ஸ்ரீமத் பகவத்கீதை – ஐந்தாவது அத்தியாயம்


அத்தியாயம் ஐந்து: கர்ம யோகம் – கிருஷ்ண உணர்வில் செயல்

5.1

அர்ஜுன உவாச

ஸன்ன்யாஸம் கர்மணாம் க்ருஷ்ண

புனர் யோக ம் ச ஷம்ஸஸி

யச் ச் ரேய ஏதயோர் ஏகம்

தன் மே ப்ரூஹி ஸுநிஷ் சிதம்

 

அர்ஜுனன் கூறினான், கிருஷ்ணரே, முதலில் செயலைத் துறக்கவும் பின்னர் பக்தியுடன் செயலாற்றவும் பரிந்துரைத்துள்ளீர். இவையிரண்டில் சிறந்த நன்மையைத் தருவது எது என்பதை தயவு செய்து தெளிவாக விளக்குவீராக.

5.2

ஸ்ரீ-பகவான் உவாச

ஸன்ன்யாஸ கர்ம-யோகஷ் ச

நிஷ்ரேயஸ-கராவ் உபௌ

தயோஸ் து கர்ம-ஸன்ன்யாஸாத்

கர்மயோகோ விஷி ஷ்யதே

 

புருஷோத்தமராகிய முழுமுதற் கடவுள் பதிலுரைத்தார். செயலைத் துறத்தல், பக்தியுடன் செயல்படுதல் இரண்டுமே முக்திக்கு ஏற்றதாகும். ஆனால் இவையிரண்டில், செயலைத் துறப்பதைவிட பக்தித் தொண்டில் செயல்படுவது சிறந்ததாகும்.

5.3

க்ஞேய: ஸ நித்ய-ஸன்ன்யாஸீ

யோ ந த்வேஷ்டி ந காங்க்ஷதி

நிர்த்வந்த்வோ ஹி மஹா-பாஹோ

ஸுகம் பந்தாத் ப்ரமுச்யதே

 

எவனொருவன் தனது செயல்களின் விளைவுகளில் விருப்பு வெறுப்பு அற்றவனோ, அவனே நிரந்தரமான சந்நியாசி யாவான். பலம் பொருந்திய புயங்களை உடைய அர்ஜுனா, எல்லா இருமைகளிலிருந்தும் விடுபட்டுள்ள அத்தகையோன், பௌதிக பந்தங்களை எளிதில் வென்று, முழுமையாக முக்தியடைகிறான்.

5.4

ஸாங்க்ய-யோகௌ ப்ருதக் பாலா

ப்ரவதந்தி ந பண்டிதா:

ஏகம் அப்-யாஸ்தித: ஸம்யக்

உபயோர் விந்ததே பலம்

 

பக்தித் தொண்டு (கர்ம யோகம்) ஜட உலகின் ஆய்வு அறிவிலிருந்து (ஸாங்கிய யோகத்திலிருந்து) வேறுபட்டது என்று அறிவற்றோரே பேசுவர். எவனொருவன் தன்னை இவ்விரண்டு பாதைகளில் ஏதேனும் ஒன்றில் முழுமையாக ஈடுபத்துகிறானோ, அவன் இரண்டின் பலனையும் அடைகிறான் என்று உண்மையான பண்டிதர்கள் கூறுகின்றனர்.

5.5

யத் ஸாங்க்யை: ப்ராப்யதே ஸ்தானம்

தத் யோகைர் அபி கம்யதே

ஏகம் ஸாங்க்யம் ச யோகம் ச

ய: பஷ்யதி ஸ பஷ்யதி

 

எவனொருவன், ஸாங்கிய யோகத்தினால் அடையக்கூடிய அதே நிலை பக்தித் தொண்டினாலும் அடையக்கூடியதே என்பதை அறிந்து, ஸாங்கிய யோகத்தையும் பக்தித் தொண்டையும் சமநிலையில் காண்கிறானோ, அவனே உள்ளதை உள்ளபடி காண்பவனாவான்.

5.6

ஸன்ன்யாஸஸ் து மஹா-பாஹோ

து:கம் ஆப்தும் அயோகத:

யோக-யுக்தோ முனிர் ப்ரஹ்ம

ந சிரேணாதி கச்சதி

 

இறைவனின் பக்தித் தொண்டில் ஈடுபடாமல், வெறுமனே எல்லாச் செயல்களையும் துறப்பது ஒருவனை மகிழ்விக்காது. ஆனால் பக்தித் தொண்டில் ஈடுபட்டுள்ள சிந்தனையுடைய மனிதன், தாமதமின்றி பரம்பொருளை அடைய முடியும்.

5.7

யோக-யுக்தோ விஷுத்தாத்மா

விஜிதாத்மா ஜிதேந்த்ரிய:

ஸர்வ-பூதாத்ம-பூதாத்மா

குர்வன்ன் அபி ந லிப்யதே

 

மனதையும், புலன்களையும் கட்டுப்படுத்தி பக்தியுடன் செயல்படும் தூய ஆத்மா, அனைவருக்கும் பிரியமானவன், அனைவரும் அவனுக்கு பிரியமானவர்கள், எப்போதும் செயலில் ஈடுபட்டுள்ளபோதிலும், அத்தகு மனிதன் பந்தப்படுவதில்லை.

5.8-9

நைவ கிஞ்சித் கரோமீதி

யுக்தோ மன்யேத தத்த்வ-வித்

பஷ்யஞ் ஷ்ருண்வன் ஸ்ப்ருஷஞ் ஜிக்ரன்ன்

அஷ்னன் கச்சன் ஸ்வபன் ஷ்வஸன்

ப்ரலபன் விஸ்ருஜன் க்ருஹ்ணன்ன்

உன்மிஷன் நிமிஷன்ன் அபி

இந்த்ரியாணீந்த்ரியார்தேஷு

வர்தந்த இதி தாரயன்

 

தெய்வீக உணர்வில் இருப்பவன், பார்த்தல், கேட்டல், தொடுதல், நுகர்தல், உண்ணுதல், செல்லுதல், உறங்குதல், சுவாசித்தல் ஆகியவற்றில் ஈடுபட்டிருப்பினும், உண்மையில் தான் ஒன்றுமே செய்வதில்லை என்பதை எப்போதும் தனக்குள் அறிந்துள்ளான். ஏனெனில், பேசும்போதும், கழிக்கும்போதும், ஏற்றுக் கொள்ளும் போதும், கண்களை மூடித் திறக்கும்போதும், ஜடப்புலன்களே அவற்றின் விஷயங்களுடன் ஈடுபடுகின்றன என்றும், அவற்றிலிருந்து தான் வேறுபட்டவன் என்றும், அவன் எப்போதும் அறிகின்றான்.

5.10

ப்ரஹ்மண்-யாதாய கர்மாணி

ஸங்கம் த்யக்த்வா கரோதி ய:

லிப்யதே ந ஸ பாபேன

பத்ம-பத்ரம் இவாம்பஸா

 

பற்றின்றி தனது கடமைகளைச் செய்து, பலன்களை பரம புருஷ பகவானுக்கு அர்ப்பணிப்பவன், தாமரை இலை எவ்வாறு நீரால் தீண்டப்படுவதில்லையோ, அதுபோல அவன் பாவ விளைவுகளால் தீண்டப்படுவதில்லை.

5.11

காயேன மனஸா புத்த்யா

கேவலைர் இந்த்ரியைர் அபி

யோகின: கர்ம குர்வந்தி

ஸங்கம் த்யக்த்வாத்ம-ஷுத்தயே

 

பற்றுதலைத் துறந்த யோகிகள், தூய்மையடைய வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன், உடல், மனம், புத்தி மற்றும் புலன்களால் கூட செயல்படுகின்றனர்.

5.12

யுக்த: கர்ம-பலம் த்யக்த்வா

ஷாந்திம் ஆப்னோதி நைஷ்டிகீம்

அயுக்த: காம-காரேண

பலே ஸக்தோ நிபத்யதே

 

பக்தியில் உறுதியாக உள்ள ஆத்மா, எல்லாச் செயல்களின் பலனையும் எனக்கே அர்ப்பணிப்பதால், பூரண அமைதியை அடைகிறான். ஆனால் தெய்வீகத்துடன் இணையாதவனோ, தனது முயற்சியின் பலனை அனுபவிக்கும் பேராசையால் பந்தப்படுகிறான்.

5.13

ஸர்வ-கர்மாணி மனஸா

ஸன்ன்யஸ்யாஸ்தே ஸுகம் வஷீ

நவ-த்வாரே புரே தேஹீ

நைவ குர்வன் ந காரயன்

 

உடலையுடைய ஆத்மா, தனது இயற்கையைக் கட்டுப்படுத்தி, மனதால் எல்லாச் செயல்களையும் துறந்துவிடும் போது, செய்யாமலும் காரணமாகாமலும் ஒன்பது கதவுகளைக் கொண்ட நகரில் (பௌதிக உடலில்) இன்பமாக வசிக்கின்றான்.

5.14

ந கர்த்ருத்வம் ந கர்மாணி

லோகஸ்ய ஸ்ருஜதி ப்ரபு:

ந கர்ம-ப ல-ஸம்யோகம்

ஸ்வபாவஸ் து ப்ரவர்ததே

 

உடல் என்னும் நகரத்தின் நாயகனான ஆத்மா, செயல்களை உண்டாக்குவதில்லை, செயல்படுமாறு மக்களைத் தூண்டுவதுமில்லை, செயல்களின் பலன்களையும் உண்டாக்குவதில்லை. இவையெல்லாம் ஜட இயற்கையின் குணங்களால் செயலாற்றப் படுபவையே.

5.15

நாதத்தே கஸ்யசித் பாபம்

ந சைவ ஸுக்ருதம் விபு:

அக்ஞானேனாவ்ருதம் க்ஞானம்

தேன முஹ்யந்தி ஜந்தவ:

 

அச்செயலின் பாவ புண்ணித்தை பரம புருஷரும் ஏற்பதில்லை. ஜீவனின் உண்மை ஞானம் அறியாமையினால் மறைக்கப் பட்டுள்ளது. இந்த அறியாமையே ஆத்மாவின் மயக்கத்திற்கு காரணமாகும்.

5.16

க்ஞானேன து தத் அக்ஞானம்

யேஷாம் நாஷிதம் ஆத்மன:

தேஷாம் ஆதித்ய-வஜ் க்ஞானம்

ப்ரகாஷயதி தத் பரம்

 

இருப்பினும், அஞ்ஞானத்தை அழிக்கும் ஞானத்தால் ஒருவன் தெளிவடையும் போது, பகல் நேரத்தில் சூரியன் எல்லாவற்றையும் வெளிச்சப்படுத்துவதைப் போல, அவனது ஞானம் எல்லாவற்றையும் வெளிப்படுத்துகின்றது.

5.17

தத்-புத்தயஸ் தத்-ஆத்மானஸ்

தன்-நிஷ்டாஸ் தத்-பராயணா:

கச்சந்த்-யபுனர்-ஆவ்ருத்திம்

க்ஞான-நிர்தூத-கல்மஷா:

 

எப்போது ஒருவனது புத்தி, மனம், நம்பிக்கை, புகலிடம் என அனைத்தும் பரத்தில் நிலைநிறுத்தப்படுகிறதோ, அப்போது, பூரண ஞானத்தினால், அவன் தனது களங்கங்களிலிருந்து முற்றிலும் தூய்மையடைந்து, விடுதலைப் பாதையில் நேராக முன்னேறுகிறான்.

5.18

வித்யா-வினய-ஸம்பன்னே

ப்ராஹ்மணே கவி ஹஸ்தினி

ஷுனி சைவ ஷ்வ-பாகே ச

பண்டிதா: ஸம-தர்ஷின:

 

அடக்கமுள்ள பண்டிதர்கள் தங்களது உண்மை ஞானத்தின் வாயிலாக, கற்றறிந்த தன்னடக்கமுள்ள பிராமணன், பசு யானை, நாய், நாயைத் தின்பவன் (கீழ் ஜாதி) என அனை வரையும் சம நோக்கில் காண்கின்றனர்.

5.19

இஹைவ தைர் ஜித: ஸர்கோ

யேஷாம் ஸாம்யே ஸ்திதம் மன:

நிர்தோஷம் ஹி ஸமம் ப்ரஹ்ம

தஸ்மாத் ப்ரஹ்மணி தே ஸ்திதா:

 

ஒருமையிலும் சமத்துவத்திலும் மனதை நிலைநிறுத்தியவர்கள், பிறப்பு இறப்பின் நியதிகளை ஏற்கனவே வென்றுவிட்டனர். பிரம்மனைப் போன்றே தோஷமற்று இருப்பதால், அவர்கள் ஏற்கனவே பிரம்மனில் நிலைபெற்றவர்கள்.

5.20

ந ப்ரஹ்ருஷ்யேத் ப்ரியம் ப்ராப்ய

நோத்விஜேத் ப்ராப்ய சாப்ரியம்

ஸ்திர-புத்திர் அஸம்மூடோ

ப்ரஹ்ம-வித் ப்ரஹ்மணி ஸ்தித:

 

எவனொருவன் விரும்பியவற்றை அடைவதால் மகிழ்வும் விரும்பாதவற்றை பெறுவதால் துயரமும் அடைவதில்லையோ, எவனொருவன் ஸ்திர புத்தியுடனும், மயங்காமலும், இறை விஞ்ஞானத்தை அறிந்தவனாகவும் உள்ளானோ, அவன் ஏற்கனவே பிரம்மனில் நிலைபெற்றவனாவான்.

5.21

பாஹ்ய-ஸ்பர்ஷேஷ்-வஸக்தாத்மா

விந்தத் யாத்மனி யத் ஸுகம்

ஸ ப்ரஹ்ம-யோக-யுக்தாத்மா

ஸுகம் அக்ஷயம் அஷ் னுதே

 

இத்தகு முக்திபெற்ற ஆத்மா ஜடப் புலனின்பங்களால் கவரப் படுவதில்லை, ஆனால் (ஸமாதி நிலையில்) எப்போதும் தன்னுள்ளே சுகத்தை அனுபவிக்கின்றான். இவ்விதமாக, பரத்தை தியானிப்பதால் தன்னுணர்வு உடையோன் எல்லை யற்ற சுகத்தை அனுபவிக்கின்றான்.

5.22

யே ஹி ஸம்ஸ்பர்ஷ-ஜா போகா

து: க-யோனய ஏவ தே

ஆத்-யந்தவந்த: கௌந்தேய

ந தேஷு ரமதே புத:

 

ஜடப் புலன்களின் தொடர்பினால் வரும் இன்பம், துன்பங்களுக்குக் காரணமாக இருப்பதால், அறிவுடையோன் அதில் பங்கு கொள்வதில்லை. குந்தியின் மகனே, இத்தகு இன்பங்களுக்கு ஆரம்பமும் முடிவும் இருப்பதால், அறிவுடையோன் இவற்றினால் மகிழ்ச்சியடைவதில்லை.

5.23

ஷக்னோதீஹைவ ய: ஸோடும்

ப்ராக் ஷரீர-விமோக்ஷணாத்

காம-க்ரோதோ த்பவம் வேகம்

ஸ யுக்த: ஸ ஸுகீ நர:

 

ஒருவனால் தனது தற்போதைய உடலை நீக்கும் முன்பு, ஜடப் புலன்களின் உந்துதல்களை பொறுத்துக் கொள்ளவும், காமத்தையும் கோபத்தையும் கட்டுப்படுத்தவும் முடிந்தால், அவன் நன்கு நிலைபெற்றவனாவான். இவ்வுலகிலேயே அவன் மகிழ்ச்சியுடன் இருப்பான்.

5.24

யோ (அ)ந்த:-ஸுகோ (அ)ந்தர் ஆராமஸ்

ததாந்தர்-ஜ்யோதிர் ஏவ ய:

ஸ யோகீ ப்ரஹ்ம-நிர்வாணம்

ப்ரஹ்ம-பூதோ (அ)திகச்சதி

 

எவனொருவன் தனக்குள் சுகமாக உள்ளானோ, தனக்குள் செயல்பட்டு இன்புறுகின்றானோ, தனக்குள் பார்வையை செலுத்துகின்றானோ, அவனே உண்மையில் பக்குவமான யோகியாவான். அவன் பரத்தில் முக்தி பெற்று பரத்தையே அடைகின்றான்.

5.25

லபந்தே ப்ரஹ்ம-நிர்வாணம்

ருஷய: க்ஷீண-கல்மஷா:

சின்ன-த்வைதா யதாத்மான:

ஸர்வ பூத-ஹிதே ரதா:

 

யாரெல்லாம் சந்தேகத்தினால் எழும் இருமைகளுக்கு அப்பாற் பட்டுள்ளனரோ, மனதை உள்நோக்கி ஈடுபடுத்தியுள்ளனரோ மற்ற உயிர்வாழிகளின் நலனிற்காக பாடுபடுவதில் எப்போதும் முனைப்புடன் உள்ளனரோ, எல்லா பாவங்களிலிருந்தும் விடுபட்டுள்ளனரோ, அவர்கள் பரத்தில் முக்தியடைகின்றனர்.

5.26

காம-க்ரோத-விமுக்தானாம்

யதீனாம் யத-சேதஸாம்

அபிதோ ப்ரஹ்ம-நிர்வாணம்

வர்ததே விதிதாத்மனாம்

 

யாரெல்லாம் கோபத்திலிருந்தும் எல்லா பௌதிக ஆசைகளிலிருந்தும் விடுபட்டுள்ளனரோ, தன்னுணர்வும் தன்னொழுக் கமும் நிறைந்து பக்குவத்தை அடைவதற்காகத் தொடர்ந்து முயற்சி செய்கின்றனரோ, அவர்கள், கூடிய விரைவில் பரத்தில் முக்தியடைவது உறுதி.

5.27-28

ஸ்பர்ஷான் க்ருத்வா பஹிர் பாஹ்யாம்ஷ்

சக்ஷுஷ் சைவாந்தரே ப்ருவோ:

ப்ராணாபானெள ஸமௌ க்ருத்வா

நாஸாப்யந்தர-சாரிணௌ

யதேந்த்ரிய-மனோ-புத்திர்

முனிர் மோக்ஷ-பராயண:

விகதேச்சா-பய-க்ரோதோ

ய: ஸதா முக்த ஏவ ஸ:

 

எல்லாப் புறப்புலன் விஷயங்களையும், வெளியே நிறுத்தி, புருவ மத்தியில் கண்களையும், பார்வையையும், நிறுத்தி, நாசிக்குள் உள், வெளி சுவாசங்களை நிறுத்தி, மனம், புலன்கள் அறிவு இவற்றைக் கட்டுப்படுத்தக்கூடிய முக்தியை விரும்பும் ஆன்மீகவாதி, ஆசை, பயம், கோபம் இவற்றிலிருந்து விடுபடுகிறான். எப்போதும் இந்நிலையில் இருப்பவன், நிச்சயமாக முக்தியடைந்தவனே.

5.29

போக்தாரம் யக்ஞ-தபஸாம்

ஸர்வ-லோக-மஹேஷ்வரம்

ஸுஹ்ருத ம் ஸர்வ-பூதானாம்

க்ஞாத்வா மாம் ஷாந்திம் ருச்சதி

 

நானே, எல்லா யாகங்களையும், தவங்களையும், இறுதியில் அனுபவிப்பவன் என்றும், எல்லா லோகங்களையும், தேவர்களையும், கட்டுப்படுத்துபவன் என்றும், எல்லா உயிர்வாழிகளின் உற்ற நண்பன் என்றும் அறிந்து, என்னைப் பற்றிய முழு உணர்வில் இருப்பவன், ஜடத்துயரங்களிலிருநது விடுபட்டு அமைதி அடைகிறான்.