முதல் திருமொழி
3563:##
தேவிமார் ஆவார் திருமகள்பூமி*ஏவமற்றமரர் ஆட்செய்வார்*
மேவிய உலகம் மூன்றவைஆட்சி*வேண்டுவேண்டு உருவம்நின் உருவம்*
பாவியேன் தன்னை அடுகின்ற கமலக்கண்ணதுஓர்* பவளவாய் மணியே*
ஆவியே!அமுதே! அலைகடல் கடைந்த அப்பனே!*காணுமாறு அருளாய். 8.1.1
3564:
காணுமாறருளாய் என்றென்றே கலங்கிக்* கண்ணநீர் அலமர*
வினையேன் பேணுமாறெல்லாம் பேணி* நின்பெயரே பிதற்றுமாறு அருள் எனக்கு அந்தோ*
காணுமாறு அருளாய் காகுத்தா!கண்ணா!* தொண்டனேன் கற்பகக்கனியே*
பேணுவார் அமுதே! பெரிய தண்புனல்சூழ்* பெருநிலம் எடுத்த பேராளா! 8.1.2
3565:
எடுத்தபேராளன் நந்தகோபன்தன்* இன்னுயிர்ச் சிறுவனே*
அசோதைக்கு அடுத்த பேரின்பக் குலவிளங்களிறே* அடியனேன் பெரிய அம்மானே*
கடுத்தபோர் அவுணன் உடல் இருபிளவாக்* கையுகிர் ஆண்ட எங்கடலே,*
அடுத்ததோர் உருவாய் இன்று நீ வாராய்* எங்ஙனம் தேறுவர் உமரே? 8.1.3
3566:
உமருகந்துகந்த உருவம்நின்உருவமாகி* உன்தனக்கு அன்பர் ஆனார்*
அவர் உகந்தமர்ந்த செய்கை உன்மாயை* அறிவொன்றும் சங்கிப்பன் வினையேன்*
அமரதுபண்ணி அகலிடம்புடைசூழ்* அடுபடை அவித்த அம்மானே*
அமரர்தம் அமுதே! அசுரர்கள் நஞ்சே* என்னுடை ஆருயிரேயோ! 8.1.4
3567:
ஆருயிரேயோ! அகலிடம்முழுதும்* படைத்திடந்து உண்டு உமிழ்ந்தளந்த*
பேருயிரேயோ!பெரியநீர் படைத்து* அங்குறைந்து அது கடைந்தடைத்து உடைத்த*
சீரியரேயோ! மனிசர்க்குத்தேவர்போல* தேவர்க்கும்தேவாவோ*
ஒருயிரேயோ! உலகங்கட்கு எல்லாம்* உன்னை நான் எங்கு வந்துறுகோ? 8.1.5
3568:
எங்குவந்துறுகோ என்னையாள்வானே* ஏழ்உலகங்களும் நீயே*
அங்கவர்க்கமைத்த தெய்வமும்நீயே* அவற்றவை கருமமும் நீயே*
பொங்கியபுறம்பால் பொருளுளவேலும்* அவையுமோ நீ இன்னேயானால்*
மங்கிய அருவாம் நேர்ப்பமும் நீயே* வான்புலம் இறந்ததும் நீயே. 8.1.6
3569:
இறந்ததும் நீயே எதிர்ந்ததும் நீயே* நிகழ்வதோ நீ இன்னேயானால்*
சிறந்தநின் தன்மை அதுவிதுவுதுவென்று* அறிவொன்றும் சங்கிப்பன்வினையேன்*
கறந்தபால் நெய்யே! நெய்யின் சுவையே!* கடலின் உள்அமுதமே*
அமுதில்பிறந்த இன்சுவையே! சுவையதுபயனே!* பின்னைதோள் மணந்தபேராயா!
3570:
மணந்தபேராயா! மாயத்தால்முழுதும்* வல்வினையேனை ஈர்க்கின்ற*
குணங்களை உடையாய்! அசுரர் வன்கையர்கூற்றமே!* கொடிய புள்ளுயர்த்தாய்*
பணங்களாயிரமும் உடைய பைந்நாகப்பள்ளியாய்!* பாற்கடல் சேர்ப்பா*
வணங்குமாறு அறியேன்! மனமும் வாசகமும்* செய்கையும் யானும் நீதானே.
3571:
யானும் நீதானே யாவதோமெய்யே* அருநரகவையும் நீ ஆனால்*
வானுயர் இன்பம் எய்தில்என்* மற்றை நரகமே எய்தில்என்? எனிலும்,*
யானும் நீதானாய் தெளிதொறும்,நன்றும் அஞ்சுவன்* நரகம் நான்அடைதல்*
வானுயர்இன்பம் மன்னிவீற்றிருந்தாய்* அருளுநின் தாள்களைஎனக்கே. 8.1.9
3572:
தாள்களை எனக்கே தலைத்தலை சிறப்பத்தந்த* பேருதவிக்கைம்மாறா*
தோள்களை ஆரத்தழுவி என்னுயிரை* அறவிலை செய்தனன் சோதீ,
தோள்கள் ஆயிரத்தாய்! முடிகள் ஆயிரத்தாய்* துணைமலர்க் கண்கள் ஆயிரத்தாய்*
தாள்கள் ஆயிரத்தாய்! பேர்கள்ஆயிரத்தாய்* தமியனேன் பெரிய அப்பனே! 8.1.10
3573:##
பெரிய அப்பனைப் பிரமன் அப்பனை* உருத்திரன் அப்பனை*
முனிவர்க்குரிய அப்பனை அமரர் அப்பனை* உலகுக்கோர் தனியப்பன் தன்னை*
பெரியவண்குருகூர் வண்சடகோபன்* பேணின ஆயிரத்துள்ளும்*
உரியசொல்மாலை இவையும்பத்திவற்றால்* உய்யலாம் தொண்டீர்! நங்கட்கே.
இரண்டாம் திருமொழி
3574:##
நங்கள் வரிவளையாய் அங்காளோ* நம்முடை ஏதலர் முன்பு நாணி*
நுங்கட்கு யான்ஒன்று உரைக்கும்மாற்றம்* நோக்குகின்றேன் எங்கும் காணமாட்டேன்*
சங்கம் சரிந்தன சாயிழந்தேன்* தடமுலை பொன்னிறமாய்த் தளர்ந்தேன்*
வெங்கண் பறவையின் பாகன் எங்கோன்* வேங்கடவாணணை வேண்டிச்சென்றே. (2)
3575:
வேண்டிச்சென்று ஒன்று பெறுகிற்பாரில்* என்னுடைத்தோழியர் நுங்கட்கேலும்*
ஈண்டிதுரைக்கும்படியை அந்தோ* காண்கின்றிலேன் இடராட்டியேன் நான்*
காண்தகுதாமரைக் கண்ணன் கள்வன்* விண்ணவர்கோன் நங்கள்கோனைக் கண்டால்*
ஈண்டியசங்கும் நிறைவும்கொள்வான்* எத்தனைகாலம் இளைக்கின்றேனே! 8.2.2
3576:
காலம் இளைக்கில் அல்லால் வினையேன் நான் இளைக்கின்றிலன்* கண்டு கொண்மின்*
ஞாலம் அறியப் பழிசுமந்தேன்* நன்னுதலீர்! இனி நாணித்தான்என்*
நீலமலர் நெடுஞ்சோதிசூழ்ந்த* நீண்டமுகில்வண்ணன் கண்ணன் கொண்ட*
கோலவளையொடு மாமைகொள்வான்* எத்தனைகாலம் கூடச்சென்றே? 8.2.3
3577:
கூடச்சென்றேன் இனி என்கொடுக்கேன்?* கோல்வளை நெஞ்சத் தொடக்கம் எல்லாம்*
பாடற்றொழிய இழந்துவைகல்* பல்வளையார்முன் பரிசழிந்தேன்*
மாடக்கொடிமதிள் தென்குளந்தை* வண்குடபால் நின்ற மாயக்கூத்தன்*
ஆடல்பறவை உயர்த்தவெல்போர்* ஆழிவலவினை ஆதரித்தே. 8.2.4
3578:
ஆழிவலவினை ஆதரிப்பும்* ஆங்கவன் நம்மில் வரவும் எல்லாம்*
தோழியர்காள்! நம்முடையமேதான்?* சொல்லுவதோ இங்கு அரியதுதான்*
ஊழிதோறூழி ஒருவனாக* நன்குணர்வார்க்கும் உணரலாகா*
சூழலுடைய சுடர்கொளாதித்* தொல்லையஞ்சோதி நினைக்குங்காலே. 8.2.5
3579:
தொல்லையஞ்சோதி நினைக்குங்கால்* என் சொல்லளவன்று இமையோர் தமக்கும்*
எல்லையிலாதன கூழ்ப்புச்செய்யும்* அத்திறம் நிற்க எம்மாமைகொண்டான்*
அல்லிமலர்த் தண்துழாயும் தாரான்* ஆர்க்கு இடுகோ இனிப்பூசல் சொல்லீர்*
வல்லிவளவயல்சூழ் குடந்தை* மாமலர்க்கண் வளர்க்கின்றமாலே. 8.2.6
3580:
மாலரிகேசவன் நாரணன்* சீமாதவன் கோவிந்தன் வைகுந்தன்‘ என்றென்று*
ஓலமிட என்னைப் பண்ணிவிட்டிட்டு* ஒன்றும் உருவும் சுவடும்காட்டான்*
ஏலமலர் குழல் அன்னைமீர்காள்!* என்னுடைத் தோழியர்க்காள்! என்செய்கேன்?*
காலம்பலசென்றும் காண்பதாணை* உங்களோடு எங்கள் இடையில்லையே. 8.2.7
3581:
இடையில்லையான் வளர்த்தகிளிகாள்* பூவைகள்காள்!குயில்காள்!மயில்காள்*
உடையநம்மாமையும் சங்கும் நெஞ்சும்* ஒன்றும் ஒழியவொட்டாது கொண்டான்*
அடையும் வைகுந்தமும் பாற்கடலும்* அஞ்சனவெற்பும் அவைநணிய*
கடையறப்பாசங்கள் விட்டபின்னைஅன்றி* அவன்அவை காண்கொடானே. 8.2.8
3582:
காண்கொடுப்பானல்லன் ஆர்க்கும் தன்னை* கைசெயப்பாலதோர் மாயந்தன்னால்*
மாண்குறள் கோலவடிவுகாட்டி* மண்ணும் விண்ணும் நிறைய மலர்ந்த*
சேண்சுடர்த்தோள்கள் பலதழைத்த* தேவபிராற்கு என் நிரைவினோடு*
நாண்கொடுத்தேன் இனி என்கொடுக்கேன்* என்னுடை நன்னுதல் நங்கைமீர்காள்.
3583:
என்னுடை நன்னுதல் நங்கைமீர்காள்!* யான் இனிச்செய்வதென்? என் நெஞ்சுஎன்னை*
நின்னிடையேன் அல்லேன்‘ என்றுநீங்கி* நேமியும் சங்கும் இருகைக்கொண்டு*
பன்னெடுஞ்சூழ்சுடர் ஞாயிற்றோடு* பான்மதி ஏந்தி ஓர்க்கோலநீல*
நன்னெடுங்குன்றம் வருவதொப்பான்* நான்மலர்ப் பாதம் அடைந்ததுவே. 8.2.10
3584:##
பாதம் அடைவதன் பாசத்தாலே* மற்றவன்பாசங்கள் முற்றவிட்டு*
கோதில்புகழ்க்கண்ணன் தன்னடிமேல்* வண்குருகூர்ச் சடகோபன்சொன்ன*
தீதில் அந்தாதியோர் ஆயிரத்துள்* இவையுமோர் பத்து இசையோடும் வல்லார்*
ஆதுமோர் தீதிலராகி* அங்கும்இங்கும் எல்லாம் அமைவார்கள் தாமே. (2)
மூன்றாம் திருமொழி
3585:##
அங்கும் இங்கும்* வானவர் தானவர்*
யாவரும் எங்கும் இனையைஎன்று* உன்னைஅறியகிலாதுஅலற்றி*
அங்கம்சேரும்* பூமகள் மண்மகள் ஆய்மகள்*
சங்குசக்கரக் கையவன் என்பர்* சரணமே. (2) 8.3.1
3586:
சரணமாகிய* நான்மறை நூல்களும் சாராதே*
மரணம் தோற்றம்* வன்பிணி மூப்பென்றிவை மாய்த்தோம்*
கரணப்பல்படை* பற்றறவோடும் கனலாழி*
அரணத்தின் படையேந்திய* ஈசற்கு ஆளாயே. 8.3.2
3587:
ஆளும் ஆளார் ஆழியும்* சங்கும் சுமப்பார்தாம்*
வாளும் வில்லும் கொண்டு* பின் செல்வார் மற்றில்லை*
தாளும் தோளும்* கைகளையாரத் தொழக்காணேன்*
நாளும் நாளும் நாடுவன்* அடியேன் ஞாலத்தே. 8.3.3
3588:
ஞாலம் போனகம்பற்றி* ஓர்முற்றா உருவாகி*
ஆலம்பேரிலை* அன்னவசஞ்செய்யும் அம்மானே*
காலம்பேர்வதுஓர்* காரிருள் ஊழி ஒத்துளதால்*
உன்கோலங்காரெழில்* காணலுற்று ஆழும் கொடியேற்கே. 8.3.4
3589:
கொடியார்மாடக்* கோளுரகத்தும் புளிங்குடியும்*
மடியாதின்னே* நீதுயில்மேவி மகிழ்ந்ததுதான்*
அடியார் அல்லல்தவிர்த்த* அசைவோ?அன்றேல்*
இப்படிதான் நீண்டுதாவிய* அசைவோ?பணியாயே. 8.3.5
3590:
பணியாஅமரர்* பணிவும் பண்பும் தாமேயாம்*
அணியார் ஆழியும்* சங்கமும் ஏந்தும் அவர் காண்மின்*
தணியா வெந்நோய்* உலகில் தவிர்ப்பான்*
திருநீல மணியார்மேனியோடு* என்மனம் சூழவருவாரே. 8.3.6
3591:
வருவார் செல்வார்* வண்பரிசாரத்து இருந்த*
என்திருவாழ்மார்வற்கு* என்திறம் சொல்லார் செய்வதுஎன்*
உருவார் சக்கரம்* சங்குசுமந்து இங்குஉம்மோடு*
ஒருபாடுழல்வான்* ஓரடியானும் உளனென்றே. 8.3.7
3592:
என்றேல் என்னை* உன்ஏரார்க்கோலத்திருந்த் அடிக்கீழ்*
நின்றே ஆட்செய்ய* நீகொண்டருள நினைப்பதுதான்*
குன்றேழ் பாரேழ்* சூழ்கடல்ஞாலம் முழுவேழும்*
நின்றே தாவிய* நீள்கழல் ஆழித் திருமாலே! 8.3.8
3593:
திருமால் நான்முகன்* செஞ்சடையான் என்றுஇவர்கள்*
எம்பெருமான் தன்மையை* யார் அறிகிற்பார் பேசியென்*
ஒருமாமுதல்வா!* ஊழிப்பிரான் என்னை ஆளுடை*
கருமாமேனியன்!என்பன்* என்காதல் கலக்கவே. 8.3.9
3594:
கலக்கம் இல்லா* நல்தவமுனிவர் கரைகண்டோர்*
துளக்கம் இல்லா* வானவர் எல்லாம் தொழுவார்கள்*
மலக்கம் எய்த* மாகடல்தன்னைக் கடைந்தானை*
உலக்க நாம் புகழ்கிற்பது* என்செய்வது உரையீரே. 8.3.10
3595:##
உரையா வெந்நோய்தவிர* அருள் நீள்முடியானை*
வரையார்மாட* மன்னு குருகூர்ச் சடகோபன்*
உரையேய் சொல்தொடை* ஓராயிரத்துள் இப்பத்தும்*
நிரையே வல்லார்* நீடு உலகத்துப் பிறவாரே. (2) 8.3.11
நான்காம் திருமொழி
3596:##
வார்கடா அருவி யானை மாமலையின்* மருப்பிணைக் குவடிறுத்துருட்டி*
ஊர்கொள் திண்பாகன் உயிர் செகுத்து* அரங்கின் மல்லரைக்கொன்று சூழ்பரண்மேல்*
போர்கடா அரசர் புறக்கிட* மாடமீமிசைக் கஞ்சனைத் தகர்த்த*
சீர்கொள்சிற்றாயன் திருச்செங்குன்றூரில்* திருச்சிற்றாறு எங்கள் செல்சார்வே.(2)
3597:
எங்கள் செல்சார்வு யாமுடைஅமுதம்* இமையவர் அப்பன் என்அப்பன்*
பொங்குமூவுலகும் படைத்தளித்தழிக்கும்* பொருந்துமூவுருவம் எம்அருவன்*
செங்கயல் உகளும் தேம்பணைபுடைசூழ்* திருச்செங்குன்றூர் திருச்சிற்றாறு-
அங்கு அமர்க்கின்ற* ஆதியான் அல்லால்* யாவர்மற்றுஎன்அமர் துணையே? 8.4.2
3598:
என்னமர்பெருமான் இமையவர்பெருமான்* இருநிலம் இடந்த எம்பெருமான்*
முன்னைவல்வினைகள் முழுதுடன்மாள* என்னைஆள்கின்ற எம்பெருமான்*
தென்திசைக்கு அணிகொள் திருச்செங்குன்றூரில்* திருச்சிற்று ஆற்றங்கரைமீபால்-
நின்றஎம்பெருமான்* அடியல்லால் சரணம் நினைப்பிலும்* பிறிதில்லை எனக்கே.
3599:
பிறிதில்லை எனக்குப் பெரியமூவுலகும்* நிறையப்பேர் உருவமாய் நிமிர்ந்த*
குறியமாண் எம்மான் குரைகடல்கடைந்த* கோலமாணிக்கம் என்எம்மான்*
செறிகுலைவாழைகமுகு தெங்கனிசூழ்* திருச்செங்குன்றூர் திருச்சிற்றாறுஅறிய*
மெய்ம்மையே நின்ற எம்பெருமான்* அடியிணை அல்லதோர் அரணே. 8.4.4
3600:
அல்லதோர் அரணும் அவனில் வேறுஇல்லை* அது பொருளாகிலும்*
அவனை அல்லது என்ஆவி அமர்ந்தணைகில்லாது* ஆதலால் அவன் உறைகின்ற*
நல்ல நான்மறையோர் வேள்வியுள்மடுத்த* நறும்புகை விசும்பொளி மறைக்கும்*
நல்ல நீள்மாடத் திருச்செங்குன்றூரில்* திருச்சிற்றாறு எனக்கு நல்அரணே.8.4.5
3601:
எனக்கு நல்அரணை எனதுஆருயிரை* இமையவர் தந்தைதாய் தன்னை*
தனக்கும் தன் தன்மை அறிவரியானைத்* தடங்கடல்பள்ளி அம்மானை*
மனக்கொள்சீர் மூவாயிரவர்* வண்சிவனும் அயனும்தானும் ஒப்பார்வாழ்*
கனக்கொள் திண்மாடத் திருச்செங்குன்றூரில்* திருச்சிற்றாறு அதனுள்கண்டேனே.
3602:
திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு அதனுள்கண்ட* அத்திருவடி என்றும்*
திருச்செய்ய கமலக்கண்ணும்* செவ்வாயும்செவ்வடியும் செய்யகையும்*
திருச்செய்யகமல உந்தியும்* செய்யகமல மார்பும் செய்யவுடையும்*
திருச்செய்யமுடியும் ஆரமும்படையும்* திகழ என் சிந்தையுளானே.8.4.7
3603:
திகழ என்சிந்தைஉள் இருந்தானைச்* செழுநிலத்தேவர் நான்மறையோர்*
திசை கைகூப்பி ஏத்தும்* திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறங்கரையானை*
புகர்கொள்வானவர்கள் புகலிடந்தன்னை* அசுரர்வங்கையர் வெங்கூற்றை*
புகழுமாறு அறியேன் பொருந்து மூவுலகும்* படைப்பொடு கெடுப்புக்காப்பவனே!8.4.8
3604:
படைப்பொடு கெடுப்புக் காப்பவன்* பிரமபரம்பரன் சிவபெருமான் அவனே*
இடைப்புக்கோர் உருவும் ஒழிவில்லைஅவனே* புகழ்வில்லையாவையும் தானே*
கொடைப்பெரும்புகழார் இனையர் தன்னானார்* கூறியவிச்சையோடு ஒழுக்கம்*
நடைப்பலி இயற்கைத் திருச்செங்குன்றூரில்* திருச்சிற்றாறுஅமர்ந்த நாதனே.
3605:
அமர்ந்த நாதனை அவர்அவராகி* அவர்க்கருள் அருளும் அம்மானை*
அமர்ந்ததண்பழனத் திருச்செங்குன்றூரில்* திருச்சிற்றாற்றங்கரையானை*
அமர்ந்தசீர்மூவாயிரவர் வேதியர்கள்* தம்பதி அவனிதேவர் வாழ்வு*
அமர்ந்தமாயோனை முக்கணம்மானை* நான்முகனை அமர்ந்தேனே. 8.4.10
3606:##
தேனைநன்பாலைக் கன்னலைஅமுதைத்* திருந்துலகுண்ட அம்மானை*
வானநான்முகனை மலர்ந்தண்கொப்பூழ்* மலர்மிசைப் படைத்தமாயோனை*
கோனை வண்குருகூர் வண்சடகோபன்* சொன்ன ஆயிரத்துள் இப்பத்தும்*
வானின்மீதேற்றி அருள்செய்துமுடிக்கும்* பிறவிமாமாயக் கூத்தினையே.8.4.11
ஐந்தாம் திருமொழி
3607:##
மாயக்கூத்தா!வாமனா!*வினையேன்கண்ணா! கண்கைகால்*
தூயசெய்ய மலர்களாச்*சோதிச்செவ்வாய் முகிழதா*
சாயல்சாமத் திருமேனி* தண்பாசடையா*
தாமரைநீள் வாசத்தடம்போல் வருவானே!*ஒருநாள் காண வாராயே.(2) 8.5.1
3608:
`காணவாராய்‘ என்றென்று* கண்ணும்வாயும் துவர்ந்து*
அடியேன் நாணி நன்னாட்டு அலமந்தால்*இரங்கி ஒருநாள் நீஅந்தோ,
காணவாராய் கருநாயிறுதிக்கும்*கருமாமாணிக்க*
நாள்நல்மலைபோல் சுடர்ச்சோதி* முடிசேர் சென்னி அம்மானே! 8.5.2
3609:
`முடிசேர் சென்னி அம்மா!*நின்மொய்பூந்தாமத் தண்துழாய்*
கடிசேர் கண்ணிப் பெருமானே!‘* என்றென்று ஏங்கி அழுதக்கால்*
படிசேர்மகரக் குழைகளும்*பவளவாயும் நால்தோளும்*
துடிசேர் இடையும் அமைந்தது ஓர்* தூநீர் முகில்போல் தோன்றாயே. 8.5.3
3610:
தூநீர் முகில்போல் தோன்றும்* நின்சுடர்க்கொள் வடிவும் கனிவாயும்*
தேநீர்க்கமலக் கண்களும்* வந்து என்சிந்தை நிறைந்தவா*
மாநீர்வெள்ளிமலை தன்மேல்* வண்கார் நீல முகில்போல*
தூநீர்க்கடலுள் துயில்வானே!* எந்தாய்! சொல்லமாட்டேனே. 8.5.4
3611:
சொல்லமாட்டேன் அடியேன்* உன்துளங்குசோதித் திருப்பாதம்*
எல்லையில் சீரிள ஞாயிறு* இரண்டுபோல் என்னுள்ளவா!*
அல்லல் என்னும் இருள்சேர்தற்கு* உபாயம் என்னே?ஆழிசூழ்*
மல்லல் ஞால முழுதுண்ட மாநீர்க்* கொண்டல் வண்ணனே! 8.5.5
3612:
`கொண்டல் வண்ணா! குடக்கூத்தா!* வினையேன் கண்ணா! கண்ணா*
என்அண்டவாணா!‘ என்றுஎன்னை* ஆளக் கூப்பிட்டழைத்தக்கால்*
விண்தன்மேல்தான் மண்மேல்தான்* விரிநீர்க் கடல்தான் மற்றுத்தான்*
தொண்டனேன் உன்கழல்காண* ஒருநாள்வந்து தோன்றாயே. 8.5.6
3613:
வந்து தோன்றாயன்றேல்* உன்வையம்தாய மலரடிக்கீழ்*
முந்தி வந்து யான்நிற்ப* முகப்பே கூவிப் பணிகொள்ளாய்*
செந்தண்கமலக் கண்கைகால்* சிவந்தவாயோர் கருநாயிறு*
அந்தம் இல்லாக் கதிர்பரப்பி* அலர்ந்ததொக்கும் அம்மானே! 8.5.7
3614:
ஒக்கும் அம்மான் உருவமென்று* உள்ளம் குழைந்து நாணாளும்*
தொக்க மேகப் பல்குழாங்கள்* காணுந்தோறும் தொலைவன்நான்*
தக்க ஐவர் தமக்காய்அன்று* ஈரைம்பதின்மர் தாள்சாய*
புக்கநல்தேர்த் தனிப்பாகா!* வாராய் இதுவோ பொருத்தமே? 8.5.8
3615:
`இதுவோ பொருத்தம் மின்னாழிப் படையாய்!* ஏறும் இருஞ்சிறைப்புள்*
அதுவே கொடியா உயர்த்தானே!‘* என்றென்று ஏங்கி அழுதக்கால்*
எதுவேயாகக் கருதுங்கொல்* இம்மாஞாலம் பொறைதீர்ப்பான்*
மதுவார் சோலை* உத்தர மதுரைப் பிறந்த மாயனே? 8.5.9
3616:
பிறந்தமாயா! பாரதம்பொருதமாயா!* நீயின்னே*
சிறந்தகால் தீநீர்வான்* மண்பிறவுமாய பெருமானே*
கறந்த பாலுள் நெய்யேபோல்* இவற்றுளெங்கும் கண்டுகொள்*
இறந்து நின்ற பெருமாயா!* உன்னை எங்கே காண்கேனே? 8.5.10
3617:##
`எங்கேகாண்கேன் ஈன்துழாய் அம்மான்தன்னை* யான்?’என்றென்று*
அங்கே தாழ்ந்த சொற்களால்* அந்தண் குருகூர்ச் சடகோபன்*
செங்கேழ் சொன்ன ஆயிரத்துள்* இவையும் பத்தும் வல்லார்கள்*
இங்கே காண இப்பிறப்பே மகிழ்வர்* எல்லியும் காலையே. (2) 8.5.11
ஆறாம் திருமொழி
3618:##
எல்லியும் காலையும்* தன்னை நினைந்தெழ*
நல்ல அருள்கள்* நமக்கேதந்து அருள்செய்வான்*
அல்லியந் தண்ணந்துழாய்* முடிஅப்பனூர்*
செல்வர்கள் வாழும்* திருக்கடித் தானமே. (2) 8.6.1
3619:
திருக்கடித் தானமும்* என்னுடைச் சிந்தையும்*
ஒருக்கடுத்துஉள்ளே* உறையும்பிரான் கண்டீர்*
செருக்கடுத்துஅன்று* திகைத்த அரக்கரை*
உருக்கெடவாளி* பொழிந்த ஒருவனே. 8.6.2
3620:
ஒருவர் இருவர் ஓர்* மூவரென நின்று*
உருவுகரந்து* உள்ளுந்தோறும் தித்திப்பான்*
திருவமர் மார்வன்* திருக்கடித்தானத்தை*
மருவியுறைகின்ற* மாயப்பிரானே. 8.6.3
3621:
மாயப்பிரான்* எனவல்வினை மாய்ந்தற*
நேசத்தினால் நெஞ்சம்* நாடு குடிகொண்டான்*
தேசத்தமரர்* திருக்கடித்தானத்தை*
வாசப்பொழில்மன்னு* கோயில்கொண்டானே. 8.6.4
3622:
கோயில் கொண்டான்தன்* திருக்கடித் தானத்தை*
கோயில்கொண்டான்* அதேனாடும் என்னெஞ்சகம்*
கோயில்கொள்* தெய்வமெல்லாம் தொழ*
வைகுந்தம் கோயில்கொண்ட* குடக்கூத்த அம்மானே. 8.6.5
3623:
கூத்தஅம்மான்* கொடியேனிடர் முற்றவும்*
மாய்த்தஅம்மான்* மதுசூத வம்மானுறை*
பூத்தபொழில்தண்* திருக்கடித் தானத்தை*
ஏத்தநில்லா* குறிக்கொண்டமின் இடரே. 8.6.6
3624:
கொண்டமின் இடர்கெட* உள்ளத்துக் கோவிந்தன்*
மண்விண் முழுதும்* அளந்தஒண்தாமரை*
மண்ணவர் தாம்தொழ* வானவர் தாம்வந்து*
நண்ணு திருக்கடித்தான நகரே. 8.6.7
3625:
தான நகர்கள்* தலைசிறந்து எங்கெங்கும்*
வானின் நிலம்கடல்* முற்றும் எம்மாயற்கே*
ஆனவிடத்தும் என் நெஞ்சும்*
திருக்கடித்தான நகரும்* தனதாயப் பதியே. 8.6.8
3626:
தாயப்பதிகள்* தலைசிறந்து எங்கெங்கும்*
மாயத்தினால் மன்னி* வீற்றிருந்தானுறை*
தேசத்தமரர்* திருக்கடித்தானத்துள்*
ஆயர்க்கதிபதி* அற்புதன்தானே. 8.6.9
3627:##
அற்புதன் நாராயணன்* அரி வாமனன்*
நிற்பது மேவி* இருப்பது என்நெஞ்சகம்*
நற்புகழ் வேதியர்* நான்மறை நின்றதிர்*
கற்பகச் சோலைத்* திருக்கடித் தானமே. 8.6.10
3628:##
சோலை திருக்கடித்தானத்து* உறைதிருமாலை*
மதிள்குருகூர்ச்* சடகோபன் சொல்*
பாலோடு அமுதன்ன* ஆயிரத்து இப்பத்தும்*
மேலை வைகுந்தத்து* இருத்தும் வியந்தே. (2) 8.6.11
ஏழாம் திருமொழி
3629:##
இருத்தும் வியந்து என்னைத்* தன் பொன்னடிக்கீழ் என்று*
அருத்தித்து எனைத்தோர்* பலநாள் அழைத்தேற்கு*
பொருத்தமுடை* வாமனன்தான் புகுந்து*
என்தன் கருத்தையுற* வீற்றிருந்தான் கண்டுகொண்டே. (2) 8.7.1
3630:
இருந்தான் கண்டுகொண்டு* எனதுஏழை நெஞ்சாளும்*
திருந்தாத ஓரைவரைத்* தேய்ந்தறமன்னி*
பெருந்தாள் களிற்றுக்கு* அருள்செய்த பெருமான்*
தருந்தான் அருள்தான்* இனியான் அறியேனே. 8.7.2
3631:
அருள்தான் இனியான் அறியேன்* அவன்என்னுள்*
இருள்தான்அற* வீற்றிருந்தான் இதுவல்லால்*
பொருள் தானெனின்* மூவுலகும் பொருளல்ல*
மருள்தான் ஈதோ?* மாயமயக்கு மயக்கே. 8.7.3
3632:
மாயமயக்கு மயக்கான்* என்னை வஞ்சித்து*
ஆயன் அமரர்க்கு* அரியே எனதம்மான்*
தூய சுடர்ச்சோதி* தனதென்னுள் வைத்தான்*
தேசம் திகழும்* தன்திருவருள் செய்தே. 8.7.4
3633:
திகழும்தன் திருவருள் செய்து* உலகத்தார்-
புகழும் புகழ்* தானதுகாட்டித் தந்து*என்னுள்-
திகழும்* மணிக்குன்றமொன்றே ஒத்துநின்றான்*
புகழும் புகழ்* மற்றெனக்கும் ஓர்பொருளே? 8.7.5
3634:
பொருள்மற்றெனக்கும் ஓர்பொருள்தன்னில்* சீர்க்கத் தருமேல்*
பின்னையார்க்குஅவன்* தன்னைக் கொடுக்கும்?*
கருமாணிக்கக் குன்றத்துத்* தாமரைபோல்*
திருமார்பு கால்கண்கை* செவ்வாய் உந்தியானே. 8.7.6
3635:
செவ்வாயுந்தி* வெண்பல் சுடர்க்குழை தன்னோடு*
எவ்வாய்ச் சுடரும்* தம்மில்முன்வளாய்க் கொள்ள*
செவ்வாய் முறுவலோடு* எனதுள்ளத்துஇருந்த*
அவ்வாயன்றி* யான் அறியேன் மற்றருளே. 8.7.7
3636:
அறியேன் மற்றருள்* என்னையாளும் பிரானார்*
வெறிதே அருள்செய்வர்* செய்வார்கட்கு உகந்து*
சிறியேனுடைச்* சிந்தையுள் மூவுலகும்*
தன்நெறியா வயிற்றில்கொண்டு* நின்றொழிந்தாரே. 8.7.8
3637:
வயிற்றில் கொண்டு* நின்றொழிந்தாரும் யவரும்*
வயிற்றில் கொண்டு* நின்று ஒருமூவுலகும்*
தம் வயிற்றில் கொண்டு* நின்றவண்ணம் நின்றமாலை*
வயிற்றில் கொண்டு* மன்னவைத்தேன் மதியாலே. 8.7.9
3638:
வைத்தேன் மதியால்* எனதுள்ளத்தகத்தே*
எய்த்தே ஒழிவேனல்லேன்* என்றும் எப்பொதும்*
மொய்த்தேய்திரை* மோது தண்பாற் கடலுளால்*
பைத்தேய் சுடர்ப்பாம்பணை* நம்பரனையே. 8.7.10
3639:##
சுடர்ப்பாம்பணை நம்பரனைத்* திருமாலை*
அடிச்சேர்வகை* வண்குருகூர்ச் சடகோபன்*
முடிப்பான் சொன்னவாயிரத்து* இப்பத்தும் சன்மம்விட*
தேய்ந்தற நோக்கும்* தன்கண்கள் சிவந்தே. (2) 8.7.11
எட்டாம் திருமொழி
3640:##
கண்கள் சிவந்து பெரியவாய்* வாயும் சிவந்து கனிந்து*
உள்ளே வெண்பல் இலகு சுடரிலகு* விலகு மகர குண்டலத்தன்*
கொண்டல் வண்ணன் சுடர்முடியன்* நான்கு தோளன் குனிசார்ங்கன்*
ஒண் சங்கதை வாளாழியான்* ஒருவன் அடியேன் உள்ளானே. (2) 8.8.1
3641:
அடியேனுள்ளான் உடலுள்ளான்* அண்டத்தகத்தான் புறத்துள்ளான்*
படியேயிது என்றுரைக்கலாம் படியன்* அல்லன் பரம்பரன்*
கடிசேர் நாற்றத்துள்ளாலை* இன்பத் துன்பக் கழிநேர்மை*
ஒடியா இன்பப் பெருமையோன்* உணர்விலும்பர் ஒருவனே. 8.8.2
3652:
உணர்விலும்பர் ஒருவனை* அவனது அருளால் உறல்பொருட்டு*
என்உணர்வினுள்ளே இருத்தினேன்* அதுவும் அவனது இன்னருளே*
உணர்வும் உயிரும் உடம்பும்* மற்ற உலப்பிலனவும் பழுதேயாம்*
உணர்வைப் பெறவூர்ந்திறவேறி* யானும் தானாய் ஒழிந்தானே. 8.8.3
3643:
யானும் தானாய் ஒழிந்தானை* யாதும் யவர்க்கும் முன்னோனை*
தானும் சிவனும் பிரமனுமாகிப்* பணைத்த தனிமுதலை*
தேனும் பாலும் கன்னலும்* அமுதுமாகித் தித்தித்து*
என் ஊனில் உயிரில் உணர்வினில்* நின்ற ஒன்றை உணர்ந்தேனே. 8.8.4
3644:
நின்ற ஒன்றை உணர்ந்தேனுக்கு* அதனுள் நேர்மை அதுவிதுவென்று*
ஒன்றும் ஒருவர்க்கு உணரலாகாது* உணர்ந்தும் மேலும் காண்பரிது*
சென்று சென்று பரம்பரமாய்* யாதுமின்றித் தேய்ந்தற்று*
நன்று தீதென்று அறிவரிதாய்* நன்றாய் ஞானம் கடந்ததே. 8.8.5
3645:
நன்றாய் ஞானம் கடந்துபோய்* நல்இந்திரியம் எல்லாம் ஈர்த்து*
ஒன்றாய்க் கிடந்த அரும்பெரும்பாழ்* உலப்பில் அதனை உணர்ந்துணர்ந்து*
சென்றாங்கு இன்ப துன்பங்கள்* செற்றுக் களைந்து பசையற்றால்*
அன்றே அப்போதேவீடு* அதுவே வீடு வீடாமே. 8.8.6
3646:
அதுவே வீடு வீடு பேற்று* இன்பந்தானும் அதுதேறி*
எதுவே தானும் பற்றின்றி* யாது மிலிகளாகிற்கில்*
அதுவே வீடு வீடு பேற்று* இன்பந்தானும் அதுதேறாது*
`எதுவே வீடு ஏது இன்பம்?’என்று* எய்த்தார் எய்த்தார் எய்த்தாரே. 8.8.7
3647:
எய்த்தார் எய்த்தார் எய்த்தாரென்று* இல்லத்தாரும் புறத்தாரும்-
மொய்த்து* ஆங்கல் அறிமுயங்கத்* தாம்போகும் போது*
உன்மத்தர்போல் பித்தேயேறி அநுராகம் பொழியும்போது* எம் பெம்மானோடு-
ஒத்தேசென்று* அங்குள்ளம்கூடக்* கூடிற்றாகில் நல்லுறைப்பே. 8.8.8
3648:
கூடிற்றாகில் நல்லுறைப்புக்* கூடாமையைக் கூடினால்*
ஆடல் பறவை உயர்கொடி* எம்மாயன் ஆவதது அதுவே*
வீடைப் பண்ணி ஒருபரிசே* எதிர்வும் நிகழ்வும் கழிவுமாய்*
ஓடித் திரியும் யோகிகளும்* உளருமில்லை அல்லரே. 8.8.9
3649:
உளருமில்லை அல்லராய்* உளராயில்லை ஆகியே*
உளரெம்மொருவர் அவர்வந்து* என்உள்ளத்துள்ளே உறைகின்றார்*
வளரும் பிறையும் தேய்பிறையும்போல்* அசைவும் ஆக்கமும்*
வளரும் சுடரும் இருளும்போல்* தெருளும் மருளும் மாய்த்தோமே. 8.8.10
3650:##
தெருளும் மருளும் மாய்த்துத்* தன்திருந்து செம்பொற் கழலடிக்கீழ்*
அருளியிருத்தும் அம்மானாம்* அயனாம் சிவனாம்*
திருமாலால் அருளப்பட்ட சடகோபன்* ஓராயிரத்துள் இப்பத்தால்*
அருளி அடிக்கீழ் இருத்தும்* நம்மண்ணல் கருமாணிக்கமே. (2) 8.8.11
ஒன்பதாம் திருமொழி
3651:##
கருமாணிக்க மலைமேல்* மணித்தடந்தாமரைக் காடுகள்போல்*
திருமார்வு வாய்கண்கை* உந்திகாலுடை ஆடைகள் செய்யபிரான்*
திருமால் எம்மான் செழுநீர்வயல்* குட்டநாட்டுத் திருப்புலியூர்*
அருமாயன் பேரன்றிப் பேச்சிலள்* அன்னைமீர் இதற்கு என்செய்கேனா. (2)
3652:
அன்னைமீர் இதற்கு என்செய்கேன்?* அணிமேருவின் மீதுலவும்*
துன்னுசூழ் சுடர் ஞாயிறும்* அன்றியும் பல்சுடர்களும்போல்*
மின்னு நீள்முடியாரம் பல்கலன்* தானுடை எம்பெருமான்*
புன்னையம் பொழில்சூழ்* திருப்புலியூர் புகழும்இவளே.8.9.2
3653:
புகழும் இவள்நின்று இராப்பகல்* பொருநீர்க்கடல் தீப்பட்டு*
எங்கும்திகழுமெரியோடு செல்வதொப்பச்* செழுங்கதிராழிமுதல்*
புகழும் பொருபடை ஏந்திப்* போர்புக்கு அசுரரைப் பொன்றுவித்தான்*
திகழு மணிநெடு மாடநீடு* திருப்பூலியுர் வளமே.8.9.3
3654:
ஊர்வளங்கிளர் சோலையும்* கரும்பும் பெருஞ்செந்நெலும் சூழ்ந்து*
ஏர் வளங்கிளர் தண்பணைக்* குட்டநாட்டுத் திருப்பூலியுர்*
சீர்வளங்கிளர் மூவுலகுண்டுமிழ்* தேவபிரான்*
பேர்வளங்கிளர்ந்தன்றிப் பேச்சிலள்* இன்று இப்புனையிழையே.8.9.4
3655:
புனையிழைகள் அணிவும் ஆடையுடையும்* புதுக்கணிப்பும்*
நினையும் நீர்மையதன்று இவட்குஇது* நின்று நினைக்கப்புக்கால்*
சுனையினுள் தடந்தாமரை மலரும்* தண் திருப்புலியுர்*
முனைவன் மூவுலகாளி* அப்பன் திருவருள் மூழ்கினளே.8.9.5
3656:
திருவருள் மூழ்கி வைகலும்* செழுநீர்நிறக் கண்ணபிரான்*
திருவருள்களும் சேர்ந்தமைக்கு* அடையாளம் திருந்தவுள*
திருவருள் அருளால் அவன்* சென்று சேர்தண் திருப்பூலியுர்*
திருவருள் கமுகொண் பழத்தது* மெல்லியல் செவ்விதழே.8.9.6
3657:
மெல்லிலைச் செல்வண் கொடிபுல்க* வீங்கிளந்தாள்கமுகின்*
மல்லிலை மடல்வாழை* ஈங்கனி சூழ்ந்து மணம்கமழ்ந்து*
புல்லிலைத் தெங்கினூடு* கால் உலவும்தண் திருப்பூலியுர்*
மல்லலம் செல்வக் கண்ணன் தாள்அடைந்தாள்* இம் மடவரலே. 8.9.7
3658:
மடவரல் அன்னைமீர்கட்கு* என்சொல்லிச் சொல்லுகேன்? மல்லைச்செல்வ*
வடமொழி மறைவாணர்* வேள்வியுள் நெய்யழல்வான் புகைபோய்*
திடவிசும்பில் அமரர் நாட்டை மறைக்கும்* தண் திருப்பூலியுர்*
படவர அணையான் தன்நாமம் அல்லால்* பரவாள் இவளே. 8.9.8
3659:
பரவாள் இவள் நின்று இராப்பகல்* பனிநீர்நிறக் கண்ணபிரான்*
விரவாரிசை மறை வேதியரொலி* வேலையின் நின்றொலிப்ப*
கரவார் தடந்தொறும் தாமரைக்கயம்* தீவிகை நின்றலரும்*
புரவார் கழனிகள் சூழ்* திருப்புலியூர்ப் புகழன்றிமற்றே. 8.9.9
3660:
அன்றி மற்றோர் உபாயமென்று* இவளந்தன் துழாய்கமழ்தல்*
குன்றமாமணி மாடமாளிகைக்* கோலக் குழாங்கள் மல்கி*
தென்திசைத் திலதம்புரைக்* குட்டநாட்டுத் திருப்பூலியுர்*
நின்ற மாயப்பிரான் திருவருளாம்* இவள் நேர்ப்பட்டதே.8.9.10
3661:##
நேர்ப்பட்ட நிறை மூவுலகுக்கும்* நாயகன் தன்னடிமை*
நேர்ப்பட்ட தொண்டர் தொண்டர் தொண்டர்* தொண்டன் சடகோபன் சொல்*
நேர்ப்பட்ட தமிழ்மாலை* ஆயிரத்துள் இவை பத்தும் நேர்பட்டார்*
அவர் நேர்பட்டார்* நெடுமாற்கு அடிமை செய்யவே. (2)8.9.11
பத்தாம் திருமொழி
3662:##
நெடுமாற்கடிமை செய்வேன்போல்* அவனை கருத வஞ்சித்து*
தடுமாற்றற்ற தீக்கதிகள்* முற்றும் தவிர்ந்த சதிர்நினைந்தால்*
கொடுமாவினையேன் அவனடியார் அடியே* கூடும் இதுவல்லால்*
விடுமாறென்பதென்? அந்தோ!* வியன் மூவுலகு பெறினுமே? (2) 8.10.1
3663:
வியன் மூவுலகு பெறினும்போய்த்* தானே தானே ஆனாலும்*
புயல் மேகம்போல் திருமேனியம்மான்* புனைபூங் கழலடிக்கீழ்*
சயமே அடிமை தலைநின்றார்* திருத்தாள் வணங்கி*
இம்மையே பயனே இன்பம் யான்பெற்றது* உறுமோ பாவியேனுக்கே? 8.10.2
3664:
உறுமோ பாவியேனுக்கு* இவ்உலகம் மூன்றும் உடன்நிறைய*
சிறுமாமேனி நிமிர்த்த* என்செந்தாமரைக்கண் திருக்குறளன்*
நறுமாவிரைநாண் மலரடிக்கீழ்ப்* புகுதல் அன்றி அவனடியார்*
சிறுமா மனிசராய் என்னைஆண்டார்* இங்கே திரியவே. 8.10.3
3665:
இங்கே திரிந்தேற்கு இழக்குற்றென்!* இருமாநிலம் முன்உண்டுமிழ்ந்த*
செங்கோலத்த பவளவாய்ச்* செந்தாமரைக்கண் என்னம்மான்*
பொங்கேழ் புகழ்கள் வாயவாய்ப்* புலன்கொள் வடிவு என்மனத்ததாய்*
அங்கேய் மலர்கள் கையவாய்* வழிபட்டோட அருளிலே? 8.10.4
3666:
வழிபட்டோட அருள்பெற்று* மாயன் கோல மலரடிக்கீழ்*
சுழிபட்டோடும் சுடர்ச்சோதி வெள்ளத்து* இன்புற்றுஇருந்தாலும்*
இழிபட்டோடும் உடலினில்பிறந்து* தஞ்சீர் யான்கற்று*
மொழிபட்டோடும் கவியமுதம்* நுகர்ச்சி உறுமோ முழுதுமே? 8.10.5
3667:
நுகர்ச்சி உறுமோ மூவுலகின்* வீடு பேறு தன்கேழில்*
புகர்ச்செம்முகத்த களிறட்ட* பொன்னாழிக்கை என்னம்மான்*
நிகர்ச் செம்பங்கி எரிவிழிகள்* நீண்ட அசுரர் உயிரெல்லாம்*
தகர்த்துண்டுழலும் புட்பாகன்* பெரிய தனிமாப் புகழே? 8.10.6
3668:
தனிமாப் புகழே எஞ்ஞான்றும்* நிற்கும் படியாத் தான்தோன்றி*
முனிமாப் பிரம முதல்வித்தாய்* உலகம் மூன்றும் முளைப்பித்த*
தனிமாத் தெய்வத் தளிரடிக்கீழ்ப்* புகுதல் அன்றி அவனடியார்*
நனிமாக் கலவி இன்பமே* நாளும் வாய்க்க நங்கட்கே. 8.10.7
3669:
நாளும் வாய்க்க நங்கட்கு* நளிர்நீர்க் கடலைப் படைத்து*
தன்தாளும் தோளும் முடிகளும்* சமன் இலாத பலபரப்பி*
நீளும் படர்பூங் கற்பகக்காவும்* நிறைபன்னாயிற்றின்*
கோளுமுடைய மணிமலைபோல்* கிடந்தான் தமர்கள் கூட்டமே. 8.10.8
3670:
தமர்கள் கூட்ட வல்வினையை* நாசஞ் செய்யும் சதிர்மூர்த்தி*
அமர்கொள் ஆழி சங்குவாள்* வில்தண்டாதி பல்படையன்*
குமரன் கோல ஐங்கணைவேள்தாதை* கோதில் அடியார்தம்*
தமர்கள் தமர்கள் தமர்களாம்* சதிரே வாய்க்க தமியேற்கே.8.10.9
3671:
வாய்க்க தமியேற்கு* ஊழிதோறூழி ஊழி*மாகாயாம்-
பூக்கொள் மேனி நான்குதோள்* பொன்னாழிக்கை என்னம்மான்*
நீக்கமில்லா அடியார்தம்* அடியார் அடியார் அடியார் எங்கோக்கள்*
அவர்க்கே குடிகளாய்ச் செல்லும்* நல்ல கோட்பாடே. 8.10.10
3672:##
நல்ல கோட்பாட்டு உலகங்கள்* மூன்றினுள்ளும் தான்நிறைந்த*
அல்லிக் கமலக் கண்ணனை* அந்தண் குருகூர்ச் சடகோபன்*
சொல்லப் பட்ட ஆயிரத்துள்* இவையும் பத்தும் வல்லார்கள்*
நல்ல பதத்தால் மனைவாழ்வர்* கொண்ட பெண்டிர் மக்களே. (2)8.10.11