அத்தியாயம் இரண்டு: கீதையின் உட்பொருட் சுருக்கம்
2.1
ஸஞ்ஜய உவாச
தம் ததா க்ருபயாவிஷ்டம்
அஷ்ரு-பூர்ணாகுலேக்ஷணம்
விஷீதந்தம் இதம் வாக்யம்
உவாச மதுஸுதன:
சஞ்ஜயன் கூறினான்: அர்ஜுனன், இரக்கத்தினால் மூழ்கி, மனம் பவவீனமடைந்து, கண்களில் கண்ணீர் மல்கிய நிலையில் இருப்பதைக் கண்ட மதுசூதனரான கிருஷ்ணர் பின்வருமாறு கூறினார்.
2.2
ஸ்ரீ-பகவான் உவாச
குதஸ்த்வா கஷ்மலம் இதம்
விஷமே ஸமுபஸ்திதம்
அனார்ய-ஜுஷ்டம் அஸ்வர்க்யம்
அகீர்த்தி-கரம் அர்ஜுன
புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்: எனதருமை அர்ஜுனனே, உன்னிடம் இதுபோன்ற களங்கங்கள் எங்கிருந்து வந்தன? வாழ்வின் மதிப்பை அறிந்த மனிதனுக்கு இவை தகுதியற்றவை. இவை மேலுலகங்களுக்குக் கொண்டு செல்வதில்லை, அவமானத்தை கொடுக்கின்றன.
2.3
க்லைப்யம் மா ஸ்ம கம: பார்த
நைதத் த்வய் யுபபத்யதே
க்ஷுத்ரம் ஹ்ருதய தௌர்பல்யம்
த்யக்த்வோத்திஷ்ட பரந்தப
பிருதாவின் மகனே, இது போன்ற இழிவான தளர்ச்சிக்கு இடம் கொடுக்காதே. இஃது உனக்கு பொறுத்தமானதல்ல. இதுபோன்ற அற்பமான இதய பலவீனத்தை விட்டுவிட்டு, எதிரிகளைத் தவிக்கச் செய்பவனே, எழுவாயாக.
2.4
அர்ஜுன உவாச
கதம் பீஷ்மம் அஹம் ஸங்க்யே
த்ரோணம் ச மதுஸுதன
இஷுபி: ப்ரதியோத்ஸ்யாமி
பூஜார்ஹாவ் அரி-ஸுதன
அர்ஜுனன் கூறினான்: எதிரிகளைக் கொல்பவரே, மது எனும் அரக்கனை அழித்தவரே, எனது பூஜைக்கு உரியவர்களான பீஷ்மர், துரோணர் முதலியோரை போரில் எவ்வாறு என்னால் எதிர்த்து தாக்க முடியும்?
2.5
குரூன் அஹத்வா ஹி மஹானுபாவான்
ஷ்ரேயோ போக்தும் பைக்ஷ்யம் அபீஹ லோகே
ஹத்வார்த-காமாம்ஸ் து குரூன் இஹைவ
புஞ்ஜீய போகான் ருதிர-ப்ரதிக்தான்
மகாத்மாக்களான எனது ஆச்சாரியர்களின் வாழ்வை அழித்து நான் வாழ்வதை விட இவ்வுலகில் பிச்சையெடுத்து வாழ்வதே மேல், உலக இலாபங்களை விரும்பும்போதிலும், அவர்கள் பெரியோர்களே. அவர்கள் கொல்லப்பட்டால், நாம் அனுபவிப்பவை அனைத்திலும் இரத்தக் கறை படிந்திருக்கும்.
2.6
ந சைதத் வித்ம: கதரன் நோகரீயோ
யத் வா ஜயேம யதி வா நோ ஜயேயு:
யான் ஏவ ஹத்வா ந ஜிஜீவிஷாமஸ்
தே (அ)வஸ்திதா: ப்ரமுகே தார்தராஷ்ட்ரா:
அவர்களை நாம் வெல்வதா அல்லது அவர்களால் வெல்லப்படுவதா, எது சிறந்ததென்று நாம் அறியோம். யாரைக் கொன்றால் நாம் வாழ விரும்ப மாட்டோமோ, அந்த திருதராஷ்டிரரின் மகன்கள், இப்பொழுது நம் முன்பு போர்க்களத்தில் நிற்கின்றனர்.
2.7
கார்பண்ய–தோஷோபஹத-ஸ்வபாவ:
ப்ருச்சாமி த்வாம் தர்ம-ஸம்மூட–சேதா:
யச் ச்ரேய: ஸ்யான் நிஷ்சிதம் ப்ரூஹி தன்மே
ஷிஷ்யஸ் தே (அ)ஹம் ஷாதி மாம் த்வாம் ப்ரபன்னம்
இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்ந்து எனக்கு அறிவுரை கூறுவீராக.
2.8
ந ஹி ப்ரபஷ்யாமி மமாபனுத்யாத்
யச் சோகம் உச்சோஷணம் இந்த்ரியாணம்
அவாப்ய பூமாவ் அஸபத்னம் ருத்தம்
ராஜ்யம் ஸுராணாம் அபி சாதிபத்யம்
என் புலன்களை வறட்டுகின்ற இந்த சோகத்தைப் போக்க ஒரு வழியையும் என்னால் காண முடிவில்லை. மேலுலகில் அதிபதியாக இருக்கும் தேவர்களைப் போல, எவ்வித எதிரியுமில்லாத வளமான ராஜ்ஜியத்தை இப்பூவுலகில் நான் அடையப்பெற்றாலும், இந்த சோக நிலையினை என்னால் அகற்ற முடியாது.
2.9
ஸஞ்ஜய உவாச
ஏவம் உக்த்வா ஹ்ருஷீகேஷம்
குடாகேஷ: பரந்தப:
ந யோத்ஸ்ய இதி கோவிந்தம்
உக்த்வா தூஷ்ணீம் பபூவ ஹ
சஞ்ஜயன் கூறினான்: இவ்வாறு கூறிய பின், எதிரிகளைத் தவிக்கச் செய்பவனான அர்ஜுனன், “கோவிந்தா, நான் போரிட மாட்டேன்” என்று கூறி அமைதியாகி விட்டான்.
2.10
தம் உவாச ஹ்ருஷீகேஷ:
ப்ரஹஸன்ன் இவ பாரத
ஸேனயோர் உபயோர் மத்யே
விஷீதந்தம் இதம் வச:
பரத குலத் தோன்றலே, அச்சமயத்தில், இரு தரப்புச் சேனைகளுக்கு மத்தியில், துயரத்தால் பாதிக்கப்பட்டிருந்த அர்ஜுனனிடம், கிருஷ்ணர் புன்சிரிப்புடன் பின்வருமாறு கூறினார்.
2.11
ஸ்ரீ-பகவான் உவாச
அஷோச்யான் அன்வஷோசஸ்த்வம்
ப்ரக்ஞா-வாதாம்ஸ் ச பாஷஸே
கதாஸூன் அகதாஸூம்ஷ் ச
நானுஷோசந்தி பண்டிதா:
புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்: அறிவாளியைப் போல பேசும் அதே சமயத்தில் கவலைப்பட வேண்டாதவற்றிற்காக நீ கவலைப்படுகிறாய். அறிஞர் வாழ்பவர்களுக்காகவோ, மாண்டவர்களுக்காகவோ வருந்துவதில்லை.
2.12
ந த்வேவாஹம் ஜாது நாஸம்
ந த்வம் நேமே ஜனாதிபா:
ந சைவ ந பவிஷ்யாம:
ஸர்வே வயம் அத: பரம்
நானோ, நீயோ, இம்மன்னர்களோ இல்லாமலிருந்த காலம் எதுவுமில்லை. எதிர்காலத்திலும் நம்மில் எவரும் இல்லாமலிருக்கப் போவதுமில்லை.
2.13
தேஹினோ (அ)ஸ்மின் யதா தேஹே
கௌமாரம் யௌவனம் ஜரா
ததா தேஹாந்தர-ப்ராப்திர்
தீரஸ் தத்ர ந முஹ்யதி
தேகத்தை உடையவனின் உடல், சிறுவயது, இளமை, முதுமை என்று கடந்துசெல்வதைப் போல, ஆத்மா, மரணத்தின் போது வேறு உடலுக்கு மாற்றம் பெறுகின்றது. நிதான புத்தியுடையவர் இதுபோன்ற மாற்றத்தால் திகைப்பதில்லை.
2.14
மாத்ரா-ஸ்பர்ஷாஸ் து கௌந்தேய
ஷீதோஷ்ண-ஸுக -து:க-தா:
ஆகமாபாயினோ (அ)நித்யாஸ்
தாம்ஸ் திதிக்ஷஸ்வ பாரத
குந்தியின் மகனே, இன்ப துன்பங்களின் நிலையற்ற தோற்றமும் காலப் போக்கில் ஏற்படும் மறைவும், கோடையும் குளிரும் பருவ காலத்தில் தோன்றி மறைவதைப் போன்றதாகும். புலன்களின் உணர்வாலேயே அவை எழுகின்றன; எனவே, பரத குலத் தோன்றலே, இவற்றால் பாதிக்கப்படாமல், பொறுத்துக் கொள்ளக் கற்றுக் கொள்.
2.15
யம் ஹி ந வ்யதயந்த் யேதே
புருஷம் புருஷர்ஷப
ஸம-து:க-ஸுகம் தீரம்
ஸோ (அ)ம்ருதத்வாய கல்பதே
மனிதரில் சிறந்தோனே (அர்ஜுனனே), இன்ப துன்பங்களால் பாதிக்கப்படாதவனும் இவ்விரண்டு நிலைகளிலும் தன்னிலை மாறாது இருப்பவனுமே, நிச்சயமாக விடுதலைக்குத் தகுதி பெற்றவனாக இருக்கிறான்.
2.16
நாஸதோ வித்யதே பாவோ
நாபாவோ வித்யதே ஸத:
உபயோர் அபி த்ருஷ்டோ (அ)ந்தஸ்
த்வனயோஸ் தத்த்வ–தர்ஷிபி:
உண்மையைக் கண்டவர்கள், நிலையற்றதற்கு (உடலுக்கு) நீடிப்பும், நித்தியமானதற்கு (ஆத்மாவிற்கு) மாற்றமும் இல்லை என்று முடிவு செய்துள்ளனர். இவை இரண்டின் இயற்கையையும் ஆராய்ந்தே அவர்கள் இதைத் தீர்மானித்துள்ளனர்.
2.17
அவிநாஷி து தத் வித்தி
யேன ஸர்வம் இதம் ததம்
வினாஷம் அவ்யயஸ்யாஸ்ய
ந கஷ்சித் கர்தும் அர்ஹதி
உடல் முழுவதும் பரவியிருப்பதை அழிவற்றதென்று நீ அறிய வேண்டும். அந்த அழிவற்ற ஆத்மாவைக் கொல்லக்கூடியவர் எவருமில்லை.
2.18
அந்தவந்த இமே தேஹா
நித்யஸ்யோக்தா: ஷரீரிண:
அனாஷினோ (அ)ப்ரமேயஸ்ய
தஸ்மாத் யுத்யஸ்வ பாரத
அழிவற்ற, அளக்கமுடியாத, நித்தியமான உயிர்வாழியின் இந்த ஜடவுடல் அழியப்போவது உறுதி. எனவே, பரத குலத் தோன்றலே போரிடுவாயாக.
2.19
ய ஏனம் வேத்தி ஹந்தாரம்
யஷ் சைனம் மன்யதே ஹதம்
உபௌ தௌ ந விஜானீதோ
நாயம் ஹந்தி ந ஹன்யதே
ஜீவாத்மாவை, கொல்பவனாக நினைப்பவனும் கொல்லப்படுபவனாக நினைப்பவனும், அறிவில்லாதவன் ஆவான்; ஏனெனில், ஆத்மா கொலை செய்வதோ கொல்லப்படுவதோ இல்லை.
2.20
ந ஜாயதே ம்ரியதே வா கதாசின்
நாயம் பூத்வா பவிதா வா ந பூய:
அஜோ நித்ய: ஷாஷ்வதோ (அ)யம் புராணோ
ந ஹன்யதே ஹன்யமானே ஷரீரே
ஆத்மாவிற்கு எக்காலத்திலும் பிறப்போ இறப்போ கிடையாது. அவன் தோன்றியவனும் அல்ல, தோன்றுபவனும் அல்ல, தோன்றக்கூடியவனும் அல்ல. அவன் பிறப்பற்றவன், நித்தியமானவன், என்றும் நிலைத்திருப்பவன், மிகப் பழமையானவன், உடல் கொல்லப்படும்போது அவன் கொல்லப்படுவதில்லை.
2.21
வேதாவினாஷினம் நித்யம்
ய ஏனம் அஜம் அவ்யயம்
கதம் ஸ புருஷ: பார்த
கம் காதயதி ஹந்தி கம்
பார்த்தனே, ஆத்மா அழிவற்றவன், நித்தயமானவன், பிறப்பற்றவன், மாற்றமில்லாதவன் என்பதை எவனொருவன் அறிந்துள்ளானோ, அவன் கொல்வதோ, கொலை செய்ய காரணமாவதோ எப்படி?
2.22
வாஸாம்ஸி ஜீர்ணானி யதா விஹாய
நவானி க்ருஹ்ணாதி நரோ (அ)பராணி
ததா ஷரீராணி விஹாய ஜீர்ணான்-
யன்யானி ஸம்யாதி நவானி தேஹி
பழைய ஆடைகளைப் புறக்கணித்து, புதிய ஆடைகளை ஒருவன் அணிவதைப் போன்றே, பழைய உபயோகமற்ற உடல்களை நீக்கி, புதிய உடல்களை ஆத்மா ஏற்கிறது.
2.23
நைனம் சிந்தந்தி ஷஸ்த்ராணி
நைநம் தஹதி பாவக:
ந சைனம் க்லேத யந்த்-யாபோ
ந ஷோஷயதி மாருத:
ஆத்மா எந்த ஆயுதத்தாலும் துண்டிக்கப்பட முடியாததும், நெருப்பால் எரிக்கப்பட முடியாததும், நீரால் நனைக்கப்பட முடியாததும், வீசும் காற்றால் உலர்த்தப்பட முடியாததுமாகும்.
2.24
அச்சேத்யோ (அ)யம் அதாஹ்யோ (அ)யம்
அக்லேத்யோ (அ)ஷோஷ்ய ஏவ ச
நித்ய: ஸர்வ-கத: ஸ்தாணுர்
அசலோ (அ)யம் ஸநாதன:
ஜீவாத்மா வெட்ட முடியாதவன், கரைக்க முடியாதவன், எரிக்கவோ, உலர்த்தவோ முடியாதவன். அவன் நித்தியமானவன், எங்கும் நிறைந்தவன், மாற்ற இயலாதவன், அசைக்க முடியாதவன், நித்தியமாக மாற்றமின்றி இருப்பவன்.
2.25
அவ்யக்தோ (அ)யம் அசிந்த்யோ (அ)யம்
அவிகார்யோ (அ)யம் உச்யதே
தஸ்மாத் ஏவம் விதித்வைனம்
நானுஷோசிதும் அர்ஹஸி
ஆத்மா பார்வைக்கு புலப்படாதவன், சிந்தனைக்கு அப்பாற்பட்டவன்; மேலும், மாற்ற முடியாதவன் என்று கூறப்படுகிறது. இதனை நன்கறிந்து, நீ உடலுக்காக வருத்தப்படக் கூடாது.
2.26
அத சைனம் நித்ய-ஜாதம்
நித்யம் வா மன்யஸே ம்ருதம்
ததாபி த்வம் மஹா-பாஹோ
நைனம் ஷோசிதும் அர்ஹஸி
இருப்பினும், ஆத்மா (அல்லது வாழ்வின் அறிகுறிகள்) எப்போதும் பிறந்து இறந்து கொண்டிருப்பதாக நீ எண்ணினாலும், பலம் பொருந்திய புயங்களை உடையோனே, நீ கவலைப்படுவதற்குக் காரணம் ஏதுமில்லை.
2.27
ஜாதஸ்ய ஹி த்ருவோ ம்ருத்யுர்
த்ருவம் ஜன்ம ம்ருதஸ்ய ச
தஸ்மாத் அபரிஹார்யே (அ)ர்தே
நத்வம் ஷோசிதும் அர்ஹஸி
பிறந்தவன் எவனுக்கும் மரணம் நிச்சயம், மரணமடைந்தவன் மீண்டும் பிறப்பதும் நிச்சயமே. எனவே, தவிர்க்க முடியாத உன் கடமைகளைச் செயலாற்றுவதில், நீ கவலைப்படக் கூடாது.
2.28
அவ்யக்தாதீனி பூதானி
வ்யக்த–மத்யானி-பாரத
அவ்யக்த–நிதினான்-யேவ
தத்ர கா பரிதேவனா
படைக்கப்பட்ட எல்லா உயிரினங்களும் ஆரம்பத்தில் தோன்றாமல் இருந்தன, இடையில் தோன்றுகின்றன, இறுதியில் அழிக்கப்படும்போது மீண்டும் மறைகின்றன. எனவே, ஏன் கவலைப்பட வேண்டும்?
2.29
ஆஷ்சர்ய–வத் பஷ்யதி கஷ்சித் ஏனம்
ஆஷ்சர்ய–வத் வததி ததைவ சான்ய:
ஆஷ்சர்ய–வச் சைனம் அன்ய: ஷ்ருணோதி
ஷ்ருத்வாப் யேனம் வேத ந சைவ கஷ்சித்
சிலர் ஆத்மாவை ஆச்சரியமாகப் பார்க்கின்றனர், சிலர் அவனை ஆச்சரியமானவனாக வர்ணிக்கின்றனர், மேலும் சிலர் அவனை ஆச்சரியமானவனாகக் கேட்கின்றனர். வேறு சிலரோ, அவனைப் பற்றிக் கேட்ட பின்னும், அவனைப் புரிந்துகொள்ள இயலாதவராக உள்ளனர்.
2.30
தேஹி நித்யம் அவத்யோ (அ)யம்
தேஹே ஸர்வஸ்ய பாரத
தஸ்மாத் ஸர்வாணி பூதாணி
ந த்வம் ஷோசிதும் அர்ஹஸி
பரத குலத் தோன்றலே, உடலில் உறைபவன் ஒருபோதும் அழிக்கப்பட முடியாதவன், எனவே, எந்த உயிர்வாழிக்காகவும் நீ வருந்த வேண்டிய தேவையில்லை.
2.31
ஸ்வ-தர்மம் அபி சாவேக்ஷ்ய
ந விகம்பிதும் அர்ஹஸி
தர்ம்யாத் தி யுத்தாச் ச்ரேயோ (அ)ன்யத்
க்ஷத்ரியஸ்ய ந வித்யதே
சத்திரியன் என்ற முறையில் உனக்கென்று உரிய கடமையைப் பற்றிக் கருதும்போது, தர்மத்தின் கொள்கைகளுக்காகப் போர் புரிவதைக் காட்டிலும் வேறு சிறந்த கடமை உனக்கில்லை. எனவே, தயங்கத் தேவையில்லை.
2.32
யத்ருச்சயா சோபபன்னம்
ஸ்வர்க-த்வாரம் அபாவ்ருதம்
ஸுகின: க்ஷத்ரியா: பார்த
லபந்தே யுத்தம் ஈத்ருஷம்
பார்த்தனே, வலியவரும் போர் வாய்ப்புகள் ஸ்வர்க லோகத்தின் கதவுகளைத் திறந்து விடுவதால், அவற்றைப் பெறும் அரச குலத்தோர் மகிழ்கின்றனர்.
2.33
அத சேத் த்வம் இமம் தர்ம்யம்
ஸங்க்ராமம் ந கரிஷ்யஸி
தத: ஸ்வ-தர்மம் கீர்திம் ச
ஹித்வா பாபம் அவாப்ஸ்யஸி
எனவே, போரிடுதல் என்னும் இந்த தர்மத்தின் கடமையில் நீ ஈடுபடாவிட்டால், உன்னுடைய கடமையிலிருந்து தவறியதற்கான பாவ விளைவுகளை நிச்சயமாகப் பெறுவதோடு, சிறந்த போர் வீரனெனும் புகழையும் இழப்பாய்.
2.34
அகீர்திம் சாபி பூதானி
கதயிஷ்யந்தி தே (அ)வ்யயாம்
ஸம்பாவிதஸ்ய சாகீர்திர்
மரணாத் அதிரிச்யதே
மக்கள் உன்னை எப்போதும் இகழ்ந்து பேசிக் கொண்டிருப்பர். மதிக்கத்தக்க ஒருவனுக்கு அவமானம் மரணத்தை விட மோசமானது.
2.35
பயாத்ராணத் உபரதம்
மம்ஸ்யந்தே த்வாம் மஹா-ரதா:
யேஷாம் ச த்வம் பஹு-மதோ
பூத்வா யாஸ்யஸி லாகவம்
உன்னுடைய பெயரிலும் புகழிலும் பெருமதிப்பு கொண்டிருக்கும் மிகச்சிறந்த போர்த்தலைவர்கள், நீ பயத்தால் போர்க்களத்தை விட்டு விலகிவிட்டதாக எண்ணி, உன்னை முக்கியத்துவமற்றவனாகக் கருதுவர்.
2.36
அவாச்ய-வாதாம்ஸ் ச பஹூன்
வதிஷ்யந்தி தவாஹிதா:
நிந்தந்தஸ் தவ ஸாமர்த்யம்
ததோ து:கதரம் நு கிம்
அன்பில்லாத வார்த்தைகள் பலவற்றைக் கூறி உனது எதிரிகள் உனது திறமையை நிந்திப்பர். அதைவிட மிகுந்த துன்பம் தரக்கூடியது வேறு என்ன இருக்க முடியும்?
2.37
ஹதோ வா ப்ராப்ஸ்யஸி ஸ்வர்கம்
ஜித்வா வா போக்ஷ்யஸே மஹீம்
தஸ்மாத் உத்திஷ்ட கௌந்தேய
யுத்தாய க்ருத-நிஷ்சய:
குந்தியின் மகனே, போர்க்களத்தில் நீ கொல்லப்பட்டால் ஸ்வர்கத்தை அடையலாம், வெற்றி பெற்றால் இவ்வுலகினை அனுபவிக்கலாம். எனவே, உறுதியுடன் எழுந்து போர் புரிவாயாக.
2.38
ஸுக-து:கே ஸமே க்ருத்வா
லாபாலாபௌ ஜயாஜயௌ
ததோ யுத்தாய யுஜ்யஸ்வ
நைவம் பாபம் அவாப்ஸ்யஸி
இன்ப துன்பம், இலாப நஷ்டம், வெற்றி தோல்வி, இவற்றைக் கருதாது போருக்காகப் போர் புரிவாயாக—அவ்வாறு செயலாற்றினால், என்றும் நீ பாவ விளைவுகளை அடைய மாட்டாய்.
2.39
ஏஷா தே (அ)பிஹிதா ஸாங்க்யே
புத்திர் யோகே தவிமாம் ஷ்ருணு
புத்த்யா யுக்தோ யயா பார்த
கர்ம-பந்தம் ப்ரஹாஸ்யஸி
ஸாங்கிய தத்துவத்தின் ஆய்வறிவை உனக்கு இதுவரை விளக்கினேன். பலனே எதிர்பாராமல் ஒருவன் செய்யும் யோகத்தைப் பற்றிய அறிவை, இப்போது கேள். பிருதாவின் மகனே, இந்த அறிவோடு செயல்பட்டால், கர்ம பந்தத்திலிருந்து நீயே உன்னை விலக்கிக்கொள்ள முடியும்.
2.40
நேஹாபி க்ரம– நாஷோ (அ)ஸ்தி
ப்ரத்யவாயோ ந வித்யதே
ஸ்வல்பம் அப்யஸ்ய தர்மஸ்ய
த்ராயதே மஹதோ பயாத்
இம்முயற்சியில் குறைவோ இழப்போ இல்லை. இவ்வழியில் சிறிது முன்னேற்றமும், மிகப் பயங்கரமான பயத்திலிருந்து ஒருவனைக் காக்கும்.
2.41
வ்யவஸாயாத்மிகா புத்திர்
ஏகேஹ குரு-நந்தன
பஹு-ஷாகா ஹ்யனந்தாஷ் ச
புத்தயோ (அ)வ்யஸாயினாம்
இவ்வழியிலுள்ளோர் தங்களது குறிக்கோளில் திடமான உறுதியுடன் இருப்பர், இவர்களது இலட்சியம் ஒன்றே. குரு வம்சத்தின் செல்வனே, உறுதியற்றவரது அறிவோ பல கிளைகளைக் கொண்டது.
2.42-43
யாம் இமாம் புஷ்பிதாம் வாசம்
ப்ரவதந்த்-யவிபஷ்சித:
வேத-வாத-ரதா: பார்த
நான்யத் அஸ்தீதி வாதின:
காமாத்மான: ஸ்வர்க-பரா
ஜன்ம-கர்ம-பல-ப்ரதாம்
க்ரியா-விஷேஷ-பஹுலாம்
போகைஷ்வர்ய-கதிம் ப்ரதி
சிற்றறிவுடைய மனிதர்கள் வேதங்களின் மலர்ச் சொற்களால் கவரப்படுகிறார்கள். இவ்வாக்கியங்கள், ஸ்வர்க லோகங்களுக்கு ஏற்றம் பெறுதல், நற்பிறவி அடைதல், பதவி பெறுதல் போன்ற பலன்களை வழங்கும் பற்பல செயல்களைப் பரிந்துரைக்கின்றன. புலனுகர்ச்சியையும் செல்வமிகு வாழ்வையும் விரும்புவர், இதைவிட உயர்ந்தது ஏதுமில்லை என்று கூறுகின்றனர்.
2.44
போகைஷ்வர்ய-ப்ரஸக்தானம்
தயாபஹ்ருத–சேதஸாம்
வ்யவஸாயாத்மிகா புத்தி:
ஸமாதௌ ந விதீயதே
புலனின்பத்திலும் பௌதிகச் செல்வத்திலும் மிகுந்த பற்றுதல் கொண்டு, அதனால் மயங்கி உள்ளவர்களின் மனதில், முழுமுதற் கடவுளின் பக்தித் தொண்டிற்கான திடமான உறுதி உண்டாவதில்லை.
2.45
த்ரை-குண்ய-விஷயா வேதா
நிஸ்த்ரை-குண்யோ பவார்ஜுன
நிர்த்வந்த்வோ நித்ய-ஸத்த்வ-ஸ்தோ
நிர்யோக-க்ஷேம ஆத்மவான்
வேதங்கள், பொதுவாக பௌதிக இயற்கையின் முக்குணங்களைப் பற்றியவை. அர்ஜுனா, இம்மூன்று குணங்களுக்கு அப்பாற்பட்டவனாக ஆவாயாக. எல்லா இருமைகளிலிருந்தும் விடுபட்டு, பொருள்களை அடைதல், பாதுகாத்தல் ஆகிய கவலைகளிலிருந்தும் விடுபட்டு, தன்னில் நிலைபெறுவாயாக.
2.46
யாவான் அர்த உதபானே
ஸர்வத ஸம்ப்லுதோதகே
தாவான் ஸர்வேஷு வேதேஷு
ப்ராஹ்மணஸ்ய விஜானத:
சிறு கிணற்றால் பூர்த்தி செய்யப்படும் தேவைகள் அனைத்தும், பெரும் நீர்த்தேக்கத்தால் உடனே பூர்த்தி செய்யப்படும். அதுபோலவே வேதங்களின் நோக்கங்களெல்லாம் அவற்றிற்குப் பின்னால் உள்ள நோக்கங்களை அறிந்தவனால் அடையப் பெறும்.
2.47
கர்மண்யே-வாதிகாரஸ் தே
மா பலேஷு கதாசன
மா கர்ம-பல-ஹேதுர் பூர்
மா தே ஸங்கோ (அ)ஸ்த்வகர்மணி
உனக்கு விதிக்கப்பட்ட கடமையைச் செய்ய மட்டுமே உனக்கு அதிகாரம் உண்டு, ஆனால் செயல்களின் பலன்களில் உனக்கு அதிகாரமில்லை. உனது செயல்களின் விளைவுகளுக்கு உன்னையே காரணமாக ஒருபோதும் எண்ணாதே. கடமையைச் செய்யாமலிருக்க ஒருபோதும் பற்றுதல் கொள்ளாதே.
2.48
யோக-ஸ்த: குரு கர்மாணி
ஸங்கம் த்யக்த்வா தனஞ்ஜய
ஸித்த்ய-ஸித்த்யோ: ஸமோ பூத்வா
ஸமத்வம் யோக உச்யதே
அர்ஜுனா, வெற்றி தோல்வியில் பற்றுதல் கொள்ளாமல், உனது கடமையை சமநிலையுடன் செய்வாயாக. இதுபோன்ற சமத்துவமே யோகம் என்று அழைக்கப்படுகிறது.
2.49
தூரேண ஹ்யவரம் கர்ம
புத்தி-யோகாத் தனஞ்ஜய
புத்தௌ ஷரணம் அன்விச்ச
க்ருபணா: பல-ஹேதவ:
தனஞ்ஜயா, அனைத்து மோசமான செயல்களையும் பக்தித் தொண்டின் உதவியினால் தூரமாக வைத்து விட்டு, சரணடைவாயாக. தமது செயல்களின் பலனை அனுபவிக்க விரும்புபவர் கஞ்சர்களேயாவார்கள்.
2.50
புத்தி-யுக்தோ ஜஹாதீஹ
உபே ஸுக்ருத-துஷ்க்ருதே
தஸ்மாத் யோகாய யுஜ்யஸ்வ
யோக: கர்மஸு கௌஷலம்
பக்தித் தொண்டில் ஈடுபட்டுள்ளவன், இந்த வாழ்விலேயே, நல்ல, தீய செயல்களின் விளைவுகளிலிருந்து தப்புகின்றான். எனவே, எல்லாச் செயல்களிலும் சிறந்ததான யோகத்திற்காகப் பாடுபடுவாயாக.
2.51
கர்ம-ஜம் புத்தி யுக்தா ஹி
பலம் த்யக்தவா மனீஷிண:
ஜன்ம-பந்த-விநிர்முக்தா:
பதம் கச்சந்த்-யனாமயம்
இவ்விதமான பக்தித் தொண்டில் ஈடுபட்டு, சிறந்த முனிவர்கள் (பக்தர்கள்), பௌதிக உலகின் செயல்களின் வினைகளிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டுள்ளனர். இவ்வழியில் அவர்கள் பிறப்பு இறப்பின் பந்தத்திலிருந்து விடுபட்டு எல்லா துன்பங்களுக்கும் அப்பாற்பட்ட நிலையை (முழுமுதற் கடவுளிடம் திரும்பிச் செல்வதன் மூலம் ) அடைகின்றனர்.
2.52
யதா தே மோஹ-கலிலம்
புத்திர் வ்யதிதரிஷ்யதி
ததா கந்தாஸி நிர்வேதம்
ஷ்ரோதவ்யஸ்ய ஷ்ருதஸ்ய ச
எப்போதும் உன் அறிவு, மயக்கம் எனும் இவ்வடர்ந்த காட்டை தாண்டி விடுகிறதோ, அப்போது, இதுவரை கேட்டவை, இனி கேட்க வேண்டியவை இவற்றின் மீது நீ சமநிலையுடையவனாகி விடுவாய்.
2.53
ஷ்ருதி-விப்ரதிபன்னா தே
யதா ஸ்தாஸ்யதி நிஷ்சலா
ஸமாதாவ் அசலா புத்திஸ்
ததா யோகம் அவாப்ஸ்யஸி
எப்போது உன் மனம் வேதங்களின் மலர்சொற்களால் கவரப்படாத நிலையை அடைகிறதோ, எப்போது அது தன்னுணர்வின் ஸமாதியில் நிலைத்திருக்கின்றதோ, அப்போது நீ தெய்வீக உணர்வை அடைந்து விட்டவனாவாய்.
2.54
அர்ஜுன உவாச
ஸ்தித-ப்ரக்ஞஸ்ய கா பாஷா
ஸமாதி-ஸ்தஸ்ய கேஷவ
ஸ்தித-தீ: கிம் ப்ரபாஷேத
கிம் ஆஸீத வ்ரஜேத கிம்
அர்ஜுனன் வினவினான்: தெய்வீக உணர்வில் இவ்வாறு நிலை பெற்றவனின் அறிகுறிகள் யாவை? அவனது மொழி என்ன? எவ்வாறு பேசுவான்? எப்படி அமருவான், எப்படி நடப்பான்?
2.55
ஸ்ரீ-பகவான் உவாச
ப்ரஜஹாதி யதா காமான்
ஸர்வான் பார்த மனோ-கதான்
ஆத்மன்-யேவாத்மனா துஷ்ட:
ஸ்தித-ப்ரகஞஸ் ததோச்யதே
புருஷோத்தமராகிய முழுமுதற் கடவுள் கூறினார்: பார்த்தனே, எப்போது ஒருவன் தமது மனக் கற்பனையினால் எழும் புலனுகர்ச்சிக்கான எல்லா ஆசைகளையும் துறந்து, தூய்மையடைந்த மனதுடன் தன்னில் திருப்தியடைகின்றானோ, அப்போது அவன் தெய்வீக உணர்வில் நிலைபெற்றவனாக அறியப்படுகிறான்.
2.56
து: கேஷ்வ் அனுத்விக்ன-மனா:
ஸுகேஷு விகத-ஸ்ப்ருஹ:
வீத-ராக-பய-க்ரோத:
ஸ்தித-தீர் முனிர் உச்யதே
மூவகைத் துன்பங்களால் பாதிக்கப்படாத மனம் உடையவனும், இன்பத்தில் மிக்க மகிழாதவனும், பற்றுதல், பயம், கோபம் இவற்றிலிருந்து விடுபட்டவனுமான ஒருவன் ‘நிலைத்த மனமுடைய முனிவன் ‘ என்று அழைக்கப்படுகிறான்.
2.57
ய: ஸர்வத்ரானபிஸ்நேஹஸ்
தத் தத் ப்ராப்ய ஷுபாஷுபம்
நாபி நந்ததி ந த்வேஷ்டி
தஸ்ய ப்ரக்ஞா ப்ரதிஷ்டிதா
இப்பௌதிக உலகில், எவனொருவன் நன்மை தீமைகளை அடையும்போது அவற்றால் பாதிக்கப்படாமல், அவற்றை புகழாமலும் இகழாமலும் இருக்கின்றானோ, அவன் பக்குவ அறிவில் நிலைபெற்றவனாவான்.
2.58
யதா ஸம்ஹரதே சாயம்
கூர்மோ (அ)ங்கானீவ ஸர்வஷ:
இந்த்ரியாணீந்த்ரியார்தேப்யஸ்
தஸ்ய ப்ரக்ஞா ப்ரதிஷ்டிதா
ஆமை தன் அங்கங்களைக் கூட்டிற்குள் இழுத்துக் கொள்வதைப் போல, எவனொருவன் தன் புலன்களைப் புலனுகர்ச்சிப் பொருள்களிலிருந்து விலகிக் கொள்கிறானோ, அவன் பக்குவ உணர்வில் நிலைபெற்றவனாவான்.
2.59
விஷயா வினிவர்தந்தே
நிராஹாரஸ்ய தேஹின:
ரஸ-வர்ஜம் ரஸோ (அ)ப்யஸ்ய
பரம் த்ருஷ்ட்வா நிவர்த்ததே
உடல் பெற்ற ஆத்மாவை புலனின்பத்திலிருந்து கட்டுப்படுத்தினாலும், புலனுகர்ச்சிப் பொருள்களுக்கான சுவை அப்படியே இருக்கும். ஆனால் புலனின்ப ஈடுபாடுகளை உயர்ந்த சுவையினால் ஒழிப்பவன், தனது உணர்வில் நிலைபெற்றுள்ளான்.
2.60
யததோ ஹ்யபி கௌந்தேய
புருஷஸ்ய விபஷ் சித:
இந்த்ரியாணி ப்ரமாதீனி
ஹரந்தி ப்ரஸபம் மன:
அர்ஜுனா, கட்டுப்படுத்த முயலும் பகுத்தறிவுடைய மனிதனின் மனதையும், பலவந்தமாக இழுத்துச் செல்லுமளவிற்குப் புலன்கள் சக்தி வாய்ந்ததும் அடங்காததுமாகும்.
2.61
தானி ஸர்வாணி ஸம்யம்ய
யுக்த ஆஸீத மத் பர:
வஷே ஹி யஸ்யேந்த்ரியாணி
தஸ்ய ப்ரக்ஞா ப்ரதிஷ்டிதா
புலன்களை அடக்கி, அவற்றை முழுக் கட்டுப்பாட்டில் வைத்து, தனது உணர்வை என்னில் நிறுத்துபவன், நிலைத்த அறிவுடையவன் என்று அறியப்படுகிறான்.
2.62
த்யாயதோ விஷயான் பும்ஸ:
ஸங்கஸ் தேஷூபஜாயதே
ஸங்காத் ஸஞ்ஜாயதே காம:
காமாத் க்ரோதோ (அ)பிஜாயதே
புலன்நோக்குப் பொருள்களை சிந்திப்பதால், மனிதன் அதன் மேல் பற்றுதலை வளர்த்துக் கொள்கிறான். அந்தப் பற்றுதலில் இருந்து காமமும் காமத்திலிருந்து கோபமும் தோன்றுகின்றன.
2.63
க்ரோதாத் பவதி ஸம்மோஹ:
ஸம்மோஹாத் ஸ்ம்ருதி-விப்ரம:
ஸ்ம்ருதி-ப்ரம்ஷாத் புத்தி-நாஷோ
புத்தி-நாஷாத் ப்ரணஷ்யதி
கோபத்திலிருந்து பூரண மயக்கமும், மயக்கத்தினால் நினைவு நிலை இழப்பும் ஏற்படுகின்றன. நுனைவு குழம்புவதால் அறிவு இழக்கப்படுகிறது, அறிவு இழக்கப்பட்டவுடன், ஒருவன் மீண்டும் ஜட வாழ்க்கையில் வீழ்கிறான்.
2.64
ராக–த்வேஷ-விமுக்தைஸ் து
விஷயான் இந்த்ரியைஷ் சரன்
ஆத்ம-வஷ்யைர் விதேயாத்மா
ப்ரஸாதம் அதி கச்சதி
எல்லாவிதமான விருப்பு வெறுப்புகளிலிருந்தும் விடுபட்டு, விடுதலைக்கான விதிகளால் புலன்களைக் கட்டுப்படுத்துபவன், கடவுளின் முழுக் கருணையை அடைய முடியும்.
2.65
ப்ரஸாதே ஸர்வ-து:கானாம்
ஹானிர் அஸ்யோபஜாயதே
ப்ரஸன்ன-சேதஸோ ஹ்யாஷு
பு த்தி: பர்யவதிஷ்டதே
இவ்வாறு (கிருஷ்ண உணர்வில்) திருப்தியுற்றவனுக்கு, ஜட உலகின் மூவகைத் துன்பங்களால் பாதிப்பு ஏற்படுவதில்லை. இத்தகைய திருப்தியுற்ற உணர்வில் அவனது புத்தி வெகு விரைவில் நிலைபெறுகின்றது.
2.66
நாஸ்தி புத்திர் அயுக்தஸ்ய
ந சாயுக்தஸ்ய பாவனா
ந சாபாவயத: ஷாந்திர்
அஷாந்தஸ்ய குத: ஸுக ம்
பரமனுடன் (கிருஷ்ண உணர்வின் மூலமாக) தொடர்பு கொள்ளாமல், திவ்யமான அறிவையோ கட்டுப்பாடான மனதையோ அடைய முடியாது. இவையின்றி அமைதிக்கு வழியில்லை. அமைதி இல்லாவிடில் ஆனந்தம் எவ்வாறு உண்டாகும்?
2.67
இந்த்ரியாணாம் ஹி சரதாம்
யன் மனோ (அ)னுவிதீயதே
தத் அஸ்ய ஹரதி ப்ரக்ஞாம்
வாயுர் நாவம் இவாம்பஸி
நீரின் மீதுள்ள படகை கடுங்காற்று அடித்துச் செல்வதைப் போல, அலைபாயும் புலன்களில் ஏதேனும் ஒன்றின் மீது மனம் ஈர்க்கப்பட்டு விட்டால், அந்த ஒரே ஒரு புலன் கூட மனிதனின் அறிவை இழுத்துச் சென்றுவிடும்.
2.68
தஸ்மாத் யஸ்ய மஹா-பாஹோ
நிக்ருஹீதானி ஸர்வஷ:
இந்த்ரியாணீந்தரியார்தேப்யஸ்
தஸ்ய ப்ரக்ஞா ப்ரதிஷ்டிதா
எனவே, பலம் பொருந்திய புயங்களை உடையவனே, எவனுடைய புலன்கள் புலனுகர்ச்சிப் பொருள்களிலிருந்து முற்றிமாக விலக்கப்பட்டுள்ளதோ, அவன் நிச்சயமாக நிலைத்த அறிவுடையவனாகிறான்.
2.69
யா நிஷா ஸர்வ பூதானாம்
தஸ்யாம் ஜாகர்தி ஸம்யமி
யஸ்யாம் ஜாக்ரதி பூதானி
ஸா நிஷா பஷ்யதோ முனே:
எல்லா உயிர்களுக்கும் எது இரவோ, அது சுயக் கட்டுப்பாடு உள்ளவனுக்கு விழித்தெழும் நேரமாகும். எல்லா உயிர்களுக்கும் எது விழித்தெழும் நேரமோ, அது ஆய்வறிவு கொண்ட முனிவனுக்கு இரவாகின்றது.
2.70
ஆபூர்யமாணம் அசல-ப்ரதிஷ்டம்
ஸமுத்ரம் ஆப: ப்ரவிஷந்தி யத் வத்
தத் வத் காமா யம் ப்ரவிஷந்தி ஸர்வே
ஸ ஷாந்திம் ஆப்னோதி ந காம-காமீ
நதிகள் கடலில் வந்து கலந்தாலும், கடல் மாறுவதில்லை. அது போல தடையின்றி வரும் ஆசைகளால் பாதிக்கப்படாதவன் மட்டுமே அமைதியை அடைய முடியும். அத்தகு ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள விரும்புபவனல்ல.
2.71
விஹாய காமான் ய: ஸர்வான்
புமாம்ஷ் சரதி நி:ஸ்ப்ருஹ:
நிர்மமோ நிரஹங்கார:
ஸ ஷாந்திம் அதிகச்சதி
புலனுகர்ச்சிக்கான எல்லா விருப்பங்களைத் துறந்தவனும், ஆசைகள் இல்லாதவனும், உரிமையாளன் என்னும் எல்லா உணர்வுகளைத் துறந்திருப்பவனும், அஹங்காரம் இல்லாதவனுமான ஒருவனே உண்மை அமைதியை அடைய முடியும்.
2.72
ஏஷா ப்ராஹ்மி ஸ்திதி: பார்த
நைனாம் ப்ராப்ய விமுஹ்யதி
ஸ்தித்வாஸ்யாம் அந்த-காலே (அ)பி
ப்ரஹ்ம-நிர்வாணம் ருச்சதி
இதுவே ஆன்மீகமான தெய்வீக வாழ்விற்கு வழி. இதனை அடைந்த மனிதன் குழப்பமடைவதில்லை. இந்த நிலையை தனது மரணத் தருவாயில் அடைபவனும்கூட, இறைவனின் திருநாட்டிற்குள் நுழைகிறான்.