பெரிய திருமொழி நான்காம் பத்து


நான்காம் பத்து

 

முதல் திருமொழி – போதலர்ந்த

 

1248:##

போதலர்ந்த பொழில்சோலைப்* புறமெங்கும் பொருதிரைகள்*

தாது உதிரவந்தலைக்கும்* தடமண்ணித் தென்கரைமேல்*

மாதவன் தான்உறையுமிடம்* வயல்நாங்கை*

வரிவண்டுதேதெனவென்று இசைபாடும்* திருத்தேவனார்தொகையே       (4.1.1)

 

1249:

யாவருமாய் யாவையுமாய்* எழில்வேதப் பொருள்களுமாய்*

மூவருமாய் முதலாய*  மூர்த்திஅமர்ந்து உறையுமிடம்*

மாவரும்திண் படைமன்னை* வென்றிகொள்வார் மன்னுநாங்கை*

தேவரும் சென்றிறைஞ்சுபொழில்*  திருத்தேவனார்தொகையே      (4.1.2)

 

1250:

வானாடும் மண்ணாடும்* மற்றுள்ள பல்லுயிரும்*

தானாய எம்பெருமான்* தலைவன்அமர்ந்து உறையுமிடம்*

ஆனாத பெருஞ்செல்வத்து* அருமறையோர் நாங்கைதன்னுள்*

தேனாரும் மலர்பொழில்சூழ்* திருத்தேவனார்தொகையே      (4.1.3)

 

1251:

இந்திரனும் இமையவரும்* முனிவர்களும் எழிலமைந்த*

சந்தமலர்ச் சதுமுகனும்* கதிரவனும் சந்திரனும்*

எந்தை! எமக்கருள்எனநின்று* அருளுமிடம் எழில்நாங்கை*

சுந்தரநல் பொழில்புடைசூழ்* திருத்தேவனார்தொகையே      (4.1.4)

 

1252:

அண்டமும் இவ்வலைகடலும்* அவனிகளும் குலவரையும்*

உண்டபிரான் உரையுமிடம்* ஒளிமணி சந்தகில்கனகம்*

தெண்திரைகள் வரத்திரட்டும்* திகழ்மண்ணித் தென்கரைமேல்*

திண்திறலார் பயில்நாங்கைத்* திருத்தேவனார்தொகையே      (4.1.5)

 

1253:

ஞாலமெல்லாம் அமுதுசெய்து* நான்மறையும் தொடராத*

பாலகனாய் ஆலிலையில்* பள்ளிகொள்ளும் பரமனிடம்*

சாலிவளம் பெருகிவரும்* தடமண்ணித் தென்கரைமேல்*

சேலுகளும் வயல்நாங்கைத்* திருத்தேவனார்தொகையே      (4.1.6)

 

1254:

ஓடாத வாளரியின்* உருவாகி இரணியனை*

வாடாத வள்ளுகிரால்* பிளந்தளைந்த மாலதிடம்*

ஏடேறு பெருஞ்செல்வத்து* எழில்மறையோர் நாங்கைதன்னுள்*

சேடேறு பொழில்தழுவு* திருத்தேவனார்தொகையே      (4.1.7)

 

1255:

வாராரும் இளங்கொங்கை* மைதிலியை மணம்புணர்வான்*

காரார்திண் சிலையிறுத்த* தனிக்காளை கருதுமிடம்*

ஏராரும் பெருஞ்செல்வத்து* எழில்மறையோர் நாங்கைதன்னுள்*

சீராரும் மலர்பொழில்சூழ்* திருத்தேவனார்தொகையே      (4.1.8)

 

1256:

கும்பமிகு மதயானை* பாகனொடும் குலைந்துவிழ*

கொம்பதனைப் பறித்தெறிந்த* கூத்தன் அமர்ந்துறையுமிடம்*

வம்பவிழும் செண்பகத்தின்* மணங்கமழும் நாங்கைதன்னுள்*

செம்பொன்மதிள் பொழில்புடைசூழ்* திருத்தேவனார்தொகையே      (4.1.9)

 

1257:##

காரார்ந்த திருமேனிக்* கண்ணன் அமர்ந்துறையுமிடம்*

சீரார்ந்த பொழில்நாங்கைத்* திருத்தேவனார் தொகைமேல்*

கூரார்ந்தவேற்கலியன்* கூறுதமிழ் பத்தும்வல்லார்*

எரார்ந்த வைகுந்தத்து* இமையவரோடு இருப்பாரே (4.1.10)

 

இரண்டாம் திருமொழி – கம்பமா

 

1258:

கம்பமாகடலடைத்து இலங்கைக்குமன்*  கதிர்முடிஅவைபத்தும் அம்பினாலறுத்து*

அரசுஅவன் தம்பிக்கு* அளித்தவன்உறைகோயில்*

செம்பலாநிரை செண்பகம்மாதவி* சூதகம் வாழைகள்சூழ்*

வம்புலாம் கமுகோங்கிய நாங்கூர்* வண்புருடோத்தமமே     (4.2.1)

 

1259:

பல்லவம்திகழ் பூங்கடம்பேறி* அக்காளியன் பணவரங்கில்*

ஒல்லை வந்துறப்பாய்ந்து அருநடஞ்செய்த* உம்பர்க்கோனுறைகோயில்*

நல்ல வெந்தழல் மூன்றுநால்வேதம்* ஐவேள்வியோடு ஆறங்கம்*

வல்ல அந்தணர் மல்கிய நாங்கூர்* வண்புருடோத்தமமே     (4.2.2)

 

1260:

அண்டரானவர் வானவர்கோனுக்கென்று* அமைத்தசோறுஅதுவெல்லாம் உண்டு*

கோநிரை மேய்த்து அவைகாத்தவன்* உகந்தினிதுறைகோயில்*

கொண்டலார் முழவில் குளிர்வார்பொழில்* குலமயில் நடமாட*

வண்டுதானிசைபாடிடு நாங்கூர்* வண்புருடோத்தமமே     (4.2.3)

 

1261:

பருங்கை யானையின் கொம்பினைப் பறித்து* அதன் பாகனைச் சாடிப்புக்கு*

ஒறுங்க மல்லரைக் கொன்று* பின்கஞ்சனை உதைத்தவன்உறைகோயில்*

கரும்பினூடு உயர்ச்சாலிகள் விளைதரு* கழனியில் மலிவாவி*

மருங்கெலாம் பொழிலோங்கிய நாங்கூர்* வண்புருடோத்தமமே     (4.2.4)

 

1262:

சாடுபோய் விழத்தாள் நிமிர்த்து* ஈசன்தன் படையொடும்  கிளையோடும்ஓட*

வாணனை ஆயிரந்தோள்களும்*  துணித்தவன்உறைகோயில்*

ஆடுவான் கொடிஅகல் விசும்பணவிப் போய்ப்* பகலவன் ஒளிமறைக்கும்*

மாடமாளிகை சூழ்தரு நாங்கூர்* வண்புருடோத்தமமே     (4.2.5)

 

1263:

அங்கையால் அடிமூன்று நீரேற்று* அயன்அலர்கொடு தொழுதேத்த*

கங்கைபோதரக் கால்நிமிர்த்துஅருளிய* கண்ணன்வந்துறைகோயில்*

கொங்கை கோங்கவைகாட்ட வாய்குமுதங்கள் காட்ட* மாபதுமங்கள்*

மங்கைமார் முகம்காட்டிடு நாங்கூர்* வண்புருடோத்தமமே     (4.2.6)

 

 

1264:

உளைய ஒண்திறல் பொன்பெயரோன்* தனதுஉரம்பிளந்து உதிரத்தைஅளையும்*

வெஞ்சினத்து அரிபரிகீறிய* அப்பன்வந்துறைகோயில்*

இளைய மங்கையர் இணையடிச் சிலம்பினோடு* எழில்கொள் பந்தடிப்போர்*

கைவளையில் நின்றொலி மல்கிய நாங்கூர்* வண்புருடோத்தமமே     (4.2.7)

 

1265:

வாளையார் தடங்கண் உமைபங்கன்* வன்சாபமற்றதுநீங்க*

மூளையார்சிரத்து ஐயமுன்னளித்த* எம்முகில்வண்ணனுறைகோயில்*

பாளைவான் கமுகூடுயர் தெங்கின்* வண்பழம்விழ வெருவிப்போய்*

வாளைபாய்தடம் சூழ்தரு நாங்கூர்* வண்புருடோத்தமமே     (4.2.8)

 

1266:

இந்துவார் சடையீசனைப்  பயந்த* நான்முகனைத் தன்எழிலாரும்*

உந்திமாமலர் மீமிசைப் படைத்தவன்* உகந்தினிதுறைகோயில்*

குந்தி வாழையின் கொழுங்கனி நுகர்ந்து* தன் குருளையைத் தழுவிப்போய்*

மந்திமாம்பணை மேல்வைகு நாங்கூர்* வண்புருடோத்தமமே     (4.2.9)

 

1267:##

மண்ணுளார்புகழ் வேதியர் நாங்கூர்* வண்புருடோத்தமத்துள்*

அண்ணல் சேவடிக் கீழடைந்து உய்ந்தவன்* ஆலிமன் அருள்மாரி*

பண்ணுளார் தரப்பாடிய பாடல்* இப்பத்தும் வல்லார்*

உலகில்எண்ணிலாத பேரின்பமுற்று* இமையவரோடும் கூடுவரே (4.2.10)

 

மூன்றாம் திருமொழி – பேரணிந்து

 

1268:##

பேரணிந்து உலகத்தவர் தொழுதேத்தும்* பேரருளாளன் எம்பிரானை*

வாரணிமுலையாள் மலர்மகளோடு* மண்மகளும் உடன் நிற்ப*

சீரணிமாட நாங்கைநன்னடுவுள்* செம்பொன்செய் கோயிலின்உள்ளே*

காரணிமேகம் நின்றதொப்பானைக்* கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே     (4.3.1)

 

1269:

பிறப்பொடு மூப்பொன்றுஇல்லவன் தன்னைப்* பேதியா இன்பவெள்ளத்தை*

இறப்பெதிர்க்காலக் கழிவுமானானை* ஏழிசையின் சுவைதன்னை*

சிறப்புடை மறையோர் நாங்கைநன்னடுவுள்* செம்பொன்செய் கோயிலினுள்ளே*

மறைப்பெரும்பொருளை வானவர்க்கோனைக்* கண்டுநான் வாழ்ந்தொழிந்தேனே 

 

1270:

திடவிசும்பெரிநீர் திங்களும் சுடரும்* செழுநிலத்துயிர்களும் மற்றும்*

படர்பொருள்களுமாய் நின்றவன்தன்னை* பங்கயத்தயன் அவன்அனைய*

திடமொழிமறையோர் நாங்கைநன்னடுவுள்* செம்பொன்செய் கோயிலினுள்ளே*

கடல்நிற வண்ணன் தன்னை நானடியேன்* கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே     

 

1271:

வசையறுகுறளாய் மாவலிவேள்வி* மண்ணளவிட்டவன் தன்னை*

அசைவறும் அமரரடியிணை வணங்க* அலைகடல் துயின்ற அம்மானை*

திசைமுகன் அனையோர் நாங்கைநன்னடுவுள்* செம்பொன்செய் கோயிலினுள்ளே*

உயர்மணிமகுடம் சூடிநின்றானைக்* கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே     (4.3.4)

 

1272:

தீமனத்தரக்கர் திறலழித்தவனே!என்று* சென்றுஅடைந்தவர் தமக்கு*

தாய்மனத்திரங்கி அருளினைக் கொடுக்கும்* தயரதன் மதலையைச் சயமே*

தேமலர்ப்பொழில்சூழ் நாங்கைநன்னடுவுள்* செம்பொன்செய் கோயிலினுள்ளே*

காமனைப்பயந்தான் தன்னைநான்அடியேன்* கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே    

 

1273:

மல்லைமா முந்நீர்அதர்பட* மலையால் அணைசெய்து மகிழ்ந்தவன் தன்னை*

கல்லின் மீதியன்ற கடிமதிள் இலங்கைகலங்க* ஓர்வாளி தொட்டானை*

செல்வநான்மறையோர் நாங்கைநன்னடுவுள்* செம்பொன்செய் கோயிலினுள்ளே*

அல்லிமாமலராள் தன்னொடும் அடியேன்* கண்டுகொண்டுஅல்லல் தீர்ந்தேனே    

 

1274:

வெஞ்சினக்களிறும் வில்லொடு மல்லும்* வெகுண்டிறுத்து அடர்த்தவன் தன்னை*

கஞ்சனைக் காய்ந்த காளையம்மானைக்* கருமுகில் திருநிறத்தவனை*

செஞ்சொல்நான்மறையோர் நாங்கைநன்னடுவுள்* செம்பொன்செய் கோயிலினுள்ளே*

அஞ்சனக் குன்றம் நின்றதொப்பானைக்* கண்டுகொண்டுஅல்லல்தீர்ந்தேனே    

 

1275:##

அன்றியவாணன் ஆயிரம் தோளும்துணிய*அன்று ஆழிதொட்டானை*

மின்திகழ்குடுமி வேங்கடமலைமேல்* மேவிய வேத நல்விளக்கை*

தென்திசைத்திலதம் அனையவர் நாங்கைச்* செம்பொன்செய் கோயிலினுள்ளே*

மன்றதுபொலிய மகிழ்ந்து நின்றானை* வணங்கிநான் வாழ்ந்தொழிந்தேனே       

 

1276:

களங்கனி வண்ணா! கண்ணணே! என்தன்* கார்முகிலே! எனநினைந்திட்டு*

உளங்கனிந்திருக்கும் அடியவர் தங்கள்* உள்ளத்துள் ஊறியதேனை*

தெளிந்தநான்மறையோர் நாங்கைநன்னடுவுள்* செம்பொன்செய் கோயிலினுள்ளே*

வளங்கொள் பேரின்பம் மன்னிநின்றானை* வணங்கிநான் வாழ்ந்தொழிந்தேனே       

 

1277:##

தேனமர் சோலை நாங்கைநன்னடுவுள்* செம்பொன்செய் கோயிலினுள்ளே*

வானவர் கோனைக் கண்டமை சொல்லும்* மங்கையார் வாட்கலிகன்றி*

ஊனமில்பாடல் ஒன்பதோடொன்றும்* ஒழிவின்றிக் கற்றுவல்லார்கள்*

மானவெண்குடைக்கீழ் வையகம்ஆண்டு* வானவர் ஆகுவர் மகிழ்ந்தே    (4.3.10)

 

நான்காம் திருமொழி – மாற்றரசர்

 

1278##

மாற்றரசர் மணிமுடியும் திறலும் தேசும்*

மற்றவர்தம் காதலிமார் குழையும்*

தந்தை கால் தளையும் உடன்கழலவந்து தோன்றிக்*

கதநாகம் காத்தளித்த கண்ணர் கண்டீர்*

நூற்றிதழ்கொள் அரவிந்தம் நுழைந்த பள்ளத்து*

இளங்கமுகின் முதுபாளை பகுவாய் நண்டின்*

சேற்றளையில் வெண்முத்தம் சிந்து நாங்கூர்த்*

திருத்தெற்றியம்பலத்து என்செங்கண்மாலே   

 

1279:

பொற்றொடித் தோள்மடமகள் தன்வடிவு கொண்ட*  பொல்லாதவன் பேய்ச்சி  கொங்கை வாங்கி*

பெற்றெடுத்த தாய்போல மடுப்ப* ஆரும்பேணா நஞ்சுண்டுகந்த பிள்ளை கண்டீர்*

நெற்றொடுத்த மலர்நீலம் நிறைந்தசூழல்* இருஞ்சிறைய வண்டொலியும் நெடுங்கணார்தம்*

சிற்றடிமேல் சிலம்பொலியும் மிழற்றுநாங்கூர்த்* திருத்தெற்றியம்பலத்து என்செங்கண் மாலே   

 

1280:

படலடைந்த சிறுகுரம்பை நுழைந்து புக்குப்* பசுவெண்ணெய் பதமாரப் பண்ணை முற்றும்*

அடலடர்த்த வேற்கண்ணார் தோக்கை பற்றி* அலந்தலைமை செய்துழலும் ஐயங்கண்டீர்*

மடலெடுத்த நெடுன்தெங்கின் பழங்கள்வீழ* மாங்கனிகள் திரட்டுருட்டா வருநீர்ப் பொன்னி*

திடலெடுத்து மலர்சுமந்தங்கிழியும் நாங்கூர்த்* திருத்தெற்றியம்பலத்து என்செங்கண்மாலே   (4.4.3)

 

1281:

வாராரும் முலைமடவாள் பின்னைக்காகி* வளைமருப்பில் கடுஞ்சினத்து வன்தாளார்ந்த*

காரார்திண் விடையடர்த்து வதுவையாண்ட* கருமுகில்போல் திருநிறத்து என்கண்ணர் கண்டீர்*

ஏராரும் மலர்ப்பொழில்கள் தழுவி எங்கும்* எழில்மதியைக் கால்தொடர விளங்கு சோதி*

சீராரு மணிமாடம் திகழும் நாங்கூர்த்* திருத்தெற்றியம்பலத்து என்செங்கண்மாலே   (4.4.4)

 

 

1282:

கலையிலங்கும் அகலல்குல் கமலப்பாவை* கதிர்முத்த வெண்ணகையாள் கருங்கணாய்ச்சி*

முலையிலங்கும் ஒளிமணிப்பூண் வடமும் தேய்ப்ப* மூவாதவரை நெடுந்தோள் மூர்த்தி கண்டீர்*

மலையிலங்கு நிரைச்சந்தி மாடவீதி* ஆடவரை மடமொழியார் முகத்து*

இரண்டுசிலைவிலங்கி மனஞ்சிறை கொண்டிருக்கும் நாங்கூர்த்* திருத்தெற்றியம்பலத்து என்செங்கண்மாலே   (4.4.5)

 

1283:

தான்போலும் என்றெழுந்தான் தரணியாளன்* அதுகண்டு தரித்திருப்பான் அரக்கர் தங்கள்*

கோன்போலும் என்றெழுந்தான் குன்றமன்ன* இருபதுதோளுடன் துணித்த  ஒருவன்கண்டீர்*

மான்போலும் மென்னோக்கின் செய்யவாயார்* மரகதம்போல் மடக்கிளியைக் கைமேல் கொண்டு*

தேன்போலும் மென்மழலை பயிற்றும் நாங்கூர்த்* திருத்தெற்றியம்பலத்து என்செங்கண்மாலே   (4.4.6)

 

1284:

பொங்கிலங்கு புரிநூலும் தோலும் தாழப்* பொல்லாத குறளுருவாய்ப் பொருந்தாவாணன்*

மங்கலம்சேர் மறைவேள்வி அதனுள்புக்கு* மண்ணகலம் குறையிரந்த மைந்தன் கண்டீர்*

கொங்கலர்ந்த மலர்க்குழலார் கொங்கை தோய்ந்த* குங்குமத்தின் குழம்பளைந்த  கோலந்தன்னால்*

செங்கல்அங்கல் வெண்மணல்மேல் தவழும் நாங்கூர்த்* திருதெற்றியம்பலத்து என்செங்கண்மாலே   

 

1285:

சிலம்பினிடைச் சிறுபரல்போல் பெரியமேரு* திருக்குளம்பில் கணகணப்பத் திருவாகாரம்குலுங்க*

நிலமடந்தைதனை இடந்து புல்கிக்* கோட்டிடைவைத்தருளிய எங்கோமான் கண்டீர்*

இலங்கிய நான்மறை அனைத்தும் அங்கமாறும்* ஏழிசையும் கேள்விகளும் எண்திக்கெங்கும்,*

சிலம்பியநற் பெருஞ்செல்வம் திகழும் நாங்கூர்த்* திருதெற்றியம்பலத்து என்செங்கண்மாலே   

 

1286:

ஏழுலகும் தாழ்வரையும் எங்கும் மூடி* எண்திசையும் மண்டலமும் மண்டி*

அண்டம்மோழையெழுந்து ஆழிமிகும் ஊழிவெள்ளம்* முன்னகட்டிலொடுக்கிய எம்மூர்த்திகண்டீர்*

ஊழிதொறும் ஊழிதொறும் உயர்ந்த செல்வத்து* ஓங்கியநான் மறையனைத்தும் தாங்குனாவர்*

சேழுயர்ந்த மணிமாடம் திகழும் நாங்கூர்த்* திருதெற்றியம்பலத்து என்செங்கண்மாலே   (4.4.9)

 

1287:##

சீரணிந்த மணிமாடம் திகழும் நாங்கூர்த்* திருதெற்றியம்பலத்து என்செங்கண்மாலை*

கூரணிந்த வேல்வலவன் ஆலிநாடன்* கொடிமாட மங்கையர்கோன் குறையலாளி*

பாரணிந்த தொல்புகழான் கலியன் சொன்ன* பாமாலை இவையைந்தும் ஐந்தும் வல்லார்*

சீரணிந்த உலகத்து மன்னராகிச்* சேண்விசும்பில் வானவராய்த் திகழ்வர்தாமே       (4.4.10)

 

ஐந்தாம் திருமொழி – தூம்புடை

 

1288:##

தூம்புடைப் பனைக்கை வேழம்* துயர்கெடுத்தருளி*

மன்னுகாம்புடைக் குன்றமேந்திக்* கடுமழை காத்த எந்தை*

பூம்புனல் பொன்னி முற்றும்* புகுந்து பொன்வரண்ட*

எங்கும்தேம்பொழில் கமழும் நாங்கூர்த்* திருமணிக்கூடத்தானே       (4.5.1)

 

1289:

கவ்வை வாளெயிற்று வன்பேய்க்* கதிர்முலை சுவைத்து*

இலங்கை வவ்விய இடும்பை கூரக்* கடுங்கணை துரந்த எந்தை*

கொவ்வைவாய் மகளிர் கொங்கைக்* குங்குமம் கழுவிப் போந்த*

தெய்வநீர் கமழும் நாங்கூர்த்* திருமணிக்கூடத்தானே       (4.5.2)

 

1290:

மாத்தொழில் மடங்கக் செற்று* மறுதிற நடந்து*

வன்தாள்சேத்தொழில் சிதைத்து* பின்னை செவ்வித்தோள் புணர்ந்த எந்தை*

நாத்தொழில் மறைவல்லார்கள்* நயந்துஅறம்பயந்த வண்கைத்*

தீத்தொழில் பயிலும் நாங்கூர்த்* திருமணிக்கூடத்தானே       (4.5.3)

 

1291:

தாங்கருஞ் சினத்து வன்தாள்* தடக்கைமா மருப்பு வாங்கி*

பூங்குருந்து ஒசித்துப் புள்வாய் பிளந்து* எருதடர்த்த எந்தை*

மாங்கனி நுகர்ந்த மந்தி* வந்துவண்டிரிய*

வாழைத்தீங்கனி நுகரும் நாங்கூர்த்* திருமணிக்கூடத்தானே       (4.5.4)

 

1292:

கருமகள் இலங்கையாட்டி* பிலங்கொள்வாய் திறந்து*

தன்மேல் வருமவள் செவியும்மூக்கும்* வாளினால் தடிந்த எந்தை*

பெருமகள் பேதை மங்கை* தன்னொடும் பிரிவிலாத*

திருமகள் மருவும் நாங்கூர்த்* திருமணிக்கூடத்தனே        (4.5.5)

 

1293:

கெண்டையும் குறளும் புள்ளும்* கேழலும் அரியும்மாவும்*

அண்டமும் சுடரும் அல்லா* ஆற்றலும் ஆயஎந்தை*

ஒண்டிறல் தென்னேனாட* வடவர சோட்டம்கண்ட*

திண்டிறலாளர் நாங்கூர்த்* திருமணிக்கூடத்தனே        (4.5.6)

 

1294:

குன்றமும் வானும் மண்ணும்* குளிர்புனல் திங்களோடு*

நின்றவெஞ்சுடரும் அல்லா* நிலைகளும் ஆயஎந்தை*

மன்றமும் வயலும் காவும்* மாடமும் மணங்கொண்டு*

எங்கும்தென்றல்வந்துலவும் நாங்கூர்த்* திருமணிக்கூடத்தானே       (4.5.7)

 

1295:

சங்கையும் துணிவும் பொய்யும்* மெய்யும் இத்தரணியோம்பும்*

பொங்கிய முகிலும் அல்லாப்* பொருள்களும் ஆயஎந்தை*

பங்கய முகுத்த தேறல்* பருகிய வாளைபாய*

செங்கயலுகளும் நாங்கூர்த்* திருமணிக்கூடத்தானே       (4.5.8)

 

1296:

பாவமும் அறமும் வீடும்* இன்பமும் துன்பம் தானும்*

கோவமும் அருளும் அல்லாக்* குணங்களும் ஆயஎந்தை*

மூவரில் எங்கள் மூர்த்தி* இவன், ‘என முனிவரோடு*

தேவர் வந்திறைஞ்சும் நாங்கூர்த்* திருமணிக்கூடத்தனே        (4.5.9)

 

1297:##

திங்கள்தோய் மாட நாங்கூர்த்* திருமணிக்கூடத்தானை*

மங்கையர் தலைவன் வண்தார்க்* கலியன் வாயொலிகள் வல்லார்*

பொங்குநீர் உலக மாண்டு* பொன்னுலகாண்டு*

பின்னும்வெங்கதிர்ப் பரிதி வட்டத்தூடுபோய்* விளங்குவாரே (4.5.10)

 

ஆறாம் திருமொழி – தாளவந்து

 

1298:##

தாவளந்து உலகமுற்றும்* தடமலர்ப் பொய்கைபுக்கு*

நாவளம் நவின்றங்கேத்த* நாகத்தின் நடுக்கம் தீர்த்தாய்*

மாவளம் பெருகி மன்னு* மறையவர் வாழும் நாங்கை*

காவளம் பாடிமேய* கண்ணனே! களைகண்நீயே (4.6.1)

 

1299:

மண்ணிடந்து ஏனமாகி* மாவலி வலிதொலைப்பான்*

விண்ணவர் வேண்டச்சென்று* வேள்வியில் குறையிரந்தாய்!*

துண்ணென மாற்றார்த்தம்மைத்* தொலைத்தவர் நாங்கை மேய*

கண்ணனே! காவளந்தண் பாடியாய்!* களைகண்நீயே        (4.6.2)

 

1300:

உருத்தெழு வாலி மார்வில்* ஓருகணை உருவவோட்டி*

கருத்துடைத் தம்பிக்கு* இன்பக் கதிர்முடி அரசளித்தாய்*

பருத்தெழு பலவும்மாவும்* பழம்விழுந்தொழுகும் நாங்கை*

கருத்தனே! காவளந்தன் பாடியாய்!* களைகண்நீயே        (4.6.3)

 

1301:

முனைமகத்து அரக்கன்மாள* முடிகள் பத்தறுத்து வீழ்த்து*

ஆங்குஅனையவற்கு இளையவற்கே* அரசளித்தருளினானே*

சுனைகளில் கயல்கள்பாயச்* சுரும்புதேன்நுகரும் நாங்கை*

கனைகழல் காவளந்தண் பாடியாய்!* களைகண்நீயே        (4.6.4)

 

1302:

படவர உச்சிதன்மேல்* பாய்ந்துபல் நடங்கள்செய்து*

மடவரல் மங்கைதன்னை* மார்வகத்து இருத்தினானே!*

தடவரை தங்கு மாடத்* தகுபுகழ் நாங்கை மேய*

கடவுளே! காவளந்தண் பாடியாய்!* களைகண்நீயே        (4.6.5)

 

1303:

மல்லரையட்டுமாளக்* கஞ்சனை மலைந்து கொன்று*

பல்லரசு அவிந்து வீழப்* பாரதப்போர் முடித்தாய்*

நல்லரண் காவின் நீழல்* நறைகமழ் நாங்கை மேய*

கல்லரண் காவளந்தண் பாடியாய்!* களைகண்நீயே        (4.6.6)

 

1304:

மூத்தவற்கு அரசுவேண்டி* முன்புதூதெழுந்தருளி*

மாத்தமர் பாகன் வீழ* மதகரி மருப்பொசித்தாய்*

பூத்தமர் சோலையோங்கிப்* புனல்பரந்தொழுகும் நாங்கை*

காத்தவனே! காவளந்தண் பாடியாய்!* களைகண்நீயே        (4.6.7)

 

1305:

ஏவிளங் கன்னிக்காகி* இமையவர் கோனைச்செற்று*

காவளம் கடிதிறுத்துக்* கற்பகம் கொண்டு போந்தாய்*

பூவளம் பொழில்கள் சூழ்ந்த* புரந்தரன்செய்த நாங்கை*

காவளம் பாடி மேய* கண்ணனே! களைகண்நீயே  (4.6.8)

 

1306:

சந்தமாய் சமயமாகிச்* சமயவைம் பூதமாகி*

அந்தமாய் ஆதியாகி* அருமறையவையும் ஆனாய்*

மந்தமார் பொழில்கள்தோறும்* மடமயிலாலும் நாங்கை*

கந்தமார் காவளந்தண் பாடியாய்!* களைகண்நீயே        (4.6.9)

 

1307:##

மாவளம் பெருகி மன்னு* மறையவர் வாழும்*

நாங்கைக்காவளம் பாடிமேய* கண்ணணைக் கலியன் சொன்ன*

பாவளம் பத்தும் வல்லார்* பார்மிசை அரசராகி*

கோவிள மன்னர்தாழக்* குடைநிழல் பொலிவர்தாமே     (4.6.10)

 

 

ஏழாம் திருமொழி – கண்ணார்கடல்

 

1308:##

கண்ணார் கடல்போல்* திருமேனி கரியாய்*

நண்ணார்முனை* வென்றிகொள்வார் மன்னு நாங்கூர்*

திண்ணார் மதிள்சூழ்* திருவெள்ளக் குளத்துள்அண்ணா*

அடியேனிடரைக்களையாயே       (4.7.1)

 

1309:

கொந்தார்த்துளவ* மலர்கொண்டு அணிவானே*

நந்தாத பெரும்புகழ்* வேதியர்நாங்கூர்*

செந்தாமரைநீர்த்* திருவெள்ளக் குளத்துள்எந்தாய்*

அடியேனிடரைக்களையாயே     (4.7.2)

 

1310:

குன்றால் குளிர்மாரி* தடுத்துகந்தானே*

நன்றாய பெரும்புகழ்* வேதியர்நாங்கூர்*

சென்றார் வணங்கும்* திருவெள்ளக் குளத்துள்நின்றாய்*

நெடியாய் ! அடியேனிடர்நீக்கே  (4.7.3)

 

1311:

கானார் கரிகொம்பு* அதொசித்த களிறே!*

நானாவகை* நல்லவர் மந்னிய நாங்கூர்*

தேனார் பொழில்சூழ்* திருவெள்ளக் குளத்துளானாய்*

அடியேனுக்கு அருள்புரியாயே      (4.7.4)

 

1312:##

வேடார்* திருவேங்கடம் மேயவிளக்கே*

நாடார் புகழ்* வேதியர் மன்னிய நாங்கூர்*

சேடார் பொழில்சூழ்* திருவெள்ளக்குளத்தாய்*

பாடா வருவேன்* வினையாயின பாற்றே     (4.7.5)

 

1313:

கல்லால் கடலை* அணைகட்டி உகந்தாய்*

நல்லார் பலர்* வேதியர் மன்னிய நாங்கூர்*

செல்வா*  திருவெள்ளக்குளத்து உறைவானே*

எல்லாஇடரும்* கெடுமாறு அருளாயே  (4.7.6)

 

1314:

கோலால் நிரைமேய்த்த* எங்கோவலர்கோவே*

நாலாகிய* வேதியர் மன்னிய நாங்கூர்*

சேலார் வயல்சூழ்* திருவெள்ளக் குளத்துள்மாலே*

எனவல்வினை* தீர்த்தருளாயே  (4.7.7)

 

1315:

வராகமதாகி* இம்மண்ணைஇடந்தாய்*

நாராயணணே!* நல்ல வேதியர்நாங்கூர்*

சீரார் பொழில்சூழ்* திருவெள்ளக்குளத்துள்*

ஆராவமுதே* அடியேற்குஅருளாயே (4.7.8)

 

1316:

பூவார்திருமாமகள்* புல்கியமார்பா!*

நாவார் புகழ்* வேதியர் மன்னிய நாங்கூர்*

தேவா!* திருவெள்ளக்குளத்து உறைவானே*

ஆவா! அடியான்* இவன்என்று அருளாயே   (4.7.9)

 

1317:##

நல்லன்புடை* வேதியர் மன்னிய நாங்கூர்*

செல்வன்* திருவெள்ளக்குளத்து உறைவானை*

கல்லின் மலிதோள்* கலியன் சொன்னமாலை*

வல்லரென வல்லவர்* வானவர்தாமே    (4.7.10)

 

எட்டாம் திருமொழி – கவளயானை

 

1318:##

கவளயானைக் கொம்பொசித்த* கண்ணனென்றும் காமருசீர்*

குவளைமேகம் அன்னமேனி* கொண்டகோன் என்னானையென்றும்*

தவளமாட நீடுநாங்கைத்* தாமரையாள் கேள்வனென்றும்*

பவளவாயாள் என்மடந்தை* பார்த்தன்பள்ளிபாடுவாளே     (4.8.1)

 

1319:

கஞ்சன்விட்ட வெஞ்சினத்த* களிறடர்த்த காளையென்றும்*

வஞ்சமேவி வந்தபேயின்* உயிரையுண்ட மாயனென்றும்*

செஞ்சொலாளர் நீடுநாங்கைத்* தேவதேவன் என்றென்றோதி*

பஞ்சியன்ன மெல்லடியாள்* பார்த்தன்பள்ளிபாடுவாளே     (4.8.2)

 

1320:

அண்டர்கோன் என்னானையென்றும்* ஆயர்மாதர் கொங்கைபுல்கு செண்டனென்றும்*

நான்மறைகள் தேடியோடும்* செல்வனென்றும்*

வண்டுலவு பொழில்கொள்நாங்கை* மன்னுமாயன் என்றென்றோதி*

பண்டுபோலன்று என்மடந்தை* பார்த்தன்பள்ளிபாடுவாளே     (4.8.3)

 

1321:

கொல்லையானாள் பரிசழிந்தாள்* கோல்வளையார் தம்முகப்பே*

மல்லைமுந்நீர் தட்டிலங்கை* கட்டழித்த மாயனென்றும்*

செல்வம்மல்கு மறையோர்நாங்கை* தேவதேவன் என்றென்றோதி*

பல்வளையாள் என்மடந்தை* பார்த்தன்பள்ளிபாடுவாளே     (4.8.4)

 

1322:

அரக்கர் ஆவிமாள அன்று* ஆழ்கடல்சூழ் இலங்கைசெற்ற*

குரக்கரசனென்றும்* கோலவில்லியென்றும்*

மாமதியைநெருக்குமாட நீடுநாங்கை* நின்மலன்தான் என்றென்றோதி*

பரக்கழிந்தாள் என்மடந்தை* பார்த்தன்பள்ளிபாடுவாளே     (4.8.5)

 

1323:

ஞாலமுற்றும் உண்டுமிழிந்த* நாதனென்றும் நானிலம்சூழ்*

வேலையன்ன கோலமேனி* வண்ணனென்றும்*

மேலெழுந்து சேலுகளும் வயல்கொள்நாங்கைத்* தேவதேவன் என்றென்றோதி*

பாலின்நல்ல மென்மொழியாள்* பார்த்தன்பள்ளிபாடுவாளே     (4.8.6)

 

1324:

நாடிஎந்தன் உள்ளம்கொண்ட* நாதனென்றும் நான்மறைகள்*

தேடிஎன்றும் காணமாட்டாச்* செல்வனென்றும்*

சிறைகொள்வண்டு சேடுலவு பொழில்கொள்நாங்கைத்* தேவதேவன் என்றென்றோதி*

பாடகம்சேர் மெல்லடியாள்* பார்த்தன்பள்ளிபாடுவாளே     (4.8.7)

 

 

1325:

உலகமேத்தும் ஒருவனென்றும்* ஒண்சுடரோடு உம்பரெய்தா*

நிலவும்ஆழிப் படையனென்றும்* நேசனென்றும்*

தென்திசைக்குத் திலதமன்ன மறையோர்நாங்கைத்* தேவதேவன் என்றென்றோதி*

பலரும் ஏச என்மடந்தை* பார்த்தன்பள்ளிபாடுவாளே     (4.8.8)

 

1326:

கண்ணனென்றும் வானவர்கள்* காதலித்து மலர்கள்தூவும்*

எண்ணனென்றும் இன்பனென்றும்* ஏழுலுகுக்கு ஆதியென்றும்*

திண்ணமாட நீடுநாங்கைத்* தேவதேவன் என்றென்றோதி*

பண்ணினன்ன மென்மொழியாள்* பார்த்தன்பள்ளிபாடுவாளே     (4.8.9)

 

1327:##

பாருள்நல்ல மறையோர்நாங்கைப்* பார்த்தன்பள்ளிசெங்கண்மாலை*

வார்கொள்நல்ல முலைமடவாள்பாடலை* தாய்மொழிந்தமாற்றம்*

கூர்கொள்நல்ல வேல்கலியன்* கூறுதமிழ் பத்தும்வல்லார்*

ஏர்கொள்நல்ல வைகுந்தத்துள்* இன்பம்நாளும் எய்துவாரே (4.8.10)

 

ஒன்பதாம் திருமொழி – நும்மைத்தொழுதோம்

 

1328:##

நும்மைத் தொழுதோம்* நுந்தம்பணிசெய்திருக்கும் நும்மடியோம்*

இம்மைக்கு இன்பம் பெற்றோம்* எந்தாய் இந்தðரீரே*

எம்மைக் கடிதாக் கருமம்அருளி* ஆவா! என்றிரங்கி*

நம்மையொருகால் காட்டிநடந்தால்* நாங்கள்உய்யோமே?      (4.9.1)

 

1329:##

சிந்தைதன்னுள் நீங்காதிருந்த திருவே!* மருவினிய மைந்தா*

அந்தணாலிமாலே!* சோலைமழகளிறே!*

நந்தாவிளக்கின்சுடரே!* நறையூர் நின்ற நம்பீ*

என் எந்தாய்! இந்தðராய்!* அடியேற்கு இறையும் இரங்காயே!      (4.9.2)

 

1330:

பேசுகின்றதுஇதுவே* வையம் ஈரடியாலளந்த*

மூசி வண்டு முரலும்* கண்ணிமுடியீர்*

உம்மைக்காணும் ஆசை என்னும் கடலில் வீழ்ந்து* இங்குஅயர்ந்தோம்*

அயலாரும் ஏசுகின்றது இதுவேகாணும்* இந்தðரீரே!    (4.9.3)

 

1331:

ஆசை வழுவாதேத்தும் *எமக்கிங்கிழுக்காய்த்து*

அடியோர்க்குத் தேசமறிய* உமக்கேஆளாய்த் திரிகின்றோமுக்கு*

காசினொளியில் திகழும் வண்ணம்* காட்டீர் எம்பெருமான்*

வாசிவல்லீர்! இந்தðரீர்!* வாழ்ந்தேபோம்நீரே!   (4.9.4)

 

1332:

தீஎம்பெருமான் நீரெம்பெருமான்* திசையும் இருநிலனுமாய்*

எம்பெருமானாகி நின்றால்* அடியோம் காணோமால்*

தாயெம்பெருமான்* தந்தை தந்தையாவீர்*

அடியேமுக்கே எம்பெருமான் அல்லீரோநீர்* இந்தðரீரே!  (4.9.5)

 

1333:

சொல்லாது ஒழியகில்லேன்* அறிந்தசொல்லில்*

நும்மடியார் எல்லாரோடும்ஒக்க* எண்ணியிருந்தீர் அடியேனை*

நல்லர்அறிவீர் தீயார்அறிவீர்* நமக்குஇவ்வுலகத்து*

எல்லாம்அறிவீர் ஈதேஅறியீர்* இந்தðரீரே! (4.9.6)

 

1334:

மாட்டீரானீர் பணிநீர் கொள்ள* எம்மைப் பணியறியாவிட்டீர்*

இதனைவேறேசொன்னோம்* இந்தðரீரே*

காட்டீரானீர்* நுந்தமடிக்கள் காட்டில்*

உமக்கிந்த நாட்டே வந்துதொண்டரான* நாங்களுய்யோமே   (4.9.7)

 

1335:

முன்னைவண்ணம் பாலின்வண்ணம்* முழுதும் நிலைநின்ற*

பின்னைவண்ணம் கொண்டல்வண்ணம்* வண்ணம்எண்ணுங்கால்*

பொன்னின்வண்ணம் மணியின்வண்ணம்* புரையும்திருமேனி*

இன்னவண்ணம் என்று காட்டீர்* இந்தðரீரே!  (4.9.8)

 

1336:

எந்தைதந்தை தம்மான்என்னென்று* எமரேழ் ஏழளவும்*

வந்து நின்ற தொண்டரோர்க்கே* வாசிவல்லீரால்*

சிந்தைதன்னுள் முந்திநிற்றிர்* சிறிதும் திருமேனி*

இந்தவண்ணம் என்றுகாட்டீர்* இந்தðரீரே (4.9.9)

 

1337:##

ஏரார் பொழில்சூழ்* இந்தðரில் எந்தைபெருமானை*

காரார் புறவில் மங்கைவேந்தன்* கலியனொலிசெய்த*

சீரார் இன்சொல்மாலை* கற்றுத்திரிவார் உலகத்தில்*

ஆரார் அவரே* அமரர்க்கு என்றும் அமரராவாரே   (4.9.10)

 

பத்தாம் திருமொழி – ஆய்ச்சியர்

 

1338:##

ஆய்ச்சியர் அழைப்ப வெண்ணெயுண்டுஒருகால்*

 ஆலிலை வளர்ந்த எம்பெருமான்*

பேய்ச்சியை முலயுண்டு இணைமருதிறுத்துப்*

 பெருநிலமளந்தவன் கோயில்*

காய்த்தநீள் கமுகும் கதலியும் தெங்கும்*

 எங்குமாம் பொழில்களின் நடுவே*

வாய்த்தநீர் பாயும் மண்ணியின் தென்பால்*

 திருவெள்ளியங்குடியதுவே  (4.10.1)

 

1339:

ஆநிரை மேய்த்து அன்று அலைகடலடைத்திட்டு*

 அரக்கர் தம் சிரங்களையுருட்டி*

கார்நிறை மேகம் கலந்தோர்உருவக்*

 கண்ணனார் கருதிய கோயில்*

பூநீரைச் செருந்தி புன்னைமுத்தரும்பி*

 பொதும்பிடை வரிவண்டுமிண்டி*

தேனிரைத்துண்டு அங்குஇன்னிசைமுரலும்*

 திருவெள்ளியங்குடியதுவே      (4.10.2)

 

1340:

கடுவிடமுடைய காளியன் தடத்தைக்*

 கலக்கிமுன் அலக்கழித்து*

அவன்தன் படமிறப்பாய்ந்து பல்மணிசிந்தப்

 பல்நடம் பயின்றவன் கோயில்*

படவரவல்குல் பாவைநல்லார்கள்*

 பயிற்றிய நாடகத் தொலிபோய்*

அடைபுடை தழுவி அண்டம்நின்றதிரும்*

 திருவெள்ளியங்குடியதுவே      (4.10.3)

 

 

1341:

கறவைமுன்காத்துக் கஞ்சனைக்காய்த்த*

 காளமேகத்திருவுருவன்*

பறவைமுன்னுயர்த்து பாற்கடல் துயின்ற*

 பரமனார் பள்ளிகொள் கோயில்*

துறைதுறை தோறும் பொன்மணி சிதறும்*

 தொகுதிரை மண்ணியின் தென்பால்*

செறிமணிமாடக் கொடிகதிரணவும்*

திருவெள்ளியங்குடியதுவே      (4.10.4)

 

1342:

பாரினையுண்டு பாரினையுமிழ்ந்து*

 பாரதம் கையெறிந்து*

ஒருகால் தேரினையூர்ந்து தேரினைத்துரந்த*

 செங்கண்மால் சென்றுறைகோயில்*

ஏர்நிரைவயளுள் வாளைகள்மறுகி*

 ‘எமக்கிடமன்றுஇதுஎன்றெண்ணி*

சீர்மலிபொய்கை சென்றணைகின்ற*

 திருவெள்ளியங்குடியதுவே      (4.10.5)

 

1343:

காற்றிடைப்பூளை கரந்தெனஅரந்தைஉறக்*

கடலரக்கர் தம்சேனை*

கூற்றிடைச் செல்லக் கொடுங்கணை துரந்த*

 கோல வில்லி ராமன்தன் கோயில்*

ஊற்றிடை நின்ற வாழையின் கனிகள்*

 ஊழ்த்துவீழ்ந்தன உண்டு மண்டி*

சேற்றிடைக் கயல்களுள் திகழ்வயல்சூழ்*

 திருவெள்ளியங்குடியதுவே      (4.10.6)

 

1344:

ஒள்ளியகருமம் செய்வனென்றுஉணர்ந்த*

 மாவலி வேள்வியில் புக்கு*

தெள்ளிய குறளாய் மூவடிகொண்டு*

 திக்குறவளர்ந்தவன் கோயில்*

அள்ளியம் பொழில்வாய் இருந்துவாழ்குயில்கள்*

 அரியரி யென்றவை அழைப்ப*

வெள்ளியார் வணங்க விரைந்தருள்செய்வான்*

 திருவெள்ளியங்குடியதுவே      (4.10.7)

 

1345:

முடியுடையமரர்க்கு இடர்செய்யும்*

 அசுரர்தம் பெருமானை*

அன்று அரியாய் மடியிடைவைத்து மார்வைமுன்கீண்ட*

 மாயனார்மன்னிய கோயில்*

படியிடைமாடத்து அடியிடைத் தூணில்*

 பதித்த பன் மணிகளின் ஒளியால்*

விடிபகல் இரவென்று அறிவரிதாய*

 திருவெள்ளியங்குடியதுவே      (4.10.8)

 

1346:

குடிகுடியாகக் கூடிநின்றுஅமரர்*

 குணங்களே பிதற்றி நின்றேத்த*

அடியவர்க்குஅருளி அரவணைத் துயின்ற*

 ஆழியான்அமர்ந்துறை கோயில்*

கடியுடைக் கமலம் அடியிடைமலரக்*

 கரும்பொடு பெருஞ்சென்நெல்அசைய*

வடிவுடைஅன்னம் பெடையொடும் சேரும்*

 வயல்வெள்ளியங்குடியதுவே      (4.10.9)

 

1347:##

பண்டுமுன்ஏனமாகி அன்றுஒருகால்*

 பாரிடந்து எயிற்றினில் கொண்டு*

தென்திரைவருடப் பாற்கடல்துயின்ற*

 திருவெள்ளியங்குடியானை*

வண்டறைசோலை மங்கையர் தலைவன்*

 மானவேல் கலியன் வாயொலிகள்*

கொண்டிவைபாடும் தவமுடையார்கள்*

 ஆள்வர் இக்குரைகடல் உலகே       (4.10.10)