மதுரகவி ஆழ்வார்


மதுரகவி ஆழ்வார்
மதுரகவி ஆழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர்.
அவர் திருக்குருகூர் என்னும் ஆழ்வார்திருநகரி அருகிலுள்ள திருக்கோளூரில் சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தார். நம்மாழ்வார்க்கு முன் பிறந்தவர்.
இவர் நம்மாழ்வாரை குருவாக அடைந்தது ஓர் சுவாரஸ்யமான நிகழ்வாக இருக்கிறது. ஒரு முறை வடநாட்டில் உள்ள திவ்ய தேசங்களுக்கு யாத்திரை மேற்கொண்டு பல கோயில்களுக்கு சென்று தரிசனம் செய்து வந்தார். ஒரு சமயத்தில் அயோத்தியில் தங்கி இராம பிரானையும் பிராட்டியையும் மங்களாசாசனம் செய்து வந்த காலத்தில் ஒரு நாள் இரவு, தன் சொந்த ஊரான திருக்கோளூர் பெருமான் நினைவு பெற்றவராய் தெற்கு நோக்கி தொழுதார். அப்பொழுது வானில் ஒரு அதிசயமான ஒளிக்கற்றையை கண்ணுற்றார். இந்த நிகழ்ச்சி அடுத்த சில நாட்களும் தொடர்ந்து நடைபெற, அந்த அற்புதமான ஜோதி தனக்கு ஏதோ செய்தி தெரிவிப்பதாக உணர்ந்தார். தொடர்ந்து அந்த அதிசயமான ஜோதி தெற்கு நோக்கி பயணம் செய்வதை உணர்ந்து, தெய்வத்தின் செயல் என எண்ணி அதனை பின் தொடர்ந்தார்.
பல நாட்கள் கழித்து திருக்கோளூர் அருகில் உள்ள தென் குருகூர் நகரை அடைந்தார். “இந்த ஊரில் என்ன விசேஷம்?” என்று ஊர் மக்களை வினவ, அவர்கள் “ஆதிநாதர் கோயிலில் புளிய மரம் விசேஷம். நீரே சென்று காணும்” என்று பதில் உரைக்க உடனே கோயிலுக்கு விரைந்து சென்று ஓர் அதிசயத்தைக் கண்டார். புளிய மரத்தின் பொந்தில் இருந்து கொண்டு, சாதாரணமாக உயிர்களுக்கு ஏற்படும் பசி, தாகம் எதுவும் இல்லாமல், எப்பொழுதும் இறையனுபவத்தில் திளைத்திருந்த நம்மாழ்வாரைக் கண்டார். கண்ட மாத்திரத்தில் பிறவிப் பயனை அடைந்தோம் என்று பேருவகை எய்தினார். நம்மாழ்வாருடன் உரையாடல் மேற்கொண்டு, ஆத்ம தத்துவம் குறித்து அதுகாறும் தனக்கு இருந்த அக்ஞானம் நீங்கப் பெற்றவராய், “அடியேனை ஆட்கொண்டு அருள வேண்டும்” என்று நம்மாழ்வாரிடம் சரணம் அடைந்தார்.
இவர் பெருமானைத் தன் பாசுரங்களால் பாடாமல் தன் ஆசாரியனான நம்மாழ்வாரையே சிறந்த தெய்வமாக எண்ணி அவரைப் போற்றியே பதினோரு பாசுரங்களைப் பாடியுள்ளார்.