முதல் திருமொழி
3233:##
‘கையார் சக்கரத்து* என்கருமாணிக்கமே!‘ என்றென்று,*
பொய்யே கைம்மைசொல்லிப்* புறமே புறமே ஆடி,*
மெய்யே பெற்றொழிந்தேன்,* விதிவாய்க்கின்று காப்பாரார்,*
ஐயோ கண்ணபிரான்!* அறையோ இனிப்போனாலே. (2) 5.1.1
3234:
‘போனாய் மாமருதின் நடுவே* என் பொல்லா மணியே,*
தேனே! இன்னமுதே!‘* என்றென்றே சில கூற்றுச்சொல்ல,*
தானேல் எம்பெருமான்* அவன் என்னாகி ஒழிந்தான்,*
வானே மாநிலமே* மற்றுமுற்றும் என்னுள்ளனவே. 5.1.2
3235:
உள்ளன மற்றுளவாப்* புறமேசில மாயம் சொல்லி,*
வள்ளல் மணிவண்ணனே!* என்றென்றே உன்னையும் வஞ்சிக்கும்,*
கள்ளமனம் தவிர்ந்தே* உன்னைக் கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேன்,*
வெள்ளத்தணைக் கிடந்தாய்* இனியுன்னை விட்டு என்கொள்வனே? 5.1.3
3236:
என்கொள்வன் உன்னை விட்டென்னும்* வாசகங்கள் சொல்லியும்,*
வன்கள்வனேன் மனத்தை வலித்துக்* கண்ண நீர் கரந்து,*
நின்கண் நெருங்கவைத்தே* என்தாவியை நீக்ககில்லேன்,*
என்கண் மலினமறுத்து* என்னைக்கூவி அருளாய்கண்ணனே! 5.1.4
3237:
கண்ணபிரானை* விண்ணோர் கருமாணிக்கத்தை அமுதை,*
நண்ணியும் நண்ணகில்லேன்* நடுவேயோர் உடம்பிலிட்டு,*
திண்ணம் அழுந்தக்கட்டிப்* பலசெய்வினை வன்கயிற்றால்,*
புண்ணை மறையவரிந்து* என்னைப் போரவைத்தாய் புறமே. 5.1.5
3238:
புறமறக் கட்டிக்கொண்டு* இரு வல்வினையார் குமைக்கும்,*
முறைமுறை ஆக்கைபுகலொழியக்* கண்டு கொண்டொழிந்தேன்,*
நிறமுடை நால்தடந்தோள்* செய்யவாய் செய்ய தாமரைக்கண்,*
அறமுயல் ஆழியங்கைக்* கருமேனி அம்மான் தன்னையே. 5.1.6
3239:
அம்மான் ஆழிப்பிரான்* அவன் எவ்விடத்தான்? யான்ஆர்?,*
எம்மா பாவியர்க்கும்* விதிவாய்க்கின்று வாய்க்கும்கண்டீர்,*
‘கைம்மா துன்பொழித்தாய்!‘என்று* கைதலை பூசலிட்டே,*
மெய்ம்மாலாய் ஒழிந்தேன்* எம்பிரானும் என் மேலானே. 5.1.7
3240:
மேலாத் தேவர்களும்* நிலத்தேவரும் மேவித்தொழும்,*
மாலார் வந்து இனநாள்* அடியேன் மனத்தே மன்னினார்,*
சேலேய் கண்ணியரும்* பெருஞ்செல்வமும் நன்மக்களும்,*
மேலாத் தாய்தந்தையும்* அவரே இனி யாவாரே. 5.1.8
3241:
ஆவாரார் துணை என்று* அலைநீர் கடலுள் அழுந்தும்-
நாவாய் போல்,* பிறவிக் கடலுள்* நின்று நான்துளங்க,*
தேவார் கோலத்தொடும்* திருச்சக்கரம் சங்கினொடும்,*
ஆவா! என்று அருள் செய்து* அடியேனொடும் ஆனானே. 5.1.9
3242:
ஆனான் ஆளுடையான் என்று* அஃதே கொண்டு உகந்துவந்து,*
தானே இன்னருள் செய்து* என்னைமுற்றவும் தானானான்,*
மீனாய் ஆமையுமாய்* நரசிங்கமுமாய்க் குறளாய்,*
கானோர் ஏனாமுமாய்க்* கற்கியாம் இன்னம் கார்வண்ணனே. 5.1.10
3243:##
கார்வண்ணன் கண்ணபிரான்* கமலத்தடங் கண்ணன் தன்னை,*
ஏர்வள ஒண்கழனிக்* குருகூர் சடகோபன் சொன்ன,*
சீர்வண்ண ஒண்தமிழ்கள்* இவை ஆயிரத்துள் இப்பத்தும்*
ஆர்வண்ணத்தால் உரைப்பார்* அடிக்கீழ் புகுவார் பொலிந்தே. 5.1.11
இரண்டாம் திருமொழி
3244:##
பொலிக பொலிக பொலிக!* போயிற்று வல்லுயிர்ச் சாபம்*
நலியும் நரகமும் நைந்த* நமனுக்கு இங்கு யாதொன்று மில்லை*
கலியும் கெடும் கண்டு கொள்மின்* கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்*
மலியப் புகுந்து இசைபாடி* ஆடி உழிதரக் கண்டோம்*. (2) 5.2.1
3245:
கண்டோம் கண்டோம் கண்டோம்* கண்ணுக் கினியன கண்டோம்*
தொண்டீர்! எல்லீரும் வாரீர்* தொழுது தொழுது நின்றார்த்தும்*
வண்டார் தண்ணன் துழாயான்* மாதவன் பூதங்கள் மண்மேல்*
பண் தான் பாடி நின்றாடிப்* பரந்து திரிகின்றனவே*. 5.2.2
3246:
திரியும் கலியுகம் நீங்கித்* தேவர்கள் தாமும் புகுந்து*
பெரிய கிதயுகம் பற்றிப்* பேரின்ப வெள்ளம் பெருக*
கரிய முகில்வண்ணன் எம்மான்* கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்*
இரியப் புகுந்து இசை பாடி* எங்கும் இடம் கொண்டனவே*. 5.2.3
3247:
இடங்கொள் சமயத்தை யெல்லாம்* எடுத்துக் களைவன போல*
தடங்கடல் பள்ளிப் பெருமான்* தன்னுடைப் பூதங்களேயாய்*
கிடந்தும் இருந்தும் எழுந்தும்* கீதம் பலபல பாடி*
நடந்தும் பறந்தும் குனித்தும்* நாடகம் செய்கின்றனவே*. 5.2.4
3248:
செய்கின்றது என் கண்ணுக்கொன்றே* ஒக்கின்றது இவ்வுலகத்து*
வைகுந்தன் பூதங்களேயாய்* மாயத்தினால் எங்கும் மன்னி*
ஐயம் ஒன்றில்லை அரக்கர்* அசுரர் பிறந்தீர் உள்ளÖரேல்*
உய்யும் வகையில்லை தொண்டீர்!* ஊழி பெயர்த்திடும் கொன்றே*. 5.2.5
3249:
கொன்று யிருண்ணும் விசாதி* பகைபசி தீயன வெல்லாம்*
நின்று இவ்வுலகில் கடிவான்* நேமிப் பிரான் தமர் போந்தார்*
நன்றிசை பாடியும் துள்ளியாடியும்* ஞாலம் பரந்தார்*
சென்று தொழுதுய்ம்மின் தொண்டீர்!* சிந்தையைச் செந்நிறுத்தியே*. 5.2.6
3250:
நிறுத்திநும் உள்ளத்துக் கொள்ளும்* தெய்வங்கள் உம்மை உய்யக்கொள்*
மறுத்தும் அவேனாடே கண்டீர்* மார்க்கண்டேயனும் கரியே*
கறுத்த மனமொன்றும் வேண்டா* கண்ணனல்லால் தெய்வ மில்லை*
இறுப்ப தெல்லாம் அவன் மூர்த்தியாய்* அவர்க்கே இறுமினே*. 5.2.7
3251:
இறுக்கும் இறையிறுத்துண்ண* எவ்வுலகுக்கும் தன் மூர்த்தி*
நிறுத்தினான் தெய்வங்களாக* அத்தெய்வ நாயகன் தானே*
மறுத்திருமார்வனவன் தன்* பூதங்கள் கீதங்கள் பாடி*
வெறுப்பின்றி ஞாலத்து மிக்கார்* மேவித் தொழுது உய்ம்மின் நீரே*. 5.2.8
3252:
மேவித் தொழுது உய்ம்மினீர்கள்* வேதப் புனித இருக்கை*
நாவில் கொண்டு அச்சுதன் தன்னை* ஞான விதி பிழையாமே*
பூவில் புகையும் விளக்கும்* சாந்தமும் நீரும் மலிந்து*
மேவித் தொழும் அடியாரும்* பகவரும் மிக்கது உலகே*. 5.2.9
3253:
மிக்க உலகுகள் தோறும்* மேவிக் கண்ணன் திருமூர்த்தி*
நக்கபிரானோடு* அயனும் இந்திரனும் முதலாக*
தொக்க அமரர் குழாங்கள்* எங்கும் பரந்தன தொண்டீர்!*
ஒக்கத் தொழுகிற்றிராகில்* கலியுகம் ஒன்றும் இல்லையே*. 5.2.10
3254:##
கலியுகம் ஒன்றும் இன்றிக்கே* தன்னடியார்க்கு அருள் செய்யும்*
மலியும் சுடரொளி மூர்த்தி* மாயப் பிரான் கண்ணன் தன்னை*
கலிவயல் தென்னன் குருகூர்* காரிமாறன் சடகோபன்*
ஒலிபுகழாயிரத்து இப்பத்து* உள்ளத்தை மாசறுக்குமே*. (2) 5.2.11
முன்றாம் திருமொழி
3255:##
மாசறு சோதி* என் செய்யவாய் மணிக்குன்றத்தை*
ஆசறு சீலனை* ஆதி மூர்த்தியை நாடியே*
பாசற வெய்தி* அறிவிழந்து எனை நாளையம்?*
ஏசறு மூரவர் கவ்வை* தோழீ! என்செய்யுமே?*. (2) 5.3.1
3256:
என்செய்யும் ஊரவர் கவ்வை* தோழீ! இனி நம்மை*
என்செய்ய தாமரைக் கண்ணன்* என்னை நிறைகொண்டான்*
முன்செய்ய மாமை இழந்து* மேனி மெலிவெய்தி*
என்செய்ய வாயும் கருங்கண்ணும்* பயப்பூர்ந்தவே*. 5.3.2
3257:
ஊர்ந்த சகடம்* உதைத்த பாதத்தன்* பேய்முலை-
சார்ந்து சுவைத்த செவ்வாயன்* என்னை நிறைகொண்டான்*
பேர்ந்தும் பெயர்ந்தும்* அவேனாடன்றி ஓர் சொல்லிலேன்*
தீர்ந்த என் தோழீ!* என்செய்யும் ஊரவர் கவ்வையே?*. 5.3.3
3258:
ஊரவர் கவ்வை எருவிட்டு* அன்னை சொல் நீர்மடுத்து*
ஈரநெல் வித்தி முளைத்த* நெஞ்சப் பெருஞ்செய்யுள்*
பேரமர் காதல்* கடல் புரைய விளைவித்த*
காரமர் மேனி* நம் கண்ணன் தோழீ! கடியனே*. 5.3.4
3259:
கடியன் கொடியன்* நெடியமால் உலகங்கொண்ட-
அடியன்* அறிவரு மேனி மாயத்தன்* ஆகிலும்-
கொடிய என் நெஞ்சம்* அவனென்றே கிடக்கும் எல்லே*
துடி கொளிடை மடத்தோழீ!* அன்னை என் செய்யுமே?*. 5.3.5
3260:
அன்னை என் செய்யில் என்?* ஊர் என் சொல்லில் என்? தோழிமீர்*
என்னை இனி உமக்காசை இல்லை* அகப்பட்டேன்*
முன்னை அமரர் முதல்வன்* வண் துவராபதி-
மன்னன்* மணிவண்ணன் வாசுதேவன் வலையுளே*. 5.3.6
3261:
வலையுள் அகப்படுத்து* என்னை நல்நெஞ்சம் கூவிக்கொண்டு*
அலைகடல் பள்ளியம்மானை* ஆழிப்பிரான் தன்னை*
கலைகொள் அகலல்குல் தோழீ!* நம் கண்களால் கண்டு*
தலையில் வணங்கம் ஆங்கொலோ?* தையலார் முன்பே*. 5.3.7
3262:
பேய் முலையுண்டு சகடம் பாய்ந்து* மருதிடைப்-
போய் முதல் சாய்த்து* புள்வாய் பிளந்து களிறட்ட*
தூமுறுவல் தொண்டை வாய்ப்பிரானை* எந்நாள் கொலோ*
யாம் உறுகின்றது தோழீ!* அன்னையர் நாணவே?*. 5.3.8
3263:
நாணும் நிறையும் கவர்ந்து* என்னை நல்நெஞ்சம் கூவிக்கொண்டு*
சேணுயர் வானத்திருக்கும்* தேவ பிரான் தன்னை*
ஆணை என் தோழீ!* உலகுதோறு அலர் தூற்றி* ஆம்-
கோணைகள் செய்து* குதிரியாய் மடலூர்துமே*. 5.3.9
3264:
யாம் மடலூர்ந்தும்* எம் ஆழியங்கைப் பிரானுடை*
தூமடல் தண்ணந்துழாய்* மலர் கொண்டு சூடுவோம்*
யாம் மடமின்றித்* தெருவுதோறு அயல் தையலார்*
நாமடங்காப் பழி தூற்றி* நாடும் இரைக்கவே*. 5.3.10
3265:##
இரைக்கும் கருங்கடல் வண்ணன்* கண்ணபிரான்தன்னை*
விரைக்கொள் பொழில்* குருகூர்ச் சடகோபன் சொன்ன*
நிரைக் கொளந்தாதி* ஓராயிரத்துள் இப்பத்தும்*
உரைக்க வல்லார்க்கு* வைகுந்தமாகும் தம் மூரெல்லாம்*. (2) 5.3.11
நான்காம் திருமொழி
3266:##
ஊரெல்லாம் துஞ்சி* உலகெல்லாம் நள்ளிருளாய்*
நீரெல்லாம் தேறி* ஓர் நீளிரவாய் நீண்டதால்*
பாரெல்லாம் உண்ட* நம் பாம்பணையான் வாரானால்*
ஆர் எல்லே! வல்வினையேன்* ஆவிகாப்பார் இனையே?* (2) 5.4.1
3267:
ஆவி காப்பார் இனியார்?* ஆழ்கடல்மண் விண்மூடி,
மாவி காரமாய்* ஓர் வல்லிரவாய் நீண்டதால்*
காவி சேர் வண்ணன்* என் கண்ணனும் வாரானால்*
பாவியேன் நெஞ்சமே!* நீயும் பாங்கல்லையே?*. 5.4.2
3268:
நீயும் பாங்கல்லைகாண்* நெஞ்சமே! நீளிரவும்*
ஓயும் பொழுதின்றி* ஊழியாய் நீண்டதால்*
காயும் கடுஞ்சிலை* என் காகுத்தன் வாரானால்*
மாயும் வகை அறியேன்* வல் வினையேன் பெண் பிறந்தே*. 5.4.3
3269:
பெண் பிறந்தார் எய்தும்* பெருந்துயர் காண்கிலேன் என்று*
ஒண்சுடரோன்* வாராதொளித்தான்* இம் மண்ணளந்த-
கண் பெரிய செவ்வாய்* எங்காரேறு வாரானால்*
எண் பெரிய சிந்தைநோய்* தீர்ப்பார் ஆர் என்னையே?*. 5.4.4
3270:
ஆர் என்னை ஆராய்வார்?* அன்னையரும் தோழியரும்*
‘நீரென்னே?’ என்னாதே* நீளிரவும் துஞ்சுவரால்*
காரன்ன மேனி* நம் கண்ணனும் வாரானால்*
பேரென்னை மாயாதால்* வல்வினையேன் பின் நின்றே*. 5.4.5
3271:
பின்நின்ற காதல் நோய்* நெஞ்சம் பெரிதடுமால்*
முன்நின்று இராவூழி* கண் புதைய மூடிற்றால்*
மன்னின்ற சக்கரத்து* எம் மாயவனும் வாரானால்*
இந்நின்ற நீளாவி* காப்பார் ஆர் இவ்விடத்தே?*. 5.4.6
3272:
காப்பார் ஆர் இவ்விடத்து?* கங்கிருளின் நுண்துளியாய்*
சேட்பால தூழியாய்ச்* செல்கின்ற கங்குல்வாய்*
தூப்பால வெண்சங்கு* சக்கரத்தன் தோன்றானால்*
தீப்பால வல்வினையேன்* தெய்வங்காள்! என்செய்கேனோ?*. 5.4.7
3273:
தெய்வங்காள்! என் செய்கேன்?* ஓரிரவு ஏழுêழியாய்*
மெய் வந்து நின்று* எனதாவி மெலிவிக்கும்*
கை வந்த சக்கரத்து* என் கண்ணனும் வாரானால்*
தை வந்த தண்தென்றல்* வெஞ்சுடரில் தானடுமே*. 5.4.8
3274:
வெஞ்சுடரில் தானடுமால்* வீங்கிருளின் நுண் துளியாய்*
அஞ்சுடர வெய்யோன்* அணி நெடுந்தேர் தோன்றாதால்*
செஞ்சுடர்த் தாமரைக்கண்* செல்வனும் வாரானால்*
நெஞ்சிடர் தீர்ப்பார் இனியார்?* நின்று உருகுகின்றேனே!*. 5.4.9
3275:
நின்று உருகுகின்றேனே போல* நெடுவானம்*
சென்றுருகி நுண்துளியாய்ச்* செல்கின்ற கங்குல்வாய்*
அன்று ஒருகால் வையம்* அளந்தபிரான் வாரான் என்று*
ஒன்றொருகால் சொல்லாது* உலகோ உறங்குமே* . 5.4.10
3276:##
உறங்குவான் போல்* யோகு செய்த பெருமானை*
சிறந்த பொழில் சூழ்* குரு கூர்ச்சடகோபன் சொல்*
நிறம் கிளர்ந்த அந்தாதி* ஆயிரத்து இப்பத்தால்*
இறந்து போய் வைகுந்தம்* சேராவாறு எங்ஙனேயோ?*. 5.4.11
ஐந்தாம் திருமொழி
3277:##
எங்ஙனேயோ அன்னைமீர்காள்!* என்னை முனிவது நீர்?*
நங்கள் கோலத் திருக்குறுங்குடி நம்பியை* நான் கண்டபின்*
சங்கினோடும் நேமியோடும்* தாமரைக் கண்களோடும்*
செங்கனிவாய் ஒன்றினோடும்* செல்கின்றது என்நெஞ்சமே*. (2) 5.5.1
3278:
என் நெஞ்சினால் நோக்கிக் காணீர்* என்னை முனியாதே*
தென்னன் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை* நான் கண்டபின்*
மின்னும் நூலும் குண்டலமும்* மார்வில் திருமறுவும்*
மன்னு பூணும் நான்கு தோளும்* வந்து எங்கும் நின்றிடுமே*. 5.5.2
3279:
நின்றிடும் திசைக்கும் நையுமென்று* அன்னையரும் முனிதிர்*
குன்ற மாடத் திருக்குறுங்குடி நம்பியை* நான் கண்டபின்*
வென்றி வில்லும் தண்டும் வாளும்* சக்கரமும் சங்கமும்*
நின்று தோன்றிக் கண்ணுள் நீங்கா* நெஞ்சுள்ளும் நீங்காவே*. 5.5.3
3280:
நீங்கநில்லாக் கண்ண நீர்களென்று* அன்னையரும் முனிதிர்*
தேன்கொள் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை* நான் கண்டபின்*
பூந்தண் மாலைத் தண் துழாயும்* பொன் முடியும் வடிவும்*
பாங்கு தோன்றும் பட்டும் நாணும்* பாவியேன் பக்கத்தவே*. 5.5.4
3281:
பக்கம் நோக்கி நிற்கும் நையுமென்று* அன்னையரும் முனிதிர்*
தக்க கீர்த்திக் திருக்குறுங்குடி நம்பியை* நான் கண்டபின்*
தொக்கசோதித் தொண்டை வாயும்* நீண்ட புருவங்களும்*
தக்கதாமரைக் கண்ணும்* பாவியேன் ஆவியின் மேலனவே*. 5.5.5
3282:
மேலும் வன்பழி நங்குடிக்கு இவள் என்று* அன்னை காண கொடாள்*
சோலைசூழ் தண்திருக்குறுங்குடி நம்பியை* நான் கண்டபின்*
கோலநீள் கொடி மூக்கும்* தாமரைக் கண்ணும் கனிவாயும்*
நீலமேனியும் நான்கு தோளும்* என் நெஞ்சம் நிறைந்தனவே*. 5.5.6
3283:
நிறைந்த வன்பழி நங்குடிக்கு இவள் என்று* அன்னை காணக்கொடாள்*
சிறந்த கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை* நான் கண்டபின்*
நிறைந்த சோதி வெள்ளஞ் சூழ்ந்த* நீண்ட பொன் மேனியொடும்*
நிறைந்து என்னுள்ளே நின்றொழிந்தான்* நேமியங்கையுளதே*. 5.5.7
3284:
கையுள் நன்முகம் வைக்கும் நையுமென்று* அன்னையரும் முனிதிர்*
மைகொள் மாடத் திருக்குறுங்குடி நம்பியை* நான் கண்டபின்*
செய்யதாமரைக் கண்ணும் அல்குலும்* சிற்றிடையும் வடிவும்*
மொய்யநீள் குழல் தாழ்ந்த தோள்களும்* பாவியேன் முன் நிற்குமே*. 5.5.8
3285:
முன் நின்றாயென்று தோழி மார்களும்* அன்னையரும் முனிதிர்*
மன்னு மாடத் திருக்குறுங்குடி நம்பியை* நான் கண்டபின்*
சென்னி நீண்முடி ஆதியாய* உலப்பிலணி கலத்தன்*
கன்னல் பாலமுதாகி வந்து* என் நெஞ்சம் கழியானே*. 5.5.9
3286:
கழியமிக்கதோர் காதலள் இவளென்று* அன்னை காணக்கொடாள்*
வழுவில் கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை* நான் கண்டபின்*
குழுமித் தேவர் குழாங்கள்* கை தொழச்சோதி வெள்ளத்தினுள்ளே*
எழுவதோர் உரு என்நெஞ்சுள் எழும்* ஆர்க்கும் அறிவரிதே*. 5.5.10
3287:##
அறிவரிய பிரானை* ஆழியங்கையனையே அலற்றி*
நறிய நல் மலர் நாடி* நன்குருகூர்ச் சடகோபன் சொன்ன*
குறிகொள் ஆயிரத்துள் இவை பத்தும்* திருக்குறுங்குடி யதன் மேல்*
அறியக் கற்று வல்லார் வைட்டணவர்* ஆழ்கடல் ஞாலத்துள்ளே*.(2) 5.5.11
ஆறாம் திருமொழி
3288:##
கடல்ஞாலம் செய்தேனும் யானே என்னும்*
கடல்ஞாலம் ஆவேனும் யானே என்னும்*
கடல்ஞாலம் கொண்டேனும் யானே என்னும்*
கடல்ஞாலம் கீண்டேனும் யானே என்னும்*
கடல்ஞாலம் உண்டேனும் யானே என்னும்*
கடல் ஞாலத்தீசன் வந்தேறக் கொலோ?*
கடல் ஞாலத்தீர்க்கு இவையென் சொல்லுகேன்?*
கடல் ஞாலத்து என் மகள் கற்கின்றனவே?*.(2) 5.6.1
3289:
கற்கும் கல்விக்கு எல்லையிலனே என்னும்*
கற்கும் கல்வி யாவேனும் யானே என்னும்*
கற்கும் கல்வி செய்வேனும் யானே என்னும்*
கற்கும் கல்வி தீர்ப்பேனும் யானே என்னும்*
கற்கும் கல்விச்சாரமும் யானே என்னும்*
கற்கும் கல்விநாதன் வந்தேறக் கொலோ?*
கற்கும் கல்வியீர்க்கு இவையென் சொல்லுகேன்*
கற்கும் கல்வி என்மகள் காண்கின்றனவே?*. 5.6.2
3290:
காண்கின்ற நிலமெல்லாம் யானே என்னும்*
காண்கின்ற விசும்பெல்லாம் யானே என்னும்*
காண்கின்ற வெந்தீயெல்லாம் யானே என்னும்*
காண்கின்ற இக்காற்றெல்லாம் யானே என்னும்*
காண்கின்ற கடலெல்லாம் யானே என்னும்*
காண்கின்ற கடல் வண்ணனேறக் கொலோ?*
காண்கின்ற உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்*
காண்கின்ற என் காரிகை செய்கின்றனவே?*. 5.6.3
3291:
செய்கின்ற கிதியெல்லாம் யானே என்னும்*
செய்வான் இன்றனகளும் யானே என்னும்*
செய்துமுன் இறந்தவும் யானே என்னும்*
செய்கைப் பயனுண்பேனும் யானே என்னும்*
செய்வார்களைச் செய்வேனும் யானே என்னும்*
செய்ய கமலக் கண்ணனேறக் கொலோ?*
செய்ய உலகத்தீர்க்கு இவையென் சொல்லுகேன்*
செய்ய கனிவாய் இளமான் திறத்தே?*. 5.6.4
3292:
திறம்பாமல் மண்காக்கின்றேன் யானே என்னும்*
திறம்பாமல் மலை எடுத்தேனே என்னும்*
திறம்பாமல் அசுரரைக் கொன்றேனே என்னும்*
திறம்காட்டி அன்றுஐவரைக் காத்தேனே என்னும்*
திறம்பாமல் கடல் கடைந்தேனே என்னும்*
திறம்பாத கடல்வண்ணன் ஏறக் கொலோ?*
திறம்பாத உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்*
திறம்பாது என் திருமகள் எய்தினவே?*. 5.6.5
3293:
இனவேய்மலை ஏந்தினேன் யானே என்னும்*
இனவேறுகள் செற்றேனும் யானே என்னும்*
இனவான்கன்று மேய்த்தேனும் யானே என்னும்*
இனவாநிரை காத்தேனும் யானே என்னும்*
இனவாயர் தலைவனும் யானே என்னும்*
இனத்தேவர் தலைவன் வந்தேறக் கொலோ?*
இனவேற்கண் நல்லீர்க்கு இவையென் சொல்லுகேன்*
இனவேற் கண்ணி என்மகள் உற்றனவே?*. 5.6.6
3294:
உற்றார்கள் எனக்கு இல்லை யாருமென்னும்*
உற்றார்கள் எனக்கு இங்கெல்லாரும் என்னும்*
உற்றார்களைச் செய்வேனும் யானே என்னும்*
உற்றார்களை அழிப்பேனும் யானே என்னும்*
உற்றார்களுக்கு உற்றேனும் யானே என்னும்*
உற்றாரிலி மாயன் வந்தேறக் கொலோ?*
உற்றீர்கட்கு என்சொல்லிச் சொல்லுகேன் யான்?*
உற்று என்னுடைப் பேதை உரைக்கின்றனவே?*. 5.6.7
3295:
உரைக்கின்ற முக்கண்பிரான் யானே என்னும்*
உரைக்கின்ற திசைமுகன் யானே என்னும்*
உரைக்கின்ற அமரரும் யானே என்னும்*
உரைக்கின்ற அமரர் கோன் யானே என்னும்,
உரைக்கின்ற முனிவரும் யானே என்னும்
உரைக்கின்ற முகில் வண்ணன் ஏறக்கொலோ?,
உரைக்கின்ற உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்?
உரைக்கின்ற என் கோமள ஒண்கொடிக்கே*. 5.6.8
3296:
கொடிய வினையாதுமிலனே என்னும்*
கொடிய வினையாவேனும் யானே என்னும்*
கொடியவினை செய்வேனும் யானே என்னும்*
கொடியவினை தீர்ப்பேனும் யானே என்னும்*
கொடியான் இலங்கை செற்றேனே என்னும்*
கொடிய புள்ளுடையவன் ஏறக் கொலோ?*
கொடிய உலகத்தீர்க்கு இவையென் சொல்லுகேன்*
கொடியேன் கொடி என்மகள் கோலங்களே?*. 5.6.9
3297:
கோலம் கொள் சுவர்க்கமும் யானே என்னும்*
கோலமில் நரகமும் யானே என்னும்*
கோலம்திகழ் மோக்கமும் யானே என்னும்
கோலம்கொள் உயிர்களும் யானே என்னும்,
கோலம்கொள் தனிமுதல் யானே என்னும்
கோலம்கொள் முகில்வண்ணன் ஏறக் கொலோ?
கோலம்கொள் உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்
கோலம் திகழ்கோதை என் கூந்தலுக்கே!*. 5.6.10
3298:##
கூந்தல் மலர் மங்கைக்கும் மண்மடந்தைக்கும்*
குலவாயர் கொழுந்துக்கும் கேள்வன் தன்னை*
வாய்ந்த வழுதி வள நாடன்* மன்னு-
குருகூர்ச் சடகோபன் குற்றேவல் செய்து*
ஆய்ந்த தமிழ் மாலை* ஆயிரத்துள்-
இவையும் ஓர் பத்தும் வல்லார்* உலகில்-
ஏந்து பெருஞ்செல்வத்தராய்த்* திருமால்-
அடியார்களைப் பூசிக்க நோற்றார்களே*.(2) 5.6.11
ஏழாம் திருமொழி
3299:##
நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன்* ஆகிலும் இனி உன்னைவிட்டு*
ஒன்றும் ஆற்ற கிற்கின்றிலேன்* அரவினணை அம்மானே*
சேற்றுத் தாமரை செந்நெலூடு மலர்* சிரீவர மங்கல நகர்*
வீற்றிருந்த எந்தாய்!* உனக்கு மிகையல்லேன் அங்கே*. (2) 5.7.1
3300:
அங்குற்றேன் அல்லேன் இங்குற்றேன் அல்லேன்* உன்னைக் காணும் அவாவில்
வீழ்ந்து* நான்-
எங்குற்றேனும் அல்லேன்* இலங்கை செற்ற அம்மானே*
திங்கள் சேர்மணி மாட நீடு* சிரீவர மங்கல நகருறை*
சங்கு சக்கரத்தாய்!* தமியேனுக்கு அருளாயே*. 5.7.2
3301:
கருள புட்கொடி சக்கரப் படை* வான நாட! என் கார்முகில் வண்ணா*
பொருளல்லாத என்னைப் பொருளாக்கி* அடிமை கொண்டாய்*
தெருள்கொள் நான்மறை வல்லவர் பலர்வாழ்* சிரீவர மங்கலநகர்க்கு*
அருள் செய்து அங்கிருந்தாய்!* அறியேன் ஒரு கைம்மாறே*. 5.7.3
3302:
மாறு சேர்படை நூற்றுவர் மங்க* ஓர் ஐவர்க்காயன்று மாயப்போர் பண்ணி*
நீறு செய்த எந்தாய்!* நிலங்கீண்ட அம்மானே*
தேறு ஞானத்தர் வேத வேள்வியறாச்* சிரீவர மங்கலநகர்*
ஏறி வீற்றிருந்தாய்!* உன்னை எங்கெய்தக் கூவுவனே?*. 5.7.4
3302:
எய்தக் கூவுதல் ஆவதே எனக்கு?* எவ்வதெவ்வத்து உளாயுமாய் நின்று*
கை தவங்கள் செய்யும்* கருமேனி அம்மானே*
செய்த வேள்வியர் வையத் தேவரறாச்* சிரீவர மங்கலநகர்*
கை தொழ இருந்தாய்* அது நானும் கண்டேனே*. 5.7.5
3304:##
ஏனமாய் நிலம் கீண்ட என்னப்பனே! கண்ணா!* என்றும் என்னை ஆளுடை*
வான நாயகனே!* மணி மாணிக்கச் சுடரே*
தேனமாம் பொழில் தண்சிரீவரமங்கலத்தவர்* கை தொழவுறை*
வான மாமலையே!* அடியேன் தொழ வந்தருளே*.(2) 5.7.6
3305:
வந்தருளி என்னெஞ்சிடம் கொண்ட* வானவர் கொழுந்தே!* உலகுக்கோர்-
முந்தைத் தாய்தந்தையே!* முழு ஏழுலகும் உண்டாய்!*
செந்தொழிலவர் வேத வேள்வியறாச்* சிரீவர மங்கலநகர்*
அந்தமில் புகழாய்!* அடியேனை அகற்றேலே*. 5.7.7
3306:
அகற்ற நீவைத்த மாயவல்லை ஐம்புலங்களாம் அவை* நன்கறிந்தனன்*
அகற்றி என்னையும் நீ* அருஞ்சேற்றில் வீழ்த்தி கண்டாய்*
பகற்கதிர் மணிமாட நீடு* சிரீவர மங்கை வாணனே* என்றும்-
புகற்கரிய எந்தாய்!* புள்ளின் வாய் பிளந்தானே!*. 5.7.8
3307:
புள்ளின்வாய் பிளந்தாய்! மருதிடை போயினாய்!* எருதேழ் அடர்த்த* என்-
கள்ள மாயவனே!* கரு மாணிக்கச் சுடரே*
தெள்ளியார் திரு நான்மறைகள் வல்லார்* மலிதண் சிரீவர மங்கை*
உள் இருந்த எந்தாய்!* அருளாய் உய்யுமாறு எனக்கே*. 5.7.9
3308:
ஆறெனக்கு நின் பாதமே* சரணாகத் தந்தொழிந்தாய்* உனக்கு ஓர் கைம்-
மாறு நானொன்றிலேன்* என தாவியும் உனதே*
சேரு கொள் கரும்பும் பெருஞ்செந்நெலும்* மலிதண் சிரீவர மங்கை*
நாறு பூந்தண் துழாய் முடியாய்!* தெய்வ நாயகனே!*. 5.7.10
3309:##
தெய்வ நாயகன் நாரணன்* திரிவிக்கிரமன் அடியிணைமிசை*
கொய்கொள் பூம்பொழில் சூழ்* குருகூர்ச் சடகோபன்*
செய்த ஆயிரத்துள் இவை* தண்சிரீவர மங்கை மேய பத்துடன்*
வைகல் பாட வல்லார்* வானோர்க்கு ஆராவமுதே*.(2) 5.7.11
எட்டாம் திருமொழி
3310:##
ஆரா அமுதே! அடியேன் உடலம்* நின்பால் அன்பாயே*
நீராய் அலைந்து கரைய* உருக்குகின்ற நெடுமாலே*
சீரார் செந்நெல் கவரி வீசும்* செழுநீர்த் திருகுடந்தை*
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய்!* கண்டேன் எம்மானே!*. (2) 5.8.1
3311:
எம்மானே! என் வெள்ளை மூர்த்தி!* என்னை ஆள்வானே*
எம்மா உருவும் வேண்டும் ஆற்றால்* ஆவாய் எழிலேறே*
செம்மா கமலம் செழுநீர் மிசைக்கண்மலரும்* திருக்குடந்தை*
அம்மா மலர்க்கண் வளர்கின்றானே!* என்நான் செய்கேனே!*. 5.8.2
3312:
என்நான் செய்கேன்! யாரே களைகண்?* என்னை என் செய்கின்றாய்?*
உன்னால் அல்லால் யாவராலும்* ஒன்றும் குறை வேண்டேன்*
கன்னார் மதிள்சூழ் குடந்தைக் கிடந்தாய்!* அடியேன் அருவாணாள்*
சென்னாள் எந்நாள்?அந்நாள்* உனதாள் பிடித்தே செலக்காணே*. 5.8.3
3313:
செலக்காண் கிற்பார் காணும் அளவும்* செல்லும் கீர்த்தியாய்*
உலப்பிலானே! எல்லாவுலகும் உடைய* ஒரு மூர்த்தி*
நலத்தால் மிக்கார் குடந்தைக் கிடந்தாய்!* உன்னைக் காண்பான் நான்-
அலப்பாய்*ஆகாசத்தை நோக்கி* அழுவன் தொழுவனே*. 5.8.4
3314:
அழுவன் தொழுவன் ஆடிக் காண்பன்* பாடி அலற்றுவன்*
தழுவல் வினையால் பக்கம் நோக்கி* நாணிக் கவிழ்ந்திருப்பன்*
செழுவொண் பழனக் குடந்தைக் கிடந்தாய்!* செந்தாமரைக் கண்ணா!*
தொழுவனேனை உனதாள்* சேரும் வகையே சூழ்கண்டாய்*. 5.8.5
3315:
சூழ்கண்டாய் என் தொல்லை வினையை அறுத்து* உன் அடிசேரும்-
ஊழ்கண்டிருந்தே* தூராக் குழிதூர்த்து* எனைநாள் அகன்றிருப்பன்?*
வாழ்தொல் புகழார் குடந்தைக் கிடந்தாய்!* வானோர் கோமானே*
யாழினிசையே! அமுதே!* அறிவின் பயனே! அரியேறே!*. 5.8.6
3316:
அரியேறே! என்னம் பொற்சுடரே!* செங்கண் கருமுகிலே!*
எரியே! பவளக் குன்றே!* நால்தோள் எந்தாய்! உனதருளே*
பிரியா அடிமை என்னைக் கொண்டாய்* குடந்தைத் திருமாலே*
தரியேன் இனி உன் சரணம் தந்து* என் சன்மம் களையாயே*. 5.8.7
3317:
களைவாய் துன்பம் களையா தொழிவாய்* களைகண் மற்றிலேன்*
வளைவாய் நேமிப் படையாய்!* குடந்தைக் கிடந்த மாமாயா*
தளரா உடலம் எனதாவி* சரிந்து போம் போது*
இளையாது உனதாள் ஒருங்கப் பிடித்து* போத இசை நீயே*. 5.8.8
3318:
இசைவித்து என்னை உன்தாளிணை கீழ்* இருத்தும் அம்மானே*
அசைவில் அமரர் தலைவர் தலைவா* ஆதிப் பெரு மூர்த்தி*
திசைவில் வீசும் செழுமாமணிகள் சேரும்* திருக்குடந்தை*
அசைவில் உலகம் பரவக் கிடந்தாய்!* காண வாராயே*. 5.8.9
3319:##
வாரா வருவாய் வருமென் மாயா!* மாயா மூர்த்தியாய்*
ஆராவமுதாய் அடியேன் ஆவி* அகமே தித்திப்பாய்*
தீராவினைகள் தீர என்னை ஆண்டாய்!* திருக்குடந்தை-
ஊரா!* உனக்காட்பட்டும் *அடியேன் இன்னம் உழல்வேனோ?*. (2) 5.8.10
3320:##
உழலை என்பின் பேய்ச்சி முலையூடு* அவளை உயிருண்டான்*
கழல்கள் அவையே சரணாக கொண்ட* குருகூர்ச் சடகோபன்*
குழலின் மலியச் சொன்ன* ஓராயிரத்துள் இப்பத்தும்*
மழலை தீர வல்லார்* காமர் மானேய் நோக்கியர்க்கே*.(2) 5.8.11
ஒன்பதாம் திருமொழி
3321:##
மானேய் நோக்குநல்லீர்!* வைகலும் வினையேன் மெலிய*
வானார் வண் கமுகும்* மது மல்லிகை கமழும்*
தேனார் சோலைகள் சூழ்* திருவல்ல வாழுறையும்-
கோனாரை* அடியேன் அடிகூடுவது என்றுகொலோ?*.(2) 5.9.1
3322:
என்றுகொல்? தோழிமீர்காள்* எம்மை நீர் நலிந்து என்செய்தீரோ?*
பொன்திகழ் புன்னை மகிழ்* புதுமாதவி மீதணவி*
தென்றல் மணங்கமழும்* திருவல்ல வாழ்நகருள்-
நின்ற பிரான்* அடிநீறு அடியோம் கொண்டு சூடுவதே?* 5.9.2
3323:
சூடும் மலர்க்குழலீர்!* துயராட்டியேனை மெலிய*
பாடுநல் வேதவொலி* பரவைத்திரை போல் முழங்க*
மாடுயர்ந்து ஓமப்புகை கமழும்* தண் திருவல்ல வாழ்*
நீடுறைகின்ற பிரான்* கழல் காண்டுங்கொல் நிச்சலுமே?*. 5.9.3
3324:
நிச்சலும் தோழிமீர்காள்!* எம்மை நீர்நலிந்து என்செய்தீரோ?*
பச்சிலை நீள் கமுகும்* பலவும் தெங்கும் வாழைகளும்*
மச்சணி மாடங்கள் மீதணவும்* தண் திருவல்ல வாழ்*
நச்சரவினணை மேல்* நம்பிரானது நன்னலமே*. 5.9.4
3325:
நன்னலத் தோழிமீர்காள்!* நல்ல அந்தணர் வேள்விப்புகை*
மைந்நலங் கொண்டுயர் விண் மறைக்கும்* தண் திருவல்லவாழ்*
கன்னலங் கட்டி தன்னைக்* கனியை இன்னமுதம் தன்னை*
என்னலங்கொள் சுடரை* என்றுகொல் கண்கள் காண்பதுவே?*. 5.9.5
3326:
காண்பது எஞ்ஞான்று கொலோ?* வினையேன் கனிவாய் மடவீர்*
பாண்குரல் வண்டினோடு* பசுந்தென்றலுமாகி எங்கும்*
சேண்சினை ஓங்குமரச்* செழுங்கானல் திருவல்ல வாழ்*
மாண்குறள் கோலப்பிரான்* மலர்த்தாமரைப் பாதங்களே?*. 5.9.6
3327:
பாதங்கள் மேலணி* பூந்தொழக் கூடுங்கொல்? பாவைநல்லீர்*
ஓத நெடுந்தடத்துள்* உயர்தாமரை செங்கழுநீர்*
மாதர்கள் வாண்முகமும்* கண்ணுமேந்தும் திருவல்லவாழ்*
நாதன் இஞ்ஞாலமுண்ட* நம்பிரான் தன்னை நாள்தொறுமே?*. 5.9.7
3328:
நாள்தொறும் வீடின்றியே* தொழக் கூடுங்கொல் நன்னுதலீர்*
ஆடுறு தீங்கரும்பும்* விளை செந்நெலுமாகி எங்கும்*
மாடுறு பூந்தடம் சேர்* வயல் சூழ்தண் திருவல்லவாழ்*
நீடுறைகின்ற பிரான்* நிலம் தாவிய நீள் கழலே?*. 5.9.8
3329:
கழல்வளை பூரிப்பயாம் கண்டு* கைதொழக் கூடுங்கொலோ*
குழலென்ன யாழுமென்னக்* குளிர் சோலையுள் தேனருந்தி*
மழலை வரிவண்டுகள் இசைபாடும்* திருவல்லவாழ்*
சுழலின்மலி சக்கரப் பெருமான்* அது தொல்லருளே?*. 5.9.9
3330:
தொல்லருள் நல்வினையால்* சொலக்கூடுங்கொல் தோழிமீர்காள்*
தொல்லருள் மண்ணும் விண்ணும்* தொழ நின்ற திருநகரம்*
நல்லருள் ஆயிரவர்* நலனேந்தும் திருவல்லவாழ்*
நல்லருள் நம்பெருமான்* நாராயணன் நாமங்களே?*. 5.9.10
3331:##
நாமங்கள் ஆயிரமுடைய* நம் பெருமான் அடி மேல்*
சேமங்கொள் தென்குருகூர்ச்* சடகோபன் தெரிந்துரைத்த*
நாமங்கள் ஆயிரத்துள்* இவை பத்தும் திருவல்லவாழ்*
சேமங்கொள் தென்னகர்மேல்* செப்புவார் சிறந்தார் பிறந்தே*.(2) 5.9.11
பத்தாம் திருமொழி
3332:##
பிறந்த வாறும் வளர்ந்த வாறும்* பெரிய பாரதம் கைசெய்து* ஐவர்க்குத்-
திறங்கள் காட்டி யிட்டுச்* செய்து போன மாயங்களும்*
நிறந்தனூடு புக்கு எனதாவியை* நின்றுநின்று உருக்கி உண்கின்ற*இச்-
சிறந்தவான் சுடரே!* உன்னை என்று கொல் சேர்வதுவே!*.(2) 5.10.1
3333:
வதுவை வார்த்தையுள் ஏறு பாய்ந்ததும்* மாய மாவினை வாய்பிளந்ததும்*
மதுவைவார் குழலார்* குரவை பிணைந்த குழகும்*
அதுவிது உதுவென்னல் ஆவன வல்ல* என்னை உன் செய்கை நைவிக்கும்*
முதுவைய முதல்வா!* உன்னை என்று தலைப் பெய்வனே?*. 5.10.2
3334:
பெய்யும் பூங்குழல் பேய்முலை உண்ட* பிள்ளைத் தேற்றமும்* பேர்ந்தோர் சாடிறச்-
செய்ய பாதமொன்றால்* செய்த நின் சிறுச்சேவகமும்*
நெய்யுண் வார்த்தையுள் அன்னை கோல்கொள்ள* நீயுன் தாமரைக் கண்கள் நீர்மல்க*
பையவே நிலையும் வந்து* என் நெஞ்சை உருக்குங்களே*. 5.10.3
3335:
கள்ள வேடத்தைக் கொண்டு போய்ப்* புறம்புக்கவாறும்* கலந்தசுரரை-
உள்ளம் பேதம் செய்திட்டு* உயிருண்ட உபாயங்களும்*
வெள்ள நீர்ச்சடையானும்* நின்னிடை வேறலாமை விளங்க நின்றதும்*
உள்ளமுள் குடைந்து* என் உயிரை உருக்கி உண்ணுமே*. 5.10.4
3336:
உண்ண வானவர் கோனுக்கு* ஆயர் ஒருப்படுத்த அடிசிலுண்டதும்*
வண்ணமால் வரையை எடுத்து* மழைகாத்ததும்*
மண்ணை முன் படைத்துண்டுமிழ்ந்து* கடந்திடந்து மணந்த மாயங்கள்*
எண்ணுந்தோறும் என் நெஞ்சு* எரிவாய் மெழுகொக்கு நின்றே*. 5.10.5
3337:
நின்றவாறும் இருந்தவாறும்* கிடந்தவாறும் நினைப்பரியன*
ஒன்றலா உருவாய்* அருவாய நின்மாயங்கள்*
நின்று நின்று நினைகின்றேன்* உன்னை எங்ஙனம் நினைகிற்பன்* பாவியேற்கு-
ஒன்று நன்குரையாய்* உலகமுண்ட ஒண்சுடரே!*. 5.10.6
3338:
ஒண்சுடரோடு இருளுமாய்*நின்றவாறும் உண்மையோடு இன்மையாய் வந்து* என்-
கண்கொளாவகை* நீகரந்து என்னைச் செய்கின்றன*
எண்கொள் சிந்தையுள் நைகின்றேன்* என் கரியமாணிக்கமே!*என் கண்கட்குத்-
திண்கொள்ள ஒருநாள்* அருளாய் உன் திருவுருவே*. 5.10.7
3339:
திருவுருவு கிடந்தவாறும்* கொப்பூழ்ச் செந்தாமரை மேல்* திசைமுகன்-
கருவுள் வீற்றிருந்து* படைத்திட்ட கருமங்களும்*
பொருவிலுன் தனி நாயகமவை கேட்குந்தோறும்* என் நெஞ்சம் நின்று நெக்கு*
அருவி சோரும் கண்ணீர்* என்செய்கேன் அடியேனே!*. 5.10.8
3340:
அடியை மூன்றை இரந்தவாறும்* அங்கே நின்றாழ் கடலும் மண்ணும் விண்ணும்-
முடிய* ஈரடியால்* முடித்துக் கொண்ட முக்கியமும்*
நொடியு மாறவை கேட்குந்தோறும்* என் நெஞ்சம் நின்தனக்கே கரைந்துகும்*
கொடிய வல்வினையேன்* உன்னை என்றுகொல் கூடுவதே?*. 5.10.9
3341:
கூடி நீரை கடைந்த வாறும்* அமுதம் தேவர் உண்ண* அசுரரை-
வீடும் வண்ணங்களே* செய்து போன வித்தகமும்*
ஊடு புக்கு எனதாவியை* உருக்கி உண்டிடுகின்ற* நின் தன்னை-
நாடும் வண்ணம் சொல்லாய்* நச்சு நாகணை யானே!*. 5.10.10
3342:##
நாகணை மிசை நம்பிரான்* சரணே சரண் நமக்கென்று* நாள் தொறும்-
ஏக சிந்தையனாய்க்* குருகூர்ச்சடகோபன் மாறன்*
ஆக நூற்றவந்தாதி* ஆயிரத்துள் இவை ஓர் பத்தும் வல்லார்*
மாக வைகுந்தத்து *மகிழ்வெய்துவர் வைகலுமே*. 5.10.11.