பத்தாம் பத்து


திருவாய்மொழி பத்தாம் பத்து

முதல் திருமொழி

 

3783:##

தாள தாமரைத்* தடமணி வயல் திருமோகூர்*

நாளும் மேவி நன்கமர்ந்து நின்று* அசுரரைத் தகர்க்கும்*

தோளும் நான்குடைச்* சுரிகுழல் கமலக்கண் கனிவாய்*

காள மேகத்தை அன்றி* மற்றொன்றிலம் கதியே.  (2) 10.1.1

 

3784:

இலங்கதி மற்றொன்று எம்மைக்கும்* ஈன்தண் துழாயின்*

அலங்கலங்கண்ணி* ஆயிரம் பேருடை அம்மான்*

நலங்கொள் நான்மறை வாணர்கள் வாழ்* திருமோகூர்*

நலங்கழலவன் அடிநிழல்* தடமன்றி யாமே.      10.1.2

 

3785:

அன்றியாம் ஒரு புகலிடம்* இலம் என்றென்று அலற்றி*

நின்று நான்முகன் அரனொடு* தேவர்கள் நாட*

வென்று இம்மூவுலகளித்து உழல்வான்* திருமோகூர்*

நன்று நாம் இனி நணுகுதும்* நமதிடர் கெடவே.            10.1.3

 

3786:

இடர்கெட எம்மைப் போந்தளியாய்* என்றென்று ஏத்தி*

சுடர்கொள் சோதியைத்* தேவரும் முனிவரும் தொடர*

படர்கொள் பாம்பணைப்* பள்ளிகொள்வான் திருமோகூர்*

இடர் கெடவடி பரவுதும்* தொண்டீர்! வம்மினே.            10.1.4

 

3787:

தொண்டீர்! வம்மின்* நம்சுடரொளி ஒருதனி முதல்வன்*

அண்ட மூவுலகு அளந்தவன்* அணி திருமோகூர்*

எண் திசையும் ஈன்கரும்பொடு* பொருஞ்செந்நெல் விளைய*

கொண்ட கோயிலை வலஞ்செய்து* இங்கு ஆடுதும் கூத்தே.            10.1.5

 

3888:

கூத்தன் கோவலன்* குதற்று வல்லசுரர்கள் கூற்றம்*

ஏத்தும் நங்கட்கும்* அமரர்க்கும் முனிவர்க்கும் இன்பன்*

வாய்த்த தண்பணை வளவயல்சூழ்* திருமோகூர்-

ஆத்தன்* தாமரை அடியன்றி* மற்றிலம் அரணே.         10.1.6

 

3789:

மற்றிலம் அரண்* வான்பெரும் பாழ்தனி முதலா*

சுற்று நீர்படைத்து* அதன்வழித் தொன்முனி முதலா*

முற்றும் தேவரோடு* உலகுசெய்வான் திருமோகூர்*

சுற்றிநாம் வலஞ்செய்ய* நம் துயர்கெடும் கடிதே.        10.1.7

 

3790:

துயர்கெடும் கடிதடைந்து வந்து* அடியவர் தொழுமின்*

உயர்கொள் சோலை* ஒண்தட மணியொளி திருமோகூர்*

பெயர்கள் ஆயிரமுடைய* வல்லரக்கர் புக்கழுந்த*

தயரதன் பெற்ற* மரதக மணித் தடத்தினையே.            10.1.8

 

3791:

மணித் தடத்தடி மலர்க்கண்கள்* பவளச் செவ்வாய்*

அணிக்கொள் நால்தடந்தோள்* தெய்வம் அசுரரை என்றும்*

துணிக்கும் வல்லரட்டன்* உறைபொழில் திருமோகூர்*

நணித்து நம்முடை நல்லரண்* நாம் அடைந்தனமே.    10.1.9

 

3792:

நாமடைந்த நல்லரண்* நமக்கென்று நல்லமரர்*

தீமை செய்யும் வல்லசுரரை* அஞ்சிச் சென்றடைந்தால்*

காமரூபங் கொண்டு* எழுந்தளிப்பான் திருமோகூர்*

நாமமே நவின்று எண்ணுமின்* ஏத்துமின் நமர்காள்!  10.1.10.

 

3793:##

ஏத்துமின் நமர்காள்* என்றுதான் குடமாடு-

கூத்தனை* குருகூர்ச் சடகோபன்* குற்றேவல்கள்*

வாய்த்த ஆயிரத்துள் இவை* வண் திருமோகூர்க்கு*

ஈத்த பத்திவை ஏத்த வல்லார்க்கு* இடர் கெடுமே.  (2)  10.1.11

 

இரண்டாம் திருமொழி

 

3794:##

கெடும் இடராயவெல்லாம்* கேசவா வென்ன* நாளும்-

கொடுவினை செய்யும்* கூற்றின் தமர்களும் குறுககில்லார்*

விடமுடை அரவில்பள்ளி* விரும்பினான் சுரும்பலற்றும்*

தடமுடை வயல்* அனந்தபுரநகர்ப் புகுதுமின்றே.  (2)  10.2.1

 

3795:

இன்றுபோய்ப் புகுதிராகில்* எழுமையும் ஏதம்சார*

குன்றுநேர் மாடமாடே* குருந்துசேர் செருந்திபுன்னை*

மன்றலர் பொழில்* அனந்தபுரநகர் மாயன்நாமம்*

ஒன்றும் ஓராயிரமாம்* உள்ளுவார்க்கு உம்பரூரே.       10.2.2

 

3796:

ஊரும்புட் கொடியும் அஃதே* உலகெல்லாம் உண்டுமிழ்ந்தான்*

சேரும் தண்ணனந்தபுரம்* சிக்கெனப் புகுதிராகில்*

தீரும்நோய் வினைகளெல்லாம்* திண்ணநாம் அறியச்சொன்னோம்*

பேரும் ஓராயிரத்துள்* ஒன்றுநீர் பேசுமினே.       10.2.3

 

3797:

பேசுமின் கூசமின்றிப்* பெரியநீர் வேலைசூழ்ந்து*

வாசமே கமழும் சோலை* வயலணியனந்தபுரம்*

நேசஞ்செய்து உறைகின்றானை* நெறிமையால் மலர்கள்தூவி*

பூசனை செய்கின்றார்கள்* புண்ணியம் செய்தவாறே.          10.2.4

 

3798:

புண்ணியம் செய்து* நல்ல புனலொடு மலர்கள்தூவி*

எண்ணுமின் எந்தைநாமம்* இப்பிறப்பறுக்கும் அப்பால்*

திண்ணம்நாம் அறியச்சொன்னோம்* செறிபொழில் அனந்தபுரத்து*

அண்ணலார் கமலபாதம்* அணுகுவார் அமரராவார். 10.2.5

 

3799:

அமரராய்த் திரிகின்றார்கட்கு* ஆதிசேர் அனந்தபுரத்து*

அமரர்கோன் அர்ச்சிக்கின்று* அங்ககப்பணி செய்வர்விண்ணோர்*

நமர்களோ! சொல்லக்கேண்மின்* நாமும்போய் நணுகவேண்டும்*

குமரனார் தாதை* துன்பம் துடைத்த கோவிந்தனாரே.           10.2.6

 

3800:

துடைத்த கோவிந்தனாரே* உலகுயிர் தேவும்மற்றும்*

படைத்த எம்பரமமூர்த்தி* பாம்பணைப் பள்ளிகொண்டான்*

மடைத்தலை வாளைபாயும்* வயலணியனந்தபுரம்*

கடைத்தலை சீய்க்கப்பெற்றால்* கடுவினை களையலாமே.            10.2.7

 

3801:

கடுவினை களையலாகும்* காமனைப் பயந்தகாளை*

இடவகை கொண்டதென்பர்* எழிலணியனந்தபுரம்*

படமுடையரவில் பள்ளி* பயின்றவன் பாதம்காண*

நடமினோ நமர்களுள்ளÖர்!* நாம் உமக்கறியச் சொன்னோம்.            10.2.8

 

3802:

நாம் உமக்கு அறியச்சொன்ன* நாள்களும் நணியவான*

சேமம் நன்குடைத்துக்கண்டீர்* செறிபொழிலனந்தபுரம்*

தூமநல் விரைமலர்கள்* துவளற ஆய்ந்துகொண்டு*

வாமனன் அடிக்கென்று எத்த* மாய்ந்தறும் வினைகள்தாமே.            10.2.9

 

3803:

மாய்ந்தறும் வினைகள்தாமே* மாதவா என்ன* நாளும்-

ஏய்ந்தபொன் மதிள்* அனந்தபுர நகரெந்தைக்கென்று*

சாந்தொடு விளக்கம்தூபம்* தாமரை மலர்கள்நல்ல*

ஆய்ந்துகொண்டு ஏத்தவல்லார்* அந்தமில் புகழினாரே.       10.2.10.

 

3804:##

அந்தமில் புகழ்* அனந்தபுர நகர் ஆதிதன்னை*

கொந்தலர் பொழில்* குருகூர் மாறன் சொல்லாயிரத்துள்*

ஐந்தினோடு ஐந்தும்வல்லார்* அணைவர்போய் அமருலகில்*

பைந்தொடி மடந்தையர்தம்* வேய்மரு தோளிணையே.  (2) 10.2.11

 

மூன்றாம் திருமொழி

 

3805:

வேய்மரு தோளிணை மெலியு மாலோ!*

  மெலிவும்என் தனிமையும் யாதும் நோக்கா*

காமரு குயில்களும் கூவு மாலோ!*

  கணமயில் அவைகலந்து ஆலு மாலோ*

ஆமருவின நிரை மேய்க்க நீபோக்கு*

  ஒருபகல் ஆயிரம் ஊழியாலோ*

தாமரைக் கண்கள்கொண்டு ஈர்தி யாலோ!*

  தகவிலை தகவிலையே நீ கண்ணா!  (2) 10.3.1

 

3806:

தகவிலை தகவிலையே நீ கண்ணா!*

  தடமுலை புணர் தொறும் புணர்ச்சிக்காரா*

சுகவெள்ளம் விசும்பிறந்து அறிவை மூழ்க்கச்-

  சூழ்ந்து* அதுகனவென நீங்கி யாங்கே*

அகவுயிர் அகமகந்தோறும் உள்புக்கு*

  ஆவியின் பரமல்ல வேட்கை அந்தோ*

மிகமிக இனி உன்னைப் பிரிவையாமால்*

  வீவ நின் பசுநிரை மேய்க்கப் போக்கே.  10.3.2

 

3807:

வீவன்நின் பசுநிரை மேய்க்கப் போக்கு*

  வெவ்வுயிர் கொண்டு எனதாவி வேமால்*

யாவரும் துணையில்லை யான் இருந்து*

  உன்அஞ்சன மேனியை ஆட்டம் காணேன்*

போவதன்று ஒருபகல் நீயகன்றால்*

  பொருகயற் கண்ணிணை நீரும் நில்லா*

சாவது இவ்வாய்க்குலத் தாய்ச்சியோமாய்ப் பிறந்த*

  இத் தொழுத்தையோம் தனிமை தானே. 10.3.3

 

3808:

தொழுத்தையோம் தனிமையும் துணை பிரிந்தார்-

  துயரமும்* நினைகிலை கோவிந்தா* நின்-

தொழுத்தனிற் பசுக்களையே விரும்பித்*

  துறந்து எம்மையிட்டு அவை மேய்க்கப் போதி*

பழுத்த நல்லமுதின் இன்சாற்று வெள்ளம்*

  பாவியேன் மனமகந்தோறும் உள்புக்கு-

அழுத்த* நின் செங்கனி வாயின் கள்வப்பணிமொழி*

  நினைதொறும் ஆவிவேமால்.          10.3.4

 

3809:

பணிமொழி நினைதொறும் ஆவி வேமால்*

  பகல்நிரை மேய்க்கிய போய கண்ணா!*

பிணியவிழ் மல்லிகை வாடை தூவப்*

  பெருமத மாலையும் வந்தின் றாலோ!*

மணிமிகு மார்வினின் முல்லைப் போது*

  என்வனமுலை கமழ்வித்து உன்வாயமுதம்தந்து*

அணிமிகு தாமரைக் கையை அந்தோ!*

  அடிச்சியோம் தலைமிசை நீஅணியாய்.            10.3.5

 

3810:

அடிச்சியோம் தலைமிசை நீஅணியாய்*

  ஆழியங் கண்ணா! உன் கோலப் பாதம்*

பிடித்தது நடு உனக்கு அரிவையரும் பலர்

  அதுநிற்க எம் பெண்மை ஆற்றோம்*

வடித்தடங் கண்ணிணை நீரும் நில்லா*

  மனமும்நில்லா எமக்கு அது தன்னாலே*

வெடிப்புநின் பசுநிரை மேய்க்கப் போக்கு*

  வேம் எமதுயிர் அழல் மெழுகிலுக்கே.       10.3.6

 

3811:

வேம் எமதுயிர் அழல் மெழுகிலுக்கு*

  வெள்வளை மேகலை கழன்று வீழ*

தூமலர்க் கண்ணிணை முத்தம் சோரத்*

  தொணைமுலை பயந்து என தோள்கள் வாட*

மாமணி வண்ணா! உன்செங்கமல வண்ணா*

  மென் மலரடி நோவ நீபோய்*

ஆமகிழ்ந்து உகந்தவை மேய்க்கின்று உன்னோடு*

  அசுரர்கள் தலைப்பெய்யில் எவன்கொல் ஆங்கே?     10.3.7

 

3812:

அசுரர்கள் தலைப்பெய்யில் எவன்கொல் ஆங்கென்று*

  ஆழும் என்னாருயிர் ஆன்பின் போகேல்*

கசிகையும் வேட்கையும் உள்கலந்து*

  கலவியும் நலியும் என்கை கழியேல்*

வசிசெயுன் தாமரைக் கண்ணும் வாயும்*

  கைகளும் பீதக உடையும் காட்டி*

ஒசிசெய் நுண்ணிடையிள வாய்ச்சியர்*

  நீயுகக்கும் நல்லவரொடும் உழிதராயே. 10.3.8

 

3813:

உகக்கு நல்லவரொடும் உழிதந்து*

  உன்தன் திருவுள்ளம் இடர்கெடுந்தோறும்* நாங்கள்-

வியக்க இன்புறுதும் எம்பெண்மை யாற்றோம்*

  எம்பெருமான்! பசு மேய்க்கப் போகேல்*

மிகப்பல அசுரர்கள் வேண்டுருவங் கொண்டு*

  நின்று உழிதருவர் கஞ்ச னேவ*

அகப்படில் அவரொடும் நின்னொடு ஆங்கே*

  அவத்தங்கள் விளையும் என்சொற்கொள் அந்தோ!   10.3.9

 

3814:

அவத்தங்கள் விளையும் என்சொற்கொளந்தோ!*

  அசுரர்கள் வங்கையர் கஞ்சனேவ*

தவத்தவர் மறுக நின்று உழிதருவர்*

  தனிமையும் பெரிது உனக்கு இராமனையும்-

உவர்த்தலை* உடன்திரி கிலையும் என்றென்று-

  ஊடுற* என்னுடை ஆவி வேமால்*

திவத்திலும் பசுநிரை மேய்ப்பு உவத்தி*

  செங்கனி வாயெங்கள் ஆயர் தேவே!       10.3.10.

 

3815:##

செங்கனி வாயெங்கள் ஆயர் தேவு*

  அத்திருவடி திருவடி மேல்* பொருநல்-

சங்கணி துறைவன் வண்தென் குருகூர்*

  வண்சட கோபன் சொல்லாயிரத்துள்*

மங்கையர் ஆய்ச்சியர் ஆய்ந்த மாலை*

  அவனொடும் பிரிவதற்கு இரங்கி* தையல்-

அங்கவன் பசுநிரை மேய்ப் பொழிப்பான்-

  உரைத்தன* இவையும் பத்து அவற்றின் சார்வே.  (2) 10.3.11

 

நான்காம் திருமொழி

 

3816:##

சார்வே தவநெறிக்குத்* தாமோதரன் தாள்கள்*

கார்மேக வண்ணன்* கமல நயனத்தன்*

நீர்வானம் மண்எரி காலாய்* நின்ற நேமியான்*

பேர் வானவர்கள்* பிதற்றும் பெருமையனே.  (2)           10.4.1

 

3817:

பெருமையனே வானத்து இமையோர்க்கும்* காண்டற்-

கருமையனே* ஆகத்தணை யாதார்க்கு* என்றும்-

திருமெய் உரைகின்ற* செங்கண்மால்* நாளும்-

இருமை வினைகடிந்து* இங்கு என்னையாள்கின்றானே.      10.4.2

 

3818:

ஆள்கின்றான் ஆழியான்* ஆரால் குறைவுடையம்?*

மீள்கின்றதில்லைப்* பிறவித் துயர்கடிந்தோம்*

வாள்கெண்டை ஒண்கண்* மடப்பின்னை தன்கேள்வன்*

தாள்கண்டு கொண்டு* என் தலைமேல் புனைந்தேனே.          10.4.3

 

3819:

தலைமேல் புனைந்தேன்* சரணங்கள்* ஆலின்-

இலைமேல் துயின்றான்* இமையோர் வணங்க*

மலைமேல்தான் நின்று* என்மனத்துள் இருந்தானை*

நிலைபேர்க்கலாகாமை* நிச்சித்திருந்தேனே.   10.4.4

 

3820:

நிச்சித்திருந்தேன்* என்னெஞ்சம் கழியாமை*

கைச்சக்கரத்தண்ணல்* கள்வம் பெரிதுடையன்*

மெச்சப்படான் பிறர்க்கு* மெய்போலும் பொய்வல்லன்*

நச்சப்படும் நமக்கு* நாகத் தணையானே.           10.4.5

 

3821:

நாகத் தணையானை* நாள்தோறும் ஞானத்தால்*

ஆகத்தணைப் பார்க்கு* அருள்செய்யும் அம்மானை*

மாகத்து இளமதியம்* சேரும் சடையானை*

பாகத்து வைத்தான் தன்* பாதம் பணிந்தேனே. 10.4.6

 

3822:

பணிநெஞ்சே! நாளும்* பரம பரம்பரனை*

பிணிஒன்றும் சாரா* பிறவி கெடுத்தாளும்*

மணிநின்ற சோதி* மதுசூதன் என்னம்மான்*

அணிநின்ற செம்பொன்* அடலாழி யானே.        10.4.7

 

3823:

ஆழியான் ஆழி* அமரர்க்கும் அப்பாலான்*

ஊழியான் ஊழி படைத்தான்* நிரைமேய்த்தான்*

பாழியந் தோளால்* வரையெடுத்தான் பாதங்கள்*

வாழி என்நெஞ்சே!* மறவாது வாழ்கண்டாய்.     10.4.8

 

3824:

கண்டேன் கமல மலர்ப்பாதம்* காண்டலுமே*

விண்டே யொழிந்த* வினையாயின வெல்லாம்*

தொண்டேசெய்து என்றும்* தொழுது வழியொழுக*

பண்டே பரமன் பணித்த* பணிவகையே. 10.4.9

 

3825:

வகையால் மனமொன்றி* மாதவனை* நாளும்-

புகையால் விளக்கால்* புதுமலரால் நீரால்*

திசைதோறு அமரர்கள்* சென்று இறைஞ்ச நின்ற*

தகையான் சரணம்* தமர்கட்கு ஓர்பற்றே.            10.4.10.

 

3826:##

பற்றென்று பற்றிப்* பரம பரம்பரனை*

மல்திண்தோள் மாலை* வழுதி வளநாடன்*

சொல் தொடையந்தாதி* ஓராயிரத்துள் இப்பத்தும்*

கற்றார்க்கு ஓர்பற்றாகும்* கண்ணன் கழலிணையே.  (2)      10.4.11

 

ஐந்தாம் திருமொழி

 

3827:##

கண்ணன் கழலிணை* நண்ணும் மனமுடையீர்*

எண்ணும் திருநாமம்* திண்ணம் நாரணமே.  (2)           10.5.1

 

3828:

நாரணன் எம்மான்* பாரணங்காளன்*

வாரணம் தொலைத்த* காரணன் தானே. 10.5.2

 

3829:

தானே உலகெல்லாம்* தானே படைத்திடந்து*

தானே உண்டுமிழ்ந்து* தானே ஆள்வானே.         10.5.3

 

3830:

ஆள்வான் ஆழிநீர்* கோள்வாய் அரவணையான்*

தாள்வாய் மலரிட்டு* நாள்வாய் நாடீரே.   10.5.4

 

3831:

நாடீர் நாள்தோறும்* வாடா மலர்கொண்டு*

பாடீர் அவன்நாமம்* வீடே பெறலாமே.     10.5.5

 

3832:##

மேயான் வேங்கடம்* காயா மலர்வண்ணன்*

பேயார் முலையுண்ட* வாயான் மாதவனே.  (2)  10.5.6

 

3833:

மாதவன் என்றென்று* ஓத வல்லீரேல்*

தீதொன்றும் அடையா* ஏதம் சாராவே.      10.5.7

 

3834:

சாரா ஏதங்கள்* நீரார் முகில்வண்ணன்*

பேர் ஆர் ஓதுவார்* ஆரார் அமரரே. 10.5.8

 

3835:

அமரர்க்கு அரியானை* தமர்கட்கு எளியானை*

அமரத் தொழுவார்கட்கு* அமரா வினைகளே.     10.5.9

 

3836:

வினைவல் இருளென்னும்* முனைகள் வெருவிப்போம்*

சுனை நன் மலரிட்டு* நினைமின் நெடியானே.       10.5.10.

 

3837:##

நெடியான் அருள் சூடும்* படியான் சடகோபன்*

நொடி ஆயிரத்திப்பத்து* அடியார்க்கு அருள் பேறே.  (2)        10.5.11

 

ஆறாம் திருமொழி

 

3838:##

அருள்பெறுவார் அடியார்* தம் அடியனேற்கு* ஆழியான்-

அருள்தருவான் அமைகின்றான்* அதுநமது விதிவகையே*

இருள்தருமா ஞாலத்துள்* இனிப்பிறவி யான்வேண்டேன்*

மருளொழி நீமடநெஞ்சே!* வாட்டாற்றான் அடிவணங்கே.  (2)            10.6.1

 

3839:

வாட்டாற்றான் அடிவணங்கி* மாஞாலப் பிறப்பறுப்பான்*

கேட்டாயே மடநெஞ்சே!* கேசவன் எம் பெருமானை*

பாட்டாய பலபாடிப்* பழவினைகள் பற்றறுத்து*

நாட்டாரோடு இயல்வொழிந்து* நாரணனை நண்ணினமே.            10.6.2

 

3840:

நண்ணினம் நாரயணனை* நாமங்கள் பலசொல்லி*

மண்ணுலகில் வளம்மிக்க* வாட்டாற்றான் வந்துஇன்று*

விண்ணுலகம் தருவானாய்* விரைகின்றான் விதிவகையே*

எண்ணின வாறாகா* இக்கருமங்கள் என்னெஞ்சே!     10.6.3

 

3841:

என்னெஞ்சத்து உள்ளிருந்து இங்கு இருந்தமிழ்நூலிவைமொழிந்து*

வன்னெஞ்சத் திரணியனை* மார்விடந்த வாட்டாற்றான்*

மன்னஞ்சப் பாரதத்துப்* பாண்டவர்க்காப் படை தொட்டான்*

நல்நெஞ்சே! நம்பெருமான்* நமக்கு அருள்தான் செய்வானே.            10.6.4

 

3842:

வானேற வழிதந்த* வாட்டாற்றான் பணிவகையே*

நான்ஏறப் பெறுகின்றேன்* நரகத்தை நகுநெஞ்சே*

தேனேறு மலர்த்துளவம்* திகழ்பாதன்* செழும்பறவை-

தானேறித் திரிவான்* தாளிணை என்தலைமேலே.      10.6.5

 

3843:

தலைமேல தாளிணைகள்* தாமரைக்கண் என்னம்மான்*

நிலைபேரான் என்நெஞ்சத்து* எப்பொழுதும் எம்பெருமான்*

மலைமாடத்து அரவணைமேல்* வாட்டாற்றான் மதமிக்க*

கொலையானை மருப்பொசித்தான்* குரைகழல்கள் குறுகினமே.            10.6.6

 

3844:

குரைகழல்கள் குறுகினம்* நம் கோவிந்தன் குடிகொண்டான்*

திரைகுழுவு கடல்புடைசூழ்* தென்னாட்டுத் திலதமன்ன*

வரைகுழுவு மணிமாட* வாட்டாற்றான் மலரடிமேல்*

விரைகுழுவு நறுந்துளவம்* மெய்ந்நின்று கமழுமே.     10.6.7

 

3845:

மெய்ந்நின்று கமழ்துளவ* விரையேறு திருமுடியன்*

கைந்நின்ற சக்கரத்தன்* கருதுமிடம் பொருதுபுனல்*

மைந்நின்ற வரைபோலும்* திருவுருவ வாட்டாற்றாற்கு*

எந்நன்றி செய்தேனா* என்னெஞ்சில் திகழவதுவே?   10.6.8

 

3846:

திகழ்கின்ற திருமார்பில்* திருமங்கை தன்னோடும்*

திகழ்கின்ற திருமாலார்* சேர்விடம்தண் வாட்டாறு*

புகழ்கின்ற புள்ðர்தி* போரரக்கர் குலம்கெடுத்தான்*

இகழ்வின்றி என்னெஞ்சத்து எப்பொழுதும் பிரியானே.         10.6.9

 

3847:

பிரியாதுஆட் செய்யென்று* பிறப்பறுத்தாள் ஆளறக்கொண்டான்*

அரியாகி இரணியனை* ஆகங்கீண்டான் அன்று*

பெரியார்க்கு ஆட்பட்டக்கால்* பெறாதபயன் பெறுமாறு*

வரிவாள் வாயரவணைமேல்* வாட்டாற்றான் காட்டினனே. 10.6.10.

 

3848:##

காட்டித்தன் கனைகழல்கள்* கடுநரகம் புகலொழித்த*

வாட்டாற்று எம்பெருமானை* வளங்குருகூர்ச் சடகோபன்*

பாட்டாய தமிழ்மாலை* ஆயிரத்துள் இப்பத்தும்-

கேட்டு* ஆரார் வானவர்கள்* செவிக்கினிய செஞ்சொல்லே.  (2)            10.6.11

 

ஏழாம் திருமொழி

 

3849:##

செஞ்சொற் கவிகாள்! உயிர்காத்தாட் செய்மின்* திருமாலிருஞ்சோலை*

வஞ்சக் கள்வன் மாமாயன்* மாயக் கவியாய் வந்து* என்-

நெஞ்சும் உயிரும் உள்கலந்து* நின்றார் அறியா வண்ணம்* என்-

நெஞ்சும் உயிரும் அவையுண்டு* தானே யாகி நிறைந்தானே.  (2)            10.7.1

 

3850:

தானே ஆகி நிறைந்து* எல்லாவுலகும் உயிரும் தானேயாய்*

தானே யானென்பானாகித்* தன்னைத் தானே துதித்து* எனக்குத்-

தேனே பாலே கன்னலே அமுதே* திருமாலிருஞ்சோலை*

கோனே யாகி நின்றொழிந்தான்* என்னை முற்றும் உயிருண்டே.            10.7.2

 

3851:

என்னை முற்றும் உயிருண்டு* என்மாயவர் ஆக்கை இதனுள்புக்கு*

என்னை முற்றும் தானேயாய்* நின்ற மாய அம்மான் சேர்*

தென்னன் திருமாலிருஞ்சோலைத்* திசைகை கூப்பிச் சேர்ந்தயான்*

இன்னும் போவேனே கொலோ!* என்கொல் அம்மான் திருவருளே?            10.7.3

 

3852:

என்கொல் அம்மான் திருவருள்கள்?* உலகும் உயிரும் தானேயாய்*

நன்கென்னுடலம் கைவிடான்* ஞாலத் தூடே நடந்துழக்கி*

தென்கொள் திசைக்குத் திலதமாய் நின்ற* திருமாலிருஞ்சோலை*

நங்கள் குன்றம் கைவிடான்* நண்ணா அசுரர் நலியவே.      10.7.4

 

3853:

நண்ணா அசுரர் நலிவெய்த* நல்ல அமரர் பொலிவெய்த*

எண்ணாதனகள் எண்ணும்* நன்முனிவர் இன்பம் தலைசிறப்ப*

பண்ணார் பாடலின் கவிகள்* யானாய்த் தன்னைத் தான்பாடி*

தென்னா வென்னும் என்னம்மான்* திருமாலிருஞ்சோலையானே.            10.7.5

 

3854:

திருமாலிருஞ்சோலை யானேயாகிச்* செழு மூவுலகும்* தன்-

ஒருமா வயிற்றினுள்ளே வைத்து* ஊழி ஊழி தலையளிக்கும்*

திருமால்என்னை ஆளுமால்* சிவனும் பிரமனும்காணாது*

அருமால் எய்தி அடிபரவ* அருளை ஈந்த அம்மானே.  10.7.6

 

3855:

அருளை ஈ எனம்மானே! என்னும்* முக்கண் அம்மானும்*

தெருள்கொள் பிரமனம்மானும்* தேவர் கோனும் தேவரும்*

இருள்கள் கடியும் முனிவரும்* ஏத்தும் அம்மான் திருமலை*

மருள்கள் கடியும் மணிமலை* திருமாலிருஞ்சோலை மலையே.            10.7.7

 

3856:##

திருமாலிருஞ்சோலை மலையே* திருப்பாற் கடலே என்தலையே*

திருமால்வைகுந்தமே* தண் திருவேங்கடமே எனதுடலே*

அருமாமாயத்து எனதுயிரே* மனமே வாக்கே கருமமே*

ஒருமா நொடியும் பிரியான்* என் ஊழி முதல்வன் ஒருவனே.  (2)            10.7.8

 

3857:

ஊழி முதல்வன் ஒருவனேயென்னும்*  ஒருவன் உலகெல்லாம்*

ஊழி தோறும் தன்னுள்ளே படைத்து* காத்துக் கெடுத்துழலும்*

ஆழி வண்ணன் என்னம்மான்* அந்தண் திருமாலிருஞ்சோலை*

வாழி மனமே கைவிடேல்* உடலும் உயிரும் மங்கவொட்டே. 10.7.9

 

3858:

மங்க வொட்டு உன் மாமாயை* திருமாலிருஞ்சோலைமேய*

நங்கள் கோனே! யானேநீயாகி* என்னை அளித்தானே*

பொங்கைம் புலனும் பொறியைந்தும்* கருமேந்திரியும் ஐம்பூதம்*

இங்கு இவ்வுயிரேய் பிரகிருதி* மானாங்கார மனங்களே.     10.7.10.

 

3859:##

மானாங்கார மனம்கெட* ஐவர் வன்கையர் மங்க*

தானாங்கார மாய்ப்புக்குத்* தானே தானே யானானை*

தேனாங் காரப் பொழில்குருகூர்*  சடகோபன் சொல்லாயிரத்துள்*

மானாங்காரத்திவை பத்தும்* திருமாலிரும் சோலைமலைக்கே.  (2)            10.7.11

 

எட்டாம் திருமொழி

 

3860:##

திருமாலிருஞ்சோலை மலை* என்றேன் என்ன*

திருமால்வந்து* என்னெஞ்சு நிறையப் புகுந்தான்*

குருமா மணியுந்து புனல்* பொன்னித் தென்பால்*

திருமால்சென்று சேர்விடம்* தென் திருப்பேரே.  (2)      10.8.1

 

3861:

பேரே உறைகின்ற பிரான்* இன்று வந்து*

பேரேனென்று* என்னெஞ்சு நிறையப் புகுந்தான்*

காரேழ் கடலேழ்* மலையேழ் உலகுண்டும்*

ஆராவயிற்றானை* அடங்கப் பிடித்தேனே.          10.8.2

 

3862:

பிடித்தேன் பிறவி கெடுத்தேன்* பிணிசாரேன்*

மடித்தேன் மனைவாழ்க்கையுள்* நிற்பதோர் மாயையை*

கொடிக் கோபுரமாடங்கள்சூழ்* திருப்பேரான்*

அடிச்சேர்வது எனக்கு* எளிதாயின வாறே.          10.8.3

 

3863:

எளிதாயினவாறென்று* என்கண்கள் களிப்ப*

களிதாகிய சிந்தையனாய்க்* களிக்கின்றேன்*

கிளிதாவிய சோலைகள்சூழ்* திருப்பேரான்*

தெளிதாகிய* சேண்விசும்பு தருவானே.    10.8.4

 

3864:

வானே தருவான்* எனக்கா என்னோடுஒட்டி*

ஊனேய் குரம்பை* இதனுள் புகுந்து* இன்று-

தானே தடுமாற்ற* வினைகள் தவிர்த்தான்*

தேனேய் பொழில்* தென்திருப்பேர் நகரானே.  10.8.5

 

3865:

திருப்பேர் நகரான்* திருமாலிருஞ்சோலை*

பொருப்பே உறைகின்றபிரான்* இன்றுவந்து*

இருப்பேன் என்று* என்னெஞ்சு நிறையப் புகுந்தான்*

விருப்பே பெற்று* அமுதமுண்டு களித்தேனே.    10.8.6

 

3866:

உண்டு களித்தேற்கு* உம்பர்என் குறை* மேலைத்-

தொண்டு களித்து* அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன்*

வண்டு களிக்கும் பொழில்சூழ்* திருப்பேரான்*

கண்டு களிப்பக்* கண்ணுள்நின்று அகலானே.  10.8.7

 

3867:

கண்ணுள் நின்று அகலான்* கருத்தின்கண் பெரியன்*

எண்ணில்நுண் பொருள்* ஏழிசையின் சுவைதானே*

வண்ணநன் மணிமாடங்கள்சூழ்* திருப்பேரான்*

திண்ணம் என்மனத்துப்* புகுந்தான் செறிந்துஇன்றே.           10.8.8

 

3868:

இன்று என்னைப் பொருளாக்கித்* தன்னை எந்னுள் வைத்தான்*

அன்று என்னைப் புறம்போகப்* புணர்த்தது என் செய்வான்?*

குன்றென்னத் திகழ்மாடங்கள்சூழ்* திருப்பேரான்*

ஒன்று எனக்கருள்செய்ய* உணர்த்தலுற்றேனே.            10.8.9

 

3869:##

உற்றேன் உகந்து பணிசெய்து* உனபாதம்-

பெற்றேன்* ஈதே இன்னம்* வேண்டுவது எந்தாய்*

கற்றார் மறைவாணர்கள்வாழ்* திருப்பேராற்கு*

அற்றார் அடியார் தமக்கு* அல்லல் நில்லாவே.  (2)       10.8.10.

 

3870:##

நில்லா அல்லல்* நீள்வயல்சூழ் திருப்பேர்மேல்*

நல்லார் பலர்வாழ்* குருகூர்ச் சடகோபன்*

சொல்லார் தமிழ்* ஆயிரத்துள் இவைபத்தும்-

வல்லார்* தொண்டராள்வது* சூழ்பொன் விசும்பே.  (2)          10.8.11

 

ஒன்பதாம் திருமொழி

 

3871:##

சூழ்விசும் பணிமுகில்* தூரியம் முழக்கின*

ஆழ்கடல் அலைதிரை* கையெடுத்து ஆடின*

ஏழ்பொழிலும்* வளமேந்திய என்னப்பன்*

வாழ்புகழ் நாரணன்* தமரைக் கண்டுகந்தே.  (2)          10.9.1

 

3872:

நாரணன் தமரைக் கண்டுகந்து* நல்நீர்முகில்*

பூரண பொற்குடம்* பூரித்து உயர்விண்ணில்*

நீரணி கடல்கள்* நின்றார்த்தன* நெடுவரைத்-

தோரணம் நிரைத்து* எங்கும் தொழுதனருலகே.           10.9.2

 

3873:

தொழுதனர் உலகர்கள்* தூபநல் மலர்மழை-

பொழிவனர்* பூழியன்று அளந்தவன் தமர்முன்னே*

எழுமினென்று இருமருங்கிசைத்தனர்* முனிவர்கள்*

வழியிது வைகுந்தற்கு என்று* வந்து எதிரே.        10.9.3

 

3874:

எதிரெதிர் இமையவர்* இருப்பிடம் வகுத்தனர்*

கதிரவரவரவர்* கைந்நிரை காட்டினர்*

அதிர்குரல் முரசங்கள்* அலைகடல் முழக்கொத்த*

மதுவிரி துழாய்முடி* மாதவன் தமர்க்கே.  10.9.4

 

3875:

மாதவன் தமரென்று* வாசலில் வானவர்*

போதுமின் எமதிடம்* புகுதுக வென்றலும்*

கீதங்கள் பாடினர்* கின்னரர் கெருடர்கள்*

வேதநல் வாயவர்* வேள்வியுள் மடுத்தே.  10.9.5

 

3876:

வேள்வியுள் மடுத்தலும்* விரைகமழ் நறும்புகை*

காளங்கள் வலம்புரி* கலந்துஎங்கும் இசைத்தனர்*

ஆளுமின்கள் வானகம்* ஆழியான் தமர் என்று*

வாளொண் கண்மடந்தையர்* வாழ்த்தினர் மகிழ்ந்தே.         10.9.6

 

3877:

மடந்தையர் வாழ்த்தலும்* மருதரும் வசுக்களும்*

தொடர்ந்து எங்கும்* தோத்திரம் சொல்லினர்* தொடுகடல்-

கிடந்த எங்கேசவன்* கிளரொளி மணிமுடி*

குடந்தை எங்கோவலன்* குடியடி யார்க்கே.         10.9.7

 

3878:

குடியடியார் இவர்* கோவிந்தன் தனக்கென்று*

முடியுடை வானவர்* முறைமுறை எதிர்கொள்ள*

கொடியணி நெடுமதிள்* கோபுரம் குறுகினர்*

வடிவுடை மாதவன்* வைகுந்தம் புகவே.    10.9.8

 

3879:

வைகுந்தம் புகுதலும்* வாசலில் வானவர்*

வைகுந்தன் தமர்எமர்* எமதிடம் புகுதென்று*

வைகுந்தத்து அமரரும்* முனிவரும் வியந்தனர்*

வைகுந்தம் புகுவது* மண்ணவர் விதியே.            10.9.9

 

3880:

விதிவகை புகுந்தனரென்று* நல்வேதியர்*

பதியினில் பாங்கினில்* பாதங்கள் கழுவினர்*

நிதியும் நற்சுண்ணமும்* நிறைகுட விளக்கமும்*

மதிமுக மடந்தையர்* ஏந்தினர் வந்தே.      10.9.10.

 

3881:##

வந்தவர் எதிர்கொள்ள* மாமணி மண்டபத்து*

அந்தமில் பேரின்பத்து* அடியரோடு இருந்தமை*

கொந்தலர் பொழில்* குருகூர்ச்சடகோபன்* சொல்-

சந்தங்களாயிரத்து* இவைவல்லார் முனிவரே.  10.9.11

 

பத்தாம் திருமொழி

 

3882:##

முனியே!நான்முகனே!* முக்கண்ணப்பா* என்பொல்லாக்-

கனிவாய்த்* தாமரைக்கண் கருமாணிக்கமே என்கள்வா!*

தனியேனாருயிரே!* எந்தலை மிசையாய் வந்திட்டு*

இனிநான் போகலொட்டேன்* ஒன்றும்மாயஞ் செய்யேல் என்னையே.  (2)   

 

3883:

மாயம்செய்யேல் என்னை* உன்திருமார்வத்து மாலைநங்கை*

வாசம்செய் பூங்குழலாள்* திருவாணை நின்னாணை கண்டாய்*

நேசம்செய்து உன்னோடு என்னை* உயிர் வேறின்றி ஒன்றாகவே*

கூசஞ்செய்யாது கொண்டாய்* என்னைக்கூவிக் கொள்ளாய் வந்தந்தோ!

 

3884:

கூவிக்கொள்ளாய் வந்தந்தோ!* என்பொல்லாக் கருமாணிக்கமே!*

ஆவிக்குஓர் பற்றுக்கொம்பு* நின்னலால் அறிகின்றி லேன்யான்*

மேவித்தொழும் பிரமன் சிவன்* இந்திரன் ஆதிக்கெல்லாம்*

நாவிக் கமல முதற்கிழங்கே!* உம்பர் அந்ததுவே.        10.10.3

 

3885:

உம்பரந்தண் பாழேயோ!* அதனுள்மிசை நீயேயோ*

அம்பர நற்சோதி!* அதனுள் பிரமன் அரன் நீ*

உம்பரும் யாதவரும் படைத்த* முனிவன் அவன்நீ*

எம்பரம் சாதிக்கலுற்று* என்னைப்போர விட்டிட்டாயே.        10.10.4

 

3886:

போரவிட்டிட்டு என்னை* நீபுறம்போக்கலுற்றால்* பின்னையான்-

ஆரைக்கொண்டு எத்தையந்தோ!* எனதென்பதென்? யானென்பதென்?*

தீர இரும்புண்ட நீரதுபோல* என்ஆருயிரை-

ஆரப்பருக* எனக்கு ஆராவமுதானாயே.      10.10.5

 

3887:

எனக்கு ஆராவமுதாய்* எனதாவியை இன்னுயிரை*

மனக்காராமை மன்னி உண்டிட்டாய்* இனியுண்டொழியாய்*

புனக்காயாநிறத்த* புண்டரீகக்கண் செங்கனிவாய்*

உனக்கேற்கும் கோலமலர்ப்பாவைக்கு* அன்பா! என்அன்பேயோ!            10.10.6

 

3888:##

கோல மலர்ப்பாவைக்கு அன்பாகிய* என் அன்பேயோ*

நீலவரை இரண்டு பிறைகவ்வி* நிமிர்ந்த தொப்ப*

கோல வராகமொன்றாய்* நிலம்கோட்டிடைக் கொண்ட எந்தாய்*

நீலக் கடல்கடைந்தாய்!* உன்னைப்பெற்று இனிப் போக்குவேனா?  (2)      

 

3889:

பெற்றினிப் போக்குவேனா* உன்னை என் தனிப்பேருயிரை*

உற்ற இருவினையாய்* உயிராய்ப் பயனாய் அவையாய்*

முற்றஇம் மூவுலகும்* பெருந்தூறாய்த் தூற்றில்புக்கு*

முற்றக் கரந்தொளித்தாய்!* என்முதல் தனிவித்தேயோ!        10.10.8

 

3890:

முதல்தனி வித்தேயோ!* முழுமூவுலகாதிக் கெல்லாம்*

முதல்தனி உன்னையுன்னை* எனைநாள் வந்து கூடுவன்நான்?*

முதல்தனி அங்குமிங்கும்* முழுமுற்றுறுவாழ் பாழாய்*

முதல்தனி சூழ்ந்த கன்றாழ்ந்துயர்ந்த* முடிவிலீயோ!    10.10.9

 

3891:##

சூழ்ந்த கன்றாழ்ந்துயர்ந்த* முடிவில் பெரும் பாழேயோ*

சூழ்ந்ததனில் பெரிய* பரநன் மலர்ச்சோதீயோ*

சூழ்ந்ததனில் பெரிய* சுடர்ஞான இன்பமேயோ!*

சூழ்ந்ததனில் பெரிய* என் அவாவறச் சூழ்ந்தாயே!  (2)          10.10.10.

 

3892:##

அவாவறச் சூழ்* அரியை அயனை அரனை அலற்றி*

அவாவற்று வீடுபெற்ற* குருகூர்ச் சடகோபன் சொன்ன*

அவாவில் அந்தாதிகளால்* இவையாயிரமும்* முடிந்த-

அவாவில் அந்தாதி இப்பத்து அறிந்தார்* பிறந்தார் உயர்ந்தே.  (2)            10.10.11

 

 

நம்மாழ்வார் திருவடிகளே சரணம்