நாச்சியார் திருமொழி


ஸ்ரீ நாச்சியார் திருமொழி

தனியன்

அல்லிநாள் தாமரை மேலாரணங்கினின்துணைவி*

மல்லி நாடாண்டமடமயில் – மெல்லியலாள்*

ஆயர்க்குலவேந்தனாகத்தாள்* தென்புதுவை

வேயர் பயந்த விளக்கு.

முதல் திருமொழி

தையொரு திங்களும் தரை விளக்கி * தண் மண்டலமிட்டு மாசி முன்னாள்*

ஐய நுண் மணல் கொண்டு தெரு அணிந்து * அழகினுக்கு அலங்கரித்து அனங்கதேவா!*

உய்யவும் ஆங்கொலோ என்று சொல்லி * உன்னையும் உம்பியையும் தொழுதேன்*

வெய்யதோர் தழல் உமிழ் சக்கரக்கை * வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே.(2) 1.1

 

வெள்ளை நுண் மணல் கொண்டு தெருவணிந்து * வெள் வரைப்பதன் முன்னம் துறை படிந்து*

முள்ளும் இல்லாச் சுள்ளி எரி மடுத்து * முயன்று உன்னை நோற்கின்றேன் காமதேவா*

கள் அவிழ் பூங்கணை தொடுத்துக் கொண்டு * கடல் வண்ணண் என்பதோர் பேரெழுதி*

புள்ளினைவாய் பிளந்தான் என்பது ஓர் * இலக்கினில் புகவென்னை எய்கிற்றியே.  1.2

 

மத்த நல் நறுமலர் முருக்க மலர் கொண்டு * முப்போதும் உன்னடி வணங்கி*

தத்துவமிலி என்று நெஞ்சு எரிந்து * வாசகத்து அழித்து உன்னை வைதிடாமே*

கொத்தலர் பூங்கணை தொடுத்துக் கொண்டு * கோவிந்தன் என்பதோர் பேரேழுதி*

வித்தகன் வேங்கட வாணனென்னும் * விளக்கினில் புக என்னை விதிக்கிற்றியே.  1.3

 

சுவரில் புராண! நின் பேர் எழுதி * சுறவ நற் கொடிகளும் துரங்கங்களும்*

கவரிப் பிணாக்களும் கருப்பு வில்லும் * காட்டித் தந்தேன் கண்டாய் காமதேவா*

அவரைப் பிராயம் தொடங்கி* என்றும் ஆதரித்து எழுந்த என் தடமுலைகள்*

துவரைப் பிரானுக்கே சங்கற்பித்து * தொழுது வைத்தேன் ஒல்லை விதிக்கிற்றியே.1.4  

 

வானிடை வாழும் அவ் வானவர்க்கு * மறையவர் வேள்வியில் வகுத்த அவி*

கானிடைத் திரிவதோர் நரி புகுந்து * கடப்பதும் மோப்பதும் செய்வதொப்ப*

ஊனிடை ஆழி சங்கு உத்தமர்க்கு என்று * உன்னித்து எழுந்த என் தடமுலைகள்*

மானிடவர்க்கு என்று பேச்சுப்படில் * வாழகில்லேன் கண்டாய் மன்மதனே!   1.5

 

உருவுடையார் இளையார்கள் நல்லார்* ஓத்து வல்லார்களைக் கொண்டு * வைகல்-

தெருவிடை எதிர்கொண்டு* பங்குனி நாள் திருந்தவே நோற்கின்றேன் காமதேவா*

கருவுடை முகில்வண்ணன் காயா வண்ணன்* கரு விளைபோல் வண்ணன் கமலவண்ணன்*

திருவுடை முகத்தினில் திருக் கண்களால்* திருந்தவே நோக்கு எனக்கருள் கண்டாய். 1.6

 

காயுடை நெல்லொடு கரும்பு அமைத்துக்* கட்டியரிசி அவல் அமைத்து*

வாயுடை மறையவர் மந்திரத்தால்* மன்மதனே! உன்னை வணங்குகின்றேன்*

தேசமுன் அளந்தவன் திரிவிக்கிரமன்* திருக்கைகளால் என்னைத் தீண்டும் வண்ணம்*

சாயுடை வயிறும் என் தடமுலையும்* தரணியில் தலைப் புகழ் தரக்கிற்றியே. 1.7

 

மாசுடை உடம்பொடு தலை உலறி* வாய்ப் புறம் வெளுத்து ஒருபோதும் உண்டு*

தேசுடை திறலுடைக் காமதேவா!* நோற்கின்ற நோன்பினைக் குறிக்கொள் கண்டாய்*

பேசுவது ஒன்று உண்டு இங்கு எம்பெருமான்* பெண்மையைத் தலையுடைத் தாக்கும் வண்ணம்*

கேசவ நம்பியைக் கால் பிடிப்பாள் என்னும்* இப்பேறு எனக்கு அருள் கண்டாய்.  1.8

 

தொழுது முப்போதும் உன்னடி வணங்கி* தூமலர் தூய்த் தொழுது ஏத்துகின்றேன்*

பழுதின்றிப் பாற்கடல் வண்ணனுக்கே* பணிசெய்து வாழப் பெறாவிடில் நான்*

அழுது அழுது அலமந்த அம்மா வழங்க* ஆற்றவும் அது உனக்கு உறைக்கும் கண்டாய்*

உழுவதோர் எருத்தினை நுகங்கொடு பாய்ந்து* ஊட்டமின்றி துரந்தால் ஒக்குமே. 1.9

 

##கருப்புவில் மலர்க்கணைக் காமவேளை* கழலிணை பணிந்து அங்கு ஓர் கரியலற*

மருப்பினை ஒசித்துப் புள்வாய் பிளந்த* மணிவண்ணற்கு என்னை வகுத்திடு என்று*

பொருப்பு அன்ன மாடம் பொலிந்து தோன்றும்* புதுவையர் கோன் விட்டுசித்தன் கோதை*

விருப்புடை இன் தமிழ் மாலை வல்லார்* விண்ணவர் கோன் அடி நண்ணுவரே. (2) 1.10

 

இரண்டாம் திருமொழி

## நாமம் ஆயிரம் ஏத்த நின்ற* நாராயணா நரனே* உன்னை-

மாமிதன் மகனாகப் பெற்றால்* எமக்கு வாதை தவிருமே*

காமன் போதரு காலமென்று* பங்குனிநாள் கடை பாரித்தோம்*

தீமை செய்யும் சிரீதரா!* எங்கள் சிற்றில் வந்து சிதையேலே. (2) 2.1

 

இன்று முற்றும் முதுகு நோவ* இருந்து இழைத்த இச் சிற்றிலை*

நன்றும் கண்ணுற நோக்கி* நாங்கொளும் ஆர்வந் தன்னைத் தணிகிடாய்*

அன்று பாலகனாகி* ஆலிலை மேல் துயின்ற எம் ஆதியாய்!*

என்றும் உந்தனக்கு எங்கள் மேல் * இரக்கம் எழாதது எம் பாவமே. 2.2

 

குண்டு நீருறை கோளரீ!* மத யானை கோள் விடுத்தாய்!*

உன்னைக் கண்டு மாலுறு வோங்களை* கடைக் கண்களால் இட்டு வாதியேல்*

வண்டல் நுண் மணல் தெள்ளி* யாம் வளைக் கைகளால் சிரமப்பட்டோம்*

தெண் திரைக்கடல் பள்ளியாய்!* எங்கள் சிற்றில் வந்து சிதையேலே. 2.3

 

பெய்யு மாமுகில் போல் வண்ணா!* உன் தன் பேச்சும் செய்கையும்*

எங்களை மையல் ஏற்றி மயக்க* உன்முகம் மாய மந்திரந்தான் கொலோ*

நொய்யர் பிள்ளைகள் என்பதற்கு* உன்னை நோவ நாங்கள் உரைக்கிலோம்*

செய்ய தாமரைக் கண்ணினாய் * எங்கள் சிற்றில் வந்து சிதையேலே. 2.4

 

வெள்ளை நுண் மணல் கொண்டு* சிற்றில் விசித்திரப்பட* வீதிவாய்த் –

தெள்ளி நாங்கள் இழைத்த கோலம் அழித்தியாகிலும்* உன் தன் மேல் *

உள்ளம் ஓடி உருகல் அல்லால்* உரோடம் ஒன்றும் இலோம் கண்டாய்*

கள்ள மாதவா! கேசவா!* உன் முகத்தன கண்கள் அல்லவே. 2.5

 

முற்றிலாத பிள்ளைகளோம்* முலை போந்திலாதோமை*

நாள்தொறும் சிற்றில் மேலிட்டுக் கொண்டு* நீ சிறிதுண்டு திண்ணென நாமது –

கற்றிலோம்* கடலை அடைத்து அரக்கர் குலங்களை* முற்றவும் செற்று*

இலங்கையைப் பூசலாக்கிய சேவகா!* எம்மை வாதியேல். 2.6

 

பேத நன்கு அறிவார்களோடு* இவை பேசினால் பெரிது இன் சுவை*

யாதும் ஒன்றறியாத பிள்ளைகளோமை* நீ நலிந்து என் பயன்?*

ஓதமா கடல் வண்ணா!* உன் மணவாட்டிமாரொடு சூழறும்*

சேது பந்தம் திருத்தினாய்!* எங்கள் சிற்றில் வந்து சிதையேலே. 2.7

 

வட்டவாய் சிறு தூதையோடு* சிறு சுளகும் மணலுங் கொண்டு*

இட்டமா விளையாடு வோங்களைச்* சிற்றில் ஈடழித்து என் பயன்?*

தொட்டு தைத்து நலியேல் கண்டாய்* சுடர்ச் சக்கரம் கையில் ஏந்தினாய்*

கட்டியும் கைத்தால் இன்னாமை* அறிதியே கடல் வண்ணனே! 2.8

 

முற்றத்தூடு புகுந்து* நின்முகங் காட்டிப் புன்முறுவல் செய்து*

சிற்றிலோடு எங்கள் சிந்தையும்* சிதைக்கக் கடவையோ? கோவிந்தா*

முற்ற மண்ணிடம் தாவி* விண்ணுற நீண்டு அளந்து கொண்டாய்*

எம்மைப் பற்றி மெய்ப் பிணக்கு இட்டக்கால்* இந்தப் பக்கம் நின்றவர் என் சொல்லார்? 2.9

 

 

##’சீதைவாய் அமுதம் உண்டாய்!* எங்கள் சிற்றில் நீ சிதையேல் என்று*

வீதிவாய் விளையாடும்* ஆயர் சிறுமியர் மழலைச் சொல்லை*

வேதவாய்த் தொழிலார்கள் வாழ்* வில்லிபுத்தூர் மன் விட்டுசித்தன் தன்*

கோதை வாய்த் தமிழ் வல்லவர்* குறைவின்றி வைகுந்தம் சேர்வரே! (2) 2.10

 

மூன்றாம் திருமொழி

##கோழி அழைப்பதன் முன்னம்* குடைந்து நீராடுவான் போந்தோம்*

ஆழியஞ் செல்வன் எழுந்தான்* அரவணை மேல் பள்ளி கொண்டாய்*

ஏழைமை ஆற்றவும் பட்டோம்* இனி என்றும் பொய்கைக்கு வாரோம்*

தோழியும் நானும் தொழுதோம்* துகிலைப் பணித்து அருளாயே. (2) 3.1

 

இது என் புகுந்தது இங்கு அந்தோ!* இப்பொய்கைக்கு எவ்வாறு வந்தாய்*

மதுவின் துழாய்முடி மாலே!* மாயனே! எங்கள் அமுதே*

விதியின்மையால் அது மாட்டோம்* வித்தகப் பிள்ளாய்! விரையேல்*

குதி கொண்டு அரவில் நடித்தாய்!* குருந்து இடைக் கூறை பணியாய். 3.2

 

எல்லே ஈது என்ன இளமை* எம்மனைமார் காணில் ஒட்டார்*

பொல்லாங்கு ஈதென்று கருதாய்* பூங்குருந்து ஏறி இருத்தி*

வில்லால் இலங்கை அழித்தாய்!* நீ வேண்டியது எல்லாம் தருவோம்*

பல்லாரும் காணாமே போவோம்* பட்டைப் பணித்து அருளாயே. 3.3

 

பரக்க விழித்து எங்கும் நோக்கி* பலர் குடைந்தாடும் சுனையில்*

அரக்க நில்லா கண்ண நீர்கள்* அலமருகின்றவா பாராய்*

இரக்க மேல் ஒன்றும் இலாதாய்!* இலங்கை அழித்த பிரானே*

குரக்கு அரசு ஆவது அறிந்தோம்* குருந்து இடைக் கூறை பணியாய். 3.4

 

காலைக் கதுவிடுகின்ற* கயலொடு வாளை விரவி*

வேலைப் பிடித்து என் ஐமார்கள் ஓட்டில்* என்ன விளையாட்டோ?*

கோலச் சிற்றாடை பலவும் கொண்டு *நீ ஏறி இராதே*

கோலம் கரிய பிரானே!* குருந்து இடைக் கூறை பணியாய். 3.5

 

தடத்தவிழ் தாமரைப் பொய்கை* தாள்கள் எம் காலைக் கதுவ*

விடத் தேள் எறிந்தாலே போல* வேதனை ஆற்றவும் பட்டோம்*

குடத்தை எடுத்தேற விட்டு* கூத்தாட வல்ல எங்கோவே*

படிற்றை எல்லாம் தவிர்ந்து *எங்கள் பட்டைப் பணித்து அருளாயே.  3.6

 

நீரிலே நின்று அயர்க்கின்றோம்* நீதி அல்லாதன செய்தாய்*

ஊர் அகம் சாலவும் சேய்த்தால்* ஊழி எல்லாம் உணர்வானே!*

ஆர்வம் உனக்கே உடையோம்* அம்மனைமார் காணில் ஒட்டார்*

போர விடாய் எங்கள் பட்டை* பூங்குருந்து ஏறி இராதே. 3.7

 

மாமிமார் மக்களே அல்லோம்* மற்றும் இங்கு எல்லாரும் போந்தார்*

தூமலர்க் கண்கள் வளர* தொல்லை இராத் துயில்வானே*

சேமமேல் அன்றிது சால* சிக்கென நாம் இது சொன்னோம்*

கோமள ஆயர் கொழுந்தே!* குருந்து இடைக் கூறை பணியாய். 3.8

 

கஞ்சன் வலை வைத்த அன்று* காரிருள் எல்லில் பிழைத்து*

நெஞ்சு துக்கம் செய்யப் போந்தாய்* நின்ற இக் கன்னியரோமை*

அஞ்ச உரப்பாள் அசோதை* ஆணாட விட்டிட்டு இருக்கும்*

வஞ்சகப் பேய்ச்சி பாலுண்ட* மசிமை இலீ! கூறை தாராய்.  3.9

 

 

##கன்னியரோடு எங்கள் நம்பி* கரிய பிரான் விளையாட்டை*

பொன்னியல் மாடங்கள் சூழ்ந்த* புதுவையர் கோன் பட்டன் கோதை*

இன்னிசையால் சொன்ன மாலை* ஈரைந்தும் வல்லவர் தாம் போய்*

மன்னிய மாதவேனாடு* வைகுந்தம் புக்கிருப்பாரே. (2) 3.10

 

நான்காம் திருமொழி

##தெள்ளியார் பலர்* கைதொழும் தேவனார்*

வள்ளல் * மாலிருஞ்சோலை மணாளனார்*

பள்ளி கொள்ளும் இடத்து* அடி கொட்டிட*

கொள்ளும் ஆகில் * நீ கூடிடு கூடலே! (2) 4.1

 

##காட்டில் வேங்கடம் * கண்ணபுர நகர்*

வாட்டமின்றி* மகிழ்ந்துறை வாமனன்*

ஓட்டரா வந்து * என் கைப்பற்றி*

தன்னொடும் கூட்டுமாகில்* நீ கூடிடு கூடலே! (2) 4.2

 

பூமகன்* புகழ் வானவர்*

போற்றுதற்கு ஆமகன்* அணி வாணுதல் தேவகி மாமகன்*

மிகு சீர்* வசுதேவர் தம்*

கோமகன் வரில் * கூடிடு கூடலே! 4.3

 

ஆய்ச்சிமார்களும்* ஆயரும் அஞ்சிட*

பூத்த நீள்* கடம்பு ஏறிப் புகப் பாய்ந்து*

வாய்த்த காளியன்மேல் * நடமாடிய*

கூத்தனார் வரில் * கூடிடு கூடலே! 4.4

 

மாட மாளிகை சூழ்* மதுரைப்பதி நாடி*

நந்தெருவின்* நடுவே வந்திட்டு*

ஓடை மா* மதயானை உதைத்தவன்*

கூடுமாகில் * நீ கூடிடு கூடலே!  4.5

 

அற்றவன்* மருதம் முறிய நடை கற்றவன்*

கஞ்சனை* வஞ்சனையில் செற்றவன்*

திகழும் * மதுரைப்பதி*

கொற்றவன் வரில் *கூடிடு கூடலே! 4.6

 

அன்று இன்னாதன செய்* சிசுபாலனும்*

நின்ற நீள்* மருதும் எருதும் புள்ளும்*

வென்றி வேல் விறல்* கஞ்சனும் வீழ*

முன் கொன்றவன் வரில் * கூடிடு கூடலே!  4.7

 

ஆவல் அன்புடயார்* தம் மனத்தன்றி மேவலன்*

விரைசூழ் * துவராபதிக் காவலன்*

கன்று மேய்த்து விளையாடும்*

கோவலன் வரில் *கூடிடு கூடலே!  4.8

 

கொண்ட கோல * குறளுருவாய்ச் சென்று*

பண்டு மாவலி தன்* பெரு வேள்வியில்*

அண்டமும் நிலனும்* அடி ஒன்றினால்*

கொண்டவன் வரில் * கூடிடு கூடலே! 4.9

 

 

பழகு நான்மறையின் பொருளாய்*

மதமொழுகு வாரணம்* உய்ய அளித்த*

எம் அழகனார் * அணி ஆய்ச்சியர் சிந்தையுள்*

குழகனார் வரில் * கூடிடு கூடலே!  4.10

 

##ஊடல் கூடல் * உணர்தல் புணர்தலை*

நீடு நின்ற* நிறைபுகழ் ஆய்ச்சியர்*

கூடலை * குழற்கோதை முன் கூறிய*

பாடல் பத்தும் வல்லார்க்கு* இல்லை பாவமே* (2) 4.11

 

ஐந்தாம் திருமொழி

##மன்னு பெரும் புகழ் மாதவன்* மாமணி வண்ணன் மணிமுடி மைந்தன் தன்னை*

உகந்தது காரணமாக* என் சங்கு இழக்கும் வழக்குண்டே?*

புன்னை குருக்கத்தி ஞாழல் செருந்திப்* பொதும்பினில் வாழும் குயிலே!*

பன்னி எப்போதும் இருந்து விரைந்து* என் பவள வாயன் வரக்கூவாய். (2) 5.1

 

வெள்ளை விளிசங்கு இடங்கையில் கொண்ட* விமலன் எனக்கு உருக் காட்டான்*

உள்ளம் புகுந்து என்னை நைவித்து* நாளும் உயிர் பெய்து கூத்தாட்டுக் காணும்*

கள் அவிழ் செண்பகப் பூமலர் கோதி* களித்து இசை பாடுங் குயிலே*

மெள்ள இருந்து மிழற்றி மிழற்றாது* என் வேங்கடவன் வரக்கூவாய். 5.2

 

மாதலி தேர் முன்பு கோல் கொள்ள* மாயன் இராவணன் மேல்*

சரமாரி தாய் தலை அற்று அற்று வீழ* தொடுத்த தலைவன் வரவு எங்கும் காணேன்*

போதலர் காவில் புதுமணம் நாற* பொறிவண்டின் காமரம் கேட்டு*

உன் காதலியோடு உடன் வாழ் குயிலே!* என் கருமாணிக்கம் வரக்கூவாய்.  5.3

 

என்பு உருகி இனவேல் நெடுங்கண்கள்* இமை பொருந்தா பல நாளும்*

துன்பக் கடல் புக்கு வைகுந்தன் என்பதோர்* தோணி பெறாது உழல்கின்றேன்*

அன்புடையாரைப் பிரிவுறு நோய் * அது நீயும் அறிதி குயிலே*

பொன்புரை மேனிக் கருளக் கொடியுடை* புண்ணியனை வரக்கூவாய்.  5.4

 

##மென்னடை அன்னம் பரந்து விளையாடும்* வில்லிபுத்தூர் உறைவான் தன்*

பொன்னடி காண்பதோர் ஆசையினால்* என் பொரு கயல் கண்ணிணை துஞ்சா*

இன் அடிசிலொடு பாலமுதூட்டி* எடுத்த என் கோலக்கிளியை*

உன்னொடு தோழமை கொள்ளுவன் குயிலே!* உலகளந்தான் வரக் கூவாய். (2) 5.5

 

எத்திசையும் அமரர் பணிந்து ஏத்தும்* இருடீகேசன் வலி செய்ய*

முத்தன்ன வெண் முறுவல் செய்ய வாயும் முலையும்* அழகு அழிந்தேன் நான்*

கொத்தலர் காவில் மணித் தடம் கண் படை* கொள்ளும் இளங் குயிலே *

என் தத்துவனை வரக் கூகிற்றி ஆகில்* தலை அல்லால் கைம்மாறிலேனே!  5.6

 

பொங்கிய பாற் கடல் பள்ளி கொள்வானை* புணர்வதோர் ஆசையினால்*

என் கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதுகலித்து* ஆவியை ஆகுலம் செய்யும் அங்குயிலே!*

உனக்கு என்ன மறைந்து உறைவு* ஆழியும் சங்கும் ஒண் தண்டும்*

தங்கிய கையவனை வரக்கூவில்* நீ சாலத் தருமம் பெறுதி.  5.7

 

சார்ங்கம் வளைய வலிக்கும்* தடக்கைச் சதுரன் பொருத்தம் உடையன்*

நாங்கள் எம்மில் இருந்து ஒட்டிய கச்சங்கம்* நானும் அவனும் அறிதும்*

தேங்கனி மாம்பொழில் செந்தளிர் கோதும்* சிறுகுயிலே*

திருமாலை ஆங்கு விரைந்து ஒல்லைக் கூகிற்றியாகில்* அவனை நான் செய்வன காணே! 5.8

 

 

பைங்கிளி வண்ணன் சிரீதரன் என்பதோர்* பாசத்து அகப் பட்டிருந்தேன்*

பொங்கொளி வண்டிரைக்கும் பொழில் வாழ்குயிலே!* குறிக்கொண்டு இது நீ கேள்*

சங்கொடு சக்கரத்தான் வரக் கூவுதல்* பொன்வளை கொண்டு தருதல்*

இங்குள்ள காவினில் வாழக் கருதில்* இரண்டத்து ஒன்றேல் திண்ணம் வேண்டும். 5.9   

 

அன்று உலகம் அளந்தானை உகந்து* அடிமைக்கண் அவன் வலி செய்ய*

தென்றலும் திங்களும் ஊடறுத்து* என்னை நலியும் முறைமை அறியேன்*

என்றும் இக்காவில் இருந்து இருந்து* என்னைத் ததர்த்தாதே நீயும் குயிலே!*

இன்று நாராயணனை வரக் கூவாயேல்* இங்குற்று நின்றும் துரப்பன். 5.10

 

##விண்ணுற நீண்டு அடிதாவிய மைந்தனை* வேற் கண் மடந்தை விரும்பி*

கண்ணுற என்கடல் வண்ணனைக் கூவு* கருங்குயிலே! என்ற மாற்றம்*

பண்ணுறு நான்மறையோர் புதுவை மன்னன்* பட்டர்பிரான் கோதை சொன்ன*

நண்ணுறு வாசக மாலை வல்லார்* நமோ நாராயணாய என்பாரே! (2) 5.11

 

ஆறாம் திருமொழி

##வாரணமாயிரம் * சூழ வலம் செய்து*

நாரண நம்பி* நடக்கின்றான் என்று எதிர்*

பூரண பொற்குடம்* வைத்துப் புறமெங்கும்*

தோரணம் நாட்ட* கனாக்கண்டேன் தோழீ! நான். (2)  6.1

 

நாளை வதுவை* மணமென்று நாளிட்டு*

பாளை கமுகு* பரிசுடைப் பந்தற்கீழ்*

கோளரி மாதவன்* கோவிந்தனென்பான் ஓர்*

காளை புகுத * கனாக்கண்டேன் தோழீ! நான்.  6.2

 

இந்திரன் உள்ளிட்ட* தேவர் குழாமெல்லாம்*

வந்திருந்து என்னை* மகட்பேசி மந்திரித்து*

மந்திரக்கோடி உடுத்தி* மணமாலை*

அந்தரி சூட்ட* கனாக்கண்டேன் தோழீ! நான். 6.3

 

நால் திசைத் தீர்த்தம்* கொணர்ந்து நனிநல்கி*

பார்ப்பனச் சிட்டர்கள்* பல்லாரெடுத்தேத்தி*

பூப்புனை கண்ணி* புனிதேனாடு என் தன்னை*

காப்பு நாண் கட்ட* கனாக்கண்டேன் தோழீ! நான்.  6.4

 

கதிரொளி தீபம்* கலச முடனேந்தி*

சதிரிள மங்கையர்* தாம் வந்து எதிர்கொள்ள*

மதுரையார் மன்னன்* அடிநிலை தொட்டு*

எங்கும் அதிரப் புகுத* கனாக்கண்டேன் தோழீ!நான்.  6.5

 

மத்தளம் கொட்ட* வரிசங்கம் நின்றூத*

முத்துடைத் தாமம்* நிரைதாழ்ந்த பந்தற்கீழ்*

மைத்துனன் நம்பி* மதுசூதன் வந்து*

என்னைக் கைத்தலம் பற்ற* கனாக்கண்டேன் தோழீ!நான். 6.6

 

வாய் நல்லார்* நல்ல மறையோதி மந்திரத்தால்*

பாசிலை நாணல் படுத்து* பரிதி வைத்து*

காய்சின மாகளிறு* அன்னான் என் கைப்பற்றி*

தீவலைஞ்செய்ய* கனாக்கண்டேன் தோழீநான்.   6.7

 

 

இம்மைக்கும் * ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான்*

நம்மை யுடையவன் * நாராயணன் நம்பி*

செம்மையுடைய* திருக்கையால் தாள்பற்றி*

அம்மிமிதிக்க * கனாக்கண்டேன் தோழீ! நான். 6.8

 

வரிசிலை வாள்முகத்து* என்னைமார் தாம்வந்திட்டு*

எரிமுகம் பாரித்து* என்னை முன்னே நிறுத்தி*

அரிமுகன் அச்சுதன்* கைம்மேல் என் கை வைத்து*

பொரிமுகந்தட்ட* கனாக்கண்டேன் தோழீநான்.  6.9

 

குங்குமமப்பி* குளிர்சாந்த மட்டித்து*

மங்கல வீதி* வலஞ்செய்து மணநீர்*

அங்கு அவேனாடும் உடன் சென்று* அங்கு ஆனைமேல்*

மஞ்சன மாட்ட* கனாக்கண்டேன் தோழீ!நான்.  6.10

 

##ஆயனுக்காக* தான் கண்ட கனாவினை*

வேயர் புகழ் * வில்லிபுத்தூர்க்கோன் கோதைசொல்*

தூய தமிழ்மாலை* ஈரைந்தும் வல்லவர்*

வாயும் நன்மக்களை  பெற்று * மகிழ்வரே. (2) 6.11

 

ஏழாம் திருமொழி

##கருப்பூரம் நாறுமோ?* கமலப்பூ நாறுமோ*

திருப் பவளச் செவ்வாய்தான்* தித்தித்து இருக்குமோ*

மருப் பொசித்த மாதவன் தன்* வாய்ச் சுவையும் நாற்றமும்*

விருப்புற்றுக் கேட்கின்றேன்* சொல்லாழி வெண்சங்கே! (2)    7.1

 

கடலில் பிறந்து* கருதாது* பஞ்சசனன்

உடலில் வளர்ந்து போய் * ஊழியான் கைத்தலத்து*

இடரில் குடியேறி* தீய அசுரர்*

நடலைப் பட முழங்கும்* தோற்றத்தாய் நற்சங்கே!*  7.2

 

தடவரையின் மீதே* சரற் கால சந்திரன்*

இடை உவாவில் வந்து * எழுந்தாலே போல*

நீயும் வடமதுரையார் மன்னன்* வாசுதேவன் கையில்*

குடியேறி வீற்றிருந்தாய்* கோலப் பெருஞ்சங்கே!   7.3

 

சந்திர மண்டலம் போல்* தாமோதரன் கையில்*

அந்தரம் ஒன்று இன்றி* ஏறி அவன் செவியில்*

மந்திரம் கொள்வாயே போலும்* வலம்புரியே*

இந்திரனும் உன்னோடு* செல்வத்துக்கு ஏலானே.   7.4

 

உன்னோடு உடனே* ஒரு கடலில் வாழ்வாரை*

இன்னார் இனையார் என்று* எண்ணுவார் இல்லை காண்*

மன்னாகி நின்ற* மதுசூதன் வாயமுதம்*

பன்னாளும் உண்கின்றாய் * பாஞ்ச சந்னியமே!   7.5

 

போய்த் தீர்த்தம் ஆடாதே* நின்ற புணர் மருதம்*

சாய்த் தீர்த்தான் கைத்தலத்தே* ஏறிக் குடிகொண்டு*

சேய்த் தீர்த்தமாய் நின்ற* செங்கண்மால் தன்னுடைய*

வாய்த் தீர்த்தம் பாய்ந்தாட வல்லாய்* வலம்புரியே!     7.6

 

 

செங்கமல நாண்மலர் மேல்* தேன் நுகரும் அன்னம் போல்*

செங்கண் கருமேனி *வாசுதேவனுடய*

அங் கைத்தலம் ஏறி* அன்னவசம் செய்யும்*

சங்கு அரையா! உன்செல்வம்* சால அழகியதே!  7.7

 

உண்பது சொல்லில் * உலகளந்தான் வாயமுதம்*

கண் படை கொள்ளில்* கடல்வண்ணன் கைத்தலத்தே*

பெண் படையார் உன் மேல்* பெரும் பூசல் சாற்றுகின்றார்*

பண்பல செய்கின்றாய்* பாஞ்ச சன்னியமே!   7.8

 

பதினாறாம் ஆயிரவர்* தேவிமார் பார்த்து இருப்ப*

மதுவாயில் கொண்டாற் போல்* மாதவன் தன் வாயமுதம்*

பொது ஆக உண்பதனை* புக்கு நீ உண்டக்கால்*

சிதையாரோ உன்னோடு* செல்வப் பெருஞ்சங்கே!  7.9

 

##பாஞ்ச சந்னியத்தை * பற்பநாபேனாடும் *

வாய்ந்த பெருஞ் சுற்றம் ஆக்கிய* வண்புதுவை*

ஏய்ந்த புகழ்ப் பட்டர்பிரான்* கோதை தமிழ் ஈரைந்தும்*

ஆய்ந்து ஏத்த வல்லார் *அவரும் அணுக்கரே. (2)  7.10

 

எட்டாம் திருமொழி

##விண் நீல மேலாப்பு* விரித்தாற் போல் மேகங்காள்*

தெண்ணீர் பாய் வேங்கடத்து *என் திருமாலும் போந்தானே?*

கண்ணீர்கள் முலைக் குவட்டில்* துளிசோரச் சோர்வேனை*

பெண்ணீர்மை ஈÖடழிக்கும்* இது தமக்கு ஓர் பெருமையே? (2)    8.1

 

மாமுத்த நிதி சொரியும்* மாமுகில்காள்* வேங்கடத்துச்

சாமத்தின் நிறங் கொண்ட* தாடாளன் வார்த்தை என்னே*

காமத் தீயுள் புகுந்து* கதுவப் பட்டு இடைக் கங்குல்*

ஏமத்து ஓர் தென்றலுக்கு* இங்கு இலக்காய் நான் இருப்பேனே.   8.2

 

ஒளி வண்ணம் வளை சிந்தை* உறக்கத்தோடு இவை எல்லாம்*

எளிமையால் இட்டு என்னை* ஈடழியப் போயின ஆல்*

குளிர் அருவி வேங்கடத்து *என் கோவிந்தன் குணம் பாடி*

அளியத்த மேகங்காள்!* ஆவி காத்திருப்பேனே.     8.3

 

மின் ஆகத்து எழுகின்ற* மேகங்காள்* வேங்கடத்துத்-

தன் ஆகத் திருமங்கை* தங்கிய சீர் மார்வர்க்Ûகு*

என் ஆகத்து இளங் கொங்கை* விரும்பித் தாம் நாள் தோறும்*

பொன் ஆகம் புல்குதற்கு* என் புரிவு உடைமை செப்புமினே.  8.4

 

வான் கொண்டு கிளர்ந்து எழுந்த*  மாமுகில்காள்!* வேங்கடத்துத்-

தேன் கொண்ட மலர்ச் சிதறத்*  திரண்டு ஏறிப் பொழிவீர்காள்*

ஊன் கொண்ட வள்ளுகிரால்*  இரணியனை உடல் இடந்தான்*

தான் கொண்ட சரிவளைகள்*  தருமாகில் சாற்றுமினே.   8.5

 

சலங் கொண்டு கிளர்ந்து எழுந்த*  தண் முகில்காள்!* மாவலியை-

நிலங் கொண்டான் வேங்கடத்தே*  நிரந்து ஏறிப் பொழிவீர்காள்*

உலங்கு உண்ட விளங்கனிபோல்*  உள் மெலியப் புகுந்து*

என்னை நலங் கொண்ட நாரணற்கு *  என் நடலை நோய் செப்புமினே.   8.6

 

 

##சங்க மாகடல் கடைந்தான்*  தண் முகில்காள்! * வேங்கடத்துச்-

செங்கண்மால் சேவடிக் கீழ்*  அடி வீழ்ச்சி விண்ணப்பம்*

கொங்கை மேல் குங்குமத்தின்*  குழம்பு அழியப் புகுந்து*

ஒரு நாள் தங்கும் ஏல் என்னாவி*  தங்கும் என்று உரையீரே. (2)   8.7

 

கார் காலத்து எழுகின்ற*  கார்முகில்காள்! * வேங்கடத்துப்-

போர் காலத்து எழுந்தருளிப்*  பொருதவனார் பேர் சொல்லி*

நீர் காலத்து எருக்கில்*  அம் பழ இலை போல் வீழ்வேனை*

வார் காலத்து ஒருநாள்*  தம் வாசகம் தந்தருளாரே.   8.8

 

மதயானை போல் எழுந்த*  மாமுகில்காள்!* வேங்கடத்தைப்-

பதியாக வாழ்வீர்காள்!*  பாம்பணையான் வார்த்தை என்னே*

கதியென்றும் தானாவான்*  கருதாது *ஓர் பெண்கொடியை-

வதை செய்தான் என்னும் சொல்*  வையகத்தார் மதியாரே. (2) 8.9

 

##நாகத்தின் அணையானை*  நல் நுதலாள் நயந்து உரைசெய்*

மேகத்தை வேங்கடக்கோன்*  விடு தூதில் விண்ணப்பம்*

போகத்தில் வழுவாத*  புதுவையர்கோன் கோதைதமிழ்*

ஆகத்து வைத்துரைப்பார்*  அவர் அடியார் ஆகுவரே. (2)   8.10

 

 

ஒன்பதாம் திருமொழி

##சிந்துரச் செம் பொடிப் போல்*  திருமாலிருஞ்சோலை எங்கும்*

இந்திர கோபங்களே*  எழுந்தும் பரந்திட்டன ஆல்*

மந்தரம் நாட்டி அன்று*  மதுரக் கொழுஞ் சாறு கொண்ட*

சுந்தரத் தோளுடையான்*  சுழலையில் நின்று உய்தும் கொலோ!* (2)  9.1

 

போர் களிறு பொரும் *  மாலிருஞ்சோலையம் பூம் புறவில்*

தார்க் கொடி முல்லைகளும்*  தவள நகை காட்டுகின்ற*

கார்க் கொள் படாக்கள் நின்று*  கழறிச் சிரிக்கத் தரியேன்*

ஆர்க்கு இடுகோ? தோழி!*  அவன் தார் செய்த பூசலையே.  9.2

 

கருவிளை ஒண் மலர்காள்!*  காயாமலர் காள்*

திருமால் உருவொளி காட்டுகின்றீர்*  எனக்கு உய் வழக்கு ஒன்று உரையீர்*

திரு விளையாடு திண் தோள்*  திருமாலிருஞ் சோலை நம்பி*

வரி வளையில் புகுந்து*  வந்தி பற்றும் வழக்கு உளதே.   9.3

 

பைம் பொழில் வாழ் குயில்காள்! மயில்காள்!*  ஒண் கருவிளைகாள்*

வம்பக் களங் கனிகாள்!*  வண்ணப் பூவை நறுமலர்காள்*

ஐம்பெரும் பாதகர்காள்!*  அணி மாலிருஞ்சோலை நின்ற*

எம்பெருமானுடைய நிறம்*  உங்களுக்கு என் செய்வதே?* 9.4

 

துங்க மலர்ப் பொழில் சூழ்*  திருமாலிருஞ்சோலை நின்ற*

செங்கண் கருமுகிலின்*  திருவுருப் போல்*

மலர் மேல் தொங்கிய வண்டு இனங்காள்!*  தொகு பூஞ் சுனைகாள்!*

சுனையில் தங்கு செந்தாமரைகாள்!*  எனக்கு ஓர் சரண் சாற்றுமினே. 9.5

 

##நாறு நறும் பொழில்*  மாலிருஞ்சோலை நம்பிக்கு*

நான் நூறு தடாவில் வெண்ணெய்*  வாய் நேர்ந்து பராவி வைத்தேன்*

நூறு தடா நிறைந்த*  அக்கார வடிசில் சொன்னேன்*

ஏறு திருவுடையான்*  இன்று வந்து இவை கொள்ளுங் கொலோ! (2) 9.6

 

இன்று வந்து இத்தனையும்*  அமுது செய்திடப்பெறில்*

நான் ஒன்று நூறாயிரமாக் கொடுத்து*  பின்னும் ஆளும் செய்வன்*

தென்றல் மணங்கமழும்*  திருமாலிருஞ்சோலை தன்னுள் நின்றபிரான்*

அடியேன் மனத்தே*  வந்து நேர் படிலே.   9.7

 

காலை எழுந்திருந்து*  கரிய குருவிக் கணங்கள்*

மாலின் வரவு சொல்லி*  மருள் பாடுதல் மெய்ம்மை கொலோ*

சோலைமலைப் பெருமான்*  துவராபதி எம்பெருமான்*

ஆலின் இலைப் பெருமான்*  அவன் வார்த்தை உரைக்கின்றதே.   9.8

 

கோங்கு அலரும் பொழில்*  மாலிருஞ்சோலையில் கொன்றைகள் மேல்*

தூங்கு பொன் மாலைகளோடு*  உடனாய் நின்று தூங்குகின்றேன்*

பூங் கொள் திருமுகத்து*  மடுத்து ஊதிய சங்கொலியும்*

சார்ங்க வில் நாணொலியும்*  தலைப் பெய்வது எஞ்ஞான்று கொலோ! 9.9

 

##சந்தொடு கார் அகிலும் சுமந்து*  தடங்கள் பொருது*

வந்து இழியும் சிலம்பாறு உடை*  மாலிருஞ்சோலை நின்ற சுந்தரனை*

சுரும்பார் குழல் கோதை*  தொகுத்து உரைத்த*

செந்தமிழ் பத்தும் வல்லார்*  திருமாலடி சேர்வர்களே. (2)   9.10

 

பத்தாம் திருமொழி

##கார்க் கோடல் பூக்காள்! *  கார்க் கடல்  வண்ணன் என் மேல்* உம்மைப்-

போர்க் கோலம் செய்து*  போர விடுத்தவன் எங்குற்றான்?*

ஆர்க்கோ இனி நாம்*  பூசல் இடுவது?* அணி துழாய்த்-

தார்க்கு ஓடும் நெஞ்சந் தன்னை*  படைக்க வல்லேன் அந்தோ!*  (2)  10.1

 

மேல் தோன்றிப் பூக்காள்!*  மேல் உலகங்களின் மீதுபோய்*

மேல் தோன்றும் சோதி *  வேத முதல்வர் வலங்கையில்*

மேல் தோன்றும் ஆழியின்*  வெஞ்சுடர் போலச் சுடாது*

எம்மை மாற்றோலைப் பட்டவர் கூட்டத்து*  வைத்து கொள்கிற்றிரே.  10.2

 

கோவை மணாட்டி!*  நீ உன் கொழுங் கனி கொண்டு*

எம்மை ஆவி தொலைவியேல்*  வாயழகர் தம்மை அஞ்சுதும்*

பாவியேன் தோன்றி*  பாம்பணையார்க்கும் தம் பாம்புபோல்*

நாவும் இரண்டு உள ஆய்த்து*  நாண் இலியேனுக்கே.  10.3

 

முல்லைப் பிராட்டி!*  நீ உன் முறுவல்கள் கொண்டு* எம்மை-

அல்லல் விளைவியேல் *  ஆழி நங்காய்! உன் அடைக்கலம்*

கொல்லை அரக்கியை மூக்கு அரிந்திட்ட*  குமரனார்-

சொல்லும் பொய்யானால்* நானும் பிறந்தமை பொய்யன்றே. 10.4

 

பாடும் குயில்காள்!*  ஈது என்ன பாடல்?* நல்வேங்கட-

நாடர் நமக்கு ஒருவாழ்வு தந்தால்*  வந்து பாடுமின்*

ஆடும் கருளக் கொடி உடையார்*  வந்து அருள் செய்து*

கூடுவர் ஆயிடில்*  கூவி நும் பாட்டுகள் கேட்டுமே.     5

 

கண மா மயில்காள்!*  கண்ணபிரான் திருக்கோலம் போன்று*

அணி மா நடம் பயின்று ஆடுகின்றீர்க்கு*  அடி வீழ்கின்றேன்*

பணம் ஆடு அரவணை*  பற்பல காலமும் பள்ளிகொள்*

மணவாளர் நம்மை வைத்த பரிசு*  இது காண்மினே.   10.6

 

 

நடமாடித் தோகை விரிக்கின்ற*  மாமயில் காள்*

உம்மை நடமாட்டங் காண*  பாவியேன் நான் ஓர் முதல் இலேன்*

குடமாடு கூத்தன்*  கோவிந்தன் கோமிறை செய்து*

எம்மை உடைமாடு கொண்டான் *  உங்களுக்கு இனி ஒன்று போதுமே? 10.7

 

மழையே! மழையே! மண்புறம் பூசி*  உள்ளாய் நின்று *

மெழுகு ஊற்றினாற் போல்*  ஊற்று நல் வேங்கடத்துள் நின்ற*

அழகப் பிரானார் தம்மை*  என் நெஞ்சத்து அகப்பட தழுவ நின்று*

என்னைத் ததைத்துக் கொண்டு*  ஊற்றவும் வல்லையே?   10.8

 

கடலே! கடலே! உன்னைக் கடைந்து*  கலக்குறுத்து*

உடலுள் புகுந்து*  நின்று ஊறல் அறுத்தவற்கு*

என்னையும் உடலுள் புகுந்து*  நின்று ஊறல் அறுக்கின்ற மாயற்கு* என்-

நடலைகள் எல்லாம்*  நாகணைக்கே சென்று உரைத்தியே?  10.9

 

##நல்ல என் தோழி!*  நாக அணைமிசை நம் பரர்*

செல்வர் பெரியர்*  சிறுமானிடவர் நாம் செய்வதென்?*

வில்லி புதுவை*  விட்டு சித்தர் தங்கள் தேவரை*

வல்ல பரிசு வருவிப்பரேல்*  அது காண்டுமே.   (2) 10.10

 

பதினொன்றாம் திருமொழி

##தாம் உகக்கும் தம் கையில்* சங்கமே போலாவோ*

யாம் உகக்கும் எங் கையில்* சங்கமும் ஏந்து இழையீர்!*

தீ முகத்து நாகணைமேல்* சேரும் திருவரங்கர்*

ஆ!முகத்தை நோக்கார் ஆல்* அம்மனே! அம்மனே! (2) 11.1

 

எழிலுடைய அம்மனைமீர்!* என்னரங்கத்து இன்னமுதர்*

குழலழகர் வாயழகர்* கண்ணழகர்*

கொப்பூழில் எழு கமலப் பூவழகர்* எம்மானார்*

என்னுடைய கழல் வளையைத் தாமும்* கழல்வளையே ஆக்கினரே.  11.2

 

##பொங்கு ஓதம் சூழ்ந்த* புவனியும் விண் உலகும்*

அங்கு ஆதும் சோராமே* ஆள்கின்ற எம்பெருமான்*

செங்கோலுடைய* திருவரங்கச் செல்வனார்*

எங்கோல் வளையால் *இடர் தீர்வர் ஆகாதே?  (2) 11.

 

மச்சணி மாட* மதிளரங்கர் வாமனனார்*

பச்சைப் பசுந்தேவர்* தாம் பண்டு நீரேற்ற*

பிச்சைக் குறையாகி* என்னுடைய பெய் வளைமேல்*

இச்சை உடையரேல்* இத்தெருவே போதாரே?   11.4

 

பொல்லாக் குறளுருவாய்* பொற் கையில் நீர் ஏற்று*

எல்லா உலகும்* அளந்து கொண்ட எம்பெருமான்*

நல்லார்கள் வாழும்* நளிர் அரங்க நாகணையான்*

இல்லாதோம் கைப்பொருளும்* எய்துவான் ஒத்து உளனே.  11.5

 

கைப் பொருள்கள் முன்னமே* கைக் கொண்டார்*

காவிரி நீர் செய்ப் புரள ஓடும்* திருவரங்கச் செல்வனார்*

எப்பொருட்கும் நின்று ஆர்க்கும்* எய்தாது*

நான் மறையின் சொற் பொருளாய் நின்றார்* என் மெய்ப் பொருளும் கொண்டாரே. 11.6

 

 

உண்ணாது உறங்காது* ஒலிகடலை ஊடறுத்து*

பெண்ணாக்கை ஆப்புண்டு* தாமுற்ற பேதெல்லாம்*

திண்ணார் மதிள்சூழ்* திருவரங்கச் செல்வனார்*

எண்ணாதே தம்முடைய* நன்மைகளே எண்ணுவரே. 11.7

 

##பாசி தூர்த்துக் கிடந்த* பார் மகட்கு*

பண்டொரு நாள் மாசுடம்பில் நீர்வாரா* மானமிலாப் பன்றியாம்*

தேசுடைய தேவர்* திருவரங்கச் செல்வனார்*

பேசி இருப்பனகள்* பேர்க்கவும் பேராவே. (2)   11.8

 

கண்ணாலங் கோடித்து* கன்னி தன்னைக் கைப்பிடிப்பான்*

திண்ணார்ந்து இருந்த* சிசுபாலன் தேசழிந்து*

அண்ணாந்து இருக்கவே* ஆங்கவளைக் கைப்பிடித்த*

பெண்ணாளன் பேணும் ஊர்* பேரும் அரங்கமே.    11.9

 

செம்மை உடைய* திருவரங்கர் தாம் பணித்த*

மெய்ம்மைப் பெரு வார்த்தை* விட்டுசித்தர் கேட்டிருப்பர்*

தம்மை உகப்பாரை* தாமுகப்பர் என்னும் சொல்*

தம்மிடையே பொய்யானால்* சாதிப்பார் ஆர் இனியே!  (2)   11.10

 

பன்னிரண்டாம் திருமொழி

மற்று இருந்தீர்கட்கு அறியலாகா*  மாதவன் என்பதோர் அன்புதன்னை*

உற்று இருந்தேனுக்கு உரைப்பதெல்லாம்*  ஊமையரோடு செவிடர் வார்த்தை*

பெற்று இருந்தாளை ஒழியவே போய்*  பேர்த்து ஒரு தாயில் வளர்ந்த நம்பி*

மல் பொருந்தாமல் களமடைந்த*  மதுரைப் புறத்து என்னை உய்த்திடுமின். (2) 12.1

 

நாணி இனியோர் கருமமில்லை*  நால் அயலாரும் அறிந்தொழிந்தார்*

பாணியாது என்னை மருந்து செய்து*  பண்டு பண்டாக்க உறுதிர் ஆகில்*

மாணியுருவாய் உலகளந்த*  மாயனைக் காணில் தலை மறியும்*

ஆணையால் நீர் என்னைக் காக்க வேண்டில்*  ஆய்ப்பாடிக்கே என்னை உய்த்திடுமின். 12.2   

 

தந்தையும் தாயும் உற்றாரும் நிற்க*  தனி வழி போயினாள்!என்னும் சொல்லு*

வந்த பின்னைப் பழிகாப்பு அரிது*  மாயவன் வந்து உருக்காட்டுகின்றான்*

கொந்தளம் ஆக்கிப் பரக்கழித்து*  குறும்பு செய்வானோர் மகனைப்பெற்ற*

நந்தகோபாலன் கடைத்தலைக்கே*  நள்ளிருட்கண் என்னை உய்த்திடுமின்.   12.3

 

அங் கைத்தலத்து இடை ஆழிகொண்டான்*  அவன் முகத்தன்றி விழியேன் என்று*

செங் கச்சுக் கொண்டு கண் ஆடை ஆர்த்து*  சிறுமானிடவரைக் காணில் நாணும்*

கொங்கைத் தலம் இவை நோக்கிக் காணீர்*  கோவிந்தனுக்கு அல்லால் வாயில் போகா*

இங்குத்தை வாழ்வை ஒழியவே போய்*  யமுனைக் கரைக்கு என்னை உய்த்திடுமின். 12.4

 

ஆர்க்கும் என்னோய் இது அறியலாகாது*  அம்மனைமீர்! துழதிப்படாதே*

கார்க்கடல் வண்ணன் என்பான் ஒருவன்*  கைகண்ட யோகம் தடவத் தீரும்*

நீர்க்கரை நின்ற கடம்பை ஏறி*  காளியன் உச்சியில் நட்டம் பாய்ந்து*

போர்க்களமாக நிருத்தம் செய்த*  பொய்கைக் கரைக்கு என்னை உய்த்திடுமின். 12.5

 

கார்த் தண்முகிலும் கருவிளையும்*  காயா மலரும் கமலப்பூவும்*

ஈர்த்திடுகின்றன என்னை வந்திட்டு*  இருடீகேசன் பக்கல் போகேயென்று*

வேர்த்துப் பசித்து வயிறு அசைந்து*  வேண்டு அடிசில் உண்ணும் போது*

ஈதென்று பார்த்திருந்து நெடு நோக்குக் கொள்ளும்* பத்த விலோசனத்து உய்த்திடுமின். 12.6

 

 

வண்ணம் திரிவும் மனங்குழைவும்*  மானமிலாமையும் வாய் வெளுப்பும்*

உண்ணல் உறாமையும் உள் மெலிவும்*  ஓதநீர் வண்ணன் என்பான் ஒருவன்*

தண்ணந் துழாயென்னும் மாலை கொண்டு*  சூட்டத் தணியும் பிலம்பன் தன்னைப்*

பண் அழியப் பலதேவன் வென்ற*  பாண்டி வடத்து என்னை உய்த்திடுமின்.   12.7

 

கற்றினம் மேய்க்கவும் மேய்க்கப்பெற்றான்*  காடு வாழ் சாதியுமாகப் பெற்றான்*

பற்றி உரலிடை ஆப்புமுண்டான்*  பாவிகாள்! உங்களுக்கு ஏச்சுக் கொலோ?*

கற்றன பேசி வசவு உணாதே*  காலிகள் உய்ய மழைதடுத்து*

கொற்றக் குடையாக ஏந்தி நின்ற*  கோவர்த்தனத்து என்னை உய்த்திடுமின்.  12.8

 

கூட்டிலிருந்து கிளி எப்போதும்*  கோவிந்தா! கோவிந்தா! என்றழைக்கும்*

ஊட்டக் கொடாது செறுப்பன் ஆகில்*  உலகளந்தான்! என்று உயரக்கூவும்*

நாட்டில் தலைப்பழி எய்தி*  உங்கள் நன்மை இழந்து தலையிடாதே*

சூட்டு உயர் மாடங்கள் சூழ்ந்து தோன்றும்*  துவராபதிக்கு என்னை உய்த்திடுமின். 12.9  

 

##மன்னு மதுரை தொடக்கமாக*  வண் துவராபதி தன்னளவும்*

தன்னைத் தமர் உய்த்துப் பெய்ய வேண்டி*  தாழ்குழலாள் துணிந்த துணிவை*

பொன்னியல் மாடம் பொலிந்து தோன்றும்*  புதுவையர் கோன் விட்டுசித்தன் கோதை*

இன்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை*  ஏத்த வல்லார்க்கு இடம் வைகுந்தமே. (2)  12.10

 

 

பதிமூன்றாம் திருமொழி

##கண்ணன் என்னும் கருந்தெய்வம்*  காட்சி பழகிக் கிடப்பேனை*

புண்ணில் புளிப் பெய்தாற் போல்*  புறநின்று அழகு பேசாத*

பெண்ணின் வருத்தம் அறியாத*  பெருமான் அரையில் பீதக-

வண்ண ஆடை கொண்டு* என்னை வாட்டம் தணிய வீசீரே* (2)  13.1

 

பால் ஆல் இலையில் துயில்கொண்ட*  பரமன் வலைப் பட்டிருந்தேனை*

வேலால் துன்னம் பெய்தாற்போல்*  வேண்டிற்று எல்லாம் பேசாதே*

கோலால் நிரைமேய்த்து ஆயனாய்க்*  குடந்தைக் கிடந்த குடமாடி*

நீலார் தண்ணந் துழாய் கொண்டு*  என் நெறி மென் குழல் மேல் சூட்டீரே.   13.2

 

கஞ்சைக் காய்ந்த கருவில்லி*  கடைக் கணென்னும் சிறைக் கோலால்*

நெஞ்சூ ஊடுருவ ஏவுண்டு*  நிலையும் தளர்ந்து நைவேனை*

அஞ்சேல் என்னான் அவனொருவன்*  அவன் மார்பணிந்த வனமாலை*

வஞ்சியாதே தருமாகில்*  மார்பில் கொணர்ந்து புரட்டீரே.   13.3

 

ஆரே உலகத்து ஆற்றுவார்*  ஆயர் பாடி கவர்ந்துண்ணும்*

கார் ஏறு உழக்க உழக்குண்டு*  தளர்ந்தும் முறிந்தும் கிடப்பேனை*

ஆராவமுதம் அனையான் தன்*  அமுத வாயில் ஊறிய*

நீர்தான் கொணர்ந்து புலராமே*  பருக்கி இளைப்பை நீக்கீரே.   13.4

 

அழிலும் தொழிலும் உருக்காட்டான்*  அஞ்சேல் என்னான் அவன் ஒருவன்*

தழுவி முழுகிப் புகுந்தென்னை*  சுற்றிச் சுழன்று போகானால்*

தழையின் பொழில்வாய் நிரைப் பின்னே*  நெடுமாலூதி வருகின்ற*

குழலின் தொளைவாய் நீர்கொண்டு*  குளிர முகத்துத் தடவீரே.   13.5

 

நடையொன்றில்லா உலகத்து*  நந்தகோபன் மகனென்னும்*

கொடிய கடிய திருமாலால்*  குளப்புக் கூறு கொளப்பட்டு*

புடையும் பெயர கில்லேன் நான்*  போட்கன் மிதித்த அடிப் பாட்டில்*

பொடித்தான் கொணர்ந்து பூசீர்கள்*  போகா உயிர் என் உடம்பையே.   13.6

 

வெற்றிக் கருள கொடியான் தன்*  மீமீது ஆடா உலகத்து*

வெற்ற வெறிதே பெற்ற தாய்*  வேம்பே ஆக வளர்த்தாளே*

குற்றமற்ற முலை தன்னை*  குமரன் கோலப் பணைத்தோளோடு*

அற்ற குற்றம் அவை தீர*  அணைய அமுக்கிக் கட்டீரே.   13.7

 

உள்ளே உருகி நைவேனை*  உளளோ இலளோ என்னாத*

கொள்ளை கொள்ளிக் குறும்பனை*  கோவர்த்தனனைக் கண்டக்கால்*

கொள்ளும் பயன் ஒன்றில்லாத*  கொங்கை தன்னைக் கிழங்கோடும்*

அள்ளிப் பறித்திட்டு அவன் மார்வில்*  எறிந்து என் அழலை தீர்வேனே.   13.8

 

கொம்மை முலைகள் இடர் தீர*  கோவிந்தற்கு ஓர் குற்றேவல்*

இம்மைப் பிறவி செய்யாதே*  இனிப்போய்ச் செய்யும் தவந்தான் என்?*

செம்மை உடைய திருமார்வில்*  சேர்த்தானேலும் ஒரு ஞான்று*

மெய்ம்மை சொல்லி முகம் நோக்கி*  விடை தான் தருமேல் மிக நன்றே.  13.9

 

##அல்லல் விளைத்த பெருமானை*  ஆயர்பாடிக்கு அணி விளக்கை*

வில்லி புதுவை நகர் நம்பி*  விட்டுசித்தன் வியன் கோதை*

வில்லைத் தொலைத்த புருவத்தாள்*  வேட்கை உற்று மிக விரும்பும்*

சொல்லைத் துதிக்க வல்லார்கள்*  துன்பக் கடலுள் துவளாரே. (2)  13.10

 

பதினான்காம் திருமொழி

##பட்டி மேய்ந்து ஓர் காரேறு*  பலதேவற்கு ஓர் கீழ்க் கன்றாய்*

இட்டீறிட்டு விளையாடி*  இங்கே போதக் கண்டீரே?*

இட்டமான பசுக்களை*  இனிது மறித்து நீரூட்டி*

விட்டுக் கொண்டு விளையாட*  விருந்தா வனத்தே கண்டோமே. (2) 14.1

 

அனுங்க என்னைப் பிரிவு செய்து*  ஆயர் பாடி கவர்ந்துண்ணும்*

குணுங்கு நாறிக் குட்டேற்றை*  கோவர்த்தனனைக் கண்டீரே?*

கணங்களோடு மின் மேகம்*  கலந்தாற் போல் வனமாலை*

மினுங்க நின்று விளையாட*  விருந்தா வனத்தே கண்டோமே.   14.2

 

மாலாய்ப் பிறந்த நம்பியை*  மாலே செய்யும் மணாளனை*

ஏலாப் பொய்கள் உரைப்பானை*  இங்கே போதக் கண்டீரே?*

மேலால் பரந்த வெயில் காப்பான்*  வினதை சிறுவன் சிறகு என்னும்*

மேலாப்பின் கீழ் வருவானை*  விருந்தா வனத்தே கண்டோமே.   14.3

 

கார்த்தண் கமலக் கண்ணென்னும்*  நெடுங் கயிறு படுத்தி* என்னை

ஈர்த்துக் கொண்டு விளையாடும்*  ஈசன் தன்னைக் கண்டீரே?*

போர்த்த முத்தின் குப்பாய*  புகர்மால் யானைக் கன்றே போல்*

வேர்த்து நின்று விளையாட*  விருந்தா வனத்தே கண்டோமே.   14.4

 

##மாதவன் என் மணியினை*  வலையில் பிழைத்த பன்றி போல்*

ஏதும் ஒன்றும் கொளத் தாரா*  ஈசன் தன்னைக் கண்டீரே?*

பீதகவாடை உடை தாழ*  பெருங் கார்மேகக் கன்றே போல்*

வீதி ஆர வருவானை*  விருந்தா வனத்தே கண்டோமே. (2)  14.5

 

தருமம் அறியாக் குறும்பனை*  தன் கைச் சார்ங்கம் அதுவே போல்*

புருவ வட்டம் அழகிய*  பொருத்தம் இலியைக் கண்டீரே?*

உருவு கரிதாய் முகம் செய்தாய்*  உதயப் பருப் பதத்தின் மேல்*

விரியும் கதிரே போல்வானை*  விருந்தா வனத்தே கண்டோமே.   14.6

 

 

பொருத்த முடைய நம்பியை*  புறம் போல் உள்ளும் கரியானை*

கருத்தைப் பிழைத்து நின்ற* அக்கரு மாமுகிலைக் கண்டீரே?*

அருத்தித் தாரா கணங்களால்*  ஆரப் பெருகு வானம் போல்*

விருத்தம் பெரிதாய் வருவானை*  விருந்தா வனத்தே கண்டோமே.  14.7

 

வெளிய சங்கொன்று உடையானை*  பீதக வாடை உடையானை*

அளி நன்குடைய திருமாலை*  ஆழியானைக் கண்டீரே?*

களிவண்டு எங்கும் கலந்தாற்போல்*  கமழ் பூங்குழல்கள் தடந்தோள்மேல்*

மிளிர நின்று விளையாட*  விருந்தா வனத்தே கண்டோமே.   14.8

 

##நாட்டைப் படையென்று அயன் முதலாத் தந்த*  நளிர் மாமலர் உந்தி *

வீட்டைப் பண்ணி விளையாடும்*  விமலன் தன்னைக் கண்டீரே?*

காட்டை நாடித் தேனுகனும்*  களிறும் புள்ளும் உடன் மடிய*

வேட்டையாடி வருவானை*  விருந்தா வனத்தே கண்டோமே. (2)  14.9

 

##பருந் தாள்Û களிற்றுக்கு அருள் செய்த*  பரமன் தன்னை*

பாரின் மேல் விருந்தாவனத்தே கண்டமை*  விட்டுசித்தன் கோதைசொல்*

மருந்தாம் என்று தம் மனத்தே*  வைத்துக் கொண்டு வாழ்வார்கள்*

பெருந் தாளுடைய பிரானடிக்கீழ்*  பிரியாது என்றும் இருப்பாரே. (2)  14.10

 

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்