பெரிய திருமொழி எட்டாம் பத்து


எட்டாம் பத்து

 

முதல் திருமொழி

 

1648:##

சிலையிலங்கு பொன்னாழி* திண்படைதண்டு ஒண்சங்கம்என்கின்றாளால்,*

மலையிலங்கு தோள் நான்கே* மற்றவனுக்கு எற்றேகாண்!என்கின்றாளால்*

முலையிலங்கு பூம்பயலை* முன்போட அன்போடி இருக்கின்றாளால்*

கலையிலங்கு மொழியாளர்* கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொல்லோ!  (2)      

 

1649:##

செருவரை முன்னாசறுத்த* சிலையன்றோ?கைத்தலத்ததுஎன்கின்றாளால்,*

பொருவரைமுன் போர்தொலைத்த* பொன்னாழி மற்றொருகைஎன்கின்றாளால்*

ஒருவரையும் நின்னொப்பார்* ஒப்பிலா என்னப்பா!என்கின்றாளால்*

கருவரைபோல் நின்றானைக்* கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொல்லோ!  

 

1650:

துன்னுமா மணிமுடிமேல்* துழாயலங்கல் தோன்றுமால்என்கின்றாளால்,*

மின்னுமா மணிமகர குண்டலங்கள்* வில்வீசும்என்கின்றாளால்*

பொன்னின் மாமணி ஆரம்* அணியாகத்து இலங்குமால்என்கின்றாளால்*

கன்னிமா மதிள்புடைசூழ்* கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொல்லோ!   

 

1651:

தாராய தண்துளப* வண்டுழுத வரைமார்பன்என்கின்றாளால்*

போரானைக் கொம்பொசித்த புட்பாகன்* என்னம்மான்என்கின்றாளால்*

ஆரானும் காண்மின்கள்* அம்பவளம் வாயவனுக்குஎன்கின்றாளால்*

கார்வானம் நின்றதிரும்* கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொல்லோ!   

 

1652:

அடித்தலமும் தாமரையே* அங்கையும் பங்கயமேஎன்கின்றாளால்,*

முடித்தலமும் பொற்பூணும்* என்நெஞ்சத்துள் அகலாஎன்கின்றாளால்*

வடித்தடங்கண் மலரவளோ* வரையாகத்து உள்ளிருப்பாள்?’என்கின்றாளால்*

கடிக்கமலம் கள்ளுகுக்கும்* கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொல்லோ!   

 

1653:

பேராயிரம் உடைய பேராளன்* பேராளன்என்கின்றாளால்*

ஏரார் கனமகர குண்டலத்தன்* எண்தோளன்என்கின்றாளால்*

நீரார் மழைமுகிலே* நீள்வரையே ஒக்குமால்என்கின்றாளால்*

காரார் வயல் அமரும்* கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொல்லோ!   8.1.6

 

1654:

செவ்வரத்த உடையாடை* அதன்மேலோர் சிவளிகைக்கச்சென்கின்றாளால்*

அவ்வரத்த அடியிணையும்* அங்கைகளும் பங்கயமேஎன்கின்றாளால்*

மைவளர்க்கும் மணியுருவம்* மரகதம் மழைமுகிலோ!என்கின்றாளால்*

கைவளர்க்கும் அழலாளர்* கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொல்லோ!   

 

1655:

கொற்றப்புள் ஒன்றேறி* மன்னூடே வருகின்றான்என்கின்றாளால்*

வெற்றிப்போர் இந்திரற்கும்* இந்திரனே ஒக்குமால்என்கின்றாளால்*

பெற்றக்கால் அவனாகம்* பெண்பிறந்தோம் உய்யோமோ?’ என்கின்றாளால்*

கற்றநூல் மறையாளர்* கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொல்லோ!   

 

1656:

வண்டமரும் வனமாலை* மணிமுடிமேல் மணநாறும்என்கின்றாளால்*

உண்டிவர் பால் அன்பு எனக்கென்று* ஒருகாலும் பிரிகிலேன்என்கின்றாளால்*

பண்டிவரைக் கண்டறிவது* எவ்வூரில் யாம்?’என்றே பயில்கின்றாளால்*

கண்டவர்தம் மனம்வழங்கும்* கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொல்லோ!   

 

1657:##

மாவளரு மென்னோக்கி* மாதராள் மாயவனைக் கண்டாள்என்று*

காவளரும் கடிபொழில்சூழ்* கண்ணபுரத்து அம்மானைக் கலியன் சொன்ன*

பாவளரும் தமிழ்மாலை* பன்னியநூல் இவை ஐந்தும் ஐந்தும் வல்லார்*

பூவளரும் கற்பகம்சேர்* பொன்னுலகில் மன்னவராய்ப் புகழ் தக்கோரே.  (2)  

 

இரண்டாம் திருமொழி

 

1658:##

தெள்ளியீர்! தேவர்க்கும்* தேவர் திருத்தக்கீர்!*

வெள்ளியீர் வெய்ய* விழுநிதி வண்ணர்*

ஓ!துள்ளுநீர்க்* கண்ணபுரம் தொழுதாள் இவள்-

கள்வியோ,* கைவளை கொள்வது தக்கதே?  (2)      8.2.1

 

1659:

நீணிலா முற்றத்து* நின்றிவள் நோக்கினாள்,*

காணுமோ!* கண்ணபுரம் என்று காட்டினாள்,*

பாணனார் திண்ணம் இருக்க* இனிஇவள்-

நாணுமோ,?* நன்று நன்று நறையூரர்க்கே.      8.2.2

 

1660:##

அருவிசோர் வேங்கடம்* நீர்மலைஎன்றுவாய்-

வெருவினாள்* மெய்யம் வினவி இருக்கின்றாள்,*

பெருகுசீர்க்* கண்ணபுரம்என்று பேசினாள்-

உருகினாள்,* உள்மெலிந்தாள் இது என்கொலோ!  (2)  8.2.3

 

1661:

உண்ணும் நாளில்லை* உறக்கமும் தானில்லை,*

பெண்மையும் சால* நிறைந்திலள் பேதைதான்,*

கண்ணனூர் கண்ணபுரம்* தொழும் கார்க்கடல்-

வண்ணர்மேல்,* எண்ணம் இவட்கு இது என்கொலோ!    8.2.4

 

1662:

கண்ணனூர்* கண்ணபுரம் தொழும் காரிகை,*

பெண்மையும் தன்னுடை* உண்மை உரைக்கின்றாள்,*

வெண்ணெயுண்டு ஆப்புண்ட* வண்ணம் விளம்பினால்,*

வண்ணமும்* பொன்னிறம் ஆவது ஒழியுமே.    8.2.5

 

1663:

வடவரை நின்றும் வந்து* இன்று கணபுரம்,*

இடவகை கொள்வது* யாம்என்று பேசினாள்,*

மடவரல் மாதர் என் பேதை* இவர்க்குஇவள்-

கடவதென்,?* கண்துயில் இன்று* இவர் கொள்ளவே. 8.2.6

 

1664:##

தரங்கநீர் பேசினும்* தண்மதி காயினும்,*

இரங்குமோ?* எத்தனை நாளிருந்து எள்கினாள்?*

துரங்கம் வாய் கீண்டு உகந்தான்* அது தொன்மை ஊர்*

அரங்கமேஎன்பது* இவள் தனக்கு ஆசையே.       8.2.7

 

 1665:

தொண்டெல்லாம் நின்னடியே* தொழுது உய்யுமா-

கண்டு,* தான் கணபுரம்* கைதொழப் போயினாள்*

வண்டுலாம் கோதை என் பேதை* மணிநிறம்-

கொண்டுதான்,* கோயின்மை செய்வது தக்கதே?     8.2.8

 

1666:

முள்ளெயிறு ஏய்ந்தில,* கூழை முடிகொடா,*

தெள்ளியள் என்பதோர்* தேசிலள் என்செய்கேன்,*

கள்ளவிழ் சோலைக்* கணபுரம் கைதொழும்-

பிள்ளையை,* பிள்ளை என்று எண்ணப் பெறுவரே?  8.2.9

 

1667:##

கார்மலி* கண்ணபுரத்து எம் அடிகளை,*

பார்மலி மங்கையர் கோன்* பரகாலன் சொல்,*

சீர்மலி பாடல்* இவைபத்தும் வல்லவர்,*

நீர்மலி வையத்து* நீடு நிற்பார்களே.  (2)    8.2.10

 

1668:

மூன்றாம் திருமொழி

 

கரையெடுத்த சுரிசங்கும்* கனபவளத் தெழுகொடியும்,*

திரையெடுத்து வருபுனல்சூழ்* திருக்கண்ணபுரத்து உறையும்,*

விரையெடுத்த துழாயலங்கல்* விறல்வரைத்தோள் புடைபெயர*

வரையெடுத்த பெருமானுக்கு* இழந்தேன் என் வரிவளையே.  (2)    8.3.1

 

1669:

அரிவிரவு முகில்கணத்தால்* அகில்புகையால் வரையோடும்*

தெரிவரிய மணிமாடத்* திருக்கண்ணபுரத்து உறையும்,*

வரியரவின் அணைத்துயின்று* மழைமதத்த சிறுதறுகண்,*

கரிவெருவ மருப்பொசித்தாற்கு* இழந்தேன் என் கனவளையே.      8.3.2

 

1670:

துங்கமா மணிமாட* நெடுமுகட்டின் சூலிகை,போம்*

திங்கள்மா முகில்துணிக்கும்* திருக்கண்ணபுரத்து உறையும்*

பைங்கண்மால் விடையடர்த்துப்* பனிமதிகோள் விடுத்துகந்த*

செங்கண்மால் அம்மானுக்கு* இழந்தேன் என் செறிவளையே.    8.3.3

 

1671:

கணமருவு மயிலகவு* கடிபொழில்சூழ் நெடுமறுகில்,*

திணமருவு கனமதிள்சூழ்* திருக்கண்ணபுரத்து உறையும்,*

மணமருவு தோளாய்ச்சி* ஆர்க்கப்போய், உரலோடும்*

புணர்மருதம் இறநடந்தாற்கு* இழந்தேன் என் பொன்வளையே.      8.3.4

 

1672:

வாயெடுத்த மந்திரத்தால்* அந்தணர்தம் செய்தொழில்கள்*

தீயெடுத்து மறைவளர்க்கும்* திருக்கண்ணபுரத்து உறையும்*

தாயெடுத்த சிறுகோலுக்கு* உளைந்தோடித் தயிருண்ட,*

வாய்துடைத்த மைந்தனுக்கு* இழந்தேன் என் வரிவளையே.       8.3.5

 

1673:

மடலெடுத்த நெடுந்தாழை* மருங்கெல்லாம் வளர்பவளம்,*

திடலெடுத்துச் சுடரிமைக்கும்* திருக்கண்ணபுரத்து உறையும்,*

அடலடர்த்து அன்று இரணியனை* முரணழிய அணியுகிரால்,*

உடலெடுத்த பெருமானுக்கு* இழந்தேன் என் ஒளிவளையே.    8.3.6

 

1674:

வண்டமரும் மலர்ப்புன்னை* வரிநீழல் அணிமுத்தம்,*

தெண்திரைகள் வரத்திரட்டும்* திருக்கண்ணபுரத்து உறையும்,*

எண்திசையும் எழுசுடரும்* இருநிலனும் பெருவிசும்பும்,*

உண்டுமிழ்ந்த பெருமானுக்கு* இழந்தேன் என் ஒளிவளையே.   8.3.7

 

1675:

கொங்குமலி கருங்குவளை* கண்ணாக தெண்கயங்கள்*

செங்கமல முகமலர்த்தும்* திருக்கண்ணபுரத்து உறையும்,*

வங்கமலி தடங்கடலுள்* வரியரவின் அணைத்துயின்ற,*

செங்கமல நாபனுக்கு* இழந்தேன் என் செறிவளையே.    8.3.8

 

1676:

வாராளும் இளங்கொங்கை* நெடும்பணைத்தோள் மடப்பாவை,*

சீராளும் வரைமார்வன்* திருக்கண்ணபுரத்து உறையும்,*

பேராளன் ஆயிரம்பேர்* ஆயிரவாய் அரவணைமேல்*

பேராளர் பெருமானுக்கு* இழந்தேன் என் பெய்வளையே.        8.3.9

 

1677:##

தேமருவு பொழில்புடைசூழ்* திருக்கண்ணபுரத்து உறையும்-

வாமனனை,* மறிகடல்சூழ்* வயலாலி வளநாடன்,*

காமருசீர்க் கலிகன்றி* கண்டுரைத்த தமிழ்மாலை,*

நாமருவி இவைபாட* வினையாய நண்ணாவே. (2)        8.3.10

 

நான்காம் திருமொழி

 

1678:##

விண்ணவர் தங்கள் பெருமான்* திருமார்வன்,*

மண்ணவர் எல்லாம் வணங்கும்* மலிபுகழ்சேர்,*

கண்ணபுரத்து எம் பெருமான்* கதிர்முடிமேல்,*

வண்ண நறுந்துழாய்* வந்து ஊதாய் கோல்தும்பீ!  (2)     8.4.1

 

1679:

வேத முதல்வன்* விளங்கு புரிநூலன்,*

பாதம் பரவிப்* பலரும் பணிந்தேத்தி,*

காதன்மை செய்யும்* கண்ணபுரத்து எம்பெருமான்,*

தாது நறுந்துழாய்* தாழ்ந்தூதாய் கோல்தும்பீ!    8.4.2

 

1680:

விண்ட மலரெல்லாம்* ஊதி நீ என்பெறுதி,?*

அண்ட முதல்வன்* அமரர்கள் எல்லாரும்,*

கண்டு வணங்கும்* கண்ணபுரத்து எம்பெருமான்*

வண்டு நறுந்துழாய்* வந்தூதாய் கோல்தும்பீ!  8.4.3

 

1681:

நீர் மலிகின்றது ஓர்* மீனாய் ஓர் ஆமையுமாய்,*

சீர் மலிகின்றது ஓர்* சிங்க உருவாகி,*

கார்மலி வண்ணன்* கண்ணபுரத்து எம்பெருமான்,*

தார்மலி தண்துழாய்* தாழ்ந்தூதாய் கோல்தும்பீ!      8.4.4

 

1682:

ஏரார் மலரெல்லாம்* ஊதி நீ என்பெறுதி,?*

பாரார் உலகம் பரவப்* பெருங்கடலுள்,*

காராமை ஆன* கண்ணபுரத்து எம்பெருமான்,*

தாரார் நறுந்துழாய்* தாழ்ந்தூதாய் கோல்தும்பீ!   8.4.5

 

1683:

மார்வில் திருவன்* வலனேந்து சக்கரத்தன்,*

பாரைப் பிளந்த* பரமன் பரஞ்சோதி,*

காரில் திகழ்* காயா வண்ணன் கதிர்முடிமேல்,*

தாரில் நறுந்துழாய்* தாழ்ந்தூதாய் கோல்தும்பீ!    8.4.6

 

1684:

வாமனன் கற்கி* மதுசூதன் மாதவன்*

தார்மன்னு* தாசரதியாய தடமார்வன்,*

காமன்தன் தாதை* கண்ணபுரத்து எம்பெருமான்,*

தாம நறுந்துழாய்* தாழ்ந்தூதாய் கோல்தும்பீ!     8.4.7

 

1685:

நீல மலர்கள்* நெடுநீர் வயல் மருங்கில்,*

சால மலரெல்லாம்* ஊதாதே,* வாளரக்கர்-

காலன்* கண்ணபுரத்து எம்பெருமான் கதிர்முடிமேல்,*

கோல நறுந்துழாய்* கொண்åதாய் கோல்தும்பீ!     8.4.8

 

1686:

நந்தன் மதலை* நிலமங்கை நல்துணைவன்,*

அந்த முதல்வன்* அமரர்கள் தம்பெருமான்,*

கந்தம் கமழ்* காயா வண்ணன் கதிர்முடிமேல்,*

கொந்து நறுந்துழாய்* கொண்åதாய் கோல்தும்பீ!  8.4.9

 

1687:##

வண்டு அமரும் சோலை* வயலாலி நல்நாடன்,*

கண்டசீர் வென்றிக்* கலியன் ஒலிமாலை,*

கொண்டல் நிறவண்ணன்* கண்ண புரத்தானை,*

தொண்டரோம் பாட* நினைந்தூதாய் கோல்தும்பீ! (2)       8.4.10

 

ஐந்தாம் திருமொழி

 

1688:##

தந்தை காலில் விலங்கற* வந்து தோன்றிய தோன்றல்பின்,* தமியேன் தன்-

சிந்தை போயிற்றுத்* திருவருள் அவனிடைப் பெறுமளவு இருந்தேனை,*

அந்தி காவலன் அமுதுறு பசுங்கதிர்* அவைசுட அதேனாடும்,*

மந்த மாருதம் வனமுலை தடவந்து* வலிசெய்வது ஒழியாதே!  (2)    8.5.1

 

1689:

மாரி மாக்கடல் வளைவணற்கு இளையவன்* வரைபுரை திருமார்பில்,*

தாரின் ஆசையில் போயின நெஞ்சமும்* தாழ்ந்ததுஓர் துணைகாணேன்,*

ஊரும் துஞ்சிற்று உலகமும் துயின்றது* ஒளியவன் விசும்பியங்கும்,*

தேரும் போயிற்றுத் திசைகளும் மறைந்தன* செய்வது ஒன்று அறியேனே!  8.5.2

 

1690:

ஆயன் மாயமே அன்றி மற்றென்கையில்* வளைகளும் இறைநில்லா,*

பேயின் ஆருயிர் உண்டிடும் பிள்ளை* நம் பெண்ணுயிர்க்கு இரங்குமோ,*

தூய மாமதிக் கதிர்ச்சுடத்துணையில்லை* இணைமுலை வேகின்றதால்,*

ஆயன் வேயினுக்கு அழிகின்றது உள்ளமும்* அஞ்சேல் என்பார் இலையே!       

 

1691:

கயம்கொள் புண்தலைக் களிறுந்து வெந்திறல்* கழல்மன்னர் பெரும்போரில்,*

மயங்க வெண்சங்கம் வாய்வைத்த மைந்தனும்* வந்திலன், மறிகடல்நீர்*

தயங்கு வெண்திரைத் திவலைநுண் பனியென்னும்* தழல் முகந்து இளமுலைமேல்,*

இயங்கு மாருதம் விலங்கிலென் ஆவியை* எனக்கெனப் பெறலாமே!        

 

1692:

ஏழு மாமரம் துளைபடச் சிலைவளைத்து* இலங்கையை மலங்குவித்த-

ஆழியான்,* நமக்கு அருளிய அருளொடும்* பகலெல்லை கழிகின்றதால்,*

தோழி! நாம்இதற்கு என்செய்தும்? துணையில்லை* சுடர்படு முதுநீரில்,*

ஆழ ஆழ்கின்ற ஆவியை அடுவதோர்* அந்தி வந்து அடைகின்றதே! 8.5.5

 

1693:

முரியும் வெண்திரை முதுகயம் தீப்பட* முழங்கழல் எரியம்பின்,*

வரிகொள் வெஞ்சிலை வளைவித்த மைந்தனும்* வந்திலன் என்செய்கேன்,*

எரியும் வெங்கதிர் துயின்றது* பாவியேன் இணைநெடுங் கண்துயிலா,*

கரிய நாழிகை ஊழியில் பெரியன* கழியுமாறு அறியேனே!        8.5.6

 

1694:

கலங்க மாக்கடல் கடைந்தடைத்து* இலங்கையர் கோனது வரையாகம்,-

மலங்க* வெஞ்சமத்து அடுசரம் துரந்த* எம் அடிகளும் வாரானால்,*

இலங்கு வெங்கதிர் இளமதி அதனொடும்* விடைமணி யடும்,* ஆயன்-

விலங்கல் வேயினது ஓசையுமாய்* இனி விளைவது ஒன்றறியேனே!      8.5.7

 

1695:

முழுது இவ்வையகம் முறைகெட மறைதலும்* முனிவனும் முனிவெய்தி,*

மழுவினால் மன்னர் ஆருயிர் வவ்விய* மைந்தனும் வாரானால்,*

ஒழுகு நுண்பனிக் கொடுங்கிய பேடையை* அடங்க அஞ்சிறைகோலி,*

தழுவு நள்ளிருள் தனிமையின் கடியதோர்* கொடுவினை அறியேனே!      8.5.8

 

1696:

கனஞ்செய் மாமதிள் கணபுரத்து அவனொடும்* கனவினில் அவன்தந்த,*

மனஞ்செய் இன்பம்வந்து உள்புக எள்கி* என் வளைநெக இருந்தேனை,*

சினஞ்செய் மால்விடைச் சிறுமணி ஓசை* என் சிந்தையைச் சிந்துவிக்கும்,*

அனந்தல் அன்றிலின் அரிகுரல்* பாவியேன் ஆவியை அடுகின்றதே!      8.5.9

 

1697:##

வார்கொள் மென்முலை மடந்தையர்* தடங்கடல் வண்ணனைத் தாள்நயந்து,*

ஆர்வத்தால் அவர் புலம்பிய புலம்பலை* அறிந்துமுன் உரைசெய்த,*

கார்கொள் பைம்பொழில் மங்கையர் காவலன்* கலிகன்றி ஒலிவல்லார்,*

ஏர்கொள் வைகுந்த மாநகர் புக்கு* இமையவரொடும் கூடுவரே!  (2)    8.5.10

 

ஆறாம் திருமொழி

 

1698:##

தொண்டீர்! உய்யும் வகைகண்டேன்* துளங்கா அரக்கர் துளங்க,* முன்-

திண்தோள் நிமிரச் சிலைவளையச்* சிறிதே முனிந்த திருமார்பன்,*

வண்டார் கூந்தல் மலர்மங்கை* வடிக்கண் மடந்தை மாநோக்கம்-

கண்டான்,* கண்டு கொண்டுகந்த* கண்ணபுரம் நாம் தொழுதுமே.  (2)    

 

 

1699:

பொருந்தா அரக்கர் வெஞ்சமத்துப்* பொன்ற அன்று புள்ðர்ந்து*

பெருந்தோள் மாலி தலைபுரளப்* பேர்ந்த அரக்கர் தென்னிலங்கை*

இருந்தார் தம்மையுடன் கொண்டு* அங்கு எழிலார் பிலத்துப்புக் கொளிப்ப*

கருந்தாள் சிலைகைக் கொண்டானூர்* கண்ணபுரம் நாம் தொழுதுமே. 8.6.2

 

1700:##

வல்லி யிடையாள் பொருட்டாக* மதிள் நீர் இலங்கையார் கோவை*

அல்லல் செய்து வெஞ்சமத்துள்* ஆற்றல் மிகுத்த ஆற்றலான்*

வல்லாளரக்கர் குலப்பாவை வாட* முனி தன் வேள்வியை*

கல்விச் சிலையால் காத்தானூர்* கண்ணபுரம் நாம் தொழுதுமே. (2)  8.6.3

 

1701:

மல்லை முந்நீர் அதர்பட* வரிவெஞ் சிலைகால் வளைவித்து*

கொல்லை விலங்கு பணிசெய்யக்* கொடியோன் இலங்கை புகலுற்று*

தொல்லை மரங்கள் புகப்பெய்து* துவலை நிமிர்ந்து வானணவ*

கல்லால் கடலை அடைத்தானூர்* கண்ணபுரம் நாம் தொழுதுமே. 8.6.4

 

1702:

ஆமையாகி அரியாகி* அன்னமாகி,* அந்தணர்தம்-

ஓமமாகி ஊழியாகி* உலகு சூழ்ந்த நெடும்புணரி*

சேமமதிள் சூழிலங்கைக்கோன்* சிரமும் கரமும் துணித்து,* முன்-

காமற் பயந்தான் கருதுமூர்* கண்ணபுரம் நாம் தொழுதுமே. 8.6.5

 

1703:

வருந்தாது இரு நீ மடநெஞ்சே* நம்மேல் வினைகள் வாரா,* முன்-

திருந்தா அரக்கர் தென்னிலங்கை* செந்தீ உண்ணச் சிவந்து ஒருநாள்*

பெருந்தோள் வாணற்கு அருள்புரிந்து* பின்னை மணாளனாகி* முன்-

கருந்தாள் களிறொன்று ஒசித்தானூர்* கண்ணபுரம் நாம் தொழுதுமே. 8.6.6

 

1704:

இலையார் மலர்ப்பூம் பொய்கைவாய்* முதலை தன்னால் அடர்ப்புண்டு*

கொலையார் வேழம் நடுக்குற்றுக் குலைய* அதனுக்கு அருள்புரிந்தான்*

அலை நீரிலங்கைத் தசக்கிரீவற்கு* இளையோற்கு அரசை அருளி* முன்-

கலைமாச் சிலையால் எய்தானூர்* கண்ணபுரம் நாம் தொழுதுமே. 8.6.7

 

1705:

மாலாய் மனமே! அருந்துயரில்* வருந்தாது இரு நீ, வலிமிக்க*

காலார் மருதும் காய்சினத்த கழுதும்* கதமாக் கழுதையும்*

மாலார் விடையும் மதகரியும்* மல்லர் உயிரும் மடிவித்து*

காலால் சகடம் பாய்ந்தானூர்* கண்ணபுரம் நாம் தொழுதுமே. 8.6.8

 

1706:

குன்றால் மாரி பழுதாக்கிக்* கொடியேர் இடையாள் பொருட்டாக*

வன்தாள் விடையேழ் அன்றடர்த்த* வானோர் பெருமான் மாமாயன்*

சென்றான் தூது பஞ்சவர்க்காய்* திரிகாற் சகடம் சினமழித்து*

கன்றால் விளங்கா எறிந்தானூர்* கண்ணபுரம் நாம் தொழுதுமே. 8.6.9

 

1707:##

கருமா முகில்தோய் நெடுமாட* கண்ணபுரத்து எம் அடிகளை*

திருமா மகளால் அருள்மாரி* செழு நீராலி வளநாடன்*

மருவார் புயற்கைக் கலிகன்றி* மங்கை வேந்தன் ஒலிவல்லார்*

இருமா நிலத்துக்கு அரசாகி* இமையோர் இறைஞ்ச வாழ்வாரே.  (2)     

 

ஏழாம் திருமொழி

 

1708:##

வியமுடை விடையினம்* உடைதர மடமகள்*

குயமிடை தடவரை* அகலமது உடையவர்*

நயமுடை நடையனம்* இளையவர் நடைபயில்*

கயமிடை கணபுரம்* அடிகள்தம் இடமே.  (2)      8.7.1

 

1709:

இணைமலி மருதினொடு* எருதிற இகல்செய்து*

துணைமலி முலையவள்* மணமிகு கலவியுள்*

மணமலி விழவினொடு* அடியவர் அளவிய*

கணமலி கணபுரம்* அடிகள்தம் இடமே.    8.7.2

 

1710:

புயலுறு வரைமழை* பொழிதர மணிநிரை*

மயலுற வரைகுடை* எடுவிய நெடியவர்*

முயல்துளர் மிளைமுயல் துள* வள விளைவயல்*

கயல்துளு கணபுரம்* அடிகள்தம் இடமே.  8.7.3

 

1711:##

ஏதலர் நகைசெய* இளையவர் அளைவெணெய்*

போதுசெய் தமரிய* புனிதர்நல் விரை* மலர்-

கோதிய மதுகரம்* குலவிய மலர்மகள்*

காதல்செய் கணபுரம்* அடிகள்தம் இடமே.   (2) 8.7.4

 

1712:

தொண்டரும் அமரரும்* முனிவரும் தொழுதெழ*

அண்டமொடு அகலிடம்* அளந்தவர் அமர்செய்து*

விண்டவர் பட* மதிளிலங்கை முன்எரியெழ*

கண்டவர் கணபுரம்* அடிகள்தம் இடமே.    8.7.5

 

1713:

மழுவியல் படையுடை* அவனிடம் மழைமுகில்*

தழுவிய உருவினர்* திருமகள் மருவிய,*

கொழுவிய செழுமலர்* முழுசிய பறவைபண்*

எழுவிய கணபுரம்* அடிகள்தம் இடமே.    8.7.6

 

1714:

பரிதியொடு அணிமதி* பனிவரை திசைநிலம்*

எரிதியொடு எனவின* இயல்வினர் செலவினர்*

சுருதியொடு அருமறை* முறைசொலும் அடியவர்*

கருதிய கணபுரம்* அடிகள்தம் இடமே.   8.7.7

 

1715:

படிபுல்கும் அடியிணை* பலர்தொழ மலர்வைகு*

கொடிபுல்கு தடவரை* அகலமது உடையவர்*

முடிபுல்கு நெடுவயல்* படைசெல அடிமலர்*

கடிபுல்கு கணபுரம்* அடிகள்தம் இடமே.   8.7.8

 

 

1716:

புலமனு மலர்மிசை* மலர்மகள் புணரிய*

நிலமகளென இன* மகளிர்கள் இவரொடும்*

வலமனு படையுடை* மணிவணர் நிதிகுவை*

கலமனு கணபுரம்* அடிகள்தம் இடமே.   8.7.9

 

1717:##

மலிபுகழ் கணபுரமுடைய* எம் அடிகளை*

வலிகெழு மதிளயல்* வயலணி மங்கையர்*

கலியன தமிழிவை* விழுமிய விசையினொடு*

ஒலிசொலும் அடியவர்* உறுதுயர் இலரே.  (2)        8.7.10

 

எட்டாம் திருமொழி

 

1718:##

வானோர் அளவும் முது முந்நீர்* வளர்ந்த காலம்,* வலியுருவில்-

மீனாய் வந்து வியந்து உய்யக்கொண்ட* தண்தாமரைக் கண்ணன்*

ஆனா உருவில் ஆனாயன்* அவனை அம்மா விளைவயலுள்*

கானார் புறவில் கண்ணபுரத்து* அடியேன் கண்டு கொண்டேனே.  (2)        

 

1719:

மலங்கு விலங்கு நெடுவெள்ளம் மறுக* அங்கு ஓர் வரைநட்டு*

இலங்கு சோதியார் அமுதம்* எய்தும் அளவு ஓராமையாய்*

விலங்கல் திரியத் தடங்கடலுள்* சுமந்து கிடந்த வித்தகனை*

கலங்கல் முந்நீர்க் கண்ணபுரத்து* அடியேன் கண்டு கொண்டேனே.     8.8.2

 

1720:

பாரார் அளவும் முது முந்நீர்* பரந்த காலம்,* வளைமருப்பில்-

ஏரார் உருவத்து ஏனமாய்* எடுத்த ஆற்றல் அம்மானை*

கூராரார் அலிரை கருதிக்* குருகு பாயக் கயல் இரியும்*

காரார் புறவில் கண்ணபுரத்து* அடியேன் கண்டு கொண்டேனே.     8.8.3

 

1721:

உளைந்த அரியும் மானிடமும்* உடனாய்த் தோன்ற ஒன்றுவித்து*

விளைந்த சீற்றம் விண்வெதும்ப* வேற்றோன் அகலம் வெஞ்சமத்து*

பிளந்து வளைந்த உகிரானைப்* பெருந்தண் செந்நெல் குலைதடிந்து*

களஞ்செய் புறவில் கண்ணபுரத்து* அடியேன் கண்டு கொண்டேனே.*     8.8.4

 

1722:

தொழுநீர் வடிவில் குறளுருவாய்* வந்து தோன்றி மாவலிபால்*

முழுநீர் வையம் முன்கொண்ட* மூவா உருவின் அம்மானை*

உழுநீர் வயலுள் பொன்கிளைப்ப* ஒருபால் முல்லை முகையோடும்*

கழுநீர் மலரும் கண்ணபுரத்து* அடியேன் கண்டு கொண்டேனே.     8.8.5

 

1723:

வடிவாய் மழுவே படையாக* வந்து தோன்றி மூவெழுகால்*

படியார் அரசு களைகட்ட* பாழி யானை அம்மானை*

குடியா வண்டு கொண்டுண்ணக்* கோல நீலம் மட்டு உகுக்கும்*

கடியார் புறவில் கண்ணபுரத்து* அடியேன் கண்டு கொண்டேனே.     8.8.6

 

1724:

வையம் எல்லாம் உடன்வணங்க* வணங்கா மன்னனாய்த் தோன்றி*

வெய்ய சீற்றக் கடியிலங்கை* குடிகொண்டு ஓட வெஞ்சமத்து*

செய்த வெம்போர் நம்பரனைச்* செழுந்தண் கானல் மணநாறும்*

கைதை வேலிக் கண்ணபுரத்து* அடியேன் கண்டு கொண்டேனே.     8.8.7

 

 

1725:

ஒற்றைக் குழையும் நாஞ்சிலும்* ஒருபால் தோன்றத் தான்தோன்றி*

வெற்றித் தொழிலார் வேல்வேந்தர்* விண்பால் செல்ல வெஞ்சமத்து*

செற்ற கொற்றத் தொழிலானைச்* செந்தீ மூன்றும் இல்லிருப்ப*

கற்ற மறையோர் கண்ணபுரத்து* அடியேன் கண்டு கொண்டேனே.     8.8.8

 

1726:

துவரிக் கனிவாய் நிலமங்கை* துயர்தீர்ந்து உய்யப் பாரதத்துள்*

இவரித்து அரசர் தடுமாற* இருள்நாள் பிறந்த அம்மானை*

உவரி யோதம் முத்துந்த* ஒருபால் ஒருபால் ஒண் செந்நெல்*

கவரி வீசும் கண்ணபுரத்து* அடியேன் கண்டு கொண்டேனே.     8.8.9

 

1727:##

மீனோடு ஆமைகேழல் அரிகுறளாய்* முன்னும் இராமனாய்த் தானாய்*

பின்னும் இராமனாய்த் தாமோதரனாய்க்* கற்கியும் ஆனான் தன்னை*

கண்ணபுரத்து அடியன்* கலியன் ஒலிசெய்த*

தேனார் இன்சொல் தமிழ்மாலை* செப்பப் பாவம் நில்லாவே.  (2)        8.8.10

 

ஒன்பதாம் திருமொழி

 

1728:##

கைம்மான மதயானை* இடர்தீர்த்த கருமுகிலை*

மைம்மான மணியை* அணிகொள் மரகதத்தை*

எம்மானை எம்பிரானை ஈசனை* என்மனத்துள்-

அம்மானை* அடியேன் அடைந்து உய்ந்து போனேனே.  (2)       8.9.1

 

1729:

தருமான மழைமுகிலைப்* பிரியாது தன்னடைந்தார்*

வருமானம் தவிர்க்கும்* மணியை அணியுருவில்*

திருமாலை அம்மானை* அமுதத்தைக் கடற்கிடந்த-

பெருமானை* அடியேன் அடைந்து உய்ந்து பிழைத்தேனே.    8.9.2

 

1730:

விடையேழ் அன்றடர்த்து* வெகுண்டு விலங்கலுற*

படையால்ஆழி தட்ட* பரமன் பரஞ்சோதி*

மடையார் நீலம்மல்கும் வயல்சூழ்* கண்ணபுரமொன்று-

உடையானுக்கு* அடியேன் ஒருவர்க்கு உரியேனோ?   8.9.3

 

1731:##

மிக்கானை* மறையாய் விரிந்த விளக்கை,* என்னுள்-

புக்கானைப்* புகழ்சேர் பொலிகின்ற பொன்மலையை*

தக்கானைக் கடிகை* தடங்குன்றின் மிசையிருந்த*

அக்காரக் கனியை* அடைந்து உய்ந்து போனேனே.  (2)        8.9.4

 

1732:

வந்தாய் என்மனத்தே* வந்துநீ புகுந்தபின்னை,*

எந்தாய்! போயறியாய்* இதுவே அமையாதோ*

கொந்தார் பைம்பொழில்சூழ்* குடந்தைக் கிடந்துகந்த-

மைந்தா,* உன்னைஎன்றும்* மறவாமைப் பெற்றேனே. 8.9.5

 

1733:

எஞ்சா வெந்நரகத்து* அழுந்தி நடுங்குகின்றேற்கு*

அஞ்சேலென்று அடியேனை* ஆட்கொள்ள வல்லானை*

நெஞ்சே! நீநினையாது* இறைப்பொழுதும் இருத்திகண்டாய்*

மஞ்சார் மாளிகைசூழ்* வயலாலி மைந்தனையே.       8.9.6

 

1734:

பெற்றார் பெற்றொழிந்தார்* பின்னும்நின்று அடியேனுக்கு*

உற்றானாய் வளர்த்து* என்னுயிராகி நின்றானை*

முற்றா மாமதிகோள் விடுத்தானை* எம்மானை*

எத்தால் யான்மறக்கேன்* இதுசொல்என் ஏழைநெஞ்சே!      8.9.7

 

1735:

கற்றார் பற்றறுக்கும்* பிறவிப் பெருங்கடலே*

பற்றா வந்து அடியேன்* பிறந்தேன் பிறந்தபின்னை*

வற்றா நீர்வயல்சூழ்* வயலாலி அம்மானைப்-

பெற்றேன்* பெற்றதுவும்* பிறவாமை பெற்றேனே. 8.9.8

 

1736:

கண்ணார் கண்ணபுரம்* கடிகை கடிகமழும்*

தண்ணார் தாமரைசூழ்* தலைச்சங்க மேல்திசையுள்*

விண்ணோர் நாண்மதியை* விரிகின்ற வெஞ்சுடரை*

கண்ணாரக் கண்டுகொண்டு* களிக்கின்றது இங்கு என்றுகொலோ?   8.9.9

 

1737:##

செருநீர வேல்வலவன்* கலிகன்றி மங்கையர்கோன்*

கருநீர் முகில்வண்ணன்* கண்ண புரத்தானை*

இருநீரின் தமிழ்* இன்னிசை மாலைகள் கொண்டுதொண்டீர்*

வருநீர் வையம்உய்ய* இவைபாடி ஆடுமினே.  (2)  8.9.10

 

பத்தாம் திருமொழி

 

1738:##

வண்டார்பூ மாமலர் மங்கை* மணநோக்கம் உண்டானே*

உன்னை உகந்துகந்து* உன்தனக்கே தொண்டானேற்கு*

என்செய்கின்றாய் சொல்லு* நால்வேதம் கண்டானே*

கண்ணபுறத்து உறை அம்மானே!  (2)   8.10.1

 

1739:

பெருநீரும் விண்ணும்* மலையும் உலகேழும்*

ஒருதாரா நின்னுள் ஒடுக்கிய* நின்னை அல்லால்*

வருதேவர் மற்றுளர் என்று* என்மனத்து இறையும்-

கருதேன்நான்* கண்ணபுரத்து உறை அம்மானே!  8.10.2

 

1740:##

மற்றும் ஓர்தெய்வம் உளதென்று* இருப்பாரோடு-

உற்றிலேன்* உற்றதும்* உன்னடியார்க்கு அடிமை*

மற்றெல்லாம் பேசிலும்* நின்திரு எட்டெழுத்தும்-

கற்று* நான் கண்ணபுரத்து உறை அம்மானே!  (2) 8.10.3

 

1741:

பெண்ணானாள்* பேரிளங் கொங்கையினார் அழல்போல்,*

உண்ணா நஞ்சு உண்டு உகந்தாயை* உகந்தேன்நான்*

மண்ணாளா! வாள்நெடுங் கண்ணி* மதுமலராள்-

கண்ணாளா* கண்ணபுரத்து உறை அம்மானே!        8.10.4

 

1742:

பெற்றாரும் சுற்றமும்* என்று இவை பேணேன்நான்*

மற்றாரும் பற்றிலேன்* ஆதலால் நின்னடைந்தேன்*

உற்றானென்று உள்ளத்து வைத்து* அருள் செய்கண்டாய்,*

கற்றார்சேர்* கண்ணபுரத்து உறை அம்மானே!       8.10.5

 

1743:

ஏத்திஉன் சேவடி* எண்ணி இருப்பாரை*

பார்த்திருந்து அங்கு* நமன்தமர் பற்றாது*

சோத்தம் நாம் அஞ்சுதும் என்று* தொடாமைநீ,-

காத்திபோல்* கண்ணபுரத்து உறை அம்மானே!       8.10.6

 

1744:

வெள்ளைநீர் வெள்ளத்து* அணைந்த அரவணைமேல்*

துள்ளுநீர் மெள்ளத்* துயின்ற பெருமானே*

வள்ளலே! உன்தமர்க்கு என்றும்* நமன்தமர்-

கள்ளர்போல்* கண்ணபுரத்து உறை அம்மானே!        8.10.7

 

1745:

மாணாகி* வையம் அளந்ததுவும், வாள் அவுணன்*

பூணாகம் கீண்டதுவும்* ஈண்டு நினைந்திருந்தேன்*

பேணாத வல்வினையேன்* இடர் எத்தனையும்-

காணேன்நான்* கண்ணபுரத்து உறை அம்மானே!    8.10.8

 

1746:

நாட்டினாய் என்னை* உனக்குமுன் தொண்டாக*

மாட்டினேன் அத்தனையே கொண்டு* என் வல்வினையை*

பாட்டினால் உன்னை* என் நெஞ்சத்து இருந்தமை-

காட்டினாய்* கண்ணபுரத்து உறை அம்மானே!      8.10.9

 

1747:##

கண்டசீர்க்* கண்ணபுரத்து உறை அம்மானை*

கொண்டசீர்த் தொண்டன்* கலியன் ஒலிமாலை*

பண்டமாய்ப் பாடும்* அடியவர்க்கு எஞ்ஞான்றும்*

அண்டம்போய் ஆட்சி* அவர்க்கு அது அறிந்தோமே.  (2)     8.10.10