும்*
மண்டபம் ஒண்தொளியனைத்தும் வாரமோத*
சிறையணைந்த பொழிலணைந்த தென்றல் வீசும்*
திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே.
1143:
உறியார்ந்த நறுவெண்ணெ ஒளியால் சென்று*
அங்குண்டானைக் கண்டாய்ச்சி உரலோடார்க்க*
தறியார்ந்த கருங்களிறேபோல நின்று*
தடங்கண்கள் பனிமல்கும் தன்மையானை*
வெறியார்ந்த மலர்மகள் நாமங்கையோடு*
வியன்கலை எண்தோளினாள் விளங்கு*
செல்வச் செறியார்ந்த மணிமாடம் திகழ்ந்து தோன்றும்*
திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே.
1144:
இருங்கைம்மா கரிமுனிந்து பரியைக் கீறி*
இனவிடைகள் ஏழடர்த்து மருதம் சாய்த்து*
வரும்சகடம் இறவுதைத்து மல்லையட்டு*
வஞ்சகஞ்செய் கஞ்சனுக்கு நஞ்சானானை*
கருங்கமுகு பசும்பாளை வெண்முத்து ஈன்று*
காயெல்லாம் மரகதமாய்ப் பவளம் காட்ட*
செருந்திமிக மொட்டலர்த்தும் தேன்கொள்சோலைத்*
திருக்கோவலூர் அதனுள்கண்டேன் நானே.
1145:
பாரேறு பெரும்பாரம் தீரப்*
பண்டு பாரதத்துத் தூதியங்கி*
பார்த்தன் செல்வத்தேரேறு சாரதியாய் எதிர்ந்தார் சேனை*
செருக்களத்துத் திறலழியச் செற்றான் தன்னை*
போரேறொன்று உடையானும் அளகைக்கோனும்*
புரந்தரனும் நான்முகனும் பொருந்தும் ஊர்ப்போல்*
சீரேறு மறையாளர் நிறைந்த*
செல்வத் திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே.
1146:
தூவடிவின் பார்மகள் பூமங்கையோடு*
சுடராழி சங்குஇருபால் பொலிந்து தோன்ற*
காவடிவின் கற்பகமே போல நின்று*
கலந்தவர்கட்கு அருள்புரியும் கருத்தினானை*
சேவடிகை திருவாய் கண்சிவந்த ஆடை*
செம்பொன்செய் திருவுருவமானான் தன்னை*
தீவடிவின் சிவன் அயனே போல்வார்*
மன்னு திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே.
1147:##
`வாரணங்கொள் இடர்கடிந்த மாலை*
நீல மரதகத்தை மழைமுகிலே போல்வான்தன்னை*
சீரணங்கு மறையாளர் நிறைந்த*
செல்வத் திருக்கோவலூர் அதனுள் கண்டேன் என்று*
வாரணங்கு முலைமடவார் மங்கை வேந்தன்*
வாட்கலியனொலி ஐந்துமைந்தும் வல்லார்*
காரணங்களால் உலகம்கலந்து அங்கேத்தக்*
கரந்துஎங்கும் பரந்தானைக் காண்பர் தாமே. (2) 2.10.10