ஸ்ரீ வைஷ்ணவ சித்தாந்தத்தில் ‘ரஹஸ்யங்கள்’ என்று வகைப்படுத்தப்பட்டுள்ள ‘ரஹஸ்ய க்ரந்தங்கள்’ என்கிற ஆன்மிக நூல்கள் உள்ளன.
‘திருமந்திரம்’, த்வயம், சரமச்லோகம்’ ஆகிய மூன்றும் ‘ரஹஸ்ய த்ரயம’ என்றும், இந்த மூன்று ரஹஸ்யங்களையும் உள்ளடக்கிய 18 விஷயங்களை ‘அஷ்டாதச ரஹஸ்யங்கள்’ என்றும் வகைப்படுத்தியுள்ளனர்.
திருக்கோஷ்டியூரில் எழுத்தருளியிருந்த திருக்குருகைப்பிரான் என்கிற திருக்கோஷ்டியூர் நம்பி, தன் ஆசார்யாரான ஆளவந்தாரிடம் கற்றுக்கொண்ட ரஹஸ்ய த்ரயத்தினுடைய (திருமந்த்ரம், த்வயம், சரம ச்லோகம்) அர்த்த விசேஷங்களை எப்பொழுதும் த்யானித்துக்கொண்டே இருந்தார். ஸ்ரீமத் ராமானுஜருக்கு இவருடைய பெருமைகள் தெரிந்ததால், அவர் ரஹஸ்ய த்ரயமான ‘திருமந்திரம்’, ‘த்வயம்’ , ‘சரமச்லோகம்’ ஆகியவற்றின் அர்த்த விசேஷங்களை கற்றுக்கொள்வதற்காக, ஸ்ரீரங்கத்திலிருந்து திருக்கோஷ்டியூருக்கு நடந்தே சென்றார்.
ஸ்ரீமத் ராமானுஜருடைய மனதில் ‘தாஸ்ய பாவம்’ ஏற்படும் வரை மந்திர உபதேசம் செய்வதை தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தார் திருக்கோஷ்டியூர் நம்பி. கடைசியில் 18-வது முறை திருக்கோஷ்டியூர் நம்பி அவருக்கு ரஹஸ்ய த்ரயத்தினுடைய அர்த்த விசேஷங்களை கற்றுக் கொடுக்க சம்மதிதார்! பதினெட்டாவது முறையாக ஸ்ரீமத் ராமாநுஜர் திருக்கோஷ்டியூர் நம்பிகளை சந்திக்கச் செல்லும்போது தன்னுடன் தனது சிஷ்யர்களான முதலியாண்டான் மற்றும் கூரத்தாழ்வான் ஆகியோரையும் அழைத்துச் சென்றார். தகுதி இல்லாதவர்களும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று, கடுமையான முயற்சி இல்லாதவர்களுக்கும் இந்த அர்த்த விசேஷங்களை கூறக் கூடாது என்று சத்தியம் செய்யுமாறு திருக்கோஷ்டியூர் நம்பி ஸ்ரீமத் ராமானுஜரிடம் கேட்டார்.
ஸ்ரீமத் ராமானுஜரும் அதை ஏற்றுக்கொண்டு அவருக்கு சத்தியம் செய்து கொடுத்தார். ஸ்ரீமத் ராமாநுஜர், அவருடைய சிஷ்யர்கள் முதலியாண்டான், மற்றும் கூரத்தாழ்வான் ஆகிய மூவரும், திருக்குருகைப் பிரான் என்கிற திருக்கோஷ்டியூர் நம்பிகளிடமிருந்து ரஹஸ்ய த்ரயங்களை உபதேசிக்கப் பெற்றார்கள். திருக்கோஷ்டியூர் நம்பி மிகவும் ரஹஸ்யமான ரஹஸ்ய த்ரயத்தினுடைய அர்த்த விசேஷங்களை ஸ்ரீமத் ராமானுஜருக்கும், அவருடைய சிஷ்யர்கள் முதலியாண்டான் மற்றும் கூரத்தாழ்வானுக்கும் உபதேசம் செய்தார்.
ஸ்ரீமத் ராமானுஜர், முதலியாண்டான், கூரத்தாழ்வான் ஆகிய மூவரும் திருக்கோஷ்டியூர் நம்பிகளிடமிருந்து ரஹஸ்யத்ரயத்தினுடைய அர்த்த விசேஷங்கள் பற்றிய உபதேசங்களைப் பெற்றுக்கொண்ட பின்பு, கோவிலை நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, ஸ்ரீமத் ராமானுஜர் தனது சிஷ்யர்களான முதலியாண்டான், கூரத்தாழ்வான் ஆகியோரிடம் கோவில் செல்லும் வழியில் திரண்டிருந்த பக்தர்களில், மோக்ஷ சாதனமான திருமந்திரத்தை அறிந்து கொள்வதில் ஆர்வமாக இருக்கும் பக்தர்களை உயரமான மதில் சுவருக்கு அருகில் ஒன்று திரட்டுமாறு பணித்தார்.
அவ்வண்ணமே முதலியாண்டான், கூரத்தாழ்வான் ஆகிய இருவரும் மதில் சுவருக்கு அருகில் பக்தர்களை ஒன்று திரட்டினர். பின்பு, ஸ்ரீமத் ராமானுஜர் மதில் சுவற்றின் மீது ஏறி கூடியிருந்த அனைவருக்கும், தனக்கு திருக்கோஷ்டியூர் நம்பிகளால் உபதேசிக்கப்பட்ட மோக்ஷ சாதனமான ‘ஓம் நமோ நாராயணாய’ என்ற திருமந்திரத்தையும் அதன் அர்த்த விசேஷங்களையும் உரக்கச் சொல்லி உபதேசித்தார்!
கூடியிருந்த பக்தர்களுக்கு திருமந்திரத்தை உபதேசித்த பின்பு, ஸ்ரீமத் ராமானுஜர் திருக்கோஷ்டியூர் நம்பிகளைச் சந்தித்து சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்து குருவின் ஆணையை மீறி, ஆசைப்படும் பக்தர்களுக்கு திருமந்திரத்தையும் அதன் அர்த்த விசேஷங்களையும் உபதேசித்த தனது பிழையைப் பொறுத்தருள வேண்டினார்!
திருக்கோஷ்டியூர் நம்பிகளும் ஸ்ரீமத் ராமானுஜர், ஆசார்யனின் விருப்பத்திற்கு மாறாக ஏன் அவ்வாறு செய்தார் என்று வினவினார். ஸ்ரீமத் ராமானுஜரோ, “தங்கள் விருப்பத்தையும் தங்களுக்கு உறுதியளித்த சத்தியத்தையும் மீறியதால் நான் ஒருவன் மட்டுமே நரகத்திற்குச் செல்ல வேண்டியிருக்கும். ஆனால் இந்த திருமந்திரத்தை உபதேசமாகப் பெற்ற அனைவருமே பிறப்பு இறப்பு என்னும் பந்தத்திலிருந்து விடுபட்டு மோக்ஷமடைவார்களே! அதுவே என்னுடைய விருப்பம்” என்று திருவாய் மலர்ந்தருளினார்.
பக்தர்களின் மீது அளவிலாத கருணை கொண்டு தன் நலத்தை மறுத்த ஸ்ரீமத் ராமானுஜரின் இந்த மறுமொழியால் புளகாங்கிதமடைந்தார் திருக்கோஷ்டியூர் நம்பிகள். விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தின் புதிய பரிணாமத்தை தனக்குப் புரிய வைத்ததாகக் கூறி, மிகவும் மகிழ்ச்சியடைந்து ஸ்ரீமத் ராமானுஜரை ஆலிங்கனம் செய்துகொண்டார், ஸ்ரீமத் ராமானுஜருக்கு மந்த்ரோபதேசம் செய்த ஆசார்யன் திருக்கோஷ்டியூர் நம்பி! அப்பொழுதே ஸ்ரீமத் ராமானுஜருக்கு ‘எம்பெருமானார்’ என்று திருநாமமும் சூட்டினார்!
ரஹஸ்ய த்ரயங்களாவன:
- திருமந்திரம்: ‘ஓம் நமோ நாராயணாய’
- த்வயம்: ஸ்ரீமன் நாராயணாய சரணௌ சரணம் ப்ரபத்யே,
ஸ்ரீமதே நாராயணாய நம: - சரம ச்லோகம்: சர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ,
அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாஸுச:
இவற்றுள் முதலாவது வாக்கியம்: ‘ஸ்ரீமன் நாராயணனை வணங்குகிறேன்’ .
இரண்டாவது வாக்கியம்: ‘ஸ்ரீமன் நாராயணனுடைய திருவடிகளை நான் சரண்டைகிறேன். ஸ்ரீயஃபதியான ஸ்ரீமன் நாராயணனை நான் வணங்குகின்றேன்’ என்றும் பொருள்படும்.
மூன்றாவதான சரம ஸ்லோகம், ஸ்ரீமத் பகவத் கீதையின் பதினெட்டாவது அத்யாயத்தின் அறுபத்தியாறாவது ச்லோகத்தில் பகவான் ஸ்ரீக்ருஷ்ணர் அர்ஜுனனுக்குச் செய்யும் உபதேசமேயாகும். ஸ்ரீமத் பகவத் கீதையின் இறுதிப் பகுதியில் கீதையின் சாராம்சத்தை, மணித்திரட்டாக இந்த ச்லோகத்தில் பகவான் திட்டவட்டமான உறுதிமொழி வடிவத்தில் கூறுவதாவது: ‘சகல தர்மங்களையும் விட்டுவிட்டு என் ஒருவனையே சரணடைவாயாக! எல்லா பாபங்களிலிருந்தும் உன்னை விடுவிக்கிறேன். பயப்படாதே’.