அத்தியாயம் ஏழு: பூரணத்தின் ஞானம்
7.1
ஸ்ரீ-பகவான் உவாச
மய் யாஸக்த-மனா: பார்த
யோகம் யுஞ்ஜன் மத்–ஆஷ்ரய:
அஸம்ஷயம் ஸமக்ரம் மாம்
யதா க்ஞாஸ்யஸி தச் ச்ருணு
புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்: பிருதாவின் மகனே, என்னிடம் பற்றுதல் கொண்ட மனுதுடன், என்னைப் பற்றிய முழு உணர்வில், யோகத்தைப் பயில்வதன் மூலம் என்னை நீ எவ்வாறு சந்தேகம் ஏதுமின்றி முழுமையாக அறிந்து கொள்ளலாம் என்பதை இனி கேட்பாயாக.
7.2
க்ஞானம் தே (அ)ஹம் ஸ-விக்ஞானம்
இதம் வக்ஷ்யாம்-யஷேஷத:
யஜ் க்ஞாத்வா னேஹ பூயோ (அ)ன்யஜ்
க்ஞாதவ்யம் அவஷிஷ்யதே
தற்போது, சாதாரண அறிவையும் தெய்வீக அறிவையும் நான் உனக்கு முழுமையாக அறிவிக்கின்றேன். இதனை அறிந்த பின் நீ அறிய வேண்டியவை ஏதும் இருக்காது.
7.3
மனுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷு
கஷ்சித் யததி ஸித்தயே
யததாம் அபி ஸித்தானாம்
கஷ்சின் மாம் வேத்தி தத்த்வத:
ஆயிரமாயிரம் மனிதர்களில் யாரேனும் ஒருவன் பக்குவமடைய முயற்சி செய்யலாம். அவ்வாறு பக்குவமடைந்தவர்களில் கூட யாரேனும் ஒருவனே என்னை உண்மையாக அறிகிறான்.
7.4
பூமிர் ஆபோ (அ)னலோ வாயு:
கம் மனோ புத்திர் ஏவ ச
அஹங்கார இதீயம் மே
பின்னா ப்ரக்ருதிர் அஷ்டதா
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், மனம், புத்தி, அஹங்காரம்—இந்த எட்டும் சேர்ந்ததே எனது பிரிந்த ஜட சக்திகளாகும்.
7.5
அபரேயம்இதஸ் த்வன்யாம்
ப்ரக்ருதிம் வித்தி மே பராம்
ஜீவ-பூதாம் மஹா-பாஹோ
யயேதம் தார்யதே ஜகத்
பலம் பொருந்திய புயங்களை உடைய அர்ஜுனா, இதற்கு அப்பால், என்னுடைய உயந்த சக்தி ஒன்று உள்ளது. இந்த தாழ்ந்த ஜட இயற்கையினை தனது சுயநலனிற்காக உபயோகிக்ககூடிய ஜீவாத்மாக்களை அஃது உள்ளடக்கியதாகும்.
7.6
ஏதத்-யோனீனி பூதானி
ஸர்வாணீத் யுபதாரய
அஹம் க்ருத்ஸ்னஸ்ய ஜகத:
ப்ரபவ: ப்ரலயஸ் ததா
படைக்கப்பட்டவை அனைத்தும் இந்த இரண்டு இயற்கையைச் சேர்ந்தவையே. இவ்வுலகில் ஜடமாகவும் ஆன்மீகமாகவும் இருப்பவை அனைத்திற்கும், ஆதியும் அந்தமும் நானே என்பதை நிச்சயமாக அறிவாயாக.
7.7
மத்த: பரதரம் நான்யத்
கிஞ்சித் அஸ்தி தனஞ்ஜய
மயி ஸ்ர்வம் இதம் ப்ரோதம்
ஸூத்ரே மணி-கணா இவ
செல்வத்தை வெல்வோனே, என்னைவிட உயர்ந்த உண்மை ஏதுமில்லை. நூலில் முத்துக்கள் கோர்க்கப்பட்டுள்ளதுபோல, அனைத்தும் என்னையே சார்ந்துள்ளன.
7.8
ரஸோ (அ)ஹம் அப்ஸு கௌந்தேய
ப்ரபாஸ்மி ஷஷி-ஸூர்யயோ:
ப்ரணவ: ஸர்வ வேதேஷு
ஷப்த: கே பௌருஷம் ந்ருஷு
குந்தியின் மகனே, நானே நீரின் சுவையும், சூரிய சந்திரர்களின் ஒளியும், வேத மந்திரங்களின் பிரணவ ஒலியுமாக (ஓம்) இருக்கின்றேன்; ஆகாயத்தில் சப்தமாகவும், மனிதரில் திறமையாகவும் இருப்பது நானே.
7.9
புண்யோ கந்த: ப்ருதிவ்யாம் ச
தேஜஷ் சாஸ்மி விபாவஸெள
ஜீவனம் ஸர்வ-பூதேஷு
தபஷ் சாஸ்மி தபஸ்விஷு
நிலத்தின் மூல நறுமணமும், நெருப்பின் வெப்பமும் நானே. உயிரினங்களின் உயிரும், தவம் புரிவோரின் தவமும் நானே.
7.10
பீஜம் மாம் ஸர்வ-பூதானாம்
வித்தி பார்த ஸநாதனம்
புத்திர் புத்திமதாம் அஸ்மி
தேஜஸ் தேஜஸ்வினாம் அஹம்
பிருதாவின் மகனே, எல்லா உயிரினங்களின் மூல விதையும், புத்திசாலிகளின் புத்தியும், பலசாலிகளின் பலமும் நானே என்பதை அறிவாயாக.
7.11
பலம் பலவதாம் சாஹம்
காம-ராக-விவர்ஜிதம்
தர்மாவிருத்தோ பூதேஷு
காமோ (அ)ஸ்மி பரதர்ஷப
பரதர்களின் தலைவா (அர்ஜுனா), காமமும் பற்றுதலும் அறவே இல்லாத பலசாலிகளின் பலம் நானே. தர்மத்தின் கொள்கைகளுக்கு விரோதமில்லாத காமமும் நானே.
7.12
யே சைவ ஸாத்த்விகா பாவா
ராஜஸாஸ் தாமஸாஷ் ச யே
மத்த ஏவேதி தான் வித்தி
ந த்வஹம் தேஷு தே மயி
ஸத்வம், ரஜஸ், தமஸ் இவற்றில் எந்த வாழ்க்கை நிலையானாலும், அவை எனது சக்தியால் படைக்கப்படுபவை என்பதை அறிவாயாக. ஒருவிதத்தில் நானே எல்லாம் என்றபோதிலும், நான் சுதந்திரமானவன். நான் ஜட இயற்கையின் குணங்களுக்கு உட்பட்டவனல்ல, மாறாக அவை எனக்குள் அடக்கம்.
7.13
த்ரிபிர் குண—மயைர் பாவைர்
ஏபி: ஸர்வம் இதம் ஜகத்
மோஹிதம் நாபி ஜானாதி
மாம் ஏப் ய: பரம் அவ்யயம்
(ஸத்வம், ரஜஸ், தமஸ் என்னும்) மூவகை குணங்களில் மங்கியிருப்பதால், குணங்களுக்கு அப்பாற்பட்ட அழிவற்ற என்னை முழு உலகமும் அறியாது.
7.14
தைவீ ஹ்யேஷா குண—மயீ
மம மாயா துரத்யயா
மாம் ஏவ யே ப்ரபத்யந்தே
மாயாம் ஏதாம் தரந்தி தே
ஜட இயற்கையின் முக்குணங்களாலான எனது இந்த தெய்வீக சக்தி வெல்லுவதற்கரியது. ஆனால் என்னிடம் சரணடைந்தோர் இதனை எளிதில் கடக்கலாம்.
7.15
ந மாம் துஷ்க்ருதினோ மூடா
ப்ரபத் யந்தே நராத மா:
மாயயாபஹ்ருத-க்ஞானா
ஆஸுரம் பாவம் ஆஷ்ரிதா:
சற்றும் அறிவற்ற மூடர்களும், மனிதரில் கடைநிலையோரும், மாயையால் அறிவு கவரப்பட்டவர்களும், அசுரரின் நாத்திகத் தன்மையை ஏற்றவர்களுமான துஷ்டர்கள் என்னிடம் சரணடையவதில்லை.
7.16
சதுர்-விதா பஜந்தே மாம்
ஜனா: ஸுக்ருதினோ (அ)ர்ஜுன
ஆர்தோ ஜிக்ஞாஸுர் அர்தார்தீ
க்ஞானி ச பரதர்ஷப
பரதர்களில் சிறந்தவனே, நான்கு விதமான நல்லோர் எனக்குத் தொண்டு புரிகின்றனர்— துயருற்றோர், செல்வத்தை விரும்புவோர், கேள்வியுடையோர், பூரணத்தின் அறிவைத் தேடுவோர் என்பவர் அவர்கள்.
7.17
தேஷாம் க்ஞானீ நித்ய–யுக்த
ஏக-பக்திர் விஷிஷ்யதே
ப்ரியோ ஹி க்ஞானினோ (அ)த்யர்தம்
அஹம் ஸ ச மம ப்ரிய:
இவர்களில், முழு ஞானத்துடன் எப்போதும் தூய பக்தித் தொண்டில் ஈடுபட்டிருப்பவனே சிறந்தவன்; ஏனெனில், நான் அவனுக்கு மிகவும் பிரியமானவன், அவனும் எனக்கு மிகவும் பிரியமானவன்.
7.18
உதாரா: ஸர்வ ஏவைதே
க்ஞானீ த்வாத்மைவ மே மதம்
ஆஸ்தித: ஸ ஹி யுக்தாத்மா
மாம் ஏவானுத்தமாம் கதிம்
இந்த பக்தர்கள் அனைவருமே சந்தேகமின்றி உத்தமர்கள்தான்; ஆயினும், என்னைப் பற்றிய ஞானத்தில் நிலைபெற்றுள்ளவனை, நான் என்னைப் போலவே கருதுகிறேன். அவன் எனது உன்னத தொண்டில் ஈடுபட்டிருப்பதால், மிகவுயர்ந்த, பக்குவ இலக்கான என்னை அவன் அடைவது உறுதி.
7.19
பஹூனாம் ஜன்மனாம் அந்தே
க்ஞானவான் மாம் ப்ரபத்யதே
வாஸுதேவ: ஸர்வம் இதி
ஸ மஹாத்மா ஸு-துர்லப:
பற்பல பிறவிகளுக்குப் பின், உண்மையான அறிவுடையவன், எல்லாக் காரணங்களுக்கும் காரணமாக, எல்லாமாக என்னை அறிந்து, என்னிடம் சரணடைகிறான். அத்தகைய மகாத்மா மிகவும் அரிதானவன்.
7.20
காமைஸ் தைஸ் தைர் ஹ்ருத-க்ஞானா:
ப்ரபத்யந்தே (அ)ன்ய-தேவதா:
தம் தம் நியமம் ஆஸ்தாய
ப்ரக்ருத்யா நியதா: ஸ்வயா
ஜட ஆசைகளால் அறிவை இழந்தவர்கள், தேவர்களிடம் சரணடைந்து, தங்களது இயற்கைக்கு ஏற்ற வழிபாட்டு முறைகளையும் நியமங்களையும் பின்பற்றுகின்றனர்.
7.21
யோ யோ யாம் யாம் தனும் பக்த:
ஷ்ரத்தயார்சிதும் இச்சதி
தஸ்ய தஸ்யாசலாம் ஷ்ரத்தாம்
தாம் ஏவ விததாம்-யஹம்
எல்லோரது இதயத்திலும் நான் பரமாத்மாவாக இருக்கிறேன். தேவர்களை வழிபட வேண்டுமென ஒருவன் விரும்பும்போது, அந்த குறிப்பிட்ட தேவனிடம் பக்தி செய்வதற்கான அவனது நம்பிக்கையை நானே பலப்படுத்துகிறேன்.
7.22
ஸ தயா ஷ்ரத்தயா யுக்தஸ்
தஸ்யாராதனம் ஈஹதே
லபதே ச தத: காமான்
மயைவ விஹிதான் ஹி தான்
இத்தகைய நம்பிக்கையுடன் இணைந்து, அவன் ஒரு குறிப்பிட்ட தேவரை வழிபட்டு, தனது ஆசைகளைப் பூர்த்தி செய்ய முயற்சி செய்கிறான். ஆனால் உண்மையில் இந்த நன்மைகளெல்லாம் என்னால் மட்டுமே அளிக்கப்படுபவையாகும்.
7.23
அந்தவத் து பலம் தேஷாம்
தத் பவத்-யல்ப-மேதஸாம்
தேவான் தேவ-யஜோ யாந்தி
மத்-பக்தா யாந்தி மாம் அபி
தேவர்களை வழிபடும் சிற்றறிவு படைத்த மக்களது பலன்கள், தற்காலிகமானதும் ஓர் எல்லைக்கு உட்பட்டதுமாகும். தேவர்களை வழிபடுவோர் தேவர்களின் உலகங்களுக்குச் செல்வர், ஆனால் எனது பக்தர்கள் இறுதியில் எனது உன்னத உலகை அடைகின்றனர்.
7.24
அவ்யக்தம் வ்யக்திம் ஆபன்னம்
மன்யந்தே மாம்அபுத்தய:
பரம் பாவம் அஜானந்தோ
மமாவ்யயம் அனுத்தமம்
என்னை பக்குவமாக அறியாத அறிவற்ற மனிதர்கள், கிருஷ்ணர் எனப்படும் பரம புருஷ பகவானாகிய நான், முன்னர் அருவமாக இருந்ததாகவும் தற்போது உருவத்தை ஏற்றிருப்பதாகவும் எண்ணுகின்றனர். அவர்களது சிற்றறிவினால், அழிவற்றதும் மிகவுயர்ந்ததுமான எனது பரம இயற்கையைப் பற்றி அவர்கள் அறியார்.
7.25
நாஹம் ப்ரகாஷ: ஸர்வஸ்ய
யோக-மாயா-ஸமாவ்ருத:
மூடோ (அ)யம் நாபிஜானாதி
லோகோ மாம் அஜம் அவ்யயம்
சிற்றறிவுடையோருக்கும் முட்டாளுக்கும் நான் ஒருபோதும் தோன்றுவதில்லை. நான் எனது அந்தரங்க சக்தியால் கவரப்பட்டுள்ளேன், எனவே நான் பிறப்பற்றவன், அழிவற்றவன் என்பதை இவர்கள் அறிவதில்லை.
7.26
வேதாஹம் ஸமதீதானி
வர்தமானானி சார்ஜுன
பவிஷ்யாணி ச பூதானி
மாம் து வேத ந கஷ்சன
அர்ஜுனா, முழுமுதற் கடவுளான நான், கடந்த காலத்தில் நடந்தவை, தற்போது நடப்பவை, இனி நடக்க போகின்றவை அனைத்தையும் அறிவேன். நான் எல்லா ஜீவாத்மாக்களையும் நன்கறிவேன், ஆனால் என்னை அறிந்தவர் யாருமில்லை.
7.27
இச்சா-த்வேஷ-ஸமுத்தேன
த்வந்த்வ-மோஹேன பாரத
ஸர்வ-பூதானி ஸம்மோஹம்
ஸர்கே யாந்தி பரந்தப
பரத குலத் தோன்றலே, எதிரிகளை வெல்வோனே, விருப்பு வெறுப்பினால் உண்டான இருமைகளில் மயங்கியுள்ள எல்லா உயிர்வாழிகளும், மிகுந்த குழப்பதுடன் பிறந்துள்ளனர்
7.28
யேஷாம் த்வந்த-கதம் பாபம்
ஜனானாம் புண்ய-கர்மணாம்
தே த்வந்த்வ-மோஹ-நிர்முக்தா
பஜந்தே மாம் த்ருட-வ்ரதா
முற்பிறவியிலும் இப்பிறவியிலும் புண்ணிய செயல்களில் ஈடுபட்டு, எவர்களது பாவ விளைவுகள் முழுமையாக ஒழிக்கப்பட்டுவிட்டதோ, எவர்கள் மயக்கத்தின் இருமையிலிருந்து பூரணமாக விடுபட்டுள்ளார்களோ, அவர்களே எனது பக்தித் தொண்டில் மனவுறுதியுடன் ஈடுபடுவர்.
7.29
ஜரா -மரண-மோக்ஷாய
மாம்-ஆஷ்ரித்ய யதந்தி யே
தே ப்ரஹ்ம தத் விது: க்ருத்ஸ்னம்-
அத்யாத்மம் கர்ம சாகிலம்
முதுமையிலிருந்தும் மரணத்திலிருந்தும் விடுபட முயலும் அறிவுடையோர், பக்தித் தொண்டின் மூலம் என்னிடம் அடைக்கலம் புகுகின்றனர். திவ்யமானச் செயல்களைப் பற்றிய அனைத்தையும் அறிவதால், அவர்கள் உண்மையில் பிரம்மனே.
7.30
ஸாதிபூதாதிதைவம் மாம்
ஸாதியக்ஞம் ச யே விது:
ப்ரயாண-காலே (அ)பி ச மாம்
தே விதுர் யுக்த-சேதஸ:
பௌதிகத் தோற்றம், தேவர்கள் மற்றும எல்லாவித யாகங்களை ஆள்பவனாகவும், பரம புருஷனாகவும், என்னை அறிந்து, என்னைப் பற்றிய உணர்வுடன் இருப்பவர்கள், மரண நேரத்திலும்கூட பரம புருஷ பகவானான என்னைஅறிய முடியும்.