திருவாய் மொழி மூன்றாம் பத்து
முதல் திருமொழி
3013:##
முடிச்சோதியாய்* உனது முகச்சோதி மலந்ததுவோ,*
அடிச்சோதி நீநின்ற* தாமரையாய் அலர்ந்ததுவோ*,
படிச்சோதி ஆடையொடும்* பல்கலனாய்,* நின்பைம்பொன்
கடிச்சோதி கலந்ததுவோ?* திருமாலே! கட்டுரையே. (2) 3.1.1.
3014:
கட்டுரைக்கில் தாமரை* நின் கண்பாதம் கையொவ்வா,*
சுட்டுரைத்த நன்பொன்* உன் திருமேனி ஒளி ஒவ்வாது,*
ஒட்டுரைத்து இவ்வுலகு உன்னை* புகழ்வெல்லாம் பெரும்பாலும்,*
பட்டுரையாய்ப் புற்கென்றே* காட்டுமால் பரஞ்சோதீ! 3.1.2.
3015:
பரஞ்சோதி! நீபரமாய்* நின்னிகழ்ந்து பின்,* மற்றோர்
பரஞ்சோதி இன்மையின்* படியோவி நிகழ்கின்ற,*
பரஞ்சோதி நின்னுள்ளே* படருலகம் படைத்த,* எம்
பரஞ்சோதி கோவிந்தா!* பண்புரைக்க மாட்டேனே. 3.1.3.
3016:
மாட்டாதே ஆகிலும்* இம் மலர்தலை மாஞாலம்,*நின்
மாட்டாய மலர்ப்புரையும்* திருவுருவும் மனம்வைக்க*
மாட்டாத பலசமய* மதிகொடுத்தாய், மலர்த்துழாய்*
மாட்டேநீ மனம்வைத்தாய்* மாஞாலம் வருந்தாதே? 3.1.4.
3017:
வருந்தாத அருந்தவத்த* மலர்க்கதிரின் சுடர் உடம்பாய்,*
வருந்தாத ஞானமாய்* வரம்பின்றி முழுதியன்றாய்,*
வருங்காலம் நிகழ்காலம்* கழிகாலமாய்,*உலகை
ஒருங்காக அளிப்பாய் சீர்* எங்கு உலக்க ஓதுவனே? 3.1.5.
3018:
ஓதுவார் ஓத்தெல்லாம்* எவ்வுலகத்து எவ்வெவையும்,*
சாதுவாய் நின்புகழின்* தகையல்லால் பிறிதில்லை,*
போதுவாழ் புனந்துழாய்* முடியினாய்,* பூவின்மேல்
மாதுவாழ் மார்பினாய்!* என்சொல்லியான் வாழ்த்துவனே? 3.1.6.
3019:
வாழ்த்துவார் பலராக* நின்னுள்ளே நான்முகனை,*
மூழ்த்த நீர் உலகெல்லாம்* படையென்று முதல்படைத்தாய்*
கேழ்த்தசீர் அரன்முதலாக்* கிளர்தெய்வமாய்க் கிளர்ந்து,*
சூழ்த்த அமரர் துதித்தால்* உன் தொல்புகழ் மாசூணாதே? 3.1.7.
3020:
மாசூணாச் சுடர் உடம்பாய்* மலராது குவியாது,*
மாசூணா ஞானமாய்* முழுதுமாய் முழுதியன்றாய்,*
மாசூணாவான்கோலத்து* அமரர்க்கோன் வழிபட்டால்,*
மாசூணா உன்பாத* மலர்சோதி மழுங்காதே? 3.1.8.
3021:
மழுங்காத வைந்நுதிய* சக்கரநல் வலத்தையாய்,*
தொழுங்காதல் களிறளிப்பான்* புள்ðர்ந்து தோன்றினையே,*
மழுங்காத ஞானமே* படையாக, மலர் உலகில்*
தொழும்பாயார்க்கு அளித்தால்* உன் சுடர்ச்சோதி மறையாதே? 3.1.9.
3022:
மறையாய நால்வேதத்துள் நின்ற* மலர்சுடரே,*
முறையால் இவ்வுலகெல்லாம்* படைத்திடந்துண்டு உமிழ்ந்தளந்தாய்,*
பிறையேறு சடையானும்* நான்முகனும் இந்திரனும்*
இறையாதல் அறிந்தேத்த* வீற்றிருத்தல் இதுவியப்பே? 3.1.10.
3023:##
வியப்பாய வியப்பில்லா* மெய்ஞ்ஞான வேதியனை,*
சயப்புகழார் பலர்வாழும்* தடங்குருகூர் சடகோபன்,*
துயக்கின்றித் தொழுதுரைத்த* ஆயிரத்துள் இப்பத்தும்,*
உயக்கொண்டு பிறப்பறுக்கும்* ஒலிமுந்நீர் ஞாலத்தே. (2) 3.1.11
இரண்டாம் திருமொழி
3024:##
முந்நீர் ஞாலம் படைத்த* எம் முகில்வண்ணனே,*
அந்நாள் நீ தந்த* ஆக்கையின் வழி உழல்வேன்,*
வெந்நாள் நோய் வீய* வினைகளை வேரறப்பாய்ந்து,*
எந்நாள் யான் உன்னை* இனிவந்து கூடுவனே? (2) 3.2.1.
3025:
வன்மா வையம் அளந்த* எம் வாமனா,* நின்
பன்மா மாயப்* பல்பிறவியில் படிகின்றயான்,*
தொன்மா வல்வினைத்* தொடர்களை முதலரிந்து,*
நின் மாதாள் சேர்ந்து* நிற்பது எஞ்ஞான்றுகொலோ? 3.2.2.
3026:
கொல்லா மாக்கோல்* கொலைசெய்து பாரதப்போர்,*
எல்லாச் சேனையும்* இருநிலத்து அவித்த எந்தாய்,*
பொல்லாவாக்கையின்* புணர்வினை அறுக்கலறா,*
சொல்லாய் யான் உன்னைச்* சார்வதோர் சூழ்ச்சியே. 3.2.3.
3027:
சூழ்ச்சி ஞானச்* சுடரொளி யாகி,* என்றும்
ஏழ்ச்சிக் கேடின்றி* எங்கணும் நிறைந்த எந்தாய்,*
தாழ்ச்சி மற்றெங்கும் தவிர்ந்து* நின் தாளிணக்கீழ்
வாழ்ச்சி,* யான் சேரும்* வகையருளாய் வந்தே. 3.2.4.
3028:
வந்தாய்போலே* வந்தும் என்மனத்தினைநீ,*
சிந்தாமல் செய்யாய்* இதுவே இதுவாகில்,*
கொந்தார் காயாவின்* கொழுமலர்த் திருநிறத்த
எந்தாய்,* யான் உன்னை* எங்குவந்தணுகிற்பனே? 3.2.5.
3029:
கிற்பன் கில்லேன்* என்றிலன் முனநாளால்,*
அற்ப சாரங்கள் அவை* சுவைத்த கன்றொழிந்தேன்,*
பற்பல்லாயிரம்* உயிர்செய்த பரமா,* நின்
நற்பொன் சோதித்தாள்* நணுகுவது எஞ்ஞான்றே? 3.2.6.
3030:
எஞ்ஞான்று நாம் இருந்திருந்து* இரங்கி நெஞ்சே!*
மெய்ஞ்ஞானமின்றி* வினையியல் பிறப்பழுந்தி,*
எஞ்ஞான்றும் எங்கும்* ஒழிவற நிறைந்துநின்ற,*
மெய்ஞ்ஞானச்சோதிக்* கண்ணனை மேவுதுமே? 3.2.7.
3031:
மேவு துன்ப வினைகளை* விடுத்துமிலேன்,*
ஓவுதலின்றி* உன்கழல் வணங்கிற்றிலேன்,*
பாவுதொல் சீர்க்கண்ணா!* என் பரஞ்சுடரே,*
கூவுகின்றேன் காண்பான்* எங்கெயிதக் கூவுவனே? 3.2.8.
3032:
கூவிக்கூவிக்* கொடுவினைத் தூற்றுள் நின்று*
பாவியேன் பலகாலம்* வழிதிகைத்து அலமர்க்கின்றேன்,*
மேவியன்றாநிரைகாத்தவன்* உலகமெல்லாம்,*
தாவிய அம்மானை* எங்கு இனித் தலைப்பெய்வனே? 3.2.9.
3033:
தலைப்பெய் காலம்* நமன்தமர் பாசம்விட்டால்,*
அலைப்பூணுண்ணும்* அவ்வல்லல் எல்லாம் அகல,*
கலைப்பல் ஞானத்து* என் கண்ணனைக் கண்டுகொண்டு,*
நிலைப்பெற்று என் நெஞ்சம் பெற்றது* நீடுயிரே. 3.2.10.
3034:##
உயிர்களெல்லா* உலகம் உடையவனை,*
குயில்கொள் சோலைத்* தென்குருகூர்ச் சடகோபன்,*
செயிரில் சொலிசைமாலை* ஆயிரத்துள் இப்பத்தும்,*
உயிரின் மேலாக்கை* ஊனிடை ஒழிவிக்குமே. (2) 3.2.11
மூன்றாம் திருமொழி
3035:##
ஒழிவில் காலமெல்லாம்* உடனாய் மன்னி,*
வழுவிலா* அடிமை செய்ய வேண்டும் நாம்,*
தெழிகுரல் அருவித்* திருவேங்கடத்து,*
எழில்கொள் சோதி* எந்தைதந்தை தந்தைக்கே (2) 3.3.1
3036:
எந்தை தந்தை தந்தை* தந்தை தந்தைக்கும்
முந்தை,* வானவர்* வானவர்க்கோனொடும்,*
சிந்துபூ மகிழும்* திருவேங் கடத்து,*
அந்த மில்புகழ்க்* காரெழில் அண்ணலே. 3.3.2
3037:
அண்ணல் மாயன்* அணிகொள் செந்தாமரைக்
கண்ணன்,* செங்கனி வாய்க்* கருமாணிக்கம்,*
தெண்ணிறைச்சுனை நீர்த்* திரு வேங்கடத்து,*
எண்ணில் தொல்புகழ்* வானவர் ஈசனே. 3.3.3
3038:
ஈசன் வானவர்க்கு* என்பன் என்றால்,* அது
தேசமோ* திரு வேங்கடத் தானுக்கு?,*
நீசனேன்* நிறைவொன்றுமிலேன்,* என்கண்
பாசம் வைத்த* பரஞ்சுடர்ச் சோதிக்கே. 3.3.4
3039:
சோதியாகி* எல்லாவுலகும் தொழும்,*
ஆதி மூர்த்தியென்றால்* அளவாகுமோ?,*
வேதியர்* முழு வேதத்தமுதத்தை,*
தீதில் சீர்த்* திரு வேங்கடத் தானையே. 3.3.5
3040:
வேங்கடங்கள்* மெய்ம்மேல்வினை முற்றவும்,*
தாங்கள் தங்கட்கு* நல்லனவே செய்வார்,*
வேங்கடத்து உறைவார்க்கு* நமவென்ன
லாம்கடமை,* அதுசுமந்தார்க்கட்கே. 3.3.6
3041:
சுமந்து மாமலர்* நீர்சுடர் தீபம்கொண்டு,*
அமர்ந்து வானவர்* வானவர் கோனொடும்,*
நமன்றெழும்* திருவேங்கடம் நங்கட்கு,*
சமன்கொள் வீடுதரும்* தடங்குன்றமே. 3.3.7
3042:##
குன்றம் ஏந்திக்* குளிர்மழை காத்தவன்,*
அன்று ஞாலம்* அளந்த பிரான்,* பரன்
சென்று சேர்* திரு வேங்கட மாமலை,*
ஒன்றுமேதொழ* நம்வினை ஓயுமே. (2) 3.3.8
3043:
ஓயும் மூப்புப்* பிறப்பு இறப்புப்பிணி,*
வீயுமாறு செய்வான்* திரு வேங்கடத்து
ஆயன்,* நாள்மலராம்* அடித் தாமரை,*
வாயுள்ளும்மனத்துள்ளும்* வைப்பார்கட்கே. 3.3.9
3044:
வைத்த நாள்வரை* எல்லை குறுகிச்சென்று,*
எய்த்திளைப்பதன்* முன்னம் அடைமினோ,*
பைத்த பாம்பணையான்* திரு வேங்கடம்,*
மொய்த்த சோலை* மொய்பூந்தடம் தாழ்வரே. 3.3.10
3045:##
தாள் பரப்பி* மண் தாவிய ஈசனை,*
நீள்பொழில்* குருகூர்ச் சடகோபன்சொல்,*
கேழில் ஆயிரத்து* இப்பத்தும் வல்லவர்,
வாழ்வர் வாழ்வெய்தி* ஞாலம் புகழவே. (2) 3.3.11
நான்காம் திருமொழி
3046:##
புகழும் நல் ஒருவன் என்கோ!* பொருவில்சீர்ப் பூமி என்கோ,*
திகழும்தண் பரவை என்கோ!* தீயென்கோ! வாயுவென்கோ,*
நிகழும் ஆகாசம் என்கோ!* நீள்சுடர் இரண்டும் என்கோ,*
இகழ்வில் இவ்வனைத்தும் என்கோ* கண்ணனைக் கூவுமாறே! (2) 3.4.1
3047:
கூவுமாறறிய மாட்டேன்* குன்றங்கள் அனைத்தும் என்கோ,*
மேவுசீர் மாரி என்கோ!* விளங்கு தாரகைகள் என்கோ,*
நாவியல் கலைகள் என்கோ!* ஞானநல்லாவி என்கோ,*
பாவுசீர்க் கண்ணன் எம்மான்* பங்கயக் கண்ணனையே! 3.4.2
3048:
பங்கையக் கண்ணன் என்கோ!* பவளச்செவ்வாயன் என்கோ,*
அங்கதிர் அடியன் என்கோ!* அஞ்சன வண்ணன் என்கோ,*
செங்கதிர் முடியன் என்கோ!* திருமறு மார்வன் என்கோ,*
சங்குசக்கரத்தன் என்கோ!* சாதிமாணிக்கத்தையே! 3.4.3
3049:
சாதிமாணிக்கம் என்கோ!* சவிகோள்பொன் முத்தம் என்கோ,*
சாதிநல்வயிரம் என்கோ,* தவிவில்சீர் விளக்கம் என்கோ,*
ஆதியஞ் சோதி என்கோ!* ஆதியம் புருடன் என்கோ,*
ஆதுமில் காலத்து எந்தை* அச்சுதன் அமலனையே! 3.4.4
3050:
அச்சுதன் அமலன் என்கோ,* அடியவர் வினைகெடுக்கும்,*
நச்சுமா மருந்தம் என்கோ!* நலங்கடல் அமுதம் என்கோ,*
அச்சுவைக் கட்டி என்கோ!* அறுசுவை அடிசில் என்கோ,*
நெய்ச்சுவைத் தேறல் என்கோ!* கனியென்கோ! பாலெங்கேனோ! 3.4.5
3051:
பாலென்கோ!* நான்கு வேதப் பயனென்கோ,* சமய நீதி
நூலென்கோ!* நுடங்கு கேள்வி இசையென்கோ!* இவற்றுள் நல்ல
மேலென்கோ,* வினையின் மிக்க பயனென்கோ,* கண்ணன் என்கோ!-
மாலென்கோ! மாயன் என்கோ* வானவர் ஆதியையே! 3.4.6
3052:
வானவர் ஆதி என்கோ!* வானவர் தெய்வம் என்கோ,*
வானவர் போகம் என்கோ!* வானவர் முற்றும் என்கோ,*
ஊனமில் செல்வம் என்கோ!* ஊனமில் சுவர்க்கம் என்கோ,*
ஊனமில் மோக்கம் என்கோ!* ஒளிமணி வண்ணனையே! 3.4.7
3053:
ஒளிமணி வண்ணன் என்கோ!* ஒருவனென்றேத்த நின்ற*
நளிர்மதிச் சடையன் என்கோ!* நான்முகக் கடவுள் என்கோ,*
அளிமகிழ்ந்து உலகமெல்லாம்* படைத்தவை ஏத்த நின்ற,*
களிமலர்த் துளவன் எம்மான்* கண்ணனை மாயனையே! 3.4.8
3054:
கண்ணனை மாயன் தன்னைக்* கடல்கடைந்து அமுதங் கொண்ட,*
அண்ணலை அச்சுதனை* அனந்தனை அனந்தன் தன்மேல்,*
நண்ணிநங்கு உறைகின்றானை* ஞாலம் உண்டுமிழ்ந்த மாலை,*
எண்ணுமாறு அறிய மாட்டேன்,* யாவையும் யவரும் தானே. 3.4.9
3055:
யாவையும் யவரும் தானாய்* அவரவர் சமயந் தோறும்,*
தோய்விலன் புலன் ஐந்துக்கும்* சொலப்படான் உணர்வின் மூர்த்தி,*
ஆவிசேர் உயிரின் உள்ளால்* அதுமோர் பற்றி லாத,*
பாவனை அதனைக் கூடில்* அவனையும் கூட லாமே. 3.4.10
3056:##
கூடிவண்டறையும் தண்தார்க்* கொண்டல்போல் வண்ணன் தன்னை*
மாடலர் பொழில்* குருகூர் வண்சடகோபன் சொன்ன,*
பாடலோர் ஆயிரத்துள்* இவையுமோர் பத்தும் வல்லார்,*
வீடில போக மெய்தி* விரும்புவர் அமரர் மொய்த்தே (2) 3.4.11
ஐந்தாம் திருமொழி
3057:##
மொய்ம்மாம் பூம்பொழில் பொய்கை* முதலைச் சிறைப்பட்டு நின்ற,*
கைம்மாவுக்கு அருள் செய்த* கார்முகில் போல்வண்ணன் கண்ணன்,*
எம்மானைச் சொல்லிப் பாடி* எழுந்தும் பறந்தும் துள்ளாதார்,*
தம்மால் கருமமென் சொல்லீர்* தண்கடல் வட்டத்துள்ளÖரே! (2) 3.5.1
3058:
தண்கடல் வட்டத்துள்ளாரைத்* தமக்கிரையாத் தடிந் துண்ணும்,*
திண்கழற்கால் அசுரர்க்குத்* தீங்கிழைக்கும் திருமாலை,*
பண்கள் தலைக்கொள்ளப் பாடிப்* பறந்தும் குனித்துழலாதார்,*
மண்கொள் உலகில் பிறப்பார்* வல்வினை மோத மலைந்தே. 3.5.2
3059:
மலையை எடுத்துக் கல்மாரி காத்துப்* பசுநிரை தன்னை,*
தொலைவு தவிர்த்த பிரானைச்* சொல்லிச்சொல்லி நின்று எப்போதும்,*
தலையினோடாதனம் தட்டத்* தடுகுட்டமாய்ப் பறவாதார்,*
அலைகொள் நரகத்தழுந்திக்* கிடந்து உழைக்கின்ற அம்பரே. 3.5.3
3060:
வம்பவிழ் கோதை பொருட்டா* மால்விடையேழும் அடர்த்த,*
செம்பவளத் திரள் வாயன்* சிரீதரன் தொல்புகழ் பாடி,*
கும்பிடு நட்டமிட்டாடிக்* கோகுகட்டுண்டு உழலாதார்,*
தம்பிறப்பால் பயனென்னே* சாது சனங்களிடையே? 3.5.4
3061:
சாது சனத்தை நலியும்* கஞ்சனைச் சாதிப்பதற்கு,*
ஆதியஞ் சோதியுருவை* அங்குவைத்து இங்குப் பிறந்த,*
வேத முதல்வனைப் பாடி* வீதிகள் தோறும் துள்ளாதார்,*
ஓதியுணர்ந்தவர் முன்னா* என்சவிப்பார் மனிசரே? 3.5.5
3062:
மனிசரும் மற்றும் முற்றுமாய்* மாயப் பிறவி பிறந்த,*
தனியன் பிறப்பிலி தன்னைத்* தடங்கடல் சேர்ந்த பிரானை,*
கனியைக் கரும்பினின் சாற்றைக்* கட்டியைத் தேனை அமுதை,*
முனிவின்றி ஏத்திக் குனிப்பார்* முழுதுணர் நீர்மையினாரே. 3.5.6
3063:
நீர்மையில் நூற்றுவர் வீய* ஐவர்க்கு அருள்செய்து நின்று,*
பார்மல்கு சேனை அவித்த* பரஞ்சுடரை நினைந் தாடி.*
நீர்மல்கு கண்ணினராகி* நெஞ்சம் குழைந்து நையாதே,*
ஊர்மல்கி மோடு பருப்பார்* உத்தமர்க்கட்கு என்செய்வாரே? 3.5.7
3064:
வார்புனல் அந்தணருவி* வடதிருவேங்கடத்து எந்தை,*
பேர்பல சொல்லிப் பிதற்றிப்* பித்தர் என்றே பிறர்க்கூற,*
ஊர்பல புக்கும் புகாதும்* உலகோர் சிரிக்க நின்றாடி,*
ஆர்வம் பெருகிக் குனிப்பார்* அமரர் தொழப்படுவாரே. 3.5.8
3065:
அமரர் தொழப்படுவானை* அனைத்துலகுக்கும் பிரானை,*
அமரர் மனத்தினுள் யோகு புணர்ந்து* அவன் தன்னோடு ஒன்றாக,*
அமரத் துணிய வல்லார்கள் ஒழிய* அல்லாதவர் எல்லாம்,*
அமர நினைந்தெழுந்தாடி* அலற்றுவதே கருமமே. 3.5.9
3066:
கருமமும் கருமபலனும் ஆகிய* காரணன் தன்னை,*
திருமணி வண்ணனைச் செங்கண் மாலினைத்* தேவ பிரானை,*
ஒருமை மனத்தினுள் வைத்து* உள்ளங்குழைந்து எழுந்தாடி,*
பெருமையும் நாணும் தவிர்ந்து* பிதற்றுமின் பேதமை தீர்ந்தே. 3.5.10
3067:
தீர்ந்த அடியவர் தம்மைத்* திருத்திப் பணிகொள்ளவல்ல,*
ஆர்ந்த புகழ் அச்சுதனை* அமரர் பிரானை எம்மானை,*
வாய்ந்த வளவயல்சூழ்* தண் வளன் குருகூர்ச்சடகோபன்,*
நேர்ந்த ஓராயிரத்து இப்பத்து* அருவினை நீறு செய்யுமே. (2) 3.5.11
ஆறாம் திருமொழி
3068:##
செய்ய தாமரைக் கண்ணனாய்* உலகு ஏழும் உண்ட அவன்கண்டீர்,*
வையம் வானம் மனிசர் தெய்வம்* மற்றும் மற்றும் மற்றும் முற்றுமாய்,*
செய்யசூழ் சுடர் ஞானமாய்* வெளிப் பட்டிவை படைத்தான்* பின்னும்,
மொய்கொள் சோதியோடு ஆயினான்* ஒரு மூவராகிய மூர்த்தியே. (2) 3.6.1
3069:
மூவராகிய மூர்த்தியை* முதல் மூவர்க்கும் முதல்வன் தன்னை,*
சாவ முள்ளன நீக்கு வானைத்* தடங்கடல் கிடந்தான் தன்னைத்,*
தேவ தேவனைத் தென்னிலங்கை* எரியெழச்செற்ற வில்லியை,*
பாவ நாசனைப் பங்கயத்தடங் கண்ணனைப்* பரவுமினோ. 3.6.2
3070:
பரவி வானவரேத்த நின்ற* பரமனைப் பரஞ் சோதியை,*
குரவை கோத்த குழகனை* மணி வண்ணனைக் குடக் கூத்தனை,*
அரவமேறி அலைகடல் அமரும்* துயில்கொண்ட அண்ணலை,*
இரவும் நன்பகலும் விடாது* என்றும் ஏத்துதல் மனம் வைம்மினோ. 3.6.3
3071:
வைம்மின் நும்மனத்தென்று* யானுரைக்கின்ற மாயவன் சீர்மையை*
எம்மேனார்கள் உரைப்பதென்?* அது நிற்க நாள்தொறும்,* வானவர்
தம்மை யாளும் அவனும்* நான்முகனும் சடைமுடி அண்ணலும்,*
செம்மையால் அவன் பாத பங்கயம்* சிந்தித்து ஏத்தி திரிவரே. 3.6.4
3072:
திரியும் காற்றோடு அகல்விசும்பு* திணிந்த மண்கிடந்த கடல்,*
எரியும் தீயோடு இருசுடர் தெய்வம்,* மற்றும் மற்றும் முற்றுமாய்,*
கரிய மேனியன் செய்ய தாமரைக் கண்ணன்* கண்ணன் விண்ணோரிறை,*
சுரியும் பல்கருங்குஞ்சி* எங்கள் சுடர்முடியண்ணல் தோற்றமே. 3.6.5
3073:
தோற்றக் கேடவையில்லவனுடையான்* அவன் ஒரு மூர்த்தியாய்,*
சீற்றத்தோடு அருள் பெற்றவனடிக்கீழ்ப்*புகநின்ற செங்கண்மால்,*
நாற்றத் தோற்றச் சுவையொலி* உறலாகி நின்ற,*
எம் வானவர் ஏற்றையேயன்றி* மற்றொருவரை யானிலேன் எழுமைக்குமே. 3.6.6
3074:
எழுமைக்கும் எனதாவிக்கு* இன்னமுதத்தினை ஏனதாருயிர்,*
கெழுமிய கதிர்ச் சோதியை* மணி வண்ணனைக் குடக்கூத்தனை,*
விழுமிய அமரர் முனிவர் விழுங்கும்* கன்னற் கனியினை,*
தொழுமின் தூய மனத்தராய்* இறையும்நில்லா துயரங்களே. 3.6.7
3075:
துயரமேதரு துன்ப இன்ப வினைகளாய்* அவை அல்லனாய்,*
உயர நின்றதோர் சோதியாய்* உலஏழுமுண்டுமிழ்ந்தான் தன்னை,*
அயர வாங்கு நமன் தமர்க்கு* அரு நஞ்சினை அச்சுதன்தன்னை,*
தயரதற்கு மகன்தன்னை அன்றி* மற்றிலேன் தஞ்சமாகவே. 3.6.8
3076:
தஞ்ச மாகிய தந்தை தாயொடு* தானுமாய் அவை அல்லனாய்,*
எஞ்சலில் அமரர் குலமுதல்* மூவர் தம்முள்ளும் ஆதியை,*
அஞ்சி நீருலகத்துள்ளÖர்கள்!* அவன் இவனென்று கூழேன்மின்,*
நெஞ்சினால் நினைப்பான் யவன்* அவன் ஆகும் நீள்கடல் வண்ணனே. 3.6.9
3077:
கடல்வண்ணன் கண்ணன்* விண்ணவர் கரு மாணிக்கம் எனதாருயிர்*
படவரவினணைக் கிடந்த* பரஞ்சுடர் பண்டு நூற்றுவர்,*
அடவரும் படை மங்க* ஐவர்க்கட் காகி வெஞ்சமத்து,* அன்றுதேர்
கடவிய பெருமான்* கனைகழல் காண்பது என்றுகொல் கண்களே? 3.6.10
3078:##
கண்கள் காண்டற்கரியனாய்க்* கருத்துக்கு நன்றும் எளியனாய்,*
மண்கொள் ஞாலத்து உயிர்க்கெல்லாம் அருள் செய்யும்* வானவர் ஈசனை,*
பண்கொள் சோலை வழுதி நாடன்* குருகைக்கோன் சடகோபன் சொல்,*
பண்கொள் ஆயிரத்து இப்பத்தால்* பத்தராகக் கூடும் பயலுமினே. (2) 3.6.11
ஏழாம் திருமொழி
3079:##
பயிலும் சுடரொளி மூர்த்தியைப்* பங்கயக் கண்ணனை,*
பயில இனிய* நம் பாற்கடல் சேர்ந்த பரமனை,*
பயிலும் திருவுடையார்* யவரேலும் அவர் கண்டீர்,*
பயிலும் பிறப்பிடைதோறு* எம்மை ஆளும் பரமரே. (2) 3.7.1
3080:
ஆளும் பரமனைக் கண்ணனை* ஆழிப் பிரான்தன்னை,*
தோளும் ஓர் நான்குடைத்* தூமணி வண்ணன் எம்மான்தன்னை*
தாளும் தடக்கையும் கூப்பிப்* பணியும் அவர் கண்டீர்,*
நாளும் பிறப்பிடை தோறு* எம்மையாளுடை நாதரே. 3.7.2
3081:
நாதனை ஞாலமும் வானமும் ஏத்தும்* நறுந்துழாய்ப்
போதனை,* பொன்னெடுஞ் சக்கரத்து* எந்தை பிரான்தன்னை*
பாதம் பணிய வல்லாரைப்* பணியும் அவர் கண்டீர்,*
ஓதும் பிறப்பிடை தோறு* எம்மை ஆளுடையார்களே. 3.7.3
3082:
உடையார்ந்த வாடையன்* கண்டிகையன்உடை நாணினன்*
புடையார் பொன்னூலினன்* பொன்முடியன்மற்றும் பல்கலன்,*
நடையாவுடைத் திருநாரணன்* தொண்டர் தொண்டர் கண்டீர்,*
இடையார் பிறப்பிடைதோறு* எமக்கு எம் பெருமக்களே. 3.7.4
3083:
பெருமக்கள் உள்ளவர் தம் பெருமானை,* அமரர்கட்கு*
அருமையொழிய* அன்று ஆரமுதூட்டிய அப்பனை,*
பெருமை பிதற்ற வல்லாரைப்* பிதற்றும் அவர் கண்டீர்,*
வருமையும் இம்மையும்* நம்மை அளிக்கும் பிராக்களே. 3.7.5
3084:
அளிக்கும் பரமனை கண்ணனை* ஆழிப் பிரான்தன்னை,*
துளிக்கும் நறுங்கண்ணித்* தூமணி வண்ணன் எம்மான்தன்னை,*
ஒளிக்கொண்ட சோதியை* உள்ளத்துக் கொள்ளும் அவர்க்கண்டீர்,*
சலிப்பின்றி யாண்டெம்மைச்* சன்ம சன்மாந்தரங் காப்பரே. 3.7.6
3085:
சன்ம சன்மாந்தரங் காத்து* அடியார்களைக் கொண்டுபோய்,*
தன்மை பெறுத்தித் தன் தாளிணைக் கீழ்*கொள்ளும் அப்பனை,*
தொன்மை பிதற்றவல்லாறைப்* பிதற்றும் அவர்கண்டீர்,*
நம்மை பெறுத்து எம்மை* நாளுய்யக் கொள்கின்ற நம்பரே. 3.7.7
3086:
நம்பனை ஞாலம் படைத்தவனைத்* திரு மார்பனை,*
உம்பர் உலகினில் யார்க்கும்*உணர்வரியான்தன்னைக்,*
கும்பி நரகர்கள் ஏத்துவரேலும்*அவர்கண்டீர்,*
எம்பல் பிறப்பிடை தோறு*எம்தொழுகுலம் தாங்களே. 3.7.8
3087:
குவலந்தாங்கு சாதிகள்* நாலிலும் கீழிழிந்து,* எத்தனை
நலந்தானிலாத* சண்டாளசண்டாளர்களாகிலும்,*
வலந்தாங்கு சக்கரத் தண்ணல்* மணிவண்ணற்காளென்று உள்
கலந்தார்,* அடியார் தம் அடியார் எம்மடிகளே. 3.7.9
3088:
அடியார்ந்த வையமுண்டு* ஆலிலை அன்ன வசஞ்செய்யும்,*
படியாதுமில் குழவிப்படி* எந்தைபிரான் தனக்கு,*
அடியார் அடியார் தம்* அடியார் அடியார் தமக்கு*
அடியார் அடியார் தம்,*அடியார் அடியோங்களே. 3.7.10
3089:##
அடியோங்கு நூற்றவர் வீய* அன்று ஐவர்க்கு அருள்செய்த
நெடியோனை,* தென்குருகூர் சடகோபன் குற்றேவல்கள்,*
அடியார்ந்த ஆயிரத்துள்* இவை பத்து அவன் தொண்டர்மேல்
முடிவு,* ஆரக்கற்கிற்கில்* சன்மம் செய்யாமை முடியுமே. (2) 3.7.11
எட்டாம் திருமொழி
3090:##
முடியானே! மூவுலகும் தொழுதேத்தும்* சீர்
அடியானே,* ஆழ்கடலைக் கடைந்தாய்!* புள்ðர்
கொடியானே,* கொண்டல்வண்ணா!* அண்டத்து உம்பரில்
நெடியானே!,* என்று கிடக்கும் என்னெஞ்சமே. (2) 3.8.1
3091:
நெஞ்சமே! நீள்நகராக* இருந்த என்
தஞ்சனே,* தண்ணிலங்கைக்கிறையைச் செற்ற
நஞ்சனே,* ஞாலங்கொள்வான்* குறளாகிய
வஞ்சனே,* என்னும் எப்போதும்* என்வாசகமே. 3.8.2
3092:
வாசகமே ஏத்த அருள்செய்யும்* வானவர்தம்
நாயகனே,* நாளிளந் திங்களைக்* கோள்விடுத்து,*
வேயகம் பால்வெண்ணெய்* தொடுவுண்ட ஆனாயர்
தாயவனே,* என்று தடவும்* என் கைகளே. 3.8.3
3093:
கைகளால் ஆரத்* தொழுது தொழுது உன்னை,*
வைகலும் மாத்திரைப்* போதும் ஓர் வீடின்றி,*
பைகொள் பாம்பேறி* உறைபரனே,* உன்னை
மெய்கொள்ளக்காண* விரும்பும் என் கண்களே. 3.8.4
3094:
கண்களால் காண* வருங்கொல்? என்று ஆசையால்,*
மண்கொண்ட வாமனன்* ஏற மகிழ்ந்துசெல்,*
பண்கொண்ட புள்ளின்* சிறகொலி பாவித்து,*
திண்கொள்ள ஓர்க்கும்* கிடந்து என்செவிகளே. 3.8.5
3095:
செவிகளாலார* நின் கீர்த்திக் கனியென்னும்
கவிகளே* காலப்பண்தேன்* உறைப்பத்துற்று,*
புவியின்மேல்* பொன்னெடுஞ் சக்கரத் துன்னையே*
அவிவின்றி ஆதரிக்கும்* எனதாவியே. 3.8.6
3096:
ஆவியே! ஆரமுதே!* என்னை ஆளுடை,*
தூவியம் புள்ளுடையாய்!* சுடர் நேமியாய்,*
பாவியேன் நெஞ்சம்* புலம்பப் பலகாலும்,*
கூவியும் காணப்பெறேன்* உனகோலமே. 3.8.7
3097:
கோலமே! தாமரைக் கண்ணதோர்* அஞ்சன
நீலமே,* நின்று எனதாவியை* ஈர்கின்ற
சீலமே,* சென்றுசெல்லாதன* முன்நிலாம்
காலமே,* உன்னை என்னாள் கண்டு கொள்வனே? 3.8.8
3098:
‘கொள்வன்நான் மாவலி* மூவடி தா‘என்ற
கள்வனே,* கஞ்சனை வஞ்சித்து* வாணனை
உள்வன்மை தீர,* ஓராயிரம் தோள்துணித்த*
புள்வல்லாய்,* உன்னை எஞ்ஞான்று பொருந்துவனே? 3.8.9
3099:
பொருந்திய மாமருதினிடை போய* எம்
பெருந்தகாய்,* உன்கழல்* காணிய பேதுற்று,*
வருந்திநான்* வாசக மாலைகொண்டு* உன்னையே
இருந்திருந்து* எத்தனை காலம் புலம்புவனே. 3.8.10
3100:##
புலம்புசீர்ப்* பூமி அளந்த பெருமானை,*
நலங்கொள்சீர்* நன்குருகூர்ச் சடகோபன்,* சொல்
வலங்கொண்ட ஆயிரத்துள்* இவையும் ஓர்ப்பத்து,
இலங்குவான்* யாவரும் ஏறுவர் சொன்னாலே. (2) 3.8.11
ஒன்பதாம் திருமொழி
3101:##
சொன்னால் விரோதமிது* ஆகிலும் சொல்லுவேன் கேண்மினோ,*
என்னாவில் இன்கவி* யானொருவர்க்கும் கொடுக்கிலேன்,*
தென்னா தெனாவென்று* வண்டு முரல் திருவேங்கடத்து,*
என்னானை என்னப்பன்* எம்பெருமான் உளனாகவே. 3.9.1
3102:
உளனாகவே எண்ணித்* தன்னை ஒன்றாகத்தன் செல்வத்தை*
வளனா மதிக்கும்* இம் மானிடத்தைக் கவி பாடியென்,*
குளனார் கழனிசூழ்* கண்ணன் குறுங்குடி மெய்ம்மையே,*
உளனாய எந்தையை* எந்தைபெம்மானை ஒழியவே? 3.9.2
3103:
ஒழிவொன்றில்லாத* பல்லூழிதோறூழி நிலாவ,* போம்
வழியைத் தரும் நங்கள்* வானவர் ஈசனை நிற்கப்போய்,*
கழிய மிகநல்லவான்* கவி கொண்டு புலவீர்காள்,*
இழியக் கருதி* ஓர் மானிடம் பாடல் என்னாவதே. 3.9.3
3104:
என்னாவது எத்தெனை நாளைக்குப் போதும்* புலவீர்காள்,*
மன்னா மனிசரைப் பாடிப்* படைக்கும் பெரும்பொருள்?,*
மின்னார் மணிமுடி* விண்ணவர் தாதையைப் பாடினால்,*
தன்னாகவே கொண்டு* சன்மம்செய்யாமை கொள்ளுமே. 3.9.4
3105:
கொள்ளும் பயனில்லைக்* குப்பை கிளர்த்தன்ன செல்வத்தை,*
வள்ளல் புகழ்ந்து* நும் வாய்மை இழக்கும் புலவீர்காள்,*
கொள்ளக் குறைவிலன்* வேண்டிற்றெல்லாம் தரும் கோதில்,* என்
வள்ளல் மணிவண்ணன் தன்னைக்* கவி சொல்லவம்மினோ. 3.9.5
3106:
வம்மின் புலவீர்!* நும் மெய்வருத்திக்கை செய்து உய்ம்மினோ,*
இம்மன்னுலகில்* செல்வர் இப்போதில்லை நோக்கினோம்,*
நும் இன் கவிகொண்டு* நும்நும் இட்டாதெய்வம் ஏத்தினால்,*
செம்மின் சுடர்முடி* என்திருமாலுக்குச் சேருமே. 3.9.6
3107:
சேரும் கொடைபுகழ்* எல்லையிலானை,* ஓராயிரம்
பேரும் உடைய பிரானையல்லால்* மற்று யான்கிலேன்,*
மாரி யனையகை* மால்வரையொக்கும் திண் தோளென்று,*
பாரிலோர் பற்றையைப்* பச்சைப்பசும்பொய்கள் பேசவே. 3.9.7
3108:
வேயின் மலிபுரை தோளி* பின்னைக்கு மணாளனை,*
ஆய பெரும்புகழ்* எல்லையிலாதன பாடிப்போய்,*
காயம் கழித்து* அவன் தாளிணைக்கீழ்ப் புகும் காதலன்,*
மாய மனிசரை* என்சொல்லவல்லேன் என் வாய்கொண்டே? 3.9.8
3109:
வாய்கொண்டு மானிடம் பாடவந்த* கவியேன் அல்லேன்,*
ஆய்கொண்ட சீர்வள்ளல்* ஆழிப்பிரான் எனக்கே உளன்,*
‘சாய்கொண்ட இம்மையும் சாதித்து* வானவர் நாட்டையும்,*
நீகண்டு கொள்‘ என்று* வீடும் தரும்நின்று நின்றே! 3.9.9
3110:
நின்றுநின்று பல நாள் உய்க்கும்* இவ்வுடல் நீங்கிப்போய்,*
சென்று சென்றாகிலும் கண்டு* சன்மம் கழிப்பான் எண்ணி,*
ஒன்றியொன்றி உலகம் படைத்தான்* கவியாயினேற்கு,*
என்றுமென்றும் இனி* மற்றொருவர் கவி ஏற்குமே? 3.9.10
3111:##
ஏற்கும் பெரும்புகழ்* வானவர் ஈசன் கண்ணன் தனக்கு,*
ஏற்கும் பெரும்புகழ்* வண்குருகூர்ச் சடகோபன் சொல்,*
ஏற்கும் பெரும்புகழ்* ஆயிரத்துள் இவையும் ஓர்பத்து*
ஏற்கும் பெரும்புகழ்* சொல்லவல்லார்க்கு இல்லை சன்மமே. 3.9.11
பத்தாம் திருமொழி
3112:##
சன்மம் பலபல செய்து வெளிப்பட்டுச்* சங்கொடு சக்கரம்வில்,*
ஒண்மை உடைய உலக்கை ஒள்வாள்* தண்டு கொண்டு புள்ðர்ந்து,* உலகில்
வன்மை உடைய அரக்கர்* அசுரரை மாளப் படைபொருத,*
நன்மை உடையவன் சீர் பரவப்பெற்ற* நான் ஓர் குறைவிலனே. (2) 3.10.1
3113:
குறைவில் தடங்கடல் கோளர வேறித்* தன் கோலச் செந்தாமரைக்கண்,*
உறைபவன் போல ஓர் யோகு புணர்ந்த* ஒளிமணி வண்ணன் கண்ணன்,*
கறையணி மூக்குடைப் புள்ளிக் கடாவி* அசுரரைக் காய்ந்த அம்மான்,*
நிறைபுகழ் ஏத்தியும் பாடியும் ஆடியும்* யான் ஒரு முட்டிலனே. 3.10.2
3114:
முட்டில்பல் போகத்து ஒருதனி நாயகன்* மூவுலகுக் உரிய,*
கட்டியைத் தேனை அமுதை* நன்பாலைக் கனியைக் கரும்புதன்னை,*
மட்டவிழ் தண்ணந்துழாய் முடியானை வணங்கி* அவன் திறத்துப்
பட்டபின்னை* ,இறையாகிலும்* யான் என் மனத்துப் பரிவிலனே. 3.10.3
3115:
‘பரிவின்றி வாணனைக் காத்தும்‘* என்றன்று படையொடும் வந்தெதிர்ந்த*
திரிபுரம் செற்றவனும் மகனும்* பின்னும் அங்கியும் போர்தொலைய,*
பொருசிறைப் புள்ளைக் கடாவிய மாயனை* ஆயனைப் பொற்சக்கரத்து
அரியினை,* அச்சுதனைப்பற்றி* யான் இறையேனும் இடரிலனே. 3.10.4
3116:
இடர் இன்றியே ஒரு நாளொரு போழ்தில்* எல்லா உலகும் அழிய,*
படர்புகழ்ப் பார்த்தனும் வைதிகனும்* உடன் ஏறத் திண்தேர்க்கடவி,*
சுடரொளியாய் நின்ற தன்னுடைச் சோதியில்* வைதிகன் பிள்ளைகளை,*
உடலொடும் கொண்டு கொடுத்தவனைப் பற்றி* ஒன்றும் துயரிலனே. 3.10.5
3117:
துயரில் சுடரொளி தன்னுடைச் சோதி* நின்ற வண்ணம் நிற்கவே,*
துயரில் மலியும் மனிசர் பிறவியில்* தோன்றிக்கண் காணவந்து,*
துயரங்கள் செய்து தன் தெய்வ நிலையுலகில்* புக உய்க்கும் அம்மான்,*
துயரமில் சீர்க்கண்ணன் மாயன் புகழ்துற்ற* யான் ஓர் துன்பமிலனே. 3.10.6
3118:
துன்பமும் இன்பமுமாகிய* செய்வினையாய் உலகங்களுமாய்,*
இன்பமில் வெந்நரகாகி* இனிய நல்வான் சுவர்க்கங்களுமாய்,*
மன்பல் உயிர்களும் ஆகிப்* பலபல மாய மயக்குகளால்,*
இன்புரும் இவ்விளையாட்டுடையானைப் பெற்று*ஏதும் அல்லலிலனே. 3.10.7
3119:
அல்லலில் இன்பம் அளவிறந்து எங்கும்* அழகமர் சூழொளியன்,*
அல்லி மலர்மகள் போக மயக்குகள்* ஆகியும் நிற்கும் அம்மான்,*
எல்லையில் ஞானத்தன் ஞானமஃதேகொண்டு* எல்லாக் கருமங்களும்செய்,*
எல்லையில் மாயனைக் கண்ணனைத் தாள்பற்றி* யான் ஓர் துக்கம் இலனே. 3.10.8
3120:
துக்கமில் ஞானச் சுடரொளி மூர்த்தி* துழாய் அலங்கல் பெருமான்,*
மிக்க பல் மாயங்களால் விகிர்தம் செய்து* வேண்டும் உருவு கொண்டு,*
நக்க பிரானோடு அயன் முதலாக* எல்லாரும் எவையும்,* தன்னுள்
ஒக்க வொடுங்க விழுங்க வல்லானைப்பெற்று* ஒன்றும் தளர்விலனே. 3.10.9
3121:
தளர்வின்றியே என்றும் எங்கும் பரந்த* தனிமுதல் ஞானமொன்றாய்,*
அளவுடைய இம்புலங்கள் அறியாவகையால்*அருவாகி நிற்கும்,*
வளரொளி ஈசனை மூர்த்தியைப்* பூதங்கள் ஐந்தை இருசுடரை,*
கிளரொளி மாயனைக் கண்ணனைத் தாள்பற்றி* யானென்றும் கேடிலனே. 3.10.10
3122:##
கேடில் விழுப்புகழ்க் கேசவனைக்* குருகூர்ச் சடகோபன் சொன்ன,*
பாடல் ஓர் ஆயிரத்துள்* இவையும் ஓர் பத்தும் பயிற்ற வல்லார்கட்கு,* அவன்
நாடும் நகரமும் நன்குடன் காண* நலனிடை ஊர்தி பண்ணி,*
வீடும் பெறுத்தித்தன் மூவுலகுக்கும் தரும்* ஒரு நாயகமே. (2) 3.10.11