முதல் திருவந்தாதி


முதல் திருவந்தாதி தனியன்
முதலியாண்டான் அருளிச்செய்தது
கைதைசேர் பூம்பொழில்சூழ் கச்சிநகர் வந்துதித்த*

பொய்கைப்பிரான் கவிஞர் போரேறு* – வையத்து-

அடியவர் வாழ அருந்தமிழ் அந்தாதி*

படிவிளங்கச் செய்தான் பரிந்து.

ஸ்ரீ பொய்கையாழ்வார் அருளிச்செய்த முதல் திருவந்தாதி

2082:##

வையம் தகளியா* வார்கடலே நெய்யாக,*

வெய்ய கதிரோன் விளக்காக,* – செய்ய-

சுடராழி யானடிக்கே* சூட்டினேன்சொல் மாலை,*

இடராழி நீங்குகவே என்று. (2)                          1

 

2083:

என்று கடல்கடைந்தது* எவ்வுலகம் நீரேற்றது,*

ஒன்றும் அதனை உணரேன் நான்,* – அன்றுஅது-

அடைத்துடைத்துக்* கண்படுத்த ஆழி,* இதுநீ-

படைத்திடந்து உண்டுமிழ்ந்த பார்.                      2

 

2084:

பாரளவும் ஓரடிவைத்து* ஓரடியும் பாருடுத்த,*

நீரளவும் செல்ல நிமிர்ந்ததே* – சூருருவில்-

பேயளவு கண்ட* பெருமான்! அறிகிலேன்,*

நீயளவு கண்ட நெறி.                                   3

 

2085:

நெறிவாசல் தானேயாய்* நின்றானை,* ஐந்து-

பொறிவாசல் போர்க்கதவம் சார்த்தி,* – அறிவானாம்

ஆலமர நீழல்* அறம் நால்வர்க்கு அன்றுரைத்த,*

ஆலமமர் கண்டத்து அரன்.                               4

 

2086:

அரன் நாரணன் நாமம்* ஆன்விடை புள்ðர்த்தி,*

உரைநூல் மறையுறையும் கோயில்,* – வரைநீர்-

கருமம் அழிப்பளிப்புக்* கையதுவேல் நேமி,*

உருவமெரி கார்மேனி ஒன்று.                                5

 

2087:

ஒன்றும் மறந்தறியேன்* ஓதநீர் வண்ணனைநான்,*

இன்று மறப்பேனா ஏழைகாள்* – அன்று-

கருவரங்கத்துள் கிடந்து* கைதொழுதேன் கண்டேன்*

திருவரங்க மேயான் திசை.                             6

 

2088:

திசையும் திசையுறு தெய்வமும்,* தெய்வத்-

திசையும்* கருமங்கள் எல்லாம்* – அசைவில்சீர்க்-

கண்ணன் நெடுமால்* கடல்கடைந்த,* காரோத-

வண்ணன் படைத்த மயக்கு.                               7

 

2089:

மயங்க வலம்புரி வாய்வைத்து,* வானத்து-

இயங்கும்* எறிகதிரோன் தன்னை,*-முயங்குஅமருள்-

தோராழியால் மறைத்த* என்நீ திருமாலே,*

போராழிக் கையால் பொருது?                              8

2090:

பொருகோட்டோர் ஏனமாய்ப்* புக்கிடந்தாய்க்கு,* அன்றுஉன்-

ஒருகோட்டின் மேல் கிடந்ததன்றே,* – விரிதோட்ட-

சேவடியை நீட்டித்* திசைநடுங்க விண்துளங்க,*

மாவடிவின் நீயளந்த மண்?                             9

 

2091:

மண்ணும் மலையும்* மறிகடலும் மாருதமும்,*

விண்ணும் விழுங்கிய அது மெய்யென்பர்,* – எண்ணில்-

அலகளவு கண்ட* சீராழியாய்க்கு,* அன்றுஇவ்-

உலகளவும் உண்டோ உன் வாய்?                               10

 

2092:

வாய்அவனை அல்லது வாழ்த்தாது,* கையுலகம்-

தாயவனை அல்லது தாம்தொழா,* – பேய்முலைநஞ்சு-

ஊணாக உண்டான்* உருவொடு பேரல்லால்,*

காணாகண் கேளா செவி.                                   11

 

2093:

செவிவாய்கண் மூக்கு* உடல் என்று ஐம்புலனும்,* செந்தீ-

புவிகால்நீர் விண்பூதம் ஐந்தும்,* – அவியாத-

ஞானமும் வேள்வியும்* நல்லறமும் என்பரே,*

ஏனமாய் நின்றாற்கு இயல்வு.                                12

 

2094:

இயல்வாக ஈன்துழாயான் அடிக்கே செல்ல,*

முயல்வார் இயலமரர் முன்னம்,* – இயல்வாக-

நீதியால் ஓதி* நியமங்களால் பரவ,*

ஆதியாய் நின்றார் அவர்.                                 13

 

2095:

அவரவர் தாம்தாம்* அறிந்தவாறு ஏத்தி,*

இவரிவர் எம்பெருமான் என்று,* – சுவர்மிசைச்-

சார்த்தியும்* வைத்தும் தொழுவர்,* உலகளந்த-

மூர்த்தி உருவே முதல்.                                 14

 

2096:

முதலாவார் மூவரே* அம் மூவருள்ளும்*

முதலாவான்* மூரிநீர் வண்ணன்,* – முதலாய-

நல்லான் அருளல்லால்* நாமநீர் வையகத்து,*

பல்லார் அருளும் பழுது                                 15

 

2097:

பழுதே பலபகலும்* போயினவென்று,* அஞ்சி-

அழுதேன்* அரவணைமேல் கண்டு தொழுதேன்*

கடலோதம் காலலைப்பக்* கண்வளரும்,* செங்கண்

அடலோத வண்ணர் அடி.                                    16

 

2098:

அடியும் படிகடப்பத்* தோள்திசைமேல் செல்ல,*

முடியும் விசும்பளந்தது என்பர்,* – வடியுகிரால்-

ஈர்ந்தான்* இரணியனதாகம்,* இருஞ்சிறைப்புள்-

ஊர்ந்தான்* உலகளந்த நான்று                            17

 

2099:

நான்ற முலைத்தலை நஞ்சுண்டு,* உறிவெண்ணெய்-

தோன்ற உண்டான்* வென்றி சூழ்களிற்றை ஊன்றி,*

பொருதுடைவு கண்டானும்* புள்ளின்வாய் கீண்டானும்,*

மருதிடைபோய் மண்ணளந்த மால்.                         18

 

2100:

மாலும் கருங்கடலே!* என்நோற்றாய்,* வையகமுண்டு-

ஆலின் இலைத்துயின்ற ஆழியான்,* – கோலக்-

கருமேனிச்* செங்கண்மால் கண்படையுள்,* என்றும்-

திருமேனி நீதீண்டப் பெற்று!                            19

 

2101:

பெற்றார் தளைகழலப்* போர்ந்தோர் குறளுருவாய்,*

செற்றார் படிகடந்த செங்கண்மால்,* – நல்தாமரை-

மலர்ச் சேவடியை* வானவர்கை கூப்பி,*

நிரைமலர்கொண்டு* ஏத்துவரால் நின்று.                     20

 

2102:

நின்று நிலமங்கை* நீரேற்று மூவடியால்,*

சென்று திசையளந்த செங்கண்மாற்கு,* – என்றும்-

படையாழி புள்ðர்த்தி* பாம்பணையான் பாதம்,*

அடையாழி நெஞ்சே! அறி.                                 21

 

2103:

அறியும் உலகெல்லாம்* யானேயும் அல்லேன்,*

பொறிகொள் சிறையுவண மூர்ந்தாய்,* – வெறிகமழும்-

காம்பேய் மென்தோளி* கடைவெண்ணெய் உண்டாயை,*

தாம்பே கொண்டார்த்த தழும்பு.                          22

 

2104:

தழும்பிருந்த சார்ங்கநாண்* தோய்ந்த மாமங்கை,*

தழும்பிருந்த தாள்சகடம் சாடி,* – தழும்பிருந்த-

பூங்கோதையாள் வெருவப்* பொன்பெயரோன் மார்பிடந்த,*

வீங்கோத வண்ணர் விரல்.                                 23

 

2105:

விரலோடுவாய் தோய்ந்த வெண்ணெய்கண்டு,* ஆய்ச்சி-

உரலோடு* உறப்பிணித்த ஞான்று* – குரலோவாது-

ஏங்கி நினைந்து* அயலார் காண இருந்திலையே?,*

ஓங்கோத வண்ணா! உரை.                                   24

 

2106:

உரைமேல் கொண்டு* என்னுள்ளம் ஓவாது* எப்போதும்-

வரைமேல்* மரகதமே போல,* – திரைமேல்-

கிடந்தானைக்* கீண்டானை,* கேழலாய்ப் பூமி-

இடந்தானை* ஏத்தி எழும்.                              25

 

2107:

எழுவார் விடைகொள்வார்* ஈன்துழாயானை,*

வழுவா வகைநினைந்து வைகல் தொழுவார்,*

வினைச்சுடரை நந்துவிக்கும்* வேங்கடமே,* வானோர்-

மனச்சுடரைத் தூண்டும் மலை.                          26

 

2108:

மலையால் குடைகவித்து* மாவாய் பிளந்து,*

சிலையால் மராமரமேழ் செற்று,* – கொலையானைப்-

போர்க்கோடு ஒசித்தனவும்* பூங்குருந்தம் சாய்த்தனவும்*

காக்கோடு பற்றியான் கை.                                 27

 

2109:

கைய வலம்புரியும் நேமியும்,* கார்வண்ணத்-

தைய! மலர்மகள்* நின்னாகத்தாள்,* – செய்ய-

மறையான் நின் உந்தியான்* மாமதிள் மூன்றெய்த*

இறையான் நின் ஆகத்து இறை.                             28

 

2110:

இறையும் நிலனும்* இருவிசும்பும் காற்றும்,*

அறைபுனலும் செந்தீயும் ஆவான்,* – பிறைமருப்பின்-

பைங்கண்மால் யானை* படுதுயரம் காத்தளித்த,*

செங்கண்மால் கண்டாய் தெளி.                               29

 

2111:

தெளிதாக* உள்ளத்தைச் செந்நிறீஇ,*  ஞானத்-

தெளிதாக* நன்குணர்வார் சிந்தை,* – எளிதாகத்-

தாய்நாடு கன்றேபோல்* தண்துழாயான் அடிக்கே,*

போய்நாடிக் கொள்ளும் புரிந்து.                             30

 

2112:

புரியொருகை பற்றி* ஓர் பொன்னாழி ஏந்தி,*

அரியுருவும் ஆளுருவுமாகி,* – எரியுருவ-

வண்ணத்தான் மார்ப்பிடந்த* மாலடியை அல்லால்,* மற்று-

எண்ணத்தான் ஆமோ இமை?                                  31

 

2113:

இமையாத கண்ணால்* இருளகல நோக்கி,*

அமையாப் பொறிபுலன்கள்* ஐந்தும் நமையாமல்,*

ஆகத் தணைப்பார்* அணைவரே,* ஆயிரவாய்-

நாகத் தணையான் நகர்.                               32

 

2114:

நகர மருள்புரிந்து* நான்முகற்கு, பூமேல்*

பகர மறைபயந்த பண்பன், – பெயரினையே*

புந்தியால் சிந்தியாது* ஓதி உருவெண்ணும்,*

அந்தியாலாம் பயனங்கென்?                                33

 

2115:

என்னொருவர் மெய்யென்பர்* ஏழுலகுண்டு* ஆலிலையில்-

முன்னொருவன் ஆய முகில்வண்ணா,* – நின்னுருகிப்-

பேய்த்தாய் முலைதந்தாள்* பேர்ந்திலளால்,* பேரமர்க்கண்-

ஆய்த்தாய்* முலைதந்த ஆறு?                            34

 

2116:

ஆறிய அன்பில்* அடியார்தம் ஆர்வத்தால்,*

கூறிய குற்றமாக் கொள்ளல்நீ – தேறி,*

நெடியோய்! அடி* அடைதற்கன்றே,* ஈரைந்து-

முடியான் படைத்த முரண்?                               35

 

2117:

முரணை வலிதொலைதற்கு ஆமன்றே,* முன்னம்-

தரணி* தனதாகத் தானே* – இரணியனைப்-

புண்நிரந்த வள்ளுகிரால்* பொன்னாழிக் கையால்* நீ-

மண்ணிரந்து கொண்ட வகை?                                36

 

2118:

வகையறு நுண்கேள்வி வாய்வார்கள்,* நாளும்-

புகைவிளக்கும்* பூம்புனலும் ஏந்தி,* – திசைதிசையின்-

வேதியர்கள்* சென்றிறைஞ்சும் வேங்கடமே,* வெண்சங்கம்-

ஊதியவாய்* மால்உகந்த ஊர்.                            37

 

2119:

ஊரும் வரியரவம்* ஒண்குறவர் மால்யானை,*

பேர எறிந்த பெருமணியை,* – காருடைய-

மின்னென்று* புற்றடையும் வேங்கடமே,* மேலசுரர்-

என்னென்ற மால திடம்.                                   38

 

2120:

இடந்தது பூமி* எடுத்தது குன்றம்,*

கடந்தது கஞ்சனைமுன் அஞ்ச,* – கிடந்ததும்-

நீரோத மாகடலே* நின்றதுவும் வேங்கடமே,*

பேரோத வண்ணர் பெரிது.                                 39

 

2121:

பெருவில் பகழிக்* குறவர்கைச் செந்தீ*

வெருவிப் புனம்துறந்த வேழம்,* – இருவிசும்பில்-

மீன்வீழக்* கண்டஞ்சும் வேங்கடமே,* மேலசுரர்-

கோன்வீழ கண்டுகந்தான் குன்று.                          40

 

2122:

குன்றனைய குற்றஞ் செயினும்* குணங்கொள்ளும்*

இன்று முதலாக என்னெஞ்சே,* – என்றும்-

புறனுரையே ஆயினும்* பொன்னாழிக் கையான்*

திறனுரையே சிந்தித் திரு                             41

 

2123:

திருமகளும் மண்மகளும்* ஆய்மகளும் சேர்ந்தால்*

திருமகட்கே தீர்ந்தவாறு என்கொல்,* – திருமகள்மேல்-

பாலோதம் சிந்தப்* பட நாகணைக் கிடந்த,*

மாலோத வண்ணர் மனம்?                                  42

 

2124:

மனமாசு தீரும்* அறுவினையும் சாரா,*

தனமாய தானேகை கூடும்,* – புனமேய-

பூந்துழாயான் அடிக்கே* போதொடு நீரேந்தி,*

தாம்தொழா நிற்பார் தமர்.                            43

 

2125:

தமர்உகந்தது எவ்வுருவம்* அவ்வுருவம் தானே,*

தமர்உகந்தது எப்பேர் மற்றப்பேர்,* – தமர்உகந்து-

எவ்வண்ணம் சிந்தித்து* இமையாது இருப்பரே,*

அவ்வண்ணம் ஆழியானாம்.                                 44

 

2126:

ஆமே யமரர்க்கு* அறிய? அதுநிற்க,*

நாமே அறிகிற்போம் நன்னெஞ்சே,* – பூமேய-

மாதவத்தோன் தாள்பணிந்த* வாளரக்கன் நீள்முடியை,*

பாதமத்தால் எண்ணினான் பண்பு.                          45

 

2127:

பண்புரிந்த நான்மறையோன்* சென்னிப் பலியேற்ற,*

வெண்புரிநூல் மார்பன் வினைதீர,* – புண்புரிந்த-

ஆகத்தான்* தாள்பணிவார் கண்டீர்,* அமரர்தம்-

போகத்தால் பூமி ஆள்வார்.                               46

 

2128:

வாரி சுருக்கி* மதக்களிறு ஐந்தினையும்,*

சேரி திரியாமல் செந்நிறீஇ,* – கூரிய-

மெய்ஞ்ஞானத்தால்* உணர்வார் காண்பரே,* மேலொருநாள்-

கைந்நாகம் காத்தான் கழல்.                          47

 

2129:

கழலொன்று எடுத்து* ஒருகை சுற்றியோர் கைமேல்,*

சுழலும் சுராசுரர்கள் அஞ்ச,* – அழலும்-

செருவாழி ஏந்தினான்* சேவடிக்கே செல்ல,*

மருவாழி நெஞ்சே! மகிழ்.                              48

 

2130:

மகிழல கொன்றேபோல்* மாறும் பல்யாக்கை,*

நெகிழ முயல்கிற்பார்க்கு அல்லால்,* – முகில்விரிந்த-

சோதிபோல் தோன்றும்* சுடர்ப்பொன் நெடுமுடி,* எம்-

ஆதி காண்பார்க்கும் அரிது.                              49

 

2131:

அரிய புலனைந்து அடக்கி* ஆய்மலர்கொண்டு,* ஆர்வம்-

புரியப் பரிசினால் புல்கில்,* – பெரியனாய்-

மாற்றாது* வீற்றிருந்த மாவலிபால்,* வண்கைநீர்-

ஏற்றானைக் காண்பது எளிது.                              50

 

2132:

எளிதில் இரண்டடியும்* காண்பதற்கு,* என்னுள்ளம்-

தெளியத் தெளிந்தொழியும் செவ்வே,* – களியில்-

பொருந்தாதவனைப்* பொரலுற்று,* அரியாய்-

இருந்தான் திருநாமம் எண்.                              51

 

2133:

எண்மர் பதினொருவர்* ஈரறுவர் ஓரிருவர்,*

வண்ண மலரேந்தி வைகலும்,* – நண்ணி-

ஒரு மாலையால் பரவி* ஓவாது,* எப்போதும்-

திருமாலைக் கைதொழுவர் சென்று.                        52

 

2134:##

சென்றால் குடையாம்* இருந்தால் சிங்காசனமாம்,*

நின்றால் மரவடியாம் நீள்கடலுள்,* – என்றும்-

புணையாம் மணிவிளக்காம்* பூம்பட்டாம் புல்கும்-

அணையாம்,* திருமாற்கு அரவு. (2)                         53

 

2135:

அரவம் அடல்வேழம்* ஆன்குருந்தம் புள்வாய்*

குரவை குடம்முலை மல்குன்றம்,* – கரவின்றி-

விட்டிறுத்து மேய்த்தொசித்துக்* கீண்டு கோத்தாடி,* உண்-

டட்டெடுத்த செங்கண் அவன்.                                54

 

2136:

அவன் தமர்* எவ்வினையர் ஆகிலும்,* எங்கோன்-

அவன்தமரே* என்று ஒழிவது அல்லால்,* – நமன்தமரால்-

ஆராயப் பட்டு* அறியார் கண்டீர்,* அரவணைமேல்-

பேராயற்கு ஆட்பட்டார் பேர்.                               55

 

2137:

பேரே வரப்பிதற்றல்* அல்லால் எம் பெம்மானை,*

ஆரே அறிவார்? அதுநிற்க,* – நேரே-

கடிக்கமலத்து உள்ளிருந்தும்* காண்கிலான்,* கண்ணன்-

அடிக்கமலம் தன்னை அயன்.                              56

 

2138:

அயல்நின்ற வல்வினையை* அஞ்சினேன் அஞ்சி,*

உயநின் திருவடியே சேர்வான்,* – நயநின்ற-

நன்மாலை கொண்டு* நமோநாரணாஎன்னும்,*

சொன்மாலை கற்றேன் தொழுது.                             57

 

2139:

தொழுது மலர்க்கொண்டு* தூபம்கை ஏந்தி,*

எழுதும் எழுவாழி நெஞ்சே,* – பழுதின்றி-

மந்திரங்கள் கற்பனவும்* மாலடியே கைதொழுவான்,*

அந்தரம் ஒன்றில்லை அடை.                                 58

 

2140:

அடைந்த அருவினையோடு* அல்லல்நோய் பாவம்,*

மிடைந்தவை மீண்டொழிய வேண்டில்,* – நுடங்கிடையை-

முன்னிலங்கை வைத்தான்* முரணழிய,* முன்னொருநாள்-

தன்வில் அங்கை வைத்தான் சரண்.                          59

 

2141:

சரணா மறைபயந்த* தாமரையானோடு,*

மரணாய மன்னுயிர்கட் கெல்லாம்,* – அரணாய-

பேராழி கொண்ட* பிரானன்றி மற்றறியாது,*

ஓராழி சூழ்ந்த உலகு.                               60

 

2142:

உலகும்* உலகிறந்த ஊழியும்,* ஒண்கேழ்-

விலகு கருங்கடலும் வெற்பும்,* – உலகினில்-

செந்தீயும்* மாருதமும் வானும்,* திருமால்தன்-

புந்தியிலாய புணர்ப்பு.                                61

 

2143:

புணர்மருதின் ஊடுபோய்ப்* பூங்குருந்தம் சாய்த்து,*

மணமருவ மால் விடையேழ் செற்று,* – கணம்வெருவ-

ஏழுலகும் தாயினவும்* எண்திசையும் போயினவும்,*

சூழரவப் பொங்கணையான் தோள்.                          62

 

2144:

தோளவனை அல்லால் தொழா,* என் செவியிரண்டும்,*

கேளவனது இன்மொழியே கேட்டிருக்கும்,* – நாநாளும்-

கோணா கணையான்* கூரைகழலே கூறுவதே,*

நாணாமை நள்ளேன் நயம்.                                 63

 

2145:

நயவேன் பிறர்பொருளை* நள்ளேன் கீழாரோடு,*

உயவேன் உயர்ந்தவரோடு அல்லால்,* – வியவேன்-

திருமாலை அல்லது* தெய்வம் என்றேத்தேன்,*

வருமாறு என் நம்மேல் வினை?                                64

 

2146:

வினையால் அடர்ப்படார்* வெந்நரகில் சேரார்,*

தினையேனும் தீக்கதிக்கண் செல்லார்,* – நினைதற்-

கரியானைச்* சேயானை,* ஆயிரம்பேர்ச் செங்கண்-

கரியானைக்* கைதொழுதக் கால்.                         65

 

2147:

காலை எழுந்து* உலகம் கற்பனவும்,* கற்றுணர்ந்த-

மேலைத் தலைமறையோர்* வேட்பனவும்,* – வேலைக்கண்-

ஓராழியான் அடியே* ஓதுவதும் ஓர்ப்பனவும்,*

பேராழி கொண்டான் பெயர்.                                 66

 

2148:

பெயரும் கருங்கடலே நோக்கும்ஆறு,* ஒண்பூ-

உயரும்* கதிரவனே நோக்கும்,* –உயிரும்-

தருமனையே நோக்கும்* ஒண்தாமரையாள் கேள்வன்,*

ஒருவனையே நோக்கும் உணர்வு.                               67

 

2149:

உணர்வார் ஆர் உன்பெருமை?* ஊழி தோறூழி,*

உணர்வார் ஆர் உன்னுருவம் தன்னை?,* உணர்வாரார்-

விண்ணகத்தாய்!* மண்ணகத்தாய்!* வேங்கடத்தாய்!* நால்வேதப்-

பண்ணகத்தாய்!* நீகிடந்த பால்?                        68

 

2150:

பாலன் தனதுருவாய்* ஏழுலகுண்டு,* ஆலிலையின்-

மேலன்று நீவளர்ந்த மெய்யென்பர்,* – ஆலன்று-

வேலை நீருள்ளதோ* விண்ணதோ மண்ணதோ?*

சோலைசூழ் குன்றெடுத்தாய் சொல்லு.                         69

 

2151:

சொல்லுந் தனையும்* தொழுமின் விழுமுடம்பு,*

செல்லுந் தனையும் திருமாலை,* – நல்லிதழ்த்-

தாமத்தால் வேள்வியால்* தந்திரத்தால் மந்திரத்தால்,*

நாமத்தால் ஏத்திதிரேல் நன்று.                          70

 

2152:

நன்று பிணிமூப்புக்* கையகற்றி நான்கூழி,*

நின்று நிலமுழுதும் ஆண்டாலும்,* என்றும்-

விடலாழி நெஞ்சமே!* வேண்டினேன் கண்டாய்,*

அடலாழி கொண்டான் மாட்டுஅன்பு.                            71

 

2153:

அன்புஆழியானை* அணுகென்னும், நா அவன்தன்*

பண்பாழித் தோள்பரவி ஏத்தென்னும்,* முன்பூழி-

காணானைக்* காணென்னும் கண்செவி கேளென்னும்*

பூணாரம் பூண்டான் புகழ்.                              72

 

2154:

புகழ்வாய் பழிப்பாய்* நீ பூந்துழாயானை,*

இகழ்வாய் கருதுவாய் நெஞ்சே,* – திகழ்நீர்க்-

கடலும் மலையும்* இருவிசும்பும் காற்றும்,*

உடலும் உயிரும் ஏற்றான்.                                    73

 

2155:

ஏற்றான் புள்ðர்த்தான்* எயிலெரித்தான் மார்விடந்தான்*

நீற்றான் நிழல்மணி வண்ணத்தான்,* – கூற்றொருபால்-

மங்கையான்* பூமகளான் வார்சடையான்,* நீண்முடியான்-

கங்கையான்* நீள்கழலான் காப்பு.                        74

 

2156:

காப்பு உன்னையுன்னக்* கழியும் அருவினைகள்,*

ஆப்பு உன்னையுன்ன அவிழ்ந்தொழியும்* – மூப்புன்னைச்-

சிந்திப்பார்க்கு* இல்லை திருமாலே,* நின்னடியை-

வந்திப்பார்* காண்பர் வழி.                              75

 

2157:

வழிநின்று* நின்னைத் தொழுவார்,* வழுவா-

மொழிநின்ற மூர்த்தியரே யாவர்,* – பழுதொன்றும்-

வாராத வண்ணமே* விண்கொடுக்கும்,* மண்ணளந்த-

சீரான் திருவேங்கடம்.                                  76

 

2158:

வேங்கடமும்* விண்ணகரும் வெஃகாவும்,* அஃகாத-

பூங்கிடங்கில் நீள்கோவல் பொன்னகரும்,* – நான்கிடத்தும்-

நின்றான் இருந்தான்* கிடந்தான் நடந்தானே,*

என்றால் கெடுமாம் இடர்.                                   77

 

2159:

இடர் ஆர் படுவார்?* எழுநெஞ்சே,* வேழம்-

தொடர்வான் கொடுமுதலை சூழ்ந்த,* – படமுடை-

பைந்நாகப் பள்ளியான்* பாதமே கைதொழுதும்,*

கொய்ந்நாகப் பூம்போது கொண்டு.                           78

 

2160:

கொண்டானை அல்லால்* கொடுத்தாரை யார்பழிப்பார்,*

மண்தாஎனவிரந்து மாவலியை,* ஒண்தாரை-

நீரங்கை தோய* நிமிர்ந்திலையே,* நீள்விசும்பில்-

ஆரங்கை தோய அடுத்து?                                 79

 

2161:

அடுத்த கடும்பகைஞர்க்கு* ஆற்றேன் என்றோடி,*

படுத்த பெரும்பாழி சூழ்ந்த* – விடத்தரவை,*

வல்லாளன் கைக்கொடுத்த* மாமேனி மாயவனுக்கு,*

அல்லாதும் ஆவரோ ஆள்?                                   80

 

2162:

ஆளமர் வென்றி* அடுகளத்துள் அஞ்ஞான்று,*

வாளமர் வேண்டி வரைநட்டு,* – நீளரவைச்-

சுற்றிக் கடைந்தான்* பெயரன்றே,* தொன்னரகைப்-

பற்றிக் கடத்தும் படை?                                 81

 

2163:

படையாரும் வாள்கண்ணார்* பாரசிநாள்,* பைம்பூந்-

தொடையலோடு ஏந்திய தூபம்,* – இடையிடையின்-

மீன்மாய* மாசூணும் வேங்கடமே,* மேலொருநாள்-

மான்மாய* எய்தான் வரை.                                82

 

2164:

வரைகுடைதோள் காம்பாக* ஆநிரைகாத்து,* ஆயர்-

நிரைவிடையேழ்* செற்றவாறு என்னே,* – உரவுடைய-

நீராழி உள்கிடந்து* நேரா நிசாசரர்மேல்,*

பேராழி கொண்ட பிரான்?                                  83

 

2165:

பிரான்! உன் பெருமை* பிறர் ஆரறிவார்?,*

உராய் உலகளந்த ஞான்று,* – வராகத்-

தெயிற்றளவு* போதாவாறு என்கொலோ,* எந்தை-

அடிக்களவு போந்த படி?                                 84

 

2166:

படிகண்டு அறிதியே* பாம்பணையினான்,* புட்-

கொடி கண்டறிதியே? கூறாய்,* – வடிவில்-

பொறியைந்தும் உள்ளடக்கிப்* போதொடு நீரேந்தி,*

நெறிநின்ற நெஞ்சமே! நீ.                               85

 

2167:

நீயும் திருமகளும் நின்றாயால்,* குன்றெடுத்துப்-

பாயும்* பனிமறைத்த பண்பாளா,* – வாயில்-

கடைகழியா உள்புகாக்* காமர்பூங் கோவல்*

இடைகழியே பற்றி இனி.                                 86

 

2168:

இனியார் புகுவார்* எழுநரக வாசல்?*

முனியாது மூரித்தாள் கோமின்,* – கனிசாயக்-

கன்றெறிந்த தோளான்* கனைகழலே காண்பதற்கு,*

நன்கறிந்த நாவலம்சூழ் நாடு.                       87

 

2169:

நாடிலும்* நின்னடியே நாடுவன்,* நாடோறும்-

பாடிலும்* நின்புகழே பாடுவன்,* சூடிலும்-

பொன்னாழி ஏந்தினான்* பொன்னடியே சூடுவேற்கு,*

என்னாகில் என்னே எனக்கு?                                   88

 

2170:

எனக்காவார்* ஆரொருவரே,* எம்பெருமான்-

தனக்காவான்* தானே மற்றல்லால்,* – புனக்காயாம்-

பூமேனி காணப்* பொதியவிழும் பூவைப்பூ,*

மாமேனி காட்டும் வரம்.                                  89

 

2171:

வரத்தால் வலிநினைந்து* மாதவ!நின் பாதம்,*

சிரத்தால் வணங்கானா மென்றே,* – உரத்தினால்-

ஈரரியாய்* நேர்வலியோனாய இரணியனை,*

ஓரரியாய் நீயிடந்தது ஊன்?                            90

 

2172:

ஊனக் குரம்பையின்* உள்புக்கு இருள்நீக்கி,*

ஞானச் சுடர்கொளÖஇ நாள்தோறும்,* – ஏனத்து-

உருவா உலகிடந்த* ஊழியான் பாதம்,*

மருவாதார்க்கு உண்டாமோ வான்?                            91

 

2173:

வானாகித் தீயாய்* மறிகடலாய் மாருதமாய்*

தேனாகிப் பாலாம் திருமாலே,* – ஆனாய்ச்சி-

வெண்ணெய் விழுங்க* நிறையுமே,* முன்னொருநாள்-

மண்ணை உமிழ்ந்த வயிறு?                                92

 

2174:

வயிறழல வாளுருவி* வந்தானை அஞ்ச*

எயிறிலக வாய்மடுத்தது என்நீ,* – பொறியுகிரால்-

பூவடியை ஈடழித்த* பொன்னாழிக் கையா,* நின்-

சேவடிமேல் ஈடழியச் செற்று?                             93

 

2175:

செற்றெழுந்து தீவிழித்துச்* சென்ற இந்த ஏழுலகும்,*

மற்றிவை ஆவென்று வாயங்காந்து,* முற்றும்-

மறையவற்குக் காட்டிய* மாயவனை அல்லால்,*

இறையேனும் ஏத்தாதென் நா.                               94

 

2176:

நாவாயில் உண்டே* நமோ நாரணாஎன்று,*

ஓவாது உரைக்கும் உரையுண்டே,* – மூவாத-

மாக்கதிக்கண் செல்லும்* வகையுண்டே,* என்னொருவர்-

தீக்கதிக்கண் செல்லும் திறம்?                           95

 

2177:

திறம்பாது என்னெஞ்சமே!* செங்கண்மால் கண்டாய்,*

அறம்பாவம் என்றிரண்டும் ஆவான்,* புறந்தான்இம்-

மண்தான்* மறிகடல்தான் மாருதந்தான்,* வான்தானே,-

கண்டாய்* கடைக்கட் பிடி.                                 96

 

2178:

பிடிசேர் களிறளித்த பேராளா,* உன்தன்-

அடிசேர்ந்து அருள்பெற்றாள் அன்றே,* – பொடிசேர்-

அனல்கங்கை ஏற்றான்* அவிர்சடைமேல் பாய்ந்த,*

புனல்கங்கை என்னும்பேர்ப் பொன்?                             97

 

2179:

பொன்திகழு மேனிப்* புரிசடையம் புண்ணியனும்,*

நின்றுலகம் தாய நெடுமாலும்,* – என்றும்-

இருவரங்கத்தால்* திரிவரேலும்,* ஒருவன்-

ஒருவன் அங்கத்து என்றும் உளன்.                              98

 

2180:##

உளன்கண்டாய் நன்னெஞ்சே!* உத்தமன் என்றும்-

உளன்கண்டாய்,* உள்ðவார் உள்ளத்து-உளன்கண்டாய்,*

வெள்ளத்தின் உள்ளானும்* வேங்கடத்து மேயானும்,*

உள்ளத்தின் உள்ளான் என்று ஓர்.                                 99

 

2181:##

ஓரடியும் சாடுதைத்த* ஒண்மலர்ச் சேவடியும்,*

ஈரடியும் காணலாம் என்னெஞ்சே!* – ஓரடியில்-

தாயவனைக் கேசவனைத்* தண்துழாய் மாலைசேர்,*

மாயவனையே மனத்து வை. (2)                          100

 

பொய்கையாழ்வார் திருவடிகளே சரணம்