பெரிய திருமொழி ஐந்தாம் பத்து


ஐந்தாம் பத்து

 முதல் திருமொழி – அரிவதரியான்

 

1348:##

அறிவதரியான் அனைத்துலகும் உடையான்* என்னையாளுடையான்*

குறியமாணு உருவாய* கூத்தன் மன்னிஅமருமிடம்*

நறியமலர்மேல் சுரும்பார்க்க* எழிலார்மஞ்ஞை நடமாட*

பொறிகொள்சிறை வண்டிசைபாடும்* புள்ளம்பூதங்குடிதானே      (5.1.1)

 

1349:

கள்ளக்குறளாய் மாவலியைவஞ்சித்து* உலகம் கைப்படுத்து*

பொள்ளைக்கரத்த போதகத்தின்* துன்பம்தவிர்த்த புனிதனிடம்*

பள்ளச்செறுவில் கயலுகளப்* பழனக்கழனி அதனுள்போய்*

புள்ளுப்பிள்ளைக்கு இரைதேடும்* புள்ளம்பூதங்குடிதானே      (5.1.2)

 

1350:

மேவாவரக்கர் தென்னிலங்கை* வேந்தன்வீயச் சரம்துரந்து*

மாவாய்பிளந்து மல்லடர்த்து* மருதம்சாய்த்த மாலதிடம்*

காவார்த்தெங்கின் பழம்வீழக்* கயல்கள்பாயக் குருகிரியும்*

பூவார்க்கழனி எழிலாரும்* புள்ளம்பூதங்குடிதானே      (5.1.3)

 

1351:

வெற்பால்மாரி பழுதாக்கி* விறல்வாளரக்கர் தலைவன்தன்*

வற்பார்திரள்தோள் ஐந்நான்கும்* துணித்தவல்வில் இராமனிடம்*

கற்பார்ப்புரிசை செய்குன்றம்* கவினார்கூடம் மாளிகைகள்*

பொற்பார்மாடம் எழிலாரும்* புள்ளம்பூதங்குடிதானே      (5.1.4)

 

1352:

மையார்தடங்கண் கருங்கூந்தல்* ஆய்ச்சிமறைய வைத்ததயிர்*

நெய்யார்பாலோடு அமுதுசெய்த* நேமியங்கை மாயனிடம்*

செய்யார்ஆரல் இரைகருதிச்* செங்கால்நாரை சென்றணையும்*

பொய்யாநாவின் மறையாளர்* புள்ளம்பூதங்குடிதானே      (5.1.5)

 

1353:

மின்னின் அன்ன நுண்மருங்குல்* வேயேய்தடந்தோள் மெல்லியற்கா*

மன்னுசினத்த மழவிடைகள்* ஏழ்அன்றுஅடர்த்த மாலதிடம்*

மன்னுமுதுநீர் அரவிந்தமலர்மேல்* வரிவண்டிசைபாட*

புன்னைபொன்னேய் தாதுதிர்க்கும்* புள்ளம்பூதங்குடிதானே      (5.1.6)

 

1354:

குடையாவிலங்கல் கொண்டேந்தி* மாரிபழுதா நிரைகாத்து*

சடையான்ஓட அடல்வாணன்* தடந்தோள்துணித்த தலைவனிடம்*

குடியாவண்டு கள்ளுண்ணக்* கோலநீலம் மட்டுகுக்கும்*

புடையார்கழனி எழிலாரும்* புள்ளம்பூதங்குடிதானே      (5.1.7)

 

1355:

கறையார்நெடுவேல் மறமன்னர்வீய* விசயன் தேர்கடவி*

இறையான் கையில் நிறையாத* முண்டம்நிறைத்த எந்தையிடம்*

மறையால்மூத்தீயவை வளர்க்கும்* மன்னுபுகழால் வண்மையால்*

பொறையால்மிக்க அந்தணர்வாழ்* புள்ளம்பூதங்குடிதானே      (5.1.8)

 

1356:

துன்னிமண்ணும் விண்ணாடும்* தோன்றாதுஇருளாய் மூடியநாள்*

அன்னமாகி அருமறைகள்* அருளிச்செய்த அமலனிடம்*

மின்னுசோதி நவமணியும்* வேயின்முத்தும் சாமரையும்*

பொன்னும்பொன்னி கொணர்ந்தலைக்கும்* புள்ளம்பூதங்குடிதானே      (5.1.9)

 

1357:##

கற்றாமறித்து காளியன்தன்* சென்னிநடுங்க நடம்பயின்ற*

பொற்றாமரையாள் தன்கேள்வன்* புள்ளம்பூதங்குடிதன்மேல்*

கற்றார்பரவும் மங்கையர்க்கோன்* காரார்புயற்கைக் கலிகன்றி*

சொல்தான் ஈரைந்திவைபாடச்* சோரநில்லாதுயர் தாமே        (5.1.10)

 

இரண்டாம் திருமொழி – தாந்தம்

 

1358:##

தாம்* தம்பெருமையறியார்*

தூதுவேந்தர்க்காய* வேந்தர்ஊர்போல்*

காந்தள்விரல்* மென்கலை நன்மடவார்*

கூந்தல்கமழும்* கூடலூரே   (5.2.1)

 

1359:

செறும்திண்* திமிலேறுடைய*

பின்னைபெறும்தண்கோலம்* பெற்றார்ஊர்ப்போல்*

நறுந்தன்தீம்* தேன்உண்டவண்டு*

குறிஞ்சிபாடும்* கூடலூரே     (5.2.2)

 

1360:

பிள்ளைஉருவாய்த்* தயிருண்டு*

அடியேன் உள்ளம்புகுந்த * ஒருவரூர்போல்*

கள்ளநாரை* வயலுள்*

கயல்மீன்கொள்ளைகொள்ளும்* கூடலூரே       (5.2.3)

 

1361:

கூற்றேருருவின்* குறளாய்*

நிலம்நீர் ஏற்றான்எந்தை* பெருமானூர்போல்*

சேற்றேருழுவர்* கோதைப் போதூண்*

கோல்தேன்முரலும்* கூடலூரே    (5.2.4)

 

1362:

தொண்டர்பரவச்* சுடர்சென்றணவ*

அண்டத்துஅமரும்* அடிகðர்போல்*

வண்டலலையுள்* கெண்டைமிளிர*

கொண்டலதிரும்* கூடலூரே      (5.2.5)

 

1363:

தக்கன்வேள்வி* தகர்த்ததலைவன்*

துக்கம் துடைத்த* துணைவரூர்போல்*

எக்கலிடு* நுண்மணல்மேல்*

எங்கும் கொக்கின் பழம்வீழ்* கூடலூரே (5.2.6)

 

1364:

கருந்தண் கடலும்* மலையும் உலகும்*

அருந்தும் அடிகள்* அமரும்ஊர்போல்*

பெருந்தண் முல்லைப்* பிள்ளையோடி*

குருந்தம் தழுவும்* கூடலூரே (5.2.7)

 

1365:

கலைவாழ்* பிணையோடு அணையும்*

திருநீர் மலைவாழ் எந்தை* மருவும்ஊர்போல்*

இலைதாழ் தெங்கின்* மேல்நின்று*

இளநீர்க்குலைதாழ்கிடங்கின்* கூடலூரே       (5.2.8)

 

1366:

பெருகு காதல் அடியேன்* உள்ளம்-

உருகப் புகுந்த* ஒருவரூர்போல்*

அருகுகைதைமலர*

கெண்டை குருகென்றஞ்சும்* கூடலூரே   (5.2.9)

 

1367:##

காவிப் பெருநீர் வண்ணன்*

கண்ணன் மேவித்திகழும்* கூடலூர்மேல்*

கோவைத் தமிழால்* கலியன் சொன்ன*

பாவைப் பாடப்* பாவம் போமே      (5.2.10)

 

மூன்றாம் திருமொழி – வென்றி

 

1368:##

வென்றிமாமழுவேந்தி முன்மண்மிசைமன்னரை* மூவெழுகால்கொன்றதேவ*

நின்குரைகழல் தொழுவதோர்வகை* எனக்கருள்புரியே*

மன்றில்மாம்பொழில் நுழைதந்து* மல்லிகைமௌவலின் போதலர்த்தி*

தென்றல்மாமணம் கமழ்தரவரு* திருவெள்ளறை நின்றானே       (5.3.1)

 

1369:##

வசையில்நான்மறைகெடுத்த அம்மலரயற்குஅருளி* முன்பரிமுகமாய்*

இசைகொள் வேதநூலென்றிவை பயந்தவனே!* எனக்கருள்புரியே*

உயர்கொள்மாதவிப் போதொடுலாவிய* மாருதம் வீதியின்வாய்*

திசையெல்லாம் கமழும் பொழில்சூழ்*திருவெள்ளறை நின்றானே     (5.3.2)

 

1370:

வெய்யனாய் உலகேழுடன் நலிந்தவன்* உடலகம் இருபிளவா*

கையில்நீளுகிர்ப்படையது வாய்த்தவனே!* எனக்கு அருள்புரியே,

மையினார்தருவர் ஆலினம் பாய* வண்தடத்திடைக் கமலங்கள்*

தெய்வனாறும் ஒண்பொய்கைகள்சூழ்* திருவெள்ளறை நின்றானே     (5.3.3)

 

1371:

வாம்பரியுக மன்னர்தம் உயிர்செக* ஐவர்க்கட்கு அரசளித்த*

காம்பினார் திருவேங்கடப் பொருப்ப!* நின் காதலை அருள் எனக்கு*

மாம்பொழில் தளிர்கோதிய மடக்குயில்* வாயது துவர்ப்பெய்த*

தீம்பலங்கனித் தேனது நுகர்* திருவெள்ளறை நின்றானே       (5.3.4)

 

1372:

மானவேல் ஒண்கண்மடவரல்* மண்மகள்அழுங்க முந்நீர்ப்பரப்பில்*

ஏனமாகி அன்றுஇருநிலம் இடந்தவனே!* எனக்கருள் புரியே*

கானமாமுல்லை கழைக் கரும்பேறி* வெண்முறுவல் செய்துஅலர்கின்ற*

தேனின் வாய்மலர் முருகுகுக்கும்* திருவெள்ளறை நின்றானே       (5.3.5)

 

 

1373:

பொங்குநீள்முடி அமரர்கள்தொழுதெழ* அமுதினைக் கொடுத்தளிப்பான்*

அங்குஓராமையதாகிய வாதி!* நின்னடிமையைஅருளெனக்கு*

தங்குபேடையொåடிய மதுகரம்* தையலார் குழலணைவான்*

திங்கள்தோய் சென்னிமாடம்சென்றணை* திருவெள்ளறை நின்றானே       (5.3.6)

 

1374:

ஆறினோடொருநான் குடைநெடுமுடி* அரக்கன் தஞ்சிரமெல்லாம்*

வேறுவேறுக வில்லதுவளைத்தவனே!* எனக்கு அருள்புரியே*

மாறில்சோதிய மரதகப்பாசடைத்* தாமரைமலர் வார்ந்த*

தேறல்மாந்தி வண்டுஇன்னிசைமுரல்* திருவெள்ளறை நின்றானே       (5.3.7)

 

1375:

முன்இவ்வேழுலகு உணர்வின்றி* இருள்மிகஉம்பர்கள் தொழுதேத்த*

அன்னமாகிய அன்றருமறை பயந்தவனே!* எனக்கு அருள்புரியே,

மன்னுகேதகை சூதகம்என்றிவை* வனத்திடைச் சுரும்பினங்கள்*

தென்னவென்று வண்டு இன்னிசைமுரல்* திருவெள்ளறை நின்றானே       (5.3.8)

 

1376:

ஆங்குமாவலிவேள்வியில் இரந்துசென்று* அகலிடம் முழுதினையும்*

பாங்கினால்கொண்டபரம! நின்பணிந்தெழுவேன்* எனக்கு அருள்புரியே,*

ஓங்குபிண்டியின் செம்மலரேறி* வண்டுஉழிதர*

மாவேறித்தீங்குயில் மிழற்றும்படப்பைத்* திருவெள்ளறை நின்றானே       (5.3.9)

 

1377:##

மஞ்சுலா மணிமாடங்கள்சூழ்* திருவெள்ளறை அதன்மேய*

அஞ்சனம்புரையும் திருவுருவனை* ஆதியை அமுதத்தை*

நஞ்சுலாவிய வேல்வலவன்* கலிகன்றிசொல் ஐயிரண்டும்*

எஞ்சலின்றிநின்று ஏத்தவல்லார்* இமையோர்க்கு அரசு ஆவர்களே     (5.3.10)

 

நான்காம் திருமொழி – உந்திமேல்

 

1378:##

உந்திமேல் நான்முகனைப்படைத்தான்* உலகுண்டவன் எந்தைபெம்மான்*

இமையோர்கள் தாதைக்கு* இடம்என்பரால்*

சந்தினோடு மணியும்கொழிக்கும்* புனற் காவிரி*

அந்திபோலும்நிறத்தார் வயல்சூழ்* தென்னரங்கமே     (5.4.1)

 

1379:

வையமுண்டு ஆலிலைமேவும்மாயன்* மணிநீள்முடிப்*

பைகொள் நாகத்தணையான்* பயிலும் இடமென்பரால்*

தையல் நல்லார் குழல்மாலையும்* மற்றவர் தடமுலை*

செய்ய சாந்தும் கலந்திழிபுனல்சூழ்* தென்னரங்கமே     (5.4.2)

 

1380:

பண்டுஇவ் வையமளப்பான் சென்று* மாவலிகையில் நீர்கொண்ட*

ஆழித்தடக்கைக்* குறளனிடம் என்பரால்*

வண்டுபாடும் மதுவார்புனல்* வந்திழி காவிரி*

அண்டநாறும் பொழில்சூழ்ந்து* அழகார் தென்னரங்கமே      (5.4.3)

 

1381:

விளைத்தவெம்போர் விறல்வாளரக்கன்* நகர் பாழ்பட*

வளைத்தவல்வில் தடக்கைஅவனுக்கு* இடமென்பரால்*

துளைக்கையானை மருப்பும்அகிலும்* கொணர்ந்துந்தி*

முன்திளைக்கும் செல்வப்புனல் காவிரிசூழ்* தென்னரங்கமே      (5.4.4)

 

1382:

வம்புலாம்கூந்தல் மண்டோதரிகாதலன்* வான்புக*

அம்புதன்னால் முனிந்த* அழகனிடம் என்பரால்*

உம்பர்க்கோனும் உலகேழும்* வந்தீண்டி வணங்கும்*

நல்செம்பொனாரும் மதிள்சூழ்ந்து* அழகார் தென்னரங்கமே    (5.4.5)

 

1383:

கலையுடுத்த அகலல்குல்* வன்பேய்மகள் தாயென*

முலைகொடுத்தாள் உயிருண்டவன்* வாழுமிடமென்பரால்*

குலையெடுத்த கதலி* இப்பொழிலூடும் வந்துந்தி*

முன்அலையெடுக்கும் புனற்காவிரிசூழ்* தென்னரங்கமே      (5.4.6)

 

1384:

கஞ்சன்நெஞ்சும் கடுமல்லரும்* சகடமும் காலினால்*

துஞ்சவென்ற சுடராழியான்* வாழுமிடம் என்பரால்*

மஞ்சுசேர் மாளிகை* நீடகில்புகையும்-

மறையோர்* செஞ்சொல்வேள்விப் புகையும்கமழும்* தென்னரங்கமே  (5.4.7)

 

1385:

ஏனமீன்ஆமையோடு* அரியும்சிறுகுறளுமாய்*

தானுமாயத்* தரணித்தலைவனிடம் என்பரால்*

வானும்மண்ணும்நிறையப்* புகுந்தீண்டி வணங்கும்*

நல்தேனும் பாலும்கலந்து அன்னவர்சேர்* தென்னரங்கமே     (5.4.8)

 

1386:

சேயன் என்றும் மிகப்பெரியன்* நுண்நேர்மையினாய*

இம்மாயையை யாரும்அறியா* வகையானிடம் என்பரால்*

வேயின்முத்தும்மணியும் கொணர்ந்து* ஆர்புனல்காவிரி*

ஆயபொன்மாமதிள்சூழ்ந்து* அழகார் தென்னரங்கமே      (5.4.9)

 

1387:##

அல்லிமாதர்அமரும்* திருமார்வன் அரங்கத்தை*

கல்லின்மன்னுமதிள்* மங்கையர்கோன் கலிகன்றிசொல்*

நல்லிசை மாலைகள்* நாலிரண்டும் இரண்டுமுடன்*

வல்லவர்தாம் உலகாண்டு* பின்வானுலகாள்வரே     (5.4.10)

 

ஐந்தாம் திருமொழி – வெருவாதாள்

 

1388:##

வெருவாதாள் வாய்வெருவி* வேங்கடமே! வேங்கடமே!எங்கின்றாளால்*

மருவாளாள் என்குடங்கால்* வாள்நெடுங்கண் துயில்மறந்தாள்*வண்டார்கொண்டல்-

உருவாளன் வானவர்தம்உயிராளன்* ஒலிதிரைநீர்ப் பௌவங்கொண்ட-

திருவாளன்* என்மகளைச் செய்தனகள்* எங்ஙனம்நான் சிந்திக்கேனே ! (5.5.1)

 

1389:

கலையாளா அகலல்குல்* கனவளையும்கையாளா என்செய்கேன்நான்*

விலையாளா அடியேனை* வேண்டுதியோ? வேண்டாயோ?’ என்னும்*

மெய்யமலையாளன் வானவர்தம் தலையாளன்* மராமரம்ஏழ்எய்த வென்றிச்

சிலையாளன்* என்மகளைச்செய்தனகள்* எங்ஙனம்நான் சிந்திக்கேனே ! (5.5.2)

 

1390:

மானாய மென்னோக்கி* வாள்நெடுங்கண்நீர்மல்கும் வளையும்சோரும்*

தேனாயநறுந்துழாய் அலங்கலின்* திறம்பேசி உறங்காள் காண்மின்*

கானாயன்கடிமனையில் தயிருண்டுநெய்பருக* நந்தன்பெற்ற ஆனாயன்*

என்மகளைச் செய்தனகள்* அம்மனைமீர்! அறிகிலேனே!      (5.5.3)

 

1391:

தாய்வாயில் சொற்கேளாள்* தன்னாயத்தோடு அணையாள்தடமென்கொங்கையே*

ஆரச்சாந்தணியாள்* எம்பெருமான் திருவரங்கம்எங்கே? என்னும்*

பேய்மாயமுலையுண்டு இவ்வுலகுண்ட பெருவயிற்றன்* பேசில் நங்காய்*

மாமாயன் என்மகளைச் செய்தனகள்* மங்கைமீர் ! மதிக்கி லேனே !    (5.5.4)

 

1392:

பூண்முலைமேல் சாந்தணியாள்* பொருகயல்கண்மையெழுதாள் பூவைபேணாள்*

ஏணறியாள் எத்தனையும்* எம்பெருமான்திருவரங்கம் எங்கே ?’ என்னும்*

நாண்மலராள் நாயகனாய்* நாமறியஆய்ப்பாடி வளர்ந்தநம்பி*

ஆண்மகனாய் என்மகளைச்செய்தனகள்* அம்மனைமீர்! அறிகிலேனே!      (5.5.5)

 

1393:

தாதாடு வனமாலை* தாரானோ?’ என்றென்றே தளர்ந்தாள்காண்மின்*

யாதானும் ஒன்றுரைக்கில்* எம்பெருமான் திருவரங்கம்என்னும்*பூமேல்-

மாதாளன் குடமாடி மதுசூதன்* மன்னர்க்காய் முன்னம்சென்ற-

தூதாளன்* என்மகளைச் செய்தனகள்* எங்ஙனம்நான் சொல்லுகேனே?    (5.5.6)

 

1394:

வாராளும் இளங்கொங்கை* வண்ணம் வேறாயினவாறுஎண்ணாள்*

எண்ணில்பேராளன் பேரல்லால்பேசாள்* இப்பெண்பெற்றேன் என்செய்கேன்நான்*

தாராளன் தண்குடந்தைநகராளன்* ஐவர்க்காய் அமரில்உய்த்த-

தேராளன்* என்மகளைச் செய்தனகள்* எங்ஙனம்நான் செப்புகேனே?    (5.5.7)

 

1395:

உறவாதுமிலள் என்றென்று* ஒழியாது பலரேசும் அலராயிற்றால்*

மறவாதே எப்பொழுதும்* மாயவனே! மாதவனே!என்கின்றளால்*

பிறவாதபேராளன் பெண்ணாளன் மண்ணாளன்* விண்ணோர்தங்கள் அறவாளன்*

என்மகளைச் செய்தனகள்*  அம்மனைமீர்! அறிகிலேனே !       (5.5.8)

 

1396:

பந்தோடு கழல்மருவாள்* பைங்கிளியும் பாலூட்டாள் பாவைபேணாள்*

வந்தானோ திருவரங்கன்* வாரானோ?’என்றென்றே வளையும்சோரும்*

சந்தோகன் பௌழியன்* ஐந்தழலோம்பு தைத்திரியன் சாமவேதி*

அந்தோ!வந்து என்மகளைச்செய்தனகள்* அம்மனைமீர்! அறிகிலேனே !  (5.5.9)

 

1397:##

சேலுகளும் வயல்புடைசூழ்* திருவரங்கத்தம்மானைச் சிந்தைசெய்த*

நீலமலர்க்கண்மடவாள் நிரையழிவைத்* தாய்மொழிந்த அதனை*

நேரார்க்காலவேல் பரகாலன்* கலிகன்றிஒலிமாலை கற்றுவல்லார்*

மாலைசேர் வெண்குடைக்கீழ் மன்னவராய்ப்* பொன்னுலகில் வாழ்வர்தாமே (5.5.10)

 

ஆறாம் திருமொழி – கைம்மானம்

 

1398:##

கைம்மான மழகளிற்றைக்* கடல்கிடந்த கருமணியை*

மைம்மான மரகதத்தை* மறையுரைத்த திருமாலை*

எம்மானை எனக்கென்றும் இனியானைப்* பனிகாத்தஅம்மானை*

யான்கண்டது* அணிநீர்த் தென்னரங்கத்தே (5.6.1)

 

1399:##

பேரானைக்* குறுங்குடி எம்பெருமானை*திருதண்கால்

ஊரானைக்* கரம்பனூர் உத்தமனை*முத்திலங்கு

காரார் திண்கடலேழும்* மலையேழ் இவ்வுலகேழுண்டும்*

ஆராதென்றிருந்தானைக்* கண்டது தென்னரங்கத்தே      (5.6.2)

 

1400:

ஏனாகி உலகிடந்து* அன்றுஇருநிலனும் பெருவிசும்பும்*

தானாய பெருமானைத்* தன்னடியார் மனத்துஎன்றும்*

தேனாகி அமுதாகித்* திகழ்ந்தானை மகிழ்ந்தொருகால்*

ஆனாயன் ஆனானைக்* கண்டது தென்னரங்கத்தே      (5.6.3)

 

1401:

வளர்ந்தவனைத் தடங்கடலுள்* வலியுருவில் திரிசகடம்*

தளர்ந்துதிர உதைத்தவனைத்* தரியாதுஅன்று இரணியனைப்-

பிளந்தவனை* பெருநிலம் ஈரடிநீட்டிப்* பண்டொருநாள்

அளந்தவனை* யான்கண்டது* அணிநீர்த் தென்னரங்கத்தே  (5.6.4)

 

1402:

நீரழலாய்* நெடுநிலனாய் நின்றானை*

அன்றரக்கனூர் அழலாலுண்டானைக்* கண்டார் பின்காணாமே*

பேரழலாய்ப் பெருவிசும்பாய்ப்* பின்மறையோர் மந்திரத்தின்*

ஆரழலால் உண்டானைக்* கண்டது தென்னரங்கத்தே      (5.6.5)

 

1403:

தஞ்சினத்தைத் தவிர்த்தடைந்தார்* தவநெறியை*

தரியாது கஞ்சனைக்கொன்று* அன்றுலகமுண்டு உமிழ்ந்த கற்பகத்தை*

வெஞ்சினத்த கொடுந்தொழிலோன்*  விசையுருவை அசைவித்த*

அஞ்சிறைப் புட்பாகனை* யான்கண்டது தென்னரங்கத்தே      (5.6.6)

 

1404:##

சிந்தனையைத் தவநெறியைத்* திருமாலை*பிரியாது-

வந்து எனதுமனத்துஇருந்த* வடமலையை*வரிவண்டார்-

கொந்தணைந்த பொழில்கோவல்* உலகளப்பான்அடிநிமிர்த்த-

அந்தணனை* யான்கண்டது* அணிநீர்த் தென்னரங்கத்தே  (5.6.7)

 

1405:

துவரித்த உடையவர்க்கும்* தூய்மையில்லாச் சமணர்க்கும்*

அவர்கட்குஅங்கு அருளில்லா* அருளானை*

தன்னடைந்த எமர்கட்கும்அடியேற்கும்* எம்மாற்கும் எம்மனைக்கும்*

அமரர்க்கும் பிரானாரைக்* கண்டது தென்னரங்கத்தே      (5.6.8)

 

1406:

பொய்வண்ணம் மனத்தகற்றிப்* புலனைந்தும் செலவைத்து*

மெய்வண்ணம் நினைந்தவர்க்கு* மெய்ந்நின்ற வித்தகனை*

மைவண்ணம் கருமுகில்போல்* திகழ்வண்ண மரதகத்தின்*

அவ்வண்ண வண்ணனை* யான்கண்டது தென்னரங்கத்தே      (5.6.9)

 

1407:##

ஆமருவி நிரைமேய்த்த* அணியரங்கத்து அம்மானை*

காமருசீர்க் கலிகன்றி*  ஒலிசெய்த மலிபுகழ்சேர்*

நாமருவு தமிழ்மாலை* நாலிரண்டோடு இரண்டினையும்*

தாமருவி வல்லார்மேல்* சாரா தீவினைதாமே  (5.6.10)

 

ஏழாம் திருமொழி – பண்டை

 

1408:##

பண்டை நான்மறையும் வேள்வியும் கேள்விப்பதங்களும்* பதங்களின் பொருளும்*

பிண்டமாய் விரித்த பிறங்கொளியனலும்* பெருகிய புனலொடுநிலனும்*

கொண்டல்மாருதமும் குரைகடலேழும்* ஏழுமாமலைகளும் விசும்பும்*

அண்டமும்தானாய் நின்ற எம்பெருமான்* அரங்கமாநகர் அமர்ந்தானே    (5.7.1)

 

1409:

இந்திரன் பிரமன் ஈசன் என்றிவர்கள்* எண்ணில் பல்குணங்களே இயற்ற*

தந்தையும் தாயும் மக்களும் மிக்கசுற்றமும்* சுற்றிநின்றகலாப் பந்தமும்*

பந்தமறுப்பதோர் மருந்தும்பான்மையும்* பல்லுயிர்க்கெல்லாம்*

அந்தமும் வாழ்வுமாய எம்பெருமான்* அரங்கமானகர் அமர்ந்தானே    (5.7.2)

 

1410:

மன்னுமாநிலனும் மலைகளும்கடலும்* வானமும் தானவருலகும்*

துன்னுமாயிருளாய்த் துலங்கொளி சுருங்கித்* தொல்லைநான் மறைகளும்மறைய*

பின்னும்வானவர்க்கும் முனிவர்க்கும்நல்கிப்* பிறங்கிருள் நிறம்கெட*ஒருநாள்-

அன்னமாய் அன்றுஅங்குஅருமறைபயந்தான்* அரங்கமாநகர் அமர்ந்தானே  (5.7.3)

 

1411:

மாயிருங்குன்றமொன்று மத்தாக* மாசுணம் அதனொடும்அளவி*

பாயிரும்பௌவம் பகடுவிண்டலறப்* படுதிரை விசும்பிடைப்படர*

சேயிருவிசும்பும் திங்களும்சுடரும்* தேவரும் தாமுடன்திசைப்ப*

ஆயிரந்தோளால் அலைகடல்கடைந்தான்* அரங்கமாநகர் அமர்ந்தானே    (5.7.4)

 

1412:

எங்ஙனேஉய்வர்? தானவர் நினைந்தால்* இரணியனிலங்கு பூணகலம்*

பொங்குவெங்குருதி பொன்மலைபிளந்து* பொழிதரும் அருவியொத்திழிய*

வெங்கண்வாளெயிற்றோர் வெள்ளிமாவிலங்கல்* விண்ணுறக்க நல்விழித்தெழுந்தது*

அங்ஙனேயொக்க அரியுருவானான்* அரங்கமாநகர் அமர்ந்தானே    (5.7.5)

 

1413:

ஆயிரும்குன்றம் சென்றுதொக்கனைய* அடல்புரை எழில்திகழ் திரள்தோள்*

ஆயிரந்துணிய அடல்மழுப்பற்றி* மற்றவன்அகல் விசும்பணைய*

ஆயிரம்பெயரால் அமர்சென்றிறைஞ்ச* அறிதுயில்அலை கடல்நடுவே*

ஆயிரம்சுடர்வாய் அரவணைத்துயின்றான்* அரங்கமாநகர் அமர்ந்தானே    (5.7.6)

 

1414:

சுரிகுழல்கனிவாய்த் திருவினைப்பிரித்த* கொடுமையிற் கடுவிசைஅரக்கன்*

எரிவிழித்திலங்கு மணிமுடிபொடிசெய்து* இலங்கை பாழ்படுப்பதற்கெண்ணி*

வரிசிலைவளைய அடிசரம்துரந்து* மறிகடல் நெறிபட*மலையால்-

அரிகுலம் பணிகொண்டு அலைகடலடைத்தான்* அரங்கமாநகர் அமர்ந்தானே (5.7.7)

 

1415:

ஊழியாய் ஓமத்துச்சியாய்* ஒருகால்உடைய தேரொருவனாய்*உலகில்-

சூழிமால் யானைத்துயர்கெடுத்து* இலங்கைமலங்க அன்றுஅடுசரம்துரந்து*

பாழியால்மிக்க பார்த்தனுக்கருளிப்* பகலவன்ஒளிகெட*பகலே-

ஆழியால்அன்றங்கு ஆழியைமறைத்தான்* அரங்கமாநகர் அமர்ந்தானே    (5.7.8)

1416:

பேயினார்முலையூண் பிள்ளையாய்* ஒருகால்பெருநிலம்விழுங்கி அதுமிழ்ந்தவாயனாய்*

மாலாய் ஆலிலைவளர்ந்து* மணிமுடிவானவர் தமக்குச்சேயனாய்*

அடியேற்கு அணியனாய் வந்து* என்சிந்தையுள் வெந்துயரறுக்கும்*

ஆயனாயன்று குன்றமொன்றுஎடுத்தான்* அரங்கமாநகர் அமர்ந்தானே    (5.7.9)

 

1417:##

பொன்னுமாமணியும் முத்தமும்சுமந்து* பொருதிரைமா நதிபுடைசூழ்ந்து*

அன்னமாடுலவும் அலைபுனல்சூழ்ந்த* அரங்கமாநகர் அமர்ந்தானை*

மன்னுமாமாட மங்கையர் தலைவன்* மானவேல் கலியன்வாயொலிகள்*

பன்னியபனுவல் பாடுவார்* நாளும்பழவினை பற்றறுப்பாரே       (5.7.10)

 

எட்டாம் திருமொழி – ஏழையேதலன்

 

1418:##

ஏழைஏதலன் கீழ்மகன் என்னாதுஇரங்கி* மற்றவற்கு இன்னருள்சுரந்து*

மாழைமான் மடநோக்கிஉன்தோழி* உம்பிஎம்பிஎன்றுஒழிந்திலை*உகந்து

தோழன் நீயெனக்குஇங்கொழிஎன்றசொற்கள் வந்து* அடியேன் மனத்திருந்திட*

ஆழிவண்ண! நின்அடியிணையடைந்தேன்* அணிபொழில் திருவரங்கத்தம்மானே 5.8.1

 

1419:

வாதமாமகன் மர்க்கடம்விலங்கு* மற்றோர்சாதியென்று ஒழிந்திலை*உகந்து

காதல்ஆதரம் கடலினும்பெருகச்* செய்த தகவினுக்குஇல்லை கைம்மாறென்று*

கோதில் வாய்மையினாயொடும்உடனே* உண்பன்நான்என்ற ஒண்பொருள்*எனக்கும்

ஆதல்வேண்டுமென்று அடியிணையடைந்தேன்* அணிபொழில் திருவரங்கத்தம்மானே

 

1420:

கடிகொள்பூம்பொழில் காமருபொய்கை* வைகுதாமரை வாங்கியவேழம்*

முடியும்வண்ணம் ஓர்முழுவலிமுதலைபற்ற* மற்றது நின் சரண் நினைப்ப*

கொடியவாய்விலங்கின் உயிர்மலங்கக்* கொண்டசீற்றம் ஒன்றுஉண்டுளதறிந்து*

உன்அடியனேனும்வந்து அடியிணையடைந்தேன்* அணிபொழில் திருவரங்கத்தம்மானே 

 

1421:

நஞ்சு சோர்வதோர் வெஞ்சினஅரவம்* வெருவிவந்து நின்சரணெனச் சரணாய்*

நெஞ்சில்கொண்டு நின்அஞ்சிறைப்பறவைக்கு* அடைக்கலம்கொடுத்து அருள்செய்ததறிந்து*

வெஞ்சொலாளர்கள் நமந்தமர்கடியர்* கொடியசெய்வனவுள*அதற்கு அடியேன்

அஞ்சிவந்து நின்அடியிணையடைந்தேன்* அணிபொழில் திருவரங்கத்தம்மானே     

 

1422:

மாகமாநிலம் முழுவதும்வந்திறைஞ்சும்* மலரடிகண்ட மாமறையாளன்*

தோகைமாமயில் அன்னவர் இன்பம்* துற்றிலாமையில் அத்த!இங்கொழிந்து*

போகம்நீயெய்திப் பின்னும்நம்மிடைக்கே* போதுவாயென்ற பொன்னருள்*எனக்கும்

ஆகவேண்டுமென்று அடியிணையடைந்தேன்* அணிபொழில் திருவரங்கத்தம்மானே    

 

1423:

மன்னுநான்மறை மாமுனி பெற்றமைந்தனை* மதியாதவெங் கூற்றம்-

தன்னையஞ்சி* நின்சரணெனச் சரணாய்த்*தகவில்காலனை உகமுனிந்தொழியா*

பின்னையென்றும் நின்திருவடிபிரியாவண்ணம்* எண்ணியபேரருள்*எனக்கும்-

அன்னதாகுமென்று அடியிணையடைந்தேன்* அணிபொழில் திருவரங்கத்தம்மானே     

 

1424:

ஓதுவாய்மையும் உவனியப்பிறப்பும்* உனக்குமுன்தந்த அந்தணனொருவன்*

காதலென்மகன் புகலிடங்காணேன்* கண்டுநீதருவாய் எனக்கென்று*

கோதில்வாய்மையினான் உனைவேண்டிய* குறைமுடித்துஅவன் சிறுவனைக்கொடுத்தாய்*

ஆதலால்வந்துஉன் அடியிணையடைந்தேன்* அணிபொழில் திருவரங்கத்தம்மானே  

1425:

வேதவாய்மொழி அந்தணனொருவன்* எந்தை! நின்சரண் என்னுடை மனைவி*

காதல்மக்களைப் பயத்தலும்காணாள்* கடியதோர்த்தெய்வம் கொண்டொளிக்கும்என்றழைப்ப*

ஏதலார்முன்னே இன்னருள்அவர்க்குச்செய்து* உன்மக்கள்மற்றிவர் என்றுகொடுத்தாய்*

ஆதலால்வந்துஉன் அடியிணையடைந்தேன்* அணிபொழில் திருவரங்கத்தம்மானே      

 

1426:##

துளங்குநீண்முடி அரசர்தம்குரிசில்* தொண்டைமன்னவன் திண்டிறலொருவற்கு*

உளங்கொளன்பினோடு இன்னருள்சுரந்து* அங்கோடுநாழிகை ஏழுடனிருப்ப*

வளங்கொள்மந்திரம் மற்றவற்குஅருளிச்செய்தவாறு* அடியேனறிந்து*

உலகமளந்தபொன்னடியே அடைந்துய்ந்தேன்* அணிபொழில் திருவரங்கத்தம்மானே     

 

1427:##

மாடமாளிகைசூழ் திருமங்கைமன்னன்* ஒன்னலர் தங்களைவெல்லும்*

ஆடல்மாவலவன் கலிகன்றி* அணிபொழில் திருவரங்கத்தம்மானை*

நீடுதொல்புகழ் ஆழிவல்லானை* எந்தையை நெடுமாலைநினைந்த*

பாடல்பத்திவை பாடுமின் தொண்டீர்!பாட* நும்மிடைப்பாவம் நில்லாவே (5.8.10)

 

ஒன்பதாம் திருமொழி – கையிலங்கு

 

1428:##

கையிலங்காழிசங்கன்* கருமுகில் திருநிறத்தன்*

பொய்யிலன் மெய்யன்தந்தாள்* அடைவரேல்அடிமையாக்கும்*

செய்யலர் கமலமோங்கு* செறிபொழில் தென்திருப்பேர்*

பையரவணையான் நாமம்* பரவிநான் உய்ந்தவாறே       (5.9.1)

 

1429:

வங்கமார் கடல்களேழும்* மலையும்வானகமும் மற்றும்*

அங்கண்மா ஞாலமெல்லாம்* அமுதுசெய்து உமிழ்ந்தஎந்தை*

திங்கள்மா முகிலணவு* செறிபொழில் தென்திருப்பேர்*

எங்கள்மால் இறைவன்நாமம்* ஏத்திநான் உய்ந்தவாறே       (5.9.2)

 

1430:

ஒருவனைஉந்திப் பூமேல்* ஓங்குவித்து ஆகந்தன்னால்*

ஒருவனைச் சாபம்நீக்கி* உம்பராள் என்றுவிட்டான்*

பெருவரை மதிள்கள்சூழ்ந்த* பெருநகர் அரவணைமேல்*

கருவரை வண்ணன்தென்பேர்* கருதிநான் உய்ந்தவாறே      (5.9.3)

 

1431:

ஊனமர் தலையொன்றேந்தி* உலகெலாம் திரியும்ஈசன்*

ஈனமர்சாபம் நீக்காயென்ன* ஒண்புனலை ஈந்தான்*

தேனமர் பொழில்கள்சூழ்ந்த* செறிவயல் தென்திருப்பேர்*

வானவர் தலைவன்நாமம்* வாழ்த்திநான் உய்ந்தவாறே   (5.9.4)

 

1432:

வக்கரன் வாய்முன்கீண்ட* மாயவனே!என்று வானேர்ப்புக்கு*

அரண்தந்துஅருளாயென்ன* பொன்னாகத்தானை*

நக்கரியுருவமாகி* நகங்கிளர்ந்து இடந்துகந்த*

சக்கரச்செல்வன் தென்பேர்த்* தலைவன்தாள் அடைந்துய்ந்தேனே       (5.9.5)

 

1433:

விலங்கலால் கடலடைத்து* விளங்கிழைபொருட்டு*

வில்லால் இலங்கைமாநகர்க்கிறைவன்* இருபது புயம்துணித்தான்*

நலங்கொள் நான்மறைவல்லார்கள்* ஒத்தொலி ஏத்தக்கேட்டு*

மலங்குபாய் வயல்திருப்பேர்* மருவிநான் வாழ்ந்தவாறே     (5.9.6)

 

1434:

வெண்ணெய்தான் அமுதுசெய்ய* வெகுண்டு மத்தாய்ச்சியோச்சி*

கண்ணியார் குறுங்கயிற்றால்* கட்டவெட்டென்றிருந்தான்*

திண்ணமா மதிள்கள்சூழ்ந்த* தென்திருப்பேருள்*

வேலைவண்ணனார் நாமம்நாளும்* வாய்மொழிந்துய்ந்தவாறே      (5.9.7)

 

1435:

அம்பொனார் உலகமேழும்அறிய* ஆய்ப்பாடி தன்னுள்*

கொம்பனார் பின்னைகோலம்* கூடுதற்கேறு கொன்றான்*

செம்பொனார் மதிள்கள்சூழ்ந்த* தென்திருப்பேருள் மேவும்*

எம்பிரான் நாமம்நாளும்* ஏத்திநானுய்ந்தவாறே        (5.9.8)

 

1436:

நால்வகைவேதம் ஐந்துவேள்வி* ஆறங்கம் வல்லார்*

மேலை வானவரில்மிக்க* வேதியர் ஆதிகாலம்*

சேலுகள்வயல் திருப்பேர்ச்* செங்கண்மாலோடும் வாழ்வார்*

சீலமாதவத்தர் சிந்தையாளி* என்சிந்தையானே  (5.9.9)

 

1437:

வண்டறைபொழில் திருப்பேர்* வரியரவணையில்பள்ளி-

கொண்டு* உறைகின்றமாலைக்* கொடிமதிள் மாடமங்கை*

திண்திறல்தோள் கலியன்* செஞ்சொலால் மொழிந்தமாலை*

கொண்டிவை பாடியாடக்* கூடுவார் நீள்விசும்பே  (5.9.10)

 

பத்தாம் திருமொழி – தீதறு

 

1438:##

தீதறுநிலத்தொå எரிகாலினொடு* நீர்க்கெழுவிசும்பும் அவையாய்*

மாசறுமனத்தினொடு உறக்கமொடிறக்கை* அவையாய பெருமான்*

தாய்செறஉளைந்து தயிருண்டு குடமாடு* தடமார்வர் தகைசேர்*

நாதன்உறைகின்றநகர்* நந்திபுரவிண்ணகரம் நண்ணுமனமே    (5.10.1)

 

1439:

உய்யும்வகையுண்டு சொனசெய்யில் உலககேழும்* ஒழியாமை முனநாள்*

மெய்யினளவே அமுதுசெய்யவல்ல* ஐயனவன் மேவுநகர்தான்*

மையவரிவண்டுமதுவுண்டு கிளையோடு* மலர்க்கிண்டி அதன்மேல்*

நைவளம் நவிற்றுபொழில்* நந்திபுரவிண்ணகரம் நண்ணுமனமே    (5.10.2)

 

1440:

உம்பருலகேழு கடலேழுமலையேழும்* ஒழியாமை முனநாள்*

தம்பொன்வயிறாரளவுமுண்டு அவையுமிழ்ந்த* தடமார்வர் தகைசேர்*

வம்புமலர்க்கின்றபொழில் பைம்பொன்வரு தும்பிமணி* கங்குல் வயல்சூழ்*

நம்பன்உறைகின்றநகர்* நந்திபுரவிண்ணகரம் நண்ணுமனமே    (5.10.3)

 

1441:

பிறையினொளி எயிறிலக முறுகியெதிர் பொருதுமென* வந்த அசுரர்*

இறைகளவை நெறுநெறென வெறியஅவர் வயிறழல* நின்ற பெருமான்*

சிறைகொள்மயில்குயில்பயில மலர்களுக அளிமுரல* அடிகொள் நெடுமா*

நறைசெய்பொழில் மழைதவழும்* நந்திபுரவிண்ணகரம் நண்ணுமனமே    (5.10.4)

 

1442:

மூளவெரிசிந்தி முனிவெய்தி அமர்செய்துமென* வந்த அசுரர்*

தோளும்அவர்தாளும் முடியோடுபொடியாக* நொடியாமளவெய்தான்*

வாளும்வரிவில்லும் வளையாழிகதைசங்கம்* இவைஅங்கையுடையான்*

நாளும்உறைகின்றநகர்* நந்திபுரவிண்ணகரம் நண்ணுமனமே    (5.10.5)

 

1443:

தம்பியொடு தாமொருவர் தன்துணைவிகாதல்* துணையாக முனநாள்*

வெம்பியெரி கானகம் உலாவுமவர் தாம்* இனிதுமேவு நகர்தான்*

கொம்புகுதிகொண்டு குயில்கூவமயிலாலும்* எழிலார்புறவுசேர்*

நம்பியுறைகின்றநகர்* நந்திபுரவிண்ணகரம் நண்ணுமனமே    (5.10.6)

 

1444:

தந்தைமனமுந்துதுயர் நந்தஇருள் வந்தவிறல்* நந்தன் மதலை*

எந்தை இவனென்றுஅமரர் கந்தமலர் கொண்டுதொழ* நின்றநகர்தான்*

மந்தமுழவோசை மழையாகவெழுகார்* மயில்களாடு பொழில்சூழ்*

நந்திபணி செய்தநகர்* நந்திபுரவிண்ணகரம் நண்ணுமனமே    (5.10.7)

 

1445:

எண்ணில்நினைவெய்தி இனியில்லையிறையென்று* முனியாளர் திருவார்*

பண்ணில்மலிகீதமொடு பாடியவர்ஆடலொடு* கூட எழிலார்*

மண்ணிலிதுபோல நகரில்லையென* வானவர்கள்தாம் மலர்கள்தூய்*

நண்ணியுறைகின்றநகர்* நந்திபுரவிண்ணகரம் நண்ணுமனமே    (5.10.8)

 

1446:

வங்கமலி பௌவமது மாமுகடின்உச்சிபுக* மிக்க பெருநீர்*

அங்கமழியார் அவனதாணை* தலைசூடும் அடியார்அறிதியேல்*

பொங்குபுனல்உந்துமணி கங்குலிருள்சீறுமொளி* எங்கும் உளதால்*

நங்கள்பெருமானுறையும்*  நந்திபுரவிண்ணகரம் நண்ணுமனமே    (5.10.9)

 

1447:##

நறைசெய்பொழில் மழைதவழும்*  நந்திபுரவிண்ணகரம் நண்ணியுறையும்*

உறைகொள்புகராழி சுரிசங்கம்* அவை அங்கையுடையானை*

ஒளிசேர்க்கறைவளரும் வேல்வல்ல* கலியனொலிமாலை இவைஐந்துமைந்தும்*

முறையிலவை பயிலவல அடியவர்கள்கொடுவினைகள்* முழுதகலுமே (5.10.10)