ஒன்பதாம் பத்து
முதல் திருமொழி
1748:##
வங்கமா முந்நீர் வரிநிறப் பெரிய* வாளரவின் அணை மேவி,*
சங்கமார் அங்கைத் தடமலர் உந்திச்* சாமமா மேனி என் தலைவன்,*
அங்கம்ஆறு ஐந்துவேள்வி நால்வேதம்* அருங்கலை பயின்று,* எரி மூன்றும்-
செங்கையால் வளர்க்கும் துளக்கமில் மனத்தோர்* திருக்கண்ணங்குடியுள் நின்றானே
1749:
கவளமா கதத்த கரி உய்ய* பொய்கைக் கராம்கொளக் கலங்கி,உள் நினைந்து-
துவள* மேல் வந்து தோன்றி வன் முதலை துணிபடச்* சுடுபடை துரந்தோன்,*
குவளைநீள் முளரி குமுதம் ஒண்கழுநீர்* கொய்ம்மலர் நெய்தல் ஒண் கழனி,*
திவளும் மாளிகைசூழ் செழுமணிப் புரிசைத்* திருக்கண்ணங் குடியுள் நின்றானே.9.1.2
1750:
வாதை வந்து அடர வானமும் நிலனும்* மலைகளும் அலைகடல் குளிப்ப,*
மீது கொண்டுகளும் மீனுருவாகி* விரிபுனல் வரிய கட்டொளித்தோன்,*
போதலர் புன்னை மல்லிகை மௌவல்* புதுவிரை மதுமலர் அணைந்து,*
சீதவொண் தென்றல் திசைதொறும் கமழும்* திருக்கண்ணங்குடியுள் நின்றானே.9.1.3
1751:
வென்றிசேர் திண்மை விலங்கல் மாமேனி* வெள்ளெயிற்று ஒள்ளெரித்து அறுகண்*
பன்றியாய் அன்று பார்மகள் பயலை தீர்த்தவன்* பஞ்சவர் பாகன்*
ஒன்றலா உருவத்து உலப்பில் பல்காலத்து* உயர்கொடி ஒளிவளர் மதியம்,*
சென்றுசேர் சென்னிச் சிகர நன்மாடத்* திருக்கண்ணங்குடியுள் நின்றானே. 9.1.4
1752:
மன்னவன் பெரிய வேள்வியில் குறளாய்* மூவடி நீரொடும் கொண்டு,*
பின்னும் ஏழுலகும் ஈரடியாகப்* பெருந்திசை அடங்கிட நிமிர்ந்தோன்,*
அன்னமென் கமலத் தணிமலர்ப் பீடத்து* அலைபுனல் இலைக்குடை நீழல்,*
செந்நெல் ஒண்கவரி அசைய வீற்றிருக்கும்* திருக்கண்ணங்குடியுள் நின்றானே.9.1.5
1753:
மழுவினால் அவனி அரசை மூவெழுகால்* மணிமுடி பொடிபடுத்து* உதிரக்-
குழுவுவார் புனலுள் குளித்து* வெங்கோபம் தவிர்ந்தவன் குலைமலி கதலி*
குழுவும்வார் கமுகும் குரவும் நற்பலவும்* குளிர்தரு சூதமாதவியும்*
செழுமையார் பொழில்கள் தழுவும் நன்மாடத்* திருக்கண்ணங்குடியுள் நின்றானே.9.1.6
1754:
வானுளார் அவரை வலிமையால் நலியும்* மறிகடல் இலங்கையார் கோனை,*
பானுநேர் சரத்தால் பனங்கனி போலப்* பருமுடி உதிர வில் வளைத்தோன்,*
கானுலா மயிலின் கணங்கள் நின்றாடக்* கணமுகில் முரசம் நின்றதிர,*
தேனுலா வரிவண் இன்னிசை முரலும்* திருக்கண்ணங்குடியுள் நின்றானே. 9.1.7
1755:
அரவுநீள் கொடியோன் அவையுள் ஆசனத்தை* அஞ்சிடாதே இட,* அதற்குப்-
பெரியமா மேனி அண்டம் ஊடுருவப்* பெருந்திசை அடங்கிட நிமிர்ந்தோன்,*
வரையின்மா மணியும் மரகதத் திரளும்* வயிரமும் வெதிருதிர் முத்தும்,*
திரைகொணர்ந்து உந்தி வயல்தொறும் குவிக்கும்* திருக்கண்ணங்குடியுள் நின்றானே.
1756:
பன்னிய பாரம் பார்மகட்கு ஒழியப்* பாரத மாபெரும் போரில்,*
மன்னர்கள் மடிய மணிநெடுந் திண்தேர்* மைத்துனற்கு உய்த்த மாமாயன்,*
துன்னு மாதவியும் சுரபுனைப் பொழிலும்* சூழ்ந்தெழு செண்பக மலர்வாய்,*
தென்னவென்று அளிகள் முரன்றிசை பாடும்* திருக்கண்ணங் குடியுள் நின்றானே.9.1.9
1757:##
கலையுலா வல்குல் காரிகை திறத்துக்* கடற்பெரும் படையொடும் சென்று,*
சிலையினால் இலங்கை தீயெழச் செற்ற* திருக்கண்ணங் குடியுள் நின்றானை,*
மலைகுலா மாட மங்கையர் தலைவன்* மானவேல் கலியன் வாய் ஒலிகள்,*
உலவுசொல் மாலை ஒன்பதோடு ஒன்றும்* வல்லவர்க்கு இல்லை நல்குரவே. 9.1.10
இரண்டாம் திருமொழி
1758:##
பொன்னிவர் மேனி மரகதத்தின்* பொங்கு இளஞ் சோதி அகலத்து ஆரம்மின்,*
இவர் வாயில் நல் வேதம் ஓதும்* வேதியர் வானவர் ஆவர் தோழீ,*
என்னையும் நோக்கி என் அல்குலும் நோக்கி* ஏந்திளங் கொங்கையும் நோக்குகின்றார்,*
அன்னை என் நோக்கும் என்று அஞ்சுகின்றேன்* அச்சோ ஒருவர் அழகியவா! 9.2.1
1759:
தோடவிழ் நீலம் மணங் கொடுக்கும்* சூழ்புனல்சூழ் குடந்தைக் கிடந்த,*
சேடர்கொல் என்று தெரிக்க மாட்டேன்* செஞ்சுடர் ஆழியும் சங்கும் ஏந்தி,*
பாடக மெல்லடியார் வணங்கப்* பன்மணி முத்தொடு இலங்குசோதி,*
ஆடகம் பூண்டு ஒரு நான்கு தோளும்* அச்சோ ஒருவர் அழகியவா! 9.2.2
1760:
வேயிருஞ் சோலை விலங்கல் சூழ்ந்த* மெய்ய மணாளர் இவ் வையமெல்லாம்,*
தாயின நாயகர் ஆவர் தோழி!* தாமரைக் கண்கள் இருந்தவாறு,*
சேயிருங் குன்றம் திகழ்ந்தது ஒப்பச்* செவ்விய வாகி மலர்ந்தசோதி,*
ஆயிரம் தோளொடு இலங்கு பூணும்* அச்சோ ஒருவர் அழகியவா! 9.2.3
1761:
வம்பவிழும் துழாய் மாலை தோள்மேல்* கையன ஆழியும் சங்கும் ஏந்தி,*
நம்பர்நம் இல்லம் புகுந்து நின்றார்* நாகரிகர் பெரிதும் இளையர்,*
செம்பவளம் இவர் வாயின் வண்ணம்* தேவர் இவரது உருவம் சொல்லில்,*
அம்பவளத்திரளேயும் ஒப்பர்* அச்சோ ஒருவர் அழகியவா! 9.2.4
1762:
கோழியும் கூடலும் கோயில் கொண்ட* கோவலரே ஒப்பர் குன்றமன்ன,*
பாழியும் தோளும் ஓர் நான்கு உடையர்* பண்டு இவர் தம்மையும் கண்டறியோம்,*
வாழியரோ இவர் வண்ணம் எண்ணில்* மாகடல் போன்றுளர் கையில்வெய்ய,*
ஆழி ஒன்று ஏந்தி ஓர் சங்கு பற்றி* அச்சோ ஒருவர் அழகியவா! 9.2.5
1763:
வெஞ்சின வேழம் மருப்பொசித்த* வேந்தர்கொல் ஏந்திழையார் மனத்தை,*
தஞ்சுடை ஆளர்கொல் யான் அறியேன்,* தாமரைக் கண்கள் இருந்தவாறு,*
கஞ்சனை அஞ்சமுன் கால் விசைத்த* காளையார் அவர் கண்டார் வணங்கும்,*
அஞ்சன மாமலையேயும் ஒப்பர்* அச்சோ ஒருவர் அழகியவா! 9.2.6
1764:
பிணியவிழ் தாமரை மொட்டு அலர்த்தும்* பேரருளாளர் கொல்? யான் அறியேன்,*
பணியும் என் நெஞ்சம் இதென்கொல் தோழி!* பண்டு இவர் தம்மையும் கண்டறியோம்,*
அணிகெழு தாமரை அன்ன கண்ணும்* அங்கையும் பங்கயம் மேனிவானத்து,*
அணிகெழுமாமுகிலேயும் ஒப்பர்* அச்சோ ஒருவர் அழகியவா! 9.2.7
1765:
மஞ்சுயர் மாமதி தீண்ட நீண்ட* மாலிருஞ் சோலை மணாளர் வந்து,* என்-
நெஞ்சுள்ளும் கண்ணுள்ளும் நின்று நீங்கார்* நீர்மலை யார்கொல்? நினைக்கமாட்டேன்,*
மஞ்சுயர் பொன்மலை மேல் எழுந்த* மாமுகில் போன்றுளர் வந்துகாணீர்,*
அஞ்சிறைப் புள்ளும் ஒன்று ஏறி வந்தார்* அச்சோ ஒருவர் அழகியவா! 9.2.8
1766:
எண்திசையும் எறிநீர்க் கடலும்* ஏழுலகும் உடனே விழுங்கி,*
மண்டி ஓர் ஆலிலைப் பள்ளி கொள்ளும்* மாயர்கொல்? மாயம் அறியமாட்டேன்*
கொண்டல் நன் மால்வரை யேயும் ஒப்பர்* கொங்கலர் தாமரைக் கண்ணும்வாயும்*
அண்டத்து அமரர் பணிய நின்றார்* அச்சோ ஒருவர் அழகியவா! 9.2.9
1767:##
அன்னமும் கேழலும் மீனுமாய* ஆதியை நாகை அழகியவாரை,*
கன்னிநன் மாமதிள் மங்கை வேந்தன்* காமரு சீர்க்கலி கன்றி,* குன்றா-
இன்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை* ஏழும் இரண்டும் ஓரொன்றும் வல்லார்,*
மன்னவராய் உலகாண்டு* மீண்டும் வானவராய் மகிழ்வு எய்துவரே. (2) 9.2.10
மூன்றாம் திருமொழி
1768:##
தன்னை நைவிக்கிலேன்* வல்வினையேன் தொழுதும்எழு,*
பொன்னை நைவிக்கும்* அப்பூஞ் செருந்தி மணநீழல்வாய்,*
என்னை நைவித்து* எழில் கொண்டு அகன்ற பெருமானிடம்,*
புன்னை முத்தம்பொழில் சூழ்ந்து* அழகாய புல்லாணியே. (2) 9.3.1
1769:
உருகி நெஞ்சே! நினைந்து இங்கு இருந்தென்?* தொழுதும் எழு,*
முருகுவண்டுண் மலர்க் கைதையின்* நீழலில் முன்னொருநாள்,*
பெருகுகா தன்மை என்னுள்ளம்* எய்தப் பிரிந்தானிடம்,*
பொருதுமுந் நீர்க்கரைக்கே* மணியுந்து புல்லாணியே. 9.3.2
1770:
ஏது செய்தால் மறக்கேன்* மனமே! தொழுதும் எழு,*
தாது மல்கு தடஞ்சூழ் பொழில்* தாழ்வர் தொடர்ந்து,* பின்-
பேதை நின்னைப் பிரியேன்இனி* என்று அகன்றானிடம்,*
போது நாளும் கமழும்* பொழில்சூழ்ந்த புல்லாணியே. 9.3.3
1771:
கொங்குண் வண்டே கரியாக வந்தான்* கொடியேற்கு,* முன்-
நங்களÖசன்* நமக்கே பணித்த மொழிசெய்திலன்*
மங்கை நல்லாய்! தொழுதும் எழு* போய் அவன் மன்னுமூர்,*
பொங்கு முந்நீர்க் கரைக்கே* மணியுந்து புல்லாணியே. 9.3.4
1772:
உணரில் உள்ளம் சுடுமால்* வினையேன் தொழுதும் எழு,*
துணரி ஞாழல் நறும்போது* நம்சூழ் குழல்பெய்து,* பின்-
தணரில் ஆவி தளருமென* அன்பு தந்தானிடம்,*
புணரி யோதம் பணிலம்* மணியுந்து புல்லாணியே. 9.3.5
1773:
எள்கி நெஞ்சே! நினைந்து இங்கு இருந்தென்?* தொழுதும் எழு,*
வள்ளல் மாயன்* மணிவண்ணன் எம்மான் மருவுமிடம்,*
கள்ள விழும்மலர்க் காவியும்* தூமடல் கைதையும்,*
புள்ளும் அள்ளற் பழனங்களும் சூழ்ந்த* புல்லாணியே. 9.3.6
1774:
பரவி நெஞ்சே! தொழுதும்எழு* போய் அவன் பாலமாய்,*
இரவும் நாளும் இனிக்கண் துயிலாது* இருந்து என்பயன்?*
விரவி முத்தம் நெடுவெண் மணல்மேல் கொண்டு,* வெண்திரை*
புரவி யென்னப் புதம்செய்து* வந்துந்து புல்லாணியே. 9.3.7
1775:
அலமும் ஆழிப் படையும் உடையார்* நமக்கு அன்பராய்,*
சலமதாகித் தகவொன் றிலர்* நாம் தொழுதும்எழு,*
உலவு கால்நல் கழியோங்கு* தண்பைம் பொழிலூடு,* இசை-
புலவு கானல்* களிவண்டினம் பாடு புல்லாணியே. 9.3.8
1776:
ஓதி நாமங்குளித்து உச்சி தன்னால்,* ஒளிமாமலர்*
பாதம் நாளும் பணிவோம்* நமக்கே நலமாதலின்,*
ஆது தாரானெனிலும் தரும்,* அன்றியும் அன்பராய்*
போதும் மாதே! தொழுதும்* அவன்மன்னு புல்லாணியே. 9.3.9
1777:##
இலங்கு முத்தும் பவளக் கொழுந்தும்* எழில்தாமரை,*
புலங்கள் முற்றும் பொழில்சூழ்ந்து* அழகாய புல்லாணிமேல்*
கலங்கல் இல்லாப் புகழான்* கலியன் ஒலிமாலை,*
வலங்கொள் தொண்டர்க்கு இடமாவது* பாடில் வைகுந்தமே. (2)9.3.10
நான்காம் திருமொழி
1778:##
காவார் மடல்பெண்ணை* அன்றிலரி குரலும்,*
ஏவாயின் ஊடியங்கும்* எஃகின் கொடிதாலோ,*
பூவார் மணம்கமழும்* புல்லாணி கைதொழுதேன்,*
பாவாய்! இதுநமக்குஓர்* பான்மையே ஆகாதே. (2) 9.4.1
1779:
முன்னம் குறளுருவாய்* மூவடிமண் கொண்டளந்த,*
மன்னன் சரிதைக்கே* மாலாகிப் பொன்பயந்தேன்,*
பொன்னம் கழிக்கானல்* புள்ளினங்காள்! புல்லாணி*
அன்னமாய் நூல்பயந்தாற்கு* ஆங்குஇதனைச் செப்புமினே. 9.4.2
1780:
வவ்வித் துழாயதன்மேல்* சென்ற தனிநெஞ்சம்,*
செவ்வி அறியாது* நிற்குங்கொல், நித்திலங்கள்*
பவ்வத் திரையுலவு* புல்லாணி கைதொழுதேன்,*
தெய்வச் சிலையாற்கு* என் சிந்தைநோய் செப்புமினே. 9.4.3
1781:
பரிய இரணியனது ஆகம்* அணியுகிரால்,*
அரியுருவாய்க் கீண்டான்* அருள் தந்தவா! நமக்கு,*
பொருதிரைகள் போந்துலவு* புல்லாணி கைதொழுதேன்,*
அரிமலர்க்கண் நீர்ததும்ப* அந்துகிலும் நில்லாவே. 9.4.4
1782:##
வில்லால் இலங்கை மலங்கச்* சரம்துரந்த,*
வல்லாளன் பின்போன* நெஞ்சம் வருமளவும்,*
எல்லாரும் என்தன்னை* ஏசிலும் பேசிடினும்,*
புல்லாணி எம்பெருமான்* பொய் கேட்டிருந்தேனே. (2) 9.4.5
1783:
சுழன்றிலங்கு வெங்கதிரோன்* தேரோடும் போய்மறைந்தான்,*
அழன்று கொடிதாகி* அஞ்சுடரில் தானடுமால்,*
செழுந்தடம் பூஞ்சோலை சூழ்* புல்லாணி கைதொழுதேன்,*
இழந்திருந்தேன் என்தன்* எழில்நிறமும் சங்குமே. 9.4.6
1784:
கனையார் இடிகுரலின்* கார்மணியின் நாவாடல்,*
தினையேனும் நில்லாது* தீயிற் கொடிதாலோ,*
புனையார் மணிமாடப்* புல்லாணி கைதொழுதேன்,*
வினையேன்மேல் வேலையும்* வெந்தழலே வீசுமே. 9.4.7
1785:
தூம்புடைக்கை வேழம்* வெருவ மருப்பொசித்த*
பாம்பின் அணையான்* அருள்தந்தவா நமக்கு,*
பூஞ்செருந்தி பொன்சொரியும்* புல்லாணி கைதொழுதேன்,*
தேம்பல் இளம்பிறையும்* என்தனக்கு ஓர்வெந்தழலே. 9.4.8
1786:
வேதமும் வேள்வியும்* விண்ணும் இருசுடரும்,*
ஆதியும் ஆனான்* அருள் தந்தவா நமக்கு,*
போதலரும் புன்னைசூழ்* புல்லாணி கைதொழுதேன்,*
ஓதமும் நானும்* உறங்காது இருந்தேனே. 9.4.9
1787:##
பொன்னலரும் புன்னைசூழ்* புல்லாணி அம்மானை*
மின்னிடையார் வேட்கைநோய் கூர* இருந்ததனை,*
கல்நவிலும் திண்தோள்* கலியனொலி வல்லார்,*
மன்னவராய் மண்ணாண்டு* வானாளும் உன்னுவரே. (2) 9.4.10
ஐந்தாம் திருமொழி
1788:##
தவள விளம்பிறை துள்ளுமுந்நீர்* தண்மலர்த் தென்றலோடு அன்றிலொன்றித்-
துவள,* என் நெஞ்சகம் சோர ஈரும்* சூழ்பனி நாள் துயிலாது இருப்பேன்,*
இவளும் ஓர் பெண்கொடி என்று இரங்கார்* என்னலம் ஐந்துமுன் கொண்டுபோன*
குவளை மலர்நிற வண்ணர்மன்னு* குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின். (2) 9.5.1
1789:
தாதவிழ் மல்லிகை புல்லிவந்த* தண்மதியின் இளவாடை இன்னே,*
ஊதை திரிதந்து உழறியுண்ண* ஓரிரவும் உறங்கேன், உறங்கும்*
பேதையர் பேதைமையால் இருந்து* பேசிலும் பேசுக பெய்வளையார்,*
கோதை நறுமலர் மங்கைமார்வன்* குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின். 9.5.2
1790:
காலையும் மாலை ஒத்துண்டு* கங்குல் நாழிகை ஊழியில் நீண்டுலாவும்,*
போல்வதோர் தன்மை புகுந்துநிற்கும்* பொங்கழலே ஒக்கும் வாடை சொல்லில்*
மாலவன் மாமணி வண்ணன் மாயம்* மற்றும் உள அவை வந்திடாமுன்,*
கோலமயில் பயிலும் புறவின்* குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின். 9.5.3
1791:
கருமணி பூண்டு வெண்ணாகணைந்து* காரிமில் ஏற்றணர் தாழ்ந்துலாவும்,*
ஒருமணி ஓசை என்னுள்ளம் தள்ள* ஓரிரவும் உறங்காது இருப்பேன்,*
பெருமணி வானவர் உச்சிவைத்த* பேரருளாளன் பெருமைபேசி,*
குருமணி நீர்கொழிக்கும் புறவின்* குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின். 9.5.4
1792:
திண்திமில் ஏற்றின் மணியும்* ஆயன் தீங்குழல் ஓசையும் தென்றலோடு,*
கொண்டதோர் மாலையும் அந்தி ஈன்ற* கோல இளம்பிறையோடு கூடி,*
பண்டைய வல்ல இவை நமக்குப்* பாவியேன் ஆவியை வாட்டம் செய்யும்,*
கொண்டல் மணிநிற வண்ணர் மன்னு* குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின். 9.5.5
1793:
எல்லியும் நன்பகலும் இருந்தே* ஏசிலும் ஏசுக ஏந்திழையார்,*
நல்லர் அவர் திறம் நாமறியோம்,* நாண்மடம் அச்சம் நமக்கிங்கில்லை*
வல்லன சொல்லி மகிழ்வரேலும்* மாமணி வண்ணரை நாம்மறவோம்,*
கொல்லை வளர் இளமுல்லை புல்கு* குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின். 9.5.6
1794:
செங்கண் நெடிய கரியமேனித்* தேவர் ஒருவர் இங்கே புகுந்து,* என்-
அங்கம் மெலிய வளைகழல* ஆதுகொலோ? என்று சொன்னபின்னை,*
ஐங்கணை வில்லிதன் ஆண்மை என்னோடு* ஆடும் அதனை அறியமாட்டேன்,*
கொங்கலர் தண்பணை சூழ்புறவின்* குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின். 9.5.7
1795:
கேவலம் அன்று கடலின் ஓசை* கேண்மின்கள் ஆயன்கை ஆம்பல்வந்து,* என்-
ஆவி அளவும் அணைந்து நிற்கும்* அன்றியும் ஐந்து கணை தெரிந்திட்டு,*
ஏவலம் காட்டி இவனொருவன்* இப்படியே புகுந்து எய்திடாமுன்,*
கோவலர் கூத்தன் குறிப்பறிந்து* குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின். 9.5.8
1796:##
சோத்தென நின்று தொழ இரங்கான்* தொன்னலங் கொண்டெனக்கு இன்றுகாறும்*
போர்ப்பதோர் பொற்படம் தந்துபோனான்* போயின ஊரறியேன்,* என்கொங்கை-
மூத்திடுகின்றன* மற்றவன் தன் மொய்யகலம் மணை யாதுவாளா,*
கூத்தன் இமையவர்க்கோன் விரும்பும்* குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின். 9.5.9
1797:##
செற்றவன் தென்னிலங்கை மலங்கத்* தேவபிரான் திருமாமகளைப் பெற்றும்,*
என் நெஞ்சகம் கோயில்கொண்ட* பேரருளாளன் பெருமைபேசக்-
கற்றவன்* காமரு சீர்க் கலியன்* கண்ணகத்தும் மனத்தும் அகலாக்-
கொற்றவன்,* முற்று உலகாளி நின்ற* குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்.9.5.10
ஆறாம் திருமொழி
1798:##
அக்கும் புலியின்* அதளும் உடையார்* அவரொருவர்,-
பக்கம் நிற்க நின்ற* பண்பரூர் போலும்*
தக்க மரத்தின் தாழ்சினையேறி,* தாய்வாயில்-
கொக்கின் பிள்ளை* வெள்ளிற உண்ணும் குறுங்குடியே. (2) 9.6.1
1799:
துங்கார் அரவத்* திரைவந்து உலவத்* தொடுகடலுள்,-
பொங்கார் அரவில் துயிலும்* புனிதரூர் போலும்,*
செங்கால் அன்னம்* திகழ்தண் பணையில் பெடையோடும்,*
கொங்கார் கமலத்து* அலரில் சேரும் குறுங்குடியே. 9.6.2
1800:
வாழக் கண்டோம்* வந்து காண்மின் தொண்டீர்காள்,*
கேழல் செங்கண்* மாமுகில் வண்ணர் மருவுமூர்,*
ஏழைச் செங்கால்* இன்துணை நாரைக்கு இரைதேடி,*
கூழைப் பார்வைக்* கார்வயல் மேயும் குறுங்குடியே. 9.6.3
1801:
சிரமுனைந்தும் மைந்தும்* சிந்தச் சென்று,* அரக்கன்-
உரமும் கரமும் துணித்த* உரவோனூர் போலும்,*
இரவும் பகலும்* ஈன்தேன் முரல,* மன்றெல்லாம்-
குரவின் பூவே தான்* மணம் நாறுங் குறுங்குடியே. 9.6.4
1802:
கவ்வைக் களிற்று மன்னர் மாளக்* கலிமான்தேர்-
ஐவர்க்காய்,* அன்றுஅமரில் உய்த்தான் ஊர்போலும்,*
மைவைத்து இலங்கு* கண்ணார் தங்கள் மொழியொப்பான்,*
கொவ்வைக் கனிவாய்க்* கிள்ளை பேசும் குறுங்குடியே. 9.6.5
1803:
தீநீர் வண்ண* மாமலர் கொண்டு விரையேந்தி,*
தூநீர் பரவித்* தொழுமின் எழுமின் தொண்டீர்காள்,*
மாநீர் வண்ணர்* மருவி உறையுமிடம்,* வானில்-
கூனீர் மதியை* மாடம் தீண்டும் குறுங்குடியே. 9.6.6
1804:
வல்லிச்சிறு நுண்ணிடையாரிடை* நீர்வைக்கின்ற,*
அல்லல் சிந்தை தவிர* அடைமின் அடியீர்காள்,*
சொல்லில் திருவே அனையார்* கனிவாய் எயிறொப்பான்,*
கொல்லை முல்லை* மெல்லரும் பீனும் குறுங்குடியே. 9.6.7
1805:
நாராரிண்டை* நாண்மலர் கொண்டு நம்தமர்காள்,*
ஆரா அன்போடு* எம்பெருமான் ஊரடைமின்கள்,*
தாரா வாரும்* வார்புனல் மேய்ந்து வயல்வாழும்*
கூர்வாய் நாரை* பேடையொடு ஆடும் குறுங்குடியே. 9.6.8
1806:
நின்ற வினையும் துயரும் கெட* மாமலரேந்தி,*
சென்று பணிமின் எழுமின்* தொழுமின் தொண்டீர்காள்,*
என்றும் இரவும் பகலும்* வரிவண்டு இசைபாட,*
குன்றின் முல்லை* மன்றிடை நாறும் குறுங்குடியே. 9.6.9
1807:
சிலையால் இலங்கை செற்றான்* மற்றோர் சினவேழம்,*
கொலையார் கொம்பு கொண்டான் மேய* குறுங்குடிமேல்,*
கலையார் பனுவல் வல்லான்* கலியன் ஒலிமாலை*
நிலையார் பாடல் பாடப்* பாவம் நில்லாவே. (2) 9.6.10
ஏழாம் திருமொழி
1808:##
தந்தை தாய் மக்களே* சுற்றமென்று உற்றவர் பற்றி நின்ற,*
பந்தமார் வாழ்க்கையை* நொந்து நீ பழியெனக் கருதினாயேல்,*
அந்தமாய் ஆதியாய்* ஆதிக்கும் ஆதியாய் ஆயனாய,*
மைந்தனார் வல்லவாழ்* சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே! (2) 9.7.1
1809:
மின்னுமா வல்லியும் வஞ்சியும் வென்ற* நுண்ணிடை நுடங்கும்,*
அன்னமென் நடையினார் கலவியை* அருவருத்து அஞ்சினாயேல்,*
துன்னுமா மணிமுடிப் பஞ்சவர்க்காகி* முன் தூது சென்ற*
மன்னனார் வல்லவாழ்* சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே! 9.7.2
1810:
பூணுலா மென்முலைப் பாவைமார்* பொய்யினை ‘மெய் இதெ‘ன்று,*
பேணுவார் பேசும் அப்பேச்சை* நீ பிழையெனக் கருதினாயேல்,*
நீணிலா வெண்குடை வாணனார்* வேள்வியில் மண் இரந்த,*
மாணியார் வல்லவாழ்* சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே! 9.7.3
1811:
பண்ணுலா மென்மொழிப் பாவைமார்* பணைமுலை அணைதும் நாமென்று*
எண்ணுவார் எண்ணமது ஒழித்து* நீ பிழைத்து உய்யக் கருதினாயேல்,*
விண்ணுளார் விண்ணின் மீதியன்ற* வேங்கடத்துளார்,* வளங்கொள் முந்நீர்-
வண்ணனார் வல்லவாழ்* சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே! 9.7.4
1812:
மஞ்சுதோய் வெண்குடை மன்னராய்* வாரணம் சூழ வாழ்ந்தார்,*
துஞ்சினார் என்பதோர் சொல்லை* நீ துயரெனக் கருதினாயேல்,*
நஞ்சுதோய் கொங்கைமேல் அங்கைவாய் வைத்து* அவள் நாளை உண்ட,-
மைந்தனார் வல்லவாழ்* சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே! 9.7.5
1813:
உருவினார் பிறவிசேர்* ஊன்பொதி நரம்புதோல் குரம்பையுள் புக்கு*
அருவிநோய் செய்துநின்று* ஐவர்தாம் வாழ்வதற்கு அஞ்சினாயேல்,*
திருவினார் வேதம்நான்கு ஐந்துதீ* வேள்வியோடு அங்கம் ஆறும்,*
மருவினார் வல்லவாழ்* சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே! 9.7.6
1814:
நோயெலாம் பெய்ததோர் ஆக்கையை* மெய்யெனக் கொண்டு,* வாளா-
பேயர்தாம் பேசும் அப்பேச்சை* நீ பிழையெனக் கருதினாயேல்,*
தீயுலா வெங்கதிர்த் திங்களாய்* மங்குல் வானாகி நின்ற,*
மாயனார் வல்லவாழ்* சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே! 9.7.7
1815:
மஞ்சுசேர் வானெரி* நீர்நிலம் காலிவை மயங்கி நின்ற,*
அஞ்சுசேர் ஆக்கையை* அரணமன்று என்றுய்யக் கருதினாயேல்,*
சந்துசேர் மென்முலைப்* பொன்மலர்ப் பாவையும் தாமும்,* நாளும்-
வந்துசேர் வல்லவாழ்* சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே! 9.7.8
1816:
வெள்ளியார் பிண்டியார் போதியார்* என்றிவர் ஓது கின்ற,*
கள்ளநூல் தன்னையும்* கருமமன்று என்றுயக் கருதினாயேல்,*
தெள்ளியார் கைதொழும் தேவனார்* மாமுநீர் அமுது தந்த,*
வள்ளலார் வல்லவாழ்* சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே! 9.7.9
1817:##
மறைவலார் குறைவிலார் உறையுமூர்* வல்லவாழ் அடிகள் தம்மை,*
சிறைகுலா வண்டறை சோலைசூழ்* கோலநீளாலி நாடன்,*
கறையுலா வேல்வல்ல* கலியன்வாய் ஒலியிவை கற்று வல்லார்,*
இறைவராய் இருநிலம் காவல்பூண்டு* இன்பம் நன்கு எய்துவாரே. (2) 9.7.10
எட்டாம் திருமொழி
1818:##
முந்துற உரைக்கேன் விரைக்குழல் மடவார்* கலவியை விடுதடு மாறல்,*
அந்தரம் ஏழும் அலைகடல் ஏழும் ஆய* எம் அடிகள்தம் கோயில்,*
சந்தொடு மணியும் அணிமயில் தழையும்* தழுவி வந்து அருவிகள் நிரந்து,*
வந்திழி சாரல் மாலிருஞ் சோலை* வணங்குதும் வா! மட நெஞ்சே! (2) 9.8.1
1819:
இண்டையும் புனலும் கொண்டிடை இன்றி* எழுமினோ தொழுதுமென்று,* இமையோர்-
அண்டரும் பரவ அரவணைத் துயின்ற* சுடர்முடிக் கடவுள்தம் கோயில்,*
விண்டலர் தூளி வேய்வளர் புறவில்* விரைமலர்க் குறிஞ்சியின் நறுந்தேன்,*
வண்டமர் சாரல் மாலிருஞ் சோலை* வணங்குதும் வா! மட நெஞ்சே! 9.8.2
1820:
பிணிவளர் ஆக்கை நீங்க நின்றேத்தப்* பெருநிலம் அருளின் முன்னருளி,*
அணிவளர் குறளாய் அகலிடம் முழுதும்* அளந்த எம் அடிகள்தம் கோயில்,*
கணிவளர் வேங்கை நெடுநிலம் அதனில்* குறவர்தம் கவணிடைத் துரந்த,*
மணிவளர் சாரல் மாலிருஞ்சோலை* வணங்குதும் வா! மட நெஞ்சே! 9.8.3
1821:
சூர்மயிலாய பேய்முலை சுவைத்துச்* சுடுசரம் அடுசிலைத் துரந்து,*
நீர்மை இலாத தாடகை மாள* நினைந்தவர் மனம்கொண்ட கோயில்,*
கார்மலி வேங்கை கோங்கலர் புறவில்* கடிமலர் குறிஞ்சியின் நறுந்தேன்,*
வார்புனல்சூழ் தண் மாலிருஞ் சோலை* வணங்குதும் வா! மட நெஞ்சே! 9.8.4
1822:
வணங்கலில் அரக்கன் செருக்களத்து அவிய* மணிமுடி ஒருபதும் புரள,*
அணங்கெழுந்தவன் கவந்தம் நின்றாட* அமர்செய்த அடிகள்தம் கோயில்,*
பிணங்கலில் நெடுவேய் நுதிமுகம் கிழிப்பப்* பிரசம் வந்திழிதர, பெருந்தேன்*
மணங்கமழ் சாரல் மாலிருஞ் சோலை* வணங்குதும் வா! மட நெஞ்சே! 9.8.5
1823:
விடங்கலந்து அமர்ந்த அரவணைத் துயின்று* விளங்கனிக்கு இளங்கன்று விசிறி,*
குடங்கலந்தாடிக் குரவைமுன் கோத்த* கூத்த எம் அடிகள்தம் கோயில்,*
தடங்கடல் முகந்து விசும்பிடைப் பிளிறத்* தடவரைக் களிறென்று முனிந்து,*
மடங்கல் நின்றதிரும் மாலிருஞ் சோலை* வணங்குதும் வா! மட நெஞ்சே! 9.8.6
1824:
தேனுகன் ஆவி போயுக* அங்குஓர் செழுந்திரள் பனங்கனி உதிர,*
தான் உகந்து எறிந்த தடங்கடல் வண்ணர்* எண்ணிமுன் இடங்கொண்ட கோயில்,*
வானகச் சோலை மரகதச் சாயல்* மாமணிக் கல்லதர் நிரைந்து,*
மானுகர் சாரல் மாலிருஞ் சோலை* வணங்குதும் வா! மட நெஞ்சே! 9.8.7
1825:
புதமிகு விசும்பில் புணரி சென்று அணவப்* பொருகடல் அரவணைத் துயின்று,*
பதமிகு பரியின் மிகுசினம் தவிர்த்த* பனிமுகில் வண்ணர்தம் கோயில்,*
கதமிகு சினத்த கடதடக் களிற்றின்* கவுள்வழிக் களிவண்டு பருக,*
மதமிகு சாரல் மாலிருஞ் சோலை* வணங்குதும் வா! மட நெஞ்சே! 9.8.8
1826:
புந்தியில் சமணர் புத்தர் என்றிவர்கள்* ஒத்தன பேசவும் உகந்திட்டு,*
எந்தை பெம்மானார் இமையவர் தலைவர்* எண்ணிமுன் இடங்கொண்ட கோயில்,*
சந்தனப் பொழிலின் தாழ்சினை நீழல்* தாழ்வரை மகளிர்கள் நாளும்,*
மந்திரத்து இறைஞ்சும் மாலிருஞ் சோலை* வணங்குதும் வா! மட நெஞ்சே! 9.8.9
1827:##
வண்டமர் சாரல் மாலிருஞ் சோலை* மாமணி வண்ணரை வணங்கும்,*
தொண்டரைப் பரவும் சுடரொளி நெடுவேல்* சூழ் வயலாலி நன்னாடன்*
கண்டல் நல்வேலி மங்கையர் தலைவன்* கலியன் வாய் ஒலிசெய்த பனுவல்,*
கொண்டு இவைபாடும் தவமுடையார்கள்* ஆள்வர் இக்குரை கடலுலகே. (2)9.8.10
ஒன்பதாம் திருமொழி
1828:##
மூவரில் முன்முதல்வன்* முழங்கார் கடலுள்கிடந்து,*
பூவலருந்தி தன்னுள்* புவனம் படைத்து உண்டுமிழ்ந்த,*
தேவர்கள் நாயகனை* திருமாலிருஞ் சோலைநின்ற,*
கோவலர் கோவிந்தனைக்* கொடியேரிடை கூடுங்கொலோ! (2)9.9.1
1829:##
புனைவளர் பூம்பொழிலார்* பொன்னி சூழ் அரங்க நகருள்-
முனைவனை,* மூவுலகும் படைத்த* முதல் மூர்த்திதன்னை,*
சினைவளர் பூம்பொழில் சூழ்* திருமாலிருஞ் சோலைநின்றான்*
கனைகழல் காணுங்கொலோ?* கயற் கண்ணி எம்காரிகையே! (2)9.9.2
1830:
உண்டு உலகேழினையும்* ஒரு பாலகன் ஆலிலைமேல்,*
கண்துயில் கொண்டுகந்த* கருமாணிக்க மாமலையை,*
திண்திறல் மாகரிசேர்* திருமாலிருஞ் சோலைநின்ற,*
அண்டர்தம் கோவினை இன்று* அணுகுங் கொல்? என்னாயிழையே! 9.9.3
1831:
சிங்கமதாய் அவுணன்* திறலாகம்முன் கீண்டுகந்த,*
பங்கய மாமலர்க் கண்* பரனை எம் பரஞ்சுடரை,*
திங்கள்நன் மாமுகில் சேர்* திருமாலிருஞ் சோலைநின்ற,*
நங்கள் பிரானை இன்று* நணுகுங்கொல் என்நன்னுதலே! 9.9.40
1832:
தானவன் வேள்வி தன்னில்* தனியே குறளாய் நிமிர்ந்து,*
வானமும் மண்ணகமும்* அளந்த திரி விக்கிரமன்,*
தேனமர் பூம்பொழில் சூழ்* திருமாலிருஞ் சோலைநின்ற,*
வானவர் கோனை இன்று* வணங்கித் தொழவல்லள் கொலோ! 9.9.5
1833:##
நேசமிலாதவர்க்கும்* நினையாதவர்க்கும் அரியான்,*
வாசமலர்ப் பொழில்சூழ்* வடமா மதுரைப் பிறந்தான்,*
தேசமெல்லாம் வணங்கும்* திருமாலிருஞ் சோலைநின்ற,*
கேசவ நம்பி தன்னைக்* கெண்டை ஒண்கண்ணி காணுங்கொலோ! (2)9.9.6
1834:
புள்ளினை வாய்பிளந்து* பொருமா கரி கொம்பொசித்து,*
கள்ளச் சகடுதைத்த* கருமாணிக்க மாமலையை,*
தெள்ளருவி கொழிக்கும்* திருமாலிருஞ் சோலைநின்ற,*
வள்ளலை வாணுதலாள்* வணங்கித் தொழவல்லள் கொலோ!9.9.7
1835:
பார்த்தனுக்கு அன்றருளிப்* பாரதத்து ஒருதேர்முன்நின்று,*
காத்தவன் தன்னை* விண்ணோர் கருமாணிக்க மாமலையை,*
தீர்த்தனைப் பூம்பொழில் சூழ்* திருமாலிருஞ் சோலைநின்ற,*
மூர்த்தியைக் கைதொழவும்* முடியுங்கொல்? என்மொய்குழற்கே! 9.9.8
1836:
வலம்புரி ஆழியனை* வரையார் திரள்தோளன் தன்னை,*
புலம்புரி நூலவனைப்* பொழில் வேங்கட வேதியனை,*
சிலம்பியல் ஆறுடைய* திருமாலிருஞ் சோலைநின்ற,*
நலந்திகழ் நாரணனை* நணுகுங்கொல்? என்நன்னுதலே! (2)9.9.9
1837:##
தேடற்கு அரியவனைத்* திருமாலிருஞ் சோலை நின்ற,*
ஆடல் பறவையனை* அணியாயிழை காணுமென்று,*
மாடக் கொடிமதிள் சூழ்* மங்கையார் கலிகன்றிசொன்ன*
பாடல் பனுவல் பத்தும்* பயில்வார்க்கு இல்லை பாவங்களே! (2)9.9.10
பத்தாம் திருமொழி
1838:##
எங்கள் எம்மிறை எம்பிரான்* இமையோர்க்கு நாயகன்,* ஏத்து அடியவர்
தங்கள் தம்மனத்துப்* பிரியாது அருள்புரிவான்,*
பொங்கு தண்ணருவி புதம்செய்யப்*பொன்களே சிதறும் இலங்கொளி,*
செங்கமலம் மலரும்* திருக்கோட்டியூரானே. (2)9.10.1
1839:
எவ்வநோய் தவிர்ப்பான்* எமக்கிறை இன்னகைத் துவர்வாய்,* நிலமகள்-
செவ்வி தோய வல்லான்* திருமா மகட்கினியான்,*
மௌவல் மாலை வண்டாடும்* மல்லிகை மாலையொடு மணந்து,* மாருதம்-
தெய்வ நாறவரும்* திருக்கோட்டியூரானே. 9.10.2
1840:
வெள்ளியான் கரியான்* மணிநிற வண்ணன் விண்ணவர் தமக்கிறை,* எமக்கு-
ஒள்ளியான் உயர்ந்தான்* உலகேழும் உண்டுமிழ்ந்தான்,*
துள்ளுநீர் மொண்டு கொண்டு* சாமரைக் கற்றை சந்தன முந்தி வந்தசை,*
தெள்ளுநீர்ப் புறவில்* திருக்கோட்டியூரானே. 9.10.3
1841:
ஏறு மேறி இலங்குமொண் மழுப்பற்றும்* ஈசற்கு இசைந்து,* உடம்பில் ஓர்-
கூறுதான் கொடுத்தான்* குலமாமகட்கு இனியான்,*
நாறு சண்பக மல்லிகை மலர்புல்கி*இன்னிள வண்டு,* நன்னறுந்-
தேறல்வாய் மடுக்கும்* திருக்கோட்டியூரானே. 9.10.4
1842:
வங்க மாகடல் வண்ணன்* மாமணி வண்ணன் விண்ணவர் கோன்* மதுமலர்த்
தொங்கல் நீள்முடியான்* நெடியான் படிகடந்தான்,*
மங்குல் தோய்மணி மாட வெண்கொடி* மாகமீது உயர்ந்தேறி,* வானுயர்-
திங்கள் தானணவும்* திருக்கோட்டியூரானே.9.10.5
1843:
காவலன் இலங்கைக்கு இறைகலங்கச்* சரம் செல உய்த்து,* மற்றவன்-
ஏவலம் தவிர்த்தான்* என்னை ஆளுடை எம்பிரான்,*
நாவலம் புவிமன்னர் வந்து வணங்க* மால் உறைகின்றது இங்கென,*
தேவர் வந்திறைஞ்சும்* திருக்கோட்டியூரானே.9.10.6
1844:
கன்று கொண்டு விளங்கனி எறிந்து* ஆநிரைக்கு அழிவென்று,* மாமழை-
நின்று காத்துகந்தான்* நிலமாமகட்கு இனியான்,*
குன்றின் முல்லையின் வாசமும்* குளிர்மல்லிகை மணமும் அளைந்து,* இளந்-
தென்றல் வந்துலவும் * திருக்கோட்டியூரானே. 9.10.7
1845:
பூங்குருந்து ஒசித்து ஆனைகாய்ந்து* அரிமாச் செகுத்து,* அடியேனை ஆளுகந்து-
ஈங்கு என்னுள் புகுந்தான்* இமையோர்கள் தம் பெருமான்,*
தூங்கு தண்பலவின்கனி* தொகுவாழையின் கனியொடு மாங்கனி*
தேங்கு தண்புனல் சூழ்* திருக்கோட்டியூரானே. 9.10.8
1846:
கோவையின் தமிழ் பாடுவார்* குடமாடுவார் தட மாமலர்மிசை,*
மேவு நான்முகனில்*விளங்கு புரிநூலர்,*
மேவு நான்மறை வாணர்* ஐவகை வேள்வி ஆறுஅங்கம் வல்லவர் தொழும்,*
தேவ தேவபிரான்* திருக்கோட்டியூரானே. 9.10.9
1847:##
ஆலுமா வலவன் கலிகன்றி* மங்கையர் தலைவன்* அணிபொழில்-
சேல்கள் பாய்கழனித்* திருக்கோட்டியூரானை,*
நீல மாமுகில் வண்ணனை* நெடுமாலை இன்தமிழால் நினைந்த,* இந்-
நாலும் ஆறும் வல்லார்க்கு* இடமாகும் வானுலகே. (2) 9.10.10