ஸ்ரீமத் பகவத்கீதை – பதினெட்டாவது அத்தியாயம்


அத்தியாயம் பதினெட்டு: முடிவு – துறவின் பக்குவம்

18.1

அர்ஜுன உவாச:

ஸந்ந்யாஸஸ்ய மஹா-பாஹோ

தத்த்வம் இச்சாமி வேதிதும்

த்யாகஸ்ய ச ஹ்ருஷீகேஷ

ப்ருதக் கேஷி – நிஷூதன:

 

அர்ஜுனன் கூறினான்: பலம் பொருந்திய புயங்களை உடையவரே, தியாகம் மற்றும் சந்நியாசத்தின் நோக்கத்தைப் புரிந்துகொள்ள நான் விரும்புகிறேன், கேசி அசுரனைக் கொன்றவரே, புலன்களின் அதிபதியே.

18.2

ஸ்ரீ-பகவான் உவாச

காம்யானாம் கர்மணாம் ந்யாஸம்

ஸந்ந்யாஸம் கவயோ விது:

ஸர்வ-கர்ம-பல-த்யாகம்

ப்ராஹுஸ் த்யாகம் விசக்ஷணா:

 

புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்: ஜட ஆசைகளை அடிப்படையாகக் கொண்ட செயல்களைத் துறத்தல், சந்நியாசம் என்று சான்றோர்களால் அழைக்கப்படுகின்றது. மேலும், எல்லாச் செயல்களின் பலன்களைத் துறப்பதை தியாகம் என்ற அறிஞர்கள் அழைக்கின்றனர்.

18.3

த்யாஜ்யம் தோஷ-வத் இத்-யேகே

கர்ம ப்ராஹுர் மனீஷிண:

யக்ஞ-தான-தப:-கர்ம

ந த்யாஜ்யம் இதி சாபரே

 

எல்லாவிதமான பலன்நோக்குச் செயல்களையும் தோஷமாக எண்ணி, அவற்றை துறக்க வேண்டும் என்று சில அறிஞர்கள் அறிவிக்கின்றனர்; இருப்பினும் யாகம், தானம், மற்றும் தவத்தின் செயல்களை என்றுமே கைவிடக் கூடாது என்று சில சாதுக்கள் கூறுகின்றனர்.

18.4

நிஷ்சயம் ஷ்ருணு மே தத்ர

த்யாகே பரத-ஸத்தம

த்யாகோ ஹி புருஷ-வ்யாக்ர

த்ரி-வித: ஸம்ப்ரகீர்தித:

 

பாரதர்களில் சிறந்தவனே, தியாகத்தைப் பற்றிய எனது முடிவை தற்பொழுது கேள். மனிதர்களில் புலி போன்றவனே, சாஸ்திரங்களில் மூன்று விதமான தியாகம் அறிவிக்கப்பட்டுள்ளன.

18.5

யக்ஞ-தான-தப:-கர்ம

ந த்யாஜ்யம் கார்யம் ஏவ தத்

யக்ஞோ தானம் தபஷ் சைவ

பாவனானி மனீஷிணாம்

 

யாகம், தானம், மற்றும் தவத்தின் செயல்களை என்றுமே துறக்கக் கூடாது; அவற்றை செய்ய வேண்டியது அவசியம். உண்மையில் யாகம், தானம், தவம் ஆகியவை மிகச்சிறந்த ஆத்மாக்களையும்கூட தூய்மைப்படுத்துகின்றன.

18.6

ஏதான்-யபி து கர்மாணி

ஸங்கம் த்யக்த்வா பலானி ச

கர்தவ்யானீதி மே பார்த

நிஷ் சிதம் மதம் உத்தமம்

 

இத்தகு செயல்கள் அனைத்தும், பற்றுதலின்றி, எந்தப் பலனையும் எதிர்பார்க்காமல் செய்யப்படவேண்டும். இவற்றை ஒரு கடமையாகச் செய்ய வேண்டும், பிருதாவின் மைந்தனே, இதுவே எனது முடிவான அபிப்பிராயம்.

18.7

நியதஸ்ய து ஸந்ந்யாஸ:

கர்மணோ நோபபத்யதே

மோஹாத் தஸ்ய பரித்யாகஸ்

தாமஸ: பரிகீர்தித:

 

விதிக்கப்பட்ட கடமைகளை என்றுமே துறக்கக் கூடாது. ஆனால், மயக்கத்தினால் ஒருவன் தன்னுடைய கடமைகளைத் துறந்தால், அத்தகு துறவு தமோ குணத்தில் இருப்பதாகக் கூறப்படுகின்றது.

18.8

து: கம் இத்-யேவ யத் கர்ம

காய-க்லேஷ-பயாத் த்யஜேத்

ஸ க்ருத்வா ராஜஸம் த்யாகம்

நைவ த்யாக-பலம் லபேத்

 

தொல்லை நிறைந்தவை என்று கருதியோ, உடல் அசெளகரியத்திற்கான பயத்தினாலோ, விதிக்கப்பட்ட கடமைகளைத் துறப்பவன், ரஜோ குணத்தில் துறப்பதாக கூறப்படுகின்றது. அத்தகு செயல், துறவின் பலனை ஒருபோதும் வழங்க இயலாது.

18.9

கார்யம் இத்-யேவ யத் கர்ம

நியதம் க்ரியதே (அ)ர்ஜுன

ஸங்கம் த்யக்த்வா பலம் சைவ

ஸ த்யாக: ஸாத்த்விகோ மத:

 

ஓ, அர்ஜுனா, ஒருவன் தனது விதிக்கப்பட்ட கடமையை செய்யப்பட வேண்டும் என்பதற்காகச் செய்து, பெளதிக சங்கத்தையும் பலனுக்கான பற்றுதலையும் முழுமையாக துறக்கும்போது, அவனது துறவு ஸத்வ குணத்தில் இருப்பதாகசக் கூறப்படுகின்றது.

18.10

ந த்வேஷ்ட்-யகுஷலம் கர்ம

குஷ லே நானுஷஜ்ஜதே

த்யாகீ ஸத்த்வ-ஸமாவிஷ்டோ

மேதா வீசின்ன-ஸம்ஷய:

 

ஸத்வ குணத்தில் நிலைபெற்றிருக்கும் புத்திசாலி துறவிகள், அமங்களமான செயல்களை வெறுப்பதில்லை, மங்களமான செயல்களில் பற்றுக் கொள்வதும் இல்லை, செயலைப் பற்றிய ஐயங்களும் அவர்களிடம் இல்லை.

18.11

ந ஹி தேஹ-ப்ருதாஷக்யம்

த்யக்தும் கர்மாண்-யஷேஷத:

யஸ் து கர்ம-பல-த்யாகீ

ஸ த்யாகீத்-யபிதீயதே

 

உடலை உடையவன் எல்லாச் செயல்களையும் துறப்பது என்பது உண்மையில் அசாத்தியம். ஆனால் செயலின் பலன்களைத் துறப்பவன் உண்மையான துறவி என்று கூறப்படுகின்றான்.

18.12

அனிஷ்டம் இஷ்டம் மிஷ்ரம் ச

த்ரி-விதம் கர்மண: பலம்

பவத்-யத்யாகினாம் ப்ரேத்ய

ந து ஸந்ந்யாஸினாம் க்வசித்

 

இவ்வாறு தியாகம் செய்யாதவர்கள் தங்களது மரணத்திற்குப் பின், விரும்புவை, விரும்பாதவை, இரண்டும் கலந்தவை என மூன்று விதமான கர்ம விளைவுகளை சேகரித்துக் கொள்கின்றனர். ஆனால் அத்தகு இன்ப துன்பத்திற்கான பலன்கள் சந்நியாசிகளுக்குக் கிடையாது.

18.13

பஞ்சைதானி மஹா-பாஹோ

காரணானி நிபோத மே

ஸாங்க்யே க்ருதாந்தே ப்ரோக்தானி

ஸித்தயே ஸர்வ-கர்மணாம்

 

பலம் பொருந்திய புயங்களையுடைய அர்ஜுனா, செயல்கள் அனைத்தும் நிறைவேற்றுவதற்கு வேதாந்தத்தின்படி ஐந்து காரணங்கள் உள்ளன. அவற்றை தற்போது என்னிடமிருந்து அறிந்துகொள்.

18.14

அதிஷ்டானம் ததா கர்தா

கரணம் ச ப்ருதக்-விதம்

விவிதாஷ் ச ப்ருதக் சேஷ்டா

தைவம் சைவாத்ர பஞ்சமம்

 

செயலுக்கான இடம் (உடல்), செய்பவன், பல்வேறு புலன்கள், பலதரப்பட்ட முயற்சிகள், இறுதியாக பரமாத்மாஇவையே செயலுக்கான ஐந்து காரணங்களாகும்.

18.15

ஷரீர-வாங்-மனோபிர் யத்

கர்ம ப்ராரப தே நர:

ந்யாய்யம் வா விபரிதம் வா

பஞ்சைதே தஸ்ய ஹேதவ:

 

மனிதன் தன்னுடைய உடல், மனம், அல்லது வார்த்தைகளால் நல்லதோ கெட்டதோ, எந்தவொரு செயலைச் செய்தாலும் அதற்கு இந்த ஐந்தும் காரணங்களாகும்.

18.16

தத்ரைவம் ஸதி கர்தாரம்

ஆத்மானம் கேவலம் து ய:

பஷ்யத்-யக்ருத-புத்தித்வான்

ந ஸ பஷயதி துர்மதி:

 

எனவே, இந்த ஐந்து காரணங்களைக் கருதாமல், தன்னை மட்டுமே செயலாற்றுபவனாகக் கருதுபவன் விஷயங்களை உள்ளபடி காண முடியாது, அவன் நிச்சயமாக அறிவுடையவன் அல்ல.

18.17

யஸ்ய நாஹங்க்ருதோ பாவோ

புத்திர் யஸ்ய ந லிப்யதே

ஹத்வாபி ஸ இமாங்ல் லோகான்

ந ஹந்தி ந நிபத்யதே

 

எவனுடைய நோக்கம் அஹங்காரமின்றி உள்ளதோ, எவனுடைய புத்தி பற்றுதலிலிருந்து விடுபட்டுள்ளதோ, அவன் இவ்வுலகிலுள்ள மனிதர்களைக் கொல்ல செய்தாலும் கொல்பவன் அல்ல. தனது செயல்களால் அவன் பந்தப்படுவதும் இல்லை.

18.18

க்ஞானம் க்ஞேயம் பரிக்ஞாதா

த்ரி-விதா கர்ம-சோதனா

கரணம் கர்ம கர்தேதி

த்ரி-வித: கர்ம-ஸங்க்ரஹ:

 

அறிவு, அறியப்படும் பொருள், அறிபவன் ஆகிய மூன்றும் செயலைத் தூண்டுபவை; புலன்கள், செயல், செய்பவன் ஆகிய மூன்றம் செயலை உண்டாக்குபவை.

18.19

க்ஞானம் கர்ம ச கர்தா ச

த்ரிதைவ குண-பேதத:

ப்ரோச்யதே குண-ஸங்க்யானே

யதாவச் ச்ருணு தான்-யபி

 

ஜட இயற்கையின் மூன்று வேறுபட்ட குணங்களுக்கு ஏற்ப, அறிவு, செயல், செய்பவன் ஆகியவற்றிலும் மூன்று வகைகள் உள்ளன. தற்போது அவற்றை என்னிடமிருந்து கேட்பாயாக.

18.20

ஸர்வ-பூதேஷு யேனைகம்

பாவம் அவ்யயம் ஈக்ஷதே

அவிபக்தம் விபக்தேஷு

தஜ் க்ஞானம் வித்தி ஸாத்த்விகம்

 

உயிர்வாழிகள் எண்ணற்ற உருவமாக பிரிக்கப்பட்டிருந்தாலும், அவர்களை பிரிக்கப்படாத ஆன்மீக இயற்கையாக, எந்த அறிவின் மூலம் ஒருவன் காண்கின்றானோ, அந்த அறிவு ஸத்வ குணத்தில் இருக்கும் அறிவாகும்.

18.21

ப்ருதக்த்வேன து யஜ் க்ஞானம்

நானா-பாவான் ப்ருதக்-விதான்

வேத்தி ஸர்வேஷு பூதேஷு

தஜ் க்ஞானம் வித்தி ராஜஸம்

 

எந்த அறிவின் மூலம், வெவ்வேறு உடல்களில் வெவ்வேறுவிதமான உயிர்வாழிகள் இருப்பதாக ஒருவன் காண்கின்றானோ, அந்த அறிவு ரஜோ குணத்தில் இருப்பதாக புரிந்து கொள்ளப்பட வேண்டும்.

18.22

யத் து க்ருத்ஸ்னவத் ஏகஸ்மின்

கார்யே ஸக்தம் அஹைதுகம்

அதத்த்வார்த-வத் அல்பம் ச

தத் தாமஸம் உதாஹ்ருதம்

 

எந்த அறிவின் மூலம், உண்மையைப் பற்றிய அறிவின்றி, ஒரே விதமான செயலில் பற்றுதல் கொண்டு அதையே எல்லாமாக அறிகின்றானோ, அந்த அற்பமான அறிவு தமோ குணத்தில் இருப்பதாகக் கூறப்படுகின்றது.

18.23

நியதம் ஸங்க-ரஹிதம்

அராக-த்வேஷத: க்ருதம்

அபல-ப்ரேப்ஸுனா கர்ம

யத் தத் ஸாத்த்விகம் உச்யதே

 

எந்தவொரு செயல், ஒழங்குபடுத்தப்பட்டு, பற்றின்றி, விருப்பு வெறுப்பின்றி, பலனை எதிர்பார்க்காமல் செய்யப்படுகின்றதோ, அது ஸத்வ குணத்தின் செயல் எனப்படுகிறது.

18.24

யத் து காமேப்ஸுனா கர்ம

ஸாஹங்காரேண வா புன:

க்ரியதே பஹுலாயாஸம்

தத் ராஜஸம் உதாஹ்ருதம்

 

ஆனால், எந்தவொரு செயல், ஆசைகளைத் திருப்தி செய்வதற்காக பெரும் முயற்சியுடனும் அஹங்காரத்துடனும் செய்யப்படுகின்றதோ, அந்தச் செயல் ரஜோ குணத்தின் செயல் என்று கூறப்படுகின்றது.

18.25

அனுபந்தம் க்ஷயம் ஹிம்ஸாம்

அனபேக்ஷ்ய ச பெளருஷம்

மோஹாத் ஆரப்யதே கர்ம

யத் தத் தாமஸம் உச்யதே

 

எந்தவொரு செயல், எதிர்கால பந்தத்தையும் மற்றவர்களுக்கு இழைக்கப்படும் துன்பத்தையும் கருத்தில் கொள்ளாமல், சாஸ்திர விதிகளைப் புறக்கணித்து, மயக்கத்தில் செய்யப்படுகின்றதோ, அந்தச் செயல் தமோ குணத்தின் செயலாகக் கூறப்படுகின்றது.

18.26

முக்த-ஸங்கோ (அ)னஹம்-வாதீ

த்ருத்-யுத்ஸாஹ-ஸமன்வித:

ஸித்த –யஸித்த்யோர் நிர்விகார:

கர்தா ஸாத்த்விக உச்யதே

 

எவனொருவன், இயற்கை குணங்களின் தொடர்பின்றி, அஹங்காரமின்றி, உற்சாகம் மற்றும் மனவுறுதியுடன், வெற்றி தோல்விகளைப் பொருட்படுத்தாது தனது கடமைகளைச் செய்கின்றானோ, அத்தகு செயலாளி ஸத்வ குணத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

18.27

ராகீ கர்ம-பல-ப்ரேப்ஸுர்

லுப்தோ ஹிம்ஸாத்மகோ (அ)ஷுசி:

ஹர்ஷ-ஷோகான்வித: கர்தா

ராஜஸ: பரிகீர்தித:

 

எவனொருவன், தனது உழைப்பின் பலன்களில் பற்றுதல் கொண்டு, அந்த பலன்களை அனுபவிக்க விரும்பி, பேராசை கொண்டு, எப்போதும் பொறாமையுடன், தூய்மையின்றி, இன்ப துன்பங்களால் பாதிக்கப்படுகின்றானோ, அத்தகு செயலாளி ரஜோ குணத்தில் இருப்பதாகக் கூறப்படுகின்றது.

18.28

அயுக்த: ப்ராக்ருத: ஸ்தப்த:

ஷடோ நைஷ்க்ருதிகோ (அ)லஸ:

விஷாதீ தீர்க-ஸூத்ரீ ச

கர்தா தாமஸ உச்யதே

 

எவனொருவன், சாஸ்திர விதிகளுக்கு எதிரான செயலில் எப்போதும் ஈடுபட்டு, பெளதிகவாதியாக, பிடிவாதக்காரனாக, ஏமாற்றுபவனாக, பிறரை அவமதிப்பில் நிபுணனாக, சோம்பேறியாக, எப்போதும் வருத்தம் தோய்ந்தவனாக, மற்றும் காலந்தாழ்த்துபவனாக உள்ளானோ, அத்தகு செயலாளி தமோ குணத்தில் இருப்பதாகக் கூறப்படுகின்றது.

18.29

புத்தேர் பேதம் த்ருதேஷ் சைவ

குணதஸ் த்ரி-விதம் ஷ்ருணு

ப்ரோச்யமானம் அஷேஷேண

ப்ருதக்த்வேன தனஞ்ஜய

 

செல்வத்தை வெல்வோனே, ஜட இயற்கையின் முக்குணங்களுக்கு ஏற்ப பலதரப்பட்ட புத்தியையும் உறுதியையும் பற்றி விவரமாக நான் தற்போது உனக்குக் கூறுவதைக் கேட்பாயாக.

18.30

ப்ரவ்ருத்திம் ச நிவ்ருத்திம் ச

கார்யாகார்யே பயாபயே

பந்தம் மோக்ஷம் ச யா வேத்தி

புத்தி: ஸா பார்த ஸாத்த்விகீ

 

பிருதாவின் மைந்தனே, செய்யத்தக்கது எது, செய்யத்தகாதது எது, பயப்படத்தக்கது எது, பயப்படத்தகாதது எது, பந்தப் படுத்துவது எது, விடுதலை செய்வது எது, ஆகியவற்றை அறியக்கூடிய புத்தி, ஸத்வ குணத்தில் இருப்பதாகும்.

18.31

யயா தர்மம் அதர்மம் ச

கார்யம் சாகார்யம் ஏவ ச

அயதாவத் ப்ரஜானாதி

புத்தி: ஸா பார்த ராஜஸீ

 

பிருதாவின் மகனே, தர்மம், அதர்மம், செய்யத்தக்க செயல், செய்யத்தகாத செயல் இவற்றிற்கிடையே உள்ள வேறுபாட்டை அறிய இயலாத புத்தி, ரஜோ குணத்தில் இருக்கின்றது.

18.32

அதர்மம் தர்மம் இதி யா

மன்யதே தமஸாவ்ருதா

ஸர்வார்த்தான் விபரிதாம்ஷ் ச

புத்தி: ஸா பார்த தாமஸீ

 

அறியாமை மற்றும் இருளின் மயக்கத்தின் கீழ், தர்மத்தை அதர்மமாகவும், அதர்மத்தை தர்மமாகவும் அறிந்து, எப்போதும் தவறான வழியில் முயற்சி செய்யும் புத்தி, பார்த்தனே, தமோ குணத்தில் இருப்பதாகும்.

18.33

த்ருத்யா யயா தாரயதே

மன:-ப்ராணேந்த்ரியக்ரியா:

யோகேனாவ்யபிசாரிண்யா

த்ருதி: ஸா பார்த ஸாத்த்விகீ

 

பிருதாவின் மைந்தனே, உடைக்க முடியாததும், யோகப் பயிற்சியால் நிலையாக பாதுகாக்கப்படுவதும், மனம், வாழ்வு மற்றம் புலன்களின் இயக்கத்தைக் கட்டுப்படுத்துவதுமான மனவுறுதி ஸத்வ குணத்தைச் சார்ந்ததாகும்.

18.34

யயா து தர்ம-காமார்தான்

த்ருத்யா தாரயதே (அ)ர்ஜுன

ப்ரஸங்கேன பலாகாங்க்ஷீ

த்ருதி: ஸா பார்த் ராஜஸீ

 

எந்த மனவுறுதியின் மூலம், ஒருவன், அறம், பொருள், மற்றும் இன்பத்தின் பலன்களின் மீது பற்றுதல் கொண்டுள்ளானோ, ஓ அர்ஜுனா, அத்தகு மனவுறுதி ரஜோ குணத்தைச் சார்ந்தது.

18.35

யயா ஸ்வப்னம் பயம் ஷோகம்

விஷாதம் மதம் ஏவ ச

ந விமுஞ்சதி துர்மேதா

த்ருதி: ஸா பார்த தாமஸீ

 

பிருதாவின் மைந்தனே, கனவு, பயம், கவலை, வருத்தம் தோய்ந்த நிலை, மயக்கம் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டுச் செல்ல இயலாத, அறிவற்ற மனவுறுதி, தமோ குணத்தில் இருப்பதாகும்.

18.36

ஸுகம் த்விதானீம் த்ரி-விதம்

ஷ்ருணு மே பரதர்ஷப

அப்யாஸாத் ரமதே யத்ர

து: காந்தம் ச நிகச்சதி

 

பாரதர்களில் சிறந்தவனே, மூன்று விதமான சுகத்தை அனுபவிக்கக்கூடிய கட்டுண்ட ஆத்மா, சில சமயங்களில் அதன் மூலம் துன்பத்தின் முடிவை அடைகின்றான். இவற்றைப் பற்றி தற்போது என்னிடமிருந்து கேட்பாயாக.

18.37

யத் தத் அக்ரே விஷம் இவ

பரிணாமே (அ)ம்ருதோபமம்

தத் ஸுகம் ஸாத்த்விகம் ப்ரோக்தம்

ஆத்ம-புத்தி-ப்ரஸாத-ஜம்

 

ஆரம்பத்தில் விஷத்தைப் போன்று இருந்தாலும் இறுதியில் அமிர்தத்தைப் போன்றதும், தன்னுணர்விற்கு ஒருவனை எழுப்புவதுமான சுகம், ஸத்வ குணத்தில் இருப்பதாகக் கூறப்படுகின்றது.

18.38

விஷயேந்த்ரிய ஸம்யோகாத்

யத் தத் அக்ரே (அ)ம்ருதோபமம்

பரிணாமே விஷம் இவ

தத் ஸுகம் ராஜஸம் ஸ்ம்ருதம்

 

எந்த சுகம், புலன்களும் புலனின்பப் பொருள்களும் தொடர்பு கொள்வதால் அடையப்படுகின்றதோ, ஆரம்பத்தில் அமிர்தம் போன்று தோன்றினாலும் இறுதியில் விஷமாகிவிடுகின்றதோ, அந்த சுகம், ரஜோ குணத்தின் தன்மையைக் கொண்டதாகக் கூறப்படுகின்றது.

18.39

யத் அக்ரே சானுபந்தே ச

ஸுகம் மோஹனம் ஆத்மன:

நித்ராலஸ்ய-ப்ரமாதோத்தம்

தத் தாமஸம் உதாஹ்ருதம்

 

தன்னுணர்வைக் காண இயலாத, ஆரம்பம் முதல் இறுதி வரை மயக்கமாக இருக்கின்ற, உறக்கம், சோம்பல், மற்றும் மாயையினால் வருகின்ற சுகம், தமோ குணத்தில் இருப்பதாகக் கூறப்படுகின்றது.

18.40

ந தத் அஸ்தி ப்ருதிவ்யாம் வா

திவிதேவேஷு வா புன:

ஸத்த்வம் ப்ரக்ருதி-ஜைர் முக்தம்

யத் ஏபி: ஸ்யாத் த்ரிபிர் குணை:

 

இவ்வுலகிலோ, உயர்லோகத்திலுள்ள தேவர்களின் மத்தியிலோ, ஜட இயற்கையிலிருந்து பிறந்த இந்த மூன்று குணங்களிலிருந்து விடுபட்டவர்கள் எவருமில்லை.

18.41

ப்ராஹ்மண-க்ஷத்ரிய-விஷாம்

ஷூத்ராணாம் ச பரந்தப

கர்மாணி ப்ரவிபக்தானி

ஸ்வபாவ-ப்ரபவைர் குணை:

 

எதிரிகளைத் தவிக்கச் செய்பவனே, தங்களது சுபாவத்திலிருந்து பிறந்த குணங்களுக்கு ஏற்ற தன்மையின் அடிப்படையில், பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்கள் வேறுபடுத்தப்படுகின்றனர்.

18.42

ஷமோ தமஸ் தப: ஷெளசம்

க்ஷாந்திர் ஆர்ஜவம் ஏவ ச

க்ஞானம் விக்ஞானம் ஆஸ்திக்யம்

ப்ரஹ்ம-கர்ம ஸ்வபாவ-ஜம்

 

அமைதி, சுயக்கட்டுப்பாடு, தவம், தூய்மை, சகிப்புத்தன்மை, நேர்மை, அறிவு, பகுத்தறிவு, ஆத்திகம் ஆகிய இயற்கையான தன்மைகளில் பிராமணர்கள் செயல்படுகின்றனர்.

18.43

ஷெளர்யம் தேஜோ த்ருதிர் தாக்ஷ்யம்

யுத்தே ச சாப்-யபலாயனம்

தானம் ஈஷ்வர-பாவஷ் ச

க்ஷாத்ரம் கர்ம ஸ்வபாவ-ஜம்

 

சூரத்தனம், வலிமை, மனவுறுதி, வளமை, போரில் தைரியம், கொடை, ஆளும் தன்மை ஆகியவை சத்திரியர்களின் சுபாவத்திலிருந்து பிறந்த செயல்கள்.

18.44

க்ருஷி-கோ-ரக்ஷ்ய-வாணிஜ்யம்

வைஷ்ய-கர்ம ஸ்வபாவ-ஜம்

பரிசர்யாத்மகம் கர்ம

ஷூத்ரஸ்யாபி ஸ்வபாவ-ஜம்

 

விவசாயம், பசுக்களைப் பராமரித்தல், வியாபாரம் ஆகியவை வைசியர்களின் இயற்கையான செயல்கள். உழைப்பாளிகளான சூத்திரர்களின் சுபாவம் மற்றவர்களுக்குத் தொண்டு செய்வதாகும்.

18.45

ஸ்வே ஸ்வே கர்மண்-யபி ரத:

ஸம்ஸித்திம் லபதே நர:

ஸர்வ-கர்ம-நிரத: ஸித்திம்

யதா விந்ததி தச் ச்ருணு

 

தனது குணத்திற்குத் தகுந்த கடமைகளைப் பின்பற்றுவதால் ஒவ்வொரு மனிதனும் பக்குவமடைய முடியும். அதை எவ்வாறு செயலாற்றுவது என்பதை தற்போது என்னிடமிருந்து கேட்பாயாக.

18.46

யத: ப்ரவ்ருத்திர் பூதானாம்

யேன ஸர்வம் இதம் ததம்

ஸ்வ-கர்மணா தம் அப்யர்ச்ய

ஸித்திம் விந்ததி மானவ:

 

யாரிடமிருந்து எல்லா உயிர்வாழிகளும் தோன்றினரோ, யார் எல்லா இடங்களிலும் பரவியுள்ளாரோ, அந்த இறைவனை தனது சொந்த கடமையைச் செய்வதால் வழிபட்டு மனிதன் பக்குவத்தை அடைய முடியும்

18.47

ஷ்ரேயான் ஸ்வதர்மோ விகுண:

பர-தர்மாத் ஸ்வனுஷ்டிதாத்

ஸ்வபாவநியதம் கர்ம

குர்வன் நாப்னோதி கில்பிஷம்

 

மற்றவரது கடமையை ஏற்று அதனைப் பக்குவமாகச் செய்வதை விட, முறையாக செய்யாவிட்டாலும் தனது சொந்த கடமையில் ஈடுபட்டிருப்பதே சிறந்தது. ஒருவனது இயற்கைக்கு ஏற்பட விதிக்கப்பட்டுள்ள கடமைகள், பாவ விளைவுகளால் என்றும் பாதிக்கப்படுவதில்லை.

18.48

ஸஹ-ஜம் கர்ம கெளந்தேய

ஸ-தோஷம் அபி ந த்யஜேத்

ஸர்வாரம்பா ஹி தோஷேண

தூமேனாக்னிர் இவாவ்ருதா:

 

நெருப்பு புகையால் சூழப்பட்டிருப்பதைப் போல, ஒவ்வொரு முயற்சியும் ஏதேனும் ஒரு தோஷத்தால் சூழப்பட்டுள்ளது. எனவே, குந்தியின் மகனே, முழுவதும் தோஷம் நிறைந்ததாக இருந்தாலும், தனது இயற்கையிலிருந்து தோன்றிய தொழிலை ஒருவன் துறக்கக் கூடாது.

18.49

அஸக்த-புத்தி: ஸர்வத்ர

ஜிதாத்மா விகத-ஸ்ப்ருஹ:

நைஷ்கர்ம்ய-ஸித்திம் பரமாம்

ஸன்ன்யாஸேனாதி கச்சதி

 

சுயக் கட்டுப்பாடுடைய, பற்றற்ற, மற்றும் எல்லா பெளதிக சுகத்தையும் புறக்கணிக்கக்கூடிய ஒருவன், துறவைப் பயிற்சி செய்வதால், ‘கர்ம விளைவுகளிலிருந்து விடுதலை என்னும் மிகவுயர்ந்த பக்குவநிலையை அடைகிறான்.

18.50

ஸித்திம் ப்ராப்தோ யதா ப்ரஹ்ம

ததாப்னோதி நிபோத மே

ஸமாஸேனைவ கெளந்தேய

நிஷ்டா க்ஞானஸ்ய யா பரா

 

குந்தியின் மகனே, இந்த பக்குவத்தை அடைந்தவன், பிரம்மன் எனப்படும் ஞானத்தின் மிகவுயர்ந்த நிலையினை, திவ்யமான பக்குவநிலையினை எவ்வாறு அடைய முடியும் என்பதை நான் தற்போது சுருக்கமாக கூறுகிறேன், இதனை என்னிடமிருந்து கேட்பாயாக.

18.51-53

புத்த்யா விஷுத்தயா யுக்தோ

த்ருத்யாத்மானம் நியம்ய ச

ஷப்தாதீன் விஷயாம்ஸ் த்யக்த்வா

ராக-த்வேஷெள வ்யுதஸ்ய ச

விவிக்தஸேவீ லக்வாஷீ

யத-வாக்-காய-மானஸ:

த்யானயோகபரோ நித்யம்

வைராக்யம் ஸமுபாஷ் ரித:

அஹங்காரம் பலம் தர்பம்

காமம் க்ரோதம் பரிக்ரஹம்

விமுச்ய நிர்மம: ஷாந்தோ

ப்ரஹ்ம-பூயாய கல்பதே

 

தனது புத்தியினால் தூய்மையடைந்து, உறுதியுடன் மனதைக் கட்டுப்படுத்தி, புலனுகர்ச்சிப் பொருள்களைத் துறந்து, விருப்பு வெறுப்பிலிருந்து விடுபட்டு, தனியிடத்தில் வாழ்ந்து, குறைவாக உண்டு, உடல், மனம் மற்றம் பேச்சினைக் கட்டுப்படுத்தி, எப்போதும் தியானத்தில் ஆழ்ந்து, பற்றுதலின்றி, அஹங்காரம், பொய்யான வலிமை, பொய்யான பெருமை, காமம், கோபம் மற்றும் ஜடப் பொருள்களை ஏற்பதிலிருந்து விடுபட்டு, உரிமை உணர்வின்றி, அமைதியாக இருக்கும் மனிதன், தன்னுணர்வின் நிலைக்கு நிச்சயமாக உயர்த்தப்படுகின்றான்.

18.54

ப்ரஹ்ம-பூத: ப்ரஸன்னாத்மா

ந ஷோசதி ந காங்க்ஷதி

ஸம: ஸர்வேஷு பூதேஷு

மத்-பக்திம் லபதே பராம்

 

இவ்வாறு தெய்வீகமாக நிலைபெற்றவன், உடனடியாக பரபிரம்மனை உணர்ந்து இன்பம் நிறைந்தவனாகின்றான். அவன் என்றும் கவலைப்படுவதில்லை, எதையும் அடைய வேண்டும் என்று விரும்புவதுமில்லை. எல்லா உயிர்வாழிகளிடமும் அவன் சமநோக்கு கொள்கிறான். அத்தகு நிலையில் அவன் எனது தூய பக்தித் தொண்டை அடைகின்றான்.

18.55

பக்த்யா மாம் அபிஜானாதி

யாவான் யஷ் சாஸ்மி தத்த்வத:

ததோ மாம் தத்த்வதோ க்ஞாத்வா

விஷதே தத்-அனந்தரம்

 

பக்தித்தொண்டால் மட்டுமே என்னை, முழுமுதற் கடவுளாக, உள்ளது உள்ளபடி, அறிந்துகொள்ள முடியும். என்னைப் பற்றிய முழுமையான உணர்வை அத்தகு பக்தியினால் அடையும்போது இறைவனின் திருநாட்டிற்குள் நுழைய முடியும்.

18.56

ஸர்வ-கர்மாண்-யபி ஸதா

குர்வாணோ மத்-வ்யாபாஷ்ரய:

மத்-ப்ரஸாதாத் அவாப்னோதி

ஷாஷ்வதம் பதம் அவ்யயம்

 

எல்லாவிதமான செயல்களில் ஈடுபட்டிருந்தாலும், எனது தூய பக்தன், எனது பாதுகாப்பின் கீழ், எனது கருணையால், நித்தியமான அழிவற்ற இடத்தை அடைகிறான்.

18.57

சேதஸா ஸர்வ-கர்மாணி

மயி ஸன்ன்யஸ்ய மத்-பர:

புத்தி-யோகம் உபாஷ்ரித்ய

மச்-சித்த: ஸததம் பவ

 

எல்லாச் செயல்களிலும் என்னையே சார்ந்து, எனது பாதுகாப்பின் கீழ் எப்போதும் செயல்படுவாயாக. இதற்கு பக்தித் தொண்டில் என்னைப் பற்றிய உணர்வில் ஆழ்ந்துவிடு.

18.58

மச்-சித்த: ஸர்வ-துர்காணி

மத்-ப்ரஸாதாத் தரிஷ்யஸி

அத சேத் த்வம் அஹங்காரான்

ந ஷ்ரோஷ்யஸி வினங்க்ஷ்யஸி

 

நீ என்னைப் பற்றிய உணர்வில் நிலைபெற்றால், எனது கருணையின் மூலம், கட்டுண்ட வாழ்வின் எல்லாத் தடங்கல்களையும் கடந்துவிடுவாய். ஆனால், அத்தகு உணர்வின்றி, அஹங்காரத்துடன், நான் சொல்வதைக் கேட்காமல் செயல்பட்டால், நீ அழிந்துவிடுவாய்.

18.59

யத் அஹங்காரம் ஆஷ்ரித்ய

ந யோத்ஸ்ய இதி மன்யஸே

மித்யைஷ வ்யவஸாயஸ் தே

ப்ரக்ருதிஸ் த்வாம் நியோக்ஷ்யதி

 

நீ எனது வழிகாட்டுதலின்படி போரிட வேண்டும்; இல்லையேல் தவறாக வழிநடத்தப்படுவாய். உனது இயற்கையின்படி நீ போரில் ஈடுபட் வேண்டியவனே.

18.60

ஸ்வபாவ-ஜேன கௌந்தேய

நிபத்த: ஸ்வேன கர்மணா

கர்தும் நேச்சஸி யன் மோஹாத்

கரிஷ்யஸ்-யவஷோ (அ)பி தத்

 

மயக்கத்தின் காரணத்தால் எனது வழிகாட்டுதலுக்கு ஏற்ப செயல்பட நீ மறுக்கின்றாய். ஆனால், குந்தியின் மகனே, உனது சுபாவத்தினால் வற்புறுத்தப்பட்டு, நீ அதன்படியே செயல்படுவாய்.

18.61

ஈஷ்வர: ஸர்வ-பூதானாம்

ஹ்ருத்-தேஷே (அ)ர்ஜுன திஷ்டதி

ப்ராமயன் ஸர்வ-பூதானி

யந்த்ராரூடானி மாயயா

 

ஓ அர்ஜுனா, ஜட சக்தியால் செய்யப்பட்ட இயந்திரத்தில் அமர்ந்துள்ள எல்லா உயிர்வாழிகளின் பயணங்களையும், அவரவர் இதயத்தில் வீற்றுள்ள முழுமுதற்க கடவுளே வழிநடத்துகின்றார்.

18.62

தம் ஏவ ஷரணம் கச்ச

ஸர்வ-பா வேன பா ரத

தத் ப்ரஸாதாத் பராம் ஷாந்திம்

ஸ்தானம் ப்ராப்ஸ்யஸி ஷாஷ்வதம்

 

பரத வழித் தோன்றலே, அவரிடம் முழுமையாக சரணடைவாயாக. அவரது கருணையால் தெய்வீக அமைதியையும், உன்னதமான நித்திய இடத்தையும் நீ அடைவாய்.

18.63

இதி தே க்ஞானம் ஆக்யாதம்

குஹ்யாத் குஹ்யதரம் மயா

விம்ருஷ்யைதத் அஷேஷேண

யதேச்சஸி ததா குரு

 

இவ்வாறு இரகசியமானதைக் காட்டிலும் மிகவும் இரகசியமான ஞானத்தை உனக்கு நான் விளக்கியுள்ளேன். இதனை முழுமையாக கவனமாகச் சிந்தித்து, நீ செய்ய விரும்புவதைச் செய்.

18.64

ஸர்வ-குஹ்யதமம் பூய:

ஷ்ருணு மே பரமம் வச:

இஷ்டோ (அ)ஸி மே த்ருடம் இதி

ததோ வக்ஷ்யாமி தே ஹிதம்

 

நீ எனக்கு மிகவும் பிரியமான நண்பன் என்பதால், என்னுடைய அறிவுரைகளில் மிகவும் உன்னதமான, எல்லாவற்றிலும் மிகமிக இரகசியமான ஞானத்தை நான் உனக்குக் கூறுகின்றேன். இஃது உனது நன்மைக்காக என்பதால் என்னிடமிருந்து கேட்பாயாக.

18.65

மன்-மனா பவ மத்-பக்தோ

மத்-யாஜீ மாம் நமஸ்குரு

மாம் ஏவைஷ்யஸி ஸத்யம் தே

ப்ரதிஜானே ப்ரியோ (அ)ஸி மே

 

எப்போதும் என்னைப் பற்றி நினைத்து, எனது பக்தனாக ஆகி, என்னை வழிபட்டு, உனது வணக்கங்களை எனக்கு சமர்பிப்பாயாக. இவ்வாறு நீ என்னை வந்தடைவாய் என்பதில் ஐயமில்லை. நீ எனக்கு மிகவும் பிரியமான நண்பன் என்பதால், இந்த சத்தியத்தை நான் உனக்கு அளிக்கிறேன்.

18.66

ஸர்வதர்மான் பரித்யஜ்ய

மாம் ஏகம் ஷரணம் வ்ரஜ

அஹம் த்வாம் ஸர்வபாபேப்யோ

மோக்ஷயிஷ்யாமி மா ஷுச:

 

எல்லாவிதமான தர்மங்களையும் துறந்து, என்னிடம் மட்டுமே சரணடையவாயாக. உன்னை எல்லா பாவ விளைவுகளிலிருந்தும் நான் விடுவிக்கின்றேன், பயப்படாதே.

18.67

இதம் தே நாதபஸ்காய

நாபக்தாய கதாசன

ந சாஷுஷ்ரூஷவே வாச்யம்

ந ச மாம் யோ (அ)ப்யஸூயதி

 

இந்த இரகசிய ஞானம், தவமில்லாதவருக்கோ, பக்தியில்லாதவருக்கோ, பக்தித் தொண்டில் ஈடுபடாதவருக்கோ, என் மீது பொறாமையுள்ளவருக்கோ ஒருபோதும் விளக்கப்படக் கூடாது.

18.68

ய இதம் பரமம் குஹ்யம்

மத்-பக்தேஷ்-வபிதாஸ்யதி

பக்திம் மயி பராம் க்ருத்வா

மாம் ஏவைஷ்யத்-யஸம்ஷ ய:

 

இந்த பரம இரகசியத்தை எனது பக்தர்களிடம் விளக்குபவனுக்கு, தூய பக்தித் தொண்டு உறுதிப்படுத்தப்படுவதோடு, அவன் இறுதியில் நிச்சயமாக என்னிடம் திரும்பி வருகின்றான்.

18.69

ந ச தஸ்மான் மனுஷ்யேஷு

கஷ் சின் மே ப்ரியக்ருத்தம:

பவிதா ந ச மே தஸ்மாத்

அன்ய: ப்ரியதரோ புவி

 

அவனைவிட எனக்கு பிரியமான தொண்டன் இவ்வுலகில் யாரும் இல்லை. அவ்வாறு அவனைவிட பிரியமானவனாக யாரும் ஆகவும் முடியாது.

18.70

அத்யேஷ்யதே ச ய இமம்

தர்ம்யம் ஸம்வாதம் ஆவயோ:

க்ஞானயக்ஞேன தேனாஹம்

இஷ்ட: ஸ்யாம் இதி மே மதி:

 

மேலும், நமது இந்தப் புனிதமான உரையாடலைக் கற்பவன், தனது அறிவால், என்னை வழிபடுவான் என்று நான் அறிவிக்கின்றேன்.

18.71

ஷ்ரத்தாவான் அனஸூயஷ் ச

ஷ்ருணுயாத் அபி யோ நர:

ஸோ (அ)பி முக்த: ஷுபாங்ல் லோகான்

ப்ராப்னுயாத் புண்யகர்மணாம்

 

மேலும், நம்பிக்கையுடனும் பொறாமையின்றியும் இதனை யாரொருவன் கேட்கின்றானோ, அவன் பாவ விளைவுகளிலிருந்து விடுபட்டு, புண்ணியம் செய்தவர்கள் வாழும் மங்களகரமான லோகங்களை அடைகின்றான்.

18.72

கச்சித்-ஏதச் ச்ருதம் பார்த

த்வயைகாக்ரேண சேதஸா

கச்சித் அக்ஞான-ஸம்மோஹ:

ப்ரணஷ்டஸ் தே தனஞ்ஜய

 

பிருதாவின் மகனே, செல்வத்தை வெல்வோனே, நீ இதனை கவனமான மனதுடன் கேட்டாயா? உனது அறியாமையும் மயக்கமும் தற்போது நீங்கிவிட்டதா?

18.73

அர்ஜுன உவாச

நஷ்டோ மோஹ: ஸ்ம்ருதிர் லப்தா

த்வத்-ப்ரஸாதா ன் மயாச்யுத

ஸ்திதோ (அ)ஸ்மி கத-ஸந்தேஹ:

கரிஷ்யே வசனம் தவ

 

அர்ஜுனன் கூறினான்: எனதன்பு கிருஷ்ணரே, வீழ்ச்சியடையாதவரே, எனது மயக்கம் தற்போது நீங்கிவிட்டது. தங்களது கருணையால் நான் எனது நினைவை மீண்டும் பெற்று விட்டேன். எல்லா சந்தேகங்களிலிருந்தும் விடுபட்டு, நான் தற்பொழுது உறுதியுடன் உள்ளேன், தங்களது உபதேசங்களின் படிச்செயல்பட தயராக உள்ளேன்.

18.74

ஸஞ்ஜய உவாச

இத்-யஹம் வாஸுதேவஸ்ய

பார்தஸ்ய ச மஹாத்மன:

ஸம்வாதம் இமம் அஷ்ரெளஷம்

அத்புதம் ரோமஹர்ஷணம்

 

சஞ்ஜயன் கூறினான்: இவ்வாறு, கிருஷ்ணர், அர்ஜுனன் என்னும் இரு மஹாத்மாக்களுக்கு இடையிலான உரையாடலை நான் கேட்டேன். அதன் அற்புதமான விஷயங்களினால் எனக்கு மயிர்கூச்சம் ஏற்படுகின்றது.

18.75

வ்யாஸ-ப்ராஸாதாச் ச்ருதவான்

ஏதத் குஹ்யம் அஹம் பரம்

யோகம் யோகேஷ்வராத் க்ருஷ்ணாத்

ஸாக்ஷாத் கதயத: ஸ்வயம்

 

வியாசரின் கருணையால், யோகங்களின் இறைவனான கிருஷ்ணர், அர்ஜுனனிடம் தாமே நடத்திய இந்த மிகமிக இரகசியமான உரையாடலை நான் நேரடியாகக் கேட்டேன்.

18.76

ராஜன் ஸம்ஸ்ம்ருத்ய ஸம்ஸ்ம்ருத்ய

ஸம்வாதம் இமம் அத்புதம்

கேஷவார்ஜுனயோ: புண்யம்

ஹ்ருஷ்யாமி ச முஹுர் முஹு:

 

மன்னனே, கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்குமிடையில் நடந்த இந்த அற்புதமான புனித உரையாடலை மீண்டும் மீண்டும் நினைத்து, ஒவ்வொரு கணமும் உணர்ச்சிவசப்பட்டு நான் இன்படைகின்றேன்.

18.77

தச் ச ஸம்ஸ்ம்ருத்ய ஸம்ஸ்ம்ருத்ய

ரூபம் அத்-யத்புதம் ஹரே:

விஸ்மயோ மே மஹான் ராஜன்

ஹ்ருஷ்யாமி ச புன: புன:

 

மன்னனே, பகவான் கிருஷ்ணருடைய அந்த அற்புத ரூபத்தை நினைத்து நினைத்து, நான் மேன்மேலும் வியப்பில் மூழ்கி, மீண்டும் மீண்டும் இன்படைகிறேன்.

18.78

யத்ர யோகேஷ்வர: க்ருஷ்ணோ

யத்ர பார்தோ தனுர்-தர:

தத்ர ஷ்ரீர் விஜயோ பூதிர்

த்ருவா நீதிர் மதிர் மம

 

யோகிகளின் இறைவனான கிருஷ்ணர் எங்கெல்லாம் இருக்கின்றாரோ, உன்னத வில்லாளியான அர்ஜுனன் எங்கெல்லாம் இருக்கின்றானோ, அங்கெல்லாம் நிச்சயமாகச் செல்வமும் வெற்றியும் அசாதாரணமான வலிமையும் நியாயமும் இருக்கும் என்பது எனது அபிப்பிராயம்.