ஸ்ரீமத் பகவத்கீதை – நான்காவது அத்தியாயம்


அத்தியாயம் நான்கு: உன்னத அறிவு

4.1

ஸ்ரீ-பகவான் உவாச

இமம் விவஸ்வதே யோகம்

ப்ரோக்தவான் அஹம் அவ்யயம்

விவஸ்வான் மனவே ப்ராஹ

மனுர் இக்ஷ்வாகவே (அ)ப்ரவீத்

 

புருஷோத்தமரான முழு முதற் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணர் கூறினார்: அழிவற்ற இந்த யோக விஞ்ஞானத்தை நான் சூரிய தேவனான விவஸ்]வானுக்கு உபதேசித்தேன். விவஸ்]வான் மனித குலத் தந்தையான மனுவுக்கும், மனு, இக்ஷ்வாகு மன்னனுக்கும் இதனை முறையே உபதேசித்தனர்.

4.2

ஏவம் பரம்பரா-ப்ராப்தம்

இமம் ராஜர்ஷயோ விது:

ஸ காலேனேஹ மஹதா

யோகோ நஷ்ட: பரந்தப

 

உன்னதமான இவ்விஞ்ஞானம் சீடர்களின் சங்கிலித் தொடர் மூலமாகப் பெறப்பட்டு, அவ்வாறே புனிதமான மன்னர்களால் உணரப்பட்டது. ஆனால், காலப்போக்கில் அத்தொடர் விட்டுப்போகவே, இவ்விஞ்ஞானம் மறைந்துவிட்டதை போலத் தோன்றுகின்றது.

4.3

ஸ ஏவாயம் மயா தே (அ)த்ய

யோக: ப்ரோக்த: புராதன:

பக்தோ (அ)ஸி மே ஸகா சேதி

ரஹஸ்யம் ஹ்யேதத் உத்தமம்

 

பரமனுடன் உறவு கொள்வதைப் பற்றிய அதே பழம்பெரும் விஞ்ஞானத்தை நான் இன்று உனக்கு எடுத்துரைத்துள்ளேன்; ஏனெனில், நீ எனது பக்தனும் நண்பனுமாதலால் இந்த விஞ்ஞானத்தின் உத்தம இரகசியத்தை உன்னால் புரிந்துகொள்ள முடியும்.

4.4

அர்ஜுன உவாச

அர்ஜுன உவாச

அபரம் பவதோ ஜன்ம

பரம் ஜன்ம விவஸ்வத:

கதம் ஏதத் விஜானீயாம்

த்வம் ஆதௌ ப்ரோக்தவான் இதி

 

அர்ஜுனன் வினவினான்: சூரிய தேவனான விவஸ்வான் பிறப்பால் தங்களை விடப் பெரியவர். தாங்கள் அவருக்கு இவ்விஞ்ஞானத்தை ஆரம்பத்திலேயே உபதேசித்தீர்கள் என்பதை எவ்வாறு நான் புரிந]துகொள்வது?

4.5

ஸ்ரீ-பகவான் உவாச

பஹூனி மே வ்யதீதானி

ஜன்மானி தவ சார்ஜுன

தான்-யஹம் வேத ஸர்வாணி

ந த்வம் வேத்த பரந்-தப

 

புருஷோத்தமரான முழு முதற்கடவுள் கூறினார்: நானும் நீயும் பற்பல பிறவிகளைக் கடந்துள்ளோம். என்னால் அவை எல்லாவற்றையும் நினைவு கொள்ள முடியும்; ஆனால், எதிரிகளைத் தவிக்கச் செய்பவனே! அஃ;து உன்னால் முடியாது.

4.6

அஜோ (அ) பி ஸன்ன் அவ்யயாத்மா

பூதானாம் ஈஷ்வரோ (அ)பி ஸன்

ப்ரக்ருதிம் ஸ்வாம் அதிஷ்டாய

ஸம்பவாம்-யாத்ம-மாயயா

 

நான் பிறப்பற்றவனாக இருந்தாலும், எனது திவ்யமான உடல் அழிவற்றதாக இருந்தாலும், உயிர்வாழிகள் அனைவருக்கும் நானே இறைவனாக இருந்தாலும், நான் எனது சுயமான திவ்ய உருவில் ஒவ்வொரு யுகத்திலும் தோன்றுகின்றேன்.

4.7

யதா யதா ஹி தர்மஸ்ய

க்லானிர் பவதி பாரத

அப்யுத்தானம் அதர்மஸ்ய

ததாத்மானம் ஸ்ருஜாம்-யஹம்

 

எப்போதெல்லாம் எங்கெல்லாம் தர்மம் சீர்குலைந்து அதர்மம் ஆதிக்கம் செலுத்துகின்றதோ, பரத குலத் தோன்றலே, அப்போதெல்லாம் நான் தோன்றுகின்றேன்.

4.8

பரித்ராணாய ஸாதூனாம்

வினாஷாய ச துஷ்க்ருதாம்

தர்ம-ஸம்ஸதாபனார்தாய

ஸம்பவாமி யுகே யுகே

 

பக்தர்களைக் காத்து, துஷ்டர்களை அழித்து, தர்மத்தின் கொள்கைகளை மீண்டும் நிலைத்துவதற்காக, நானே யுகந்தோறும் தோன்றுகிறேன்.

4.9

ஜன்ம கர்ம ச மே திவ்யம்

ஏவம் யோ வேத்தி தத்த்வத:

த்யக்த்வா தேஹம் புனர் ஜன்ம

நைதி மாம் ஏதி ஸோ (அ)ர்ஜுன

 

எனது தோற்றமும் செயல்களும் திவ்யமானவை என்பதை எவனொருவன் அறிகின்றானோ, அவன் இந்த உடலைவிட்ட பின், மீண்டும் இப்பௌதிக உலகில் பிறவு எடுப்பதில்லை. அர்ஜுனா, அவன் எனது நித்திய உலகை அடைகின்றான்.

4.10

வீத-ராக-பய-க்ரோதா

மன் மயா மாம் உபாஷ்ரிதா:

பஹவோ க்ஞான-தபஸா

பூதா மத்-பாவம் ஆகதா:

 

பற்றுதல், பயம், கோபம் இவற்றிலிருந்து விடுபட்டு, முழுதும் என்னில்லயித்து, என்னை சரணடைந்த பற்பல நபர்கள் என்னைப் பற்றிய அறிவால் இதற்கு முன் தூய்மையடைந்துள்ளனர். இவ்வாறாக, அவர்கள் எல்லாரும் என் மீது திவ்யமான அன்புடையவர்களாயினர்.

4.11

யே யதா மாம் ப்ரபத்யந்தே

தாம்ஸ் ததைவ பஜாம்-யஹம்

மம வர்த்மானுவர்தந்தே

மனுஷ்யா: பார்த ஸர்வஷ:

 

என்னிடம் சரணடைவதற்கு ஏற்றாற் போல, நான் அனைவருக்கும் பலனளிக்கின்றேன். பிருதாவின் மகனே, எல்லா விதத்திலும் அனைவரும் என் வழியையே பின்பற்றுகின்றனர்.

4.12

காங்க்ஷந்த: கர்மணாம் ஸித்திம்

யஜந்த இஹ தேவதா:

க்ஷிப்ரம் ஹி மானுஷே லோகே

ஸித்திர் பவதி கர்ம-ஜா

 

பலன் தரும் செயல்களில் வெற்றியை விரும்பும் இவ்வுலக மனிதர்கள் தேவர்களை வழிபடுகின்றனர். இவ்வுலகில் இத்தகு செயல்களுக்கு விரைவில் பலன்கள் கிடைப்பது உண்மையே.

4.13

சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்

குண-கர்ம-விபாகஷ:

தஸ்ய கர்தாரம் அபி மாம்

வித்த்-யகர்த்தாரம் அவ்யயம்

 

மூன்றுவித இயற்கை குணங்களுக்கும் அவற்றின் செயல்களுக்கும் ஏற்ப, மனித சமூகத்தின் நால்வகைப் பிரிவுகள் என்னால் ஏற்படுத்தப்பட்டன. இம்முறையைப் படைத்தவன் நானேயாயினும் மாற்றமற்ற என்னைச் செயல்களுக்கு அப்பாற்பட்டவனாக அறிந்துகொள்.

4.14

ந மாம் கர்மாணி லிம்பந்தி

ந மே கர்ம-பலே ஸ்ப்ருஹா

இதி மாம் யோ (அ)பிஜானாதி

கர்ம்பிர் ந ஸ பத்யதே

 

என்னைப் பாதிக்கம் செயல் எதுவும் இல்லை; செயல்களின் பலன்களை நான் விரும்புவதும் இல்லை. என்னைப் பற்றிய இவ்வுண்மையை அறிபவனும் செயல்களின் விளைவுகளால் பந்தப்படுவதில்லை.

4.15

ஏவம் க்ஞாத்வா க்ருதம் கர்ம

பூர்வை அபி முமுக்ஷுபி:

குரு கர்மைவ தஸ்மாத் த்வம்

பூர்வை: பூர்வதரம் க்ருதம்

 

முற்காலத்தில் விடுதலை பெற்ற ஆத்மாக்கள் எல்லாரும், என்னுடைய உன்னத இயற்கையை உணர்ந்தவண்ணம் செயல்பட்டனர். எனவே, அவர்களது அடிச்சுவட்டைப் பின்பற்றி நீயும் உனது கடமைகளைச் செய்ய வேண்டும்.

4.16

கிம் கர்ம கிம் அகர்மேதி

கவயோ (அ)ப்யத்ர மோஹிதா:

தத் தே கர்ம ப்ரவக்ஷ்யாமி

யஜ் க்ஞாத்வா மோக்ஷ்யலே (அ)ஷுபாத்

 

அறிவுடையோரும் எது கர்மா (செயல்), எது அகர்மா (செயலின்மை) என்பதில் குழம்புகின்றனர். கர்மா என்பது என்ன என்பதை நான் இப்போது உனக்கு விளக்குகிறேன். இதை அறிவதால் எல்லா துரதிர்ஷ்டத்திலிருந்தும் நீ விடுதலை பெறுவாய்.

4.17

கர்மணோ ஹ்யபி போத்தவ்யம்

போத்தவ்யம் ச விகர்மண:

அகர்மணஷ் ச போத்தவ்யம்

கஹனா கர்மணோ கதி:

 

செயல்களின் நுணுக்கங்களை உணர்வது மிகக் கடினம். எனவே, கர்மா (செயல்) என்பது என்ன, விகர்மா (தடை செய்யப்பட்ட செயல்) என்பது என்ன, அகர்மா (செயலின்மை) என்பது என்ன என்பதை தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும்.

4.18

கர்மண்-யகர்ம ய: பஷ்யேத்

அகர்மணி ச கர்ம ய:

ஸ புத்திமான் மனுஷ்யேஷு

ஸ யுக்த: க்ருத்ஸ்ன-கர்ம-க்ருத்

 

கர்மாவில் அகர்மாவையும், அகர்மாவில் கர்மாவையும் காண்பவனே மனிதரில் அறிவுடையவனாகிறான். எல்லாவிதச் செயல்களில் ஈடுபட்டிருந்தாலும் அவன் உன்னத நிலையில் நிலைபெற்றுள்ளான்.

4.19

யஸ்ய ஸர்வே ஸமாரம்பா:

காம-ஸங்கல்ப-வர்ஜிதா:

க்ஞானாக்னி-தக்த-கர்மாணம்

தம்-ஆஹு: பண்டிதம் புதா:

 

யாருடைய முயற்சிகள் அனைத்தும் புலனுகர்ச்சியிலிருந்து விடுபட்டுள்ளதோ, அவன் பண்டிதனாக அறியப்படுகிறான். அத்தகையவன், பக்குவமான அறிவு என்னும் நெருப்பால் செயல்களின் விளைவுகளைச் சுட்டெரித்தவன் என்று சாதுக்களால் கருதப்படுகிறான்.

4.20

த்யக்த்வா கர்ம-பலாஸங்கம்

நித்ய-த்ருபதோ நிராஷ்ரய:

கர்மண்-யபி ப்ரவ்ருத்தோ (அ)பி

நைவ கிஞ்சித் கரோதி ஸ:

 

தனது செயல்களின் பலன்களின் மீதான எல்லாப் பற்றுதலையும் துறந்து, எப்போதும் திருப்தியுற்று சுதந்திரமாக விளங்கும் அவன், எல்லாவிதச் செயல்களில் ஈடுபட்டிருந்தாலும் எந்தச் (பலன் நோக்குச்) செயலையும் செய்வதில்லை.

4.21

நிராஷீர் யத-சித்தாத்மா

த்யக்த-ஸர்வ-பரிக்ரஹ:

ஷாரீரம் கேவலம் கர்ம

குர்வன் நாப்னோதி கில்பிஷம்

 

இத்தகு உணர்வுடையோன் மனமும் அறிவும் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், தனது சொத்துக்களின் மீதான உரிமையுணர்வுகளையெல்லாம் துறந்து, வாழ்வின் அத்தியாவசியத் தேவைகளுக்காக மட்டுமே செயலாற்றுகின்றான். இவ்வாறு செயல்படுவதால், அவன் பாவ விளைவுகளால் பாதிக்கப்படுவதில்லை.

4.22

யத்ருச்சா-லாப-ஸந்துஷ்டோ

த்வந்த்வாதீதோ விமத்ஸர:

ஸம: ஸித்தாவ் அஸித்தௌ ச

க்ருத்வாபி ந நிபத்யதே

 

எவனொருவன் தானாக வரும் இலாபத்தில் திருப்தியடைந்து, இருமையிலிருந்து விடுபட்டு, பொறாமையற்று, வெற்றி தோல்விகளில் நிலைத்துச் செயலாற்றுகின்றானோ, அவன் செயல்களைச் செய்யும்போதிலும் ஒருபோதும் பாதிக்கப்படுவதில்லை.

4.23

கத-ஸங்கஸ்ய முக்தஸ்ய

க்ஞானாவஸ்தித-சேதஸ:

யக்ஞாயாசரத: கர்ம

ஸமக்ரம் ப்ரவிலீயதே

 

ஜட இயற்கை குணங்களில் பற்றற்று, திவ்ய ஞானத்தில் நிலைபெற்றவனின் செயல், முழுமையாக உன்னதத்தில் கலந்து விடுகின்றது.

4.24

ப்ரஹ்மார்பணம் ப்ரஹ்ம ஹவிர்

ப்ரஹ்மாக் னெள ப்ரஹ்மணா ஹுதம்

ப்ரஹ்மைவ தேன கந்தவ்யம்

ப்ரஹ்ம-கர்ம-ஸமாதினா

 

கிருஷ்ண உணர்வில் முழுமையாக ஆழ்ந்திருப்பவன், நிச்சியமாக ஆன்மீக உலகை அடைவான்; ஏனெனில், அவன் ஆன்மீக செயல்களுக்காகத் தன்னை முழுமையாக சமர்ப்பித்துள்ளான். பிரம்மனை இலக்காகக் கொண்ட இச்செயல்கள் அதே ஆன்மீக இயற்கையின் மூலம் அர்ப்பணிக்கப்படுவதாகும்.

4.25

தைவம் ஏவாபரே யக்ஞம்

யோகின: பர்யுபாஸதே

ப்ரஹ்மாக்னாவ் அபரே யக்ஞம்

யக்ஞேனைவோபஜுஹ்வதி

 

சில யோகிகள் பல்வேறு யாகங்களை அர்ப்பணிப்பதன் மூலம் தேவர்களை பக்குவமாக வழிபடுகின்றனர். சிலர் பரபிரம்மன் எனும் நெருப்பில் யாகங்களை அர்ப்பணிக்கின்றனர்.

4.26

ஷ்ரோத்ராதீனீந்த்ரியாண்-யன்யே

ஸம்யமாக்னிஷு ஜுஹ்வதி

ஷப்தாதீன் விஷயான் அன்ய

இந்த்ரியாக் நிஷு ஜுஹ்வதி

 

மனக் கட்டுப்பாடு என்னும் நெப்பில் சிலர் (களங்கமற்ற பிரம்மசாரிகள்) புலன்களையும் கேட்கும் முறையையும் அர்ப்பணிக்கின்றனர். மற்றும் சிலர் (ஒழுக்கமான குடும்பஸ்தர்கள்) புலன்கள் என்னும் நெப்பில் புலனுகர்ச்சிப் பொருள்களை அர்ப்பணிக்கின்றனர்.

4.27

ஸர்வாணீந்த்ரிய-கர்மாணி

ப்ராண-கர்மாணி சாபரே

ஆத்ம-ஸம்யம-யோகாக்னெள

ஜுஹ்வதி க்ஞான தீபிதே

 

மனதையும் புலன்களையும் கட்டுப்படுத்துவதன் மூலம் தன்னுணர்வை அடைய விரும்புவோர், புலன்களின் இயக்கங்களையும் பிராணனின் இயக்கங்களையும், அடக்கப்பட்ட மனமெனும் நெருப்பில் அர்ப்பணிக்கின்றனர்.

4.28

த்ரவ்ய-யக்ஞாஸ் தபோ-யக்ஞா

யோக-யக்ஞாஸ் ததா பரே

ஸ்வாத்யாய-க்ஞான-யக்ஞாஷ் ச

யதய: ஸம்ஷித-வ்ரதா:

 

கடும் விரதங்களை ஏற்றுக் கொண்டு, சிலர் தங்களது உடமைகளை தியாகம் செய்வதால் ஞான ஒளிபெறுகின்றனர், மற்றவர்களோ, கடுமையாக தவங்கள், அஷ்டாங்க யோகப் பயிற்சி, அல்லது உன்னத ஞானத்தில் முன்னேற்றம் பெறுவதற்காக வேதங்களைக் கற்றல் ஆகிய முறைகளால் ஞான ஒளி பெறுகின்றனர்.

4.29

அபானே ஜுஹ்வதி ப்ராணம்

ப்ராணே (அ)பானம் ததாபரே

ப்ராணாபான-கதீருத்த்வா

ப்ராணாயாம-பராயணா:

அபரே நியதாஹாரா:

ப்ராணான் ப்ராணேஷு ஜுஹ்வதி

 

ஸமாதியில் இருப்பதற்காக சுவாசக் கட்டுப்பட்டுப் பயிற்சிகளில் ஈடுபாடு கொண்டுள்ள சிலர், உட்சுவாசத்தில் வெளிச் சுவாசத்தின் இயக்கத்தையும், வெளிச் சுவாசத்தில் உட்சுவாசத்தின் இயக்கத்தையும் நிறுத்தும் முறையைப் பயின்று, இறுதியில் சுவாசத்தை முழுமையாக அடக்கி ஸமாதியில் நிலைபெறுகின்றனர். வேறு சிலர், உணவுக்கட்டுப்பாடுகளை மேற்கொண்டு வெளிச்சுவாசத்தையே யாகமாக அர்ப்பணிக்கின்றனர்.

4.30

ஸர்வே (அ)ப்யேதே யக்ஞ-விதோ

யக்ஞ-க்ஷபித-கல்மஷா:

யக்ஞ-ஷிஷ்டாம்ருத-புஜோ

யாந்தி ப்ரஹம ஸனாதனம்

 

யாகத்தின் பொருளை அறிந்து செயல்படும் இவர்கள் அனைவரும், பாவ விளைவிகளிலிருந்து தூய்மை பெற்று, இத்தகு யாகங்களின் பலன்களை அமுதமாகப் பருகி, பரமமான நித்திய நிலையை நோக்கி முன்னேறுகின்றனர்.

4.31

நாயம் லோகோ (அ)ஸ்த்-யயக்ஞஸ்ய

குதோ (அ)ன்ய: குரு-ஸத்தம

 

குருவம்சத்தில் சிறந்தவனே, எவரும் யாகங்களின்றி இவ்வுலகிலோ இவ்வாழ்விலோ மகிழ்ச்சியுடன் வாழ முடியாது: மறு உலகைப் பற்றி என்ன கூற முடியும்?

4.32

ஏவம் பஹு-விதா யக்ஞா

விததா ப்ரஹ்மணோ முகே

கர்ம-ஜான் வித்தி தான் ஸர்வான்

ஏவம் க்ஞாத்வா விமோக்ஷ்யஸே

 

பலதரப்பட்ட இந்த யாகங்கள் அனைத்தும் வேதங்களில் அங்கீகரிக்கப்பட்டவை, இவை பல்வேறு விதமான செயல்களிலிருந்து பிறந்தவை. இவற்றை இவ்விதமாக அறிவதால் நீ முக்தியடைவாய்.

4.33

ஷ்ரேயான் த்ரவ்ய-மயாத் யக்ஞாஜ்

க்ஞான-யக்ஞ: பரந்தப

ஸர்வம் கர்மாகிலம் பார்த

க்ஞானே பரிஸமாப்யதே

 

எதிரிகளைத் தவிக்க செய்பவனே, ஞான யாகம் பொருள்களை யாகம் செய்வதை விடச் சிறந்தது. பிருதாவின் மகனே, அது மட்டுமின்றி, எல்லாச் செயல்களின் யாகமும் தெய்வீக ஞானத்திலேயே முற்றுப் பெறுகின்றன.

4.34

தத்வித்தி ப்ரணிபாதேன

பரிப்ரஷ்னேன ஸேவயா

உபதேக்ஷ்யந்தி தே க்ஞானம்

க்ஞானினஸ் தத்த்வ-தர்ஷின:

 

ஆன்மீக குருவை அணுகி உண்மையை அறிய முயற்சி செய். அடக்கத்துடன் அவரிடம் கேள்விகள் கேட்டு அவருக்குத் தொண்டு செய். உண்மையைக் கண்டவர்களான தன்னுணர்வு பெற்ற ஆத்மாக்கள் உனக்கு ஞானத்தை அளிக்க முடியும்.

4.35

யஜ் க்ஞாத்வா ந புனர் மோஹம்

ஏவம் யாஸ்யஸி பாண்டவ

யேன பூதான் யஷேஷாணி

த்ரக்ஷ்யஸ் யாத்மன் யதோ மயி

 

இவ்வாறு தன்னுணர்வடைந்த ஆத்மாவிடமிருந்து உண்மை ஞானத்தைப் பெற்றபின், நீ மீண்டும் மயக்கத்தில் விழ மாட்டாய். ஏனெனில், இந்த ஞானத்தின் மூலம், எல்லா உயிரினங்களையும் பரமனின் பாகமாக, வேறு விதமாகக் கூறினால் என்னுடையதாக நீ காண்பாய்.

4.36

அபி சேத் அஸி பாபேப்ய:

ஸர்வேப்ய: பாப-க்ருத்-தம:

ஸர்வம் க்ஞான-ப்லவேனைவ

வ்ருஜினம் ஸந்தரிஷ்யஸி

 

பாவிகளில் எல்லாம் பெரும் பாவியாக நீ கருதப்பட்டாலும் உன்னதமான ஞானமெனும் படகில் நீ நிலைபெற்றுவிட்டால், உன்னால் துன்பக் கடலைக் கடந்துவிட முடியும்.

4.37

யதைதாம்ஸி ஸமித்தோ (அ)க்னிர்

பஸ்ம-ஸாத் குருதே (அ)ர்ஜுன

க்ஞானாக்னி: ஸர்வ-கர்மாணி

பஸ்ம-ஸாத் குருதே ததா

 

கொழுந்துவிட்டு எரியும் நெருப்பு விறகை சாம்பலாக்குவதைப் போல, அர்ஜுனா, ஞான நெருப்பானது ஜடச் செயல்களின் விளைவுகளை எல்லாம் சாம்பலாக்கி விடுகின்றது.

4.38

ந ஹி க்ஞானேன ஸத்ருஷம்

பவித்ரம் இஹ வித்யதே

தத் ஸ்வயம் யோக-ஸம்ஸித்த:

காலேனாத்மனி விந்ததி

 

இவ்வுலகில் உன்னத ஞானத்தைப் போலச் சிறந்ததும், தூய்மையானதும் வேறொன்றும் இல்லை. இத்தகு ஞானமே எல்லா யோகங்களின் முற்றிய பழமாகும். பக்தித் தொண்டின் பயிற்சியினால் இதனை அடைந்தவன், காலப்போக்கில் இந்த ஞானத்தை தன்னில் அனுபவிக்கிறான்.

4.39

ஷ்ரத்தாவாங் லபதே க்ஞானம்

தத்-பர: ஸம்யதேந்த்ரிய:

க்ஞானம் லப்த்வா பராம் ஷாந்திம்

அசிரேணாதிகச்சதி

 

உன்னத ஞானத்திற்காகத் தன்னை அர்ப்பணித்து புலன்களை அடக்கக்கூடிய நம்பிக்கையுடைய மனிதன், அந்த ஞானத்தை அடையத் தகுதி வாய்ந்தவனாவான். அதனை அடைந்தபின், வெகு விரைவில் பரம ஆன்மீக அமைதியை அவன் அடைகிறான்.

4.40

அக்ஞஷ் சாஷ்ரத்ததானஷ் ச

ஸம்ஷயாத்மா வினஷ்யதி

நாயம் லோகோ (அ)ஸ்தி ந பரோ

ந ஸுகம் ஸம்ஷயாத்மன

 

ஆனால், சாஸ்திரங்களை சந்தேகிக்கும் நம்பிக்கையற்ற முட்டாள் மனிதர்கள், இறையுணர்வை அடைவதில்லை; அவர்கள் வீழ்ச்சியடைகின்றனர். சந்தேகம் கொள்ளும் ஆத்மாவிற்கு இவ்வுலகிலோ மறு உலகிலோ இன்பம் இல்லை.

4.41

யோக-ஸன்ன்யஸ்த-கர்மாணம்

க்ஞான-ஸஞ்சி ன்ன-ஸம்ஷயம்

ஆத்மவந்தம் ந கர்மாணி

நிபத்னந்தி தனஞ்ஜய

 

எவனொருவன் தனது செயல்களின் பலனைத் துறந்து பக்தித் தொண்டில் ஈடுபடுகின்றானோ, எவனொருவனது சந்தேகங்கள் உன்னத ஞானத்தால் நீக்கப்பட்டுவிட்டனவோ, அவன் தன்னில் நிலை பெற்றிருப்பது உறுதி. செல்வத்தை வெல்வோனே, இவ்வாறாக அவன் செயல்களின் விளைவுகளால் பந்தப்படுவதில்லை.

4.42

தஸ்மாத் அக்ஞான-ஸம்பூதம்

ஹ்ருத்-ஸ்தம் க்ஞானாஸினாத்மன:

சித்த்வைனம் ஸம்ஷயம் யோகம்

ஆதிஷ்டோத்திஷ்ட பாரத

 

எனவே, அறியாமையால் உன் இதயத்தில் எழுந்த ஜயங்கள் ஞானமெனும் ஆயுதத்தால் அழிக்கப்பட வேண்டும். யோக கவசம் பூண்டு, பரத குலத்தவனே, எழுந்து போர் புரிவாயாக.