பத்தாம் திருமொழி


ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:

ஸ்ரீ திருமங்கையாழ்வார் அருளிச்செய்த
பெரிய திருமொழி – ஐந்தாம் பத்து –  பத்தாம் திருமொழி

1438 தீதறுநி லத்தொடெரி காலினொடு நீர்க்கெழுவி
சும்பு மவையாய்,
மாசறும னத்தினொடு றக்கமொடி றக்கையவை
யாய பெருமான்,
தாய்செறவு ளைந்துதயி ருண்டுகுட மாடுதட
மார்வர் தகைசேர்,
நாதனுறை கின்றநகர் நந்திபுர விண்ணகரம்
நண்ணு மனமே
10.1

 

1439 உய்யும்வகை யுண்டுசொன செய்யிலுலக கேழுமொழி
யாமை முனநாள்,
மெய்யினள வேயமுது செய்யவல ஐயனவன்
மேவு நகர்தான்,
மையவரி வண்டுமது வுண்டுகிளை யோடுமலர்
கிண்டி யதன்மேல்,
நைவளம்ந விற்றுபொழில் நந்திபுர விண்ணகரம்
நண்ணு மனமே
10.2

 

1440 உம்பருல கேழுகட லேழுமலை யேழுமொழி
யாமை முனநாள்,
தம்பொன்வயி றாரளவு முண்டவையு மிழ்ந்ததட
மார்வர் தகைசேர்,
வம்புமலர் கின்றபொழில் பைம்பொன்வரு தும்பிமணி
கங்குல் வயல்சூழ்,
நம்பனுறை கின்றநகர் நந்திபுர விண்ணகரம்
நண்ணு மனமே
10.3

 

1441 பிறையினொளி யெயிறிலக முறுகியெதிர் பொருதுமென
வந்த அசுரர்
இறைகளவை நெறுநெறென வெறியவவர் வயிறழல
நின்ற பெருமான்,
சிறைகொள்மயில் குயில்பயில மலர்களுக அளிமுரல
அடிகொள் நெடுமா,
நறைசெய்பொழில் மழைதவழும் நந்திபுர விண்ணகரம்
நண்ணு மனமே
10.4

 

1442 மூளவெரி சிந்திமுனி வெய்தியமர் செய்துமென
வந்த அசுரர்,
தோளுமவர் தாளுமுடி யோடுபொடி யாகநொடி
யாம ளவெய்தான்,
வாளும்வரி வில்லும்வளை யாழிகதை சங்கமிவை
யங்கை யுடையான்,
நாளுமுறை கின்றநகர் நந்திபுர விண்ணகரம்
நண்ணு மனமே
10.5

 

1443 தம்பியொடு தாமொருவர் தந்துணைவி காதல்துணை
யாக முனநாள்,
வெம்பியெரி கானகமு லாவுமவர் தாமினிது
மேவு நகர்தான்,
கொம்புகுதி கொண்டுகுயில் கூவமயி லாலும் எழி
லார்பு றவுசேர்,
நம்பியுறை கின்றநகர் நந்திபுர விண்ணகரம்
நண்ணு மனமே
10.6

 

1444 தந்தைமன முந்துதுயர் நந்நஇருள் வந்தவிறல்
நந்தன் மதலை,
எந்தையிவ னென்றமரர் கந்தமலர் கொண்டுதொழ
நின்ற நகர்தான்,
மந்தமுழ வோசைமழை யாகவெழு கார்மயில்கள்
ஆடுபொழில்சூழ்,
நந்திபணி செய்தநகர் நந்திபுர விண்ணகரம்
நண்ணு மனமே
10.7

 

1445 எண்ணில்நினை வெய்தியினி யில்லையிறை யென்றுமுனி
யாளர் திருவார்,
பண்ணில்மலி கீதமொடு பாடியவ ராடலொடு
கூட எழிலார்,
மண்ணிலிது போலநக ரில்லையென வானவர்கள்
தாம லர்கள்தூய்
நண்ணியுறை கின்றநகர் நந்திபுர விண்ணகரம்
நண்ணு மனமே
10.8

 

1446 வங்கமலி பௌவமது மாமுகடி னுச்சிபுக
மிக்க பெருநீர்,
அங்கமழி யாரவன தாணைதலை சூடுமடி
யார றிதியேல்,
பொங்குபுன லுந்துமணி கங்குலிருள் சீறுமொளி
யெங்கு முளதால்,
நங்கள்பெரு மானுறையும் நந்திபுர விண்ணகரம்
நண்ணு மனமே
10.9

 

1447 நறைசெய் பொழில் மழைதவழும் நந்திபுர விண்ணகரம்
நண்ணி யுறையும்,
உறைகொள்புக ராழிசுரி சங்கமவை யங்கையுடை
யானை, ஒளிசேர்
கறைவளரும் வேல்வல்ல கலியனொலி மாலையிவை
யைந்து மைந்தும்,
முறையிலவை பயிலவல அடியவர்கள் கொடுவினைகள்
முழுத கலுமே
10.10

ஸ்ரீ திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்!