ஸ்ரீமத் பகவத்கீதை – பதின்மூன்றாவது அத்தியாயம்


அத்தியாயம் பதிமூன்று: இயற்கையும் அனுபவிப்பவனும் உணர்வும்

13.1-2

அர்ஜுன உவாச

ப்ரக்ருதிம் புருஷம் சைவ

க்ஷேத்ரம் க்ஷேத்ர-க்ஞம் ஏவ ச

ஏகத் வேதிதும் இச்சாமி

க்ஞானம் க்ஞேயம் ச கேஷவ

ஸ்ரீ-பகவான் உவாச

இதம் ஷரீரம் கௌந்தேய

க்ஷேத்ரம் இத்-யபிதீயதே

ஏதத் யோ வேத்தி தம் ப்ராஹு:

க்ஷேத்ர-க்ஞ இதி தத்-வித:

 

அர்ஜுனன் கூறினான்: எனதன்பு கிருஷ்ணரே, இயற்கை (பிரக்ருதி), அனுபவிப்பவன் (புருஷ), களம் (க்ஷேத்ர), களத்தை அறிபவன் (க்ஷேத்ரக்ஞ), அறிவு (க்ஞானம்), அறியப்படும் பொருள் (க்ஞேயம்) ஆகியவற்றைப் பற்றி நான் தெரிந்து கொள்ள விரும்புகின்றேன்.புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்: குந்தியின் மகனே, இந்த உடல், களம் (க்ஷேத்ர) என்று அழைக்கப்படுகின்றது. இவ்வுடலை அறிபவன், களத்தை அறிபவன் (க்ஷேத்ரக்ஞ) என்று அழைக்கப்படுகிறான்.

13.3

க்ஷேத்ர-க்ஞம் சாபி மாம் வித்தி

ஸர்வ-க்ஷேத்ரேஷு பாரத

க்ஷேத்ரக்ஷேத்ரக்ஞயோர் க்ஞானம்

யத்-தஜ்-க்ஞானம் மதம் மம

 

பரத குலத் தோன்றலே, நானும் எல்லா உடல்களிலும் அறிபவனாக உள்ளேன் என்பதை புரிந்துகொள். உடலையும் அதனை அறிபவனையும் புரிந்துகொள்வதே ஞானம் என்று அழைக்கப்படுகின்றது. இதுவே எனது அபிப்பிராயம்.

13.4

தத் க்ஷேத்ரம் யச் ச யாத்ருக் ச

யத்-விகாரி யதஷ் ச யத்

ஸ ச யோ யத்-ப்ரபாவஷ் ச

தத் ஸமாஸேன மே ஷ்ருணு

 

செயல்களின் களம் எவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது, அதன் மாற்றங்கள் யாவை, அஃது எப்போது உண்டாக்கப்படுகின்றது, செயல்களின் களத்தை அறிபவன் யார், அவனது செல்வாக்குகள் யாவை, என்பதைப் பற்றிய எனது சுருக்கமான உரையை இனிக் கேட்பாயாக.

13.5

ருஷிபிர் பஹுதா கீதம்

சந்தோபிர் விவிதை: ப்ருதக்

ப்ரஹ்ம-ஸூத்ர-பதைஷ் சைவ

ஹேதுமத் பிர்-வினிஷ்சிதை:

 

செயல்களின் களம் மற்றும் செயல்களை அறிபவனைப் பற்றிய அறிவு, பற்பல முனிவர்களினால் பல்வேறு வேத நூல்களில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வேதாந்த சூத்திரத்தின் பதங்களில், காரணம் மற்றும் விளைவுகளுடன் இவை மிகவும் நுணுக்கமாக விளக்கப்பட்டுள்ளன.

13.6-7

மஹா-பூதான்-யஹங்காரோ

புத்திர் அவ்யக்தம் ஏவ ச

இந்த்ரியாணி தஷைகம் ச

பஞ்ச சேந்த்ரிய-கோசரா:

இச்சாத்வேஷ: ஸுகம் து:கம்

ஸங்காதஷ் சேதனா த்ருதி:

ஏகத் க்ஷேத்ரம் ஸமாஸேன

ஸ-விகாரம்-உதாஹ்ருதம்

 

பஞ்சபூதம், அஹங்காரம், புத்தி, அவ்யக்தம், பத்து புலன்கள், மனம், ஐந்து புலன் பொருள்கள், விருப்பு, வெறுப்பு, இன்பம், துன்பம், உயிரின் அறிகுறிகள், திட நம்பிக்கைஇவையெல்லாம் சுருக்கமாக செயல்களின் களம் மற்றும் அதன் மாறுபாடுகள் என்று கருப்படுகின்றன.

13.8-12

அமானித்வம் அதம்பித்வம்

அஹிம்ஸா க்ஷாந்திர் ஆர்ஜவம்

ஆசார்யோபாஸனம் ஷெளசம்

ஸ்தைர்யம் ஆத்ம வினிக்ரஹ:

இந்த்ரியார்தேஷு வைராக்யம்

அனஹங்கார ஏவ ச

ஜன்மம்ருத்யு-ஜரா-வ்யாதி-

து:க-தோஷானுதர்ஷனம்

அஸக்திர் அனபிஷ்வங்க:

புத்ர-தார-க்ருஹாதி ஷு

நித்யம் ச ஸம-சித்தத்வம்

இஷ்டானிஷ்டோபத்திஷு

மயி சானன்ய-யோகேன

பக்திர் அவ்யபிசாரிணீ

விவிக்த-தேஷ-ஸேவித்வம்

அரதிர் ஜன-ஸம்ஸதி

அத்யாத்ம-க்ஞான நித்யத்வம்

தத்த்வ-க்ஞானார்த தர்ஷனம்

ஏதஜ் க்ஞானம் இதி ப்ரோக்தம்

அக்ஞானம் யத் அதோ (அ)ன்யதா

 

அடக்கம்; கர்வமின்மை; அகிம்சை; பொறுமை; எளிமை; அங்கீகரிக்கப்பட்ட ஆன்மீக குருவை அணுகுதல்; தூய்மை; தளராமை; சுயக்கட்டுப்பாடு; புலனுகர்ச்சிப் பொருள்களைத் துறத்தல்; பொய் அஹங்காரம் இல்லாதிருத்தல்; பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் ஆகியவற்றின் துன்பத்தினை கவனித்தல்; குழந்தைகள், மனைவி, வீடு மற்றும் இதர பந்தத்திலிருந்து விடுபட்டு இருத்தல்; விருப்பு வெறுப்புகளில் சமநிலை; என் மீதான நித்தியமான களங்கமற்ற பக்தி; தனிமையான இடங்களில் வாழ விரும்புதல்; பொதுமக்களிடமிருந்து விலகியிருத்தல்; ஆத்ம ஞானத்தின் முக்கியத்துவத்தை ஏற்றல்; பரம சத்தியத்தை அறிவதற்கான தத்துவ ஆய்வுஇவையனைத்தையும் நான் ஞானமாக அறிவிக்கின்றேன், இவற்றைத் தவிர மற்றவை அனைத்தும் அறியாமையே ஆகும்.

13.13

க்ஞேயம் யத் தத் ப்ரவக்ஷ்யாமி

யஜ் க்ஞாத்வாம்ருதம் அஷ்னுதே

அனாதி மத்-பரம் ப்ரஹ்ம

ந ஸத் தன் நாஸத் உச்யதே

 

தற்போது, எதை அறிவதால் நீ அமிர்தத்தை சுவைப்பாயோ, அந்த அறியப்படும் பொருளை நான் உனக்கு விளக்குகின்றேன். ஆரம்பம் இல்லாததும், எனக்குக் கீழ்ப்பட்டதும், பிரம்மன், ஆத்மா என்று அழைக்கப்படுவதுமான இது, ஜடவுலகின் காரணம் மற்றும் விளைவுகளுக்கு அப்பாற்பட்டு விளங்குகின்றது.

13.14

ஸர்வத: பாணி-பாதம் தத்

ஸர்வதோ (அ)க்ஷி-ஷிரோ-முகம்

ஸர்வத: ஷ்ருதிமல் லோகே

ஸர்வம் ஆவ்ருத்ய திஷ்டதி

 

அவரது கரங்கள், கால்கள், கண்கள், மற்றும் முகங்கள் எல்லா இடங்களிலும் உள்ளன. எல்லா இடங்களிலும் அவரது காதுகளும் உள்ளன. இவ்வாறாக எங்கும் வீற்றிருப்பவராக பரமாத்மா விளங்குகின்றார்.

13.15

ஸர்வேந்த்ரிய-குணாபாஸம்

ஸர்வேந்த் ரிய-விவர்ஜிதம்

அஸக்தம் ஸர்வ-ப்ருச் சைவ

நிர்குணம் குண-போக்த்ரு ச

 

எல்லா புலன்களுக்கும் மூல காரணம் பரமாத்மாவே, இருப்பினும் அவரிடம் புலன்கள் கிடையாது. அவரே எல்லா உயிர்வாழிகளையும் பராமரிப்பவர், இருப்பினும் அவர் பற்றற்றவராக உள்ளார். அவர் இயற்கையின் குணங்களுக்கு அப்பாற்பட்டவர், அதே சமயத்தில், ஜட இயற்கையின் எல்லா குணங்களுக்கும் அவரே எஜமானர்.

13.16

பஹிர்-அந்தஷ் ச பூதானாம்

அசரம் சரம் ஏவ ச

ஸூக்ஷ்மத்வாத் தத் அவிக்ஞேயம்

தூர-ஸ்தம் சாந்திகே ச தத்

 

பரம உண்மை, எல்லா உயிர்வாழிகளின் உள்ளும் புறமும் உள்ளார், அசைவன மற்றும் அசையாதவற்றிலும் உள்ளார். அவர் சூட்சுமமானவர் என்பதால், ஜடப் புலன்களின் வலிமையால் காண்பதற்கோ அறிவதற்கோ அப்பாற்பட்டவர். மிக மிகத் தொலைவில் இருப்பினும், அவர் அனைவரின் அருகிலும் உள்ளார்.

13.17

அவிபக்தம் ச பூ தேஷு

விபக்தம் இவ ச ஸ்திதம்

பூத-பர்த்ரு ச தஜ் க்ஞேயம்

க்ரஸிஷ்ணு ப்ரபவிஷ்ணு ச

 

எல்லா உயிர்களுக்குமிடையே பரமாத்மா பிரிந்திருப்பதாகத் தோன்றினாலும், அவர் ஒருபோதும் பிரிக்கப்பட முடியாதவர். அவர் ஒருவராகவே இருக்கின்றார். அவரே எல்லா உயிர்வாழிகளையும் காப்பவர் என்றபோதிலும், அழிப்பவரும் விருத்தி செய்பவரும் அவரே என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

13.18

ஜ்யோதிஷாம் அபி தஜ் ஜ்யோதிஸ்

தமஸ: பரம் உச்யதே

க்ஞானம் க்ஞேயம் க்ஞான-கம்யம்

ஹ்ருதி ஸர்வஸ்ய விஷ்டிதம்

 

பிரகாசிக்கும் பொருள்கள் எல்லாவற்றிற்கும் மூலம் அவரே. அவர் ஜடத்தின் இருட்டிற்கு அப்பாற்பட்டவராகவும் தோன்றாதவராகவும் உள்ளார். அவரே அறிவாகவும், அறியப்படும் பொருளாகவும், அறிவின் இலக்காகவும் உள்ளார். அவர் ஒவ்வொருவருடைய இதயத்திலும் வீற்றுள்ளார்.

13.19

இதி க்ஷேத்ரம் ததா க்ஞானம்

க்ஞேயம் சோக்தம் ஸமாஸத:

மத்-பக்த ஏதத் விக்ஞாய

மத்-பாவாயோபபத்யதே

 

இவ்வாறாக, செயல்களின் களம் (உடல், க்ஷேத்ர), அறிவு (க்ஞானம்), அறியப்படும் பொருள் (க்ஞேயம்), ஆகியவை சுருக்கமாக என்னால் விவரிக்கப்பட்டன. எனது பக்தர்கள் மட்டுமே இவற்றை முழுமையாகப் புரிந்து கொண்டு, எனது இயற்கையை அடைய முடியும்.

13.20

ப்ரக்ருதிம் புருஷம் சைவ

வித்த்யனாதீ உபாவ் அபி

விகாராம்ஷ் ச குணாம்ஷ் சைவ

வித்தி ப்ரக்ருதி-ஸம்பவான்

 

ஜட இயற்கையும் உயிர்வாழிகளும் ஆரம்பமற்றவை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களது மாற்றங்களும் ஜடத்தின் குணங்களும், ஜட இயற்கையின் உற்பத்திப் பொருள்களே.

13.21

கார்ய-காரண கர்த்ருத்வே

ஹேது: ப்ரக்ருதிர் உச்யதே

புருஷ: ஸுக-து:கானாம்

போக்த்ருத்வே ஹேதுர் உச்யதே

 

எல்லா செயல்களுக்கும் விளைவுகளுக்கும் இயற்கையே காரணமாகக் கூறப்படுகிறது; இருப்பினும் இவ்வுலகின் பல்வேறு இன்ப துன்பங்களுக்கு உயிர்வாழியே காரணமாகக் கூறப்படுகின்றது.

13.22

புருஷ: ப்ரக்ருதி-ஸ்தோ ஹி

புங்க்தே ப்ரக்ருதி-ஜான் குணான்

காரணம் குண-ஸங்கோ (அ)ஸ்ய

ஸத்-அஸத்-யோனி-ஜன்மஸு

 

இவ்வாறாக, ஜட இயற்கையிலுள்ள உயிர்வாழி, இயற்கையின் முக்குணங்களை அனுபவித்துக் கொண்டு, வாழ்வின் வழிகளை பின்பற்றுகின்றான். இவை ஜட இயற்கையின் தொடர்பினால் ஏற்படுபவை. இவ்வாறு பல்வேறு இனங்களில் அவன் நன்மை தீமைகளைச் சந்திக்கின்றான்.

13.23

உபத்ரஷ்டானுமந்தா ச

பர்தா போக்தா மஹேஷ்வர:

பரமாத்மேதி சாப்-யுக்தோ

தேஹே (அ)ஸ்மின் புருஷ: பர:

 

இருப்பினும், இவ்வுடலில் மற்றொருவரும் இருக்கின்றார், அவர் தெய்வீக அனுபவிப்பாளர். அவரே இறைவன், பரம உரிமையாளர். மேற்பார்வையிட்டு அனுமதி வழங்குபவரும், பரமாத்மா என்று அறியப்படுபவரும் அவரே.

13.24

ய ஏவம் வேத்தி புருஷம்

ப்ரக்ருதிம் ச குணை: ஸஹ

ஸர்வதா வர்தமானோ (அ)பி

ந ஸ பூயோ (அ)பி ஜாயதே

 

ஜட இயற்கை, உயிர்வாழி, குணங்களுடனான இவற்றின் உறவு ஆகியவற்றைப் பற்றிய இந்த தத்துவத்தைப் புரிந்து கொள்பவன், நிச்சயமாக முக்தி அடைகின்றான். அவனது தற்போதைய நிலை எவ்வாறு இருந்தாலும் சரி, அவன் மீண்டும் இங்கே பிறவியெடுக்கப் போவதில்லை.

13.25

த்யானேனாத்மனி பஷ்யந்தி

கேசித் ஆத்மானம் ஆத்மனா

அன்யே ஸாங்க்யேன யோகேன

கர்ம-யோகேன சாபரே

 

தங்களுக்குள் இருக்கும் பரமாத்மாவினை, சிலர் தியானத்தினாலும், சிலர் ஞானத்தை வளர்ப்பதாலும், வேறு சிலர் பலனை எதிர்பாராது செயல்படுவதாலும் காண்கின்றனர்.

13.26

அன்யே த்வ ஏவம் அஜானந்த:

ஷ்ருத்வான்யேப்ய உபாஸதே

தே (அ)பி சாதிதரந்த் யேவ

ம்ருத்யும் ஷ்ருதி-பரயாயணா:

 

வேறு சிலர், ஆன்மீக ஞானத்தில் ஆழ்ந்த அனுபவம் இல்லாத போதிலும், பிறரிடமிருந்து முழுமுதற் கடவுளைப் பற்றி கேட்டதன் அடிப்படையில் அவரை வழிபடத் தொடங்குகின்றனர். அதிகாரிகளிடமிருந்து கேட்பதற்கான தங்களது இயல்பின் காரணத்தால் அவர்களும் பிறப்பு இறப்பின் வழியினைக் கடந்து செல்கின்றனர்.

13.27

யாவத் ஸஞ்ஜாயதே கிஞ்சித்

ஸத்த்வம் ஸ்தா-வர-ஜங்கமம்

க்ஷேத்ர-க்ஷேத்ரக்ஞ-ஸம்யோகாத்

தத் வித்தி பரதர்ஷப

 

பாரதர்களின் தலைவனே, அசைவன, அசையாதவை என எதையெல்லாம் நீ காண்கின்றாயோ, அவையெல்லாம் செயல்களின் களமும் களத்தை அறிபவனும் இணைந்த கலவையேயாகும்.

13.28

ஸமம் ஸர்வேஷு பூ தேஷு

திஷ்டந்தம் பரமேஷ்வரம்

வினஷ்யத்ஸ்வ்-அவினஷ்யந்தம்

ய: பஷ்யதி ஸ பஷ்யதி

 

எல்லா உடல்களிலும் ஜீவாத்மாவுடன் இணைந்து பரமாத்மாவைக் காண்பவனும், அழியக்கூடிய உடலினுள் இருக்கும் ஆத்மாவும் பரமாத்மாவும் அழிவடைவதில்லை என்பதைப் புரிந்துகொள்பவனுமே, உண்மையில் காண்பவனாவான்.

13.29

ஸமம் பஷ்யன் ஹி ஸர்வத்ர

ஸமவஸ்திதம் ஈஷ்வரம்

ந ஹினஸ்த் யாத்மனாத்மானம்

ததோ யாதி பராம் கதிம்

 

பரமாத்மா, எல்லா இடங்களிலும், எல்லா உயிர்வாழியிலும் சமமாக வீற்றிருப்பதைக் காண்பவன், தனது மனதால் தன்னை இழிவுபடுத்திக் கொள்வதில்லை. இவ்வாறு அவன் தெய்வீக இலக்கை அணுகுகின்றான்.

13.30

ப்ரக்ருத்யைவ ச கர்மாணி

க்ரியமாணானி ஸர்வஷ:

ய: பஷ்யதி ததாத்மானம்

அகர்தாரம் ஸ பஷ்யதி

 

எவனொருவன், ஜட இயற்கையினால் படைக்கப்பட்ட உடலே எல்லாச் செயல்களையும் செய்கின்றது என்பதையும், ஆத்மா எதையும் செய்வதில்லை என்பதையும் காண்கின்றானோ, அவனே உண்மையில் காண்கின்றான்.

13.31

யதா பூத-ப்ருதக்-பாவம்

ஏக-ஸ்தம் அனுபஷ்யதி

தத ஏவ ச விஸ்தாரம்

ப்ரஹ்ம ஸம்பத்யதே ததா

 

அறிவுள்ள மனிதன், பல்வேறு ஜட உடல்களில் பல்வேறு தோற்றங்களைக் காண்பதை நிறுத்தி, உயிர்வாழிகள் எவ்வாறு எங்கும் பரிந்துள்ளனர் என்பதை எப்போது காண்கின்றானோ, அப்போது அவன் பிரம்மன் உணர்வை அடைகின்றான்.

13.32

அனாதித்வான் நிர்குணத்வாத்

பரமாத்மாயம் அவ்யய

ஷரீர-ஸ்தோ (அ)பி கௌந்தேய

ந கரோதி ந லிப்யதே

 

நித்தியத்தின் பார்வையை உடையவர்கள், அழிவற்ற ஆத்மா தெய்வீகமானது, நித்தியமானது, இயற்கையின் குணங்களுக்கு அப்பாற்பட்டது என்பதைக் காண முடியும். ஜடவுடலின் தொடர்பில் இருந்தாலும் கூட, அர்ஜூனா, ஆத்மா எதையும் செய்வதோ பந்தப்படுவதோ இல்லை.

13.33

யதா ஸர்வ-கதம் ஸெளக்ஷ்ம்யாத்

ஆகாஷம் நோபலிப்யதே

ஸர்வத்ராவஸ்திதோ தேஹே

ததாத்மா நோபலிப்யதே

 

எங்கும் நிறைந்திருந்தாலும் தனது நுண்ணிய இயற்கையினால், ஆகாயம் எதனுடனும் கலக்காமல் இருக்கின்றது. அதுபோல, பிரம்மனின் பார்வையில் நிலைபெற்றுள்ள ஆத்மா, உடலில் அமைந்திருந்தாலும் உடலுடன் கலப்பதில்லை.

13.34

யதா ப்ரகாஷ யத்-யேக:

க்ருத்ஸ்னம் லோகம் இமம் ரவி:

க்ஷேத்ரம் க்ஷேத்ரீ ததா க்ருத்ஸ்னம்

ப்ரகாஷ யதி பாரத

 

பரதனின்ன மைந்தனே, ஒரே ஒரு சூரியன் இந்த பிபங்கம் முழுவதையும் பிரகாசமாக்குவதைப்போல, உடலினுள் இருக்கும் ஆத்மா, தனது உணர்வினால் உடல் முழுவதையும் பிரகாசப்படுத்துகின்றான்.

13.35

க்ஷேத்ர-க்ஷேத்ரக்ஞயோர் ஏவம்

அந்தரம் க்ஞான-சக்ஷுஷா

பூத-ப்ரக்ருதி-மோக்ஷம் ச

யே விதுர் யாந்தி தே பரம்

 

உடலுக்கும் உடலின் உரிமையாளனுக்கும் இடையிலான இந்த வேறுபாட்டை ஞானக் கண்களைக் கொண்டு அறிந்து, ஜட இயற்கையின் பந்தத்திலிருந்து முக்தி பெறுவதற்கான வழிமுறையையும் புரிந்துகொண்டவர்கள், பரம இலக்கினை அடைகின்றனர்.