திருமலையில் இராமானுஜர்


பன்னிரண்டாழ்வார்களால் பாடப்பட்ட வைணவத் தலங்கள் நூற்று எட்டாகும். இவற்றை ‘நூற்று எட்டு வைணவத் திருப்பதிகள்’  என்று வைணவ பக்தர்கள் கூறுவர். ஆனாலும் இந்த நூற்று எட்டில் பொதுவாக ‘திருப்பதி’ என்று சொன்னால் அது திருவேங்கடமென்னும் தலத்தையே குறிக்கும்.
திருவேங்கடம் என்னும் தலத்தின் பெருமையைப் பற்றி பத்து ஆழ்வார்கள் பாடியுள்ளனர்.

இத்தகு சிறப்பு வாய்ந்த திருப்பதி திருமலையில் ராமானுஜரின் குருவான திருமலை நம்பி, கோவிலரையராகத் திருப்பணி செய்து வந்தார். அதே சமயத்தில் தமிழ்நாட்டில் ‘திருமாலின் தெற்குத் திருவீடு’ என்று போற்றப்படும் திருவரங்கத்தில் கோவிலரையராக ராமானுஜர் சேவை செய்து வந்தார். இந்நிலையில் ராமானுஜர், தம் சீடர்களுடன் தல யாத்திரை செய்யும்போது திருவேங்கடத்திற்கு வந்தார், கீழ்த்திருப்பதியில் தங்கி இருந்தார். பல தலங்களுக்கு நடந்தே சென்று வந்திருந்ததால் அனைவருக்கும் கடுமையான பசி உண்டாயிற்று.

ராமானுஜரின் சீடரும், திருமலையில் அவர் பெயரில் நந்தவனம் அமைத்து புஷ்ப கைங்கர்யம் செய்து வந்தவருமான அனந்தாழ்வார், அச்சமயம் நான்கு வைணவ அடியார்களுடன் ராமானுஜரிடம் வந்தார். தம் குருவான ராமானுஜரின் பாதங்களில் விழுந்து வணங்கினார். ராமானுஜரும் தன் சீடனை மார்புறத் தழுவிக் கொண்டார். பின்னர் அனைவர்க்கும் அறுசுவை உணவளித்தார் அனந்தாழ்வார்.

அனைவரும் உண்டு மகிழ்ந்ததும் அனந்தாழ்வார் ராமானுஜரிடம்,  ‘சுவாமி! தங்கள் வருகையை எதிர்பார்த்து திருமலை நம்பி சுவாமிகள், மலை மீது ஆவலுடன் காத்திருக்கிறார். தேவரீர் அங்கே எழுந்தருள வேண்டும்’ என்று கூறினார். அதற்கு ராமானுஜர்,  ‘அனந்தாழ்வானே! இத்திருவேங்கடமலை, நித்திய சூரிகளும் தவ சிரேஷ்டர்களும் உலவும் மலை. இம்மலையில் நான் கால் வைத்து நடப்பது அபசாரமாகாதா?’ என்று கூறினார்.

அதற்கு அனந்தாழ்வார், ‘சுவாமி தங்களைப் போன்றவர்கள் வருவதால்தான் இத்தலத்தின் மகிமையை உணர்ந்து எண்ணற்ற பக்தர்கள் வருவார்கள்’ என்று கூறி ராமானுஜரையும், சீடர்களையும் அழைத்தார்.

ராமானுஜர் அதன்படிச் செய்து திருமலையின் வீதியிலே வரும்போது அவருடைய உறவினரும், குருவுமான திருமலை நம்பி வரவேற்றார். ராமானுஜர் திருமலை நம்பியின் பாதங்களில் வீழ்ந்து வணங்கினார்.

திருமலை நம்பியைப் பார்த்து பக்திப் பரவசத்துடன்,  ‘சுவாமி! அடியேனை வரவேற்கத் தாங்களே வர வேண்டுமா? யாராவது ஒரு சிறியவரை அனுப்பிவைத்தால் போதாதா?’ என்று ராமானுஜர் கேட்டார்.

அதற்கு நம்பி,  ‘ராமானுஜா! நானும் அப்படித்தான் நினைத்தேன். வீதியில் வந்து நான்கு திசைகளிலும் பார்த்தேன். அங்கு என்னைவிடச் சிறியவன் யாரும் இல்லை. அனைவரும் என்னைவிட உயர்ந்தவர்களாகவே இருந்தனர். அதனால்தான் நானே வந்தேன்’ என்று கூறினார். நம்பியின் சொற்களைக் கேட்ட ராமானுஜர்,  ‘சுவாமி! தேவரீரை விட உயர்ந்தவர், வேங்கடவன் ஒருவரைத் தவிர வேறு யாருமில்லை’ என்று சொல்லி உள்ளம் உருகினார்.

திருமலை நம்பி,  ‘ராமானுஜா! நீயும், உன் சீடர்களும் பசியுடன் வந்திருக்கிறீர்கள். கோனேரியில் நீராடி வேங்கடவனை வணங்கிவிட்டு திருவமுது செய்யலாம்’ என்று கூறினார். இதைக் கேட்ட ராமானுஜர், ‘சுவாமி! தாங்கள் மறந்துவிட்டீர்களா? தேவரீர், அனந்தாழ்வாரிடம் அறுசுவையான உணவைக் கொடுத்தனுப்பி இருந்தீர்களே? அந்தத் தேவாமிர்தத்தைப் போன்ற திருவமுதை உண்டு விட்டுத்தானே வருகிறோம்’ என்றார்.

ராமானுஜர் கூறியதைக் கேட்ட திருமலை நம்பி ஆச்சரியத்துடன்,  ‘ராமானுஜா! நான் அனந்தாழ்வானிடம் உணவு கொடுத்தனுப்பவில்லையே!’ என்று கூறி அனந்தாழ்வாரை அழைத்தார். ராமானுஜருடன் வந்த அனந்தாழ்வாரை காணவில்லை. திருமலை நம்பியின் பின்னால் இருந்த அனந்தாழ்வார் ராமானுஜரிடம்,  ‘சுவாமி! அடியேன் கீழ்த்திருப்பதிக்கே வரவில்லையே! இப்பொழுதுதானே தங்களைப் பார்க்கிறேன்’ என்றார். இது கேட்டு அதிசயித்தார் ராமானுஜர்.

உடனே திருமலை நம்பி, ‘ராமானுஜா! தன் குழந்தை பசியோடிருப்பதை எந்தத் தாயாவது பொறுத்துக் கொள்வாளா? அதுபோல் நீயும் உன் சீடர்களும் பசியோடிருப்பதை அறிந்த திருவேங்கடமுடையான், அனந்தாழ்வான் வடிவத்தில் வந்து உங்கள் அனைவர்க்கும் தாமே உணவு பரிமாறி இருக்கிறார். ராமானுஜா! நீ வைணவத்தை வாழ்விக்கப் பிறந்தவன். வைணவத்திற்கு உடையவன்; பக்தர்களுக்கு உடையவன்; திருவேங்கடமுடையானுக்கும் உடையவன். உன் பக்தியே பக்தி! உன் பாக்கியமே பாக்கியம்!’ என்று அன்புடன் கூறினார். ராமானுஜரின் மற்றொரு திருநாமம்  ‘உடையவர்’ என்பதாகும்.


ராமானுஜரின் சீடரான அனந்தாழ்வார், திருமலையில் தம் குருநாதரான ராமானுஜர் பெயரில்  ‘ராமானுஜர் நந்தவனம்’ என்ற அழகான பூந்தோட்டத்தை அமைத்து ஏழுமலையானுக்குப் புஷ்ப கைங்கர்யம் செய்து கொண்டிருந்தார். . ஒரு நாள் அவர் பூப்பறித்துக் கொண்டிருந்தபோது ஒரு சர்ப்பம் அவரைத் தீண்டிவிட்டு ஓடிவிட்டது. அவர் அதைப் பற்றிக் கவலைப்படாமல் மீண்டும் பூப்பறித்துக் கொண்டிருந்தார். அருகில் இருந்த அடியார்கள், ‘சுவாமி! உங்களைச் சர்ப்பம் தீண்டிவிட்டது. முதலில் சர்ப்பத்தின் விஷம் தலைக்கேறும் முன் வைத்தியம் செய்துவிட்டு, பிறகு பூப்பறிக்கலாம்’ என்றனர்.

அதற்கு அனந்தாழ்வார், ‘அன்பர்களே! அடியேன் வலிமையுடையவனாக இருந்தால், வழக்கம்போல் இந்த சுவாமி புஷ்கரணியில் நீராடி ஏழுமலையானைச் சேவிக்கப் போகிறேன். சர்ப்பம் வலிமையுடையதாக இருந்தால், வைகுண்டத்தில் உள்ள  ‘விரஜா’ நதியில் நீராடி பரமபத நாதனுக்கு சேவை செய்யப் போகிறேன். அடியார்கள் மரண பயம் அடைவதில்லை’ என்றார். திருமலையான் அவரை தன் வசமே வைத்துக் கொண்டான்.

 


திருமலையில் உள்ள சிலைத்திருமேனி நாராயணனின் அம்சமென்றும், சிவனின் அமசமென்றும் ஒரு மிகப் பெரிய கேள்வி எழுந்தது. இரண்டு சமயத்தினரும் கச்சைகட்டிக் கொண்டு வீதியில் கோஷம் எழுப்புகிறார்கள். தொண்டைமன்னனுக்கு இது பெரிய தலைவலியாகப் போய் பொறுப்பை ராமானுசரிடம் விட்டு விடுகிறான்.

ராமானுஜர் கரியத்திருமேனி முன் நின்று சைவர்களின் அடையாளமான திருநீற்றை ஒரு இலை நிறைய வைக்கிறார். நாரண அம்சமான சங்கு சக்கரங்களையும் முன்வைக்கிறார். பிறகு சிலைத்திருமேனி முன்பு நின்று “எம்பெருமானே ! நீ நாரண அம்சம் என்றால் சங்கு சக்கரத்தை உன் மேனியில் தரித்துக்கொள். சிவனின் அம்சமென்றால் திருநீற்றைப் பூசிக் கொள்” என்று கூறி சன்னிதியின் கதவை அடைத்துவிட்டு வருகிறார்.

இரவு முழுவதும் அனைவரும் காத்திருக்கின்றனர். மறுநாள் திருப்பள்ளியெழுச்சி பாடி சன்னதி கதவு திறக்கபப்டுகிறது. எம்பெருமான் தன சிலைத்திருமேனியில் இரண்டு தோள்களிலும் சங்கு சக்கரங்களை ஏந்திக் கொண்டு நின்றார். பக்தர்கள் மெய்சிலிர்த்து அந்தச் சிலைமேனி நாராயணின் அம்சம் என்று ஒப்புக்கொண்டனர்.