ஸ்ரீராமானுஜர் – பெரியநம்பிகள்


    

 

காஞ்சி வரதராஜப் பெருமாள், பெரியநம்பிகளை ஆச்சாரியராகக் கொள்ளும்படி ஸ்ரீராமானுஜரிடம் கூறினார் என்பது ஐதீகம். இதனையடுத்து ராமானுஜர் பெரியநம்பிகளைத் தேடி ஸ்ரீரங்கம் சென்றுகொண்டிருந்தார். அதே சமயத்தில் ராமானுஜரைத் தேடி காஞ்சிபுரத்திற்கு வந்துகொண்டிருந்தார் பெரிய நம்பிகள். இருவரும் வழியில் இருந்த மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோயிலில் உள்ள கருணாகரப் பெருமாள் சன்னிதியில் சந்தித்தனர். தனக்கு உடனடியாக பஞ்ச சம்ஸ்காரம் செய்தருளும்படி, பெரியநம்பியிடம் வேண்டினார் ராமானுஜர்.

நம்மாழ்வாரின் அம்சம் கொண்ட மகிழ மரத்தடியில் பெரிய நம்பிகள், பஞ்ச சம்ஸ்காரத்தை ராமானுஜருக்குச் ஆவணி மாதம் வளர்பிறை பஞ்சமி அன்று செய்துவித்தார்.

பஞ்ச சம்ஸ்காரம் என்றால் ஐந்து விதமான வைணவச் சடங்குகள், அவை தாப, புண்ட்ர, நாம, மந்த்ர, யாகம் எனப்படும். இதனை ஸ்ரீராமானுஜர் நியமித்த ஆச்சார்யர்களின் வழி வந்தவர்கள் மூலமே பெற்றுக்கொள்ள வேண்டும்.

தாப சம்ஸ்காரம்: பெருமாளின் சங்கு, சக்கரம் ஆகியவற்றை நிரந்தரமாக உடலில் தரித்துக்கொள்வது. முறையே வலது தோளில் சக்கரத்தையும், இடது தோளில் சங்கத்தையும் முத்திரையாக நெருப்பில் சுட வைத்துப் பொறித்துக்கொள்ள வேண்டும். இதனை `கோயிற் கொடியானை ஒன்றுண்டு நின்று` என்று பெரியாழ்வார் குறிப்பிடுகிறார்.

புண்ட்ர சம்ஸ்காரம்: நெற்றியில் மட்டுமின்றி உடலில் பன்னிரு இடங்களில் திருமண் காப்புத் தரித்தல். இவற்றைத் தரிக்கும்பொழுது ஸ்ரீமன் நாராயணனின் பன்னிரெண்டு திருநாமங்களை உச்சரிப்பார்கள். இதனை வலியுறுத்தி நம்மாழ்வார் திருவாய்மொழியில், `கேசவன் தமர்` என்று தொடங்கும் பன்னிரெண்டு பாசுரங்கள் பாடியிருகிறார்.

நாம சம்ஸ்காரம்: பெற்றோர்கள் வைத்த பெயரைத் தவிர ஆச்சார்யன் (குரு) வைக்கும் பெயர் ஒன்றை வைத்துக்கொள்ளுதல். இதற்கு தாஸ்ய நாமம் என்று பெயர். இப்பெயருடன் தாசன் என்ற சொல்லை சேர்த்துக்கொள்வார்கள்.

மந்திர சம்ஸ்காரம்: ஓம் நமோ நாராயணாய என்ற எட்டெழுத்தான நாராயண மந்திரத்தையும் மறை பொருளோடு த்வயம், சரம ஸ்லோகம் (மோட்சத்துக்கான வழி) ஆகியவற்றையும் ஆச்சாரியன் மூலம், வலது செவியில் உபதேசமாகப் பெறுதல்.

யாக சம்ஸ்காரம்: திருவாராதணை, பூசை செய்யும் முறைமைகள் ஆகியவற்றை முறையாக ஆச்சாரியனிடம் கற்றுக்கொள்ளல். இவை அனைத்தும் ஒரு நன்னாளில், ஒரே வேளையில் நடத்தப்படும். இத்தகைய பஞ்ச சம்ஸ்காரத்தைத்தான் ஆச்சாரியனாக இருந்து பெரிய நம்பிகள், ஸ்ரீராமானுஜருக்கு செய்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முறைமை இன்றளவும் தொடர்கிறது.


இராமானுஜரின்  ஐம்பெரும் ஆசிரியர்களில்  ஒருவரான  பெரியநம்பிகள் : பெரியநம்பிகள்   தன்னுடன்  கல்விபயின்ற திருக்குலத்தார்  இனத்தைச்  சேர்ந்த  மாறநேரி நம்பிகள் காலமானபோது  அவருக்கு ஈமச்சடங்குகள் செய்தார். இதனையடுத்து,  உயர்ந்த  ஜாதிகளைச்  சேர்ந்தவர்கள்   பெரிய நம்பிகளை  எதிர்த்ததோடும் , அவரை  ஜாதியிலிருந்தும்  ஒதுக்கியும்  வைத்தனர்.

இதையறிந்து  பெரியநம்பியின்  மகளான  அத்துழாய்  மிகவும்  மனம் வருந்தினாள் . இந்தப்  பிரச்னையைப்  பற்றி  ஊர்   மக்களிடையே  விவாதம் நடைபெற்றபோது,   அத்துழாய் , சித்திரைத்  தேரை  நிறுத்தி  ஸ்ரீரங்கப் பெருமாளிடமே   நீதிகேட்டு  முறையிட்டாள்.

நம்பெருமாளும்  அத்துழாய்  நிறுத்திய  இடத்திலேயே  நிலையாக நின்று   ‘பெரிய நம்பிகளின்  செயல்  நியாயமே’ என்று  தீர்ப்புக்  கூறினார்.

இந்தச்  சம்பவத்துக்கு  முன்வரை  சித்திரைத் தேரின்  நிலை  வடக்குவாசலில்  இருந்தது. அத்துழாயின்  முறையீட்டிக்கு  நம்பெருமாளின் தீர்ப்பினால்  இத்தேரின்  நிலை  இன்றுவரை  பெரிய நம்பிகளின்  திருமாளிகை  வாசலிலேயே அமைந்துள்ளது.


திருப்பாவை ஜீயர்

ஒருமுறை பெர்யநம்பியின் மகள் அத்துழாய்க்கு ஒரு அதிசயம் நிகழ்ந்தது. ராமானுஜர் உஞ்சவிருத்தி செய்து அதில் கிடைக்கும் அரிசியையோ தானியங்களையோ கொண்டு உணவு சமைத்து சாப்பிடுபவர். இதில் சில நிபந்தனைகள் உள்ளன. ஒருவேளை உணவுக்கான தானியங்களைத்தான் பிக்ஷையாகப் பெற வேண்டும். பிக்ஷை பெற்ற தானியம் பூராவையும் சமைத்துவிட வேண்டும். மறுவேளைக்குக்கூட சேமித்து வைக்கக் கூடாது. தொடர்ந்து மூன்று வேளைக்குமேல் ஒருவீட்டில் பிக்ஷை கேட்கக் கூடாது. அப்படி ஒருநாள் பெரியநம்பியின் வீட்டு வாசலில் ராமானுஜர் நின்று பிக்ஷை கேட்கிறார். ராமானுஜரின் நாவு எப்போதும் ஆண்டாளின் திருப்பாவை முணுமுணுக்கப்பட்டுக் கொண்டே இருக்கும். ஆண்டாளிடம் ராமானுஜருக்கு அப்படி ஒரு ப்ரீத்தி.

நாறு நறும்பொழில்மா லிருஞ்சோலை நம்பிக்கு, நான்
நூறு தடாவில் வெண்ணெய் வாய் நேர்ந்து பராவி வைத்தேன்
நூறு தடாநிறைந்த அக்கார வடிசில் சொன்னேன்
ஏறு திருவுடையான் இன்று வந்திவை கொள்ளுங்கொலோ!

நூறு தடாவில் வெண்ணையும், நூறு தடாவில் அக்காரவடிசிலும் திருமாலிருஞ்சோலைப்பெருமாளுக்கு படிப்பதாக ஆண்டாள் அன்று வேண்டிக்கொண்டால் என்பதற்காக தன்காலத்தில் அதே அளவு வெண்ணெயையும் அதே அளவு அக்கார வடிசிலையும் ஆண்டாளுக்காக ஸ்ரீ ராமானுஜர் சாதித்தார் என்றால் அவருடைய பாகவத பிரியத்தை என்னென்று சொல்லுவது?

இப்படிப்பட்ட ராமானுஜர் உஞ்சவிருத்தி எடுத்து வரும்போது பெரியநம்பியின் வீட்டு வாசலில் நிற்கிறார். அத்துழாய் உஞ்சவிருத்திக்கு வந்த பிராமணரை வரவேற்கக் கதவை திறக்கிறாள். அத்துழாய் கதவைத் திறந்ததைப் பார்த்த மறுகணம் ராமானுஜர் மூர்ச்சையாகி விழுந்து விடுகிறார். அத்துழாய்க்கு என்ன செய்வதென்று புரியாமல் தந்தையிடம் ஓடிப்போய் ராமானுஜர் விழுந்ததைச் சொல்லுகிறாள்.

பெரியநம்பி மகளைப் பார்த்து சிரிக்கிறார். அத்துழாய்க்கு வியப்பு. வாசலில் ராமானுஜர் மூர்ச்சையாகிக் கிடப்பதை பதைபதைப்புடன் சொல்கிறோம் தந்தையார் இப்படி சிரிக்கிறாரே!

“அத்துழாய் ! நீ வருத்தப்படவேண்டாம். இராமானுசன் ஒரு பரம பக்தன். நாராயணனையும் அவன் பாகவதர்களையும் தவிர அவன் நினைப்பில் வேறு சிந்தையே கிடையாது. அவன் வாய் எப்பொழுதும் ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை பாசுரங்களை முணுமுணுத்தவாறே இருக்கும். நீ கதவைத் திறக்கும்போது  ‘உந்து மகா களிற்றன்’ பாசுரத்தை பாடியிருப்பான். அதில் ஈற்றில் நந்தா கோபன் மகளே நப்பின்னாய் என்ற வரிகள் பாடிக் கொண்டிருக்கும்போது நீ கதவைத் திறந்திருப்பாய். உன்னை அப்படியே நப்பின்னையாகவே நினைத்துக் கொண்டு மூர்ச்சையாகியிருப்பான். பயப்படாதே! சிறிது நேரத்தில் அவனே தெளிந்து விடுவான்” என்றார்.