அத்தியாயம் பத்து: பூரணத்தின் வைபவம்
10.1
ஸ்ரீ-பகவான் உவாச
பூய ஏவ மஹா-பாஹோ
ஷ்ருணு மே பரமம் வச:
யத் தே (அ)ஹம் ப்ரியமாணாய
வக்ஷ்யாமி ஹித-காம்யயா
புருஷோத்தமாரான முழுமுதற் கடவுள் கூறினார்: பலம் பொருந்திய புயங்களையுடைய அர்ஜுனா, நீ எனக்கு பிரியமான நண்பன் என்பதால், இதுவரை நான் விளக்கியதைக் காட்டிலும் சிறந்த ஞானத்தை தற்போது உன்னுடைய நலனிற்காக உரைக்கப் போகிறேன். இதனை மீண்டும் கேட்பாயாக.
10.2
ந மே விது: ஸுர-கணா:
ப்ரபவம் ந மஹர்ஷய:
அஹம் ஆதிர் ஹி தேவானாம்
மஹர்ஷீணாம் ச ஸர்வஷ:
தேவர்களோ மகா ரிஷிகளோ கூட என்னுடைய வைபவங்களை அறிவதில்லை. ஏனெனில், எல்லா விதங்களிலும் தேவர்களுக்கும் ரிஷிகளுக்கும் நானே ஆதியாவேன்.
10.3
யோ மாம் அஜம் அனாதிம் ச
வேத்தி லோக-மஹேஷ்வரம்
அஸம்மூட: ஸ மர்த்யேஷு
ஸர்வ–பாபை: ப்ரமுச்யதே
எவனொருவன், என்னைப் பிறப்பற்றவனாகவும், ஆரம்பம் அற்றவனாகவும், எல்லா உலகங்களின் இறைவனாகவும் அறிகின்றானோ, மனிதர்களிடையே குழப்பமற்றவனாக அவன் மட்டுமே, எல்லா பாவங்களிலிருந்தும் விடுதலை பெறுகிறான்.
10.4-5
புத்திர் க்ஞானம் அஸம்மோஹ:
க்ஷமா ஸத்யம் தம: ஷம:
ஸுகம் து:கம் பவோ (அ)பாவோ
பயம் சாபயம் ஏவ
அஹிம்ஸா ஸமதா துஷ்டிஸ்
தபோ தானம் யஷோ (அ)யஷ:
பவந்தி பாவா பூதானம்
மத்த ஏவ ப்ருதக்-விதா:
புத்தி, ஞானம், ஐயம், மயக்கத்திலிருந்து விடுதலை, மன்னித்தல், வாய்மை, புலனடக்கம், மன அடக்கம், சுகம், துக்கம், பிறப்பு, இறப்பு, அச்சம், அச்சமின்மை, அகிம்சை, சமத்துவம், திருப்தி, தவம், தானம், புகழ் மற்றும் இகழ்ச்சி—என உயிர்வாழிகளிடம் காணப்படும் பல்வேறு குணங்கள் அனைத்தும் என்னால் படைக்கப்பட்டவையே.
10.6
`மஹர்ஷய: ஸப்த பூர்வே
சத்வாரோ மனவஸ் ததா
மத்-பாவா மானஸா ஜாதா
யேஷாம் லோக இமா: ப்ரஜா:
ஏழு மகா ரிஷிகளும், அவர்களுக்கு முந்தைய நான்கு ரிஷிகளும், (மனித சமுதாயத்தைத் தோற்றுவித்தவர்களான) மனுக்களும், என்னிடமிருந்து எனது மனதால் பிறந்தவர்களே, பல்வேறு லோகங்களில் வாழும் எல்லா உயிரினங்களும் அவர்களிடமிருந்து தோன்றியவையே.
10.7
ஏதாம் விபூதிம் யோகம் ச
மம யோ வேத்தி தத்த்வத:
ஸோ (அ)விகல்பேன யோகேன
யுஜ்யதே நாத்ர ஸம்ஷய:
எனது இத்தகு வைபவத்தையும் யோக சக்தியையும் எவன் உண்மையாக அறிகின்றானோ, அவன் களங்கமற்ற பக்தித் தொண்டில் ஈடுபடுகின்றான்; இதில் சந்தேகம் இல்லை.
10.8
அஹம் ஸவர்வஸ்ய ப்ரபவோ
மத்த: ஸர்வம் ப்ரவர்ததே
இதி மத்வா பஜந்தே மாம்
புதா பாவ-ஸமன்விதா:
ஜட, ஆன்மீக உலகங்கள் அனைத்திற்கும் மூலம் நானே. எல்லாம் என்னிடமிருந்தே தோன்றுகின்றன. இதனை நன்றாக அறிந்த அறிஞர்கள், எனது பக்தித் தொண்டில் ஈடுபட்டு, இதயப்பூர்வமாக என்னை வழிபடுகின்றனர்.
10.9
மச்-சித்தா மத்-கத-ப்ராணா
போதயந்த: பரஸ்பரம்
கதயந்தஷ் ச மாம் நித்யம்
துஷ்யந்தி ச ரமந்தி ச
எனது தூய பக்தர்களின் சிந்தனைகள் என்னில் மூழ்கியுள்ளன. அவர்களது வாழ்க்கை எனது தொண்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மேலும், என்னைப் பற்றி தங்களுக்குள் உரையாடுவதிலும் ஒருவருக்கொருவர் உபதேசித்துக் கொள்வதிலும் இவர்கள் பெரும் திருப்தியும் ஆனந்தமும் அடைகின்றனர்.
10.10
தேஷாம் ஸதத-யுக்தானாம்
பஜதாம் ப்ரீதி-பூர்வகம்
ததாமி புத்தி-யோகம் தம்
யேன மாம் உபயாந்தி தே
எனக்கு அன்புடன் தொண்டு செய்வதில் இடையறாது ஈடுபட்டுள்ளவர்களுக்கு, என்னிடம் வந்தடைவதற்குத் தேவையான அறிவை நானே வழங்குகிறேன்.
10.11
தேஷாம் ஏவானுகம்பார்தம்
அஹம் அக்ஞான-ஜம் தம:
நாஷயாம்-யாத்ம-பாவ-ஸ்தோ
க்ஞான-தீபேன பாஸ்வதா
அவர்களிடம் விஷேச கருணையைக் காட்டுவதற்காக, அவர்களது இதயத்தினுள் வசிக்கும் நான், அறியாமையினால் பிறந்த இருளை ஞானமெனும் சுடர்விடும் தீபத்தினால் அழிக்கின்றேன்.
10.12-13
அர்ஜுன உவாச
பரம் ப்ரஹ்ம பரம் தாம
பவித்ரம் பரமம் பவான்
புருஷம் ஷாஷ்வதம் திவ்யம்
ஆதி-தேவம் அஜம் விபும
அஹுஸ் த்வாம் ருஷய: ஸர்வே
தேவர்ஷிர் நாரத ஸ் ததா
அஸிதோ தேவலோ வ்யாஸ:
ஸ்வயம் சைவ ப்ரவீஷ மே
அர்ஜுனன் கூறினான்: நீரே பரபிரம்மன், உன்னத இருப்பிடம், மிகவும் தூய்மையானவர், பரம சத்தியம், நீரே நித்தியமானவர், திவ்யமானவர், ஆதி தேவர், பிறப்பற்றவர், மிகப் பெரியவர். உம்மைப் பற்றிய இந்த உண்மையினை, நாரதர், அஸிதர், தேவலர், வியாசர் போன்ற மிகச்சிறந்த ரிஷிகளும் உறுதி செய்துள்ளனர், இப்பொழுது நீரே இதனை எனக்கு அறிவித்துள்ளீர்.
10.14
ஸர்வம் ஏதத் ருதம் மன்யே
யன் மாம் வதஸி கேஷவ
ந ஹி தே பகவன் வ்யக்திம்
விதுர் தேவா ந தானவா:
கிருஷ்ணா, தாங்கள் எனக்குக் கூறியவற்றை எல்லாம் உண்மை என நான் முழுமையாக ஏற்கின்றேன். பகவானே, தேவர்களோ, அசுரர்களோ, உமது வியக்தித்துவத்தை அறிய முடியாது.
10.15
ஸ்வயம் ஏவாத்மனாத்மானம்
வேத்த த்வம் புருஷோத்தம
பூத-பாவன பூதேஷ
தேவ-தேவ ஜகத்-பதே
உத்தம புருஷரே, அனைத்திற்கும் மூலமே, அனைவருக்கும் இறைவனே, தேவர்களின் தேவரே, அகிலத்தின் இறைவனே, உண்மையில், உமது சுய அந்தரங்க சக்தியின் மூலம் நீரே உம்மை அறிவீர்.
10.16
வக்தும் அர்ஹஸ் யஷே ஷேண
திவ்யா ஹ்யாத்ம-விபூதய:
யாபிர் விபூதிபிர் லோகான்
இமாம்ஸ் த்வம் வ்யாப்ய திஷ்டஸி
எந்த வைபவங்களால் இந்த உலகம் முழுவதும் தாங்கள் வியாபித்து இருக்கின்றீர்களோ, தங்களுடைய அந்த திவ்யமான வைபவங்களை தயவு செய்து எனக்கு விவரமாகக் கூறுங்கள்.
10.17
கதம் வித்யாம் அஹம் யோகிம்ஸ்
த்வாம் ஸதா பரிசிந்தயன்
கேஷு கேஷு ச பாவேஷு
சிந்த்யோ (அ)ஸி பகவன் மயா
உன்னத யோகியாகிய கிருஷ்ணரே, நான் உம்மை இடையறாது நினைப்பதும் அறிவதும் எங்ஙனம்? பகவானே, வேறு எந்த எந்த உருவங்களில் உம்மை நினைவு கொள்ள முடியும்?
10.18
விஸ்தரேணாத்மனோ யோகம்
விபூதிம் ச ஜனார்தன
பூய: கதய த்ருப்திர் ஹி
ஷ்ருண்வதோ நாஸ்தி மே (அ)ம்ருதம்
ஜனார்தனா உமது வைபவங்களின் யோக சக்தியைப் பற்றி தயவு செய்து விவரமாகக் கூறவும். உம்மைப் பற்றிக் கேட்பதில் நான் ஒருபோதும் நிறைவடைவதில்லை. ஏனெனில், உம்மைப் பற்றி அதிகமாகக் கேட்கும் போது, உமது வார்த்தைகளின் அமிர்தத்தை நான் அதிகமாக சுவைக்க விரும்புகிறேன்.
10.19
ஸ்ரீ-பகவான் உவாச
ஹந்த தே கதயிஷ்யாமி
திவ்யா ஹ்யாதம-விபூதய:
ப்ராதான்யத: குரு-ஷ்ரேஷ்ட
நாஸ்த்-யந்தோ விஸ்தரஸ்ய மே
புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்: அப்படியே ஆகட்டும், நான் எனது தெய்வீகமான தோற்றங்களைப் பற்றி உனக்குக் கூறுகின்றேன். ஆனால் நான் முக்கியமானவற்றை மட்டுமே கூறப் போகின்றேன். ஏனெனில், அர்ஜுனா, எனது வைபவங்களோ எல்லையற்றவை.
10.20
அஹம் ஆத்மா குடாகேஷ
ஸர்வ-பூதாஷய-ஸ்தித:
அஹம் ஆதிஷ் ச மத்யம் ச
பூதானாம் அந்த ஏவ ச
அர்ஜுனா, எல்லா உயிர்களின் இதயங்களிலும் வீற்றிருக்கும் பரமாத்மா நானே. எல்லா உயிர்களின் ஆரம்பமும் நடுவும் இறுதியும் நானே.
10.21
ஆதித்யானாம் அஹம் விஷ்ணுர்
ஜ்யோதிஷாம் ரவிர் அம்ஷுமான்
மரீசிர் மருதா அஸ்மி
நக்ஷத்ராணாம் அஹம் ஷஷீ
ஆதித்யர்களில் நான் விஷ்ணு; ஜோதிகளில் பிரகாசிக்கும் சூரியன்; மருந்துகளில் நான் மரீசி; நட்சத்திரங்களில் நான் நிலவு.
10.22
வேதானாம் ஸாம-வேதோ (அ)ஸ்மி
தேவானாம் அஸ்மி வாஸவ:
இந்த்ரியாணாம் மனஷ் சாஸ்மி
பூதானாம் அஸ்மி சேதனா
வேதங்களில் நான் ஸாம வேதம்; தேவர்களில் நான் ஸ்வர்க மன்னனான இந்திரன்; புலன்களில் நான் மனம் உயிர்வாழிகளில் நான் உயிர் சக்தி (உணர்வு).
10.23
ருத்ராணாம் ஷங்கரஷ் சாஸ்மி
வித்தேஷோ யக்ஷ-ரக்ஷஸாம்
வஸுனாம் பாவகஷ் சாஸ்மி
மேரு: ஷிகரிணாம் அஹம்
எல்லா ருத்ரர்களிலும் நான் சிவபெருமான்; யக்ஷ, ராக்ஷசர் களில் நான் செல்வத்தின் இறைவன் (குபேரன்); வசுக்களில் நான் நெருப்பு(அக்னி); மலைகளில் நான் மேரு.
10.24
புரோதஸாம் ச முக்யம் மாம்
வித்தி பார்த ப்ருஹஸ்பதிம்
ஸேனாநீனாம் அஹம் ஸகந்த:
ஸரஸாம் அஸ்மி ஸாகர:
அர்ஜுனா, புரோகிதர்களில், தலைவரான பிருஹஸ்பதியாக என்னை அறிந்துகொள், சேனாதிபதிகளில் நான் கார்த்திகேயன்: நீர்த் தேக்கங்களில் நான் சமுத்திரம்.
10.25
மஹர்ஷீணாம் ப்ருகுர் அஹம்
கிராம் அஸ்ம்-யேகம் அக்ஷரம்
யக்ஞானாம் ஜப-யக்ஞோ (அ)ஸ்மி
ஸ்தாவராணாம் ஹிமாலய:
மகா ரிஷிகளில் நான் பிருகு; சப்தங்களில் நான் திவ்யமான ஓம்காரம்; யாகங்களில் நான் திருநாம ஜபம்; அசையாதன வற்றில் நான் இமயமலை.
10.26
அஷ்வத்த: ஸர்வ-வ்ருக்ஷாணாம்
தேவர்ஷீணாம் ச நாரத:
கந்தர்வாணாம் சித்ரரத:
ஸித்தானாம் கபிலோ முனி:
எல்லா மரங்களில் நான் ஆலமரம்; தேவ ரிஷிகளில் நான் நாரதன்; கந்தர்வர்களில் நான் சித்ரரதன்; சித்தர்களில் நான் கபில முனி.
10.27
உச்சை:ஷ்ரவஸம் அஷ்வானாம்
வித்தி மாம் அம்ருதோத்பவம்
ஐராவதம் கஜேந்த்ராணாம்
நராணாம் ச நராதிபம்
குதிரைகளுள், அமிர்தத்திற்காகக் கடலை கடைந்தபோது தோன்றிய உச்சைஷ்ரவா என்று என்னை அறிவாயாக. பட்டத்து யானைகளில் நான் ஐராவதம்; மனிதர்களில் நான் மன்னன்.
10.28
ஆயுதானாம் அஹம் வஜ்ரம்
தேனூனாம் அஸ்மி காமதுக்
ப்ரஜநஷ் சாஸ்மி கந்தர்ப:
ஸர்பாணாம் அஸ்மி வாஸுகி:
ஆயுதங்களில் நான் வஜ்ராயுதம்; பசுக்களில் நான் சுரபி; இனவிருத்தியாளர்களில் நான் காமதேவனான மன்மதன்; சர்ப்பங்களில்(பாம்புகளில்) நான் வாஸுகி.
10.29
அனந்தஷ் சாஸ்மி நாகானாம்
வருணோ யாதஸாம் அஹம்
பித்ரூணாம் அர்யமா சாஸ்மி
யம: ஸம்யமதாம் அஹம்
நாகங்களில் (பல தலையுடைய பாம்புகளில்) நான் அனந்தன்; நீர்வாழினங்களில் நான் வருண தேவன்; முன்னோர்களில் நான் அர்யமா; நீதிபதிகளில் நான் மரணத்தின் அதிபதியான எமன்.
10.30
ப்ரஹலாதஷ் சாஸ்மி தைத்யானாம்
கால: கலயதாம் அஹம்
ம்ருகாணாம் சம்ருகேந்த்ரோ (அ)ஹம்
வைனதேயஷ் ச பக்ஷிணாம்
தைத்ய அசுரர்களில், பக்தியில் சிறந்த பிரகலாதன் நான்; அடக்கி ஆள்பவற்றில் நான் காலம்; மிருகங்களில் நான் சிங்கம்; பறவைகளில் நான் கருடன்.
10.31
பவன: பவதாம் அஸ்மி
ராம: ஷஸ்த்ர-ப்ருதாம்-அஹம்
ஜஷாணாம் மகரஷ் சாஸ்மி
ஸ்ரோதஸாம் அஸ்மி ஜாஹ்னவீ
தூய்மைப்படுத்துபவற்றில் நான் வாயு; ஆயுதம் தரித்தவர்களில் நான் இராமன்; மீன்களில் நான் மகர மீன்; பாயும் நதிகளில் நான் கங்கை.
10.32
ஸர்காணாம் ஆதிர் அந்தஷ் ச
மத்யம் சைவாஹம் அர்ஜுன
அத்யாத்ம-வித்யா வித்யானாம்
வாத: ப்ரவததாம் அஹம்
எல்லாப் படைப்புகளின் ஆதியும், அந்தமும், நடுவும் நானே, அர்ஜுனா, அறிவில் நான் ஆத்மாவைப் பற்றிய அறிவு; விவாதிப்போரில் நான் முடிவான உண்மை.
10.33
அக்ஷராணாம் அ-காரோ (அ)ஸ்மி
த்வந்த்வ: ஸாமாஸிகல்ய ச
அஹம் ஏவாக்ஷய: காலோ
தாதாஹம் விஷ்வதோ-முக:
எழுத்துக்களில் நான் முதல் எழுத்தாகிய ‘அ ‘; கூட்டுச் சொற்களில் நான் த்வந்த்வ. தீராத காலமும் நானே; படைப்பாளிகளில் நான் பிரம்மா.
10.34
ம்ருத்யு: ஸர்வ-ஹரஷ் சாஹம்
உத்பவஷ் ச பவிஷ்யதாம்
கீர்தி: ஸ்ரீர் வாக் ச நாரீணாம்
ஸம்ருதிர் மேதா த்ருதி: க்ஷமா
நானே எல்லாவற்றையும் அழிக்கும் மரணம் உருவாகுபவை அனைத்திற்கும் உற்பத்தியாளனும் நானே. பெண்களின் புகழ், அதிர்ஷ்டம், அழகிய பேச்சு, ஞாபக சக்தி, அறிவு, உறுதி மற்றும் பொறுமையும் நானே.
10.35
ப்ருஹத்-ஸாம ததா ஸாம்னாம்
காயத்ரீ சந்தஸாம் அஹம்
மாஸானாம் மார்க-ஷீர்ஷோ (அ)ஹம்
ருதூனாம் குஸுமாகர:
ஸாம வேத மந்திரங்களில் நான் ப்ருஹத் ஸாமம்; கவிதைகளில் நான் காயத்ரி; மாதங்களில் நான் மார்கஷீர்ஷ(நவம்பர்-டிசம்பர்); பருவங்களில் நான் மலர்கள் நிறைந்த வசந்த காலம்.
10.36
த்யூதம் சலயதாம் அஸ்மி
தேஜஸ் தேஜஸ்வினாம் அஹம்
ஜயோ (அ)ஸ்மி வ்யவஸாயோ (அ)ஸ்மி
ஸத்த்வம் ஸத்த்வவதாம் அஹம்
ஏமாற்றுபவற்றில் நான் சூது; ஒளிர் பவற்றில் நான் தேஜஸ். நானே வெற்றி, நானே தீரச்செயல், நானே பலவான்களின் பலம்.
10.37
வ்ருஷ்ணீனாம் வாஸுதேவோ (அ)ஸ்மி
பாண்டவானாம் தனஞ்ஜய:
முனீனாம் அப்-யஹம் வ்யாஸ:
கவீனாம் உஷனா கவி:
விருஷ்ணி குலத்தவர்களில் நான் வாசுதேவன்; பாண்டவர்களில் நான் அர்ஜுனன்; முனிவர்களில் நான் வியாசர்; பெரும் சிந்தனையாளர்களில் நான் உஷனா.
10.38
தண்டோ தமயதாம் அஸ்மி
நீதிர் அஸ்மி ஜிகீஷதாம்
மௌனம் சைவாஸ்மி குஹ்யானாம்
க்ஞானம் க்ஞானவதாம் அஹம்
அடக்கியாளும் முறைகளில் நான் தண்டனை. வெற்றியை நாடுபவர்களில் நான் நீதி இரகசியங்களில் நான் மௌனம் ஞானிகளில் நான் ஞானம்.
10.39
யச் சாபி ஸர்வ பூதானாம்
பீஜம் தத் அஹம் அர்ஜுன
ந தத் அஸ்தி வினா யத் ஸ்யான்
மாயா பூதம் சராசரம்
மேலும், அர்ஜுனா, இருக்கும் எல்லா உயிர்வாழிகளையும் உற்பத்தி செய்யும் விதை நானே, அசைபவை மற்றும் அசையாதவற்றில் நான் இன்றி இருக்கக்கூடியது ஒன்றும் இல்லை.
10.40
நான்தோ (அ)ஸ்தி மம திவ்யானாம்
விபூதீனாம் பரந்தப
ஏஷ தூத்தேஷத: ப்ரோக்தோ
விபூதேர் விஸ்தரோ மயா
எதிரிகளை வெல்வோனே, என்னுடைய தெய்வீகத் தோற்றங்களுக்கு எல்லையே இல்லை. நான் உன்னிடம் கூறியவை அனைத்தும் எனது விரிவான வைபவங்களின் ஓர் உதாரணமே.
10.41
யத் யத் விபூதிமத் ஸத்த்வம்
ஸ்ரீமத் ஊர்ஜிதம் ஏவ வா
தத் தத் ஏவாவகச்ச த்வம்
மம தேஜோ-(அ)ம்ஷ-ஸம்பவம்
அழகான, புகழத்தக்க வைபவங்கள் அனைத்தும், என்னுடைய தேஜஸின் சிறு பொறியிலிருந்து தோன்றுபவையே என்பதை அறிவாயாக.
10.42
அத வா பஹுனைதேன
கிம் க்ஞாதேன தவார்ஜுன
விஷ்டப் யாஹம் இதம் க்ருத்ஸ்னம்
ஏகாம்ஷேன ஸ்திதோ ஜகத்
ஆனால், இதனை விவரமாக அறிவதன் தேவை என்ன அர்ஜுனா? என்னுடைய சிறு அம்சத்தின் மூலமாக, நான் இந்த பிரபஞ்சம் முழுவதிலும் புகுந்து அதனைத் தாங்குகின்றேன்.