ஸ்ரீ இராமானுஜர் திருமேனி


1. தானுகந்த திருமேனி (ஸ்ரீ பெரும்புதூர்) 

இராமானுஜர் தம் 120-ஆவது வயதில் ஸ்ரீரங்கத்தில் தங்கி கோவில் நிர்வாகத்தை நெறிப்படுத்துதலிலும், வைஷ்ணவ மட நிர்வாகங்களைச் சீரமைப்பதிலும் ஈடுபட்டிருந்தார்.

இராமானுஜர் ஸ்ரீபெரும்புதூரில் எழுந்தருளிய போது அவரின் சீடர்கள் அவர் உருவம் தாங்கிய செப்புச்சிலை ஒன்றைச் செதுக்கினார்கள். ராமானுசர் அச்சிலையைத் தழுவி தன் சக்தியை அச்சிலையின் உள்ளே செலுத்தினார். இச்சிலை  ‘தானுகந்த திருமேனி’ என்று பெயர் பெற்றது.

இராமானுஜர் உகந்து (விரும்பி) அணைத்ததால் இந்தப் பெயர் பெற்றது. இச்சிலை இன்றும் ஸ்ரீ பெரும்புதூர் கோவிலில் உள்ளது. ஒவ்வொரு மாதமும் திருவாதிரை நட்சத்திரத்தன்று இச்சிலைக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. இச்சிலை விலா எலும்பு, காது மடல் உள்ளிட்ட இராமானுசரின் 120 வயது தோற்றத்தை மிகவும் தெளிவாகக் காட்டுகிறது.

2. தமர் உகந்த திருமேனி (திருநாராயணபுரம்)

‘தமர் உகந்த திருமேனி’ கர்நாடக மாநிலத்தில் உள்ள மேல்கோட்டை என்னும் திருநாராயணபுரத்தில் உள்ளது. இவ்விடத்தில் சுமார் 12 ஆண்டு காலம் தங்கி இருந்து இராமானுஜர் கைங்கர்யம் மேற்கொண்டார்.

திருவரங்கம் செல்வதற்காக இவ்வூர் சீடர்களிடம் விடைபெற்றபோது, ராமானுசரைப் பிரிந்து வாழ முடியாது என்று அவர்கள் கூற, அவர்கள் குறையைப் போக்குவதற்காக, சிற்பியை வரவழைத்து, தன் உருவத்தை சிலையாக வடிக்கச் செய்தார் .

இந்தச் சிலை ராமானுசர் கைகூப்பி வணங்கி விடைபெறும் கோலத்தில் அமைந்துள்ளது. இதனால் இச்சிலை  ‘தமருகந்த திருமேனி’ என்று அழைக்கப்படுகிறது.

3. தானான திருமேனி (ஸ்ரீரங்கம்)

தானான திருமேனி திருவரங்கத்தில் உள்ளது.

ஸ்ரீ இராமானுஜர் பரமபதம் அடைந்த பின்னர் அவர் பூத உடலை திருப்பள்ளிப் படுத்தினர். ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில், துறவிகளை திருபள்ளிப் படுத்துவார்கள். அவ்வாறு திருப்பள்ளிப்படுத்தி அதன் மேல் எழுப்பப்பட்டது தான் தற்போதைய உடையவர் சன்னிதி.

இத்திருமேனியை  ‘தானான திருமேனி’ என்று பெயர்.