கண்ணிநுண் சிறுத்தாம்பு


கண்ணி நிண்சிறுத்தாம்புத் தனியன்கள்

ஸ்ரீமந் நாதமுனிகள் அருளிச்செய்தவை

அவிதிதவிஷயாந்தரச்சடாரே
ருபநிஷதாமுபகாநமாத்ரபோக:
அபிசகுணவஸாத் ததேகஸேஷீ
மதுரகவிர் ஹ்ருதயே மமாவிரஸ்து.

 

வேறொன்றும் நானறியேன் வேதம் தமிழ்செய்த,
மாறன் சடகோபன் வண்குருகூர்- ஏறு,எங்கள்
வாழ்வாமென் றேத்தும் மதுரகவி யார்எம்மை
ஆள்வார் அவரே யரண்.

ஸ்ரீ மதுரகவியாழ்வார் அருளிச்செய்த கண்ணி நுண்சிறுத்தாம்பு

 

937 கண்ணி நுண்சிறுத் தாம்பினால் கட்டுண்ணப்
பண்ணி யபெரு மாயன்,என் னப்பனில்,
நண்ணித் தென்குரு கூர்நம்பி யென்றக்கால்,
அண்ணிக் கும்அமு தூறுமென் நாவுக்கே.
1

 

938 நாவி னால்நவிற் றின்ப மெய்தினேன்,
மேவி னேனவன் பொன்னடி மெய்ம்மையே,
தேவு மற்றறி யேன்குரு கூர்நம்பி,
பாவி னின்னிசை பாடித் திரிவனே.
2

 

939 திரிதந் தாகிலும் தேவ பிரானுடை,
கரிய கோலத் திருவுருக் காண்பன்நான்,
பெரிய வண்குரு கூர்நகர் நம்பிக்காள்
உரிய னாய்,அடி யேன்பெற்ற நன்மையே.
3

 

940 நன்மை யால்மிக்க நான்மறை யாளர்கள்,
புன்மை யாகக் கருதுவ ராதலின்,
அன்னை யாயத்த னாயென்னை யாண்டிடும்
தன்மை யான்,சட கோபனென் நம்பியே.
4

 

941 நம்பி னேன்பிறர் நன்பொருள் தன்னையும்,
நம்பி னேன்மட வாரையும் முன்னெல்லாம்,
செம்பொன் மாடத் திருக்குரு கூர்நம்பிக்
கன்ப னாய்,அடி யேஞ்சதிர்த் தேனின்றே.
5

 

942 இன்று தொட்டு மெழுமையு மெம்பிரான்,
நின்று தன்புக ழேத்த வருளினான்,
குன்ற மாடத் திருக்கு கூர்நம்பி,
என்று மென்னை யிகழ்விலன் காண்மினே.
6

 

943 கண்டு கொண்டென்னைக் காரிமா றப்பிரான்,
பண்டை வல்வினை பாற்றி யருளினான்,
எண்டி சையு மறிய இயம்புகேன்,
ஒண்ட மிழ்ச்சட கோப னருளையே.
7

 

944 அருள்கொண் டாடு மடியவ ரின்புற,
அருளி னானவ் வருமறை யின்பொருள்,
அருள்கொண் டாயிர மின்தமிழ் பாடினான்,
அருள்கண் டீரிவ் வுலகினில் மிக்கதே.
8

 

945 மிக்க வேதியர் வேதத்தி னுட்பொருள்
நிற்கப் பாடியென் நெஞ்சுள் நிறுத்தினான்,
தக்க சீர்ச்சட கோபனென் நம்பிக்கு,ஆட்
புக்க காத லடிமைப் பயனன்றே?
9

 

946 பயனன் றாகிலும் பாங்கல ராகிலும்
செயல்நன் றாகத் திருத்திப் பணிகொள்வான்,
குயில்நின் றார்ப்பொழில் சூழ்குரு கூர்நம்பி,
முயல்கின் றேனுன்றன் மொய்கழற் கன்பையே.
10

 

947 அன்பன் தன்னை யடைந்தவர் கட்கெல்லாம்
அன்பன், தென்குரு கூர்நகர் நம்பிக்கு,
அன்ப னாய்மது ரகவி சொன்னசொல்
நம்பு வார்ப்பதி, வைகுந்தம் காண்மினே.
11

ஸ்ரீ மதுகவியாழ்வார் திருவடிகளே சரணம்.