அத்தியாயம் ஆறு: தியான யோகம்
6.1
ஸ்ரீ-பகவான் உவாச
அனாஷ்ரித: கர்ம-பலம்
கார்யம் கர்ம கரோதி ய:
ஸ ஸன்ன்யாஸீ ச யோகீ ச
ந நிரக்னிர் ந சாக்ரிய:
புருஷோத்தமரான முழு முதற்கடவுள் கூறினார்: செயலின் பலன்களில் பற்றற்று, கடமைக்காகச் செயலாற்றுபவனே சந்நியாசியும் உண்மையான யோகியுமாகிறானே தவிர, வேள்வி நெருப்பை மூட்டாதவனும் செயலற்றவனுமல்ல.
6.2
யம் ஸன்ன்யாஸம் இதி ப்ராஹூர்
யோகம் தம் வித்தி பாண்டவ
ந ஹ்ய-ஸன்ன்யஸ்த-ஸங்கல்போ
யோகீ பவதி கஷ்சன
பாண்டுவின் மகனே, புலனுகர்ச்சிக்கான இச்சைகளைத் துறக்காத எவனுமே யோகியாக முடியாது என்பதால், துறவு என்று அழைக்கப்படுவதும், யோகமும் (பரமனுடன் தொடர்பு கொள்ளுதலும்) ஒன்றே என்பதை நீ அறிய வேண்டும்.
6.3
ஆருருக்ஷோர் முனேர் யோகம்
கர்ம காரணம் உத்யதே
யோகா ரூடஸ்ய தஸ்யைவ
ஷம: காரணம் உத்யதே
அஷ்டாங்க யோக முறையின் புது மாணவனுக்கு, செயலே, ‘வழி ‘யாகக் கூறப்படுகின்றது. ஆனால் யோகத்தில் முன்னேறியவனக்கு, ஜடச் செயல்களைத் துறத்தலே, ‘வழி ‘யாகக் கூறப்படுகின்றது.
6.4
யதா ஹி னேந்த்ரியார்தே ஷு
ந கர்மஸ்-வனுஷஜ்ஜதே
ஸர்வ-ஸங்கல்ப-ஸன்ன்யாஸீ
யோகா ரூடஸ் ததோச்யதே
எப்போது ஒருவன் பலன்நோக்குச் செயல்களிலும் புலனுகர்ச்சியிலும் ஈடுபடாமல், எல்லா பௌதிக ஆசைகளையும் துறந்த நிலையில் உள்ளானோ, அப்போது அவன் யோகத்தில் உயர்ந்தவனாகக் கூறப்படுகிறான்.
6.5
உத்தரேத் ஆத்மனாத்மானம்
நாத்மானம் அவஸாதயேத்
ஆத்மைவ ஹ்யாத்மனோ
பந்துர் ஆத்மைவரிபுர் ஆத்மன:
மனதின் உதவியுடன் ஒருவன் தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டுமேயொழிய தாழ்த்திக் கொள்ளக் கூடாது. மனமே கட்டுண்ட ஆத்மாவின் நண்பனும் எதிரியுமாவான்.
6.6
பந்துர் ஆத்மாத்மனஸ் தஸ்ய
யேனாத்மைவாத்மனா ஜித:
அனாத்மனஸ் து ஷத்ருத்வே
வர்தேதாத்மைவ ஷத்ரு-வத்
மனதை வென்றவனுக்கு மனமே சிறந்த நண்பனாகும்; ஆனால் அவ்வாறு செய்யத் தவறியவனுக்கோ, அதுவே மிகப்பெரிய விரோதியாகும்.
6.7
ஜிதாத்மன: ப்ரஷாந்தஸ்ய
பரமாத்மா ஸமாஹித:
ஷீதோஷ்ண-ஸூக-து: கேஷு
ததா மானாபமானயோ:
மனதை வென்றவன், அமைதியை அடைந்துவிட்டதால், பரமாத்மா அவனுக்கு ஏற்கனவே அடையப்பட்டு விடுகின்றார். அத்தகு மனிதனுக்கு இன்ப துன்பம், குளிர் வெப்பம், மான அவமானம் எல்லாம் சமமே.
6.8
க்ஞான-விக்ஞான-த்ருப்தாத்மா
கூட-ஸ்தோ விஜிதேந்த்ரிய:
யுக்த இத்-யுச்யதே யோகீ
ஸம-லோஷ்ட்ராஷ் ம-காஞ்சன:
ஒருவன் ஞானத்தினாலும், விஞ்ஞானத்தினாலும் (அனுபவ ஞானத்தினாலும்) முழு திருப்தியடையும்போது, அவன் தன்னுணர்வில் நிலைபெற்றவன் என்றும், யோகி என்றும் அழைக்கப்படுகிறான். அத்தகையோன் உன்னதத்தில் நிலைபெற்று தன்னடக்கத்துடன் உள்ளான். கூழாங்கற்களோ, கற்களோ, தங்கமோ, அவன் அனைத்தையும் சமமாகக் காண்கிறான்.
6.9
ஸுஹ்ருன்-மித்ரார்-யுதாஸீன-
மத்யஸ்த-த்வேஷ்ய-பந்துஷு
ஸாதுஷ்-வபி ச பாபேஷு
ஸம-புத்திர் விஷிஷ்யதே
நேர்மையான நலன் விரும்பிகள், பாசத்துடன் நன்மை செய்வோர், நடுநிலை கொண்டோர், சமாதானம் செய்வோர், பொறாமை கொண்டோர், நண்பர்கள், எதிரிகள், சாதுக்கள், பாவிகள் என அனைவரையும் சமமான மனதுடன் நடத்துபவன், மேலும் முன்னேறியவனாக கருதப்படுகிறான்.
6.10
யோகீ யுஞ்ஜீத ஸததம்
ஆத்மானம் ரஹஸி ஸ்தித:
ஏகாகீ யத-சித்தாத்மா
நிராஷீர் அபரிக்ரஹ:
யோகியானவன் தனது உடல், மனம் மற்றும் ஆத்மாவினை பரமனின் தொடர்பில் எப்போதும் ஈடுபடுத்த வேண்டும்; அவன் தனிமையான இடத்தில் தனியே வசித்து, மனதை கவனத்துடன் எப்போதும் கட்டுப்படுத்த வேண்டும். அவன் உரிமையுணர்வுகளிலிருந்தும் ஆசைகளிலிருந்தும் விடுபட்டிருக்க வேண்டும்.
6.11-12
ஷுசௌ தேஷே ப்ரதிஷ்டாப்ய
ஸ்தி ரம் ஆஸனம் ஆத்மன:
நாத்-யுச்சரிதம் நாதி-நீசம்
சைலாஜின-குஷோத்தரம்
தத்ரைகாக்ரம் மன: க்ருத்வா
யத-சித்தேந்த்ரிய-க்ரிய:
உபவிஷ்யாஸனே புஞ்ஜ்யாத்
யோகம்-ஆத்ம-விஷுத்தயே
யோகத்தைப் பயில, தனிமையான இடத்திற்குச் சென்று, நிலத்தில் தர்பைப்புல்லைப் பரப்பி, அதனை மான் தோலாலும் மென்மையான துணியினாலும் மறைக்க வேண்டும். இந்த ஆசனம் மிக உயரகமாவோ, தாழ்வாகவோ இல்லாமல் புனிதமான இடத்தில் அமைந்திருக்க வேண்டும். பின்னர், இதன்மேல் ஸ்திரமாக அமர்ந்து, மனம், புலன்கள் மற்றும் செயல்களைக் கட்டுப்படுத்தி, மனதை ஒருமுகப்படுத்தி, இதயத்தைத் தூய்மைப்படுத்துவதற்காக யோகியானவன் யோகத்தைப் பயில வேண்டும்.
6.13-14
ஸமம் காய-ஷிரோ-க்ரீவம்
தாரயன்ன் அசலம் ஸ்திர:
ஸம்ப்ரேக்ஷ்ய நாஸிகாக்ரம் ஸ்வம்
திஷஷ் சானவலோகயன்
ப்ரஷாந்தாத்மா விகத-பீர்
ப்ரஹ்மசாரி-வ்ரதே ஸ்தித:
மன: ஸம்யம்ய மச்-சித்தோ
யுக்த ஆஸீத மத்-பர:
தனது உடல், கழுத்து மற்றும் தலையை நேரடியாக வைத்தமர்ந்து நாசி நுனியை ஸ்திரமாக நோக்க வேண்டும். இவ்வாறாக, கிளர்ச்சியற்ற, அடக்கப்பட்ட மனதோடு, பயமின்றி, பிரம்மசரிய விரதத்துடன், இதயத்தினுள் உள்ள என்மீது தியானம் செய்து, என்னையே வாழ்வின் இறுதிக் குறிக்கோளாகக் கொள்ள வேண்டும்.
6.15
யுஞ்ஜன்ன ஏவத் ஸதாத்மானம்
யோகீ நியத-மானஸ:
ஷாந்திம் நிர்வாண பரமாம்
மத்-ஸம்ஸ்தாம் அதிகச்சதி
இவ்வாறாக, உடல், மனம் மற்றும் செயல்களை இடையறாது கட்டுப்படுத்தப் பழகிய யோகி, தனது ஒழுங்குபடுத்தப்பட்ட மனதுடன் பௌதிக வாழ்வைக் களைந்து இறைவனின் திருநாட்டை (கிருஷ்ண லோகத்தை) அடைகிறான்.
6.16
நாத்-யஷ்னதஸ் து யோகோ
(அ)ஸ்தி ந சைகாந்தம் அனஷ்னத:
ந சாதி-ஸ்வப்ன-ஷீலஸ்ய
ஜாக்ரதோ நைவ சார்ஜுன
அர்ஜுனா, எவனொருவன் மிக அதிகமாக அல்லது மிகக் குறைவாக உண்கின்றானோ, மிக அதிகமாக அல்லது மிகக் குறைவாக உறங்குகின்றானோ, அத்தகையோன் யோகியாவதற்கான வாய்ப்பே இல்லை.
6.17
யுக்தாஹார-விஹாரஸ்ய
யுக்த-சேஷ்டஸ்ய கர்மஸு
யுக்த-ஸ்வப்னாவபோதஸ்ய
யோகோ பவதி து: க-ஹா
உண்ணுதல், உறங்குதல், உழைத்தல், கேளிக்கை ஆகிய பழக்கங்களை நெறிப்படுத்தியவன், யோகப் பயிற்சியின் மூலமாக எல்லாத் துன்பங்களையும் பெருமளவில் நீக்கிவிட முடியும்.
6.18
யதா வினியதம் சிததம்
ஆத்மன்-யேவாவதிஷ்டதே
நிஸ்ப்ருஹ: ஸர்வ-காமேப்யோ
யுக்த இத்-யுச்யதே ததா
யோகியானவன், யோகப் பயிற்சியின் மூலமாக தனது மனதின் செயல்களை ஒழுங்குபடுத்தி, எல்லா ஜட ஆசைகளிலிருந்தும் விடுபட்டு, உன்னதத்தில் நிலைபெறும்போது, யோகத்தில் நன்கு நிலைபெற்றவனாகக் கூறப்படுகின்றான்.
6.19
யதா தீபோ நிவாத-ஸ்தோ
நேங்கதே ஸோபமா ஸ்ம்ருதா
யோகினோ யத-சித்தஸ்ய
யுஞ்ஜதோ யோகம் ஆத்மன:
காற்று வீசாத இடத்திலுள்ள தீபம், அசையாமல் இருப்பதைப்போல, மனதை அடக்கிய யோகியும், திவ்யமான ஆத்மாவின் மீதான தனது தியானத்தில் எப்போதும் ஸ்திரமாக உள்ளான்.
6.20-23
யத்ரோபரமதே சித்தம்
நிருத்தம் யோக-ஸேவயா
யத்ர சைவாத்மனாத்மானம்
பஷ்யன்ன்-ஆத்மனி துஷ்யதி
ஸுகம் ஆத்யந்திகம் யத் தத்
புத்தி-க்ராஹ்யம் அதீந்த்ரியம்
வேத்தி யத்ர ந சைவாயம்
ஸ்திதஷ் சலதி தத்த்வத:
யம் லப்த்வா சாபரம் லாபம்
மன்யதே நாதிகம் தத:
யஸ்மின் ஸ்திதோ ந து: கேன
குருணாபி விசால்யதே
தம் வித் யாத் து: க-ஸம்யோக-
வியோகம் யோக-ஸம்க்ஞிதம்
ஸமாதி என்றழைக்கப்படும் பக்குவநிலையில், மனம் யோகப் பயிற்சியின் மூலமாக, ஜட செயல்களிலிருந்து முழுமையாக விலக்கப்படுகிறது. தூய மனதால் தன்னைக் கண்டு, தன்னில் இன்பத்தை அனுபவிப்பதற்கு ஒருவனிடம் உள்ள திறனிலிருந்து இப்பக்குவ நிலையை உணரலாம். அந்த இன்பநிலையில், அவன் திவ்யமான புலன்களின் மூலம் எல்லையற்ற திவ்யமான ஆனந்தத்தை அனுபவிக்கிறான். இவ்வாறு நிலை பெற்றவன், உண்மையிலிருந்து என்றும் வழுவுவதில்லை, இதைவிட உயர்ந்த இலாபம் ஏதுமில்லை என்று நினைக்கிறான். அத்தகு நிலையில் அமைந்தவன், மாபெரும் துயரங்களுக்கு மத்தியிலும் ஒருபோதும் அசைக்கப்படுவதில்லை. இதுவே ஜடத் தொடர்பினால் எழும் எல்லாத் துன்பங்களிலிருந்து பெறப்படும் உண்மையான விடுதலையாகும்.
6.24
ஸ நிஷ்சயேன யோக்தவ்யோ
யோகோ (அ)நிர்விண்ண-சேதஸா
ஸங்கல்ப-ப்ரபவான் காமாம்ஸ்
த்யக்த்வா ஸர்வான் அஷேஷத
மனஸைவேந்த்ரிய-க்ராமம்
வினியம்ய ஸமன்தத:
யோகப் பயிற்சியில் உறுதியுடனும் நம்பிக்கையுடனும் பாதையிலிருந்து பிறழாமலும் ஈடுபட வேண்டும். மனக் கற்பனையால் பிறந்த எல்லா ஜட ஆசைகளையும் துறந்து, எல்லா பக்கங்களிலிருந்தும் அனைத்துப் புலன்களையும் மனதால் அடக்க வேண்டும்.
6.25
ஷனை: ஷனைர் உபரமேத்
புத்த்யா த்ருதி-க்ருஹீதயா
ஆத்ம-ஸம்ஸ்தம் மன: க்ருத்வா
ந கிஞ்சித் அபி சிந்தயேத்
வலுவான நம்பிக்கையுடன் கூடிய புத்தியின் மூலம், படிப்படியாக ஸமாதியில் நிலைபெற வேண்டும். இவ்வாறு மனம் தன்னில் மட்டுமே நிலைப்படுத்தப்பட்டு வேறெதையும் சிந்திக்காமல் இருக்க வேண்டும்.
6.26
யதோ யதோ நிஷ்சலதி
மனஷ் சஞ்சலம் அஸ்திரம்
ததஸ் ததோ நியம்யைதத்
ஆத்மன்-யேவ வஷம் நயேத்
மனம் தனது சஞ்சலமான நிலையற்ற தன்மையால் எங்கெல்லாம் சஞ்சரிக்கின்றதோ, அங்கிருந்தெல்லாம் மனதை இழுத்து மீண்டும் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும்.
6.27
ப்ரஷாந்த-மனஸம் ஹ்யேனம்
யோகினம் ஸுகம் உத்தமம்
உபைதி ஷாந்த-ரஜஸம்
ப்ரஹ்ம-பூதம் அகல்மஷம்
என் மீது மனதை நிறுத்திய யோகி நிச்சயமாக உத்தம சுகம் எனும் உயர் பக்குவத்தை அடைகிறான். ரஜோ குணத்தைக் கடந்த அவன், பிரம்மனிடம் உள்ள தனது குண ஒற்றுமையை உணர்வதன் மூலம் தனது முந்தைய செயல்களின் விளைவுகளிலிருந்து விடுபடுகிறான்.
6.28
யுஞ்ஜன்ன் ஏவம் ஸதாத்மானம்
யோகீ விகத-கல்மஷ:
ஸுகேன ப்ரஹ்ம-ஸம்ஸ்பர்ஷம்
அத்யந்தம் ஸுகம் அஷ்னுதே
இவ்வாறாக, சுயக் கட்டுப்பாடுடைய யோகி, இடைவிடாத யோகப் பயிற்சியினால், எல்லா ஜடக் களங்கத்திலிருந்தும் விடுபட்டு, இறைவனின் திவ்யமான அன்புத் தொண்டில் பக்குவமான சுகத்தின் உன்னத நிலையை அடைகிறான்.
6.29
ஸர்வ-பூத-ஸ்தம் ஆத்மானம்
ஸர்வ-பூதானி சாத்மனி
ஈக்ஷதே யோக-யுக்தாத்மா
ஸர்வத்ர ஸம-தர்ஷன:
உண்மை யோகி, என்னை எல்லா உயிர்களிலும், எண்ணில் எல்லா உயிர்களையும் காண்கிறான். உண்மையில், தன்னுணர்வுடையவன் பரம புருஷரான என்னையே எங்கும் காண்கிறான்.
6.30
யோ மாம் பஷ்யதி ஸர்வத்ர
ஸர்வம் ச மயி பஷ்யதி
கதஸ்யாஹம் ந ப்ரணஷ்யாமி
ஸ ச மே ந ப்ரணஷ்யதி
என்னை எல்லா இடங்களிலும், எல்லாவற்றையும் என்னிலும் காண்பவன் என்னை ஒருபோதும் இழப்பதில்லை. நானும் அவனை ஒருபோதும் இழப்பதில்லை.
6.31
ஸர்வ-பூத-ஸ்திதம் யோ மாம்
பஜத்-யேகத்வம் ஆஸ்தித:
ஸர்வதா வர்தமானோ (அ)பி
ஸ யோகீ மயி வர்ததே
பரமாத்மாவின் தொண்டில் ஈடுபடும் அத்தகு யோகி, நானும் பரமாத்மாவும் ஒருவரே என்பதை அறிந்து, எல்லா சூழ்நிலைகளிலும் எப்போதும் என்னில் நிலைக்கிறான்.
6.32
ஆத்மௌபம்யேன ஸர்வத்ர
ஸமம் பஷ்யதி யோ (அ)ர்ஜுன
ஸுகம் வா யதி வா து:கம்
ஸ யோகீ பரமோ மத:
அர்ஜுனா, எவனொருவன் எல்லா உயிர்களுடைய சுக துக்கங்களை தன்னுடன் ஒப்பிட்டுக் காண்கிறானோ, அவன் பரம யோகியாகக் கருதப்படுகிறான்.
6.33
அர்ஜுன உவாச
யோ (அ)யம் யோகஸ் த்வயா ப்ரோக்த:
ஸாம்யேன மதுஸூதன
ஏதஸ்யாஹம் ந பஷ்யாமி
சஞ்சலத்வாத் ஸ்திதிம் ஸ்திராம்
அர்ஜுனன் கூறினான்: மதுசூதனரே, மனம் நிலையற்றதும் அமைதியற்றதும் ஆனதால், நீங்கள் இப்போது கூறிய யோக முறையானது நடைமுறைக்கு ஒத்துவராததாகவும் தாங்க முடியாததுமாகத் தோன்றுகிறது.
6.34
சஞ்சலம் ஹி மன: க்ருஷ்ண
ப்ரமாதி பலவத் த்ருடம்
தஸ்யாஹம் நிக்ரஹம் மன்யே
வாயோர் இவ ஸு-துஷ்கரம்
கிருஷ்ணா, மனம் அமையதியற்றதும், குழப்பம் நிறைந்ததும், அடங்காததும், சக்தி மிகுந்ததுமாயிற்றே. வீசும் காற்றை அடக்குவதைவிட மனதை அடக்குவது கடினமானதாக எனக்குத் தோன்றுகின்றது.
6.35
ஸ்ரீ-பகவான் உவாச
அஸம்ஷயம் மஹா-பாஹோ
மனோ துர்நிக்ரஹம் சலம்
அப்யாஸேன து கௌந்தேய
வைராக்யேண ச க்ருஹ்யதே
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கூறினார்: பலம் பொருந்திய புயங்களை உடைய குந்தியின் மகனே, அமைதியற்ற மனதை அடக்குவது சந்தேகமின்றி மிகவும் கடினமே. ஆனால் தகுந்த பயிற்சியினாலும் பற்றின்மையாலும் அது சாத்தியமாகும்.
6.36
அஸம்யதாத்மனா யோகோ
துஷ்ப்ராப இதி மே மதி:
வஷ்யாத்மனா து யததா
ஷக்யோ (அ)வாப்தும் உபாயத:
கட்டுப்படாத மனதைக் கொண்டவனுக்கு தன்னை உணர்தல் கடினமானச் செயலாகும். ஆனால் மனதைக் கட்டுப்படுத்தி, சரியான வழியில் முயல்பவனுக்கு வெற்றி நிச்சயம். இதுவே என் அபிப்பிராயம்.
6.37
அர்ஜுன உவாச
அயதி: ஷ்ரத்தயோபேதோ
யோகாச் சலித-மானஸ:
அப்ராப்ய யோக-ஸம்ஸித்திம்
காம் கதிம் க்ருஷ்ண கச்சதி
அர்ஜுனன் வினாவினான்: கிருஷ்ணா, தன்னுணர்வுப் பாதையினை நம்பிக்கையுடன் ஆரம்பத்தில் மேற்கொண்டு, பிறகு உலக எண்ணங்களினால் அதனை நிறுத்திவிடுபவன், யோகத்தின் பக்குவ நிலையை அடைவதில்லை. அத்தகு வெற்றியடையாத ஆன்மீகியின் கதி என்ன?
6.38
கச்சின் னோபய-விப்ரஷ்டஷ்
சின்னாப்ரம்இவ நஷ்யதி
அப்ரதிஷ்டோ மஹா-பாஹோ
விமூடோ ப்ரஹ்மண: பதி
பலம் பொருந்திய புயங்களை உடைய கிருஷ்ணரே, ஆன்மீகப் பாதையிலிருந்து மயங்கிய அத்தகு மனிதன், ஆன்மீகத்திலும் வெற்றியடையாமல் பௌதிகத்திலும் வெற்றியடையாமல், சிதறிய மேகம் போன்று எங்கும் இடமின்றி அழிந்து விடுவதில்லையா?
6.39
ஏதன் மே ஸம்ஷயம் க்ருஷ்ண
சேத்தும் அர்ஹஸ்-யஷேஷத:
த்வத்-அன்ய: ஸம்ஷயஸ்யாஸ்ய
சேத்தா ந ஹ்யுபபத்யதே
கிருஷ்ணா, இதுவே என் சந்தேகம். இதை முழுமையாகத் தீர்க்குமாறு உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். உம்மையன்றி இந்த சந்தேகத்தை நீக்கக்கூடிய வேறு எவரையும் நான் காணவில்லை.
6.40
ஸ்ரீ-பகவான் உவாச
பார்த நைவேஹ நாமுத்ர
வினாஷஸ் தஸ்ய வித்யதே
ந ஹி கல்யாண-க்ருத் கஷ்சித்
துர்கதிம் தாத கச்சதி
புருஷோத்தமரான முழு முதற்கடவுள் கூறினார்: பிருதாவின் மகனே, நற்செயல்களில் ஈடுபட்ட ஆன்மீகி இவ்வுலகிலோ பரவுலகிலோ அழிவை அடைவதில்லை. என் நண்பனே, நன்மையைச் செய்பவன் தீமையை அடைவதேயில்லை.
6.41
ப்ராப்ய புண்ய-க்ருதாம் லோகான்
உஷித்வா ஷாஷ்வதீ: ஸமா:
ஷுசீனாம் ஸ்ரீமதாம் கேஹே
யோக-ப்ரஷ்டோ (அ)பிஜாயதே
வெற்றியடையாத யோகி, புண்ணிய ஆத்மாக்களின் லோகங்களில் பற்பல வருடங்கள் அனுபவித்தபின், நல்லோரின் குடும்பத்தில், அல்லது பெரும் செல்வந்தரின் குடும்பத்தில் பிறக்கின்றான்.
6.42
அத வா யோகினாம் ஏவ
குலே பவதி தீமதாம்
ஏதத் தி துர்லபதரம் லோகே
ஜன்ம யத் ஈத்ருஷம்
அல்லது (நீண்ட கால யோகப் பயிற்சிக்குப் பின் வெற்றி அடையாதவர்) அறிவில் சிறந்து விளங்கும் ஆன்மீகிகளின் குலத்தில் பிறப்பது உறுதி. இத்தகு பிறவி நிச்சயமாக இவ்வுலகில் மிக அரிதானதாகும்.
6.43
தத்ர தம் புத்தி-ஸம்யோகம்
லபதே பௌர்வ-தேஹிகம்
யததே ச ததோ பூய:
ஸம்ஸித்தௌ குரு-நந்தன
குரு மைந்தனே, அத்தகு பிறவியை அடைபவன், தனது முந்தைய பிறவியின் திவ்ய உணர்வினை மீண்டும் பெற்று, பூரண வெற்றியை அடைவதற்காக, அந்நிலையிலிருந்து மேலும் முன்னேற்றமடைய முயல்கிறான்.
6.44
பூர்வாப்யாஸேன தேனைவ
ஹ்ரியதே ஹ்யவஷோ (அ)பி ஸ:
ஜிக்ஞாஸுர் அபி யோகஸ்ய
ஷப்த-ப்ரஹ்மாதிவர்ததே
தனது பூர்வ ஜன்ம திவ்ய உணர்வின் காரணத்தால், யோகத்தின் கொள்கைகளை நாடாமலேயே, அவன் அவற்றால் இயற்கையாகக் கவரப்படுகிறான். அத்தகைய ஆர்வமுடைய ஆன்மீகி, எப்பொழுதும் சாஸ்திரங்களின் சடங்குகளிலிருந்து உயர்ந்து நிற்கிறான்.
6.45
ப்ரயத்நாத் யதமானஸ் து
யோகீ ஸம்ஷுத்த-கில்பிஷ:
அனேக-ஜன்ம-ஸம்ஸித்தஸ்
ததோ யாதி பராம் கதிம்
மேலும், முன்னேற்றம் பெறுவதற்கான தீவிர முயற்சியில் ஈடுபடும் யோகி, எல்லா களங்களிலிருந்தும் தூய்மை பெற்று, இறுதியில் அனேக ஜன்மங்கள் பயின்ற பிறகு, பரம கதியை அடைகிறான்.
6.46
தபஸ்விப்யோ (அ)தி கோ யோகீ
க்ஞானிப்யோ (அ)பி மதோ (அ)திக:
கர்மிப்யஷ் சாதிகோ யோகீ
தஸ்மாத் யோகீ பவார்ஜுன
தவம்புரிபவன், ஞானி, மற்றும் பலனை எதிர்பார்த்து செயல்படுபவனைக் காட்டிலும், யோகி சிறந்தவனாவான். எனவே, அர்ஜுனா, எல்லாச் சூழ்நிலைகளிலும் யோகியாக இருப்பாயாக.
6.47
யோகினாம் அபி ஸர்வேஷாம்
மத்-கதேனாந்தர்-ஆத்மனா
ஷ்ரத்தாவான் பஜதே யோ மாம்
ஸ மே யுக்ததமோ மத:
மேலும், எல்லா யோகிகளுக்கு மத்தியில், எவனொருவன் பெரும் நம்பிக்கையுடன் எப்போதும் என்னில் நிலைத்து, தன்னுள் என்னை எண்ணி, எனக்கு திவ்யமான அன்புத் தொண்டு புரிகின்றானோ, அவனே யோகத்தில் என்னுடன் மிகவும் நெருங்கியவனும் எல்லாரையும்விட உயர்ந்தவனும் ஆவான். இதுவே எனது அபிப்பிராயம்.