ஒன்பதாம் பத்து


திருவாய்மொழி ஒன்பதாம் பத்து

முதல் திருமொழி

 

3673:##

கொண்ட பெண்டிர் மக்களுற்றார்* சுற்றத்தவர் பிறரும்*

கண்டதோடு பட்டதல்லால்* காதல்மற்றுயாதுமில்லை*

எண்திசையும் கீழும்மேலும்* முற்றவும் உண்டபிரான்*

தொண்டரோமாய் உய்யலல்லால்* இல்லைகண்டீர் துணையே. (2)            9.1.1

 

3674:

துணையும் சார்வுமாகுவார்போல்* சுற்றத்தவர்பிறரும்*

அணையவந்த ஆக்கமுண்டேல்* அட்டைகள்போல் சுவைப்பர்*

கணையொன்றாலே ஏழ்மாமரமும் எய்த* எம்கார்முகிலை*

புணையென்றுய்யப் போகிலல்லால்* இல்லைகண்டீர்பொருளே.            9.1.2

 

3675:

பொருள்கையுண்டாய்ச் செல்லக்காணில்* போற்றியென்றேற்றுஎழுவர்*

இருள்கொள்துன்பத் தின்மைகாணில்* என்னே! என்பாருமில்லை*

மருள்கொள்செய்கை அசுரர்மங்க* வடமதுரைப் பிறந்தாற்கு*

அருள்கொள் ஆளாய் உய்யலல்லால்* இல்லைகண்டீர்அரணே.            9.1.3

 

3676:

அரணமாவர் அற்றகாலைக்கு* என்றென்று அமைக்கப்பட்டார்*

இரணம்கொண்ட தெப்பராவர்* இன்றியிட்டாலும் அஃதே*

வருணித்தென்னே?* வடமதுரைப்பிறந்தவன் வண்புகழே*

சரணென்றுய்யப் போகிலல்லால்* இல்லைகண்டீர் சதிரே. 9.1.4

 

3677:

சதுரமென்று தம்மைத்தாமே* சம்மதித்து இன்மொழியார்*

மதுரபோகம் துற்றவரே* வைகிமற்றொன்றுஉறுவர்*

அதிர்கொள்செய்கை அசுரர்மங்க* வடமதுரைப்பிறந்தாற்கு*

எதிர்கொள்ஆளாய் உய்யலல்லால்* இல்லைகண்டீர் இன்பமே.            9.1.5

 

3678:

இல்லைகண்டீர் இன்பம்அந்தோ!* உள்ளது நினையாதே*

தொல்லையார்கள் எத்தனைவர்* தோன்றிக் கழிந்தொழிந்தார்?*

மல்லை மூதூர்* வடமதுரைப்பிறந்தவன் வண்புகழே*

சொல்லிஉய்யப் போகலல்லால்* மற்றொன்றில்லைசுருக்கே.            9.1.6

 

3679:

மற்றொன்றில்லை சுருங்கச்சொன்னோம்* மாநிலத்தெவ்வுயிர்க்கும்*

சிற்றவேண்டா சிந்திப்பேயமையும்* கண்டீர்கள்அந்தோ!*

குற்றமன்றுஎங்கள் பெற்றத்தாயன்* வடமதுரைப்பிறந்தான்*

குற்றமில்சீர் கற்றுவைகல்* வாழ்தல்கண்டீர்குணமே.           9.1.7

 

3680:

வாழ்தல்கண்டீர் குணமிது அந்தோ!* மாயவன் அடிபரவி*

போழ்துபோக உள்ளகிற்கும்* புன்மையிலாதவர்க்கு*

வாழ்துணையா* வடமதுரைப்பிறந்தவன் வண்புகழே*

வீழ்துணையாய்ப் போமிதனில்* யாதுமில்லைமிக்கதே.       9.1.8

 

3681:

யாதுமில்லை மிக்கதனில்* என்றன்று அதுகருதி*

காதுசெய்வான் கூதைசெய்து* கடைமுறை வாழ்கையும்போம்*

மாதுகிலின் கொடிக்கொள்மாட* வடமதுரைப்பிறந்த*

தாதுசேர்தாள் கண்ணன் அல்லால்* இல்லை கண்டீர் சரணே.            9.1.9

 

3682:

கண்ணன் அல்லால் இல்லைகண்டீர்* சரண்அதுநிற்கவந்து*

மண்ணின் பாரம் நீக்குதற்கே* வடமதுரைப்பிறந்தான்*

திண்ணமாநும் உடைமை உண்டேல்* அவனடி சேர்ந்துய்ம்மினோ*

எண்ணவேண்டா நும்மதாதும்* அவனன்றிமற்றில்லையே.  9.1.10

 

3683:##

ஆதுமில்லை மற்றவனில்* என்றதுவே துணிந்து*

தாதுசேர்தோள் கண்ணனை* குருகூர்ச்சடகோபன்சொன்ன*

தீதிலாத ஒண்தமிழ்கள்* இவைஆயிரத்துள் இப்பத்தும்*

ஓதவல்லபிராக்கள்* நம்மையாளுடையார்கள் பண்டே. (2)  9.1.11

 

இரண்டாம் திருமொழி

 

3684:##

பண்டைநாளாலே நின்திருவருளும்* பங்கயத்தாள் திருவருளும் கொண்டு*

நின்கோயில் சீய்த்துப் பல்படிகால்* குடிகுடிவழிவந்து ஆட்செய்யும்*

தொண்டரோர்க்கருளிச் சோதிவாய்திறந்து* உன்தாமரைக்கண்களால் நோக்காய்*

தெண்திரைப் பொருநல் தண்பணைசூழ்ந்த* திருப்புளிங்குடிக் கிடந்தானே! (2)   

 

3685:

குடிகிடந்து ஆக்கஞ்செய்து* நின்தீர்த்த அடிமைக் குற்றேவல்செய்து*

உன்பொன் அடிக்கடவாதே வழிவருகின்ற* அடியரோர்க்கு அருளி*

நீஒருநாள் படிக்களவாக நிமிர்த்த* நின்பாத பங்கயமே தலைக்கணியாய்*

கொடிக்கொள் பொன்மதிள்சூழ் குளிர்வயல்சோலைத்* திருப்புளிங் குடிக்கிடந்தானே.

 

3686:

கிடந்தநாள் கிடந்தாய் எத்தனை காலம்கிடத்தி* உன்திருவுடம்புஅசைய*

தொடர்ந்து குற்றேவல்செய்து தொல்லடிமை வழிவரும்* தொண்டரோர்க்கு அருளி*

தடந்தோள் தாமரைக்கண்விழித்து* நீஎழுந்துஉன்தாமரை மங்கையும்நீயும்*

இடங்கொள் மூவுலகும் தொழ இருந்தருளாய்* திருப்புளிங்குடிக்கிடந்தானே!          

 

3687:

புளிங்குடிக்கிடந்து வரகுணமங்கையிருந்து* வைகுந்தத்துள் நின்று*

தெளிந்தஎன்சிந்தை அகங்கழியாதே* என்னையாள்வாய் எனக்கருளி*

நளிந்தசீருலகம் மூன்றுடன்வியப்ப* நாங்கள்கூத்தாடி நின்றார்ப்ப*

பளிங்குநீர் முகிலின்பவளம்போல்* கனிவாய்சிவப்பநீ காணவாராயே.    9.2.4

 

3688:

பவளம்போல் கனிவாய்சிவப்ப நீகாணவந்து* நின்பல்நிலா முத்தம்*

தவழ்கதிர்முறுவல்செய்து* நின்திருக்கண் தாமரைதயங்க நின்றருளாய்,

பவளநன்படர்க்கீழ்ச் சங்குறைபொருநல்* தண்திருப்புளிங்குடிக்கிடந்தாய்*

கவளமாகளிற்றின் இடர்கெடத்தடத்துக்* காய்சினப்பறவையூர்ந்தானே!         9.2.5

 

3689:

காய்சினப்பறவையூர்ந்து* பொன்மலையின் மீமிசைக் கார்முகில்போல்*

மாசினமாலி மாலிமானென்று* அங்குஅவர் படக்கனன்று முன்நின்ற*

காய்சினவேந்தே! கதிர்முடியானே!* கலிவயல் திருபுளிங்குடியாய்*

காய்சினவாழி சங்குவாள் வில்தண்டேந்தி* எம்மிடர்கடிவானே!            9.2.6

 

3690:

எம்மிடர்க்கடிந்து இங்கு என்னையாள்வானே!* இமையவர்தமக்கு மாங்கனையாய்*

செம்மடல்மலரும் தாமரைப்பழனத்* தண்திருப்புளிங்குடிக்கிடந்தாய்*

நம்முடையடியர் கவ்வைகண்டுகந்து* நாம்களித்து உளநலம்கூர*

இம்மடவுலகர்காண நீஒருநாள்* இருந்திடாய் எங்கள்கண் முகப்பே.            9.2.7

 

3691:

எங்கள்கண்முகப்பே உலகர்களெல்லாம்* இணையடி தொழுதெழுந்திறைஞ்சி*

தங்களன்பாரத் தமதுசொல்வலத்தால்* தலைதலைச் சிறந்தபூசிப்ப*

திங்கள்சேர்மாடத் திருப்புளிங்குடியாய்!* திருவைகுந்தத்துள்ளாய்! தேவா*

இங்கண் மாஞாலத்திதனுளும் ஒருநாள்* இருந்திடாய் வீற்றிடங்கொண்டே.       9.2.8

 

3692:

வீற்றிடங்கொண்டு வியன்கொள்மாஞாலத்து* இதனுளும் இருந்திடாய்*

அடியோம்போற்றி ஓவாதே கண்ணினை குளிர* புதுமலராகத்தைப்பருக*

சேற்றிளவாளை செந்நெலூடுகளும்* செழும்பணைத் திருப்புளிங்குடியாய்*

கூற்றமாய்அசுரர் குலமுதலரிந்த* கொடுவினைப்படைகள் வல்லானே! 9.2.9

 

3693:

கொடுவினைப்படைகள் வல்லையாய்* அமரர்க்குஇடர்கெட, அசுரர்கட்கிடர்செய்*

கடுவினைநஞ்சே! என்னுடைஅமுதே* கலிவயல் திருப்புளிங்குடியாய்*

வடிவிணையில்லா மலர்மகள்* மற்றைநிலமகள் பிடிக்கும்மெல்லடியை*

கொடுவினையேனும் பிடிக்கநீஒருநாள்* கூவுதல்வருதல் செய்யாயே.            9.2.10

 

3694:##

`கூவுதல்வருதல் செய்திடாய்என்று* குரைகடல் கடைந்தவன் தன்னை*

மேவிநன்கமர்ந்த வியன்புனல்பொருநல்* வழுதிநாடன் சடகோபன்*

நாவியல்பாடல்ஆயிரத்துள்ளும்* இவையுமோர் பத்தும் வல்லார்கள்*

ஓவுதலின்றிஉலகம் மூன்றளந்தான்* அடியிணை உள்ளத்தோர்வாரே. (2)  9.2.11

 

மூன்றாம் திருமொழி

  

3695:##

ஓராயிரமாய்* உலகேழ்அளிக்கும்*

பேராயிரம்கொண்டதுஓர்* பீடுடையன்

காராயின* காளநன்மேனியினன்*

நாராயணன்* நங்கள்பிரான்அவனே. (2)  9.3.1

 

3696:

அவனேஅகல்ஞாலம்* படைத்திடந்தான்*

அவனேஅஃதுஉண்டுஉமிழ்ந்தான்* அளந்தான்*

அவனேஅவனும்* அவனும்அவனும்*

அவனேமற்றெல்லாமும் அறிந்தனமே.      9.3.2

 

3697:

அறிந்தனவேத* அரும்பொருள்நூல்கள்*

அறிந்தனகொள்க* அரும்பொருள்ஆதல்*

அறிந்தனர்எல்லாம்* அரியைவணங்கி*

அறிந்தனர்* நோய்கள்அறுக்கும்மருந்தே.             9.3.3

 

3698:

மருந்தேநங்கள்* போகமகிழ்ச்சிக்கென்று*

பெருந்தேவர்குழாங்கள்* பிதற்றும்பிரான்*

கருந்தேவன்எம்மான்* கண்ணன்விண்ணுலகம்*

தரும்தேவனை* சோரேல்கண்டாய்மனமே!         9.3.4

 

3699:

மனமே!உன்னை* வல்வினையேன்இரந்து*

கனமேசொல்லினேன்* இதுசோரேல்கண்டாய்*

புனமேவிய* பூந்தந்துழாய் அலங்கல்*

இனமேதுமிலானை* அடைவதுமே. 9.3.5

 

3700:

அடைவதும்அணியார்* மலர்மங்கைதோள்*

மிடைவதும்* அசுரர்க்குவெம்போர்களே*

கடைவதும்* கடலுளமுதம்*

என்மனம்உடைவதும்* அவற்கேஒருங்காகவே.   9.3.6

 

3701:##

ஆகம்சேர்* நரசிங்கமதாகி*

ஓர்ஆகம்வள்ளுகிரால்* பிளந்தானுறை*

மாகவைகுந்தம்* காண்பதற்கு*

என்மனம்ஏகம்எண்ணும்* இராப்பகலின்றியே.  9.3.7

 

3702:

இன்றிப்போக* இருவினையும்கெடுத்து*

ஒன்றியாக்கைபுகாமை* உய்யக்கொள்வான்*

நின்றவேங்கடம்* நீள்நிலத்துஉள்ளது,

சென்றுதேவர்கள்* கைதொழுவார்களே.   9.3.8

 

3703:

தொழுதுமாமலர்* நீர்சுடர்தூபம்கொண்டு*

எழுதுமென்னும்இது* மிகையாதலில்*

பழுதில்தொல்புகழ்ப்* பாம்பணைப்பள்ளியாய்*

தழுவுமாறுஅறியேன்* உனதாள்களே.         9.3.9

 

3704:

தாளதாமரையான்* உனதுஉந்தியான்*

வாள்கொள் நீள்மழுவாளி* உன்ஆகத்தான்*

ஆளராய்த்தொழுவாரும்* அமரர்கள்*

நாளும் என்புகழ்கோ* உனசீலமே?  9.3.10

 

3705:##

சீலமெல்லையிலான்* அடிமேல்*

அணிகோலநீள்* குருகூர்ச்சடகோபன்*

சொல்மாலையாயிரத்துள்ள்* இவை பத்தினின்பாலர்*

வைகுந்தமேறுதல்* பான்மையே. (2)           9.3.11

 

நான்காம் திருமொழி

 

3706:##

மையார்கருங்கண்ணி* கமல மலர்மேல்செய்யாள்*

திருமார்வினில்சேர்* திருமாலே*

வெய்யார்சுடராழி* சுரிசங்கமேந்தும்கையா*

உனைக்காணக்* கருதும் என்கண்ணே.     9.4.1

 

3707:

கண்ணேஉனைக்* காணக்கருதி*

என்னெஞ்சம்எண்ணேகொண்ட* சிந்தையதாய் நின்றியம்பும்*

விண்ணோர் முனிவர்க்கு என்றும்* காண்பரியாயை*

நண்ணாது ஒழியேன் என்று* நான் அழைப்பனே.         9.4.2

 

3708:

அழைக்கின்ற அடிநாயேன்* நாய்கூழை வாலால்*

குழைக்கின்றது போல* என்னுள்ளம் குழையும்*

மழைக்கு அன்றுகுன்றம் எடுத்து* ஆநிரைகாத்தாய்,

பிழைக்கின்றதருளென்று* பேதுறுவனே. 9.4.3

 

3709:

உறுவது இதுவென்று* உனக்கு ஆட்பட்டு*

நின்கண்பெறுவது எதுகொலென்று* பேதையேன் நெஞ்சம்*

மறுகல்செய்யும்* வானவர் தானவர்க்கு என்றும்*

அறிவதரிய* அரியாய அம்மானே!  9.4.4

 

3710:

அரியாய அம்மானை* அமரர் பிரானை*

பெரியானைப்* பிரமனை முன்படைத்தானை*

வரிவாள் அரவின்அணைப்* பள்ளிகொள்கின்ற*

கரியாங்கழல் காணக்* கருதும் கருத்தே.  9.4.5

 

3711:

கருத்தேஉனைக்* காணக்கருதி*

என்னெஞ்சத்து இருத்தாக இருத்தினேன்* தேவர்கட்கெல்லாம்*

விருத்தா விளங்கும் சுடர்ச்சோதி* உயரத்தொருத்தா*

உனையுள்ளும்* என்னுள்ளம்உகந்தே.         9.4.6

 

3712:

உகந்தேஉன்னை* உள்ளும் என்னுள்ளத்து*

அகம்பால் அகந்தான் அமர்ந்தே* இடங்கொண்ட அமலா*

மிகுந்தானவன் மார்வகலம்* இருகூறா நகந்தாய்*

நரசிங்கமதாய உருவே!           9.4.7

 

3713:

உருவாகிய* ஆறுசமயங்கட்கெல்லாம்*

பொருவாகி நின்றான்* அவன் எல்லாப்பொருட்கும்*

அருவாகிய ஆதியைத்* தேவர்கட்கெல்லாம்*

கருவாகிய கண்ணனைக்* கண்டுகொண்டேனே.         9.4.8

 

3714:

கண்டுகொண்டு* என்கண்ணினை ஆரக்களித்து*

பண்டைவினையாயின* பற்றோடறுத்து*

தொண்டர்க்கு அமுதுண்ணச்* சொன்மாலைகள் சொன்னேன்*

அண்டத்தமரர் பெருமான்!* அடியேனே.    9.4.9

 

3715:

அடியான் இவனென்று* எனக்காரருள்செய்யும் நெடியானை*

நிறைபுகழ் அஞ்சிறைப்* புள்ளின் கொடியானை*

குன்றாமல்* உலகமளந்த அடியானை*

அடைந்து அடியேன்* உய்ந்தவாறே.            9.4.10

 

3716:##

ஆறாமதயானை* அடர்த்தவன்தன்னை*

சேறார்வயல்* தென்குருகூர்ச் சடகோபன்*

நூறேசொன்ன* ஓராயிரத்துள் இப்பத்தும்*

ஏறேதரும்* வானவர்தம் இன்னுயிர்க்கே. (2)         9.4.11

 

ஐந்தாம் திருமொழி   

 

3717:##

இன்னுயிர்ச்சேவலும் நீரும் கூவிக்கொண்டு*இங்கு எத்தனை*

என்னுயிர் நோவ மிழற்றேன்மின்* குயில் பேடைகாள்*

என்னுயிர்க் கண்ணபிரானை* நீர் வரக்கூவுகிலீர்*

என்னுயிர் கூவிக்கொடுப்பார்க்கும்* இத்தனை வேண்டுமோ? (2)            9.5.1

 

3718:

இத்தனை வேண்டுவதன்றந்தோ!* அன்றில் பேடைகாள்*

எத்தனை நீரும் நும்சேவலும்* கரைந்தேங்குதிர்*

வித்தகன் கோவிந்தன்* மெய்யனல்லன் ஒருவர்க்கும்*

அத்தனையாம் இனி* என்உயிர் அவன்கையதே.           9.5.2

 

3719:

அவன்கையதே எனதாருயிர்* அன்றில் பேடைகாள்*

எவன்சொல்லி நீர்குடைந்தாடுதிர்* புடைசூழவே*

தவம்செய்தில்லா* வினையாட்டியேன் உயிர் இங்குண்டோ*

எவம்சொல்லி நிற்றும்* நும்ஏங்கு கூக்குரல் கேட்டுமே.           9.5.3

 

3720:

கூக்குரல்கேட்டும்* நம்கண்ணன் மாயன் வெளிப்படான்*

மேற்கிளை கொள்ளேன்மின்* நீரும் நும்சேவலும் கோழிகாள்*

வாக்கும்மனமும்* கருமமும் நமக்காங்கதே*

ஆக்கையும் ஆவியும்* அந்தரம் நின்றுழலுமே.   9.5.4

 

3721:

அந்தரம் நின்றுழல்கின்ற* யானுடைப் பூவைகாள்*

நுந்திரத்தேது மிடையில்லை* குழறேன்மினோ*

இந்திரஞாலங்கள் காட்டி*இவ்வேழுலகும் கொண்ட*

நம் திருமார்பன்* நம்மாவி உண்ண நன்கெண்ணினான்.    9.5.5

 

3722:

நன்கெண்ணி நான்வளர்த்த* சிறுகிளிப்பைதலே*

இன்குரல் நீ மிழிற்றேல்* என்னாருயிர்க் காகுத்தன்*

நின்செய்ய வாயொக்கும் வாயன்* கண்ணங்கை காலினன்*

நின்பசுஞ்சாம நிறத்தன்* கூட்டுண்டு நீங்கினான்.      9.5.6

 

3723:

கூட்டுண்டு நீங்கிய* கோலத்தாமரை கண்செவ்வாய்*

வாட்டமில்என் கருமாணிக்கம்* கண்ணன் மாயன்போல்*

கோட்டிய வில்லொடு* மின்னு மேகக்குழாங்கள்காள்*

காட்டேன்மின் நும்முரு* என்னுயிர்க்கு அதுகாலனே.   9.5.7

 

3724:

உயிர்க்கது காலனென்று* உம்மை யானிரந்தேற்கு*

நீர் குயில் பைதல்காள்* கண்ணன் நாமமே குழறிக்கொன்றீர்*

தயிர்ப்பழஞ்சோற்றொடு* பாலடிசிலும் தந்து*

சொல்பயிற்றிய நல்வளமூட்டினீர்* பண்புடையீரே!     9.5.8

 

3725:

பண்புடை வண்டொடு தும்பிகாள்* பண்மிழற்றேன்மின்*

புண்புரை வேல்கொடு* குத்தாலொக்கும் நும்இன்குரல்

தண்பெருநீர்த் தடந்தாமரை* மலர்ந்தாலொக்கும் கண்பெருங்கண்ணன்*

நம்மாவியுண்டெழ நண்ணினான்.  9.5.9

 

3726:

எழநண்ணி நாமும்* நம்வானநாடேனாடு ஒன்றினோம்*

பழன நன்நாரைக் குழாங்கள்காள்* பயின்றென்னினி*

இழைநல்லவாக்கையும்* பையவே புயக்கற்றது*

தழைநல்ல இன்பம் தலைப்பெய்து* எங்கும் தழைக்கவே.    9.5.10

 

3727:##

இன்பம் தலைப்பெய்து எங்கும் தழைத்த* பல்லூழிக்கு*

தண்புகழேத்தத்* தனக்கருள் செய்தமாயனை*

தென்குருகூர்ச் சடகோபன்* சொல்லாயிரத்துள் இவை*

ஒன்பதோடு ஒன்றுக்கும்* மூவுலகும் உருகுமே. (2)        9.5.11

 

ஆறாம் திருமொழி

  

3728:##

உருகுமால் நெஞ்சம்* உயிரின் பரமன்றி*

பெருகுமால் வேட்கையும்* என்செய்கேன் தொண்டனேன்*

தெருவெல்லாம் காவிகமழ்* திருக்காட்கரை*

மருவிய மாயன்தன்* மாயம் நினைதொறே. (2) 9.6.1

 

3729:

நினைதொறும் சொல்லுந்தொறும்* நெஞ்சு இடிந்துகும்*

வினைகொள்சீர் பாடிலும்* வேமெனதாருயிர்*

சுனைகொள் பூஞ்சோலைத்* தென்காட்கரையென்னப்பா*

நினைகிலேன் நான்உனக்கு* ஆட்செய்யும் நீர்மையே.           9.6.2

 

3730:

நீர்மையால் நெஞ்சம்* வஞ்சித்துப் புகுந்து*

என்னை ஈர்மைசெய்து* என்னுயிராய் என்னுயிர் உண்டான்*

சீர்மல்குசோலைத்* தென்காட்கரையென்னப்பன்*

கார்முகில் வண்ணன்தன்* கள்வம் அறிகிலேன்.           9.6.3

 

3731:

அறிகிலேன் தன்னுள்* அனைத்துலகம் நிற்க,

நெறிமையால் தானும்* அவற்றுள் நிற்கும் பிரான்*

வெறிகமழ்சோலைத்* தென்காட்கரை என்னப்பன்*

சிறியவென்னாருயிருண்ட* திருவருளே.  9.6.4

 

3732:

திருவருள் செய்பவன்போல* என்னுள்புகுந்து*

உருவமும் ஆருயிரும்* உடனே உண்டான்*

திருவளர்சோலைத்* தென்காட்கரையென்னப்பன்*

கருவளர்மேனி* எம்கண்ணன் கள்வங்களே.       9.6.5

 

3733:

என்கண்ணன் கள்வம்* எனக்குச் செம்மாய்நிற்கும்*

அங்கண்ணன் உண்ட* என்னாருயிர்க்கோதுஇது*

புங்கண்மை எய்திப்* புலம்பி இராப்பகல்*

எங்கண்ணன் என்று* அவன்காட்கரையேத்துமே.          9.6.6

 

3734:

காட்கரையேத்தும்* அதனுள் கண்ணாஎன்னும்*

வேட்கை நோய்கூர* நினைந்து கரைந்துகும்*

ஆட்கொள் வானொத்து* என்னுயிருண்ட மாயனால்*

கோட்குறைபட்டது* என்னாருயிர் கோளுண்டே.            9.6.7

 

3735:

கோளுண்டான் அன்றிவந்து* என்னுயிர் தானுண்டான்*

நாளுநாள்வந்து* என்னை முற்றவும் தானுண்டான்*

காளநீர்மேகத்* தென்காட்கரை என்னப்பற்கு

ஆளன்றேபட்டது* என்ஆருயிர் பட்டதே.     9.6.8

 

3736:

ஆருயிர் பட்டது* எனதுயிர் பட்டது*

பேரிதழ் தாமரைக்கண்* கனிவாயதோர்*

காரெழில் மேகத்* தென்காட்கரை கோயில்கொள்,

சீரெழில் நால்தடந்தோள்* தெய்வ வாரிக்கே.     9.6.9

 

3737:

வாரிக்கொண்டு* உன்னைவிழுங்குவன் காணில்என்று*

ஆர்வுற்ற என்னை ஒழிய* என்னின் முன்னம்பாரித்து*

தான்என்னை* முற்றப் பருகினான்*

காரொக்கும்* காட்கரைப்பன் கடியனே.    9.6.10

 

3738:##

கடியனாய்க் கஞ்சனைக்* கொன்றபிரான் தன்னை*

கொடிமதிள் தென்குருகூர்ச்* சடகோபன்சொல்*

வடிவமையாயிரத்து* இப்பத்தினால் சன்மம்-

முடிவெய்தி* நாசங்கண்டீர்கள் எங்கானலே. (2)           9.6.11

 

ஏழாம் திருமொழி   

 

3739:##

எங்கானல் அகங்கழிவாய்* இரை தேர்ந்திங்கு இனிதமரும்*

செங்கால மடநாராய்!* திருமூழிக்களத்து உறையும்*

கொங்கார் பூந்துழாய்முடி* என்குடக்கூத்தர்க்கு என்தூதாய்*

நுங்கால்கள் என்தலைமேல்* கெழுமீரோ நுமரோடே. (2)       9.7.1

 

3740:

நுமரோடும் பிரியாதே* நீரும் நும் சேவலுமாய்*

அமர்காதல் குருகினங்காள்! அணி மூழிக்களத்து உறையும்*

எமராலும் பழிப்புண்டு* இங்கு என்தம்மால் இழிப்புண்டு*

தமரோடங்கு உறைவார்க்குத்* தக்கிலமே!கேளÖரே.    9.7.2

 

3741:

தக்கிலமே கேளÖர்கள்* தடம்புனல்வாய் இரைதேரும்*

கொக்கினங்காள்!குருகினங்காள்!* குளிர் மூழிக்களத்து உறையும்*

செக்கமலத்தலர் போலும்* கண்கைகால் செங்கனிவாய்*

அக்கமலத்திலைபோலும்* திருமேனி அடிகளுக்கே.    9.7.3

 

3742:

திருமேனி அடிகளுக்கு* தீவினையேன் விடுதூதாய்*

திருமூழிக்களம் என்னும்* செழுநகர்வாய் அணிமுகில்காள்*

திருமேனி அவட்கருளÖர்* என்றக்கால் உம்மைத்தன்*

திருமேனி ஒளியகற்றித்* தெளிவிசும்பு கடியுமே?        9.7.4

 

3743:

தெளிவிசும்பு கடிதோடித்* தீவளைத்து மின்னிலகும்*

ஒளிமுகில்காள்!* திருமூழிக்களத்துறையும் ஒண்சுடர்க்கு*

தெளிவிசும்பு திருநாடாத்* தீவினையேன் மனத்துறையும்*

துளிவார்கட்குழலார்க்கு* என்தூதுரைத்தல் செப்பமினே.      9.7.5

 

3744:

தூதுரைத்தல் செப்புமின்கள்* தூமொழியாய் வண்டினங்காள்*

போதிரைத்து மதுநுகரும்* பொழில் மூழிக்களத்துறையும்*

மாதரைத்தம் மார்வகத்தே* வைத்தார்க்கு என்வாய்மாற்றம்*

தூதுரைத்தல் செப்புதிரேல்* சுடர்வளையும் கலையுமே.         9.7.6

 

3745:

சுடர்வளையும் கலையும்கொண்டு* அருவினையேன் தோள்துறந்த*

படர்புகழான்* திருமூழிக்களத்துறையும் பங்கயக்கண்*

சுடர்பவள வாயனைக்கண்டு* ஒருநாள் ஓர்த்தூய்மாற்றம்*

படர்பொழில்வாய்க் குருகினங்காள்!* எனக்கு ஒன்று பணியீரே.            9.7.7

 

3746:

எனக்கொன்று பணியீர்கள்* இரும்பொழில்வாய் இரைதேர்ந்து*

மனக்கின்பம் படமேவும்* வண்டினங்காள்!தும்பிகாள்*

கனக்கொள் திண்மதிள்புடைசூழ்* திருமூழிக் களத்துறையும்*

புனல்கொள் காயாமேனிப்* பூந்துழாய் முடியார்க்கே.            9.7.8

 

3747:

பூந்துழாய் முடியார்க்குப்* பொன்னாழி கையார்க்கு*

ஏந்துநீர் இளங்குருகே!* திருமூழிக்களத்தார்க்கு*

ஏந்துபூண் முலைப்பயந்து* என்னிணைமலர்க்கண் நீர்ததும்ப*

தாம்தம்மைக் கொண்டகல்தல்* தகவன்றென்று உரையீரே.            9.7.9

 

3748:

தகவன்றென்று உரையீர்கள்* தடம்புனல்வாய் இரைதேர்ந்து*

மிகவின்பம் படமேவும்* மென்னடைய அன்னங்காள்*

மிகமேனி மெலிவெய்தி* மேகலையும் ஈடழிந்து*

என்அகமேனி ஒழியாமே* திருமூழிக் களத்தார்க்கே.   9.7.10

 

3749:##

ஒழிவின்றி திருமூழிக்களத்துறையும்* ஒண்சுடரை*

ஒழிவில்லா அணிமழலைக்* கிளிமொழியாள் அலற்றியசொல்*

வழுவில்லா வண்குருகூர்* சடகோபன் வாய்ந்துரைத்த*

அழிவில்லா ஆயிரத்து இப்பத்தும்* நோய் அறுக்குமே. (2)     9.7.11

 

எட்டாம் திருமொழி

   

3750:##

அறுக்கும் வினையாயின* ஆகத்து அவனை*

நிறுத்தும் மனத்துஒன்றிய* சிந்தையினார்க்கு*

வெறித்தண்மலர் சோலைகள்சுழ்* திருநாவாய்*

குறுக்கும்வகை உண்டுகொலொ* கொடியேற்கே? (2) 9.8.1

 

3751:

கொடியேரிடைக்* கோகனகத்தவள் கேள்வன்*

வடிவேல் தடங்கண்* மடப்பின்னை மணாளன்*

நெடியானுறை சோலைகள்சூழ்* திருநாவாய்*

அடியேன் அணுகப்பெறுநாள்* எவைகொலொ! 9.8.2

 

3752:

`எவைகொல் அணுகப் பெறுநாள்?’* என்று எப்போதும்*

கவையில் மனமின்றிக்* கண்ணீர்கள் கலுழ்வன்*

நவையில் திருநாரணன்சேர்* திருநாவாய்*

அவையுள் புகலாவதுஓர்* நாள் அறியேனே.        9.8.3

 

3753:

நாளெல் அறியேன்* எனக்குள்ளன*

நானும்மீளா அடிமை* பணி செய்யப் புகுந்தேன்*

நீளார்மலர் சோலைகள்சூழ்* திருநாவாய்*

வாளேய் தடங்கண்* மடப்பின்னை மணாளா!   9.8.4

 

3754:

மணாளன் மலர்மங்கைக்கும்* மண் மடந்தைக்கும்*

கண்ணாளன் உலகத்துயிர்* தேவர்கட்கெல்லாம்*

விண்ணாளன் விரும்பியுறையும்* திருநாவாய்*

கண்ணாரக் களிக்கின்றது* இங்குஎன்று கொல்கண்டே?      9.8.5

 

3755:

கண்டே களிக்கின்றது* இங்கென்று கொல்கண்கள்*

தொண்டேஉனக்காய் ஒழிந்தேன்* துரிசின்றி*

வண்டார்மலர் சோலைகள்சூழ்* திருநாவாய்*

கொண்டே உறைகின்ற* எங்கோவலர்கோவே!      9.8.6

 

3756:

கோவாகிய* மாவலியை நிலங்கொண்டாய்*

தேவாசுரம் செற்றவனே!* திருமாலே*

நாவாயுறைகின்ற* என்நாரணநம்பீ*

`ஆவா அடியான்* இவன்என்று அருளாயே.         9.8.7

 

3757:

அருளாது ஒழிவாய்* அருள்செய்து*

அடியேனைப்பொருளாக்கி* உன்பொன்னடிக்கீழ்ப் புகவைப்பாய்*

மருளேயின்றி* உன்னை என்னெஞ்சத்திருத்தும்*

தெருளேதரு* தென்திருநாவாய் என்தேவே!        9.8.8

 

3758:

தேவர் முனிவர்க்குஎன்றும்* காண்டற்கரியன்*

மூவர் முதல்வன்* ஒருமூவுலகாளி*

தேவன் விரும்பியுறையும்* திருநாவாய்*

யாவர் அணுகப்பெறுவார்* இனியந்தோ! 9.8.9

 

3759:

அந்தோ! அணுகப்பெறுநாள்* என்றுஎப்போதும்*

சிந்தை கலங்கித்* திருமால் என்றுஅழைப்பன்*

கொந்தார்மலர் சோலைகள்சுழ்* திருநாவாய்*

வந்தே உறைகின்ற* எம்மா மணிவண்ணா!       9.8.10

 

3760:##

வண்ணம் மணிமாட* நன்னாவாய் உள்ளானை*

திண்ணம் மதிள்* தென்குருகூர்ச் சடகோபன்*

பண்ணார் தமிழ்* ஆயிரத்து இப்பத்தும்வல்லார்*

மண்ணாண்டு* மணம்கமழ்வர் மல்லிகையே. (2)         9.8.11

 

ஒன்பதாம் திருமொழி

 

3761:##

மல்லிகைகமழ் தென்றல் ஈருமாலோ!*

  வண்குறிஞ்சி இசைதவழுமாலோ*

செல்கதிர் மாலையும் மயக்குமாலோ!*

  செக்கர்நன் மேகங்கள் சிதைக்குமாலோ*

அல்லியந் தாமரைக் கண்ணன் எம்மான்*

  ஆயர்கள்ஏறு அரியேறு எம்மாயோன்*

புல்லிய முலைகளும் தோளும் கொண்டு

  புகலிடம் அறிகிலம் தமியமாலோ! (2)      9.9.1

 

3762:

புகலிடம் அறிகிலம் தமியமாலோ!

  புலம்புறு மணிதென்றல் ஆம்பலாலோ*

பகலடுமாலைவண் சாந்தமாலோ!*

  பஞ்சமம் முல்லைதண் வாடையாலோ*

அகலிடம் படைத்திடந்து உண்டுமிழ்ந்து-

  அளந்து* எங்கும் அளிக்கின்ற ஆயன்மாயோன்*

இகலிடத்து அசுரர்கள் கூற்றம் வாரான்*

  இனியிருந்து என்னுயிர் காக்குமாறென்?            9.9.2

 

3763:

இனியிருந்து என்னுயிர் காக்குமாறென்*

  இணைமுலை நமுக நுண்ணிடை நுடங்க*

துனியிருங்கலவி செய்து ஆகம்தோய்ந்து*

  துறந்தெம்மை இட்டகல் கண்ணன்கள்வன்*

தனியிளஞ்சிங்கம் எம்மாயன்வாரான்*

  தாமரைக்கண்ணும் செவ்வாயும்*

நீலப் பனியிருங்குழல்களும் நான்கு தோளும்*

  பாவியேன் மனத்தே நின்றீருமாலோ!      9.9.3

 

3764:

பாவியேன் மனத்தே நின்றீருமாலோ!*

  வாடை தண்வாடை வெவ்வாடையாலோ*

மேவுதண்மதியம் வெம்மதியமாலோ!*

  மென்மலர்ப்பள்ளி வெம்பள்ளியாலோ*

தூவியம் புள்ளுடைத் தெய்வ வண்டுதுதைந்த*

  எம்பெண்மையம் பூவிதாலோ*

ஆவியிம் பரமல்ல வகைகளாலோ!*

  யாமுடை நெஞ்சமும் துணையன்றாலோ!         9.9.4

 

3765:

யாமுடை நெஞ்சமும் துணையன்றாலோ!*

  ஆ புகும்மாலையும் ஆகின்றாலோ,*

யாமுடை ஆயன்தன் மனம் கல்லாலோ!*

  அவனுடைத் தீங்குழல் ஈருமாலோ*

யாமுடை துணையென்னும் தோழிமாரும்*

  எம்மின் முன்அவனுக்கு மாய்வராலோ*

யாமுடை ஆருயிர் காக்குமாறென்?

  அவனுடை அருள் பெறும்போது அரிதே. 9.9.5

 

3766:

அவனுடைஅருள் பெறும்போது அரிதால்*

  அவ்வருள்அல்லன அருளும் அல்ல*

அவனருள் பெறுமளவு ஆவிநில்லாது*

  அடுபகல் மாலையும் நெஞ்சும் காணேன்*

சிவனொடு பிரமன் வண் திருமடந்தை*

  சேர்திருவாகம் எம்மாவியீரும்*

எவம் இனிப்புகுமிடம்? எவன் செய்கேனோ?

  ஆருக்கென் சொல்லுகேன் அன்னைமீர்காள்!   9.9.6

 

3767:

ஆருக்கென் சொல்லுகேன் அன்னைமீர்காள்!*

  ஆருயிர் அளவுஅன்று இக்கூர்தண்வாடை*

காரொக்கும்மேனி நங்கண்ணன் கள்வம்*

  கவர்ந்த அத்தனிநெஞ்சம் அவன்கணஃதே*

சீருற்றாகிற் புகையாழ்நரம்பு*

  பஞ்சமம்தண் பசுஞ்சாந்தணைந்து*

போருற்றவாடைதண் மல்லிகைப்பூப்*

  புதுமணம்முகந்துகொண்டு எறியுமாலோ!       9.9.7

 

3768:

புதுமணம் முகந்துகொண்டு எறியுமாலோ!*

  பொங்கிளவாடை புன்செக்கராலோ*

அதுமணந்தகன்றநண் கண்ணன்கள்வம்*

  கண்ணினிற் கொடிது இனியதனிலும்பர்*

மதுமண மல்லிகை மந்தக்கோவை*

  வண்பசுஞ்சாந்தினில் பஞ்சமம்வைத்து*

அதுமணந்து இன்னருள் ஆய்ச்சியர்க்கே*

  ஊதும் அத்தீங்குழற்கே உய்யேன்நான்!   9.9.8

 

3769:

ஊதும் அத்தீங்குழற்கே உய்யேன்நான்!*

  அதுமொழிந்திடை இடைத்தன் செய்கோலத்*

தூதுசெய் கண்கள் கொண்டொன்று பேசித்*

  தூமொழி இசைகள் கொண்டு ஒன்றுநோக்கி*

பேதுறு முகம்செய்து நொந்துநொந்து*

  பேதைநெஞ்சறவறப் பாடும்பாட்டை*

யாதுமொன்று அறிகிலம் அம்மஅம்ம!*

  மாலையும்வந்தது மாயன்வாரான்.           9.9.9

 

3770:

மாலையும்வந்தது மாயன்வாரான்*

  மாமணிபுலம்ப வல்லேறணைந்த*

கோல நன்நாகுகள் உகளுமாலோ!

  கொடியென குழல்களும் குழறுமாலோ*

வாலொளி வளர்முல்லை கருமுகைகள்*

  மல்லிகை அலம்பி வண்டாலுமாலோ*

வேலையும் விசும்பில் விண்டலறுமாலோ!*

  என்சொல்லி உய்வன் இங்கு அவனைவிட்டே?   9.9.10

 

3771:##

அவனைவிட்டகன்று உயிர்ஆற்றகில்லா*

  அணியிழைஆய்ச்சியர் மாலைப்பூசல்*

அவனைவிட்டு அகல்வதற்கே இரங்கி*

  அணிகுருகூர் சடகோபன்மாறன்*

அவனியுண்டு உமிழ்ந்தவன் மேலுரைத்த*

  ஆயிரத்துள் இவை பத்தும்கொண்டு*

அவனியுள் அலற்றிநின்று உய்ம்மின் தொண்டீர்!*

  அச்சொன்ன மாலை நண்ணித்தொழுதே! (2)   9.9.11

 

பத்தாம் திருமொழி       

 

3772:##

மாலைநண்ணித்* தொழுதெழுமினோ வினைகெட*

காலைமாலை* கமலமலர் இட்டு நீர்*

வேலைமோதும் மதிள்சூழ்* திருக்கண்ணபுரத்து*

ஆலின்மேலால் அமர்ந்தான்* அடிஇணைகளே. (2)       9.10.1

 

3773:

கள்ளவிழும் மலர்இட்டு* நீர்இறைஞ்சுமின்*

நள்ளிசேரும் வயல்சூழ்* கிடங்கின்புடை*

வெள்ளியேய்ந்த மதிள்சூழ்* திருக்கண்ணபுரம்உள்ளி*

நாளும்தொழுது எழுமினோ தொண்டரே!            9.10.2

 

3774:

தொண்டர் நுந்தம்* துயர்ப்போகநீர் ஏகமாய்*

விண்டுவாடாமலர்இட்டு* நீர்இறைஞ்சுமின்*

வண்டுபாடும் பொழில்சூழ்* திருக்கண்ணபுரத்து அண்டவாணன்*

அமரர்பெருமானையே.             9.10.3

 

3775:

மானைநோக்கி* மடப்பின்னைதன் கேள்வனை*

தேனைவாடாமலர்இட்டு* நீர்இறைஞ்சுமின்*

வானைஉந்தும் மதிள்சூழ்* திருக்கண்ணபுரம்*

தான்நயந்த பெருமான்* சரணமாகுமே.    9.10.4

 

3776:

சரணமாகும்* தனதாள் அடைந்தார்க்கெல்லாம்*

மரணமானால்* வைகுந்தம் கொடுக்கும்பிரான்*

அரணமைந்த மதிள்சூழ்* திருக்கண்ணபுரம் தரணியாளன்*

தனதன்பர்க்கு அன்பாகுமே.   9.10.5

 

 

3777:

அன்பனாகும்* தனதாள் அடைந்தார்க்கெல்லாம்*

செம்பொன்ஆகத்து* அவுணன்உடல் கீண்டவன்,

நன்பொன்ஏய்ந்த மதிள்சூழ்* திருக்கண்ணபுரத்து அன்பன்*

நாளும் தன்* மெய்யர்க்கு மெய்யனே.        9.10.6

 

3778:

மெய்யனாகும்* விரும்பித் தொழுவார்க்கெல்லாம்*

பொய்யனாகும்* புறமே தொழுவார்க்கெல்லாம்*

செய்யில்வாளையுகளும்* திருக்கண்ணபுரத்து ஐயன்*

ஆகத்தணைப்பார்கட்கு அணியனே.          9.10.7

 

3779:

அணியனாகும்* தனதாள் அடைந்தார்க்கெல்லாம்*

பிணியும்சாரா* பிறவிகெடுத்தாளும்*

மணிபொன் ஏய்ந்தமதிள்சூழ்* திருக்கண்ணபுரம் பணிமின்*

நாளும் பரமேட்டிதன் பாதமே.           9.10.8

 

3780:

பாதம்நாளும்* பணியத் தணியும்பிணி*

ஏதம்சாரா* எனக்கேல் இனியென்குறை?*

வேதநாவர் விரும்பும்* திருக்கண்ணபுரத்து ஆதியானை*

அடைந்தார்க்கு அல்லல் இல்லையே.          9.10.9

 

3781:

இல்லை அல்லல்* எனக்கேல்இனி என்குறை?,

அல்லிமாதர் அமரும்* திருமார்பினன்*

கல்லில் ஏய்ந்த மதிள்சூழ்* திருக்கண்ணபுரம் சொல்ல*

நாளும் துயர் பாடுசாராவே.   9.10.10

 

3782:##

பாடுசாரா* வினைபற்றற வேண்டுவீர்*

மாடநீடு* குருகூர்ச்சடகோபன்*

சொல் பாடலானதமிழ்* ஆயிரத்துள் இப்பத்தும்-

பாடியாடி* பணிமின் அவன் தாள்களே. (2)           9.10.11