பொருளடக்கம் | காப்பிடல் |
தனியன்கள் | சென்னியோங்கு |
திருப்பல்லாண்டு | நாச்சியார் திருமொழி |
திருப்பள்ளிஎழுச்சி | அமலனாதிபிரான் |
திருப்பாவை | கண்ணிநுண் சிறுத்தாம்பு |
நீராட்டம் | சாற்றுமுறை |
பூச்சூடல் | ஆண்டாள் வாழித்திருநாமம் |
குருபரம்பரை தனியன்
ஸ்ரீஸைலேஸ-தயாபாத்ரம் தீபக்த்யாதிகுணார்ணவம்
யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்யஜாமாதரம்முநிம்.
லஷ்மீநாத ஸமாரம்பாம் நாத யாமுந மத்யமாம்
அஸ்மதாசார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம்.
எம்பெருமானார் தனியன்
யோ நித்யமச்யுதபதாம்புஜயுக்மருக்ம
வ்யாமோஹதஸ் ததிராணி த்ருணாய மேநே
அஸ்மத்குரோர் பகவதோsஸ்ய தயைகஸிந்தோ:
ராமா நுஜஸ்ய சரணௌ ஸரணம் ப்ரபத்யே.
நம்மாழ்வார் தனியன்
மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதிஸ்-
ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம்
ஆத்யஸ்ய ந: குலபதேர் வகுளாபிராமம்
ஸ்ரீமத் ததங்க்ரியுகளம் ப்ரணமாமி மூர்த்நா.
ஆழ்வார்கள் உடையவர் தனியன்
பூதம் ஸரஸ்ச மஹதாஹ்வய-பட்டநாத-
ஸ்ரீபக்திஸார-குலஸேகர-யோகிவாஹாந்
பக்தாங்க்ரிரேணு பரகால- யதீந்த்ர மிஸ்ராந்
ஸ்ரீமத் பராங்குஸ முநிம் ப்ரணதோஸ்மி நித்யம்.
திருப்பல்லாண்டு
பிரபந்த தனியன்கள் – நாதமுனிகள் அருளிச் செய்தது
குருமுக மனதீத்ய ப்ராக வேதானசேஷான்
நரபதிபரிக்லுப்தம் சூல்கமாதாதுகாமக
ச்வசுரமமரவந்த்யம் ரங்கனாதச்ய சாக்ஷாத்
த்விஜகுலதிலகம் தம் விஷ்ணுசித்தம் நமாமி
பாண்டிய பட்டர் அருளிச் செய்தவை
மின்னார்தடமதிள்சூழ் வில்லிபுத்தூரென்று ஒருகால்
சொன்னார்கழற்கமலம்சூடினோம் – முன்னாள்
கிழியறுத்தானென்றுரைத்தோம்,கீழ்மையினிற்சேரும்
வழியறுத்தோம் நெஞ்சமே. வந்து
பாண்டியன்கொண்டாடப் பட்டர்பிரான்வந்தானென்று
ஈண்டியசங்கமெடுத்தூத – வேண்டிய
வேதங்களோதி விரைந்துகிழியறுத்தான்
பாதங்கள்யாமுடையபற்று.
பாசுரங்கள்
1##
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயி ரத்தாண்டு*
பலகோடி நூறாயிரம்*
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா!* உன்
செவ்வடி செவ்விதிருக் காப்பு (2)
2##
அடியோமோடும் நின்னொடும் பிரிவு இன்றி ஆயிரம் பல்லாண்டு
விடிவாய் நின் வல மார்வினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலத்து உறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு
படைபோர் புக்கு முழங்கும் அப் பாஞ்ச சன்னியமும் பல்லாண்டே
3#
வாழாட்பட்டு நின்றீர் உள்ளீரேல்* வந்து மண்ணும் மணமும் கொண்மின்*
கூழாட்பட்டு நின்றீர்களை* எங்கள் குழுவினிற் புகுதலொட்டோம்*
ஏழாட்காலும் பழிப்பு இலோம் நாங்கள்* இராக்கதர் வாழ்* இலங்கை பாழாள் ஆகப் படை பொருதானுக்குப்* பல்லாண்டு கூறுதுமே
4#
ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம்வந்து* எங்கள் குழாம்புகுந்து*
கூடு மனமுடை யீர்கள் வரம்பொழி* வந்துஒல்லைக் கூடுமினோ*
நாடும் நகரமும் நன்கறிய* நமோ நாராய ணாயவென்று*
பாடு மனமுடைப் பத்தருள்ளீர்* வந்து பல்லாண்டு கூறுமினே
5#
அண்டக் குலத்துக்கு அதிபதி* ஆகி அசுரர் இராக்கதரை*
இண்டக் குலத்தை எடுத்துக் களைந்த* இருடிகேசன் தனக்கு*
தொண்டக் குலத்தில் உள்ளீர் வந்து அடிதொழுது* ஆயிர நாமம் சொல்லிப்*
பண்டைக் குலத்தைத் தவிர்ந்து* பல்லாண்டு பல் லாயிரத்தாண்டு என்மினே
6#
எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன்* ஏழ்படிகால் தொடங்கி*
வந்து வழிவழி ஆட்செய்கின்றோம்* திரு வோணத் திருவிழவில்
அந்தியம் போதில் அரியுரு ஆகி* அரியை அழித்தவனைப்*
பந்தனை தீரப் பல்லாண்டு* பல்லாயிரத் தாண்டு என்று பாடுதுமே
7#
தீயிற் பொலிகின்ற செஞ்சுடர் ஆழி* திகழ் திருச்சக்கரத்தின்*
கோயிற் பொறியாலே ஒற்றுண்டு நின்று* குடிகுடி ஆட்செய்கின்றோம்*
மாயப் பொருபடை வாணனை* ஆயிரந் தோளும் பொழி குருதி பாயச்* சுழற்றிய ஆழி வல்லானுக்குப்* பல்லாண்டு கூறுதுமே
8#
நெய்யிடை நல்லதோர் சோறும்* நியதமும் அத்தாணிச் சேவகமும்*
கை அடைக்காயும் கழுத்துக்குப் பூணொடு* காதுக்குக் குண்டலமும்*
மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்து* என்னை வெள்ளுயிர் ஆக்கவல்ல*
பையுடை நாகப்பகைக் கொடியானுக்குப்* பல்லாண்டு கூறுவனே
9#
உடுத்துக்* களைந்த நின் பீதக ஆடை உடுத்து கலத்தது உண்டு*
தொடுத்த துழாய்மலர்சூடிக் களைந்தன* சூடும் இத்தொண்டர்களோம்*
விடுத்த திசைக் கருமம் திருத்தித்* திருவோணத் திருவிழவில்*
படுத்த பைந் நாகனைப் பள்ளி கொண்டானுக்குப்* பல்லாண்டு கூறுதுமே
10#
எந்நாள் எம்பெருமான்* உன்தனக்கு அடியோம் என்று எழுத்துப்பட்ட
அந்நாளே* அடியோங்கள் அடிக்குடில்* வீடுபெற்று உய்ந்தது காண்*
செந்நாள் தோற்றித்* திரு மதுரையிற் சிலை குனித்து* ஐந்தலைய
பைந்நாகத் தலைப் பாய்ந்தவனே* உன்னைப் பல்லாண்டு கூறுதுமே
11##
அல்வழக்கு ஒன்றும் இல்லா* அணி கோட்டியர் கோன்* அபிமானதுங்கன்
செல்வனைப் போல* திருமாலே நானும் உனக்குப் பழ அடியேன்
நல் வகையால் நமோ நாராயணா என்று* நாமம் பல பரவி*
பல் வகையாலும் பவித்திரனே* உன்னைப் பல்லாண்டு கூறுவனே (2)
12##
பல்லாண்டு என்று பவித்திரனைப்* பர மேட்டியைச்* சார்ங்கம் என்னும்
வில் ஆண்டான் தன்னை* வில்லிபுத்தூர் விட்டு சித்தன் விரும்பிய சொல்*
நல் ஆண்டு என்று நவின்று உரைப்பார்* நமோ நாராயணாய என்று*
பல்லாண்டும் பரமாத்மனைச்* சூழ்ந்திருந்து ஏத்துவர் பல்லாண்டே (2)
திருப்பள்ளிஎழுச்சி
பிரபந்த தனியன்கள் – திருமலையாண்டான் அருளியது
தமேவமத்வா பரவாஸுதேவம்
ரங்கேசயம் ராஜவதர்கணீயம்-
ப்ராபோதகீம் யோக்ருத ஸூக்திமாலாம்
பக்தாங்க்ரி ரேணும் பகவந்த மீடே.
திருவரங்கப்பெருமாளரையர் அருளியது
மண்டங் குடியென்பர் மாமரையோர், மன்னியசீர்த்
தொண்ட, ரடிப்பொடி தொன்னகரம், – வண்டு
திணர்த்தவயல் தென்னரங்கத் தம்மானைப், பள்ளி
உணர்த்தும் பிரானுதித்த வூர்.
பாசுரங்கள்
1
கதிரவன் குணதிசைச் சிகரம் வந்துஅணைந்தான்* கனைஇருள் அகன்றது காலையம் பொழுதாய்,*
மதுவிரிந்து ஒழுகின மாமலர் எல்லாம்* வானவர் அரசர்கள் வந்து வந்துஈண்டி,*
எதிர்திசை நிறைந்தனர் இவரொடும் புகுந்த* இருங்களிற்று ஈட்டமும் பிடியொடு முரசும்,*
அதிர்தலில் அலைகடல் போன்றுளது எங்கும்* அரங்கத்து அம்மா! பள்ளி எழுந்து அருளாயே. (2)
2
கொழுங்கொடி முல்லையின் கொழுமலர் அணவிக்* கூர்ந்தது குணதிசை மாருதம் இதுவோ,*
எழுந்தன மலர்அணைப் பள்ளிகொள் அன்னம்* ஈன்பணி நனைந்த தம் இருசிறகு உதறி,*
விழுங்கிய முதலையின் பிலம்புரை பேழ்வாய்* வெள்எயிறுஉறஅதன் விடத்தினுக்கு அனுங்கி,*
அழுங்கிய ஆனையின் அருந்துயர் கெடுத்த* அரங்கத்து அம்மா! பள்ளி எழுந்து அருளாயே.
3
சுடர்ஒளி பரந்தன சூழ்திசை எல்லாம்* துன்னிய தாரகை மின்னொளி சுருங்கி,*
படர்ஒளி பசுத்தனன் பனிமதி இவனோ* பாயிருள் அகன்றது பைம்பொழில் கமுகின்,*
மடலிடைக் கீறிவண் பாளைகள் நாற* வைகறை கூர்ந்தது மாருதம் இதுவோ,*
அடல்ஒளி திகழ்தரு திகிரியந் தடக்கை* அரங்கத்து அம்மா! பள்ளி எழுந்து அருளாயே.
4
மேட்டுஇள மேதிகள் தளைவிடும் ஆயர்கள்* வேய்ங்குழல் ஓசையும் விடைமணிக் குரலும்,*
ஈட்டிய இசைதிசை பரந்தன வயலுள்* இருந்தின சுரும்பினம் இலங்கையர் குலத்தை,*
வாட்டிய வரிசிலை வானவர் ஏறே!* மாமுனி வேள்வியைக் காத்து,* அவ பிரதம்-
ஆட்டிய அடுதிறல் அயோத்தி எம் அரசே!* அரங்கத்து அம்மா! பள்ளி எழுந்து அருளாயே.
5
புலம்பின புட்களும் பூம்பொழில்களின் வாய்* போயிற்றுக் கங்குல் புகுந்தது புலரி,*
கலந்தது குணதிசை கனைகடல் அரவம்* களிவண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த,*
அலங்கலந் தொடையல் கொண்டடியிணை பணிவான்* அமரர்கள் புகுந்தனர் ஆதலில் அம்மா*
இலங்கையர் கோன் வழிபாடு செய்கோயில்* எம்பெருமான்!பள்ளி எழுந்து அருளாயே.
6
இரவியர் மணிநெடும் தேரொடும் இவரோ?* இறையவர் பதினொரு விடையரும் இவரோ?*
மருவிய மயிலினன் அறுமுகன் இவனோ?* மருதரும் வசுக்களும் வந்து வந்துஈண்டி’*
புரவியொடு ஆடலும் பாடலும் தேரும் * குமரதண்டம் புகுந்து ஈண்டிய வெள்ளம்,*
அருவரை அனைய நின் கோயில்முன் இவரோ?* அரங்கத்து அம்மா! பள்ளி எழுந்து அருளாயே.
7
அந்தரத்து அமரர்கள் கூட்டங்கள் இவையோ?* அருந்தவ முனிவரும் மருதரும் இவரோ?*
இந்திரன் ஆனையும் தானும் வந்து இவனோ?* எம்பெருமான் உன கோயிலின் வாசல்,*
சுந்தரர் நெருக்கவிச் சாதரர் நூக்க* இயக்கரும் மயங்கினர் திருவடி தொழுவான்,*
அந்தரம் பார்இடம் இல்லை மற்றுஇதுவோ?* அரங்கத்து அம்மா!பள்ளி எழுந்து அருளாயே.
8
வம்பவிழ் வானவர் வாயுறை வழங்க* மாநிதி கபிலைஒண் கண்ணாடி முதலா,*
எம்பெருமான் படி மக்கலம் காண்டற்கு* ஏற்பன ஆயின கொண்டுநன் முனிவர்,*
தும்புரு நாரதர் புகுந்தனர் இவரோ?* தோன்றினன் இரவியும் துலங்குஒளி பரப்பி,*
அம்பரதலத்தில் நின்று அகல்கின்றது இருள்போய்* அரங்கத்து அம்மா பள்ளி! எழுந்து அருளாயே.
9
ஏதம்இல் தண்ணுமை எக்கம்மத் தளியே* யாழ்குழல் முழவமோடு இசைதிசை கெழுமி,*
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்* கந்தரு வரவர் கங்குலுள் எல்லாம்,*
மாதவர் வானவர் சாரணர் இயக்கர்* சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவான்,*
ஆதலில் அவர்க்கு நாள்ஓலக்கம் அருள* அரங்கத்து அம்மா!பள்ளி எழுந்து அருளாயே.
10
கடிமலர்க் கமலங்கள் மலர்ந்தன இவையோ?* கதிரவன் கனைகடல் முளைத்தனன் இவனோ?*
துடியிடையார் சுரி குழல் பிழிந்துஉதறித்* துகில்உடுத்து ஏறினர் சூழ்புனல் அரங்கா,*
தொடைஒத்த துளவமும் கூடையும் பொலிந்து* தோன்றிய தோள் தொண்டர் அடிப்பொடி என்னும்-
அடியனை,* அளியன் என்று அருளி உன் அடியார்க்கு- ஆட்படுத்தாய்! பள்ளி எழுந்து அருளாயே! (2)
திருப்பாவை
தனியன்கள்
நீளாதுங்க ஸ்தநகிரிதடீ ஸப்தமுத்போத்ய க்ருஷ்ணம்
பாரார்த்யம் ஸ்வம்ச்ருதிசதசைரஸ் ஸி த்தம்த்யாபயந்தீ –
ஸ்வோச்சிஷ்டாயாம் ஸ்ஜிரநிகளிதம் யாபலாத்க்ருத்
யபுங்க்தே கோதாதஸ்யை நம இதமிதம் பூயஏவாஸ்து
பூய:
அன்ன வயற்புதுவை ஆண்டாள் அரங்கற்குப்
பன்னு திருப்பாவைப் பல்பதியம்
இன்னிசையால் பாடிக்கொடுத்தாள் நற்பாமாலை
பூமாலை சூடிக் கொடுத்தாளைச் சொல்லு
சூடிக் கொடுத்தாள் சுடர்க் கொடியே தொல்பாவை
பாடி அருளவல்ல பல்வளையாய
நாடி நீ வேங்கடவற்கு என்னை விதி ஒன்ற இம்மாற்றம்
நாங்கடவா வண்ணமே நல்கு.
ஸ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை
1
மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்* நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்*
சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்* கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்*
ஏர் ஆர்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்* கார் மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்*
நாராயணனே நமக்கே பறை தருவான்* பாரோர் புகழப் படிந்து-ஏலோர் எம்பாவாய் (2)
2
வையத்து வாழ்வீர்காள் நாமும் நம் பாவைக்குச்* செய்யும் கிரிசைகள் கேளீரோ* பாற்கடலுள்-
பையிற் துயின்ற பரமன் அடி பாடி* நெய் உண்ணோம் பால் உண்ணோம் நாட்காலே நீராடி*
மையிட்டு எழுதோம் மலர் இட்டு நாம் முடியோம்* செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்று ஓதோம்*
ஐயமும் பிச்சையும் ஆம்தனையும் கைகாட்டி* உய்யுமாறு எண்ணி உகந்து-ஏலோர் எம்பாவாய்.
3
ஓங்கி உலகு அளந்த உத்தமன் பேர் பாடி* நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீர் ஆடினால்*
தீங்கு இன்றி நாடு எல்லாம் திங்கள் மும்மாரி பெய்து* ஒங்கு பெருஞ் செந்நெலூடு கயல் உகளப்*
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்* தேங்காதே புக்கு இருந்து சீர்த்த முலை பற்றி-
வாங்கக்* குடம் நிறைக்கும் வள்ளற் பெரும் பசுக்கள்* நீங்காத செல்வம் நிறைந்து- ஏலோர் எம்பாவாய் (2)
4
ஆழி மழைக் கண்ணா ஒன்று நீ கை கரவேல்* ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்து ஏறி*
ஊழி முதல்வன் உருவம்போல் மெய் கறுத்து* பாழியந் தோள் உடைப் பற்பநாபன் கையில்*
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்று அதிர்ந்து* தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய்* நாங்களும் மார்கழி நீர் ஆட மகிழ்ந்து-ஏலோர் எம்பாவாய்
5
மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்* தூய பெருநீர் யமுனைத் துறைவனை *
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி-விளக்கைத்* தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை*
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது* வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க*
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்* தீயினில் தூசு ஆகும் செப்பு-ஏலோர் எம்பாவாய்.
6
புள்ளும் சிலம்பின காண் புள் அரையன் கோயிலில்* வெள்ளை விளி சங்கின் பேர்-அரவம் கேட்டிலையோ?
பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சு உண்டு* கள்ளச் சகடம் கலக்கு அழியக் கால் ஓச்சி*
வெள்ளத்து அரவிற் துயில் அமர்ந்த வித்தினை* உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்*
மெள்ள எழுந்து அரி என்ற பேர் அரவம்* உள்ளம் புகுந்து குளிர்ந்து ஏலோர் எம்பாவாய்*
7
கீசு கீசு என்று எங்கும் ஆனைச்சாத்தன்* கலந்து- பேசின பேச்சு அரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே*
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து* வாச நறுங் குழல் ஆய்ச்சியர்* மத்தினால்-
ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ* நாயகப் பெண்பிள்ளாய் நாராயணன்மூர்த்தி*
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ* தேசம் உடையாய் திற-ஏலோர் எம்பாவாய்.
8
கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறு வீடு* மேய்வான் பரந்தன காண் மிக்கு உள்ள பிள்ளைகளும்*
போவான் போகின்றாரைப் போகாமல் காத்து* உன்னைக்- கூவுவான் வந்து நின்றோம்* கோதுகலம் உடைய-
பாவாய் எழுந்திராய் பாடிப் பறை கொண்டு* மா வாய் பிளந்தானை மல்லரை மாட்டிய*
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்* ஆவா என்று ஆராய்ந்து அருள் ஏலோர் எம்பாவாய்.
9
தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கு எரியத்* தூமம் கமழத் துயில்-அணைமேல் கண்வளரும்*
மாமான் மகளே மணிக் கதவம் தாள் திறவாய்* மாமீர் அவளை எழுப்பீரோ* உன் மகள் தான்-
ஊமையோ அன்றிச் செவிடோ அனந்தலோ* ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ*
மா மாயன் மாதவன் வைகுந்தன் என்று என்று* நாமம் பலவும் நவின்று ஏலோர் எம்பாவாய்.
10
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!* மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்?
நாற்றத் துழாய் முடி நாராயணன்* நம்மால்- போற்றப் பறை தரும் புண்ணியனால்* பண்டு ஒருநாள்-
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகரணனும்* தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ*
ஆற்ற அனந்தல் உடையாய் அருங்கலமே* தேற்றமாய் வந்து திற-ஏலோர் எம்பாவாய்.
11
கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து* செற்றார் திறல் அழியச் சென்று செருச் செய்யும்*
குற்றம் ஒன்று இல்லாத கோவலர்தம் பொற்கொடியே* புற்றரவு-அல்குற் புனமயிலே போதராய்*
சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்து* நின்- முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர் பாடச்*
சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி* நீ- எற்றுக்கு உறங்கும் பொருள்?-ஏலோர் எம்பாவாய்.
12
கனைத்து இளங் கற்று- எருமை கன்றுக்கு இரங்கி* நினைத்து முலை வழியே நின்று பால் சோர*
நனைத்து இல்லம் சேறு ஆக்கும் நற் செல்வன் தங்காய்* பனித் தலை வீழ நின் வாசற் கடை பற்றி*
சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற* மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய்*
இனித் தான் எழுந்திராய் ஈது என்ன பேர் உறக்கம்* அனைத்து இல்லத்தாரும் அறிந்து-ஏலோர் எம்பாவாய்.
13
புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்* கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமைபாடிப் போய்*
பிள்ளைகள் எல்லாரும் பாவைக்-களம் புக்கார்* வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று*
புள்ளும் சிலம்பின காண் போது-அரிக் கண்ணினாய்* குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே*
பள்ளிக் கிடத்தியோ! பாவாய்! நீ நன்னாளால்* கள்ளம் தவிர்ந்து கலந்து-ஏலோர் எம்பாவாய்*
14
உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்* செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்*
செங்கற்பொடிக் கூறை வெண்பற் தவத்தவர்* தங்கள் திருக்கோயிற் சங்கிடுவான் போதந்தார்*
எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும்* நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்*
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்* பங்கயக் கண்ணானைப் பாடு-ஏலோர் எம்பாவாய்.
15
எல்லே! இளங்கிளியே இன்னம் உறங்குதியோ* சில் என்று அழையேன்மின் நங்கைமீர் போதர்கின்றேன்*
வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும்* வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக*
ஒல்லை நீ போதாய் உனக்கு என்ன வேறு உடையை* எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக்கொள்*
வல் ஆனை கொன்றானை மாற்றாரை மாற்று அழிக்க- வல்லானை மாயனைப் பாடு-ஏலோர் எம்பாவாய்.
16
நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய* கோயில் காப்பானே கொடித் தோன்றும் தோரண-
வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள் திறவாய்* ஆயர் சிறுமியரோமுக்கு அறை பறை-
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்* தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்*
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே அம்மா!* நீ- நேய நிலைக் கதவம் நீக்கு-ஏலோர் எம்பாவாய். (2)
17
அம்பரமே தண்ணீரே சோறே அறஞ் செய்யும்* எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்*
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குல விளக்கே* எம்பெருமாட்டி யசோதாய் அறிவுறாய்*
அம்பரம் ஊடு அறுத்து ஓங்கி உலகு அளந்த* உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய் *
செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா* உம்பியும் நீயும் உகந்து-ஏலோர் எம்பாவாய்.
18
உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன்* நந்த கோபாலன் மருமகளே நப்பின்னாய்*
கந்தம் கமழும் குழலீ கடை திறவாய்* வந்து எங்கும் கோழி அழைத்தன காண்* மாதவிப்-
பந்தர்மேல் பல்கால் குயில் இனங்கள் கூவின காண்* பந்தார் விரலி உன் மைத்துனன் பேர் பாடச்*
செந்தாமரைக் கையால் சீர் ஆர் வளை ஒலிப்ப* வந்து திறவாய் மகிழ்ந்து-ஏலோர் எம்பாவாய். (2)
19
குத்து விளக்கு எரியக் கோட்டுக்காற் கட்டில்மேல்* மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறிக்*
கொத்து அலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்* வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய்திறவாய்*
மைத் தடங்கண்ணினாய் நீ உன் மணாளனை* எத்தனை போதும் துயில் எழ ஒட்டாய் காண்
எத்தனை யேலும் பிரிவு ஆற்றகில்லாயால்* தத்துவம் அன்று தகவு ஏலோர் எம்பாவாய்.
20
முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று* கப்பம் தவிர்க்கும் கலியே துயில் எழாய்*
செப்பம் உடையாய் திறல் உடையாய்* செற்றார்க்கு- வெப்பம் கொடுக்கும் விமலா துயில் எழாய்*
செப்பு அன்ன மென் முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல்* நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய்*
உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை* இப்போதே எம்மை நீர் ஆட்டுஏலோர் எம்பாவாய்.
21
ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீது அளிப்ப* மாற்றாதே பால் சொரியும் வள்ளற் பெரும் பசுக்கள்*
ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்* ஊற்றம் உடையாய் பெரியாய்* உலகினில்-
தோற்றமாய் நின்ற சுடரே துயில் எழாய்* மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசற்கண்*
ஆற்றாது வந்து உன் அடிபணியுமா போலே* போற்றி யாம் வந்தோம் புகழ்ந்து ஏலோர் எம்பாவாய்.
22
அங்கண் மா ஞாலத்து அரசர்* அபிமான- பங்கமாய் வந்து நின் பள்ளிக்கட்டிற் கீழே*
சங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்* கிங்கிணிவாய்ச் செய்த தாமரைப் பூப் போலே*
செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ* திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல்*
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்* எங்கள்மேல் சாபம் இழிந்து ஏலோர் எம்பாவாய்.
23
மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்* சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து*
வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி* மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்*
போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா* உன்- கோயில் நின்று இங்ஙனே போந்தருளி* கோப்பு உடைய-
சீரிய சிங்காசனத்து இருந்து* யாம் வந்த- காரியம் ஆராய்ந்து அருள் ஏலோர் எம்பாவாய். (2)
24
அன்று இவ் உலகம் அளந்தாய் அடி போற்றி* சென்று அங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி*
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி* கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி*
குன்று குடையா எடுத்தாய் குணம் போற்றி* வென்று பகை கெடுக்கும் நின்கையில் வேல் போற்றி*
என்று என்று உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்* இன்று யாம் வந்தோம் இரங்கு ஏலோர் எம்பாவாய்.(2)
25
ஒருத்தி மகனாய்ப் பிறந்து* ஓர் இரவில்- ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கிலான் ஆகித் தான் தீங்கு நினைந்த* கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்*
நெருப்பு என்ன நின்ற நெடுமாலே!,* உன்னை- அருத்தித்து வந்தோம் பறை தருதி யாகில்*
திருத் தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி* வருத்தமுந் தீர்ந்து மகிழ்ந்து ஏலோர் எம்பாவாய்.
26
மாலே! மணிவண்ணா! மார்கழி நீர் ஆடுவான்* மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்*
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன* பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்சசன்னியமே*
போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே* சாலப் பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே*
கோல விளக்கே கொடியே விதானமே* ஆலின் இலையாய் அருள் ஏலோர் எம்பாவாய்.
27
கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா* உன்தன்னைப்- பாடிப் பறைகொண்டு யாம் பெறு சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்* சூடகமே தோள்வளையே தோடே செவிப் பூவே*
பாடகமே என்று அனைய பல் கலனும் யாம் அணிவோம்* ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற் சோறு*
மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்* கூடியிருந்து குளிர்ந்து ஏலோர் எம்பாவாய். (2)
28
கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்* அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க் குலத்து* உன்தன்னைப்-
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்* குறைவு ஒன்றும் இல்லாத கோவிந்தா* உன்தன்னோடு-
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது* அறியாத பிள்ளைகளோம் அன்பினால்* உன்தன்னைச்-
சிறுபேர் அழைத்தனவும் சீறியருளாதே* இறைவா நீ தாராய் பறை ஏலோர் எம்பாவாய். (2)
29
சிற்றஞ் சிறுகாலே வந்து உன்னைச் சேவித்து* உன்- பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்*
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்திற் பிறந்து* நீ- குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது*
இற்றைப் பறைகொள்வான் அன்று காண் கோவிந்தா* எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும்* உன்தன்னோடு-
உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்* மற்றை நம் காமங்கள் மாற்று ஏலோர் எம்பாவாய். (2)
30
வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனைத்* திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்று இறைஞ்சி*
அங்குப் பறைகொண்ட ஆற்றை* அணி புதுவைப்- பைங்கமலத் தண் தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன*
சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே* இங்கு இப் பரிசு உரைப்பார் ஈரிரண்டு மால் வரைத் தோள்*
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்* எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய். (2)
நீராட்டம்
1
வெண்ணெய் அளைந்த குணுங்கும்* விளையாடு புழுதியும் கொண்டு*
திண்ணென இவ் இரா உன்னைத்* தேய்த்துக் கிடக்க நான் ஒட்டேன்*
எண்ணெய் புளிப்பழம் கொண்டு* இங்கு எத்தனை போதும் இருந்தேன்*
நண்ணல் அரிய பிரானே!* நாரணா! நீராட வாராய் (2)
2
கன்றுகள் ஓடச் செவியிற்* கட்டெறும்பு பிடித்து இட்டால்*
தென்றிக் கெடும் ஆகில்* வெண்ணெய் திரட்டி விழுங்குமா காண்பன்*
நின்ற மராமரம் சாய்த்தாய்!* நீ பிறந்த திருவோணம்*
இன்று நீ நீராட வேண்டும்* எம்பிரான்! ஓடாதே வாராய்
3
பேய்ச்சி முலை உண்ணக் கண்டு* பின்னையும் நில்லாது என்நெஞ்சம்*
ஆய்ச்சியர் எல்லாரும் கூடி* அழைக்கவும் நான் முலை தந்தேன்*
காய்ச்சின நீரொடு நெல்லி* கடாரத்திற் பூரித்து வைத்தேன்*
வாய்த்த புகழ் மணிவண்ணா!* மஞ்சனம் ஆட நீ வாராய்
4
கஞ்சன் புணர்ப்பினில் வந்த* கடிய சகடம் உதைத்து*
வஞ்சகப் பேய்மகள் துஞ்ச* வாய் முலை வைத்த பிரானே!*
மஞ்சளும் செங்கழுநீரின்* வாசிகையும் நறுஞ்சாந்தும்*
அஞ்சனமும் கொண்டு வைத்தேன்* அழகனே! நீராட வாராய்
5
அப்பம் கலந்த சிற்றுண்டி* அக்காரம் பாலிற் கலந்து*
சொப்பட நான் சுட்டு வைத்தேன்* தின்னல் உறுதியேல் நம்பி!*
செப்பு இள மென்முலையார்கள்* சிறுபுறம் பேசிச் சிரிப்பர்*
சொப்பட நீராட வேண்டும்* சோத்தம் பிரான்! இங்கே வாராய்
6
எண்ணெய்க் குடத்தை உருட்டி* இளம்பிள்ளை கிள்ளி எழுப்பிக்*
கண்ணைப் புரட்டி விழித்துக்* கழகண்டு செய்யும் பிரானே!*
உண்ணக் கனிகள் தருவன்* ஒலிகடல் ஓதநீர் போலே*
வண்ணம் அழகிய நம்பீ!* மஞ்சனம் ஆட நீ வாராய்
7
கறந்த நற்பாலும் தயிரும்* கடைந்து உறிமேல் வைத்த வெண்ணெய்*
பிறந்ததுவே முதலாகப்* பெற்றறியேன் எம்பிரானே!*
சிறந்த நற்றாய் அலர் தூற்றும்* என்பதனால் பிறர் முன்னே*
மறந்தும் உரையாட மாட்டேன்* மஞ்சனம் ஆட நீ வாராய்
8
கன்றினை வால் ஓலை கட்டி* கனிகள் உதிர எறிந்து*
பின் தொடர்ந்து ஓடி ஓர் பாம்பைப்* பிடித்துக்கொண்டு ஆட்டினாய் போலும்*
நின்திறத்தேன் அல்லேன் நம்பீ!* நீ பிறந்த திரு நன்னாள்*
நன்று நீ நீராட வேண்டும்* நாரணா! ஓடாதே வாராய்
9
பூணித் தொழுவினிற் புக்குப்* புழுதி அளைந்த பொன்-மேனி*
காணப் பெரிதும் உகப்பன்* ஆகிலும் கண்டார் பழிப்பர்*
நாண் இத்தனையும் இலாதாய்!* நப்பின்னை காணிற் சிரிக்கும்*
மாணிக்கமே! என்மணியே!* மஞ்சனம் ஆட நீ வாராய்
10
கார் மலி மேனி நிறத்துக்* கண்ணபிரானை உகந்து*
வார் மலி கொங்கை யசோதை* மஞ்சனம் ஆட்டிய ஆற்றைப்*
பார் மலி தொல் புதுவைக் கோன்* பட்டர்பிரான் சொன்ன பாடல்*
சீர் மலி செந்தமிழ் வல்லார்* தீவினை யாதும் இலரே (2)
பூச்சூடல்
1
ஆனிரை மேய்க்க நீ போதி* அருமருந்து ஆவது அறியாய்*
கானகம் எல்லாம் திரிந்து* உன் கரிய திருமேனி வாட*
பானையிற் பாலைப் பருகிப்* பற்றாதார் எல்லாம் சிரிப்ப*
தேனில் இனிய பிரானே* செண்பகப் பூச் சூட்ட வாராய்* (2)
2
கரு உடை மேகங்கள் கண்டால்* உன்னைக் கண்டால் ஒக்கும் கண்கள்*
உரு உடையாய்! உலகு ஏழும்* உண்டாக வந்து பிறந்தாய்!*
திரு உடையாள் மணவாளா!* திருவரங்கத்தே கிடந்தாய்!*
மருவி மணம் கமழ்கின்ற* மல்லிகைப் பூச் சூட்ட வாராய்
3
மச்சொடு மாளிகை ஏறி* மாதர்கள்தம் இடம் புக்கு*
கச்சொடு பட்டைக் கிழித்து* காம்பு துகில் அவை கீறி*
நிச்சலும் தீமைகள் செய்வாய்!* நீள் திருவேங்கடத்து எந்தாய்!*
பச்சைத் தமனகத்தோடு* பாதிரிப் பூச் சூட்ட வாராய்.
4
தெருவின்கண் நின்று இள ஆய்ச்சி மார்களைத்* தீமை செய்யாதே*
மருவும் தமனகமும் சீர்* மாலை மணம் கமழ்கின்ற*
புருவம் கருங்குழல் நெற்றி* பொலிந்த முகிற்-கன்று போலே*
உருவம் அழகிய நம்பீ!* உகந்து இவை சூட்ட நீ வாராய்.
5
புள்ளினை வாய் பிளந்திட்டாய்!* பொரு கரியின் கொம்பு ஒசித்தாய்!*
கள்ள அரக்கியை மூக்கொடு* காவலனைத் தலை கொண்டாய்!*
அள்ளி நீ வெண்ணெய் விழுங்க* அஞ்சாது அடியேன் அடித்தேன்*
தெள்ளிய நீரில் எழுந்த* செங்கழுநீர் சூட்ட வாராய்.
6
எருதுகளோடு பொருதி* ஏதும் உலோபாய் காண் நம்பீ!*
கருதிய தீமைகள் செய்து* கஞ்சனைக் கால்கொடு பாய்ந்தாய்!*
தெருவின்கண் தீமைகள் செய்து* சிக்கென மல்லர்களோடு*
பொருது வருகின்ற பொன்னே* புன்னைப் பூச் சூட்ட நீ வாராய்.
7
குடங்கள் எடுத்து ஏற விட்டுக்* கூத்தாட வல்ல எம் கோவே!*
மடம் கொள் மதிமுகத்தாரை* மால்செய வல்ல என் மைந்தா!*
இடந்திட்டு இரணியன் நெஞ்சை* இரு பிளவு ஆக முன் கீண்டாய்!*
குடந்தைக் கிடந்த எம் கோவே!* குருக்கத்திப் பூச் சூட்ட வாராய்.
8
சீமாலிகன் அவனோடு* தோழமை கொள்ளவும் வல்லாய்!*
சாமாறு அவனை நீ எண்ணிச்* சக்கரத்தால் தலை கொண்டாய்!*
ஆமாறு அறியும் பிரானே!* அணி அரங்கத்தே கிடந்தாய்!*
ஏமாற்றம் என்னைத் தவிர்த்தாய்!* இருவாட்சிப் பூச் சூட்ட வாராய்.
9
அண்டத்து அமரர்கள் சூழ* அத்தாணியுள் அங்கு இருந்தாய்!*
தொண்டர்கள் நெஞ்சில் உறைவாய்!* தூமலராள் மணவாளா!*
உண்டிட்டு உலகினை ஏழும்* ஓர் ஆலிலையிற் துயில் கொண்டாய்!*
கண்டு நான் உன்னை உகக்கக்* கருமுகைப் பூச் சூட்ட வாராய்.
10
செண்பக மல்லிகையோடு* செங்கழுநீர் இருவாட்சி*
எண் பகர் பூவும் கொணர்ந்தேன்* இன்று இவை சூட்ட வா என்று*
மண் பகர் கொண்டானை* ஆய்ச்சி மகிழ்ந்து உரை செய்த இம் மாலை*
பண் பகர் வில்லிபுத்தூர்க் கோன்* பட்டர்பிரான் சொன்ன பத்தே. (2)
காப்பிடல்
பாசுரங்கள்
1
இந்திரனோடு பிரமன்* ஈசன் இமையவர் எல்லாம்*
மந்திர மா மலர் கொண்டு* மறைந்து உவராய் வந்து நின்றார்*
சந்திரன் மாளிகை சேரும்* சதுரர்கள் வெள்ளறை நின்றாய்*
அந்தியம் போது இது ஆகும்* அழகனே! காப்பிட வாராய் (2)
2
கன்றுகள் இல்லம் புகுந்து* கதறுகின்ற பசு எல்லாம்*
நின்றொழிந்தேன் உன்னைக் கூவி* நேசமேல் ஒன்றும் இலாதாய்!*
மன்றில் நில்லேல் அந்திப் போது* மதிற் திருவெள்ளறை நின்றாய்!*
நன்று கண்டாய் என்தன் சொல்லு* நான் உன்னைக் காப்பிட வாராய்
3
செப்பு ஓது மென்முலையார்கள்* சிறுசோறும் இல்லும் சிதைத்திட்டு*
அப்போது நான் உரப்பப் போய்* அடிசிலும் உண்டிலை ஆள்வாய்!*
முப் போதும் வானவர் ஏத்தும்* முனிவர்கள் வெள்ளறை நின்றாய்!
இப்போது நான் ஒன்றும் செய்யேன்* எம்பிரான் காப்பிட வாராய்!
4
கண்ணில் மணல்கொடு தூவிக்* காலினால் பாய்ந்தனை என்று என்று*
எண் அரும் பிள்ளைகள் வந்திட்டு* -இவர் ஆர்?- முறைப்படுகின்றார்*
கண்ணனே! வெள்ளறை நின்றாய்!* கண்டாரொடே தீமை செய்வாய்!
வண்ணமே வேலையது ஒப்பாய்!* வள்ளலே! காப்பிட வாராய்
5
பல்லாயிரவர் இவ் ஊரில்* பிள்ளைகள் தீமைகள் செய்வார்*
எல்லாம் உன்மேல் அன்றிப் போகாது* எம்பிரான்! நீ இங்கே வாராய்*
நல்லார்கள் வெள்ளறை நின்றாய்!* ஞானச் சுடரே! உன்மேனி*
சொல் ஆர வாழ்த்தி நின்று ஏத்திச்* சொப்படக் காப்பிட வாராய்
6
கஞ்சன் கறுக்கொண்டு நின்மேல்* கரு நிறச் செம் மயிர்ப் பேயை*
வஞ்சிப்பதற்கு விடுத்தான்* என்பது ஓர் வார்த்தையும் உண்டு*
மஞ்சு தவழ் மணி மாட* மதிற் திருவெள்ளறை நின்றாய்!
அஞ்சுவன் நீ அங்கு நிற்க* அழகனே! காப்பிட வாராய்
7
கள்ளச் சகடும் மருதும்* கலக்கு அழிய உதைசெய்த*
பிள்ளையரசே!* நீ பேயைப் பிடித்து முலை உண்ட பின்னை*
உள்ளவாறு ஒன்றும் அறியேன்* ஒளியுடை வெள்ளறை நின்றாய்!*
பள்ளிகொள் போது இது ஆகும்* பரமனே! காப்பிட வாராய்
8
இன்பம் அதனை உயர்த்தாய்!* இமையவர்க்கு என்றும் அரியாய்!*
கும்பக் களிறு அட்ட கோவே!* கொடுங் கஞ்சன் நெஞ்சினிற் கூற்றே!*
செம்பொன் மதில் வெள்ளறையாய்!* செல்வத்தினால் வளர் பிள்ளாய்!
கம்பக் கபாலி காண் அங்கு* கடிது ஓடிக் காப்பிட வாராய்
9
இருக்கொடு நீர் சங்கிற் கொண்டிட்டு* எழில் மறையோர் வந்து நின்றார்*
தருக்கேல் நம்பி! சந்தி நின்று* தாய் சொல்லுக் கொள்ளாய் சில நாள்*
திருக்காப்பு நான் உன்னைச் சாத்த* தேசு உடை வெள்ளறை நின்றாய்!*
உருக் காட்டும் அந்தி விளக்கு* இன்று ஒளி கொள்ள ஏற்றுகேன் வாராய்
10
போது அமர் செல்வக்கொழுந்து* புணர் திருவெள்ளறையானை*
மாதர்க்கு உயர்ந்த அசோதை* மகன்தன்னைக் காப்பிட்ட மாற்றம்*
வேதப் பயன் கொள்ள வல்ல* விட்டுசித்தன் சொன்ன மாலை*
பாதப் பயன் கொள்ள வல்ல* பத்தர் உள்ளார் வினை போமே (2)
சென்னியோங்கு
பாசுரங்கள்
1
சென்னியோங்கு* தண்திருவேங்கடமுடையாய்!* உலகு-
தன்னை வாழநின்ற நம்பீ!* தாமோதரா! சதிரா!*
என்னையும் என்னுடைமையையும்* உன் சக்கரப்பொறியொற்றிக்கொண்டு*
நின்னருளே புரிந்திருந்தேன்* இனிஎன்திருக்குறிப்பே? (2)
2
பறவையேறு பரமபுருடா!* நீஎன்னைக் கைக்கொண்டபின்*
பிறவியென்னும் கடலும்வற்றிப்* பெரும்பதம் ஆகின்றதால்*
இறவு செய்யும் பாவக்காடு* தீக்கொளீஇவேகின்றதால்*
அறிவையென்னும் அமுதவாறு* தலைப்பற்றி வாய்க்கொண்டதே.
3
எம்மனா! என்குலதெய்வமே!* என்னுடைய நாயகனே!*
நின்னுளேனாய்ப் பெற்றநன்மை* இவ்வுலகினில் ஆர்பெறுவார்?
நம்மன்போலே வீழ்த்தமுக்கும்* நாட்டிலுள்ளபாவமெல்லாம்
சும்மெனாதே கைவிட்டோடித்* தூறுகள்பாய்ந்தனவே.
4
கடல்கடைந்து அமுதம்கொண்டு * கலசத்தைநிறைத்தாற்போல்*
உடலுருகிவாய்திறந்து* மடுத்து உன்னைநிறைத்துக்கொண்டேன்*
கொடுமை செய்யும்கூற்றமும்* என்கோலாடிகுறுகப்பெறா*
தடவரைத்தோள் சக்கரபாணீ! சார்ங்கவிற்சேவகனே!
5
பொன்னைக்கொண்டு உரைகல்மீதே* நிறமெழவுரைத்தாற்போல்*
உன்னைக்கொண்டு என்நாவகம்பால்* மாற்றின்றிஉரைத்துக்கொண்டேன்*
உன்னைக்கொண்டு என்னுள்வைத்தேன்* என்னையும்உன்னிலிட்டேன்*
என்னப்பா! என்னிருடீகேசா!* என்னுயிர்க்காவலனே!
6
உன்னுடைய விக்கிரமம்* ஒன்றோழியாமல் எல்லாம்*
என்னுடைய நெஞ்சகம்பால்* சுவர்வழி எழுதிக்கொண்டேன்*
மன்னடங்க மழுவலங்கைக்கொண்ட* இராமநம்பீ!*
என்னிடைவந்து எம்பெருமான்!* இனியெங்குப்போகின்றதே?
7
பருப்பதத்துக் கயல்பொறித்த* பாண்டியர்குலபதிபோல்*
திருப்பொலிந்தசேவடி* என் சென்னியின் மேல் பொறித்தாய்*
மருப்பொசித்தாய்! மல்லடர்த்தாய்!* என்றென்றுஉன்வாசகமே*
உருப்பொலிந்தநாவினேனை* உனக்கு உரித்தாக்கினையே. (2)
8
அனந்தன்பாலும் கருடன்பாலும் ஐதுநொய்தாகவைத்து* என்-
மனந்தனுள்ளே வந்துவைகி* வாழச்செய்தாய்எம்பிரான்!*
நினைந்து என்னுள்ளே நின்றுநெக்குக்* கண்கள் அசும்பொழுக*
நினைந்திருந்தே சிரமம்தீர்ந்தேன்* நேமி நெடியவனே!
9
பனிக்கடலில் பள்ளிகோளைப்* பழகவிட்டு ஓடிவந்துஎன்-
மனக்கடலில் வாழவல்ல* மாயமணாளநம்பீ!*
தனிக்கடலே! தனிச்சுடரே!* தனியுலகே என்றென்று*
உனக்கிடமாய்யிருக்க* என்னை உனக்கு உரித்தாக்கினையே.
10
தடவரை வாய்மிளிர்ந்து மின்னும்* தவள நெடுங்கொடிபோல்*
சுடரொளியாய் நெஞ்சினுள்ளே* தோன்றும்என்சோதிநம்பீ!*
வடதடமும் வைகுந்தமும்* மதிள்துவராபதியும்*
இடவகைகள் இகழ்ந்திட்டு* என்பால் இடவகைகொண்டனையே. (2)
11
வேயர் தங்கள் குலத்துதித்த* விட்டுசித்தன் மனத்தே*
கோயில்கொண்ட கோவலனைக்* கொழுங்குளிர் முகில்வண்ணனை*
ஆயரேற்றை அமரர்கோவை* அந்தணர்தம் அமுதத்தினை*
சாயைபோலப் பாடவல்லார்* தாமும் அணுக்கர்களே. (2)
நாச்சியார் திருமொழி
வாரணம் ஆயிரம் – பிரபந்த தனியன்கள்
திருக்கண்ணமங்கையாண்டான் அருளியது
நேரிசை வெண்பா
அல்லிநாட் டாமரைமே லாரணங்கி னின்துணைவி
மல்லிநா டாண்ட மடமயில் – மெல்லியலாள்,
ஆயர் குலவேந்த னாகத்தாள், தென்புதுவை
வேயர் பயந்த விளக்கு.
கட்டளைக் கலித்துறை
கோலச் சுரிசங்கை மாயஞ்செவ் வாயின் குணம்வினவும்
சீலத் தனள்,தென் திருமல்லி நாடி, செழுங்குழல்மேல்
மாலத் தொடைதென் னரங்கருக் கீயும் மதிப்புடைய
சோலைக் கிளி,அவள் தூயநற் பாதம் துணைநமக்கே.
பாசுரங்கள்
1
வாரண மாயிரம்* சூழ வலம் செய்து*
நாரண நம்பி* நடக்கின்றான் என்றூ எதிர்*
பூரண பொற்குடம்* வைத்துப் புறமெங்கும்*
தோரணம் நாட்ட* கனாக்கண்டேன் தோழீ! நான்* (2)
2
நாளை வதுவை* மணமென்று நாளிட்டு*
பாளை கமுகு* பரிசுடைப் பந்தற்கீழ்*
கோளரி மாதவன்* கோவிந்தனென்பான் ஓர்*
காளை புகுத* கனாக்கண்டேன் தோழீ! நான்*
3
இந்திரன் உள்ளிட்ட* தேவர் குழாமெல்லாம்*
வந்திருந்து என்னை* மகட்பேசி மந்திரித்து*
மந்திரக்கோடி யுடுத்தி* மணமாலை*
அந்தரி சூட்ட* கனாக்கண்டேன் தோழீ! நான்*
4
நால் திசைத் தீர்த்தம்* கொணர்ந்து நனி நல்கி*
பார்ப்பனச் சிட்டர்கள்* பல்லார் எடுத்து ஏத்தி*
பூப் புனை கண்ணிப்* புனிதனோடு என்தன்னைக்*
காப்பு நாண் கட்டக்* கனாக் கண்டேன் தோழீ! நான்*
5
கதிர் ஒளித் தீபம்* கலசம் உடன் ஏந்திச்*
சதிர் இள மங்கையர்* தாம் வந்து எதிர்கொள்ள*
மதுரையார் மன்னன்* அடிநிலை தொட்டு*
எங்கும் அதிரப் புகுதக்* கனாக் கண்டேன் தோழீ! நான்*
6
மத்தளம் கொட்ட* வரி சங்கம் நின்று ஊத*
முத்து உடைத் தாமம்* நிரை தாழ்ந்த பந்தற் கீழ்*
மைத்துனன் நம்பி* மதுசூதன் வந்து*
என்னைக் கைத்தலம் பற்றக்* கனாக் கண்டேன் தோழீ! நான்*
7
வாய் நல்லார்* நல்ல மறை ஓதி மந்திரத்தால்*
பாசிலை நாணல் படுத்துப்* பரிதி வைத்து*
காய் சின மா களிறு* அன்னான் என் கைப்பற்றி*
தீ வலஞ் செய்யக்* கனாக் கண்டேன் தோழீ நான்*
8
இம்மைக்கும்* ஏழ் ஏழ் பிறவிக்கும் பற்று ஆவான்*
நம்மை உடையவன்* நாராயணன் நம்பி*
செம்மை உடைய* திருக்கையால் தாள் பற்றி*
அம்மி மிதிக்கக்* கனாக் கண்டேன் தோழீ! நான்*
9
வரிசிலை வாள் முகத்து* என்னைமார் தாம் வந்திட்டு*
எரிமுகம் பாரித்து* என்னை முன்னே நிறுத்தி*
அரிமுகன் அச்சுதன்* கைம்மேல் என் கை வைத்துப்*
பொரிமுகந்து அட்டக்* கனாக் கண்டேன் தோழீ நான்*
10
குங்குமம் அப்பிக்* குளிர் சாந்தம் மட்டித்து*
மங்கல வீதி* வலஞ் செய்து மா மண நீர்*
அங்கு அவனோடும் உடன் சென்று* அங்கு ஆனைமேல்*
மஞ்சனம் ஆட்டக்* கனாக் கண்டேன் தோழீ! நான்*
11
ஆயனுக்காகத்* தான் கண்ட கனாவினை*
வேயர் புகழ்* வில்லிபுத்தூர்க்கோன் கோதை சொல்*
தூய தமிழ்மாலை* ஈரைந்தும் வல்லவர்*
வாயும் நன் மக்களைப் பெற்று* மகிழ்வரே* (2)
அமலனாதிபிரான்
தனியன்கள் – பெரிய நம்பிகள் அருளியது
ஆபாத சூடமநுபூய ஹரிம்ஸயாநம்
மத்த்யேகவேர துஹிதுர்முதிதாந்தராத்மா
அத்ரஷ்ட்ருதாம் நயநயோர் விஷயாந்தராணாம்
யோநிச்சிகாயமநவைமுநிவாஹநந்தம்.
பாசுரங்கள்
1
அமலன் ஆதிபிரான்* அடியார்க்கு என்னை ஆட்படுத்த-
விமலன், *விண்ணவர் கோன் *விரையார் பொழில் வேங்கடவன்,*
நிமலன் நின்மலன் நீதி வானவன்* நீள்மதில் அரங்கத்து அம்மான்,* திருக்-
கமல பாதம் வந்து* என்கண்ணிணினுள்ளன ஒக்கின்றதே. (2)
2
உவந்த உள்ளத்தனாய்* உலகம் அளந்து அண்டம் உற,*
நிவந்த நீள்முடியன்* அன்று நேர்ந்த நிசாசரரைக்,*
கவர்ந்த வெங்கணைக் காகுத்தன்* கடியார்பொழில் அரங்கத்து அம்மான் அரைச்*
சிவந்த ஆடையின் மேல்* சென்றதுஆம் என சிந்தனையே (2)
3
மந்தி பாய்* வட வேங்கட மாமலை,* வானவர்கள்,-
சந்தி செய்ய நின்றான்* அரங்கத்து அரவின் அணையான்,*
அந்தி போல் நிறத்து ஆடையும்* அதன்மேல் அயனைப் படைத்ததுஓர் எழில்*
உந்தி மேலதுஅன்றோ* அடியேன் உள்ளத்து இன்னுயிரே (2)
4
சதுரமா மதிள்சூழ்* இலங்கைக்கு இறைவன் தலைபத்து-
உதிர ஓட்டி,* ஓர் வெங்கணை* உய்த்தவன் ஓத வண்ணன்*
மதுரமா வண்டு பாட* மாமயில் ஆடுஅரங்கத்து அம்மான்,* திருவயிற்று-
உதர பந்தம்* என் உள்ளத்துள் நின்று உலாகின்றதே.
5
பாரமாய* பழவினை பற்றுஅறுத்து,* என்னைத்தன்-
வாரம்ஆக்கி வைத்தான்* வைத்ததுஅன்றி என்உள் புகுந்தான்,*
கோர மாதவம் செய்தனன் கொல் அறியேன்* அரங்கத்து அம்மான்,* திரு-
வார மார்பதன்றோ* அடியேனை ஆட்கொண்டதே*
6
துண்ட வெண்பிறையன்* துயர் தீர்த்தவன்* அஞ்சிறைய-
வண்டுவாழ் பொழில்சூழ்* அரங்கநகர் மேய அப்பன்*
அண்டர் அண்ட பகிரண்டத்து* ஒரு மாநிலம் எழுமால்வரை,* முற்றும்-
உண்ட கண்டம் கண்டீர்* அடியேனை உய்யக் கொண்டதே.
7
கையினார்* சுரி சங்கனல் ஆழியர்,* நீள்வரை போல்-
மெய்யனார்* துளப விரையார் கமழ் நீள் முடியெம்.
ஐயனார்,* அணிஅரங்கனார்* அரவின் அணைமிசை மேய மாயனார்,*
செய்ய வாய் ஐயோ!* என்னைச் சிந்தை கவர்ந்ததுவே!
8
பரியனாகி வந்த* அவுணன் உடல்கீண்ட,* அமரர்க்கு-
அரிய ஆதிபிரான்* அரங்கத்து அமலன் முகத்து,*
கரியவாகிப் புடைபரந்து* மிளிர்ந்து செவ்வரிஓடி* நீண்டவப்-
பெரிய வாய கண்கள்* என்னைப் பேதைமை செய்தனவே!
9
ஆலமா மரத்தின் இலைமேல்* ஒரு பாலகனாய்,*
ஞாலம் ஏழும் உண்டான்* அரங்கத்து அரவின் அணையான்,*
கோல மாமணி ஆரமும்* முத்துத் தாமமும் முடிவில்ல தோரெழில்*
நீல மேனி ஐயோ!* நிறை கொண்டது என் நெஞ்சினையே! (2)
10
கொண்டல் வண்ணனைக்* கோவலனாய் வெண்ணெய்-
உண்ட வாயன்* என்உள்ளம் கவர்ந்தானை,*
அண்டர் கோன் அணி அரங்கன்* என் அமுதினைக்-
கண்ட கண்கள்* மற்றுஒன்றினைக்* காணாவே. (2)
கண்ணிநுண் சிறுத்தாம்பு
தனியன்கள்
ஸ்ரீமந் நாதமுனிகள் அருளிச்செய்தவை
அவிதிதவிஷயாந்தரச்சடாரே
ருபநிஷதாமுபகாநமாத்ரபோக:
அபிசகுணவஸாத் ததேகஸேஷீ
மதுரகவிர் ஹ்ருதயே மமாவிரஸ்து.
இருகவிற்ப நேரிசை வெண்பா
வேறொன்றும் நானறியேன் வேதம் தமிழ்செய்த,
மாறன் சடகோபன் வண்குருகூர்- ஏறு,எங்கள்
வாழ்வாமென் றேத்தும் மதுரகவி யார்எம்மை
ஆள்வார் அவரே யரண்.
பாசுரங்கள்
1
கண்ணி நுண் சிறுத் தாம்பினால்* கட்டு உண்ணப்
பண்ணிய பெரு மாயன்* என் அப்பனில்*
நண்ணித் தென் குருகூர்* நம்பி என்றக்கால்
அண்ணிக்கும் அமுது ஊறும் என் நாவுக்கே (2)
2
நாவினால் நவிற்று* இன்பம் எய்தினேன்*
மேவினேன்* அவன் பொன்னடி மெய்ம்மையே*
தேவு மற்று அறியேன்* குருகூர் நம்பி*
பாவின் இன்னிசை* பாடித் திரிவனே*
3
திரிதந்து ஆகிலும்* தேவபிரான் உடைக்*
கரிய கோலத்* திருவுருக் காண்பன் நான்*
பெரிய வண் குருகூர்* நகர் நம்பிக்கு ஆள்-
உரியனாய்* அடியேன்* பெற்ற நன்மையே*
4
நன்மையால் மிக்க* நான்மறையாளர்கள்*
புன்மை ஆகக்* கருதுவர் ஆதலில்*
அன்னையாய் அத்தனாய்* என்னை ஆண்டிடும்
தன்மையான்* சடகோபன் என் நம்பியே
5
நம்பினேன்* பிறர் நன்பொருள் தன்னையும்*
நம்பினேன்* மடவாரையும் முன் எலாம்*
செம்பொன் மாடத்* திருக் குருகூர் நம்பிக்கு
அன்பனாய்* அடியேன்* சதிர்த்தேன் இன்றே
6
இன்று தொட்டும் எழுமையும் எம்பிரான்*
நின்று தன் புகழ் ஏத்த அருளினான் *
குன்ற மாடத்* திருக் குருகூர் நம்பி *
என்றும் என்னை * இகழ்வு இலன் காண்மினே.
7
கண்டு கொண்டு என்னைக்* காரிமாறப் பிரான் *
பண்டை வல் வினை* பாற்றி அருளினான்*
எண் திசையும்* அறிய இயம்புகேன்*
ஒண் தமிழ்ச்* சடகோபன் அருளையே
8
அருள் கொண்டாடும்* அடியவர் இன்புற*
அருளினான்* அவ் அரு மறையின் பொருள்*
அருள்கொண்டு* ஆயிரம் இன் தமிழ் பாடினான்*
அருள் கண்டீர்* இவ் உலகினில் மிக்கதே
9
மிக்க வேதியர்* வேதத்தின் உட்பொருள்*
நிற்கப் பாடி* என் நெஞ்சுள் நிறுத்தினான்*
தக்க சீர்ச்* சடகோபன் என் நம்பிக்கு* ஆட்-
புக்க காதல்* அடிமைப் பயன் அன்றே?
10
பயனன்று ஆகிலும்* பாங்கலர் ஆகிலும்*
செயல் நன்றாகத் *திருத்திப் பணிகொள்வான்,*
குயில் நின்றார் பொழில் சூழ் *குரு கூர்நம்பி,*
முயல்கின்றேன் *உன்தன் மொய்கழற்கு அன்பையே. (2)
11
அன்பன் தன்னை* அடைந்தவர்கட்கு எல்லாம்
அன்பன்* தென் குருகூர்* நகர் நம்பிக்கு*
அன்பனாய்* மதுரகவி சொன்ன சொல்
நம்புவார் பதி* வைகுந்தம்* காண்மினே (2)
சாற்றுமுறை
பல்லாண்டு பல்லாண்டு பல்லா யிரத்தாண்டு *
பலகோடி நூறாயிரம் *
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா *
உன் சேவடி செவ்விதிருக் காப்பு! *
அடியோமோடும் நின்னோடும் *
பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு,
வடிவாய் நின்வல மார்பினில் *
வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு, *
வடிவார் சோதி வலத்துறையும் *
சுடராழியும் பல்லாண்டு,*
படைபோர் புக்கு முழங்கும் *
அப்பாஞ்ச சன்னியமும் பல்லாண்டே.*
பொது தனியன்கள்
ஸர்வதேஸ தஸாகாலேஷ்வவ்யாஹத பராக்ரமா
ராமா நுஜார்ய திவ்யாஜ்ஞாவர்த்ததாமபிவர்த்ததாம்,
ராமாநுஜார்யதிவ்யாஜ்ஞா ப்ரதிவாஸரமுஜ்வலா
திகந்தவ்யாபிநீபூயாத் ஸாஹிலோகஹிதைஷிணீ.
ஸ்ரீமந்ஸ்ரீரங்கஸ்ரியமநுபத்ரவாமநுதிநம்ஸம்வர்த்தய
ஸ்ரீமந்ஸ்ரீரங்கஸ்ரியமநுபத்ரவாமநுதிநம்ஸம்வர்த்தய.
நமஸ்ஸ்ரீஸைலநாதாய குந்தீநகரஜந்மநே
ப்ரஸாதலப்தபரமப்ராப்ய கைங்கர்ய ஸாலிநே.
ஸ்ரீஸைலேஸ-தயாபாத்ரம் தீபக்த்யாதிகுணார்ணவம்
யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்யஜாமாதரம்முநிம்.
வாழி திருவாய் மொழிப்பிள்ளை மாதகவால்
வாழும், மணவாள மாமுனிவன் – வாழியவன்
மாறன் திருவாய் மொழிப்பொருளை மாநிலத்தோர்
தேறும் படியுரைக்கும் சீர்.
செய்ய தாமரைத் தாளிணை வாழியே,
சேலை வாழி திருநாபி வாழியே,
துய்ய மார்பும் புரிநூலும் வாழியே,
சுந்தரத்திருத்தோளிணை வாழியே,
கையுமேந்திய முக்கோலும் வாழியே,
கருணை பொங்கிய கண்ணினை வாழியே,
பொய்யிலாத மணவாள மாமுனி
புந்திவாழி புகழ்வாழி வாழியே !
அடியார்கள் வாழ,
அரங்க நகர் வாழ,
சடகோபன் தண்தமிழ்நூல் வாழ,
கடல் சூழ்ந்த மன்னுலகம் வாழ,
மணவாள மாமுனியே, இன்னுமொரு நூற்றாண் டிரும்.
ஆண்டாள் வாழித்திருநாமம்
கோதை பிறந்த ஊர்
கோவிந்தன் வாழும் ஊர்
சோதி மணிமாடம் தோன்றும் ஊர்
நீதியால் நல்ல பத்தர் வாழும் ஊர்
நான்மறைகள் ஓதும் ஊர்
வில்லிபுத்தூர் வேதக்கோன் ஊர்.
பாதகங்கள் தீர்க்கும்
பரம னடிகாட்டும்,
வேத மனைத்துக்கும் வித்தாகும்,
கோதைதமிழ் ஐயைந்து மைந்தும்
அறியாத மானிடரை,
வையம் சுமப்பதூஉம் வம்பு.
திருவாடிப் பூரத்துச் செகத்துதித்தாள் வாழியே!
திருப்பாவை முப்பதூஉம் செப்பினாள் வாழியே!
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே!
பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே!
ஒருநூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே!
உயரரங்கர்க் கேகண்ணி யுகந்தளித்தாள் வாழியே!
மருவாரும் திருமல்லி வளநாடு வாழியே!
வண்புதுவை நகர்க்கோதை மலர்ப்பதங்கள் வாழியே!