பதினொன்றாம் பத்து
முதல் திருமொழி
1952:##
குன்றம் ஒன்று எடுத்தேந்தி,* மாமழை-
அன்று காத்த அம்மான்,* அரக்கரை-
வென்ற வில்லியார்* வீரமே கொலோ,?*
தென்றல் வந்து* தீ வீசும் என்செய்கேன்! (2) 11.1.1
1953:
காரும் வார்பனிக்* கடலும் அன்னவன்,*
தாரும் மார்வமும்* கண்ட தண்டமோ,*
சோரு மாமுகில்* துளியின் ஊடுவந்து*
ஈர வாடைதான்* ஈரும் என்னையே! 11.1.2
1954:
சங்கும் மாமையும்* தளரும் மேனிமேல்,*
திங்கள் வெங்கதிர்* சீறு மெஞ்செய்கேன்,*
பொங்கு வெண்திரைப்* புணரி வண்ணனார்,*
கொங்கலார்ந்ததார்* கூவும் என்னையே! 11.1.3
1955:
அங்கோர் ஆய்க்குலத்துள்* வளர்ந்து சென்று,*
அங்கோர்* தாயுருவாகி வந்தவள்,*
கொங்கை நஞ்சுண்ட* கோயின்மை கொலோ,*
திங்கள் வெங்கதிர்* சீறுகின்றதே 11.1.4
1956:
அங்கோர் ஆளரியாய்,* அவுணனைப்-
பங்கமா* இருகூறு செய்தவன்,*
மங்குல் மாமதி* வாங்கவே கொலோ*
பொங்கு மாகடல்* புலம்பு கின்றதே! 11.1.5
1957:
சென்றுவார்* சிலை வளைத்து* இலங்கையை,-
வென்ற வில்லியார்* வீரமே கொலோ,*
முன்றில் பெண்ணைமேல்* முளரிக் கூட்டகத்து,*
அன்றிலின் குரல்* அடரும் என்னையே! 11.1.6
1958:
பூவை வண்ணனார்* புள்ளின் மேல்வர,*
மேவி நின்றுநான்* கண்ட தண்டமோ,*
வீவிலைங்கணை* வில்லி அம்புகோத்து,*
ஆவியே இலக்காக எய்வதே! 11.1.7
1959:
மால் இனந்துழாய்* வரும் என் நெஞ்சகம்,*
மாலின் அந்துழாய்* வந்து என்னுள்புக,*
கோல வாடையும்* கொண்டு வந்ததுஓர்*
ஆலி வந்ததால்* அரிது காவலே! 11.1.8
1960:
கொண்டை ஒண்கணும் துயிலும்,* என்நிறம்-
பண்டு பண்டு போலொக்கும்,*
மிக்கசீர் தொண்டர் இட்ட* பூந்துளவின் வாசமே,*
வண்டு கொண்டு வந்து* ஊதுமாகிலே 11.1.9
1961:##
அன்று பாரதத்து* ஐவர் தூதனாய்,*
சென்ற மாயனைச்* செங்கண் மாலினை,*
மன்றிலார் புகழ்* மங்கை வாள்கலிகன்றி,*
சொல்வல்லார்க்கு* அல்லல் இல்லையே (2) 11.1.10
இரண்டாம் திருமொழி
1962:
குன்றம் எடுத்து மழைதடுத்து* இளையாரொடும்*
மன்றில் குரவை பிணைந்த மால்* என்னை மால்செய்தான்,*
முன்றில் தனிநின்ற பெண்ணை மேல்* கிடந்தீர்கின்ற*
அன்றிலின் கூட்டைப்* பிரிக்ககிற்பவர் ஆர்கொலோ! (2) 11.2.1
1963:
பூங்குருந்து ஒசித்து ஆனை காய்ந்து* அரிமாச்செகுத்து,*
ஆங்கு வேழத்தின் கொம்பு கொண்டு* வன் பேய்முலை-
வாங்கி உண்ட,* அவ்வாயன் நிற்க* இவ்வாயன் வாய்,*
ஏங்கு வேய்ங்குழல்* என்னோடாடும் இளமையே! 11.2.2
1964:
மல்லோடு கஞ்சனும்* துஞ்ச வென்ற மணிவண்ணன்,*
அல்லி மலர்த்தண்துழாய்* நினைந்திருந்தேனையே,*
எல்லியில் மாருதம்* வந்தடும் அதுவன்றியும்,*
கொல்லை வல்லேற்றின் மணியும்* கோயின்மை செய்யுமே! 11.2.3
1965:
பொருந்து மாமரம்* ஏழும் எய்த புனிதனார்*
திருந்து சேவடி* என்மனத்து நினைதொறும்,*
கருந்தண் மாகடல்* கங்குலார்க்கும் அதுவன்றியும்,*
வருந்த வாடை வரும்* இதற்கினி என்செய்கேன்! 11.2.4
1966:
அன்னை முனிவதும்* அன்றிலின் குரல் ஈர்வதும்,*
மன்னு மறிகடல் ஆர்ப்பதும்* வளை சோர்வதும்*
பொன்னங் கலையல்குல்* அன்ன மென்னடைப் பூங்குழல்,*
பின்னை மணாளர்* திறத்தமாயின பின்னையே 11.2.5
1967:
ஆழியும் சங்கும் உடைய* நங்கள் அடிகள்தாம்,*
பாழிமையான கனவில்* நம்மைப் பகர்வித்தார்,*
தோழியும் நானும் ஒழிய* வையம் துயின்றது,*
கோழியும் கூகின்றதில்லைக்* கூரிருள் ஆயிற்றே! 11.2.6
1968:
காமன் தனக்கு முறையல்லேன்* கடல் வண்ணனார்,*
மாமணவாளர்* எனக்குத் தானும் மகன்சொல்லில்,*
யாமங்கள் தோறும் எரி வீசும்* என்னிளங் கொங்கைகள்,*
மாமணி வண்ணர்* திறத்த வாய் வளர்கின்றவே! 11.2.7
1969:
மஞ்சுறு மாலிருஞ் சோலை* நின்ற மணாளனார்,*
நெஞ்சம் நிறைகொண்டு போயினார்* நினைகின்றிலர்,*
வெஞ்சுடர் போய் விடியாமல்* எவ்விடம் புக்கதோ,*
நஞ்சு உடலம் துயின்றால்* நமக்கினி நல்லதே! 11.2.8
1970:
காமன் கணைக்கு ஓர்இலக்கமாய்* நலத்தின்மிகு,*
பூமரு கோல* நம் பெண்மை சிந்தித்திராது போய்*
தூமலர் நீர்கொடு* தோழி! நாம் தொழுதேத்தினால்*
கார்முகில் வண்ணரைக்* கண்களால் காணலாம் கொலோ! 11.2.9
1971:##
வென்றி விடையுடன்* ஏழடர்த்த அடிகளை,*
மன்றில் மலிபுகழ்* மங்கைமன் கலிகன்றிசொல்,*
ஒன்று நின்ற ஒன்பதும்* உரைப்பவர் தங்கள்மேல்*
என்றும் நில்லா வினை* ஒன்றும் சொல்லில் உலகிலே (2) 11.2.10
மூன்றாம் திருமொழி
1972:
மன்னிலங்கு பாரதத்துத்* தேரூர்ந்து,* மாவலியைப்-
பொன்னிலங்கு திண்விலங்கில் வைத்துப்* பொருகடல்சூழ்*
தென்னிலங்கை ஈடழித்த* தேவர்க்கு இதுகாணீர்*
என்னிலங்கு சங்கோடு* எழில் தோற்றிருந்தேனே! (2) 11.3.1
1973:
இருந்தான் என்னுள்ளத்து* இறைவன் கறைசேர்*
பருந்தாள் களிற்றுக்கு* அருள்செய்த செங்கண்*
பெருந்தோள் நெடுமாலைப்* பேர்பாடி ஆட*
வருந்தாது என் கொங்கை* ஒளிமன்னும் அன்னே! 11.3.2
1974:
அன்னே! இவரை* அறிவன் மறைநான்கும்*
முன்னே உரைத்த* முனிவர் இவர்வந்து*
பொன்னேய் வளைகவர்ந்து* போகார் மனம்புகுந்து*
என்னே இவரெண்ணும்* எண்ணம் அறியோமே! 11.3.3
1975:
அறியோமே என்று* உரைக்கலாமே எமக்கு,*
வெறியார் பொழில்சூழ்* வியன்குடந்தை மேவி,*
சிறியான் ஓர் பிள்ளையாய்* மெள்ள நடந்திட்டு*
உறியார் நறுவெண்ணெய்* உண்டுகந்தார் தம்மையே? 11.3.4
1976:
தம்மையே நாளும்* வணங்கித் தொழுவார்க்கு,*
தம்மையே ஒக்க* அருள்செய்வர் ஆதலால்,*
தம்மையே நாளும்* வணங்கித் தொழுதிறைஞ்சி,*
தம்மையே பற்றா* மனத்தென்றும் வைத்தோமே. 11.3.5
1977:
வைத்தார் அடியார்* மனத்தினில் வைத்து,* இன்பம்-
உற்றார் ஒளிவிசும்பில்* ஓரடிவைத்து,* ஓரடிக்கும்-
எய்த்தாது மண்ணென்று* இமையோர் தொழுதிறைஞ்சி,*
கைத்தாமரை குவிக்கும்* கண்ணன் என் கண்ணனையே 11.3.6
1978:
கண்ணன் மனத்துள்ளே* நிற்கவும் கைவளைகள்*
என்னோ கழன்ற?* இவையென்ன மாயங்கள்?*
பெண்ணானோம் பெண்மையோம் நிற்க,* அவன்மேய,-
அண்ணல் மலையும்* அரங்கமும் பாடோமே. 11.3.7
1979:
பாடோமே* எந்தை பெருமானை?* பாடிநின்று ஆடோமே*
ஆயிரம் பேரானை?* பேர்நினைந்து சூடோமே*
சூடும் துழாயலங்கல்? சூடி,* நாம் கூடோமே கூடக்*
குறிப்பாகில்? நன்னெஞ்சே! 11.3.8
1980:
நன்னெஞ்சே! நம்பெருமான்* நாளும் இனிதமரும்,*
அன்னம்சேர் கானல்* அணியாலி கைதொழுது,*
முன்னம்சேர் வல்வினைகள் போக* முகில்வண்ணன்,*
பொன்னம்சேர் சேவடிமேல்* போதணியப் பெற்றோமே! 11.3.9
1981:##
பெற்றாரார்* ஆயிரம் பேரானைப்,* பேர்பாடப்-
பெற்றான்* கலியன் ஒலிசெய் தமிழ்மாலை,*
கற்றார் ஓ! முற்றுலகு ஆள்வர்* இவைகேட்கல்-
உற்றார்க்கு,* உறுதுயர் இல்லை உலகத்தே (2) 11.3.10
நான்காம் திருமொழி
1982:
நிலையிடம் எங்கும் இன்றி நெடுவெள்ளம் உம்பர்* வளநாடு மூட இமையோர்*
தலையிட மற்றெமக்கொர் சரணில்லை என்ன* அரணாவன் என்னும் அருளால்*
அலைகடல் நீர்க்குழம்ப அகடாட ஓடி* அகல் வானுரிஞ்ச,* முதுகில்-
மலைகளை மீது கொண்டு வருமீனை மாலை* மறவாது இறைஞ்சு என் மனனே! (2)
1983:
செருமிகு வாளெயிற்ற அரவொன்று சுற்றித்* திசைமண்ணும் விண்ணும் உடனே*
வெருவர வெள்ளை வெள்ளம் முழுதும் குழம்ப* இமையோர்கள் நின்று கடைய,*
பருவரை ஒன்று நின்று முதுகிற் பரந்து* சுழலக் கிடந்து துயிலும்,*
அருவரை அன்ன தன்மை அடலாமையான* திருமால் நமக்கு ஓர் அரணே.
1984:
தீதறு திங்கள் பொங்கு சுடரும்பர் உம்பர்* உலகேழினோடும் உடனே,*
மாதிர மண்சுமந்து வடகுன்றும் நின்ற* மலையாறும் ஏழு கடலும்*
பாதமர் சூழ்குளம்பின கமண்ட லத்தின்* ஒருபால் ஒடுங்க வளர்சேர்,*
ஆதிமுன் ஏனமாகி அரணாய மூர்த்தி* அதுநம்மை ஆளும் அரசே. 11.4.3.
1985:
தளையவிழ் கோதை மாலை இருபால் தயங்க* எரிகான்றிரண்டு தறுகண்,*
அளவெழ வெம்மை மிக்க அரியாகி அன்று* பரியோன் சினங்கள் அவிழ,*
வளை உகிறாளி மொய்ம்பில் மறவோனதாகம்* மதியாது சென்று ஒருகிரால்*
பிளவெழ விட்ட குட்டம் அதுவையமூடு* பெருநீரின் மும்மை பெரிதே. 11.4.4.
1986:
வெந்திறல் வாணன் வேள்வி இடமெய்தி* அங்கோர் குறளாகி மெய்ம்மை உணர*
செந்தொழில் வேத நாவின் முனியாகி வையம்* அடிமூன்று இரந்து பெறினும்,*
மந்திர மீது போகி மதிநின்று இறைஞ்ச* மலரோன் வணங்க வளர்சேர்,*
அந்தரம் ஏழினூடு செலவுய்த்த பாதம்* அது நம்மை ஆளும் அரசே. 11.4.5.
1987:
இருநில மன்னர் தம்மை இருநாலும் எட்டும்* ஒருநாலும் ஒன்றும் உடனே,*
செருநுதலூடு போகி அவராவி மங்க* மழுவாளில் வென்ற திறலோன்,*
பெருநில மங்கை மன்னர் மலர்மங்கை நாதர்* புலமங்கை கேள்வர் புகழ்சேர்,*
பெருநிலம் உண்டு உமிழ்ந்த பெருவாயராகி* அவர் நம்மை ஆள்வர் பெரிதே.
1988:
இலைமலி பள்ளி எய்தி இதுமாயம் என்ன* இனமாய மான்பின் எழில்சேர்*
அலைமலி வேல் கணாளை அகல்விப்பதற்கு* ஓருருவாய மானை அமையா,*
கொலைமலி எய்துவித்த கொடியோன் இலங்கை* பொடியாக வென்றி அமருள்,*
சிலைமலி செஞ்சரங்கள் செலவுய்த்த நங்கள்* திருமால் நமக்கோர் அரணே.
1989:
முன் உலகங்கள் ஏழும் இருள்மண்டி உண்ண* முதலோடு வீடும் அறியாது,*
என்னிது? வந்தது என்ன இமையோர் திகைப்ப* எழில்வேதம் இன்றி மறைய,*
பின்னையும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கி* இருள்தீர்ந்து இவ்வையம் மகிழ,*
அன்னமதாய் இருந்து அங்கு அறநூல் உரைத்த* அது நம்மை ஆளும் அரசே.
1990:
துணைநிலை மற்றெமக்கொர் உளது என்றிராது* தொழுமின்கள் தொண்டர்! தொலைய*
உணமுலை முன்கொடுத்த உரவோளது ஆவி* உகவுண்டு வெண்ணெய் மருவி,*
பணமுலை ஆயர் மாதர் உரலோடு கட்ட* அதேனாடும் ஓடி அடல்சேர்,*
இணை மருதிற்று வீழ நடைகற்ற தெற்றல்* வினை பற்றறுக்கும் விதியே. 11.4.9.
1991:##
கொலைகெழு செம்முகத்த களிறொன்று கொன்று* கொடியோன் இலங்கை பொடியா*
சிலைகெழு செஞ்சரங்கள் செலவுய்த்த நங்கள்* திருமாலை, வேலை புடைசூழ்*
கலிகெழு மாட வீதி வயல்மங்கை மன்னு* கலிகன்றி சொன்ன பனுவல்,*
ஒலிகெழு பாடல் பாடி உழல்கின்ற தொண்டர்* அவராள்வர் உம்பர் உலகே.
ஐந்தாம் திருமொழி
1992:##
மானமரு மென்னோக்கி* வைதேவியின் துணையா,*
கானமரும் கல்லதர்போய்க்* காடுறைந்தான் காணேடீ*
கானமரும் கல்லதர்ப்போய்க்* காடுறைந்த பொன்னடிகள்,*
வானவர்தம் சென்னி* மலர்க்கண்டாய் சாழலே (2) 11.5.1
1993:
தந்தை தளைகழலத்* தோன்றிப்போய்,* ஆய்ப்பாடி-
நந்தன் குலமதலையாய்* வளர்ந்தான் காணேடீ,*
நந்தன் குலமதலையாய்* வளர்ந்தான் நான்முகற்குத்*
தந்தைகாண் எந்தை* பெருமான் காண் சாழலே 11.5.2
1994:
ஆழ்கடல்சூழ் வையகத்தார்* ஏசப்போய்,* ஆய்ப்பாடித்-
தாழ்குழலார் வைத்த* தயிருண்டான் காணேடீ,*
தாழ்குழலார் வைத்த* தயிருண்ட பொன்வயிறு,*இவ்-
வேழுலகும் உண்டும்* இடமுடைத்தால் சாழலே 11.5.3
1995:
அறியாதார்க்கு* ஆனாயன் ஆகிப்போய்,* ஆய்ப்பாடி-
உறியார் நறுவெண்ணெய்* உண்டுகந்தான் காணேடீ*
உறியார் நறுவெண்ணெய்* உண்டுகந்த பொன்வயிற்றுக்கு,*
எறிநீர் உலகனைத்தும்* எய்தாதால் சாழலே 11.5.4
1996:
வண்ணக் கருங்குழல்* ஆய்ச்சியால் மொத்துண்டு,*
கண்ணிக் குறுங்கயிற்றால்* கட்டுண்டான் காணேடீ,*
கண்ணிக் குறுங்கயிற்றால்* கட்டுண்டான் ஆகிலும்,*
எண்ணற்கு அரியன்* இமையோர்க்கும் சாழலே 11.5.5
1997:
கன்றப் பறைகறங்கக்* கண்டவர்தம் கண்களிப்ப,*
மன்றில் மரக்கால்* கூத்தாடினான் காணேடீ,*
மன்றில் மரக்கால்* கூத்து ஆடினான் ஆகிலும்,*
என்றும் அரியன்* இமையோர்க்கும் சாழலே 11.5.6
1998:
கோதைவேல் ஐவர்க்காய்* மண்ணகலம் கூறிடுவான்,*
தூதனாய் மன்னவனால்* சொல்லுண்டான் காணேடீ,*
தூதனாய் மன்னவனால்* சொல்லுண்டான் ஆகிலும்,*
ஓதநீர் வையகம்* முனுண்டு உமிழ்ந்தான் சாழலே 11.5.7
1999:
பார்மன்னர் மங்கப்* படைதொட்டு வெஞ்சமத்து,*
தேர்மன்னர்க்காய்* அன்று தேரூர்ந்தான் காணேடீ,*
தேர்மன்னர்க்காய்* அன்று தேரூர்ந்தான் ஆகிலும்,*
தார்மன்னர் தங்கள்* தலைமேலான் சாழலே 11.5.8
2000:##
கண்டார் இரங்கக்* கழியக் குறளுருவாய்,*
வண்தாரான் வேள்வியில்* மண்இரந்தான் காணேடீ,*
வண்தாரான் வேள்வியில்* மண்இரந்தான் ஆகிலும்*
விண்டேழ் உலகுக்கும்* மிக்கான் காண் சாழலே (2) 11.5.9
2001:##
கள்ளத்தால் மாவலியை* மூவடிமண் கொண்டளந்தான்,*
வெள்ளத்தான் வேங்கடத்தான்* என்பரால் காணேடீ,*
வெள்ளத்தான்* வேங்கடத்தானேலும்,* கலிகன்றி-
உள்ளத்தின் உள்ளே* உளன் கண்டாய் சாழலே (2) 11.5.10
ஆறாம் திருமொழி
2002:##
மைந்நின்ற கருங்கடல் வாயுலகின்றி* வானவரும் யாமுமெல்லாம்,*
நெய்ந்நின்ற சக்கரத்தன் திருவயிற்றில்* நெடுங்காலம் கிடந்தது ஓரீர்,*
எந்நன்றி செய்தாரா* ஏதிலோர் தெய்வத்தை ஏத்துகின்றீர்?*
செய்ந்நன்றி குன்றேன்மின்* தொண்டர்காள்! அண்டனையே ஏத்தீர்களே (2)
2003:
நில்லாத பெருவெள்ளம்* நெடுவிசும்பின் மீதோடி நிமிர்ந்த காலம்,*
மல்லாண்ட தடக்கையால்* பகிரண்டம் அகப்படுத்த காலத்து,* அன்று-
எல்லாரும் அறியாரோ* எம்பெருமான் உண்டு உமிழ்ந்த எச்சில்தேவர்,*
அல்லாதார் தாம்உளரே?* அவனருளே உலகாவது அறியீர்களே? 11.6.2
2004:
நெற்றிமேல் கண்ணானும்* நிறைமொழிவாய் நான்முகனும் நீண்டநால்வாய்,*
ஒற்றைக்கை வெண்பகட்டின்* ஒருவனையும் உள்ளிட்ட அமரரோடும்,*
வெற்றிப்போர்க் கடலரையன்* விழுங்காமல் தான் விழுங்கி உய்யக்கொண்ட,*
கொற்றப் போராழியான்* குணம்பரவாச் சிறுதொண்டர் கொடியவாறே! 11.6.3
2005:
பனிப்பரவைத் திரைததும்பப்* பாரெல்லாம் நெடுங்கடலே ஆனகாலம்,*
இனிக் களைகணிவர்க்கு இல்லை என்று* உலகம் ஏழினையும் ஊழில் வாங்கி*
முனித்தலைவன் முழங்கொளிசேர்* திருவயிற்றில் வைத்து உம்மை உய்யக்கொண்ட*
கனிகளவத் திருவுருவத்து ஒருவனையே* கழல் தொழுமா கல்லீர்களே 11.6.4
2006:
பாராரும் காணாமே* பரவைமா நெடுங்கடலே ஆனகாலம்,*
ஆரானும் அவனுடைய திருவயிற்றில்* நெடுங்காலம் கிடந்தது,*உள்ளத்-
தோராத உணர்விலீர்! உணருதிரேல்* உலகளந்த உம்பர் கோமான்,*
பேராளன் பேரான* பேர்கள் ஆயிரங்களுமே பேசீர்களே 11.6.5
2007:
பேயிருக்கும் நெடுவெள்ளம்* பெருவிசும்பின் மீதோடிப் பெருகுகாலம்,*
தாயிருக்கும் வண்ணமே* உம்மைத்தன் வயிற்றிருத்தி உய்யக்கொண்டான்,*
போயிருக்க மற்றிங்கோர்* புதுத்தெய்வம் கொண்டாடும் தொண்டீர்,* பெற்ற-
தாயிருக்க மணைவெந்நீர் ஆட்டுதிரோ* மாட்டாத தகவற்றீரே! 11.6.6
2008:
மண்ணாடும் விண்ணாடும்* வானவரும் தானவரும் மற்றுமெல்லாம்*
உண்ணாத பெருவெள்ளம்* உண்ணாமல் தான்விழுங்கி உய்யக்கொண்ட,*
கண்ணாளன் கண்ணமங்கை நகராளன்* கழல்சூடி, அவனை உள்ளத்து*
எண்ணாத மானிடத்தை* எண்ணாத போதெல்லாம் இனியவாறே 11.6.7
2009:
மறம்கிளர்ந்து கருங்கடல் நீர்* உரம்துரந்து பரந்தேறி அண்டத்தப்பால்,*
புறம்கிளர்ந்த காலத்துப்* பொன்னுலகம் ஏழினையும் ஊழில்வாங்கி,*
அறம்கிளர்ந்த திருவயிற்றின்* அகம்படியில் வைத்து உம்மை உய்யக்கொண்ட,*
நிறம்கிளர்ந்த கருஞ்சோதி* நெடுந்தகையை நினையாதார் நீசர்தாமே. 11.6.8
2010:
அண்டத்தின் முகடழுந்த* அலைமுந்நீர் திரைததும்ப ஆ! ஆ! என்று,*
தொண்டர்க்கும் அமரர்க்கும்* முனிவர்க்கும் தானருளி,* உலகமேழும்-
உண்டொத்த திருவயிற்றின்* அகம்படியில் வைத்து உம்மை உய்யக்கொண்ட,*
கொண்டற்கை மணிவண்ணன் *தண்குடந்தை நகர் பாடி ஆடீர்களே 11.6.9
2011:##
தேவரையும் அசுரரையும்* திசைகளையும் கடல்களையும் மற்றும் முற்றும்,*
யாவரையும் ஒழியாமே* எம்பெருமான் உண்டுமிழ்ந்தது அறிந்துசொன்ன,*
காவளரும் பொழில்மங்கைக்* கலிகன்றி ஒலிமாலை கற்று வல்லார்,*
பூவளரும் திருமகளால் அருள்பெற்றுப்* பொன்னுலகில் பொலிவர் தாமே (2)
ஏழாம் திருமொழி
2012:##
நீள்நாகம் சுற்றி* நெடுவரைநட்டு,* ஆழ்கடலைப்-
பேணான் கடைந்து* அமுதம் கொண்டுகந்த பெம்மானை,*
பூணார மார்வனைப்* புள்ðரும் பொன்மலையை,*
காணாதார் கண்என்றும்* கண்ணல்ல கண்டாமே (2) 11.7.1
2013:
நீள்வான் குறளுருவாய்* நின்றிரந்து மாவலிமண்,*
தாளால் அளவிட்ட* தக்கணைக்கு மிக்கானை,*
தோளாத மாமணியைத்* தொண்டர்க்கு இனியானை,*
கேளாச் செவிகள்* செவியல்ல கேட்டாமே 11.7.2
2014:
தூயானைத்* தூய மறையானை,* தென்னாலி மேயானை*
மேவாள் உயிருண்டு அமுதுண்ட வாயானை*
மாலை வணங்கி* அவன்பெருமை பேசாதார்*
பேச்சென்றும்* பேச்சல்ல கேட்டாமே 11.7.3
2015:
கூடா இரணியனைக்* கூருகிரால் மார்விடந்த,*
ஓடா அடலரியை* உம்பரார் கோமனை,*
தோடார் நறுந்துழாய் மார்வனை,* ஆர்வத்தால்-
பாடாதார் பாட்டென்றும்* பாட்டல்ல கேட்டாமே 11.7.4
2016:
மையார் கடலும்* மணிவரையும் மாமுகிலும்,*
கொய்யார் குவளையும் காயாவும்* போன்றிருண்ட மெய்யானை*
மெய்ய மலையானைச்* சங்கேந்தும் கையானை*
கைதொழா* கையல்ல கண்டாமே 11.7.5
2017:
கள்ளார் துழாயும்* கணவலரும் கூவிளையும்,*
முள்ளார் முளரியும்* ஆம்பலுமுன் கண்டக்கால்,*
புள்ளாய் ஓர் ஏனமாய்ப்* புக்கிடந்தான் பொன்னடிக்கென்று,*
உள்ளாதார் உள்ளத்தை* உள்ளமாக் கொள்ளோமே 11.7.6
2018:
கனையார் கடலும்* கருவிளையும் காயாவும்*
அனையானை,* அன்பினால் ஆர்வத்தால்,* என்றும்-
சுனையார் மலரிட்டுத்* தொண்டராய் நின்று,*
நினையாதார் நெஞ்சென்றும்* நெஞ்சல்ல கண்டாமே 11.7.7
2019:
வெறியார் கருங்கூந்தல்* ஆய்ச்சியர் வைத்த*
உறியார் நறுவெண்ணெய்* தானுகந்து உண்ட சிறியானை*
செங்கண் நெடியானைச்* சிந்தித்து*
அறியாதார்* என்றும் அறியாதார் கண்டாமே 11.7.8
2020:##
தேனோடு வண்டாலும்* திருமாலிருஞ்சோலை,*
தானிடமாக் கொண்டான்* தடமலர்க் கண்ணிக்காய்,*
ஆன்விடை ஏழன்று அடர்த்தாற்கு* ஆளானார் அல்லாதார்,*
மானிடவர் அல்லர் என்று* என்மனத்தே வைத்தேனே (2) 11.7.9
2021:##
மெய்ந்நின்ற* பாவம் அகல,* திருமாலைக்-
கைந்நின்ற ஆழியான்* சூழும் கழல்சூடி,*
கைந்நின்ற வேற்கைக்* கலியன் ஒலிமாலை,*
ஐயொன்றும் ஐந்தும்* இவைபாடி ஆடுமினே (2) 11.7.10
எட்டாம் திருமொழி
2022:##
மாற்றமுள* ஆகிலும் சொல்லுவன்,* மக்கள்-
தோற்றக் குழி* தோற்றுவிப்பாய் கொல்என்று இன்னம்,*
ஆற்றங்கரை வாழ் மரம்போல்* அஞ்சுகின்றேன்,*
நாற்றச் சுவை* ஊறு ஒலியாகிய நம்பீ! (2) 11.8.1
2023:
சீற்றமுள* ஆகிலும் செப்புவன்,* மக்கள்-
தோற்றக்குழி* தோற்றுவிப்பாய் கொல்என்றஞ்சி,*
காற்றத்து இடைப்பட்ட* கலவர் மனம்போல,*
ஆற்றத்துளங்கா நிற்பன்* ஆழிவலவா! 11.8.2
2024:
தூங்கார் பிறவிக்கள்* இன்னம் புகப்பெய்து,*
வாங்காயென்று சிந்தித்து* நான்அதற்கு அஞ்சி,*
பாம்போடு ஒருகூரையிலே* பயின்றாற்போல்,*
தாங்காது உள்ளம் தள்ளும்* என் தாமரைக் கண்ணா! 11.8.3
2025:
உருவார் பிறவிக்கள்* இன்னம் புகப்பெய்து,*
திரிவாயென்று சிந்தித்தி* என்றுஅதற்கு அஞ்சி,*
இருபாடு எரிகொள்ளியின்* உள் எறும்பே போல்,*
உருகாநிற்கும்* என்னுள்ளம் ஊழி முதல்வா! 11.8.4
2026:
கொள்ளக் குறையாத* இடும்பைக் குழியில்,*
தள்ளி புகப்பெய்தி கொல்* என்றுஅதற்கு அஞ்சி,*
வெள்ளத்து இடைப்பட்ட* நரியினம் போலே,*
உள்ளம் துளங்கா நிற்பன்* ஊழி முதல்வா! 11.8.5
2027:
படைநின்ற* பைந்தாமரையோடு* அணிநீலம்-
மடைநின்று அலரும்* வயலாலி மணாளா,*
இடையன் எறிந்த மரமே* ஒத்திராமே,*
அடைய அருளாய்* எனக்கு உன்தன் அருளே 11.8.6
2028:##
வேம்பின்புழு* வேம்பின்றி உண்ணாது,* அடியேன்-
நான்பின்னும்* உன்சேவடியன்றி நயவேன்,*
தேம்பல் இளந்திங்கள்* சிறைவிடுத்து,* ஐவாய்ப்-
பாம்பின் அணைப்* பள்ளி கொண்டாய் பரஞ்சோதீ! (2) 11.8.7
2029:##
அணியார் பொழில்சூழ்* அரங்க நகரப்பா,*
துணியேன் இனி* நின் அருளல்லது எனக்கு,*
மணியே! மணிமாணிக்கமே!* மதுசூதா,*
பணியாய் எனக்கு உய்யும்வகை,* பரஞ்சோதீ! (2) 11.8.8
2030:##
நந்தா நரகத்து அழுந்தா வகை,* நாளும்-
எந்தாய்! தொண்டரானவர்க்கு* இன்னருள் செய்வாய்,*
சந்தோகா! தலைவனே!* தாமரைக் கண்ணா,*
அந்தோ! அடியேற்கு* அருளாய் உன்னருளே (2) 11.8.9
2031:##
குன்றம் எடுத்து* ஆநிரை காத்தவன் தன்னை,*
மன்றில் புகழ்* மங்கைமன் கலிகன்றி சொல்,*
ஒன்று நின்ற ஒன்பதும்* வல்லவர் தம்மேல்,*
என்றும் வினையாயின* சாரகில்லாவே (2) 11.8.10
திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்