பெரிய திருமொழி – பத்தாம் பத்து


பத்தாம் பத்து

முதல் திருமொழி

 

1848:##

ஒருநல் சுற்றம்* எனக்குயிர் ஒண்பொருள்*

வருநல் தொல்கதி* ஆகிய மைந்தனை*

நெருநல் கண்டது* நீர்மலை இன்றுபோய்*

கருநெல் சூழ்* கண்ண மங்கையுள் காண்டுமே (2) 10.1.1

 

1849:##

பொன்னை மாமணியை* அணி ஆர்ந்ததோர்-

மின்னை* வேங்கடத்து உச்சியில் கண்டுபோய்*

என்னை ஆளுடை ஈசனை* எம்பிரான்-

தன்னை* யாம் சென்று காண்டும்* தண்காவிலே. 10.1.2

 

1850:

வேலை ஆலிலைப்* பள்ளி விரும்பிய*

பாலை ஆரமுதத்தினைப்* பைந்துழாய்*

மாலை ஆலியில்* கண்டு மகிழ்ந்து போய்*

ஞால முன்னியைக் காண்டும்* நாங்கூரிலே   10.1.3

 

1851:

துளக்கமில் சுடரை,* அவுணனுடல்*

பிளக்கும் மைந்தனைப்* பேரில் வணங்கிப்போய்*

அளப்பில் ஆரமுதை* அமரர்க்கு அருள்-

விளக்கினை* சென்று வெள்ளறைக் காண்டுமே 10.1.4

 

1852:

சுடலையில்* சுடு நீறன் அமர்ந்தது ஓர்*

நடலை தீர்த்தவனை* நறையூர் கண்டு,* என்-

உடலையுள் புகுந்து* உள்ளம் உருக்கியுண்*

விடலையைச் சென்று காண்டும்* மெய்யத்துளே 10.1.5

 

1853:

வானை ஆரமுதம்* தந்த வள்ளலை*

தேனை நீள்வயல்* சேறையில் கண்டுபோய்*

ஆனை வாட்டி அருளும்* அமரர்தம்-

கோனை,* யாம் குடந்தைச்சென்று காண்டுமே    10.1.6

 

1854:

கூந்தலார் மகிழ்* கோவலனாய்* வெண்ணெய்-

மாந்தழுந்தையில்* கண்டு மகிழ்ந்துபோய்*

பாந்தள் பாழியில்* பள்ளி விரும்பிய*

வேந்தனைச் சென்று காண்டும்* வெஃகாவுளே 10.1.7

 

1855:

பத்தர் ஆவியைப்* பால்மதியை,* அணித்-

தொத்தை* மாலிருஞ் சோலைத் தொழுதுபோய்*

முத்தினை மணியை* மணி மாணிக்க-

வித்தினை,* சென்று விண்ணகர் காண்டுமே    10.1.8

  

1856:

கம்ப மாகளிறு* அஞ்சிக் கலங்க,* ஓர்-

கொம்பு கொண்ட* குரைகழல் கூத்தனை*

கொம்புலாம் பொழில்* கோட்டியூர்க் கண்டுபோய்*

நம்பனைச் சென்று கண்டும்* நாவாயுளே    10.1.9

 

1857:##

பெற்றமாளியைப்* பேரில் மணாளனை*

கற்ற நூல்* கலிகன்றி உரைசெய்த*

சொல்திறமிவை* சொல்லிய தொண்டர்கட்கு*

அற்ற மில்லை* அண்டம் அவர்க்கு ஆட்சியே    10.1.10

 

இரண்டாம் திருமொழி

 

1858:##

இரக்கமின்றி எங்கோன் செய்த தீமை* இம்மையே எமக்கு எய்திற்றுக் காணீர்*

பரக்கயாம் இன்று உரைத்தென் இராவணன் பட்டனன்* இனி யாவர்க்கு உரைக்கோம்*

குரக்கு நாயகர்காள்! இளங்கோவே* கோல வல்விலி இராம பிரானே*

அரக்கர் ஆடழைப்பார் இல்லை* நாங்கள் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ.   

 

1859:

பத்து நீள்முடியும் அவற்றிரட்டிப்* பாழித் தோளும் படைத்தவன் செல்வம்,*

சித்தம் மங்கையர் பால்வைத்துக் கெட்டான்* செய்வது ஒன்றறியா அடியோங்கள்*

ஒத்த தோள் இரண்டும் ஒரு முடியும்* ஒருவர் தம் திறத்தோம் அன்றி வாழ்ந்தோம்*

அத்த! எம் பெருமான்! எம்மைக் கொல்லேல்* அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ    

 

1860:

தண்ட காரணியம் புகுந்து* அன்று தையலைத் தகவிலி எங்கோமான்*

கொண்டு போந்து கெட்டான்* எமக்கு இங்கோர் குற்றமில்லை கொல்லேல் குலவேந்தே*

பெண்டிரால் கெடும் இக்குடி தன்னைப்* பேசுகின்றதென்? தாசரதீ* ,உன்-

அண்ட வாணர் உகப்பதே செய்தாய்* அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ    

 

1861:

எஞ்சலில் இலங்கைக்கிறை* எங்கோன்தன்னை முன்பணிந்து எங்கள்கண் முகப்பே*

நஞ்சுதான் அரக்கர் குடிக்கென்று* நங்கையை அவன் தம்பியே சொன்னான்*

விஞ்சை வானவர் வேண்டிற்றே பட்டோம்* வேரிவார் பொழில் மாமயிலன்ன*

அஞ்சிலோதியைக் கொண்டு நடமின்* அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ    

 

1862:

செம்பொன் நீள்முடி எங்கள் இராவணன்* சீதை என்பதோர் தெய்வம் கொணர்ந்து*

வம்புலாம் கடி காவில் சிறையா வைத்ததே* குற்றம் ஆயிற்றுக் காணீர்*

கும்பேனாடு நிகும்பனும் பட்டான்* கூற்றம் மானிடமாய் வந்து தோன்றி*

அம்பினால் எம்மைக் கொன்றிடுகின்றது* அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ    

 

1863:

ஓத மாகடலைக் கடந்தேறி* உயர்க்கொள் மாக் கடிகாவை இறுத்து*

காதல் மக்களும் சுற்றமும் கொன்று* கடி இலங்கை மலங்க எரித்துத்*

தூது வந்த குரங்குக்கே* உங்கள் தோன்றல் தேவியை விட்டு கொடாதே*

ஆதர் நின்று படுகின்றது அந்தோ!* அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ    

 

1864:

தாழமின்றி முந்நீர் அஞ்ஞான்று* தகைந்ததே கண்டு வஞ்சிநுண் மருங்குல்*

மாழை மான்மட நோக்கியை விட்டு* வாழ்கிலா மதியில் மனத்தானை*

ஏழையை இலங்கைக்கு இறை தன்னை* எங்களை ஒழியக் கொலை அவனை*

சூழு மாநினை மாமணி வண்ணா!* சொல்லினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ    

 

1865:

மனங்கொண்டேறும் மண்டோதரி முதலா* அங்கயற் கண்ணினார்கள் இருப்ப*

தனங்கொள் மென்முலை நோக்க மொழிந்து* தஞ்சமே சில தாபதரென்று*

புனங்கொள் மென்மயிலைச் சிறை வைத்த* புன்மையாளன் நெஞ்சில் புக எய்த*

அனங்கன் அன்ன திண்தோள் எம்மிராமற்கு* அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ    

 

1866:

புரங்கள் மூன்றுமோர் மாத்திரைப் போதில்* பொங்கெரிக்கு இரை கண்டவன் அம்பின்*

சரங்களே கொடிதாய் அடுகின்ற* சாம்பவான் உடன் நிற்கத் தொழுதோம்*

இரங்கு நீ எமக்கெந்தை பிரானே!* இலங்கு வெங்கதிரோன் தன் சிறுவா*

குரங்குகட்கரசே! எம்மைக் கொல்லேல்!* கூறினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ    

 

1867:##

அங்கு அவ்வானவர்க்கு ஆகுலம் தீர* அணி இலங்கை அழித்தவன் தன்னை*

பொங்கு மாவலவன் கலி கன்றி* புகன்ற பொங்கத்தம் கொண்டு,* இவ்வுலகில்-

எங்கும் பாடி நின்று ஆடுமின் தொண்டீர்!* இம்மையே இடர் இல்லை,* இறந்தால்-

தங்குமூர் அண்டமே கண்டு கொண்மின்* சாற்றினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ!    

 

மூன்றாம் திருமொழி

 

1868:##

ஏத்துகின்றோம் நாத்தழும்ப* இராமன் திருநாமம்*

சோத்த நம்பீ! சுக்கிரீவா!* உம்மைத் தொழுகின்றோம்*

வார்த்தை பேசீர் எம்மை* உங்கள் வானரம் கொல்லாமே*

கூத்தர் போல ஆடுகின்றோம்* குழமணி தூரமே (2)   10.3.1

 

1869:

எம்பிரானே! என்னை ஆள்வாய்* என்றென்று அலற்றாதே*

அம்பின் வாய்ப்பட்டு ஆற்றகில்லாது* இந்திரசித்து அழிந்தான்*

நம்பி அனுமா! சுக்கிரீவ!* அங்கதனே! நளனே*

கும்பகர்ணன் பட்டுப்போனான்* குழமணி தூரமே 10.3.2

 

1870:

ஞாலம் ஆளும் உங்கள் கோமான்* எங்கள் இராவணற்கு*

காலனாகி வந்தவா* கண்டு அஞ்சிக் கருமுகில்போல்*

நீலன் வாழ்க சுடேணன் வாழ்க* அங்கதன் வாழ்கவென்று*

கோலமாக ஆடுகின்றோம்* குழமணி தூரமே    10.3.3

 

1871:

மணங்கள் நாறும் வார்குழலார்*  மாதர்கள் ஆதரத்தை*

புணர்ந்த சிந்தைப் புன்மையாளன்* பொன்ற வரிசிலையால்*

கணங்களுண்ண வாளியாண்ட* காவலனுக்கு இளையோன்*

குணங்கள் பாடி ஆடுகின்றோம்* குழமணி தூரமே    10.3.4

 

1872:

வென்றி தந்தோம் மானம் வேண்டோம்* தானம் எமக்காக*

இன்று தம்மின் எங்கள் வாணாள்* எம்பெருமான் தமர்காள்*

நின்று காணீர் கண்களார* நீர் எம்மைக் கொல்லாதே*

குன்று போல ஆடுகின்றோம்* குழமணி தூரமே    10.3.5

 

1873:

கல்லின் முந்நீர் மாற்றி வந்து* காவல் கடந்து,* இலங்கை-

அல்லல் செய்தான் உங்கள் கோமான்* எம்மை அமர்க்களத்து*

வெல்ல கில்லாது அஞ்சினோங்காண்* வெங்கதிரோன் சிறுவா,*

கொல்ல வேண்டா ஆடுகின்றோம்* குழமணி தூரமே    10.3.6

 

1874:

மாற்றமாவது இத்தனையே* வம்மின் அரக்கருள்ளÖர்*

சீற்றம் நும்மேல் தீர வேண்டில்* சேவகம் பேசாதே*

ஆற்றல் சான்ற தொல்பிறப்பில்* அனுமனை வாழ்கவென்று*

கூற்ற மன்னார் காண ஆடீர்* குழமணி தூரமே    10.3.7

 

1875:

கவள யானை பாய்புரவித்* தேரோடு அரக்கரெல்லாம்-

துவள,* வென்ற வென்றியாளன்* தன்தமர் கொல்லாமே*

தவள மாடம் நீள்அயோத்திக்* காவலன் தன்சிறுவன்*

குவளை வண்ணன் காண ஆடீர்* குழமணி தூரமே    10.3.8

 

1876:

ஏடொத்தேந்தும் நீளிலைவேல்* எங்கள் இராவணனார்-

ஓடிப் போனார்,* நாங்கள் எய்தோம்* உய்வதோர் காரணத்தால்*

சூடிப் போந்தோம் உங்கள் கோமன் ஆணை* தொடரேன்மின்*

கூடிக்கூடி ஆடுகின்றோம்* குழமணி தூரமே    10.3.9

 

1877:##

வென்ற தொல்சீர்த் தென்னிலங்கை* வெஞ்சமத்து* அன்றரக்கர்-

குன்ற மன்னார் ஆடி உய்ந்த* குழமணி தூரத்தை*

கன்றி நெய்ந்நீர் நின்ற வேற்கைக்* கலியன் ஒலிமாலை*

ஒன்றுமொன்றும் ஐந்தும் மூன்றும்* பாடி நின்று ஆடுமினே    10.3.10

 

நான்காம் திருமொழி

 

1878:

சந்த மலர்க்குழல் தாழத்* தான் உகந்தோடித் தனியே-

வந்து,* என் முலைத் தடந்தன்னை வாங்கி* நின் வாயில் மடுத்து,*

நந்தன் பெறப்பெற்ற நம்பீ!* நான் உகந்துண்ணும் அமுதே,*

எந்தை பெருமனே! உண்ணாய்* என் அம்மம் சேமம் உண்ணாயே    10.4.1

 

1879:

வங்க மறிகடல் வண்ணா!* மாமுகிலே ஒக்கும் நம்பீ*

செங்கண் நெடிய திருவே* செங்கமலம் புரை வாயா,*

கொங்கை சுரந்திட உன்னைக்* கூவியும் காணாது இருந்தேன்*

எங்கிருந்து ஆயர்களோடும்* என் விளையாடுகின்றாயே    10.4.2

 

1880:

திருவில் பொலிந்த எழிலார்* ஆயர்தம் பிள்ளைகளோடு*

தெருவில் திளைக்கின்ற நம்பீ* செய்கின்ற தீமைகள் கண்டிட்டு,*

உருகிஎன் கொங்கையின் தீம்பால்* ஓட்டந்து பாய்ந்திடுகின்ற,*

மருவிக் குடங்கால் இருந்து* வாய்முலை உண்ண நீ வாராய்    10.4.3

 

1881:

மக்கள் பெறுதவம் போலும்* வையத்து வாழும் மடவார்*

மக்கள் பிறர்கண்ணுக்கு ஒக்கும்* முதல்வா மதக்களிறன்னாய்*

செக்கர் இளம்பிறை தன்னை வாங்கி* நின் கையில் தருவன்*

ஒக்கலை மேலிருந்து அம்மம் உகந்து* இனிது உண்ண நீ வாராய்    10.4.4

 

1882:

மைத்த கருங்குஞ்சி மைந்தா!* மாமருதூடு நடந்தாய்,*

வித்தகனே விரையாதே* வெண்ணெய் விழுங்கும் விகிர்தா,*

இத்தனை போதன்றி என்தன்* கொங்கை சுரந்திருக்க கில்லா,*

உத்தமனே! அம்மம் உண்ணாய்* உலகளந்தாய்! அம்மம் உண்ணாய்    10.4.5

 

1883:

பிள்ளைகள் செய்வன செய்யாய்* பேசின் பெரிதும் வலியை*

கள்ளம் மனத்தில் உடையை* காணவே தீமைகள் செய்தி*

உள்ளம் உருகி என் கொங்கை* ஓட்டந்து பாய்ந்திடுகின்ற*

பள்ளிக் குறிப்புச் செய்யாதே* பாலமுது உண்ணநீ வாராய்    10.4.6

 

1884:

தன்மகனாக வன் பேய்ச்சி* தான்முலை உண்ணக் கொடுக்க*

வன்மகனாய் அவள் ஆவிவாங்கி* முலையுண்ட நம்பி*

நன்மகள் ஆய்மகளோடு* நானில மங்கை மணாளா*

என்மகனே! அம்மம் உண்ணாய்* என் அம்மம் சேமம் உண்ணாயே    10.4.7

 

1885:

உந்தம் அடிகள் முனிவர்* உன்னைநான் என்கையில் கோலால்*

நொந்திட மோதவும் கில்லேன்* நுங்கள்தம் ஆநிரை எல்லாம்*

வந்து புகுதரும் போது* வானிடைத் தெய்வங்கள் காண*

அந்தியம் போது அங்கு நில்லேல்* ஆழியங் கையனே! வாராய்    10.4.8

 

1886:

பெற்றத் தலைவன் எங்கோமான்* பேரருளாளன் மதலாய்,*

சுற்றக் குழாத்து இளங்கோவே!* தோன்றிய தொல்புகழாளா,*

கற்றினந் தோறும் மறித்துக்* கானம் திரிந்த களிறே*

எற்றுக்கென் அம்மம் உண்ணாதே* எம்பெருமான் இருந்தாயே    10.4.9

 

1887:##

இம்மை இடர்க்கெட வேண்டி* ஏந்தெழில் தோள்கலி கன்றி*

செம்மைப் பனுவல்நூல் கொண்டு* செங்கண் நெடியவன் தன்னை*

அம்மம் உண்ணென்று உரைக்கின்ற* பாடல் இவை ஐந்தும் ஐந்தும்*

மெய்ம்மை மனத்து வைத்தேத்த* விண்ணவர் ஆகலுமாமே    10.4.10

 

ஐந்தாம் திருமொழி

 

1888:##

பூங்கோதை ஆய்ச்சி* கடைவெண்ணை புக்குண்ண,*

ஆங்கவள் ஆர்த்துப்* புடைக்கப் புடையுண்டு*

ஏங்கி இருந்து* சிணுங்கி விளையாடும்*

ஓங்கோத வண்ணனே! சப்பாணி*ஒளிமணி வண்ணனே! சப்பாணி (2).    10.5.1

 

1889:

தாயர் மனங்கள் தடிப்பத்* தயிர்நெய்யுண்டே

எம்பிராக்கள்* இருநிலத்து எங்கள்தம்*

ஆயர் அழக* அடிகள்* அரவிந்த-

வாயவனே! கொட்டாய் சப்பாணி!*மால்வண்ணனே! கொட்டாய் சப்பாணி.    10.5.2

 

 

1890:

தாமோர் உருட்டித்* தயிர்நெய் விழுங்கிட்டு*

தாமோ தவழ்வரென்று* ஆய்ச்சியர் தாம்பினால்*

தாமோதிரக்கையால்* ஆர்க்கத் தழும்பிருந்த*

தாமோதரா! கொட்டாய் சப்பாணி!*தாமரைக் கண்ணனே! சப்பாணி    10.5.3

 

1891:

பெற்றார் தளைகழலப்* பேர்ந்தங் கயலிடத்து*

உற்றார் ஒருவரும் இன்றி* உலகினில்,*

மற்றரும் அஞ்சப்போய்* வஞ்சப்பெண் நஞ்சுண்ட*

கற்றாயனே! கொட்டாய் சப்பாணி!*கார்வண்ணனே!கொட்டாய் சப்பாணி    10.5.4

 

1892:

சோத்தென நின்னைத்* தொழுவன் வரம் தர,*

பேய்ச்சி முலையுண்ட பிள்ளாய்,* பெரியன-

ஆய்ச்சியர்* அப்பம் தருவர்* அவர்க்காகச்-

சாற்றியோர் ஆயிரம் சப்பாணி!*தடங்கைகளால் கொட்டாய் சப்பாணி    10.5.5

 

1893:

கேவலம் அன்று* உன்வயிறு, வயிற்றுக்கு*

நான் வலவப்பம் தருவன்* கருவிளைப்-

பூவலர் நீள்முடி* நந்தன்றன் போரேறே,*

கோவலனே! கொட்டாய் சப்பாணி!*குடமாடீ! கொட்டாய் சப்பாணி.    10.5.6

 

1894:

புள்ளினை வாய்பிளந்து* பூங்குருந்தம் சாய்த்து,*

துள்ளி விளையாடித்* தூங்குறி வெண்ணெயை,*

அள்ளிய கையால்* அடியேன் முலைநெருடும்*

பிள்ளைப்பிரான்! கொட்டாய் சப்பாணி!*பேய்முலை உண்டானே! சப்பாணி.    10.5.7

 

1895:

யாயும் பிறரும்* அறியாத யாமத்து,*

மாய வலவைப்* பெண் வந்து முலைதர,*

பேயென்று அவளைப்* பிடித்து உயிரை உண்ட,*

வாயவனே! கொட்டாய் சப்பாணி!*மால்வண்ணனே! கொட்டாய் சப்பாணி.    10.5.8

 

1896:

கள்ளக் குழவியாய்க்* காலால் சகடத்தை*

தள்ளி உதைத்திட்டுத்* தாயாய் வருவாளை,*

மெள்ளத் தொடர்ந்து* பிடித்து ஆருயிருண்ட,*

வள்ளலே! கொட்டாய் சப்பாணி!*மால்வண்ணனே! கொட்டாய் சப்பாணி.    10.5.9

 

1897:

காரார் புயல்கைக்* கலிகன்றி மங்கையர்கோன்,*

பேராளன் நெஞ்சில்* பிரியாது இடங்கொண்ட சீராளா*

செந்தாமரைக் கண்ணா!* தண்துழாய்த்*

தாராளா, கொட்டாய் சப்பாணி!*தடமார்வா கொட்டாய் சப்பாணி.    10.5.10

 

ஆறாம் திருமொழி

 

1898:##

எங்கானும் ஈதொப்பதோர் மாயமுண்டே?* நரநாரணனாய் உலகத்து அறநூல்*

சிங்காமை விரித்தவன் எம்பெருமான்* அதுவன்றியும் செஞ்சுடரும் நிலனும்,*

பொங்கார் கடலும் பொருப்பும் நெருப்பும் நெருக்கிப் புக* பொன்மிடறு அத்தனைபோது,*

அங்காந்தவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால்*அளைவெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே.

 

1899:

குன்றொன்று மத்தா அரவம் அளவிக்* குரைமாகடலைக் கடைந்திட்டு,* ஒருகால்-

நின்று உண்டை கொண்டோட்டி வன்கூன் நிமிர* நினைத்த பெருமான் அது அன்றியும்முன்,*

நன்றுண்ட தொல்சீர் மகரக் கடலேழ்* மலையேழ் உலகேழ் ஒழியாமை நம்பி,*

அன்றுண்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால்* அளைவெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே    

 

1900:

உளைந்திட்டு எழுந்த மதுகைடவர்கள்* உலப்பில் வலியால் அவர்பால்,* வயிரம்-

விளைந்திட்டது என்றெண்ணி விண்ணோர் பரவ* அவர் நாளொழித்த பெருமான் முனநாள்,*

வளைந்திட்ட வில்லாளி வல் வாளெயிற்று* மலைபோல் அவுணன் உடல் வள்ளுகிரால்,*

அளைந்திட்டவன்காண்மின் இன்று ஆய்ச்சியரால்*அளைவெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே.

 

1901:

தளர்ந்திட்டு இமையோர் சரண் தாவெனத்*

தான் சரணாய் முரணாயவனை* உகிரால்-

பிளந்திட்டு அமரர்க்கு அருள் செய்து உகந்த*

பெருமான் திருமால் விரிநீர் உலகை,*

வளர்ந்திட்ட தொல்சீர் விறல் மாவலியை*

மண்கொள்ள வஞ்சித்து ஒருமாண் குறளாய்*

அளந்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால்*

அளைவெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே    

 

1902:

நீண்டான் குறளாய் நெடுவானளவும்*

அடியார் படும் ஆழ் துயராய எல்லாம்,*

தீண்டாமை நினைந்து இமையோர் அளவும்*

செல வைத்த பிரான் அதுவன்றியும்முன்,*

வேண்டாமை நமன் தமர் என்தமரை*

வினவப் பெறுவார் அலர்,என்று,* உலகேழ்-

ஆண்டானவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால்*

அளைவெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே    

 

1903:

பழித்திட்ட இன்பப் பயன் பற்றறுத்துப்*

பணிந்தேத்த வல்லார் துயராய வெல்லாம்,*

ஒழித்திட்டு அவரைத் தனக்காக்க வல்ல*

பெருமான் திருமால் அதுவன்றியும்முன்,*

தெழித்திட்டு எழுந்தே எதிர்நின்று மன்னன்*

சினத்தோள் அவை ஆயிரமும் மழுவால்*

அழித்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால்*

அளைவெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே.

 

1904:

படைத்திட்டது இவ்வையம் உய்ய முனநாள்*

பணிந்தேத்த வல்லார் துயராய வெல்லாம்,*

துடைத்திட்டு அவரைத் தனக்காக்க வென்னத்*

தெளியா அரக்கர் திறலபோய் அவிய,*

மிடைத்திட்டு எழுந்த குரங்கைப் படையா*

விலங்கல் புகப்பாய்ச்சி விம்ம,* கடலை-

அடைத்திட்டவன்காண்மின் இன்று ஆய்ச்சியரால்*

அளைவெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே    

 

1905:

நெறித்திட்ட மென்கூழை நல்நேரிழையோடு*

உடனாய வில்லென்ன வல்லே அதனை,*

இறுத்திட்டு அவளின்பம் அன்போடு அணைந்திட்டு*

இளங்கொற்றவனாய்த் துளங்காத முந்நீர்,*

செறித்திட்டு இலங்கை மலங்க அரக்கன்*

செழுநீள் முடிதோளொடு தாள் துணிய,*

அறுத்திட்டவன்காண்மின் இன்று ஆய்ச்சியரால்*

அளைவெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே.

 

1906:

சுரிந்திட்ட செங்கேழ் உளைப்பொங் கரிமாத்*

தொலையப் பிரியாது சென்றெய்தி, எய்தாது*

இரிந்திட்டு இடங்கொண்டு அடங்காத தன்வாய்*

இருகூறுசெய்த பெருமான் முனநாள்*

வரிந்திட்ட வில்லால் மரமேழும் எய்து*

மலைபோல் உருவத்து ஒரிராக்கதி மூக்கு,*

அரிந்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால்*

அளைவெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே    

 

1907:##

நின்றார் முகப்புச் சிறிதும் நினையான்*

வயிற்றை நிறைப்பான் உறிப்பால் தயிர்நெய்,*

அன்றாய்ச்சியர் வெண்ணெய் விழுங்கி*

உரலோடு ஆப்புண்டிருந்த பெருமான் அடிமேல்,*

நன்றாய தொல்சீர் வயல் மங்கையர்கோன்*

கலியன் ஒலிசெய் தமிழ்மாலை வல்லார்,*

என்றானும் எய்தார் இடர் இன்பம் எய்தி*

இமையோர்க்கும் அப்பால் செலவெய்துவாரே    

 

ஏழாம் திருமொழி

 

1908:##

மானமுடைத்து உங்கள் ஆயர் குலம் அதனால்* பிறர் மக்கள் தம்மை*

ஊனமுடையன செய்யப் பெறாயென்று* இரப்பன் உரப்ப கில்லேன்*

நானும் உரைத்திலேன் நந்தன் பணித்திலன்* நங்கைகாள்! நானென் செய்கேன்?*

தானுமோர் கன்னியும் கீழை யகத்துத்* தயிர்கடை கின்றான் போலும்! 10.7.1

 

1909:

காலை எழுந்து கடைந்த இம்மோர்விற்கப் போகின்றேன்* கண்டே போனேன்,*

மாலை நறுங்குஞ்சி நந்தன் மகனல்லால்* மற்று வந்தாரும் இல்லை,*

மேலை அகத்து நங்காய்! வந்து காண்மின்கள்* வெண்ணெயேயன்று, இருந்த*

பாலும் பதின்குடம் கண்டிலேன்* பாவியேன் என்செய்கேன் என்செய்கேனோ! 10.7.2

 

1910:

தெள்ளிய வாய்ச்சிறியான் நங்கைகாள்!* உறி மேலைத் தடாநிறைந்த,*

வெள்ளி மலையிருந்தாலொத்த வெண்ணெயை* வாரி விழுங்கி யிட்டு,*

கள்வன் உறங்குகின்றான் வந்து காண்மின்கள்* கையெல்லாம் நெய்,* வயிறு-

பிள்ளை பரமன்று இவ்வேழுலகும் கொள்ளும்* பேதையேன் என்செய்கேனோ!    10.7.3

 

1911:

மைந்நம்பு வேல்கண்நல்லாள்* முன்னம் பெற்ற வளைவண்ண நன்மா மேனி,*

தன்நம்பி நம்பியும் இங்கு வளர்ந்தது* அவன் இவை செய்தறியான்*

பொய்ந்நம்பி புள்ளுவன் கள்வம்* பொதியறை போகின்றவா தவழ்ந்திட்டு,*

இந்நம்பி நம்பியா ஆய்ச்சியர்க்கு உய்வில்லை* என்செய்கேன் என்செய்கேனோ!     

 

1912:

தந்தை புகுந்திலன் நான் இங்கு இருந்திலேன்* தோழிமார் ஆருமில்லை,*

சந்த மலர்க்குழலாள்* தனியே விளையாடுமிடம் குறுகி,*

பந்து பறித்துத் துகில்பற்றிக் கீறிப்* படிறன் படிறு செய்யும்,*

நந்தன் மதலைக்கு  இங்கென்கடவோம்? நங்காய்!* என்செய்கேன் என்செய்கேனோ!    

 

1913:

மண்மகள் கேள்வன் மலர்மங்கை நாயகன்* நந்தன் பெற்ற மதலை,*

அண்ணல் இலைக்குழல் ஊதிநம் சேரிக்கே* அல்லிற்றான் வந்த பின்னை,*

கண்மலர் சோர்ந்து முலைவந்து விம்மிக்* கமலச் செவ்வாய் வெளுப்ப,*

என்மகள் வண்ணம் இருக்கின்ற வாநங்காய்!* என்செய்கேன் என்செய்கேனோ!    

 

1914:

ஆயிரம் கண்ணுடை இந்திரனாருக் கென்று* ஆயர் விழவெடுப்ப,*

பாசன நல்லன பண்டிகளால்* புகப் பெய்த அதனை எல்லாம்,*

போயிருந்து அங்கொரு பூத வடிவுகொண்டு* உன்மகன் இன்று நங்காய்,*

மாயன் அதனை எல்லாம் முற்ற* வாரி வளைத்து உண்டிருந்தான் போலும்!    10.7.7

 

1915:

தோய்த்த தயிரும் நறுநெய்யும் பாலும்* ஓரோர்க்குடம் துற்றிடுமென்று,*

ஆய்ச்சியர் கூடி அழைக்கவும்* நானிதற்கெள்கி இவனை நங்காய்*

சோத்தம் பிரான்! இவை செய்யப் பெறாய்! என்று* இரப்பன் உரப்பகில்லேன்*

பேய்ச்சி முலையுண்ட பின்னை* இப்பிள்ளையைப் பேசுவது அஞ்சுவேனே!    10.7.8

 

1916:

ஈடும் வலியும் உடைய* இந் நம்பி பிறந்த ஏழு திங்களில்,*

ஏடலர் கண்ணியினானை வளர்த்தி* யமுனை நீராடப் போனேன்,*

சேடன் திருமறு மார்வன்* கிடந்து திருவடியால்,* மலை போல-

ஓடும் சகடத்தைச் சாடிய பின்னை* உரப்புவது அஞ்சுவேனே!    10.7.9

 

1917:

அஞ்சுவன் சொல்லி அழைத்திட நங்கைகாள்!* ஆயிர நாழி நெய்யைப்,*

பஞ்சியல் மெல்லடிப் பிள்ளைகள் உண்கின்ற* பாகந்தான் வையார்களே,*

கஞ்சன் கடியன் கறவெட்டு நாளில்* என்கை வலத்தாது மில்லை,*

நெஞ்சத்திருப்பன செய்து வைத்தாய் நம்பீ!* என்செய்கேன் என்செய்கேனோ   !    

 

1918:

அங்ஙனம் தீமைகள் செய்வர்களோ நம்பீ!* ஆயர் மடமக்களைப்,*

பங்கய நீர்குடைந்தாடுகின்றார்கள்* பின்னே சென்றொளித்திருந்து,*

அங்கு அவர் பூந்துகில் வாரிக்கொண்டிட்டு* அரவேரிடையார் இரப்ப,*

மங்கை நல்லீர்! வந்து கொண்மின் என்று* மரம் ஏறி இருந்தாய் போலும் 10.7.11

 

1919:

அச்சம் தினைத்தனை இல்லை இப்பிள்ளைக்கு* ஆண்மையும் சேவகமும்,*

உச்சியில் முத்தி வளர்த்தெடுத்தேனுக்கு* உரைத்திலன் தானின்று போய்,*

பச்சிலைப் பூங்கடம் பேறி* விசைகொண்டு பாய்ந்து புக்கு* ஆயிரவாய்-

நச்சழல் பொய்கையில் நாகத்தினோடு* பிணங்கி நீ வந்தாய் போலும்!    10.7.12

 

1920:

தம்பர மல்லன ஆண்மைகளைத்* தனியேநின்று தாம் செய்வாரோ?,

எம்பெருமான்! உன்னைப் பெற்ற வயிறுடையேன்* இனி யானென் செய்கேன்?,*

அம்பரம் ஏழும் அதிரும் இடிகுரல்* அங்கனற் செங்கணுடை,*

வம்பவிழ் கானத்து மால்விடையோடு* பிணங்கி நீ வந்தாய் போலும்!    10.7.13

 

1921:##

அன்ன நடை மட ஆய்ச்சி வயிறடித்து அஞ்ச* அருவரை போல்,*

மன்னு கருங்களிற்று ஆருயிர் வவ்விய* மைந்தனை மாகடல் சூழ்,*

கன்னிநன் மாமதிள் மங்கையர் காவலன்* காமரு சீர்க்கலிகன்றி*

இன்னிசை மாலைகள் ஈரேழும் வல்லவர்க்கு* ஏதும் இடர் இல்லையே. (2) 10.7.14

 

எட்டாம் திருமொழி

 

1922:## 

காதில் கடிப்பிட்டுக்* கலிங்கம் உடுத்து,*

தாதுநல்ல* தண்ணந் துழாய் கொடணிந்து,*

போது மறுத்துப்* புறமே வந்து நின்றீர்,*

ஏதுக்கு இதுவென்?* இதுவென்? இதுவென்னோ! (2) 10.8.1

 

1923:

துவராடை உடுத்து* ஒருசெண்டு சிலுப்பி,*

கவராக முடித்துக்* கலிக்கச்சுக் கட்டி,*

சுவரார் கதவின் புறமே* வந்து நின்றீர்,*

இவரார்? இதுவென்?* இதுவென்? இதுவென்னோ!    10.8.2

 

1924:

கருளக் கொடி ஒன்றுடையீர்!* தனிப்பாகீர்,*

உருளச் சகடம் அது* உறக்கில் நிமிர்த்தீர்,*

மருளைக் கொடுபாடி வந்து* இல்லம் புகுந்தீர்,*

இருளத்து இதுவென்?* இதுவென்? இதுவென்னோ!    10.8.3

 

1925:

நாமம் பலவும் உடை* நாரண நம்பீ,*

தாமத் துளவம்* மிக நாறிடுகின்றீர்,*

காமனெனப்பாடி வந்து* இல்லம் புகுந்தீர்,*

ஏமத்து இதுவென்?* இதுவென்? இதுவென்னோ!    10.8.4

 

1926:

சுற்றும் குழல்தாழச்* சுரிகை அணைத்து,*

மற்றும் பல* மாமணி பொன்கொடணிந்து,*

முற்றம் புகுந்து* முறுவல்செய்து நின்றீர்,*

எற்றுக்கு இதுவென்?* இதுவென்? இதுவென்னோ!    10.8.5

 

1927:

ஆனாயரும்* ஆனிரையும் அங்கொழியக்,*

கூனாயதோர்* கொற்ற வில்லொன்று கையேந்திப்,*

போனார் இருந்தாரையும்* பார்த்துப் புகுதீர்,*

ஏேனார்கள் முன்னென்?* இதுவென்? இதுவென்னோ!    10.8.6

 

1928:

மல்லே பொருத திரள்தோள்* மணவாளÖர்,*

அல்லே அறிந்தோம்நும்* மனத்தின் கருத்தை,*

சொல்லாது ஒழியீர்* சொன்ன போதினால் வாரீர்

எல்லே இதுவென்?* இதுவென்? இதுவென்னோ!    10.8.7

 

1929:

புக்காடரவம்* பிடித்தாட்டும் புனிதீர்,*

இக்காலங்கள்* யாம் உமக்கு ஏதொன்றும் அல்லோம்,*

தக்கார் பலர்* தேவிமார் சாலவுடையீர்,*

எக்கே! இதுவென்?* இதுவென்? இதுவென்னோ!    10.8.8

 

1930:

ஆடி அசைந்து* ஆய்மடவாரொடு நீபோய்*

கூடிக் குரவை பிணை* கோமளப் பிள்ளாய்,*

தேடித் திருமாமகள்* மண்மகள் நிற்ப,*

ஏடி! இதுவென்?* இதுவென்? இதுவென்னோ!    10.8.9

 

1931:##

அல்லிக் கமலக் கண்ணனை* அங்கு ஓராய்ச்சி*

எல்லிப் பொழுதூடிய* ஊடல் திறத்தை,*

கல்லின் மலிதோள்* கலியன் சொன்ன மாலை,*

சொல்லித் துதிப்பார் அவர்* துக்கம் இலரே (2)    10.8.10

 

ஒன்பதாம் திருமொழி

 

1932:##

புள்ளுருவாகி நள்ளிருள் வந்த* பூதனை மாள,* இலங்கை-

ஒள்ளெரி மண்டி உண்ணப் பணித்த* ஊக்கம் அதனை நினைந்தோ,?*

கள்ளவிழ் கோதை காதலும்* எங்கள் காரிகை மாதர் கருத்தும்,*

பிள்ளைதன் கையில் கிண்ணமே ஒக்கப்* பேசுவது எந்தை பிரானே! (2) 10.9.1

 

1933:

மன்றில் மலிந்து கூத்து வந்தாடி* மால்விடை ஏழும் அடர்த்து,* ஆயர்-

அன்று நடுங்க ஆனிரை காத்த* ஆண்மை கொலோ அறியேன் நான்,*

நின்ற பிரானே! நீள்கடல் வண்ணா!* நீஇவள் தன்னை நின் கோயில்,*

முன்றில் எழுந்த முருங்கையில் தேனா* முன் கைவளை கவர்ந்தாயே.    10.9.2

 

1934:

ஆர்மலி யாழி சங்கொடு பற்றி* ஆற்றலை ஆற்றல் மிகுத்துக்,*

கார்முகில் வண்ணா! கஞ்சனை முன்னம்* கடந்தநின் கடுந்திறல் தானோ,*

நேரிழை மாதை நித்திலத் தொத்தை* நெடுங்கடல் அமுதனை யாளை,*

ஆரெழில் வண்ணா! அங்கையில் வட்டாம்* இவளெனக் கருதுகின்றாயே.    10.9.3

 

1935:

மல்கிய தோளும் மானுரி யதளும்* உடையவர் தமக்குமோர் பாகம்,*

நல்கிய நலமோ? நரகனை தொலைத்த* கரதலத்து அமைதியின் கருத்தோ?*

அல்லியங் கோதை அணிநிறம் கொண்டு வந்து* முந்னே நின்று போகாய்,*

சொல்லியென் நம்பீ! இவளை நீ உங்கள்* தொண்டர் கைத் தண்டென்றவாறே    

 

1936:

செருவழியாத மன்னர்கள் மாளத்* தேர்வலங் கொண்டு அவர் செல்லும்,*

அருவழி வானம் அதர்படக் கண்ட* ஆண்மைகொலோ அறியேன் நான்,*

திருமொழி எங்கள் தேமலர்க் கோதை* சீர்மையை நினைந்திலை அந்தோ,*

பெருவழி நாவற் கனியினும் எளியள்* இவளெனப் பேசுகின்றாயே 10.9.5

 

1937:

அரக்கியர் ஆகம் புல்லென வில்லால்* அணிமதிள் இலங்கையர் கோனை,*

செருக்கழித்து அமரர் பணிய முன்னின்ற* சேவகமோ? செய்ததின்று*

முருக்கிதழ் ஆய்ச்சி முன்கை வெண்சங்கம்* கொண்டு முன்னே நின்று போகாய்,*

எருக்கிலைக்காக எறிமழுவோச்சல்* என்செய்வது எந்தை பிரானே!    10.9.6

 

1938:

ஆழியந் திண்தேர் அரசர் வந்திறைஞ்ச* அலைகடல் உலகம்முன் ஆண்ட,*

பாழியந் தோளோர் ஆயிரம் வீழப்* படைமழுப் பற்றிய வலியோ?*

மாழைமென்னோக்கி மணிநிறங் கொண்டு வந்து* முந்னே நின்று போகாய்,*

கோழிவெண் முட்டைக்கு என்செய்வது எந்தாய்!* குறுந்தடி நெடுங்கடல் வண்ணா!    

 

1939:

பொருந்தலன் ஆகம் புள்ளு வந்தேற* வள்ளுகிரால் பிளந்து,* அன்று-

பெருந்தகைக்கு இரங்கி வாலியை முனிந்த* பெருமைகொலோ செய்தது இன்று,*

பெருந்தடங் கண்ணி சுரும்புறு கோதை* பெருமையை நினைந்திலை பேசில்,*

கருங்கடல் வண்ணா! கவுள்கொண்ட நீராம்* இவளெனக் கருதுகின்றாயே 10.9.8

 

1940:

நீரழல் வானாய் நெடுநிலம் காலாய்* நின்றநின் நீர்மையை நினைந்தோ?*

சீர்க்கெழு கோதை என்னலதிலள் என்று* அன்னதோர் தேற்றன்மை தானோ?*

பார்க்கெழு பவ்வத்தார் அமுதனைய* பாவையைப் பாவம் செய்தேனுக்கு,*

ஆரழல் ஓம்பும் அந்தணன் தோட்டமாக* நின் மனத்து வைத்தாயே    10.9.9

 

1941:##

வேட்டத்தைக் கருதாது அடியிணை வணங்கி* மெய்ம்மை நின்று எம்பெருமானை,*

வாள்திறல் தானை மங்கையர் தலைவன்* மானவேல் கலியன்வாய் ஒலிகள்,*

தோட்டலர் பைந்தார்ச் சுடர்முடியானைப்* பழமொழியால் பணிந்து உரைத்த,*

பாட்டிவை பாடப் பத்திமை பெருகிச்* சித்தமும் திருவோடு மிகுமே (2)    10.9.10

பத்தாம் திருமொழி

 

1942:

திருத்தாய் செம்போத்தே,!* திருமாமகள் தன்கணவன்,*

மருத்தார் தொல்புகழ்* மாதவனை வர* திருத்தாய் செம்போத்தே!    10.10.1

 

1943:

கரையாய் காக்கைப்பிள்ளாய்,* கருமாமுகில் போல்நிறத்தன்,*

உரையார் தொல்புகழ்* உத்தமனை வர,* கரையாய் காக்கைப்பிள்ளாய்!    10.10.2

 

1944:

கூவாய் பூங்குயிலே,* குளிர்மாரி தடுத்துகந்த*

மாவாய் கீண்ட* மணிவண்ணனை வர,* கூவாய் பூங்குயிலே!    10.10.3

 

1945:

கொட்டாய் பல்லிக்குட்டி,* குடமாடி உலகளந்த,*

மட்டார் பூங்குழல்* மாதவனை வர,* கொட்டாய் பல்லிக்குட்டி!    10.10.4

 

1946:##

சொல்லாய் பைங்கிளியே,* சுடராழி வலனுயர்த்த,*

மல்லார் தோள்* வட வேங்கடவன்வர,* சொல்லாய் பைங்கிளியே!    10.10.5

 

1947:

கோழி கூவென்னுமால்,* தோழி! நானெஞ்செய்கேன்,*

ஆழி வண்ணர்* வரும்பொழுது ஆயிற்று* கோழி கூவென்னுமால்.    10.10.6

 

1948:

காமற்கு என்கடவேன்,* கருமாமுகில் வண்ணற்கல்லால்,*

பூமேல் ஐங்கணை* கோத்துப் புகுந்தெய்ய,* காமற்கு என்கடவேன்!    10.10.7

 

1949:##

இங்கே போதுங்கொலோ,* இனவேல்நெடுங் கண்களிப்ப,*

கொங்கார் சோலைக்* குடந்தைக் கிடந்தமால்,* இங்கே போதுங்கொலோ!    

 

1950:

இன்னார் என்றறியேன்,* அன்னே! ஆழியொடும்,*

பொன்னார் சார்ங்கம் உடைய அடிகளை,* இன்னார் என்றறியேன்.    10.10.9

 

1951:##

தொண்டீர்! பாடுமினோ,* சுரும்பார்ப்பொழில் மங்கையர்கோன்,*

ஒண்தார் வேல்கலியன் ஒலி மாலைகள்,* தொண்டீர்! பாடுமினோ (2)    10.10.10