பெரிய திருமொழி மூன்றாம் பத்து


மூன்றாம் பத்து

 

முதல் திருமொழி – இருண்தண்

 

1148:##

இருந்தண் மாநிலம் ஏனமதாய்* வளைமருப்பினில் அகத்தொடுக்கி*

கருந்தண் மாகடல் கண் துயின்றவனிடம்* கமலநன்மலர்த் தேறலருந்தி*

இன்னிசை முரன்றெழும் அளிகுலம்பொதுளி* அம் பொழிலூடே*

செருந்தி நாண்மலர் சென்றணைந்து உழிதரு* திருவயிந்திரபுரமே. (2)   3.1.1

 

1149:

மின்னும் ஆழியங்கையவன்* செய்யவள் உறைதரு திருமார்பன்*

பன்னுநான்மறைப் பலபொருளாகிய* பரனிடம் வரைச்சாரல்*

பின்னும் மாதவிப் பந்தலில் பெடைவரப்* பிணியவிழ் கமலத்து*

தென்னவென்று வண்டு இன்னிசை முரல்தரு* திருவயிந்திரபுரமே.    3.1.2

 

1150:##

வையமேழும் உண்டாலிலை* வைகியமாயவன்*

அடியவர்க்கு மெய்யனாகிய தெய்வநாயகனிடம்* மெய்தகுவரைச்சாரல்*

மொய்கொள் மாதவி சண்பகம் முயங்கிய* முல்லையங்கொடியாட*

செய்யதாமரைச் செழும்பணை திகழ்தரு* திருவயிந்திரபுரமே.    3.1.3

 

1151:

மாறுகொண்டு உடறெதிர்ந்த வல்லவுணன்தன்* மார்பகம் இருபிளவா*

கூறுகொண்டுஅவன் குலமகற்கு* இன்னருள் கொடுத்தவனிடம்*

மிடைந்து சாறுகொண்ட மென்கரும்பிளங்கழை தகை விசும்புற மணிநீழல்*

சேறுகொண்ட தண்  பழனமது எழில்திகழ்* திருவயிந்திரபுரமே.    3.1.4

 

1152:

ஆங்கு மாவலிவேள்வியில் இரந்துசென்று* அகலிடம் அளந்து*

ஆயர் பூங்கொடிக்கு இனவிடை பொருதவனிடம்* பொன்மலர் திகழ்*

வேங்கைகோங்கு செண்பகக் கொம்பினில்* குதிகொடு குரக்கினம் இரைத்தோடி*

தேன்கலந்த தண்பலங்கனி நுகர்தரு* திருவயிந்திரபுரமே.    3.1.5

 

1153:

கூனுலாவிய மடந்தைதன்* கொடுஞ்சொலின் திறத்து இளங்கொடியோடும்*

கானுலாவிய கருமுகில் திருநிறத்தவனிடம்* கவினாரும்*

வானுலாவிய மதிதவழ் மால்வரை* மாமதிள் புடைசூழ*

தேனுலாவிய செழும்பொழில் தழுவிய* திருவயிந்திரபுரமே.    3.1.6

 

1154:

மின்னின்நுண்ணிடை மடக்கொடி காரணம்* விலங்கலின்மிசை இலங்கைமன்னன்*

நீண்முடி பொடிசெய்த மைந்தனதிடம்* மணிவரைநீழல்*

அன்னமாமலர் அரவிந்தத்தமளியில்* பெடையொடும் இனிதமர*

செந்நெலார் கவரிக்குலைவீசு* தண்திருவயிந்திரபுரமே.    3.1.7

 

1155:

விரை கமழ்ந்தமென் கருங்குழல் காரணம்* வில்லிறுத்து அடல்மழைக்கு*

நிரை கலங்கிடவரை குடையெடுத்தவன்* நிலவியஇடம் தடமார்*

வரைவளந்திகழ் மதகரி மருப்பொடு* மலைவளரகிலுந்தி*

திரைகொணர்ந்தணை செழுநதி வயல்புகு* திருவயிந்திரபுரமே.    3.1.8

 

1156:

வேல்கொள்கைத்தலத்து அரசர்வெம்போரினில்* விசயனுக்காய்*

மணித்தேர் கோல்கொள் கைத்தலத்து எந்தைபெம்மானிடம்* குலவுதண் வரைச்சாரல்*

கால்கொள் கண்கொடிக் கையெழக்* கமுகிளம் பாளைகள் கமழ்சாரல்*

சேல்கள்பாய்தரு செழுநதி வயல்புகு* திருவயிந்திரபுரமே.    3.1.9

 

1157:##

மூவராகிய ஒருவனை* மூவுலகுண்டுமிழ்ந்து அளந்தானை*

தேவர் தானவர் சென்றுசென்று இறைஞ்ச* தண்திருவயிந்திரபுரத்து*

மேவு சோதியை வேல்வலவன்* கலிகன்றி விரித்துரைத்த*

பாவுதண்டமிழ் பத்திவைபாடிடப்* பாவங்கள் பயிலாவே. (2)    3.1.10

 

இரண்டாம் திருமொழி – ஊன்வாட

 

1158:##

ஊன்வாட உண்ணாது உயிர்க்காவலிட்டு* உடலிற்பிரியாப் புலனைந்தும்நொந்து*

தாம்வாடவாடத் தவம்செய்ய வேண்டா* தமதா இமையோர் உலகாளகிற்பீர்*

கானாட மஞ்ஞைக் கணமாடமாடே* கயலாடுகானீர்ப் பழனம் புடைபோய்*

தேனாடமாடக் கொடியாடு* தில்லைத்திருச்சித்ரகூடம் சென்றுசேர்மின்களே. (2)    

 

1159:

காயோடு நீடு கனியுண்டு வீசு* கடுங்கால் நுகர்ந்து நெடுங்காலம்*

ஐந்து தீயொடு நின்று தவஞ்செய்ய வேண்டா* திருமார்பனைச் சிந்தையுள் வைத்துமென்பீர்*

வாயோதுவேதம் மலிகின்ற தொல்சீர்* மறையாளர் நாளும் முறையால் வளர்த்த*

தீயோங்கவோங்கப் புகழோங்கு* தில்லைத்திருச்சித்ரகூடம் சென்றுசேர்மின்களே.     

 

1160:

வெம்பும் சினத்துப் புனக்கேழல்ஒன்றாய்*

விரிநீர் முதுவெள்ளம் உள்புக்கழுந்த*

வம்புண் பொழில்சூழ் உலகன்றெடுத்தான்*

அடிப்போதுஅணைவான் விருப்போடுஇருப்பீர்*

பைம்பொன்னும் முத்தும் மணியும் கொணர்ந்து*

படைமன்னவன் பல்லவர்க்கோன்பணிந்த*

செம்பொன் மணிமாடங்கள்சூழ்ந்த*

தில்லைத்திருச்சித்ரகூடம் சென்றுசேர்மின்களே.     

 

1161:

அருமாநிலம் அன்றுஅளப்பான் குறளாய்*

அவுணன் பெருவேள்வியில் சென்றிரந்த*

பெருமான் திருநாமம் பிதற்றி*

நுந்தம் பிறவித்துயர் நீங்குதும் என்னகிற்பீர்*

கருமாகடலுள் கிடந்தான் உவந்து*

கவைநாஅரவினணைப் பள்ளியின்மேல்*

திருமால் திருமன்கையொடாடு*

தில்லைத்திருச்சித்ரகூடம் சென்றுசேர்மின்களே.     

 

1162:

கோமங்க வங்கக்கடல் வையம்உய்யக்* குலமன்னரங்கம் மழுவில் துணிய*

தாம்அங்கு அமருள் படைதொட்ட வென்றித்* தவமாமுனியைத் தமக்காக்ககிற்பீர்*

பூமங்கை தங்கிப் புலமங்கை மன்னிப்* புகழ்மங்கை எங்கும் திகழப்*

புகழ்சேர் சேமங்கொள் பைம்பூம் பொழில்சூழ்ந்த* தில்லைத்திருச்சித்ரகூடம்

                                                                                                சென்றுசேர்மின்களே.     

1163:

நெய்வாய் அழலம்பு துரந்து* முந்நீர் துணியப் பணிகொண்டு அணியார்ந்து*

இலங்குமையார் மணிவண்ணனை எண்ணி* நுந்தம் மனத்தே இருத்தும்படி வாழ வல்லீர்*

அவ்வாய் இளமங்கையர் பேசவுந்தான்* அருமாமறை அந்தணர்சிந்தைபுக*

செவ்வாய்க்கிளி நான்மறைபாடு* தில்லைத்திருச்சித்ரகூடம் சென்றுசேர்மின்களே.     

 

1164:

மௌவல் குழலாய்ச்சி மென்தோள் நயந்து* மகரம் சுழலச் சுழல்நீர்பயந்த*

தெய்வத்திருமாமலர் மங்கைதங்கு* திருமார்பனைச் சிந்தையுள் வைத்துமென்பீர்*

கௌவைக் களிற்றின் மருப்பும் பொருப்பில்* கமழ்சந்தும்உந்தி நிவாவலங்கொள்*

தெய்வப் புனல்சூழ்ந்து அழகாய* தில்லைத்திருச்சித்ரகூடம் சென்றுசேர்மின்களே.     

 

1165:

மாவாயினங்கம் மதியாது கீறி* மழைமாமுது குன்றெடுத்து*

ஆயர்தங்கள் கோவாய் நிரைமேய்த்து உலகுண்டமாயன்* குரைமாகழல்கூடும் குறிப்புடையீர்*

மூவாயிரம் நான்மறையாளர்* நாளும் முறையால் வணங்க அணங்காயசோதி*

தேவாதி தேவன் திகழ்கின்ற* தில்லைத் திருச்சித்ரகூடம் சென்றுசேர்மின்களே.     

 

1166:

செருநீலவேல் கண்மடவார் திறத்துச்* சினத்தோடுநின்று மனத்தால் வளர்க்கும்*

அருநீலபாவம் அகலப் புகழ்சேர்* அமரர்க்கும் எய்தாத அண்டத்து இருப்பீர்*

பெருநீர்நிவாவுந்தி முத்தும்கொணர்ந்து* எங்கும் வித்தும் வயலுள்

                                                                                                கயல்பாய்ந்துஉகள*

திருநீலம்நின்று திகழ்கின்ற* தில்லைத்திருச்சித்ரகூடம் சென்றுசேர்மின்களே. 

   

1167:##

சீரார் பொழில்சூழ்ந்து அழகாய* தில்லைத்திருசித்ரகூடத்து உறைசெங்கண்மாலுக்கு*

ஆராத உள்ளத்தவர்க்கேட்டு உவப்ப* அலைநீருலகுக்கு அருளே புரியும்*

காரார்ப்புயற்கைக் கலிகன்றி* குன்றாஒலிமாலை ஓரொன்பதோடுஒன்றும் வல்லார்*

பாரார்உலகம் அளந்தான்அடிக்கீழ்ப்* பலகாலம் நிற்கும்படி வாழ்வர்தாமே. (2)   

 

 

மூன்றாம் திருமொழி – வாடமருதிடை

 

1168:##

வாட மருதிடைபோகி* மல்லரைக்கொன்று ஒக்கலித்திட்டு*

ஆடல்நன்மாவுடைத்து* ஆயர்  ஆநிரைக்கு அன்றிடர் தீர்ப்பான்*

கூடிய மாமழை காத்த* கூத்தன்என வருகின்றான்*

சேடுயர் பூம்பொழில் தில்லைச்* சித்திரகூடத்துள்ளானே. (2)   3.3.1

 

1169:

பேய்மகள் கொங்கைநஞ்சுண்ட* பிள்ளைபரிசு இதுவென்றால்*

மாநிலமாமகள் *மாதர்க்கேள்வன் இவனென்றும்*

வண்டுண்பூமகள் நாயகனென்றும்* புலங்கெழு கோவியர் பாடி*

தேமலர் தூவ வருவான்* சித்திரகூடத்துள்ளானே.    3.3.2

 

1180:

பண்டுஇவன் வெண்ணெயுண்டானென்று* ஆய்ச்சியர் கூடிஇழிப்ப*

எண்டிசையோரும்வணங்க* இணைமருதூடு நடந்திட்டு*

அண்டரும் வானத்தவரும்* ஆயிர நாமங்களோடு*

திண்திறல் பாட வருவான்* சித்திரகூடத்துள்ளானே.    3.3.3

 

1171:

வளைக்கை நெடுங்கண் மடவார்* ஆய்ச்சியர் அஞ்சிஅழைப்ப*

தளைத்தவிழ் தாமரைப் பொய்கைத்* தண்தடம்புக்கு அண்டர் காண*

முளைத்த எயிற்றழல் நாகத்து* உச்சியில் நின்று அது வாட*

திலைத்தமர் செய்து வருவான்* சித்திரகூடத்துள்ளானே.    3.3.4

 

1172:

பருவக் கருமுகிலொத்து* முத்துடைமா கடலொத்து*

அருவித் திரள் திகழ்கின்ற* ஆயிரம் பொன்மலையொத்து*

உருவக்கருங்குழல் ஆய்ச்சி திறத்து* இனமால் விடைசெற்று*

தெருவில் திளைத்து வருவான்* சித்திரகூடத்துள்ளானே.    3.3.5

 

1173:##

எய்யச் சிதைந்தது இலங்கை மலங்க* வருமழை காப்பான்*

உய்யப் பருவரை தாங்கி* ஆநிரை காத்தான் என்றுஏத்தி*

வையத்தெவரும் வணங்க* அணங்கெழுமா மலைபோலே*

தெய்வப்புள் ஏறி வருவான்* சித்திரகூடத்துள்ளானே. (2)   3.3.6

 

1174:

ஆவர் இவை செய்தறிவார்?* அஞ்சனமா மலை போலே*

மேவுசினத்து அடல் வேழம்* வீழ முனிந்து*

அழகாய காவிமலர் நெடுங்கண்ணார்* கைதொழ வீதி வருவான்*

தேவர் வணங்கு தண் தில்லைச்* சித்திரகூடத்துள்ளானே.    3.3.7

 

1175:

பொங்கி  அமரில் ஒருகால்* பொன்பெயரோனை வெருவ*

அங்கு அவனாகம் அளைந்திட்டு* ஆயிரந்தோள் எழுந்தாட*

பைங்கண் இரண்டு எரிகான்ற* நீண்ட எயிற்றொடு பேழ்வாய்*

சிங்கவுருவின் வருவான்* சித்திரகூடத்துள்ளானே.    3.3.8

 

1176:

கருமுகில் போல்வது ஓர்மேனி* கையன ஆழியும் சங்கும்*

பெருவிறல் வானவர் சூழ* ஏழுலகும் தொழுதேத்த*

ஒருமகள் ஆயர்மடந்தை* ஒருத்தி நிலமகள்*

மற்றைத் திருமகளோடும் வருவான்* சித்திரகூடத்துள்ளானே.    3.3.9

 

1177:##

தேனமர் பூம்பொழில் தில்லைச்* சித்திரகூடம் அமர்ந்த*

வானவர் தங்கள் பிரானை* மங்கையர்க்கோன் மருவார்தம்*

ஊனமர்வேல் கலிகன்றி* ஒண்தமிழ் ஒன்பதோடு ஒன்றும்*

தானிவை கற்றுவல்லார்மேல்* சாரா தீவினை தாமே. (2)   3.3.10

 

நான்காம் திருமொழி – ஒருகுரளாய்

 

1178:##

ஒருகுறளாய் இருநிலம் மூவடி மண்வேண்டி*

 உலகனைத்தும் ஈரடியால் ஒடுக்கி*

ஒன்றும் தருகவெனா மாவலியைச் சிறையில் வைத்த*

 தாடாளன் தாளணைவீர்*

தக்ககீர்த்தி அருமறையின் திரள்நான்கும் வேள்வி ஐந்தும்*

 அங்கங்கள் அவையாறும் இசைகளேழும்*

தெருவில்மலி விழாவளமும் சிறக்கும்*

 காழிச்சீராம விண்ணகரே சேர்மினீரே. (2)       3.4.1

 

1179:

நான்முகன் நாள்மிகைத்தருக்கை இருக்குவாய்மை*

 நலமிகுசீர் உரோமசனால் நவிற்று*

நக்கன் ஊன்முகமார் தலையோட்åண் ஒழித்த எந்தை*

 ஒளிமலர்ச் சேவடிஅணைவீர்*

உழுசேயோடச் சூன்முகமார் வளையளைவாய் உகுத்த முத்தை*

 தொல்குருகுசினை என்னச்சூழ்ந்தியங்க*

எங்கும் தேன்முகமார் கமலவயல் சேல்பாய்*

 காழிச்சீராம விண்ணகரே சேர்மினீரே.        3.4.2

 

1180:

வையணைந்த நுதிக்கோட்டு வராகமொன்றாய்*

 மண்ணெல்லாம் இடந்தெடுத்து மதங்கள்செய்து*

நெய்யணைந்த திகிரியினால் வாணன்திண்தோள்*

 நேர்ந்தவன் தாளணைகிற்பீர்*

நெய்தலோடு மையணைந்த குவளைகள் தம்கண்களென்றும்*

 மலர்க்குமுதம் வாயென்றும் கடைசிமார்கள்*

செய்யணைந்து களைகளையாதேறும்*

 காழிச்சீராம விண்ணகரே சேர்மினீரே.        3.4.3

 

1181:

பஞ்சிய மெல்லடிப்பின்னை திறத்து*

 முன்னாள் பாய்விடைகள் ஏழடர்த்து பொன்னன்பைம்பூண்*

நெஞ்சிடந்து குருதியுக உகிர்வேலாண்ட*

 நின்மலன் தாளணைகிற்பீர்*

நீலமாலைத் தஞ்சுடைய இருள்தழைப்பத் தரளம் ஆங்கே*

 தண்மதியின் நிலாக்காட்டப் பவளந்தன்னால்*

செஞ்சுடர் வெயில்விரிக்கும் அழகார்*

 காழிச்சீராம விண்ணகரே சேர்மினீரே.        3.4.4

 

1182:

தெவ்வாய மறமன்னர் குருதிகொண்டு*

 திருக்குலத்தில் இறந்தோர்க்குத் திருத்தி செய்து*

வெவ்வாய மாகீண்டு வேழம்அட்ட*

 விண்ணவர்க்கோன் தாளணைவீர்*

விகிர்தமாதர் அவ்வாயவாள் நெடுங்கண் குவளைகாட்ட*

 அரவிந்தம் முகம்காட்ட அருகே ஆம்பல்*

செவ்வாயின் திரள்காட்டும் வயல்சூழ்*

 காழிச்சீராம விண்ணகரே சேர்மினீரே.        3.4.5

 

1183:

பைங்கண்விறல் செம்முகத்து வாலிமாளப்*

 படர்வனத்துக் கவந்தனொடும் படையார்த்திண்கை*

வெங்கண்விறல் விராதனுக விற்குனித்த*

 விண்ணவர்கோன் தாளணைவீர்*

வெற்புப்போலும் துங்கமுக மாளிகைமேல் ஆயங்கூறும்*

 துடியிடையார் முகக்கமலச் சோதிதன்னால்*

திங்கள்முகம் பனிபடைக்கும் அழகார்*

 காழிச்சீராம விண்ணகரே சேர்மினீரே.        3.4.6

 

1184:

பொருவில்வலம்புரிய அரக்கன் முடிகள் பத்தும்*

 புற்றுமறிந்தனபோலப் புவிமேல்சிந்த*

செருவில்வலம்புரி சிலைக்கை மலைத்தோள் வேந்தன்*

 திருவடி சேர்ந்து உய்கிற்பீர்*

 திரைநீர்த்தெள்கி மருவிவலம்புரி கைதைக்கழியூடாடி*

 வயல்நண்ணி மழைதருநீர் தவழ்கால்மன்னி*

தெருவில் வலம்புரி தரளமீனும்*

 காழிச்சீராம விண்ணகரே சேர்மினீரே.        3.4.7

 

1185:

பட்டரவேரகலல்குல் பவளச் செவ்வாய்*

 பணைநெடுந்தோள் பிணைநெடுங்கண் பாலாம்இஞ்சொல்*

மட்டவிழும் குழலிக்கா வானோர்க்காவில்*

 மரங்கொணர்ந்தான் அடியணைவீர்*

அணில்கள்தாவ நெட்டிலைய கருங்கமுகின் செங்காய்வீழ*

 நீள்பலவின் தாழ்சினையில் நெருங்கு*

பீனத்தெட்டபழம் சிதைந்து மதுச்சொரியும்*

 காழிச்சீராம விண்ணகரே சேர்மினீரே.        3.4.8

 

1186:

பிறைதங்கு சடையானை வலத்தே வைத்துப்*

 பிரமனைத் தன் உந்தியிலே தோற்றுவித்து*

கறைதங்கு வேல்தடங்கண் திருவைமார்பில்

 கலந்தவன் தாளணைகிற்பீர்*

கழுநீர்க்கூடித் துறைதங்கு கமலத்துத்துயின்று*

 கைதைத் தோடாரும் பொதிசோற்றுச் சுண்ணம்நண்ணி*

சிறைவண்டு களிபாடும் வயல்சூழ்*

 காழிச்சீராம விண்ணகரே சேர்மினீரே.        3.4.9

 

1187:##

செங்கமலத்து அயனனைய மறையோர்*

 காழிச் சீராம விண்ணகர் என்செங்கண்மாலை*

அங்கமலத் தடவயல்சூழ் ஆலிநாடன்*

 அருள்மாரி அரட்டமுக்கி அடையார்சீயம்*

கொங்குமலர்க் குழலியர்வேள் மங்கைவேந்தன்*

 கொற்றவேல் பரகாலன் கலியன் சொன்ன*

சங்கமுகத் தமிழ்மாலை பத்தும் வல்லார்*

 தடங்கடல்சூழ் உலகுக்குத் தலைவர் தாமே. (2)    3.4.10

 

ஐந்தாம் திருமொழி – வந்துனது

 

1188:##

வந்து உனதடியேன் மனம்புகுந்தாய்* புகுந்ததற்பின் வணங்கும்*

என்சிந்தனைக்கு இனியாய்!* திருவே! என்ஆருயிரே*

அந்தளிரணியார்* அசோகின் இளந்தளிர்கள் கலந்து*

அவையெங்கும் செந்தழல் புரையும்* திருவாலியம்மானே! (2)   3.5.1

 

1189:

நீலத்தடவரை* மாமணிநிகழக் கிடந்ததுபோல்*

அரவணை வேலைத்தலைக்கிடந்தாய்* அடியேன் மனத்திருந்தாய்*

சோலைத் தலைக்கணமாமயில் நடமாட* மழைமுகில் போன்றெழுந்து*

எங்கும் ஆலைப் புகைகமழும்* அணியாலியம்மானே!     3.5.2

 

1190:

நென்னல்போய் வருமென்றென்று எண்ணியிராமை* என் மனத்தே புகுந்தது*

இம்மைக்கு என்றிருந்தேன்* எறிநீர் வளஞ்செறுவில்*

செந்நெற் கூழை வரம்பொரீஇ* அரிவார் முகத்தெழு வாளைபோய்*

கரும்பு அந்நற்காடு அணையும்* அணியாலியம்மானே!     3.5.3

 

1191:

மின்னின் மன்னுநுடங்கிடை* மடவார்தம் சிந்தை மறந்துவந்து*

நின்மன்னு சேவடிக்கே* மறவாமை வைத்தாயால்*

புன்னை மன்னு செருந்தி* வண்பொழில் வாய் அகன்பணைகள் கலந்து*

எங்கும் அன்னம் மன்னும் வயல்*அணியாலியம்மானே!     3.5.4

 

1192:

நீடு பல்மலர் மாலையிட்டு* நின்னிணையடி தொழுதேத்தும்*

என்மனம் வாட நீ நினையேல்* மரமெய்த மாமுனிவா!*

பாடலின்ஒலி சங்கினோசைபரந்து* பல்பணையால் மலிந்து*

எங்கும் ஆடலோசையறா* அணியாலியம்மானே!      3.5.5

 

1193:

கந்த மாமலர் எட்டுமிட்டு* நின்காமர் சேவடி கைதொழுதெழும்*

புந்தியேன் மனத்தே* புகுந்தாயைப் போகலொட்டேன்*

சந்தி வேள்வி சடங்கு நான்மறை* ஓதி ஓதுவித்து ஆதியாய்வரும்*

அந்தணாளரறா* அணியாலியம்மானே!     3.5.6

 

1194:

உலவுதிரைக்கடல் பள்ளிகொண்டுவந்து* உன் அடியேன் மனம்புகுந்த*

அப்புலவ! புண்ணியனே!* புகுந்தாயைப் போகலொட்டேன்*

நிலவு மலர்ப்புன்னை நாழல் நீழல்* தண் தாமரை மலரின் மிசை*

மலிஅலவன் கண்படுக்கும்* அணியாலியம்மானே!     3.5.7

 

1195:

சங்கு தங்கு தடங்கடல்* கடன்மல்லையுள் கிடந்தாய்*

அருள்புரிந்து இங்கு என்னுள் புகுந்தாய்* இனிப்போயினால் அறையோ!*

கொங்கு செண்பக மல்லிகை மலர்ப்புல்கி* இன்னிள வண்டு போய்*

இளந்தெங்கின் தாதளையும்* திருவாலியம்மானே!    3.5.8

 

1196:

ஓதி ஆயிரநாமமும் பணிந்தேத்தி* நின்னடைந்தேற்கு*

ஒரு பொருள் வேதியா! அரையா!* உரையாய் ஒருமாற்றம் எந்தாய்!*

நீதியாகிய வேதமாமுனியாளர்* தோற்றம் உரைத்து*

மற்றவர்க்கு ஆதியாய் இருந்தாய்!* அணியாலியம்மானே!    3.5.9

 

1197:##

புல்லி வண்டறையும் பொழில் புடைசூழ்* தென்னாலி இருந்த மாயனை*

கல்லின் மன்னு திண்தோள்* கலியன்ஒலிசெய்த*

நல்ல இன்னிசை மாலை* நாலுமோர் ஐந்துமொன்றும் நவின்று* தாம்-

உடன்வல்லராய் உரைப்பார்க்கு* இடமாகும் வானுலகே. (2)   3.5.10

 

ஆறாம் திருமொழி – தூவிரிய

 

1198:##

தூவிரிய மலருழக்கித்* துணையோடும் பிரியாதே*

பூவிரிய மதுநுகரும்* பொறிவரிய சிறுவண்டே!*

தீவிரிய மறைவளர்க்கும்* புகழாளர் திருவாலி*

ஏவரிவெஞ் சிலையானுக்கு*என்நிலைமை உரையாயே. (2)    3.6.1

 

1199:

பிணியவிழும் நறுநீல* மலர்க்கிழியப் பெடையோடும்*

அணிமலர்மேல் மதுநுகரும்* அறுகால சிறுவண்டே!*

மணிகெழுநீர் மருங்கலரும்* வயலாலி மணவாளன் பணியறியேன்*

நீசென்று* என்பயலைநோய் உரையாயே.     3.6.2

 

 

1200:

நீர்வானம் மண்ணெரிகாலாய்* நின்ற நெடுமால்*

தந்தாராய நறுந்துளவம்* பெருந்தகையேற்கு அருளானே*

சீராரும் வளர்ப்பொழில்சூழ்* திருவாலி வயல்வாழும்*

கூர்வாய சிறுகுருகே!* குறிப்பறிந்து கூறாயே.     3.6.3

 

1201:

தானாக நினையானேல்* தன்நினைந்து நைவேற்கு*

ஓர்மீனாய கொடிநெடுவேள்* வலிசெய்ய மெலிவேனோ?*

தேன்வாய வரிவண்டே!* திருவாலி நகராளும்*

ஆனாயற்கு என்னுறுநோய்* அறியச்சென்று உரையாயே.     3.6.4

 

1202:

வாளாய கண்பனிப்ப* மென்முலைகள் பொன்னரும்ப*

நாள் நாளும்* நின்னினைந்து நைவேற்கு*

ஓ! மண்ணளந்த தாளாளா! தண்குடந்தை நகராளா!* வரையெடுத்த தோளாளா*

 என்தனக்குஓர்* துணையாளன்ஆகாயே!     3.6.5

 

1203:

தாராய தண்டுளவ* வண்டுஉழுத வரைமார்பன்*

போரானைக் கொம்பொசித்த* புட்பாகன்என்னம்மான்*

தேராரும் நெடுவீதித்* திருவாலி நகராளும்*

காராயன் என்னுடைய* கனவளையும் கவர்வானோ!    3.6.6

 

1204:

கொண்டுஅரவத் திரையுலவு* குரைகடல்மேல் குலவரைபோல்*

பண்டு அரவினணைக் கிடந்து* பாரளந்த பண்பாளா!*

வண்டுஅமரும் வளர்ப்பொழில்சூழ்* வயலாலிமைந்தா!*

எங்கண்துயில்நீ கொண்டாய்க்கு* என் கனவளையும் கடவேனோ!*     3.6.7

 

1205:

குயிலாலும் வளர்ப்பொழில்சூழ்* தண்குடந்தைக் குடமாடீ*

துயிலாத கண்ணிணையேன்* நின்நினைந்து துயர்வேனோ!*

முயலாலும் இளமதிக்கே* வளையிழந்தேற்கு*

இதுநடுவே வயலாலி மணவாளா!* கொள்வாயோ மணிநிறமே!     3.6.8

 

1206:

நிலையாளா! நின்வணங்க* வேண்டாயே ஆகிலும்*

என்முலையாள ஒருநாள்* உன்அகலத்தால் ஆளாயே*

சிலையாளா! மரமெய்த திறலாளா!* திருமெய்யமலையாள*

நீயாள* வளையாளமாட்டோமே.     3.6.9

 

1207:##

மையிலங்கு கருங்குவளை* மருங்கலரும் வயலாலி*

நெய்யிலங்கு சுடராழிப்படையானை* நெடுமாலை*

கையிலங்கு வேல்கலியன்* கண்டுரைத்த தமிழ்மாலை*

ஐயிரண்டும் இவைவல்லார்க்கு* அருவினைகள் அடையாவே. (2)    3.6.10

 

ஏழாம் திருமொழி – கள்வன்கொல்

 

1208:##

கள்வன்கொல் யான்அறியேன்* கரியான்ஒரு காளைவந்து*

வள்ளிமருங்குல்*எந்தன் மடமானினைப் போதவென்று*

வெள்ளிவளைக்கைப்பற்றப்பெற்ற* தாயரை விட்டகன்று*

அள்ளலம் பூங்கழனி* அணியாலி புகுவர்கொலோ! (2)    3.7.1

 

1209:

பண்டு இவன் ஆயன்நங்காய்!* படிறன்புகுந்து*

என்மகள்தன் தொண்டையஞ் செங்கனிவாய்* நுகர்ந்தானை உகந்து*

அவன்பின்கெண்டையொண் கண்மிளிரக்* கிளிபோல்மிழற்றி நடந்து*

வண்டமர் கானல்மல்கும்* வயலாலி புகுவர்கொலோ!     3.7.2

 

1210:

அஞ்சுவன் வெஞ்சொல் நங்காய்!* அரக்கர்க்குலப் பாவைதன்னை*

வெஞ்சின மூக்கரிந்த* விறலோன்திறம் கேட்கில் மெய்யே*

பஞ்சிய மெல்லடி* எம்பணைத்தோளி பரக்கழிந்து*

வஞ்சியந்தண் பணைசூழ்* வயலாலி புகுவர்கொலோ!     3.7.3

 

1211:

ஏதுஅவன் தொல்பிறப்பு?* இளையவன் வளையூதி*

மன்னர்த்தூதுவனாய் அவனூர்* சொலுவீர்கள்! சொலீர்அறியேன்*

மாதவன் தன்துணையா நடந்தாள்* தடம் சூழ்புறவில்*

போது வண்டாடு செம்மல்* புனலாலி புகுவர்கொலோ!     3.7.4

 

1212:

தாய்எனை என்றுஇரங்காள்* தடந்தோளி தனக்கமைந்த*

மாயனை மாதவனை* மதித்துஎன்னை அகன்றஇவள்*

வேயனதோள்விசிறிப்* பெடையன்னம் எனநடந்து*

போயின பூங்கொடியாள்* புனலாலி புகுவர்கொலோ!     3.7.5

 

1213:##

என்துணை என்றெடுத்தேற்கு* இறையேனும் இரங்கிற்றிலள்*

தன்துணையாய எந்தன்* தனிமைக்கும் இரங்கிற்றிலள்*

வன்துணை வானவர்க்காய்* வரஞ்செற்று அரங்கத்துறையும்*

இன்துணைவன்னொடும்போய்* எழிலாலி புகுவர்கொலோ! (2)    3.7.6

 

1214:

அன்னையும் அத்தனும் என்று* அடியோமுக்கு இரங்கிற்றிலள்*

பின்னைதன் காதலன்தன்* பெருந்தோள் நலம்பேணினளால்*

மின்னையும் வஞ்சியையும்* வென்றிலங்கும் இடையாள்நடந்து*

புன்னையும் அன்னமும்சூழ்* புனலாலி புகுவர்கொலோ!     3.7.7

 

1215:

முற்றிலும் பைங்கிளியும்* பந்தும்ஊசலும் பேசுகின்ற*

சிற்றில் மென்பூவையும்*விட்டகன்ற செழுங்கோதைதன்னை*

பெற்றிலேன் முற்றிழையைப்* பிறப்பிலி பின்னேநடந்து*

மற்றெல்லாம் கைதொழப்போய்* வயலாலி புகுவர்கொலோ!     3.7.8

 

 

1216:

காவியங்கண்ணி எண்ணில்* கடிமாமலர்ப் பாவையொப்பாள்*

பாவியேன் பெற்றமையால்* பணைத்தோளி பரக்கழிந்து*

தூவிசேரன்னமன்ன நடையாள்* நெடுமாலொடும்போய்*

வாவியந்தண் பணைசூழ்* வயலாலி புகுவர்கொலோ!     3.7.9

 

1217:##

தாய்மனம் நின்றிரங்கத்* தனியே நெடுமால் துணையா*

போயின பூங்கொடியாள்* புனலாலி புகுவரென்று*

காய்சின வேல்கலியன்* ஒலிசெய்தமிழ்மாலை பத்தும்*

மேவிய நெஞ்சுடையார்* தஞ்சமாவது விண்ணுலகே. (2)   3.7.10

 

எட்டாம் திருமொழி – நந்தாவிளக்கே

 

1218:##

`நந்தா விளக்கே! அளத்தற்கு அரியாய்!*நர நாரணனே! கருமா முகில்போல்எந்தாய்*

எமக்கே அருளாய்,’ எனநின்று* இமையோர் பரவுமிடம்*

எத்திசையும் கந்தாரம்அந்தேன் இசைபாடமாடே* களிவண்டுமிழற்ற நிழல்துதைந்து*

மந்தாரம்நின்று மணமல்கு நாங்கூர்* மணிமாடக்கோயில் வணங்கு என்மனனே! (2)   

 

1219:

முதலைத்தனிமா முரண்தீர அன்று* முதுநீர்த் தடத்துச் செங்கண்வேழம் உய்ய*

விதலைத்தலைச்சென்று அதற்கே உதவி* வினைதீர்த்த அம்மானிடம்*

விண்ணணவும் பதலைக்கபோதத்து ஒளிமாட நெற்றிப்* பவளக்கொழுங்கால பைங்கால்

                                                                                                                        புறவம்*

மதலைத்தலைமென் பெடைகூடுநாங்கூர்* மணிமாடக்கோயில் வணங்குஎன்மனனே!    

 

1220:

கொலைப்புண் தலைக்குன்றம் ஒன்றுஉய்ய* அன்று கொடுமாமுதலைக்கு இடர்செய்து*

கொங்குஆர் இலைப்புண்டரீகத்தவளின்பம்* அன்போடு அணைந்திட்ட அம்மானிடம்*

ஆளரியால் அலைப்புண்டயானை மருப்புமகிலும்* அணிமுத்தும் வெண்சாமரையோடு*

பொன்னி மலைப்பண்ட மண்டத்திரையுந்து நாங்கூர்* மணிமாடக்கோயில்

                                                                                                வணங்குஎன்மனனே!    

 

1221:

சிறையார் உவணப் புள்ஒன்றுஏறி*

அன்று திசைநான்கும் நான்கும் இரிய*

செருவில் கறையார் நெடுவேல் அரக்கர் மடியக்*

கடல்சூழ் இலங்கை கடந்தான் இடந்தான்*

முறையால் வளர்க்கின்ற முத்தீயர் நால்வேதர்*

ஐவேள்வியாறு அங்கர் ஏழினிசையோர்*

மறையோர் வணங்கப் புகழெய்து நாங்கூர்*

மணிமாடக்கோயில் வணங்குஎன்மனனே!    

 

1222:

இழையாடு கொங்கைத் தலைநஞ்சம் உண்டிட்டு*

இளங்கன்று கொண்டு விளங்காய் எறிந்து*

தழைவாட வன்தாள் குருந்தம் ஒசித்துத்*

தடந்தாமரைப் பொய்கை புக்கான் இடந்தான்*

குழையாட வல்லிக் குலமாட மாடே*

குயில்கூவநீடு கொடிமாடம்மல்கு*

மழையாடு சோலை மயிலாலு நாங்கூர்*

மணிமாடக்கோயில் வணங்கு என்மனனே!    

 

1223:

பண்நேர்மொழி ஆய்ச்சியர் அஞ்சவஞ்சப்* பகுவாய்க் கழுதுக்கு இரங்காது*

அவள்தன் உண்ணாமுலை மற்றவளாவியோடும்* உடனே சுவைத்தானிடம்*

ஓங்கு பைந்தாள் கண்ணார் கரும்பின் கழைதின்று வைகிக்* கழுநீரில் மூழ்கிச்

                                                                                                            செழுநீர்த் தடத்து*

மண்ணேந்து இளமேதிகள் வைகுநாங்கூர்* மணிமாடக்கோயில் வணங்குஎன்மனனே!    

 

1224:

தளைக்கட்டவிழ் தாமரை வைகுபொய்கைத்*

தடம்புக்கு அடங்கா விடங்கால்அரவம்*

இளைக்கத் திளைத்திட்டு அதன்உச்சி தன்மேல்*

அடிவைத்த அம்மானிடம்*

மாமதியம் திளைக்கும் கொடிமாளிகை சூழ் தெருவில்*

செழுமுத்து வெண்ணெற்கெனச் சென்று*

மூன்றில் வளைக்கை நுளைப்பாவையர் மாறுநாங்கூர்*

மணிமாடக்கோயில் வணங்குஎன்மனனே!    

 

1225:

துளையார் கருமென்குழல் ஆய்ச்சியர் தம்* துகில்வாரியும் சிற்றில் சிதைத்தும்*

முற்றாஇளையார் விளையாட்டொடு காதல் வெள்ளம்* விளைவித்த அம்மானிடம்*

வேல் நெடுங்கண் முளைவாளெயிற்று மடவார் பயிற்று* மொழிகேட்டிருந்து முதிராத

                                                                                                            இன்சொல்*

வளைவாயகிள்ளை மறைபாடு நாங்கூர்* மணிமாடக்கோயில் வணங்குஎன்மனனே!    

 

1226:

`விடையோடவென்று ஆய்ச்சி மென்தோள் நயந்த* விகிர்தா! விளங்கு சுடராழி என்னும்*

படையோடு சங்கொன்று உடையாய்!எனநின்று* இமையோர் பரவுமிடம்*

பைந்தடத்துப் பெடையோடுசெங்கால அன்னம் துகைப்பத்* தொகைப்

                                                                                    புண்டரீகத்திடைச் செங்கழுநீர்*

மடையோட நின்று மதுவிம்மு நாங்கூர்* மணிமாடக்கோயில் வணங்குஎன்மனனே!    

 

1227:##

வண்டார் பொழில்சூழ்ந்து அழகாய நாங்கூர்* மணிமாடக்கோயில் நெடுமாலுக்கு*

என்றும் தொண்டாய தொல்சீர் வயல்மங்கையர்க்கோன்* கலியன்ஒலிசெய்

                                                                                                            தமிழ்மாலைவல்லார்*

கண்டார் வணங்கக் களியானை மீதே* கடல்சூழ் உலகுக்கு ஒரு காவலராய்*

விண்தோய் நெடுவெண்குடை நீழலின் கீழ்* விரி நீர் உலகாண்டு விரும்புவரே. (2)   

 

ஒன்பதாம் திருமொழி – சலங்கொண்ட

 

1228:##

சலங்கொண்ட இரணியனது, அகல்மார்வம் கீண்டு*

 தடங்கடலைக் கடைந்து, அமுதம் கொண்டுகந்தகாளை*

நலங்கொண்ட கருமுகில்போல்திருமேனி அம்மான்*

 நாள்தோறும் மகிழ்ந்தினிது, மருவியுறைகோயில்*

சலங்கொண்டு மலர்சொரியும், மல்லிகை ஒண்செருந்தி*

 சண்பகங்கள் மணநாறும், வண்பொழிலினூடே*

வலங்கொண்டு கயலோடி, விளையாடுநாங்கூர்*

 வைகுந்த விண்ணகரம், வணங்குமடநெஞ்சே! (2)    3.9.1

 

1229:

திண்ணியதோள் அரியுருவாய்த், திசையனைத்தும் நடுங்கத்*

 தேவரொடு, தானவர்கள் திசைப்ப*

இரணியனை நண்ணிஅவன் மார்வகலத்து, உகிர்மடுத்த நாதன்*

 நாள்தோறும் மகிழ்ந்தினிது, மருவியுறைகோயில்*

எண்ணில்மிகு பெருஞ்செல்வத்து, எழில்விளங்கு மறையும்*

 ஏழிசையும் கேள்விகளும், இயன்ற பெருங்குணத்தோர்*

மண்ணில்மிகு மறையவர்கள், மலிவெய்து நாங்கூர்*

 வைகுந்த விண்ணகரம், வணங்குமடநெஞ்சே!     3.9.2

 

 

1230:

அண்டமும் இவ்வலைகடலும், அவனிகளுமெல்லாம்*

 அமுதுசெய்த திருவயிற்றன், அரன்கொண்டு திரியும்*

முண்டமது நிறைத்து, அவன்கண் சாபம்அது நீக்கும்*

 முதல்வன்அவன் மகிழ்ந்துஇனிது, மருவியுறைகோயில்*

எண்திசையும் பெருஞ்செந்நெல், இளந்தெங்குகதலி*

 இலைக்கொடி ஒண்குலைக்கமுகோடு, இசலிவளம் சொரிய*

வண்டுபல இசைபாட, மயிலால நாங்கூர்*

 வைகுந்த விண்ணகரம், வணங்குமடநெஞ்சே!     3.9.3

 

1231:

கலையிலங்கும் அகலல்குல், அரக்கர் குலக்கொடியைக்*

 காதொடு மூக்குடன்அரியக், கதறி அவள்ஓடி*

தலையில் அங்கை வைத்து, மலைஇலங்கை புகச்செய்த*

 தடந்தோளன் மகிழ்ந்துஇனிது, மருவியுறைகோயில்*

சிலையிலங்கு மணிமாடத், துச்சிமிசைச்சூலம்*

 செழுங்கொண்டல் அகடுஇரியச், சொரிந்த செழுமுத்தம்*

மலையிலங்கு மாளிகைமேல், மலிவெய்து நாங்கூர்*

 வைகுந்த விண்ணகரம், வணங்குமடநெஞ்சே!     3.9.4

 

1232:

மின்னனைய நுண்மருங்குல், மெல்லியற்காய்*

 இலங்கை வேந்தன் முடிஒருபதும், தோளிருபதும் போய்உதிர*

தன்நிகரில் சிலைவளைத்து, அன்றுஇலங்கை பொடிசெய்த*

 தடந்தோளன் மகிழ்ந்தினிது, மருவியுறைகோயில்,

செந்நெலொடு செங்கமலம், சேல்கயல்கள் வாளை*

 செங்கழுநீரொடு, மிடைந்துகழனி திகழ்ந்தெங்கும்*

மன்னுபுகழ் வேதியர்கள், மலிவெய்து நாங்கூர்*

 வைகுந்த விண்ணகரம்வணங்குமடநெஞ்சே!     3.9.5

 

1233:

பெண்மைமிகு, வடிவுகொடு வந்தவளைப்*

 பெரியபேயினது, உருவுகொடுமாள உயிருண்டு*

திண்மைமிகு மருதொடு, நற்சகடம் இறுத்தருளும்*

 தேவனவன் மகிழ்ந்துஇனிது, மருவியுறைகோயில்*

உண்மைமிகு மறையொடு நற்கலைகள், நிறை பொறைகள்*

 உதவுகொடைஎன்று இவற்றினொழிவில்லா*

பெரிய வண்மைமிகு மறையவர்கள், மலிவெய்து நாங்கூர்*

 வைகுந்த விண்ணகரம், வணங்குமடநெஞ்சே!     3.9.6

 

1234:

விளங்கனியை இளங்கன்று கொண்டு, உதிர எறிந்து*

 வேல்நெடுங்கண் ஆய்ச்சியர்கள், வைத்ததயிர் வெண்ணெய்*

உளங்குளிர அமுதுசெய்து, இவ்உலகுண்ட காளை*

 உகந்தினிது நாடோறும், மருவியுறைகோயில்*

இளம்படி நற்கமுகு குலைத்தெங்குகொடிச் செந்நெல்*

 ஈன்கரும்பு கண்வளரக், கால்தடவும் புனலால்*

வளங்கொண்ட பெருஞ்செல்வம், வளருமணி நாங்கூர்*

 வைகுந்த விண்ணகரம், வணங்குமடநெஞ்சே!     3.9.7

 

1235:

ஆறாத சினத்தின், மிகுநரகன் உரமழித்த*

 அடலாழித் தடக்கையன், அலர்மகட்கும் அரற்கும்*

கூறாகக் கொடுத்தருளும், திருவுடம்பன் இமையோர்*

 குலமுதல்வன் மகிழ்ந்தினிது, மருவியுறைகோயில்*

மாறாத மலர்க்கமலம், செங்கழுநீர் ததும்பி*

 மதுவெள்ளம் ஒழுக, வயலுழவர் மடையடைப்ப*

மாறாத பெருஞ்செல்வம், வளருமணி நாங்கூர்*

 வைகுந்த விண்ணகரம், வணங்குமடநெஞ்சே!     3.9.8

 

1236:

வங்கமலி தடங்கடலுள், வானவர்களோடு*

 மாமுனிவர் பலர்கூடி, மாமலர்கள் தூவி*

`எங்கள்தனி நாயகனே!, எமக்கருளாய்என்னும்*

 ஈசனவன் மகிழ்ந்தினிது, மருவியுறைகோயில்*

செங்கயலும் வாளைகளும்செந்நெலிடைக் குதிப்பச்*

 சேலுகளும் செழும்பணைசூழ், வீதிதொறும் மிடைந்து*

மங்குல் மதியகடுஉரிஞ்சு, மணிமாட நாங்கூர்

 வைகுந்த விண்ணகரம்வணங்குமடநெஞ்சே!     3.9.9

 

1237:##

சங்குமலி தண்டுமுதல், சக்கரம் முன்ஏந்தும்*

 தாமரைக்கண் நெடியபிரான், தான்அமரும் கோயில்*

வங்கமலி கடலுலகில், மலிவெய்து நாங்கூர்*

 வைகுந்த விண்ணகர்மேல், வண்டறையும் பொழில்சூழ்*

மங்கையர்தம் தலைவன் மருவலர்தம் உடல்துணிய*

 வாள்வீசும் பரகாலன், கலிகன்றி சொன்ன*

சங்கமலி தமிழ்மாலைபத்திவை வல்லார்கள்*

 தரணியொடு விசும்பாளும்தன்மை பெறுவாரே. (2)     3.9.10

 

பத்தாம் திருமொழி – திருமடந்தை

 

1238:##

திருமடந்தை மண்மடந்தை, இருபாலும் திகழத்*

 தீவினைகள் போயகல, அடியவர்கட்கு என்றும்அருள்நடந்து*

இவ்வேழுலகத்தவர் பணிய*

 வானோர் அமர்ந்தேத்த இருந்தஇடம்*

பெரும்புகழ் வேதியர் வாழ்தருமிடங்கள் மலர்கள், மிகுகைதைகள் செங்கழுநீர்*

 தாமரைகள் தடங்கள் தொறும், இடங்கள் தொறும் திகழ*

அருவிடங்கள் பொழில்தழுவி, எழில்திகழு நாங்கூர்*

 அரிமேய விண்ணகரம், வணங்குமடநெஞ்சே! (2)    3.10.1

 

1239:

வென்றிமிகு நரகன்உரமது, அழிய விசிறும்*

 விறலாழித் தடக்கையன், விண்ணவர்கட்கு அன்று*

குன்றுகொடு குரைகடலைக்கடைந்து அமுதமளிக்கும்*

 குருமணி என்னாரமுதம், குலவியுறை கோயில்*

என்றுமிகு பெருஞ்செல்வத்து, எழில்விளங்கு மறையோர்*

 ஏழிசையும் கேள்விகளும், இயன்ற பெருங்குணத்தோர்*

அன்றுலகம் படைத்தவனே, அனையவர்கள் நாங்கூர்*

 அரிமேய விண்ணகரம் வணங்குமடநெஞ்சே!     3.10.2

 

1240:

உம்பரும் இவ்வேழுலகும், ஏழ்கடலும் எல்லாம்*

 உண்டபிரான் அண்டர்கள், முங்கண்டு மகிழ்வெய்த*

கும்பமிகு மதயானை, மருப்பொசித்துக்*

 கஞ்சன் குஞ்சிபிடித்தடித்த பிரான் கோயில்*

மருங்கெங்கும் பைம்பொனொடு, வெண்முத்தம் பலபுன்னை காட்டப்*

 பலங்கனிகள் தேன்காட்டப், படவரவேரல்குல்*

அம்பனைய கண்மடவார், மகிழ்வெய்து நாங்கூர்*

 அரிமேய விண்ணகரம், வணங்குமடநெஞ்சே!     3.10.3

 

1241:

ஓடாத வாளரியின், உருவமது கொண்டு*

 அன்றுஉலப்பில் மிகுபெருவரத்த, இரணியனைப்பற்றி*

வாடாத வள்ளுகிரால் பிளந்து, அவன்தன் மகனுக்கு*

 அருள்செய்தான் வாழுமிடம்மல்லிகைசெங்கழுநீர்*

சேடேறு மலர்ச்செருந்தி, செழுங்கமுகம் பாளை*

 செண்பகங்கள் மணநாறும், வண்பொழிலினூடே*

ஆடேறு வயலாலைப், புகைகமழு நாங்கூர்

 அரிமேய விண்ணகரம், வணங்குமடநெஞ்சே!     3.10.4

 

1242:

கண்டவர்தம் மனம்மகிழ, மாவலிதன் வேள்விக்*

 களவில்மிகு சிறுகுறளாய், மூவடியென்று இரந்திட்டு*

அண்டமும் இவ்அலைகடலும், அவனிகளுமெல்லாம்*

 அளந்தபிரான் அமருமிடம், வளங்கொள்பொழிலயலே*

அண்டமுறு முழவொலியும், வண்டினங்கள்ஒலியும்*

 அருமறையின்ஒலியும், மடவார் சிலம்பின் ஒலியும்*

அண்டமுறும் அலைகடலின், ஒலிதிகழும் நாங்கூர்*

 அரிமேய விண்ணகரம், வணங்குமடநெஞ்சே!     3.10.5

 

1243:

வாள்நெடுங்கண் மலர்க்கூந்தல், மைதிலிக்கா*

 இலங்கை மன்னன் முடிஒருபதும் தோளிருபதும் போயுதிர*

தாணெடுந்தின் சிலைவளைத்த, தயரதன்சேய்*

 எந்தன் தனிச்சரண் வானவர்க்கரசு, கருதுமிடம் தடமார்*

சேணிடங்கொள் மலர்க்கமலம், சேல்கயல்கள் வாளை*

 செந்நெலொடு மடுத்தரிய* உதிர்ந்த செழுமுத்தம்*

வாள்நெடுங்கண் கடைசியர்கள், வாருமணி நாங்கூர்*

 அரிமேய விண்ணகரம், வணங்குமடநெஞ்சே!     3.10.6

 

1244:

தீமனத்தான் கஞ்சனது, வஞ்சனையில் திரியும்*

 தேனுகனும் பூதனைதன், ஆருயிரும் செகுத்தான்*

காமனைத்தான் பயந்த, கருமேனியுடைஅம்மான்*

 கருதுமிடம் பொருதுபுனல், துறைதுறை முத்துஉந்தி,

நாமனத்தால் மந்திரங்கள், நால்வேதம்*

 ஐந்து வேள்வியோடு ஆறங்கம், நவின்று கலை பயின்று*

அங்குஆமனத்து மறையவர்கள், பயிலுமணி நாங்கூர்*

 அரிமேய விண்ணகரம், வணங்குமடநெஞ்சே!     3.10.7

 

1245:

கன்றதனால் விளவெறிந்து, கனியுதிர்த்த காளை*

 காமருசீர் முகில்வண்ணன், காலிகள்முன் காப்பான்*

குன்றதனால் மழைதடுத்துக், குடமாடு கூத்தன்*

 குலவும்இடம், கொடிமதிள்கள் மாளிகை கோபுரங்கள்*

துன்றுமணி மண்டபங்கள், சாலைகள்*

 தூமறையோர் தொக்கீண்டித் தொழுதியொடு, மிகப்பயிலும் சோலை*

அன்றலர்வாய் மதுவுண்டு, அங்குஅளிமுரலும் நாங்கூர்*

 அரிமேய விண்ணகரம் வணங்குமடநெஞ்சே!     3.10.8

 

1246:

வஞ்சனையால் வந்தவள்தன், உயிருண்டு*

 வாய்த்த தயிருண்டு வெண்ணெயமுதுண்டு*

வலிமிக்க கஞ்சன்உயிர்அதுவுண்டு, இவ் உலகுண்ட காளை*

 கருதுமிடம் காவிரிசந்து, அகில்கனகம்உந்தி*

மஞ்சுலவு பொழிலூடும், வயலூடும் வந்து*

 வளங்கொடுப்ப மாமறையோர், மாமலர்கள் தூவி*

அஞ்சலித்து அங்குஅரிசரண்என்று, இரைஞ்சுமணி நாங்கூர்*

 அரிமேய விண்ணகரம் வணங்குமடநெஞ்சே!     3.10.9

 

1247:##

சென்று சினவிடையேழும், படவடர்த்துப்*

 பின்னை செவ்வித்தோள் புணர்ந்து, உகந்த திருமால்தன் கோயில்*

அன்றுஅயனும் அரஞ்சேயும், அனையவர்கள் நாங்கூர்*

 அரிமேய விண்ணகரம், அமர்ந்த செழுங்குன்றை*

கன்றிநெடுவேல் வலவன், மங்கையர்தம் கோமான்*

 கலிகன்றி யொலிமாலை, ஐந்தினொடு மூன்றும்*

ஒன்றினொடும் ஒன்றும், இவை கற்றுவல்லார்*

 உலகது உத்தமர்கட்கு உத்தமராய் உம்பரும்ஆவர்களே. (2) 3.10.10