இராமானுஜர் கண்ட செல்லப்பிள்ளை


 
திருநாராயணபுரம், மைசூரி அருகே மேலக்கோட்டையில் உள்ளது. வடநாட்டில் ஒரு பத்ரிகாஸ்ரமம் இருப்பது போல் இத்தலம் தென் பத்ரிகாஸ்ரமம் என்றே அழைக்கப்படுகிறது. இங்குள்ள நாராயணபுரம் என்ற கோயிலும் அதில் உள்ள உற்சவ மூர்த்தி சம்பத்குமாரன் எழுந்தருளிய பின்னணியும் சுவையான வரலாறாகும்.
இராமானுஜர் ஊர் ஊராகச் சென்று விசிஷ்டாத்வைத கொள்கையைப் பரப்பி வருகின்ற காலத்தில் தொண்டனூர் என்ற பகுதியை ஆண்டு வந்த விட்டல தேவராயன் என்ற மன்னன் இவருடைய சீடனானான். அவனுக்கு விஷ்ணு வர்த்தனன் என்ற தாஸ்ய நாமம் சூட்டி சீடனாக்கிக் கொண்டார். இருவரும் காட்டுவழியே போய்க்கொண்டிருந்த போது துளசிக் காட்டில் ஒரு அடர்ந்த புதருக்கிடையில் திரு நாராயணனின் விக்கிரகம் தென்பட்டது. இராமானுஜர் விருப்பப்படியே விஷ்ணு வர்த்தனன் மைசூருக்கருகே உதயகிரி மலையின் மீது மேல் கோட்டை என்றழைக்கப்படும் இடத்தில் ஒரு கோயிலைக் கட்டிமுடித்தான்.
முன்பொரு காலத்தில் முகம்மதிய படையெடுப்பின் போது டில்லி சுல்தான் கோயிலை இடித்து விக்ரகங்களையும், பொன் பொருள் எல்லாவற்றையும் கொள்ளையடித்துச் சென்றான் என்றும், திருநாராயணனின் உற்சவமூர்த்தியும் சுல்தானிடம் தான் இருக்கிறதென்றும் அவ்வூர் மக்கள் மூலம் அறிந்தார் இராமானுஜர். மன்னன் உதவியுடன் சில சீடர்களை உடன் அழைத்துக் கொண்டு டில்லி சுல்தானை நேரில் கண்டு உற்சவ மூர்த்தியைத் திரும்பத் தருமாறு கேட்டுக் கொண்டார். சுல்தானுக்கு இராமானுஜரைக் கண்டு வியப்பும் ஆச்சரியமும் ஏற்பட்டது. அவரைப் பற்றி முன்னரே கேள்விப்பட்டிருந்தான். தன் மகள் ஆசைப்பட்டாள் என்பதற்காக அந்த விக்ரகத்தை அவளுக்கு விளையாடக் கொடுத்திருந்தான். அதைத் திரும்பப் பெறுவதென்பது அவ்வளவு எளிதல்ல. அதனால் ஒரு நிபந்தனையுடன் அதை எடுத்துச் செல்லலாம என்றான். நிபந்தனை இதுதான். இராமானுஜர் உற்சவமூர்த்தியை அழைக்க வேண்டும. விக்ரகம் தானாகவே அவரிடம் வந்து சேரவேண்டும் என்றான். உடனே இராமானுஜர் ஒரு குழந்தையை அழைப்பதுபோல் ”என் செல்லப் பிள்ளாய் வருக” என்று குழைவா அழைத்தார். என்ன ஆச்சரியம்! சிலைவடிவில் இருந்த விக்ரகம் மாறி ஒரு குழந்தை வடிவில் நடந்து வந்து அவர் மடியில் அமர்ந்து கொண்டு மீண்டும் சிலையாயிற்று. சுல்தான் மலைத்துப் போனான். நிபந்தனைப்படியே உற்சவ மூர்த்தியை எடுத்துப்போக அனுமதித்து அத்துடன் பொன்னும் பொருளும் தந்து அனுப்பி வைத்தான். மேல்கோட்டை உற்சவமூர்த்தி ‘செல்லப்பிள்ளை’ என்றே அழைக்கப்படுகிறது.
சுல்தானின் மகள் சிலையைப் பிரிந்திருக்க முடியாமல் மேல்கோட்டையைத் தேடி ஓடி வந்து உற்சவமூர்த்தியை ஆரத்தழுவிக் கொண்டாள். அடுத்த நிமிடம் அந்த சிலையுடன் ஐக்கியமாகி விட்டாள். அவள் அன்பைப் பாராட்டி அவளைப் போலவே ஒரு சிலை செய்து ‘பீபீ நாச்சியார்” என்ற பெயரில் நாராயணனுக்கருகில் அமர்த்தி விட்டார் இராமானுஜர். பங்குனி மாதத்தில் நடைபெறும் வைரமுடிசேவை விழாவில் இவ்விருவரும் சேர்ந்தே வீதி உலா வரும் வழக்கம் இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மேல்கோட்டை நாராயணபுரத்தில் பங்குனி மாதத்தில் நடைபெறும் ‘வைரமுடி சேவை’ விழா தனிச்சிறப்புடையது. இராமானுஜர் சந்நிதிக்கு முன்னாள் உற்சவ மூர்த்தியை நாச்சியாருடன் எழுந்தருளச் செய்து வைரமுடி அணிவித்து விழா கொண்டாடுகின்றனர்.