முதல் பத்து


ஸ்ரீநம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழி
திருவாய்மொழி முதற் பத்து.

முதல் திருமொழி

 

2791:##

உயர்வற உயர்நலம்* உடையவன் எவன்? அவன்*

மயர்வற மதிநலம்* அருளினன் எவன்? அவன்*

அயர்வறும் அமரர்கள்* அதிபதி எவன்? அவன்*

துயரறு சுடரடி* தொழுதெழு என்மனனே! (2)       1.1.1

 

2792:

மனனகமலமற* மலர்மிசை எழுதரும்*

மனனுணர் வளவிலன்,* பொறியுணர் வவையிலன்*

இனனுணர், முழுநலம்,* எதிர்நிகழ் கழிவினும்*

இனனிலன் எனன்உயிர்,* மிகுநரை யிலனே.      1.1.2

 

2793:

இலனது உடையனிது* எனநினை அரியவன்*

நிலனிடை விசும்பிடை* உருவினன் அருவினன்*

புலனொடு புலனலன்,* ஒழிவிலன், பரந்த* அந்

நலனுடை ஒருவனை* நணுகினம் நாமே.*           1.1.3

 

2794:

நாமவன் இவன்உவன்,* அவள்இவள் உவளெவள்*

தாமவர் இவர்உவர்,* அதுவிது வுதுவெது*

வீமவையிவையுவை,* அவைநலம், தீங்கவை*

ஆமவை, ஆயவை ஆய்* நின்ற அவரே.*    1.1.4

 

2795:

அவரவர் தமதமது* அறிவறி வகைவகை*

அவரவர் இறையவர்* எனஅடி அடைவர்கள்*

அவரவர் இறையவர்* குறைவிலர்; இறையவர்*

அவரவர் விதிவழி* அடைய நின்றனரே.    1.1.5

 

2796:

நின்றனர் இருந்தனர்* கிடந்தனர் திரிந்தனர்*

நின்றிலர் இருந்திலர்* கிடந்திலர் திரிந்திலர்*

என்றுமொர் இயல்வினர்* எனநினை வரியவர்*

என்றுமொர் இயல்வொடு* நின்றவெந்திடரே.    1.1.6

 

2797:

திடவிசும் பெரிவளி* நீர்நிலம் இவைமிசை*

படர்பொருள் முழுவதுமாய்* அவை அவைதொறும்*

உடல்மிசை உயிரெனக்* கரந்தெங்கும் பரந்துளன்*

சுடர்மிகு சுருதியுள்* இவையண்ட சுரனே.            1.1.7

 

2798:

சுரரறி வருநிலை* விண்முதல் முழுவதும்*

வரன் முதலாயவை* முழுதுண்ட பரபரன்*

புரமொரு மூன்றெரித்து* அமரர்க்கு அறிவியந்து*

அரனயன் என* உலகழித்தமைத் துளனே.            1.1.8

 

2799:

உளனெனில் உளன்அவன்* உருவம்இவ்வுருவுகள்*

உளனலனெனில், அவன்* அருவமிவ்வருவுகள்*

உளனென இலனென* இவைகுண முடைமையில்*

உளன்இரு தகைமையொடு* ஒழிவிலன் பரந்தே.          1.1.9

 

2800:

பரந்ததண் பரவையுள்* நீர்தொறும் பரந்துளன்*

பரந்த அண்டமிதென:* நிலவிசும் பொழிவற*

கரந்த சிலிடந்தொறும்* இடந்திகழ் பொருள்தொறும்*

கரந்தெங்கும் பரந்துளன்:* இவையுண்ட கரனே.           1.1.10

 

2801:##

கரவிசும் பெரிவளி* நீர்நில மிவைமிசை*

வரனவில் திறல்வலி* அளிபொறையாய் நின்ற*

பரன்அடி மேல்* குருகூர்ச் சடகோபஞ்சொல்*

நிரல் நிறை ஆயிரத்து* இவைபத்தும் வீடே. (2)  1.1.11

 

இரண்டாம் திருமொழி

 

2802:##

வீடுமின் முற்றவும்* வீடுசெய்து* உம்முயிர்

வீடுடை யானிடை* வீடுசெய்ம்மினே. (2)   1.2.1

 

2803:

மின்னின் நிலையில* மன்னுயிர் ஆக்கைகள்*

என்னு மிடத்து* இறை உன்னுமின் நீரே.     1.2.2

 

2804:

நீர்நுமது என்றிவை* வேர்முதல் மாய்த்து* இறை

சேர்மின் உயிர்க்கு* அதன் நேர்நிறை யில்லே.   1.2.3

 

2805:

இல்லதும் உள்ளதும்* அல்லது அவனுரு*

எல்லையில் அந்நலம்* புல்குபற்றற்றே.     1.2.4

 

2806:

அற்றதுபற்றெனில்* உற்றது வீடுஉயிர்*

செற்றது மன்னுறில்* அற்றிறை பற்றே.     1.2.5

 

2807:

பற்றிலன் ஈசனும்* முற்றவும் நின்றனன்*

பற்றிலையாய்* அவன் முற்றி லடங்கே.     1.2.6

 

2808:

அடங்கெழில் சம்பத்து* அடங்கக்கண்டு* ஈசன்

அடங்கெழில் அஃதென்று* அடங்குக உள்ளே.      1.2.7

 

 

2809:

உள்ளம் உரை செயல்* உள்ள இம்மூன்றையும்*

உள்ளிக் கெடுத்து* இறை யுள்ளிலொடுங்கே.      1.2.8

 

2810:

ஒடுங்க அவன்கண்* ஒடுங்கலும் எல்லாம்*

விடும்; பின்னும் ஆக்கை* விடும்பொழுது எண்ணே.   1.2.9

 

2811:

எண்பெருக்கு அந்நலத்து* ஒண்பொருள் ஈறில*

வண்புகழ் நாரணன்* திண்கழல் சேரே. (2)          1.2.10

 

2812:##

சேர்த்தடத்* தென்குரு கூர்ச் சடகோபன் சொல்*

சீர்த்தொடை ஆயிரத்து* ஓர்த்தஇப்பத்தே. (2)      1.2.11

 

மூன்றாம் திருமொழி

 

2813:##

பத்துடை அடியவர்க்கு எளியவன்;* பிறர்களுக்கு அரிய

வித்தகன்* மலர்மகள்விரும்பும்* நம் அரும்பெறல் அடிகள்*

மத்துறு கடைவெண்ணெய்* களவினில் உரவிடையாப் புண்டு*

எத்திறம், உரலினோடு* இணைந்திருந்து ஏங்கிய எளிவே! (2)            1.3.1

 

2814:

எளிவரும் இயல்வினன்* நிலைவரம் பிலபல பிறப்பாய்*

ஒளிவரு முழுநலம்* முதலில கேடில வீடாம்*

தெளிதரும் நிலைமையது ஒழிவிலன்* முழுவதும்; இறையோன்*

அளிவரும் அருளினோடு* அகத்தனன் புறத்தனன் அமைந்தே.            1.3.2

 

2815:

அமைவுடை அறநெறி* முழுவதும் உயர்வற உயர்ந்து*

அமைவுடை முதல்கெடல்* ஒடிவிடையற நிலமதுவாம்*

அமைவுடை அமரரும்* யாவையும் யாவரும் தானாம்*

அமைவுடை நாரணன்* மாயையை அறிபவர் யாரே? 1.3.3

 

2816:

யாரும் ஓர் நிலைமையனென* அறிவரிய எம்பெருமான்*

யாரும் ஓர் நிலைமையனென* அறிவெளிய எம்பெருமான்*

பேரும் ஓராயிரம்* பிறபல உடைய எம்பெருமான்*

பேரும் ஓர் உருவமும்* உளதில்லை இலதில்லை பிணக்கே. 1.3.4

 

2817:

பிணக்கற அறுவகைச் சமயமும்* நெறியுள்ளி உரைத்த*

கணக்கறு நலத்தனன்* அந்தமில் ஆதியம் பகவன்*

வணக்குடைத் தவநெறி* வழிநின்று புறநெறி களைகட்டு*

உணக்குமின், பசையற!* அவனுடை உணர்வு கொண்டுணர்ந்தே.            1.3.5

 

2818:

உணர்ந்துணர்ந்திழிந்தகன்று* உயர்ந்துருவியந்த இந்நிலைமை*

உணர்ந்துணர்ந்துணரிலும்* இறைநிலை உணர்வரிது உயிர்காள்!*

உணர்ந்துணர்ந்துரைத்துரைத்து* அரியயனரனென்னும் இவரை*

உணர்ந்துணர்ந்துரைத்துரைத்து* இறைஞ்சுமின் மனப்பட்டதொன்றே.      1.3.6

 

2819:

ஒன்றெனப்பலவென* அறிவரும் வடிவினுள் நின்ற*

நன்றெழில் நாரணன்* நான்முகன் அரனென்னும் இவரை*

ஒன்றநும் மனத்துவைத்து* உள்ளிநும் இருபசை அறுத்து*

நன்றென நலஞ்செய்வது* அவனிடை நம்முடை நாளே.        1.3.7

 

2820:

நாளும் நின்றடுநமபழமை* அங்கொடு வினையுடனே

மாளும்* ஓர் குறைவில்லை;* மனனக மலமறக் கழுவி*

நாðம் நம் திருவுடை அடிகள்தம்* நலங்கழல் வணங்கி*

மாளும் ஓரிடத்திலும்* வணக்கொடு மாள்வது வலமே.           1.3.8

 

2821:

வலத்தனன் திரிபுரம் எரித்தவன்,* இடம்பெறத் துந்தித்

தலத்து* எழு திசைமுகன் படைத்த* நல்லுலகமும் தானும்

புலப்பட* பின்னும் தன்னுலகத்தில்* அகத்தனன் தானே

சொலப்புகில்* இவைபின்னும் வயிற்றுள;* இவை அவன் துயக்கே.            1.3.9

 

2822:

துயக்கறு மதியில்நல் ஞானத்துள்* அமரரைத் துயக்கும்*

மயக்குடை மாயைகள்* வானிலும் பெரியன வல்லன்*

புயற்கரு நிறத்தனன்;* பெருநிலம் கடந்த நல் அடிப்போது*

அயர்ப்பிலன் அலற்றுவன்* தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே.            1.3.10

 

2823:##

அமரர்கள் தொழுதெழ* அலைகடல் கடைந்தவன் தன்னை*

அமர்பொழில் வளங்குருகூர்ச்* சடகோபன் குற்றேவல்கள்*

அமர்சுவை ஆயிரத்து* அவற்றினுள் இவை பத்தும் வல்லார்*

அமரரோடு உயர்வில்சென்று* அறுவர்தம் பிறவியஞ் சிறையே. (2)            1.3.11

 

நான்காம் திருமொழி

 

2824:##

அஞ்சிறைய மடநாராய்! *அளியத்தாய்!* நீயும்நின்

அஞ்சிறைய சேவலுமாய்* ஆவா என்று எனக்கருளி*

வெஞ்சிறைப்புள்ளுயர்த்தார்க்கு* என் விடுதூதாய்ச் சென்றக்கால்*

வன்சிறையில் அவன்வைக்கில்* வைப்புண்டால் என்செய்யுமோ? (2)       1.4.1

 

2825:

என்செய்ய தாமரைக்கண்* பெருமானார்க்கு என்தூதாய்*

என்செய்யும் உரைத்தக்கால்?* இனக்குயில்காள்! நீரலிரே?*

முன்செய்த முழுவினையால்* திருவடிக்கீழ்க் குற்றேவல்*

முன்செய்ய முயலாதேன்* அகல்வதுவோ? விதியினமே.       1.4.2

 

2826:

விதியினால் பெடைமணக்கும்* மென்னடைய அன்னங்காள்!*

மதியினால் குறள்மாணாய்* உலகிரந்த கள்வற்கு*

மதியிலேன் வல்வினையே* மாளாதோ? என்று ஒருத்தி*

மதியெல்லாம் உள்கலங்கி* மயங்குமால்என்னீரே!   1.4.3

 

2827:

என்நீர்மை கண்டிரங்கி* இதுதகாது என்னாத*

என்நீல முகில்வண்ணற்கு* என்சொலியான் சொல்லுகேனோ?*

நன்னீர்மை இனியவர் கண்* தங்காதென்று ஒருவாய்ச்சொல்*

நன்னீல மகன்றில்காள்!* நல்குதிரோ? நல்கீரோ?         1.4.4

 

2828:

நல்கித்தான் காத்தளிக்கும்* பொழிலேழும்; வினையேற்கே*

நல்கத்தான் ஆகாதோ?* நாரணனைக்  கண்டக்கால்*

மல்குநீர்ப் புனற்படப்பை* இரைதேர்வண் சிறுகுருகே!*

மல்குநீர்க் கண்ணேற்கு ஓர்* வாசகங்கொண்டு அருளாயே.            1.4.5

 

2829:

அருளாத நீரருளி* அவராவி துவராமுன்*

அருளாழிப் புட்கடவீர்* அவர்வீதி ஒருநாள்என்று*

அருளாழியம்மானைக்* கண்டக்கால் இதுசொல்லி*

அருள் ஆழி வரிவண்டே!* யாமும் என் பிழைத்தோமே?          1.4.6

 

2830:

என்பிழைக் கோப்பதுபோலப்* பனிவாடை ஈர்கின்றது*

என்பிழையே நினைந்தருளி* அருளாத திருமாலார்க்கு*

என்பிழைத்தாள் திருவடியின்* தகவினுக்கு என்று ஒருவாய்ச்சொல்*

என்பிழைக்கும்? இளங்கிளியே!* யான்வளர்த்த நீயலையே?            1.4.7

 

2831:

நீயலையே? சிறுபூவாய்!* நெடுமாலார்க்கு என்தூதாய்*

நோயெனது நுவலென்ன,* நுவலாதே இருந்தொழிந்தாய்*

சாயலொடு மணிமாமை* தளர்ந்தேன் நான்* இனி உனது

வாயலகில் இன்னடிசில்* வைப்பாரை நாடாயே.         1.4.8

 

2832:

நாடாத மலர்நாடி* நாள்தோறும் நாரணன் தன்*

வாடாத மலரடிக்கீழ்* வைக்கவே வகுக்கின்று*

வீடாடி வீற்றிருத்தல்* வினையற்றது என் செய்வதோ?*

ஊடாடு பனிவாடாய்!* உரைத்தீராய் எனதுடலே.           1.4.9

 

2833:

உடலாழிப் பிறப்புவீடு* உயிர்முதலா முற்றுமாய்*

கடலாழி நீர்தோற்றி* அதனுள்ளே கண்வளரும்*

அடலாழி அம்மானைக்* கண்டக்கால் இதுசொல்லி*

விடல் ஆழி மடநெஞ்சே!* வினையோ ஒன்றாமளவே.  1.4.10

 

2834:##

அளவியன்ற ஏழுலகத்து* அவர்பெருமான் கண்ணனை*

வளவயல்சூழ் வண்குருகூர்ச்* சடகோபன் வாய்ந்துரைத்த*

அளவியன்ற அந்தாதி* ஆயிரத்துள் இப்பத்தின்*

வளவுரையால் பெறலாகும்* வானோங்கு பெருவளமே.  (2) 1.4.11

 

ஐந்தாம் திருமொழி

 

2835:##

வளவேழ் உலகின் முதலாய*  வானோர் இறையை* அருவினையேன்

களவேழ் வெண்ணெய் தொடுவுண்ட*  கள்வா!என்பன்; பின்னையும்*

தளவேழ் முறுவல் பின்னைக்காய்*  வல்லான் ஆயர் தலைவனாய்*

இளவேறேழும் தழுவிய*  எந்தாய்!என்பன் நினைந்துநைந்தே. (2)            1.5.1

 

2836:

நினைந்துனைந்து உள்கரைந்துருகி,*  இமையோர் பலரும் முனிவரும்*

புனைந்த கண்ணி நீர்சாந்தம்*  புகையோடு ஏந்தி வணங்கினால்*

நினைந்த எல்லாப் பொருள்கட்கும்*  வித்தாய், முதலில் சிதையாமே*

மனஞ்செய் ஞானத்து உன்பெருமை*  மாசூணாதோ? மாயோனே!            1.5.2

 

2837:

மாயோனிகளாய் நடைகற்ற*  வானோர் பலரும் முனிவரும்*

நீயோனிகளைப் படைஎன்று*  நிறைநான் முகனைப் படைத்தவன்*

சேயோன் எல்லா அறிவுக்கும்;*  திசைகள் எல்லாம் திருவடியால்

தாயோன்* எல்லா எவ்வுயிர்க்கும்  தாயோன்* தானோர் உருவனே.                        1.5.3

 

2838:

தானோ ருருவே தனிவித்தாய்த்*  தன்னில் மூவர் முதலாய*

வானோர் பலரும் முனிவரும்*  மற்றும் மற்றும் முற்றுமாய்*

தானோர் பெருநீர் தன்னுள்ளே  தோற்றி* அதனுள் கண்வளரும்*

வானோர் பெருமான் மாமாயன்*  வைகுந்தன் எம் பெருமானே.            1.5.4

 

2839:

மானேய் நோக்கி மடவாளை*  மார்வில் கொண்டாய்! மாதவா!*

கூனே சிதைய உண்டைவில்*  நிறத்தில் தெறித்தாய்! கோவிந்தா!*

வானார் சோதி மணிவண்ணா!*  மதுசூதா! நீ அருளாய்* உன்

தேனே மலரும் திருப்பாதம்*  சேரு மாறு வினையேனே.        1.5.5

 

2840:

வினையேன் வினைதீர் மருந்தானாய்!*  விண்ணோர் தலைவா! கேசவா!*

மனைசேர் ஆயர் குலமுதலே!*  மா மாயனே! மாதவா!*

சினையேய் தழைய மராமரங்கள்*  ஏழும் எய்தாய்! சிரீதரா!*

இனையாய்! இனைய பெயரினாய்!*  என்று நைவன் அடியேனே.            1.5.6

 

2841:

அடியேன் சிறிய ஞானத்தன்;*  அறிதல் ஆர்க்கும் அரியானை*

கடிசேர் தண்ணந் துழாய்க்* கண்ணி  புனைந்தான் தன்னைக் கண்ணனை*

செடியார் ஆக்கை அடியாரைச்*  சேர்தல் தீர்க்கும் திருமாலை*

அடியேன் காண்பான் அலற்றுவன்;*  இதனில் மிக்கோர் அயர்வுண்டே?       1.5.7

 

2842:

உண்டாய் உலகேழ் முன்னமே;*  உமிழ்ந்து மாயையால் புக்கு*

உண்டாய் வெண்ணெய் சிறுமனிசர்*  உவலை ஆக்கை நிலையெய்தி*

மண்தான் சோர்ந்ததுண்டேலும்*  மனிசர்க் காகும் பீர்* சிறிதும்

அண்டா வண்ணம் மண்கரைய*  நெய்யூண் மருந்தோ? மாயோனே!            1.5.8

 

2843:

மாயோம் தீயவலவலைப்*  பெருமா வஞ்சப் பேய்வீய*

தூய குழவியாய் விடப்பால்  அமுதா* அமுது செய்திட்ட

மாயன்* வானோர் தனித்தலைவன்*  மலராள் மைந்தன் எவ்வுயிர்க்கும்

தாயோன்* தம்மான் என்னம்மான்*  அம்மா மூர்த்தியைச் சார்ந்தே.            1.5.9

 

2844:

சார்ந்த இருவல் வினைகளும்  சரித்து* மாயப் பற்றறுத்து*

தீர்ந்து தன்பால் மனம்வைக்கத்*  திருத்தி, வீடு திருத்துவான்*

ஆர்ந்த ஞானச் சுடராகி*  அகலம் கீழ்மேல் அளவிறந்து*

நேர்ந்த உருவாய் அருவாகும்*  இவற்றின் உயிராம் நெடுமாலே!            1.5.10

 

2845:##

மாலே! மாயப் பெருமானே!*  மா மாயனே!என்றென்று*

மாலே ஏறி மாலருளால்*  மன்னு குருகூர்ச் சடகோபன்*

பாலேய் தமிழர் இசைகாரர்*  பத்தர் பரவும் ஆயிரத்தின்

பாலே* பட்ட இவைபத்தும்*  வல்லார்க்கு இல்லை பரிவதே. 1.5.11

 

ஆறாம் திருமொழி

 

2846:##

பரிவதில் ஈசனைப் பாடி* விரிவது மேவலுறுவீர்!*

பிரிவகையின்றி நன்னீர்தூய்* புரிவதுவும் புகை பூவே. (2)   1.6.1

 

2847:

மதுவார் தண்ணந் துழாயான்* முதுவேத முதல்வனுக்கு*

எதுவே? என்பணி? என்னாது* அதுவே ஆட்செய்யு மீடே.         1.6.2

 

2848:

ஈடும் எடுப்பும் இல் ஈசன்* மாடு விடாது என் மனனே*

பாடும் என் நா அவன் பாடல்* ஆடும் என் அங்கம் அணங்கே.            1.6.3

 

2849:

அணங்கென ஆடும் எனங்கம்* வணங்கி வழிபடும் ஈசன்*

பிணங்கி அமரர் பிதற்றும்* குணங்கெழு கொள்கையினானே.            1.6.4

 

2850:

கொள்கை கொளாமை இலாதான்* எள்கல் இராகம் இலாதான்*

விள்கை விள்ளாமை விரும்பி* உள்கலந்தார்க்கு ஓரமுதே.    1.6.5

 

2851:

அமுதம் அமரகட் கீந்த* நிமிர் சுடர் ஆழி நெடுமால்*

அமுதிலும் ஆற்ற இனியன்* நிமிர்திரை நீள்கடலானே.         1.6.6

 

2852:

நீள்கடல்சூழ் இலங்கைக்கோன்* தோள்கள் தலைதுணி செய்தான்*

தாள்கள் தலையில் வணங்கி* நாள் கடலைக் கழிமினே.       1.6.7

 

2853:

கழிமின் தொண்டீர்கள் கழித்து* தொழுமின் அவனைத் தொழுதால்*

வழிநின்ற வல்வினை மாள்வித்து* அழிவின்றி ஆக்கம் தருமே.            1.6.8

 

2854:

தரும வரும் பயனாய* திருமகளார் தனிக் கேள்வன்*

பெருமை உடைய பிரானார்* இருமை வினைகடிவாரே.         1.6.9

 

2855:

கடிவார் தீய வினைகள்* நொடியாரும் அளவைக்கண்*

கொடியா அடுபுள் உயர்த்த* வடிவார் மாதவனாரே.    1.6.10

 

2856:##

மாதவன் பால் சடகோபன்* தீதவம் இன்றி உரைத்த*

ஏதமில் ஆயிரத்து இப்பத்து* ஓதவல்லார் பிறவாரே.    1.6.11

 

ஏழாம் திருமொழி

 

2857:##

பிறவித்துயரற* ஞானத்துள்நின்று,*

துறவிச்சுடர்விளக்கம்* தலைப்பெய்வார்,*

அறவனை* ஆழிப்படை அந்தணனை,*

மறவியையின்றி* மனத்துவைப்பாரே.      1.7.1

 

2858:

வைப்பாம்மருந்தாம்* அடியரை, வல்வினைத்*

துப்பாம்புலனைந்தும்* துஞ்சக்கொடான் அவன்,*

எப்பால்யவர்க்கும்* நலத்தாலுயர்ந்துயர்ந்து,*

அப்பாலவன் எங்கள்* ஆயர்க்கொழுந்தே.            1.7.2

 

2859:

ஆயர் கொழுந்தாய்* அவரால் புடையுண்ணும்,*

மாயப்பிரானை* என் மாணிக்கச்சோதியை,*

தூய அமுதை* பருகிப்பருகி,* என்

மாயப்பிறவி *மயர்வறுத்தேனே.       1.7.3

 

2860:

மயர்வற என்மனத்தே* மன்னினான் தன்னை,*

உயர்வினையேதரும்* ஒண்சுடர்க்கற்றையை,*

அயர்வில் அமரர்கள்* ஆதிக்கொழுந்தை,* என்

இசைவினை* என்சொல்லி யான்விடுவேனே.     1.7.4

 

2861:

விடுவேனோ? என்விளக்கை* என்னாவியை,*

நடுவேவந்து* உய்யக்கொள்கின்ற நாதனை,*

தொடுவேசெய்து* இளவாய்ச்சியர் கண்ணினுள்,*

விடவேசெய்து* விழிக்கும்பிரானையே.     1.7.5

 

2862:

பிரான்* பெருநிலங்கீண்டவன்,* பின்னும்

விராய்* மலர்த்துழாய் வேய்ந்தமுடியன்,*

மராமரம் எய்த மாயவன்,* என்னுள்

இரானெனில்* பின்னையானொட்டுவேனோ?    1.7.6

 

2863:

யானொட்டியென்னுள்* இருத்துவமென்றிலன்,*

தானொட்டிவந்து* என்தனி நெஞ்சை வஞ்சித்து,*

ஊனொட்டிநின்று* என் உயிரில்கலந்து,* இயல்

வானொட்டுமோ?* இனி என்னை நெகிழ்க்கவே.           1.7.7

 

2864:

என்னைநெகிழ்க்கிலும்* என்னுடைய்நல்னெஞ்சந்

தன்னை,* அகல்விக்கத் தானும்*கில்லான் இனி,*

பின்னைநெடும்பணைத் தோள்* மகிழ்பீடுடை,*

முன்னை அமரர்* முழுமுதலானே.    1.7.8

 

2865:

அமரர்முழுமுதல்* ஆகிய ஆதியை,*

அமரர்க்கு அமுதீந்த* ஆயர்க்கொழுந்தை,*

அமரவழும்பத்* துழாவி என்னாவி,*

அமரர்த்தழுவிற்று* இனி அகலுமோ.          1.7.9

 

2866:

அகலில் அகலும்* அணுகில் அணுகும்,*

புகலும் அரியன்* பொருவல்லன் எம்மான்,*

நிகரில் அவன் புகழ்* பாடி எய்ளைப்பிலம்,*

பகலும் இரவும்* படிந்து குடைந்தே. 1.7.10

 

2867:##

குடைந்துவண்டுண்ணும்* துழாய்முடியானை,*

அடைந்த தென்குருகூர்ச்* சடகோபன்,*

மிடைந்த சொல்தொடை* ஆயிரத்து இப்பத்து,*

உடைந்து நோய்களை* ஓடுவிக்குமே.         1.7.11

 

எட்டாம் திருமொழி

 

2868:##

ஓடும்புள்ளேறி,* சூடும் தண் துழாய்,*

நீடுநின்றவை,* ஆடும் அம்மானே.   1.8.1

 

2869:

அம்மானாய்ப்பின்னும்,* எம்மாண்பும் ஆனான்,*

வெம்மாவாய்கீண்ட,* செம்மா கண்ணனே.        1.8.2

 

2870:

கண்ணாவானென்றும்,* மண்ணோர்விண்ணோர்க்கு,*

தண்ணார்வேங்கட,* விண்ணோர்வெற்பனே.    1.8.3

 

2871:

வெற்பையொன்றெடுத்து,* ஒற்கமின்றியே,*

நிற்கும் அம்மான்சீர்,* கற்பன்வைகலே.    1.8.4

 

2872:

வைகலும்வெண்ணெய்,* கைகலந்துண்டான்,*

பொய்கலவாது,* என் மெய்கலந்தானே.    1.8.5

 

2873:

கலந்து என்னாவி,* நலங்கொள்நாதன்,*

புலங்கொள்மாணாய்,* நிலம்கொண்டானே.      1.8.6

 

2874:

கொண்டான் ஏழ்விடை,* உண்டான் ஏழ்வையம்,*

தண்தாமம்செய்து,* என் எண்தானானானே.       1.8.7

 

2875:

ஆனானானாயன்,* மீனோடேனமும்;*

தானானானென்னில்,* தானாயசங்கே.     1.8.8

 

2876:

சங்குசக்கரம்,* அங்கையில்கொண்டான்,*

எங்கும்தானாய,* நங்கள்நாதனே.    1.8.9

 

2877:

நாதன்ஞாலங்கொள்* பாதன், என்னம்மான்,*

ஓதம்போல்கிளர்,* வேதநீரனே.         1.8.10

 

2878:##

நீர்புரைவண்ணன்,* சீர்ச்சடகோபன்,*

நேர்தலாயிரத்து,* ஓர்தலிவையே.    1.8.11

 

ஒன்பதாம் திருமொழி

 

2879:##

இவையும் அவையும் உவையும்* இவரும் அவரும் உவரும்,*

யவையும் யவரும் தன்னுள்ளே* ஆகியும் ஆக்கியும் காக்கும்,*

அவையுள் தனிமுதல் எம்மான்* கண்ணபிரான் என்னமுதம்,*

சுவையன் திருவின்மணாளன்* என்னுடைச் சூழலுளானே.  1.9.1

 

2880:

சூழல்பலபலவல்லான்* தொல்லையங்காலத்து உலகை*

கேழல் ஒன்றாகியிடந்த* கேசவன் என்னுடைய அம்மான்,*

வேழமருப்பையொசித்தான்* விண்ணவர்க்கு எண்ணலரியான்*

ஆழநெடுங்கடல்சேர்ந்தான்* அவனென்னருகலிலானே.        1.9.2

 

2881:

அருகலிலாயபெருஞ்சீர்* அமரர்களாதிமுதல்வன்,*

கருகிய நீல நன் மேனி வண்ணன்* செந்தாமரைக்கண்ணன்,*

பொருசிறைப்புள்ளுவந்தேறும்* பூமகளார்தனிக்கேள்வன்,*

ஒருகதியின் சுவைதந்திட்டு* ஒழிவிலன் என்னோடு உடனே.            1.9.3

 

2882:

உடனமர்க்காதல்மகளிர்* திருமகள் மண்மகள் ஆயர்

மடமகள்,* என்றிவர்மூவர் ஆளும்* உலகமும் மூன்றே,*

உடனவையொக்கவிழுங்கி* ஆலிலைச் சேர்ந்தவன் எம்மான்,*

கடல்மலி மாயப் பெருமான்* கண்ணன் என் ஒக்கலை யானே.            1.9.4

 

2883:

ஒக்கலை வைத்து முலைப்பால் உண்ணென்று* தந்திடவாங்கி,*

செக்கஞ்செக அன்றவள்பால்* உயிர்செகவுண்டபெருமான்,*

நக்கபிரானோடு அயனும் *இந்திரனும் முதலாக,*

ஒக்கவும் தோற்றிய ஈசன்* மாயன் என்னெஞ்சினுளானே.    1.9.5

 

2884:

மாயன் என்னெஞ்சினுள்ளான்* மற்றும்யவர்க்கும் அதுவே,*

காயமும் சீவனும் தானே* காலும் எரியும் அவனே,*

சேயன் அணியன்யவர்க்கும்* சிந்தைக்கும் கோசரமல்லன்,*

தூயன் துயக்கன் மயக்கன்* என்னுடைத் தோளிணையானே.            1.9.6

 

2885:

தோளிணைமேலும் நன்மார்பின்மேலும்* சுடர்முடிமேலும்,*

தாளிணைமேலும் புனைந்த* தண்ணந்துழாயுடையம்மான்*

கேளிணையொன்றுமிலாதான்* கிளரும் சுடர் ஒளி மூர்த்தி,*

நாளணைந்தொன்றும் அகலான்* என்னுடைநாவினுளானே.            1.9.7

 

2886:

நாவினுள் நின்று மலரும்* ஞானக் கலைகளுக் கெல்லாம்,*

ஆவியும் ஆக்கையும்தானே* அழிப்போடு அளிப்பவன் தானே,*

பூவியல்நால்தடந்தோளன்* பொருபடை ஆழி சங்கேந்தும்,*

காவி நன் மேனிக் கமலக்கண்ணன்* என்கண்ணினுளானே.            1.9.8

 

2887:

கமலக்கண்ணன் என்கண்ணினுள்ளான்* காண்பன் அவன்கண்களாலே,*

அமலங்களாகவிழிக்கும்* ஐம்புலனும் அவன் மூர்த்தி,*

கமலத்தயன்நம்பிதன்னைக்* கண்ணுதலானொடும்தோற்றி*

அமலத் தெய்வத்தோடு உலகமாக்கி* என்நெற்றியுளானே.  1.9.9

 

2888:

நெற்றியுள் நின்று என்னையாளும்* நிரைமலர்ப் பாதங்கள்சூடி,*

கற்றைத்துழாய்முடிக்கோலக்* கண்ணபிரானைத்தொழுவார்,*

ஒற்றைப்பிறையணிந்தானும்* நான்முகனும் இந்திரனும்,*

மற்றைய அமரரும் எல்லாம் வந்து* எனது உச்சியுளானே.    1.9.10

 

2889:##

உச்சியுள்ளே நிற்கும் தேவதேவற்குக்* கண்ணபிராற்கு,*

இச்சையுள் செல்ல உணர்த்தி* வண்குருகூர்ச்சடகோபன்,*

இச்சொன்னவாயிரத்துள்* இவையும் ஓர்பத்து எம்பிராற்கு,*

நிச்சலும் விண்ணப்பம் செய்ய* நீள்கழல்சென்னிபொருமே.            1.9.11

 

பத்தாம் திருமொழி

 

2890:##

பொருமாநீள்படை* ஆழிசங்கத்தொடு,*

திருமாநீள்கழல்* ஏழுலகும்தொழ,*

ஒருமாணிக்குறளாகி*நிமிர்ந்த,* அக்

கருமாணிக்கம்* என் கண்ணுளதாகுமே.   1.10.1

 

2891:

கண்ணுள்ளே நிற்கும்* காதன்மையால்தொழில்,*

எண்ணிலும்வரும்* என் இனிவேண்டுவம்?*

மண்ணும் நீரும்* எரியும்நல்வாயுவும்,*

விண்ணுமாய் விரியும்* எம்பிரானையே.  1.10.2

 

2892:

எம்பிரானை* எந்தை தந்தை தந்தைக்கும்

தம்பிரானை,* தண்தாமரைக்கண்ணனை,*

கொம்பராவு* நுண்ணேரிடைமார்வனை,*

எம்பிரானைத்தொழாய்* மடநெஞ்சமே.    1.10.3

 

2893:

நெஞ்சமே நல்லை நல்லை* உன்னைப்பெற்றால்

என்செய்யோம்?* இனியென்னகுறைவினம்?*

மைந்தனை மலராள்* மணவாளனை,*

துஞ்சும்போதும்* விடாது தொடர் கண்டாய்.        1.10.4

 

2894:

கண்டாயே நெஞ்சே* கருமங்கள்வாய்க்கின்று,* ஓர்

எந்தானுமின்றியே* வந்தியலுமாறு,*

உண்டானை* உலகேழும் ஓர் மூவடி

கொண்டானை,* கண்டு கொண்டனைநீயுமே.   1.10.5

 

2895:

நீயும் நானும்* இந் நேர்நிற்கில்,* மேல்மற்றோர்,

நோயும்சார்க்கொடான்* நெஞ்சமே சொன்னேன்,*

தாயும்தந்தையுமாய்* இவ்வுலகினில்,*

வாயும் ஈசன்* மணிவண்ணன் எந்தையே.           1.10.6

 

2896:

எந்தையேயென்றும்* எம்பெருமானென்றும்,*

சிந்தையுள்வைப்பன்* சொல்லுவன்பாவியேன்,*

எந்தை எம்பெருமான் என்று* வானவர்,*

சிந்தையுள் வைத்துச்* சொல்லும் செல்வனையே.       1.10.7

 

2897:

செல்வ நாரணனென்ற* சொல் கேட்டலும்,*

மல்கும்கண்பனி* நாடுவன்மாயமே,*

அல்லும் நன்பகலும்* இடைவீடின்றி,*

நல்கி என்னை விடான்* நம்பி நம்பியே.    1.10.8

 

2898:##

நம்பியைத்* தென் குறுங்குடிநின்ற,* அச்

செம்பொனேதிகழும்* திருமூர்த்தியை,*

உம்பர் வானவர்* ஆதியஞ்சோதியை,*

எம்பிரானை* என் சொல்லி மறப்பேனா?. 1.10.9

 

2899:

மறப்பும்ஞானமும்* நான் ஒன்று உணர்ந்திலன்,*

மறக்குமென்று* செந்தாமரைக்கண்ணொடு,*

மறப்பற என்னுள்ளே* மன்னினான் தன்னை,*

மறப்பேனா? இனி* யான் என் மணியையே.        1.10.10

 

2900:##

மணியை வானவர் கண்ணனைத்* தன்னதோர்-

அணியை,* தென்குருகூர்ச்சடகோபன்,* சொல்

பணிசெயாயிரத்துள்* இவைபத்துடன்,*

தணிவிலர் கற்பரேல்* கல்விவாயுமே.        1.10.11