ஸ்ரீமத் பகவத்கீதை – பன்னிரண்டு அத்தியாயம்


அத்தியாயம் பன்னிரண்டு: பக்தி யோகம்

12.1

அர்ஜுன உவாச

ஏவம் ஸதத-யுக்தா யே

பக்தாஸ் த்வாம் பர்யுபாஸதே

யே சாப்-யக்ஷரம் அவ்யக்தம்

தேஷாம் கே யோக –வித்தமா:

 

அர்ஜுனன் வினவினான்: மிகவும் பக்குவமானவர்களாகக் கருதப்படுவர்கள் யார்? எப்போதும் உமது பக்தித் தொண்டில் முறையாக ஈடுபட்டிருப்பவர்களா? அல்லது தோன்றாத அருவ பிரம்மனை வழிபடுபவர்களா?

12.2

ஸ்ரீ-பகவான் உவாச

மய்யா-வேஷ்ய மனோ யே மாம்

நித்யயுக்தா உபாஸதே

ஷ்ரத்தயா பரயோபேதாஸ்

தே மே யுக்ததமா மதா:

 

புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்: தனது தனிப்பட்ட உருவின் மீது மனதை நிலைநிறுத்தி, திவ்யமான நம்பிக்கையுடன் எப்போதும் எனது வழிபாட்டில் ஈடுபட்டிருப்பவர்கள் மிகவும் பக்குவமானவர்களாக என்னால் கருதப்படுகிறார்கள்.

12.3-4

யே த்வக்ஷரம் அனிர்தேஷ்யம்

அவ்யக்தம் பர்யுபாஸதே

ஸர்வத்ரகம் அசிந்த்யம் ச

கூட-ஸ்தம் அசலம் த்ருவம்

ஸன்னியம்யேந்த்ரிய-க்ராமம்

ஸர்வத்ர ஸம-புத்தய :

தே ப்ராப்னுவந்தி மாம் ஏவ

ஸர்வ-பூத ஹிதே ரதா:

 

ஆனால், தோற்றமளிக்காததும், புலனுணர்விற்கு அப்பாற்பட்டு இருப்பதும், எங்கும் நிறைந்ததும், சிந்தனைக்கு எட்டாததும், மாற்றமில்லாததும், நிலையானதும், அசைவற்றதுமான பூரண உண்மையின் அருவத் தன்மையை முழுமையாக வழிபடுபவர்கள், பல்வேறு புலன்களைக் கட்டுப்படுத்தி, எல்லோரிடமும் சமநோக்குடன் பழகி, அனைவருக்கும் நன்மை தரும் செயல்களில் ஈடுபட்டு, இறுதியில் என்னை அடைகின்றனர்.

12.5

க்லேஷோ (அ)திகதரஸ் தேஷாம்

அவ்யக்தாஸக்த-சேதஸாம்

அவ்யக்தா ஹி கதிர்து:கம்

தேஹவத்பிர் அவாப்யதே

 

எவரது மனம், பரமனின் தோன்றாத அருவத்தன்மையிடம் பற்றுதல் கொண்டுள்ளதோ, அவர்களது வளர்ச்சி மிகவும் கடினமானதாகும். அவ்வழியில் முன்னேற்றம் காண்பது உடலை உடையவர்களுக்கு எப்போதும் சிரமமானதாகும்.

12.6-7

யே து ஸர்வாணி கர்மாணி

மயி ஸன்ன்யஸ்ய மத்-பரா:

அனன்யேனைவ யோகேன

மாம் த்யாயந்த உபாஸதே

தேஷாம் அஹம் ஸமுத்தர்தா

ம்ருத்யு-ஸம்ஸார-ஸாகராத்

பவாமி ந சிராத் பார்த

மய்யாவேஷி-த-சேதஸாம்

 

ஆனால், தங்களது எல்லா செயல்களையும் எனக்காக துறந்து பிறழாமல் என் மீது பக்தி செலுத்தி, எனது பக்தித் தொண்டில் ஈடுபட்டு, எப்போதும் என்மீது தியானம் செய்து, தங்களது மனங்களை என்னில் நிறுத்தி, எவரெல்லாம் என்னை வழிபடுகிறார்களோ, பிருதாவின் மகனே, அவர்களை பிறப்பு, இறப்பு என்னும் கடலிலிருந்து உடனடியாக காப்பாற்றுபவனாக நான் இருக்கிறேன்.

12.8

மய்யேவ மன ஆதத்ஸ்வ

மயி புத்திம் நிவேஷய

நிவஸிஷ்யஸி மய்யேவ

அத ஊர்த்வம் ந ஸம்ஷய:

 

முழுமுதற் கடவுளான என்மீது உனது மனதை நிறுத்தி, உன்னுடைய முழு அறிவையும் என்னில் ஈடுபடுத்துவாயாக. இவ்வாறு நீ எப்போதும் என்னிலேயே வாழ்வாய் என்பதில் ஐயமில்லை.

12.9

அத சித்தம் ஸமாதாதும்

ந ஷக்னோஷி மயி ஸ்திரம்

அப்யாஸயோகேன ததோ

மாம் இச்சாப்தும் தனஞ்ஜய

 

செல்வத்தை வெல்பவனான எனதன்பு அர்ஜுனா, உனது மனதை என்மீது பிறழாது நிலைநிறுத்த முடியாவிடில், பக்தி யோகத்தின் ஒழுக்க நெறிகளைப் பின்பற்றுவாயாக. என்னை அடைவதற்கான விருப்பத்தினை இதன் மூலம் விருத்தி செய்வாயாக.

12.10

அப்யாஸே (அ)ப்யஸமர்தோ (அ)ஸி

மத்-கர்ம-பரமோ பவ

மத்-அர்தம் அபி கர்மாணி

குர்வன் ஸித்திம் அவாப்ஸ்யஸி

 

பக்தி யோகத்தின் விதிகளை உன்னால் பயிற்சி செய்ய முடியாவிடில், எனக்காக மட்டும் செயலாற்ற முயல்வாயாக. ஏனெனில், எனக்காக செயல்படுவதன் மூலம் நீ பக்குவ நிலைக்கு வந்தடைவாய்.

12.11

அதைதத் அப்-யஷக்தோ (அ)ஸி

கர்தும் மத்-யோகம் ஆஷ்ரித:

ஸர்வகர்மப லத்யாகம்

தத: குரு யதாத்மவான்

 

ஆனால், என்னைப் பற்றிய இத்தகு உணர்விலும் உன்னால் செயலாற்ற முடியாவிடில், உனது செயலின் எல்லா விளைவுகளையும் தியாகம் செய்து, ஆத்மாவில் நிலைபெற முயற்சி செய்.

12.12

ஷ்ரேயோ ஹி க்ஞானம் அப்யாஸாஜ்

க்ஞானாத் த்யானாம் விஷிஷ்யதே

த்யானாத் கர்ம-பல-த்யாகாஸ்

த்யாகாச் சாந்திர் அனந்தரம்

 

இப்பயிற்சியினை உன்னால் ஏற்றுக்கொள்ள முடியாவிடில், ஞானத்தை விருத்தி செய்வதில் உன்னை ஈடுபடுத்திக் கொள். இருப்பினும், ஞானத்தைவிட தியானம் சிறந்தது, மேலும், தியானத்தைவிட செயல்களின் பலன்களைத் தியாகம் செய்தல் சிறந்தது. ஏனெனில், இத்தகு தியாகத்தினால் மன அமைதியை அடைய முடியும்.

12.13-14

அத்வேஷ்டா ஸர்வபூதானாம்

மைத்ர: கருண ஏவ ச

நிர்மமோ நிரஹங்கார:

ஸம-து:க-ஸுக: க்ஷமீ

ஸந்துஷ்ட: ஸததம் யோகீ

யதாத்மா த்ருட நிஷ்சய :

மய்-யர்பிதமனோபுத்திர்

யோ மத்-பக்த: ஸ மே ப்ரிய:

 

எவனொருவன், பொறாமை இல்லாதவனாக, எல்லா உயிர்களுக்கும் அன்பான நண்பனாக, தன்னை உரிமையாளராகக் கருதாதவனாக, அஹங்காரத்திலிருந்து விடுபட்டவனாக, இன்ப துன்பங்களில் சம நிலையுடையவனாக, சகிப்புத் தன்மையுடன் எப்போதும் திருப்தியுற்று சுயக்கட்டுப்பாடு உடையவனாக, தனது மனதையும் புத்தியையும் என்னில் நிலைநிறுத்தி உறுதியுடன் பக்தித் தொண்டில் ஈடுபட்டுள்ளானோ, என்னுடைய அத்தகு பக்தன் எனக்கு மிகவும் பிரியமானவன்.

12.15

யஸ்மான் நோத் விஜதே லோகோ

லோகான் னோத்விஜதே ச ய:

ஹர்ஷாமர்ஷ-பயோத்வேகைர்

முக்தோ ய: ஸ ச மே ப்ரியா:

 

யாருக்கும் தொல்லை கொடுக்காமல், யாராலும் தொந்திரவு செய்யப்படாமல், இன்பம், துன்பம், பயம் மற்றும் ஏக்கத்தில் சமநிலையுடன் எவனொருவன் இருக்கின்றானோ அவன் எனக்கு மிகவும் பிரியமானவன்.

12.16

அனபேக்ஷ: ஷுசிர் தக்ஷ

உதாஸீனோ கத-வ்யத:

ஸர்வாரம்பபரித்யாகீ யோ

மத்-பக்த: ஸ மே ப்ரிய:

 

எவனொருவன், சாதாரண செயல்களைச் சார்ந்து வாழாமல், துய்மையாக, நிபுணனாக, கவலைகளின்றி, எல்லாவித வலிகளிலிருந்தும் விடுபட்டவனாக, ஏதேனும் பலனுக்காக முயற்சி செய்யாதவனாக உள்ளானோ, எனது அத்தகு பக்தன் எனக்கு மிகவும் பிரியமானவன்.

12.17

யோ ந ஹ்ருஷ்யதி ந த்வேஷ்டி

ந ஷோசதி ந காங்க்ஷதி

ஷுபாஷுப-பரித்யாகீ

பக்திமான் ய: ஸ மே ப்ரிய:

 

எனனொருவன் ஒருபோதும் மகிழ்வதில்லையோ, துன்பப்படுவதில்லையோ, புலம்புவதில்லையோ, ஆசைப்படுவதில்லையோ, மேலும் எவனொருவன் மங்களமானவை, அமங்களமானவை ஆகிய இரண்டையும் துறக்கின்றானோஅத்தகு பக்திமான் எனக்கு மிகவும் பிரியமானவன்.

12.18-19

ஸம: ஷத்ரௌ ச மித்ரே ச

ததா மானாபமானயோ:

ஷீதோஷ்ண ஸுக-து: கேஷு

ஸம: ஸங்கவிவர்ஜித:

துல்யநின்தா-ஸ்துதிர் மௌனீ

ஸந்துஷ்டோ யேன கேனசித்

அனிகேத: ஸ்திர-மதிர்

பக்திமான் மே ப்ரியோ நர:

 

எவனொருவன், நண்பர்களையும் எதிரிகளையும் சமமாக பாவித்து, மான அவமானம், இன்ப துன்பம், வெப்பம் குளிர், புகழ்ச்சி இகழ்ச்சி, ஆகியவற்றில் நடுநிலை வகித்து, களங்கம் தரும் தொடர்புகளிலிருந்து எப்போதும் விடுபட்டு, மௌனமாக, எதனைக் கொண்டும் திருப்தியுற்று, தங்குமிடத்திற்காகக் கவலைப்படாமல், அறிவில் நிலைபெற்று பக்தித் தொண்டில் ஈடுபட்டுள்ளானோஅத்தகு மனிதன் எனக்கு மிகவும் பிரியமானவன்.

12.20

யே து தர்மாம்ருதம் இதம்

யதோக்தம் பர்யுபாஸதே

ஷ்ரத்ததானா மத்-பரமா

பக்தாஸ் தே (அ)தீவ மே ப்ரியா:

 

பக்தித் தொண்டு என்னும் இந்த அழிவற்ற பாதையைப் பின்பற்றி, என்னை பரம இலக்காக வைத்து நம்பிக்கையுடன் தன்னை ஈடுபடுத்துபவர்கள், எனக்கு மிகமிகப் பிரியமானவர்கள்.