திருவரங்கத்தமுதனார்


திருவரங்கத்தமுதனார் திருவரங்கத்திலே மூங்கில் குடியில் பங்குனித் திங்கள் அஸ்த நன்னாளில் அவதரித்தவர். திருவரங்கக் கோவில் பணிகளைச் செய்துவந்த இவர், கோயில் புரோகிதராய் செல்வாக்கு பெற்று “பெரிய கோயில்நம்பி” எனும் பெயர் பெற்று திகழ்ந்து வந்தார். ஸ்ரீமத் ராமானுசர் கோயில் வழிபாட்டு முறையினை ஒழுங்குபடுத்த முற்பட்ட போது, திருவரங்க கோயில் சாவிகள் திருவரங்கத்தமுதனாரிடம் இருந்தன. ரஜோ குணத்தவரான திருவரங்கத்தமுதனார் யாருக்கும் கீழ்ப்படியாதவராய்,ராமானுஜரிடம் சாவிகளையும் நிர்வாகத்தையும் ஒப்படைக்காமல் காலம் தாழ்த்தினார். அந்த சமயத்தில் திருவரங்கத் தமுதனாரின் தாயார் பரமபதம் அடைந்தார். அப்பொழுது 11-ம் நாள் காரியங்களைச் செய்யத் தமது சீடர்களில் சிறந்த ஒரு பிராமணரை அனுப்பி அருளுமாறு ராமானுஜரிடம் அவர் விண்ணப்பித்தார்.

ராமானுஜரும் அவரின் அணுக்கச் சீடரான கூரத்தாழ்வாரை அனுப்பிவைத்தார். சிரார்த்தம் முடிந்து அமுது செய்த பின், “திருப்தியா” என்று திருவரங்கத்தமுதனார் கேட்க, கூரத்தாழ்வார் “திருப்தி இல்லை” என்று பதிலளித்தார். சிரார்த்தம் நிறைவு அடையாதோ என்று பதற்றத்தில் வேறு என்ன வேண்டும் என்று கேட்டார். கூரத்தாழ்வாரோ, திருவரங்கத்துக் கோயில் சாவிகளையும் கோவில் நிர்வாக உரிமையையும் புராண படனத்தையும் கோரினார். வேறு வழியின்றி கேட்டவற்றை அவரும் தர, கூரத்தாழ்வார் அதைக் கொண்டுவந்து, ஸ்ரீராமானுஜரின் பாதங்களில் சமர்ப்பித்தார். அதன் பின், திருவரங்கத்தமுதனாரும் கூரத்தாழ்வாரால் திருத்திப் பணி கொள்ளப்பட்டு ராமானுஜரின் பரம சிஷ்யனாக மாறினார்.

நூற்றந்தாதி

திருவரங்கத்தமுதனார் ராமானுஜரின் சிஷ்யனாக மாறிய பின், குருவின் பெருமையைப் போற்றும் விதமாக ராமானுஜரைப் பற்றி ஒரு அந்தாதி எழுதிக்கொண்டு போய் அவரிடம் கொடுத்தார். அதை வாங்கிப் பார்த்த ராமானுஜர் தன்னைப் பற்றிய போற்றுதல் அதிகமாக இருப்பதால், அந்த ஓலைச் சுவடியை வாங்கி வைத்துக்கொண்டார். அவரின் அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்று வருந்திய திருவரங்கத்தமுதனார், இன்னொரு முறை முயற்சித்தார். ஒவ்வொரு பாடலிலும் முதல் இரண்டு வரிகளில் ஆழ்வார்கள் மற்றும் ஆச்சாரியர்களின் பெருமையைச் சொல்லி, பிந்தைய இரண்டு வரிகளில் அவர்களின் சம்பந்தம் பெற்ற ராமானுஜரின் பெருமையை எழுதினார்.

இதை ஸ்ரீரங்கத்தில் உள்ள காட்டு அழகிய சிங்கர் சன்னதியில் அமர்ந்து அனைவருக்கும் சொல்லிய போது, தற்செயலாக ஸ்ரீ ராமானுஜர் அங்கு எழுந்தருளினார். அவரும் நூற்றந்தாதியை முழுமையாகக் கேட்டார். அவர் மறுத்துச் சொல்ல முடியாதபடி ஆழ்வார்கள் மற்றும் ஆச்சாரியர் பெருமை கூறப்பட்டபடியால், அதை ஏற்றுக்கொண்டார்.

105-வது பாடலினைச் சொல்லும்போது ராமானுஜர் உள்ளே நுழைந்ததால், 106,107 மற்றும்108 வது பாடல்கள் இரண்டு முறை சொல்லப்பட்டன. பொதுவாக கடைசி இரண்டு பாடல்களைத் திரும்பச் சொல்லும் பழக்கம் சாற்றுமுறை எனப்படும். ராமானுஜ நூற்றந்தாதியில் மட்டும் 3 பாடல்கள் சாற்றுமுறைப் பாடல்களாகப் பாடப்பட்டுவருகின்றன.

பூமன்னு மாது பொருந்திய மார்பன்

புகழ் மலிந்த

பாமன்னு மாறனடி பணிந்துய்ந்தவன்

பல்கலையோர்

தாம் மன்ன வந்தவிராமானுசன்

சரணாரவிந்தம்

நாம் மன்னி வாழ

நெஞ்சே சொல்லுவோமவன் நாமங்களே!

என்று முதல் பாடலில் திருமகள் என்றும் நித்யவாசம் செய்யும் திருமார்பை உடையவர் பெரியபெருமாள். அவரது திருக்கல்யாண குணங்களின் மூலம் ஏற்பட்ட அனுபவத்தினால் திருவாய்மொழியை அருளிச் செய்தவர் நம்மாழ்வார். அத்தகைய நம்மாழ்வாரின் திருவடிகளை அண்டி நின்ற ராமானுசர் என்று கூறும் பொழுது ராமானுஜரால் அதை மறுக்க இயலாதல்லவா! மேலும்

“ எம் பொய்கைப்பிரான் மறையின்

குருத்தின் பொருளையும்

செந்தமிழ் தன்னையும் கூட்டி”

என்று பொய்கையாழ்வார் பெருமையையும்,

“ இதயத் திருள்கெட ஞானமென்னும்

நிறைவிளக்கேற்றிய பூதத்திருவடி தாள்கள்”

என்று பூதத்தாழ்வார் பெருமையையும்

“ தன்னொடு மாயனைக் கண்டமை காட்டும்

தமிழ்த்தலைவன்

என்று பேயாழ்வார் பெருமையையும்,

“ செந்தமிழாலளித்த

பாரியலும் புகழ்ப் பாண் பெருமாள்”

என்று திருப்பாணாழ்வார் பெருமையையும்,

“சீ ரரங்கத் தையன் கழற்கணியும்

பரன் தாளன்றி ஆதரியா மெய்யன்

என்று தொண்டரடிப் பொடியாழ்வார் பெருமையையும்

“ கொல்லி காவலன் சொல்

பதிக்கும் கலைக்கவி பாடும்

பெரியவர் பாதங்களே

என்று குலசேகர ஆழ்வார் பெருமையையும்

“ சோராத காதல் பெருஞ்சுழிப்பால்

தொல்லை மாலையொன்றும்

பாராது அவனைப் பல்லாண்டென்று காப்பிடும்”

என்று பெரியாழ்வார் பெருமையினையும்

“ அரங்கர் மௌலி

சூழ்கின்ற மாலையைச்

சூடிக் கொடுத்தவள்

என்று ஆண்டாளின் பெருமையையும்

“ கலை பரவும் தனியானைத் தண்டமிழ் செய்த நீலன்

என்று திருமங்கை ஆழ்வாரின் பெருமையையும் சொல்லி, அவர்களின் அடிபற்றும் ராமானுஜர் என்று பெருமைப்படுத்துகிறார் திருவரங்கத்தமுதனார். மேலும் விசிஷ்டாத்வைத தத்துவத்தை ஸ்ரீமத் ராமானுஜர் நிலைநிறுத்தியதைப் பற்றிக் கூறும் போது, திருவரங்கத்தமுதனார்

“ உயிர்கள் மெய்விட்டு ஆதிப்பரனொடு

ஒன்றாமென்று சொல்லும் அவ்வல்லலெலாம் வாதில் வென்றான்

எம் ராமானுசன் மெய்ம்மதிக்கடலே!”

என்று ஆரவாரங்களை வாதில் வென்ற உண்மையான ஞானம் நிரம்பிய கடல் போன்றவர் என்று போற்றிப் புகழ்கிறார்.

“ காரேய் கருணையிராமானுச

இக்கடலிடத்தில்

ஆரேயறிபவர் நின்னருளின் தன்மை

மேகம் போன்று பலன் எதிர்பாராமல் அனைத்து உயிர்களுக்கும் அருளும் கருணை கொண்ட ராமானுசரே என்றும்

“ அற்புதன் செம்மையிராமானுசன்

என்னையாள வந்த கற்பகம்

கற்றவர் காமுறுசீலன்

என்றும், போற்றி மகிழும் திருவரங்கத்தமுதனார், “பிடியைத் தொடரும் களிறென்ன” தான் ராமானுசரின் திருவடிகளைத் தொடர அருள்புரிய வேண்டும் என்று கூறி

“ நின்ற வண் கீர்த்தியும் நீள் புனலும்

நிறை வேங்கடப் பொற்

குன்றமும் வைகுந்த நாடும்

குலவிய பாற்கடலும்

ராமானுசருக்கு எத்தனை இன்பம் தருமோ, அத்தனை இன்பம் அவரின் திருவடிகளைப் பற்றியதால் தனக்கு கிடைக்கும் என்று கூறுகிறார்.

நூற்றந்தாதியினை ஓதும் பழக்கம்

இந்த நூற்றந்தாதியினை திருவரங்கத்தில் ராமானுசரின் சிஷ்யர்கள் ஓதுவது வழக்கமாயிற்று. இதை தான் கேட்டு இன்புற வேண்டும் என்று விரும்பிய நம்பெருமாள், ராமானுஜரை மடத்திற்கு செல்லப் பணித்துவிட்டு, சப்தாவரணப் புறப்பாடின்போது, வாத்திய கோஷத்தையும் நிறுத்தி விட்டு, ராமானுச நூற்றந்தாதியை மட்டும் ஓதச் சொல்லிக் கேட்டு உகந்தருளினார்.

இன்றும் அவ்வாறே வாத்தியங்களை நிறுத்தி விட்டு, நூற்றந்தாதி ஓதும் பழக்கம் உள்ளது. பெரிய சந்நிதியிலும்,நாச்சியார் சந்நிதியிலும் இயற்பா அனுசந்தித்த உடனே நூற்றந்தாதியைப் பெருமாள் வரிசையுடன் கேட்டருளுகிறார். பெருமாள் திருவுள்ளத்தை அனுசரித்து எம்பெருமானார், முதலாயிரத்தில் கண்ணிநுண் சிறுதாம்பினைப் போல், இயற்பாவின் இறுதியில், ராமானுச நூற்றாந்தாதியினையும் அனுசந்திக்க வேண்டும் என ஏற்படுத்தினார். இவ்வளவு பெருமை பெற்றதாக இருப்பதால்தான், ராமானுஜ நூற்றந்தாதி “பிரபன்ன காயத்ரி” என்று வழங்கப்படுகிறது.

“ எந்தையெதிராசர் இவ்வுலகிலெந்தமக்கா

வந்துதித்த நாளென்னும் வாசியினால் இந்தத்

திருவாதிரை தன்னின் சீர்மைதனை நெஞ்செ

ஒருவாமலெப் பொழுதுமோர்

என்ற மணவாள மாமுனிகள் வாக்கிற்கு இணங்க,

உய்ய ஒரே வழி, உடையவர் திருவடி. ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய ஸ்ரீ ராமானுசரின் புகழ் பாடும் ராமானுச நூற்றந்தாதியினை அனைவரும் கற்று அனுபவிப்போம்.

“ நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே

வாழி எதிராசன்! வாழி எதிராசன்! வாழி எதிராசன்!