திருநெடுந்தாண்டகம்


ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:

திருமங்கையாழ்வார் அருளிச்செய்த திருநெடுந்தாண்டகம்

2052:##

மின்னுருவாய் முன்னுருவில் வேதம் நான்காய்*

 விளக்கொளியாய் முளைத்தெழுந்த திங்கள் தானாய்,*

பின்னுருவாய் முன்னுருவில் பிணி மூப்பில்லாப்*

 பிறப்பிலியாய் இறப்பதற்கே எண்ணாது,* எண்ணும்-

பொன்னுருவாய் மணியுருவில் பூதம் ஐந்தாய்ப்*

 புனலுருவாய் அனலுருவில் திகழும் சோதி,*

தன்னுருவாய் என்னுருவில் நின்ற எந்தை*

 தளிர்புரையும் திருவடிஎன் தலை மேலவே. (2)   1

 

2053:

பாருருவில் நீரெரிகால் விசும்புமாகிப்*

 பல்வேறு சமயமுமாய்ப் பரந்து நின்ற,*

ஏருருவில் மூவருமே என நின்ற,*

 இமையவர்தம் திருவுருவேறு எண்ணும் போது,*

ஓருருவம் பொன்னுருவம் ஒன்று செந்தீ*

 ஒன்றுமா கடலுருவம் ஒத்து நின்ற,*

மூவுருவும் கண்டபோது ஒன்றாம் சோதி*

 முகிலுருவம் எம்மடிகள் உருவம் தானே.    2

 

2054:

திருவடிவில் கருநெடுமால் சேயன் என்றும்*

 திரேதைக்கண் வளையுருவாய்த் திகழ்ந்தான் என்றும்,*

பெருவடிவில் கடலமுதம் கொண்ட காலம்*

 பெருமானைக் கருநீல வண்ணன் தன்னை,*

ஒருவடிவதோர் உருவென்று உணரலாகாது*

 ஊழிதோறூழி நின்று ஏத்தல் அல்லால்,*

கருவடிவில் செங்கண்ண வண்ணன் தன்னைக்*

 கட்டுரையே யாரொருவர் காண்கிற்பாரே?    3

 

2055:

இந்திரற்கும் பிரமற்கும் முதல்வன் தன்னை*

 இருநிலம்கால் தீநீர்விண் பூதம் ஐந்தாய்,*

செந்திறத்த தமிழோசை வடசொல்லாகித்*

 திசை நான்குமாய்த் திங்கள் ஞாயிறாகி,*

அந்தரத்தில் தேவர்க்கும் அறிய லாகா-

 அந்தணனை* அந்தணர்மாட்டு அந்தி வைத்த-

மந்திரத்தை,* மந்திரத்தால் மறவாது என்றும்*

 வாழுதியேல் வாழலாம் மடநெஞ்சமே.    4

 

2056:

ஒண்மிதியில் புனலுருவி ஒருகால் நிற்ப*

 ஒருகாலும் காமருசீர் அவுணன் உள்ளத்து,*

எண்மதியும் கடந்து அண்ட மீது போகி*

 இருவிசும்பின் ஊடுபோய் எழுந்து* மேலைத்-

தண்மதியும் கதிரவனும் தவிர ஓடித்*

 தாரகையின் புறம்தடவி அப்பால் மிக்கு,*

மண்முழுதும் அகப்படுத்து நின்ற எந்தை*

 மலர்புரையும்  திருவடியே வணங்கினேனே.    5

  

2057:

அலம்புரிந்த நெடுந்தடக்கை அமரர் வேந்தன்*

 அஞ்சிறைப்புள் தனிப்பாகன் அவுணர்க் கென்றும்,*

சலம் புரிந்தங்கு அருளில்லாத் தன்மை யாளன்*

 தானுகந்த ஊரெல்லாம் தன்தாள் பாடி,*

நிலம்பரந்து வரும் கலுழிப் பெண்ணை ஈர்த்த*

 நெடுவேய்கள் படுமுத்த முந்த உந்தி,*

புலம்பரந்த பொன்விளைக்கும் பொய்கை வேலிப்*

 பூங்கோவலூர் தொழுதும் போது நெஞ்சே!    6

 

2058:

வற்புடைய வரைநெடுந்தோள் மன்னர் மாள*

 வடிவாய மழுவேந்தி உலகம் ஆண்டு,*

வெற்புடைய நெடுங்கடலுள் தனிவேலுய்த்த*

 வேள்முதலா வென்றானூர் விந்தம் மேய,*

கற்புடைய மடக்கன்னி காவல் பூண்ட*

 கடிபொழில்சூழ் நெடுமறுகில் கமல வேலி,*

பொற்புடைய மலையரையன் பணிய நின்ற*

 பூங்கோவலூர் தொழுதும் போது நெஞ்சே!    7

 

2059:##

நீரகத்தாய்! நெடுவரையின் உச்சி மேலாய்!*

 நிலாத்திங்கள் துண்டகத்தாய்! நிறைந்த கச்சி-

ஊரகத்தாய்,* ஒண்துறைநீர் வெஃகா உள்ளாய்!*

 உள்ளுவார் உள்ளத்தாய்,* உலகம் ஏத்தும்-

காரகத்தாய்! கார்வானத் துள்ளாய்! கள்வா!*

 காமருபூங் காவிரியின் தென்பால் மன்னு-

பேரகத்தாய்,* பேராது என் நெஞ்சின் உள்ளாய்!*

 பெருமான்உன் திருவடியே பேணினேனே. (2)  8

 

2060:

வங்கத்தால் மாமணிவந்து உந்து முந்நீர்-

 மல்லையாய்!* மதிள்கச்சி ஊராய்! பேராய்,*

கொங்கத்தார் வளங்கொன்றை அலங்கல் மார்வன்*

 குலவரையன் மடப்பாவை இடப்பால் கொண்டான்,*

பங்கத்தாய்! பாற்கடலாய்! பாரின் மேலாய்!*

 பனிவரையின் உச்சியாய்! பவள வண்ணா,*

எங்குற்றாய் எம்பெருமான்! உன்னை நாடி*

 ஏழையேன் இங்கனமே உழிதருகேனே!    9

 

2061:

பொன்னானாய்! பொழிலேழும் காவல் பூண்ட-

 புகழானாய்!* இகழ்வாய தொண்டனேன் நான்,*

என்னானாய்? என்னானாய்?’ என்னல் அல்லால்*

 என்னறிவன் ஏழையேன்,* உலகம் ஏத்தும்-

தென்னானாய் வடவானாய் குடபால் ஆனாய்*

 குணபால தாயினாய் இமையோர்க்கு என்றும்-

முன்னானாய்* பின்னானார் வணங்கும் சோதி!*

 திருமூழிக் களத்தானாய் முதலானாயே!    10

  

2062:

பட்டுடுக்கும் அயர்ந்திரங்கும் பாவை பேணாள்*

 பனிநெடுங் கண்ணீர்ததும்பப் பள்ளி கொள்ளாள்,*

எள்துணைப்போது என்குடங்கால் இருக்க கில்லாள்*

 ‘எம்பெருமான் திருவரங்க மெங்கே?’ என்னும்*

மட்டுவிக்கி மணிவண்டு முரலும் கூந்தல்*

 மடமானை இதுசெய்தார் தம்மை,* மெய்யே-

கட்டுவிச்சி சொல்‘, என்னச் சொன்னாள் நங்காய்!*

 கடல்வண்ணர் இதுசெய்தார் காப்பார் ஆரே?’    11

 

2063:

நெஞ்சுருகிக் கண்பனிப்ப நிற்கும் சோரும்*

 நெடிதுயிர்க்கும் உண்டறியாள் உறக்கம் பேணாள்,*

நஞ்சரவில் துயிலமர்ந்த நம்பீ!என்னும்*

 ‘வம்பார் பூம்வயலாலி மைந்தாஎன்னும்,*

அஞ்சிறைய புட்கொடியே ஆடும் பாடும்*

 ‘அணியரங்கம் ஆடுதுமோ தோழீஎன்னும்,*

என்சிறகின் கீழடங்காப் பெண்ணைப் பெற்றேன்*

 இருநிலத்துஓர் பழிபடைத்தேன் ஏபாவமே!    12

 

2064:

கல்லெடுத்துக் கல்மாரி காத்தாய்!என்றும்*

 ‘காமரு பூங்கச்சி ஊரகத்தாய்!என்றும்,*

வில்லிறுத்து மெல்லியல்தோள் தோய்ந்தாய்!என்றும்*

 ‘வெஃகாவில் துயிலமர்ந்த வேந்தே!என்றும்,*

மல்லடர்த்து மல்லரை அன்றுஅட்டாய்!என்றும்,*

 ‘மாகீண்ட கைத்தலத்து என் மைந்தா!என்றும்,*

சொல்லெடுத்துத் தன்கிளியைச் சொல்லே என்று*

 துணைமுலைமேல் துளிசோரச் சோர்கின்றாளே!    13

 

2065:

முளைக்கதிரைக் குறுங்குடியுள் முகிலை* மூவா-

 மூவுலகும் கடந்து அப்பால் முதலாய் நின்ற,*

அளப்பரிய ஆரமுதை அரங்கம் மேய-

 அந்தணனை* அந்தணர்தம் சிந்தை யானை,*

விளக்கொளியை மரகதத்தைத் திருத்தண்காவில்*

 வெஃகாவில் திருமாலைப் பாடக் கேட்டு*

வளர்த்ததனால் பயன்பெற்றேன் வருக!என்று*

 மடக்கிளியைக் கைகூப்பி வணங்கினாளே.    14

 

2066:##

கல்லுயர்ந்த நெடுமதிள்சூழ் கச்சி மேய-

 களிறு என்றும்* கடல்கிடந்த கனியே! என்றும்,*

அல்லியம்பூ மலர்ப்பொய்கைப் பழன வேலி*

 அணியழுந்தூர் நின்றுகந்த அம்மான் என்றும்,*

சொல்லுயர்ந்த நெடுவீணை முலைமேல் தாங்கித்*

 தூமுறுவல் நகைஇறையே தோன்ற நக்கு,*

மெல்விரல்கள் சிவப்பெய்தத் தடவி ஆங்கே*

 மென்கிளிபோல் மிகமிழற்றும் என்பேதையே.    15

  

2067:##

கன்றுமேய்த்து இனிதுகந்த காளாய்! என்றும்,*

 கடிபொழில்சூழ் கணபுரத்தென் கனியே! என்றும்,*

மன்றமரக் கூத்தாடி மகிழ்ந்தாய்! என்றும்,*

 வடதிருவேங்கடம் மேய மைந்தா! என்றும்,*

வென்றுஅசுரர் குலங்களைந்த வேந்தே! என்றும்,*

 விரிபொழில்சூழ் திருநறையூர் நின்றாய்! என்றும்,*

துன்றுகுழல் கருநிறத்தென் துணையே என்றும்*

 துணைமுலைமேல் துளிசோரச் சோர்கின்றாளே! (2)  16

 

2068:

பொங்கார் மெல்லிளங்கொங்கை பொன்னே பூப்பப்*

 பொருகயல் கண்ணீர் அரும்பப் போந்து நின்று*

செங்கால மடப்புறவம் பெடைக்குப் பேசும்*

 சிறுகுரலுக்கு உடலுருகிச் சிந்தித்து,* ஆங்கே-

தண்காலும் தண்குடந்தை நகரும் பாடித்*

 தண்கோவலூர் பாடி ஆடக் கேட்டு,*

நங்காய்!நங் குடிக்கிதுவோ நன்மை? என்ன*

 நறையூரும் பாடுவாள் நவில்கின்றாளே!    17

 

2069:

கார்வண்ணம் திருமேனி கண்ணும் வாயும்*

 கைத்தலமும் அடியிணையும் கமல வண்ணம்,*

பார்வண்ண மடமங்கை பத்தர் பித்தர்*

 பனிமலர்மேல் பாவைக்குப் பாவம் செய்தேன்,*

ஏர்வண்ண என்பேதை என்சொல் கேளாள்*

 எம்பெருமான் திருவரங்க மெங்கே? என்னும்,*

நீர்வண்ணன் நீர்மலைக்கே போவேன் என்னும்*

 இதுவன்றோ நிறையழிந்தார் நிற்குமாறே?    18

 

2070:

முற்றாரா வனமுலையாள் பாவை* மாயன்-

 மொய்யகலத்து உள்ளிருப்பாள்* அஃதும் கண்டும்-

அற்றாள்,*தன் நிறையழிந்தாள் ஆவிக்கின்றாள்*

 அணியரங்கம் ஆடுதுமோ தோழீ! என்னும்,*

பெற்றேன் வாய்ச் சொல் இறையும் பேசக் கேளாள்*

 பேர்பாடித் தண்குடந்தை நகரும் பாடி,*

பொற்றாமரைக் கயம் நீராடப் போனாள்*

 பொருவற்றாள் என்மகள் உம் பொன்னும் அஃதே.  19

 

2071:

தேராளும் வாளரக்கன் செல்வம் மாளத்*

 தென்னிலங்கை முன்மலங்கச் செந்தீ ஒல்கி,*

பேராளன் ஆயிரம்தோள் வாணன் மாளப்*

 பொருகடலை அரண்கடந்து புக்கு மிக்க-

பாராளன்,* பாரிடந்து பாரை உண்டு*

 பாருமிழ்ந்து பாரளந்து* பாரை ஆண்ட-

பேராளன்,* பேரோதும் பெண்ணை மண்மேல்*

 பெருந்தவத்தள் என்றல்லால் பேசலாமே?    20

 

2072:##

மைவண்ண நறுங்குஞ்சிக் குழல்பின் தாழ*

 மகரம்சேர் குழை இருபாடு இலங்கியாட,*

எய்வண்ண வெஞ்சிலையே துணையா* இங்கே-

 இருவராய் வந்தார்என் முன்னே நின்றார்*

கைவண்ணம் தாமரைவாய் கமலம் போலும்*

 கண்ணிணையும் அரவிந்தம் அடியும் அஃதே,*

அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழீ!*

 அவரைநாம் தேவரென்று அஞ்சினோமே! (2)    21

 

2073:

நைவளமொன்று ஆராயா நம்மை நோக்கா*

 நாணினார் போல்இறையே நயங்கள் பின்னும்,*

செய்வளவில் என்மனமும் கண்ணும்ஓடி

 எம்பெருமான் திருவடிக்கீழ் அணைய,* இப்பால்-

கைவளையும் மேகலையும் காணேன்* கண்டேன்-

 கனமகரக் குழையிரண்டும் நான்கு தோளும்,*

எவ்வளவுண்டு எம்பெருமான் கோயில்? என்றேற்கு*

 இதுவன்றோ எழிலாலி? என்றார் தாமே.    22

 

2074:

உள்ðரும் சிந்தைநோய் எனக்கே தந்து* என்-

 ஒளிவளையும் மாநிறமும் கொண்டார் இங்கே,*

தெள்ðரும் இளந்தெங்கின் தேறல் மாந்திச்*

 சேலுகளும் திருவரங்கம் நம்மூர் என்ற*

கள்ðரும் பைந்துழாய் மாலை யானைக்*

 கனவிடத்தில் யான்காண்பன் கண்ட போது,*

புள்ðரும் கள்வாநீ போகேல், என்பன்*

 என்றாலும் இதுநமக்கோர் புலவி தானே?    23

 

2075:

இருகையில் சங்கிவை நில்லா எல்லே பாவம்!*

 இலங்கொலிநீர் பெரும்பௌவம் மண்டி உண்ட,*

பெருவயிற்ற கருமுகிலே ஒப்பர் வண்ணம்*

 பெருந்தவத்தர் அருந்தவத்து முனிவர் சூழ*

ஒருகையில் சங்கு ஒருகை மற்றாழி ஏந்தி*

 உலகுண்ட பெருவாயர் இங்கே வந்து,*என்-

பொருகயல்கண் நீரரும்பப் புலவி தந்து*

 புனலரங்கம் ஊரென்று போயினாரே!    24

 

2076:

மின்னிலங்கு திருவுருவும் பெரிய தோளும்*

 கரிமுனிந்த கைத்தலமும் கண்ணும் வாயும்,*

தன்னலர்ந்த நறுந்துழாய் மலரின் கீழே*

 தாழ்ந்திலங்கும் மகரம்சேர் குழையும் காட்டி*

என்னலனும் என்னிறையும் என்சிந்தையும்*

 என்வளையும் கொண்டு என்னை ஆளுங் கொண்டு,*

பொன்னலர்ந்த நறுஞ்செருந்திப் பொழிலினூடே*

 புனலரங்கம் ஊரென்று போயினாரே!    25

 

2077:

தேமருவு பொழிலிடத்து மலாந்த போதைத்*

 தேனதனை வாய்மடுத்து உன் பெடையும் நீயும்,*

பூமருவி இனிதமர்ந்து பொறியில் ஆர்ந்த*

 அறுகால சிறுவண்டே! தொழுதேன் உன்னை,*

ஆமருவி நிரைமேய்த்த அமரர் கோமான்*

 அணியழுந்தூர் நின்றானுக்கு இன்றே சென்று,*

நீமருவி அஞ்சாதே நின்றோர் மாது*

 நின்நயந்தாள் என்றிறையே இயம்பிக்காணே.    26

 

2078:##

செங்கால மடநாராய்! இன்றே சென்று*

 திருக்கண்ணபுரம் புக்கு என் செங்கண்மாலுக்கு,*

என்காதல் என்துணைவர்க்கு உரைத்தி ஆகில்*

 இதுஒப்பது எமக்கின்பம் இல்லை,* நாளும்-

பைங்கான மீதெல்லாம் உனதே யாகப்*

 பழனமீன் கவர்ந்துண்ணத் தருவன்,* தந்தால்-

இங்கே வந்து இனிதிருந்து உன் பெடையும் நீயும்*

 இருநிலத்தில் இனிதுஇன்பம் எய்தலாமே. (2)    27

 

2079:

தென்னிலங்கை அரண்சிதறி அவுணன் மாளச்*

 சென்றுஉலகம் மூன்றினையும் திரிந்தோர் தேரால்,*

மன்னிலங்கு பாரதத்தை மாள ஊர்ந்த*

 வரையுருவின் மாகளிற்றைத் தோழீ,* என்தன்-

பொன்னிலங்கு முலைக்குவட்டில் பூட்டிக் கொண்டு*

 போகாமை வல்லேனாய்ப் புலவி எய்தி,*

என்னிலங்கம் எல்லாம் வந்துஇன்பம் எய்த*

 எப்பொழுதும் நினைந்துருகி இருப்பன் நானே.    28

 

2080:##

அன்றாயர் குலமகளுக்கு அரையன் தன்னை*

 அலைகடலைக் கடைந்தடைத்த அம்மான் தன்னை,*

குன்றாத வலியரக்கர் கோனை மாளக்*

 கொடுஞ்சிலைவாய்ச் சரந்துரந்து குலம் களைந்து-

வென்றானை,* குன்றெடுத்த தோளினானை*

 விரிதிரைநீர் விண்ணகரம் மருவி நாளும்-

நின்றானை,* தண்குடந்தைக் கிடந்த மாலை*

 நெடியானை அடிநாயேன் நினைந்திட்டேனே. (2)  29

 

2081:##

மின்னுமாமழை தவழும் மேக வண்ணா!*

 விண்ணவர்தம் பெருமானே! அருளாய், என்று,*

அன்னமாய் முனிவரோடு அமரர் ஏத்த*

 அருமறையை வெளிப்படுத்த அம்மான் தன்னை,*

மன்னு மாமணி மாட வேந்தன்*

 மானவேல் பரகாலன் கலியன் சொன்ன*

பன்னியநூல் தமிழ்மாலை வல்லார்* தொல்லைப்-

 பழவினையை முதலரிய வல்லார் தாமே. (2)    30

 

திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்.