இரண்டாம் பத்து


திருவாய் மொழி இரண்டாம் பத்து

முதல் திருமொழி

 

2901:##

வாயும் திரையுகளும்* கானல் மடநாராய்,*

ஆயும் அமருலகும்* துஞ்சிலும் நீதுஞ்சாயால்,*

நோயும் பயலைமையும்* மீதூர எம்மேபோல்,*

நீயும் திருமாலால்* நெஞ்சம் கோட்பட்டாயே?.    2.1.1

 

2902:

கோட்பட்ட சிந்தையாய்க்* கூர்வாய அன்றிலே,*

சேட்பட்டயாமங்கள்* சேராதிரங்குதியால்,*

ஆட்பட்ட எம்மேபோல்* நீயும் அரவணையான்,*

தாட்பட்ட தண் துழாய்த்* தாமம் காமுற்றாயே.   2.1.2

 

2903:

காமுற்ற கையறவோடு* எல்லே இராப்பகல்,*

நீமுற்றக் கண்துயிலாய்* நெஞ்சுருகி ஏங்குதியால்*

தீமுற்றத் தென்னிலங்கை* ஊட்டினான் தாள் நயந்த,*

யாமுற்றது உற்றாயோ?* வாழி கனைகடலே.      2.1.3

 

2904:

கடலும்மலையும்* விசும்பும் துழாயெம்போல்,*

சுடர் கொள் இராப்பகல்* துஞ்சாயால் தண்வாடாய்,*

அடல்கொள் படையாழி* அம்மானைக் காண்பான்நீ,*

உடலம் நோயுற்றாயோ* ஊழிதோறூழியே.         2.1.4

 

2905:

ஊழி தோறூழி* உலகுக்கு நீர்க்கொண்டு,*

தோழியரும் யாமும்போல்* நீராய் நெகிழ்கின்ற,*

வாழிய வானமே* நீயும் மதுசூதன்,*

பாழிமையிற்பட்டு அவன்கண்* பாசத்தால் நைவாயே.          2.1.5

 

2906:

நைவாயவெம்மேபோல்* நாண்மதியே நீ இந்நாள்,*

மைவானிருள் அகற்றாய்* மாழாந்து தேம்புதியால்,*

ஐவாய் அரவணைமேல்* ஆழிப்பெருமானார்,*

மெய் வாசகம் கேட்டு* உன் மெய்ந்நீர்மை தோற்றாயே.         2.1.6

 

2907:

தோற்றோம் மடநெஞ்சம்* எம்பெருமான் நாரணற்கு* எம்

ஆற்றாமை சொல்லி* அழுவோமை நீநடுவே,*

வேற்றோர் வகையில்* கொடிதாய் எனையூழி,*

மாற்றாண்மை நிற்றியோ* வாழி கனை இருளே.          2.1.7

 

2908:

இருளின் திணி வண்ணம்* மாநீர்க்கழியே போய்,*

மருளுற்று இராப்பகல்* துஞ்சிலும் நீ துஞ்சாயால்,*

உருளும் சகடம்* உதைத்த பெருமானார்,*

அருளின் பெரு நசையால்* ஆழாந்துநொந்தாயே.       2.1.8

 

2909:

நொந்தாராக் காதல் நோய்* மெல்லாவியுள் உலர்த்த,*

நந்தா விளக்கமே* நீயும் அளியத்தாய்,*

செந்தாமரைத் தடங்கண்* செங்கனிவாய் எம்பெருமான்,*

அந்தாமத்தண்துழாய்* ஆசையால்வேவாயே.    2.1.9

 

2910:

வேவாரா வேட்கைநோய்* மெல்லாவியுள் உலர்த்த,*

ஓவாது இராப்பகல்* உன்பாலே வீழ்த்து ஒழிந்தாய்,*

மாவாய் பிளந்து* மருதிடை போய் மண்ணளந்த,*

மூவா முதல்வா* இனியெம்மைச் சோரேலே.      2.1.10

 

2911:##

சோராத எப்பொருட்கும்* ஆதியாம் சோதிக்கே,*

ஆராத காதல்* குருகூர்ச் சடகோபன்,*

ஓராயிரம் சொன்ன* அவற்றுள் இவை பத்தும்,*

சோரார் விடார் கண்டீர்* வைகுந்தம் திண்ணெனவே.           2.1.11

 

 

இரண்டாம் திருமொழி

                                               

2912:

திண்ணன் வீடு* முதல் முழுதுமாய்,*

எண்ணின் மீதியன்* எம்பெருமான்,*

மண்ணும் விண்ணுமெல்லாம்* உடனுண்ட,* நம்

கண்ணன் கண்ணல்லது* இல்லையோர் கண்ணே.     2.2.1

 

2913:

ஏபாவம் பரமே* ஏழ் உலகும்,*

ஈபாவம் செய்து* அருளால் அளிப்பாரார்,*

மாபாவம் விட* அரற்குப் பிச்சைபெய்,*

கோபாலகோளரி* ஏறன்றியே.          2.2.2

 

2914:

ஏறனைப் பூவனைப்* பூமகள் தன்னை,*

வேறின்றி விண் தொழத்* தன்னுள்வைத்து,*

மேல்தன்னை மீதிட* நிமிர்ந்து மண்கொண்ட,*

மால்தனில் மிக்கும் ஓர்* தேவும் உளதே.   2.2.3

 

2915:

தேவும் எப்பொருளும் படைக்க,*

பூவில் நான் முகனைப் படைத்த,*

தேவன் எம் பெருமானுக்கு அல்லால்,*

பூவும் பூசனையும் தகுமே.        2.2.4

 

2916:

தகும் சீர்த்* தன்தனி முதலினுள்ளே,*

மிகும்தேவும்* எப்பொருளும்படைக்க,*

தகும்கோலத்* தாமரைக்கண்ணன் எம்மான்,*

மிகும்சோதி* மேலறிவார்யவரே.      2.2.5

 

2917:

எவரும் யாவையும்* எல்லாப்பொருளும்,*

கவர்வின்றித்* தன்னுள் ஒடுங்கநின்ற,*

பவர்க்கொள்ஞான* வெள்ளச் சுடர் மூர்த்தி,*

அவர் எம்மாழி* அம்பள்ளியாரே.      2.2.6

 

2918:

பள்ளியாலிலை* ஏழுலகும் கொள்ளும்,*

வள்ளல்* வல் வயிற்றுப் பெருமான்,*

உள்ளுளார் அறிவார்* அவன்தன்,*

கள்ளமாய* மனக்கருத்தே.       2.2.7

 

2919:

கருத்தில் தேவும்* எல்லாப்பொருளும்,*

வருத்தித்த* மாயப் பிரானையன்றி,* ஆரே

திருத்தித்* திண்ணிலை மூவுலகும்* தம்முள்

இருத்தி* காக்கும் இயல்வினரே.        2.2.8

 

2920:

காக்கும் இயல்வினன்* கண்ணபெருமான்,*

சேர்க்கை செய்து* தன்னுந்தியுள்ளே,*

வாய்த்த திசைமுகன்* இந்திரன் வானவர்,*

ஆக்கினான்* தெய்வ உலகுகளே.      2.2.9

 

2921:

கள்வா எம்மையும்* ஏழுலகும்,* நின்

னுள்ளே தோற்றிய* இறைவ! என்று,*

வெள்ளேறன் நான்முகன்* இந்திரன் வானவர்,*

புள்ðர்தி* கழல் பணிந்தேத்துவரே.   2.2.10

 

2922:

ஏத்த ஏழுலகும் கொண்ட* கோலக்

கூத்தனை,* குருகூர்ச்சடகோபன்சொல்,*

வாய்த்த ஆயிரத்துள்* இவைபத்துடன்,*

ஏத்தவல்லவர்க்கு* இல்லையோர் ஊனமே.          2.2.11

 

 

மூன்றாம் திருமொழி

 

2923:

ஊனில் வாழுயிரே* நல்லைபோஉன்னைப்பெற்று,*

வானுளார் பெருமான்* மதுசூதன் என்னம்மான்,*

தானும் யானுமெல்லாம்* தன்னுள்ளே கலந்தொழிந்தோம்,*

தேனும் பாலும் நெய்யும்* கன்னலும் அமுதுமொத்தே.            2.3.1

 

2924:

ஒத்தார் மிக்காரை* இலையாய மாமாய,*

ஒத்தாய்* எப்பொருட்கும் உயிராய்,* என்னைப்பெற்ற

அத் தாயாய் தந்தையாய்* அறியாதன அறிவித்த,*

அத்தா, நீசெய்தன* அடியேன் அறியேனே.           2.3.2

 

2925:

அறியாக் காலத்துள்ளே* அடிமைக்கண் அன்பு செய்வித்து,*

அறியா மாமாயத்து* அடியேனை வைத்தாயால்,*

அறியாமைக் குறளாய்* நிலம்மாவலி மூவடியென்று,*

அறியாமை வஞ்சித்தாய்* எனதாவியுள் கலந்தே.         2.3.3

 

2926:

எனதாவியுள் கலந்த* பெருநல்லுதவிக்கைம்மாறு,*

எனதாவி தந்தொழிந்தேன்* இனிமீள்வதென்பது உண்டே,*

எனதாவியாவியும் நீ* பொழிலேழும் உண்ட எந்தாய்,*

எனதாவியார் யான் ஆர்?* தந்த நீ கொண்டாக்கினையே.     2.3.4

 

2927:

இனியார் ஞானங்களால்* எடுக்கலெழாத எந்தாய்,*

கனிவார் வீட்டின்பமே* என்கடல்படா அமுதே,*

தனியேன் வாழ்முதலே* பொழிலேழும் ஏனமொன்றாய்,*

நுனியார் கோட்டில் வைத்தாய்* உன்பாதம் சேர்ந்தேனே.     2.3.5

 

2928:

சேர்ந்தார் தீவினைகட்கு* அருநஞ்சைத்திண்மதியை,*

தீர்ந்தார் தம்மனத்துப்* பிரியாதவர் உயிரை,*

சோர்ந்தே போகல் கொடாச் சுடரை* அரக்கியைமூக்கு

ஈர்ந்தாயை,* அடியேன் அடைந்தேன்* முதல்முன்னமே.          2.3.6

 

2929:

முன்நல்யாழ்பயில் நூல்* நரம்பின் முதிர் சுவையே,*

பன்னலார் பயிலும்* பரனே பவித்திரனே,*

கன்னலே அமுதே* கார்முகிலே என்கண்ணா,*

நின்னலால் இலேன்காண்* என்னைநீகுறிக்கொள்ளே.           2.3.7

 

2930:

குறிக்கொள் ஞானங்களால்* எனையூழிசெய்தவமும்,*

கிறிக்கொண்டிப்பிறப்பே* சிலநாளில் எய்தினன்யான்,*

உறிக்கொண்ட வெண்ணெய்பால்* ஒளித்துண்ணும் அம்மான் பின்,*

நெறிக்கொண்டநெஞ்சனாய்* பிறவித்துயர்க்கடிந்தே.           2.3.8

 

2931:

கடிவார்தண்ணந்துழாய்* கண்ணன் விண்ணவர்பெருமான்,*

படிவான்மிறந்த* பரமன் பவித்திரன்சீர்,*

செடியார்நோய்கள்கெடப்* படிந்துகுடைந்தாடி,*

அடியேன் வாய்மடுத்துப்* பருகிக் களித்தேனே.            2.3.9

 

2932:

களிப்பும் கவர்வும் அற்றுப்* பிறப்புப் பிணி மூப்பு இறப்பற்று,*

ஒளிக்கொண்ட சோதியுமாய்* உடன்கூடுவதென்றுகொலோ,*

துளிக்கின்ற வான் இந்நிலம்* சுடராழிசங்கேந்தி,*

அளிக்கின்ற மாயப்பிரான்* அடியார்கள் குழாங்களையே.  2.3.10

 

2933:

குழாங்கொள் பேரரக்கன்* குலம் வீய முனிந்தவனை,*

குழாங்கொள் தென்குருகூர்ச்* சடகோபன்தெரிந்துரைத்த,*

குழாங்கொள் ஆயிரத்துள்* இவைபத்தும் உடன்பாடி,*

குழாங்களாய் அடியீருடன்* கூடிநின்றாடுமினே.           2.3.11

 

 

நான்காம் திருமொழி

 

2934:

ஆடியாடி* அகம்கரைந்து,* இசை

பாடிப்பாடிக்* கண்ணீர்மல்கி,* எங்கும்

நாடிநாடி* நரசிங்கா என்று,*

வாடிவாடும்* இவ்வாணுதலே.            2.4.1

 

2935:

வாணுதல்* இம்மடவரல்,* உம்மைக்

காணும் ஆசையுள்* நைகின்றாள்,* விறல்

வாணன்* ஆயிரந்தோள்துணித்தீர்,* உம்மைக்

காண* நீர் இரக்கமிலீரே.          2.4.2

 

2936:

இரக்க மனத்தோடு* எரியணை,*

அரக்கும் மெழுகும்* ஒக்குமிவள்,*

இரக்கமெழிர்* இதற்கு என்செய்கேன்,*

அரக்கனிலங்கை* செற்றீருக்கே.      2.4.3

 

2937:

இலங்கைசெற்றவனே என்னும்,* பின்னும்

வலங்கொள்* புள்ளுயர்த்தாய் என்னும்,* உள்ளம்

மலங்க* வெவ்வுயிர்க்கும்,* கண்ணீர்மிகக்

கலங்கிக்* கைதொழும் நின்று இவளே.      2.4.4

 

2938:

இவள் இராப்பகல்* வாய்வெரீஇ,* தன

குவளையொண்* கண்ணநீர் கொண்டாள்,* வண்டு

திவளும்* தண்ணந் துழாய்கொடீர்,* என

தவளவண்ணர்* தகவுகளே.     2.4.5

 

2939:

தகவுடையவனே என்னும்,* பின்னும்

மிகவிரும்பும்* பிரான் என்னும்,* எனது

அகவுயிர்க்கு* அமுதே என்னும்,* உள்ளம்

உகவுருகி* நின்று உள்ளுளே.  2.4.6

 

2940:

உள்ளுளாவி* உலர்ந்துலர்ந்து,* என

வள்ளலே* கண்ணனே என்னும்,* பின்னும்

வெள்ளநீர்க்* கிடந்தாய் என்னும்,* என

கள்விதான்* பட்ட வஞ்சனையே.       2.4.7

 

2941:

வஞ்சனே என்னும்* கைதொழும்,* தன

நெஞ்சம்வேவ* நெடிதுயிர்க்கும்,* விறல்

கஞ்சனை* வஞ்சனை செய்தீர்,* உம்மைத்

தஞ்சமென்று* இவள் பட்டனவே.       2.4.8

 

2942:

பட்டபோது* எழு போதறியாள்,* விரை

மட்டலர்* தண்துழா யென்னும்,* சுடர்

வட்டவாய்* நுதி நேமியீர்,* நுமது

இட்டம் என்கொல்* இவ்வேழைக்கே.            2.4.9

 

2943:

ஏழைபேதை* இராப்பகல்,* தன

கேழில் ஒண்* கண்ணநீர் கொண்டாள்,* கிளர்

வாழ்வைவேவ* இலங்கை செற்றீர்,* இவள்

மாழைநோக்கு ஒன்றும்* வாட்டேன்மினே.            2.4.10

 

2944:

வாட்டமில்புகழ்* வாமனனை,* இசை

கூட்டி* வண்சடகோபன் சொல்,* அமை

பாட்டு* ஓராயிரத்து இப் பத்தால்,* அடி

சூட்டலாகும்* அந்தாமமே.        2.4.11

 

ஐந்தாம் திருமொழி

 

2945:

அந்தாமத்து அன்புசெய்து* என்னாவிசேர் அம்மானுக்கு,*

அந்தாமவாழ்முடிசங்கு* ஆழிநூல் ஆரமுள,*

செந்தாமரைத் தடம்கண்* செங்கனிவாய் செங்கமலம்,*

செந்தாமரையடிக்கள்* செம்பொன் திருவுடம்பே.        2.5.1

 

2946:

திருவுடம்புவான் சுடர்* செந்தாமரைகண் கைகமலம்,*

திருவிடமே மார்பம்* அயனிடமேகொப்பூழ்,*

ஒருவிடமும்* எந்தை பெருமாற்கு அரனேயோ,*

ஒருவிடம் ஒன்றின்றி* என்னுள்கலந்தானுக்கே.  2.5.2

 

2947:

என்னுள்கலந்தவன்* செங்கனிவாய்செங்கமலம்,*

மின்னும் சுடர் மலைக்கு* கண்பாதம்கைகமலம்,*

மன்னுமுழுவேழ் உலகும்* வயிற்றினுள,*

தன்னுள்கலவாதது* எப்பொருளும்தானிலையே.          2.5.3

 

2948:

எப்பொருளும் தானாய்* மரகதக்குன்றமொக்கும்,*

அப்பொழுதைத்தாமரைப்பூக்* கண்பாதம் கைகமலம்,*

எப்பொழுதும் நாள்திங்கள்* ஆண்å ஊழியூழிதொறும்,*

அப்பொழுதைக் அப்பொழுது* என்னாராவமுதமே.     2.5.4

 

2949:

ஆராவமுதமாய்* அல்லாவியுள்கலந்த,*

காரார் கருமுகில்போல்* என்னம்மான் கண்ணனுக்கு,*

நேராவாய் செம்பவளம்* கண்பாதம் கைகமலம்,*

பேரார நீள் முடிநாண்* பின்னும் இழைபலவே.  2.5.5

 

2950:

பலபலவே ஆபரணம்* பேரும் பலபலவே,*

பலபலவே சோதி* வடிவு பண்பு எண்ணில்,*

பலபல கண்டுண்டு* கேட்டுற்றுமோந்தின்பம்,*

பலபலவே ஞானமும்* பாம்பணைமேலாற்கேயோ.      2.5.6

 

2951:

பாம்பணைமேல் பாற்கடலுள்* பள்ளி அமர்ந்ததுவும்,*

காம்பணைதோள் பின்னைக்கா* ஏறுடன் ஏழ்செற்றதுவும்,*

தேம்பணைய சோலை* மராமரம் ஏழெய்ததுவும்,*

பூம்பிணைய தண்துழாய்* பொன்முடியம் போரேறே. 2.5.7

 

2952:

பொன்முடியம் போரேற்றை* எம்மானை நால்தடந்தோள்,*

தன்முடி ஒன்றில்லாத* தன் துழாய் மாலையனை,*

என்முடிவு காணாதே* என்னுள் கலந்தானை,*

சொல் முடிவு காணேன்நான்* சொல்லுவது என் சொல்லீரே.            2.5.8

 

2953:

சொல்லீர் என்னம்மானை* என்னாவியாவிதனை,*

எல்லையில்சீர்* என் கருமாணிக்கச்சுடரை,*

நல்லவமுதம்* பெறற்கரிய வீடுமாய்,*

அல்லிமலர் விரையொத்து* ஆணல்லன் பெண்ணல்லனே. 2.5.9

 

2954:

ஆணல்லன் பெண்ணல்லன்* அல்லா அலியுமல்லன்,*

காணலுமாகான்* உளனல்லன் இல்லையல்லன்,*

பேணுங்கால்பேணும்* உருவாகும் அல்லனுமாம்,*

கோணை பெரிதுடைத்து* எம்பெம்மானைக்கூறுதலே.          2.5.10

 

2955:

கூறுதலொன்றாராக்* குடக்கூத்த அம்மானை,*

கூறுதலே மேவிக்* குருகூர்ச்சடகோபன்,*

கூறின அந்தாதி* ஓராயிரத்துள் இப்பத்தும்,*

கூறுதல் வல்லாருளரேல்* கூடுவர் வைகுந்தமே.            2.5.11

 

ஆறாம் திருமொழி

 

2956:

வைகுந்தா மணிவண்ணனே* என்பொல்லாத்திருக்குறளா என்னுள்மன்னி,*

வைகும் வைகல்தோறும்* அமுதாய வானேறே,*

செய்குந்தாவருந்தீமை* உன்னடியார்க்குத் தீர்த்து* அசுரர்க்குத்தீமைகள்

செய்குந்தா,* உன்னைநான் பிடித்தேன் கொள் சிக்கெனவே.            2.6.1

 

2957:

சிக்கெனச்சிறுதோரிடமும்* புறப்படாத்தன்னுள்ளே,* உலகுகள்

ஒக்கவே விழுங்கிப்* புகுந்தான் புகுந்ததற்பின்,*

மிக்க ஞான வெள்ளச்சுடர் விளக்காய்த்* துளக்கற்று அமுதமாய்,* எங்கும்

பக்கம் நோக்கறியான்* என் பைந்தாமரைக் கண்ணனே.     2.6.2

 

2958:

தாமரைக்கண்ணனை* விண்ணோர் பரவும் தலைமகனை,* துழாய்விரைப்

பூமருவு கண்ணி* எம்பிரானைப் பொன்மலையை,*

நாமருவிநன்கேத்தி* உள்ளி வணங்கி நாம்மகிழ்ந்தாட,* நாவலர்

பாமருவி நிற்கத்தந்த* பான்மையேய் வள்ளலே.           2.6.3

 

2959:

வள்ளலே மதுசூதனா* என்மரதகமலையே,* உனைநினைந்து,

எள்கல்தந்த எந்தாய்* உன்னை எங்ஙனம் விடுகேன்,?*

வெள்ளமே புரைநின்புகழ் குடைந்தாடிப்பாடி* களித்து உகந்துகந்து*

உள்ள நோய்கள் எல்லாம் துரந்து* உய்ந்து போந்திருந்தே.  2.6.4

 

2960:

உய்ந்துபோந்து என்னுலப்பிலாத* வெந்தீ வினைகளை நாசஞ்செய்து* உனது

அந்தமிலடிமை* அடைந்தேன் விடுவேனோ,?*

ஐந்துபைந்தலை ஆட அரவணைமேவிப்* பாற்கடல் யோகநித்திரை,*

சிந்தை செய்த எந்தாய்* உன்னைச் சிந்தை செய்துசெய்தே.            2.6.5

 

2961:

உன்னைச் சிந்தை செய்துசெய்து* உன்நெடுமா மொழி இசைபாடியாடி* என்

முன்னைத் தீவினைகள்* முழுவே அரிந்தனன்யான்,*

உன்னைச் சிந்தையினால் இகழ்ந்த* இரணியன கல்மார்வம் கீண்ட* என்

முன்னைக் கோளரியே* முடியாததென் எனக்கே.          2.6.6

 

2962:

முடியாததென் எனக்கேல் இனி?* முழுவேழுலகுமுண்டான்* உகந்துவந்து

அடியேனுள் புகுந்தான்* அகல்வானுமல்லன் இனி,*

செடியார் நோய்களெல்லாம் துரந்து* எமர்க்கீழ் மேலெழு பிறப்பும்,*

விடியா வெந்நரகத்து என்றும்* சேர்தல்மாறினரே.       2.6.7

 

2963:

மாறிமாறிப் பலபிறப்பும் பிறந்து* அடியை அடைந்து உள்ளம் தேறி*

ஈறில் இன்பத்திருவெள்ளம்* யான் மூழ்கினன்,*

பாறிப்பாறி அசுரர்தம்* பல்குழாங்கள் நீறெழ,* பாய்பறவையொன்று

ஏறிவீற்றிருந்தாய்* உன்னை என்னுள்நீக்கேல் எந்தாய்.         2.6.8

 

2964:

எந்தாய்! தண்திருவேங்கடத்துள் நின்றாய்* இலங்கை செற்றாய்,* மராமரம்

பைந்தாளேழுருவ * ஒரு வாளிகோத்த வில்லா,*

கொந்தார் தண்ணந்துழாயினாய் அமுதே* உன்னை என்னுள்ளே குழைத்த எம்-

மைந்தா,* வானேறே* இனியெங்குப்போகின்றதே?.    2.6.9

 

2965:

போகின்ற காலங்கள் போய காலங்கள்* போகு காலங்கள்,* தாய்தந்தை உயி-

ராகின்றாய்* உன்னை நானடைந்தேன் விடுவேனோ,?

பாகின்ற தொல்புகழ் மூவுலகுக்கும்* நாதனே! பரமா,* தண்வேங்கடம்

மேகின்றாய்* தண்துழாய் விரைநாறுகண்ணியனே.  2.6.10

 

2966:

கண்ணித் தண்ணந்துழாய் முடிக்* கமலத்தடம் பெருங் கண்ணனை,* புகழ்

நண்ணித்தென்குருகூர்ச்* சடகோபன் மாறன்சொன்ன,*

எண்ணில் சோர்விலந்தாதி* ஆயிரத்துள் இவையும் ஓர்பத்திசையொடும்,*

பண்ணின் பாடவல்லாரவர்* கேசவன்தமரே.      2.6.11

 

ஏழாம் திருமொழி

 

2967:

கேசவன்தமர்* கீழ்மேலெமர் ஏழெழுபிறப்பும்,*

மாச திரிதுபெற்று* நம்முடை வாழ்வு வாய்க்கின்றவா,*

ஈசன் என்கருமாணிக்கம் என் செங்கோலக் கண்ணன்* விண்ணோர்

நாயகன்,* எம்பிரான் எம்மான்* நாராயணனாலே.      2.7.1

 

2968:

நாரணன் முழுவேழுலகுக்கும்* நாதன் வேதமயன்,*

காரணம் கிரிசை கருமமிவை* முதல்வன் எந்தை,*

சீரணங்கமரர் பிறர் பலரும்* தொழுதேத்தநின்று,*

வாரணத்தை மருப்பொசித்த பிரான்* என் மாதவனே.           2.7.2

 

2969:

மாதவன் என்றதேகொண்டு* என்னை இனி இப்பால் பட்டது,*

யாதவங்களும் சேர்க்கொடேனென்று* என்னுள் புகுந்திருந்து,*

தீதவம் கெடுக்கும் அமுதம்* செந்தாமரைக்கண் குன்றம்,*

கோதவமிலென் கன்னற்கட்டி* எம்மான் என் கோவிந்தனே. 2.7.3

 

2970:

கோவிந்தன் குடக்கூத்தன்* கோவலனென்றென்றேகுனித்து*

தேவும்தன்னையும்* பாடியாடத்திருத்தி,* என்னைக்கொண்டு என்

பாவந்தன்னையும்* பாறக்கைத்து எமரேழெழுபிறப்பும்,*

மேவும் தன்மையமாக்கினான்* வல்லன் எம்பிரான் விட்டுவே.            2.7.4

 

2971:

விட்டிலங்குசெஞ்சோதித்* தாமரைபாதம் கைகள் கண்கள்,*

விட்டிலங்கு கருஞ்சுடர்* மலையே திருவுடம்பு,*

விட்டிலங்கு மதியம்சீர்* சங்குசக்கரம்பரிதி,*

விட்டிலங்கு முடியம்மான்* மதுசூதனன் தனக்கே.         2.7.5

 

2972:

மதுசூதனையன்றி மற்றிலேனென்று* எத்தாலும் கருமமின்றி,*

துதி சூழ்ந்த பாடல்கள் பாடியாட* நின்றூழியூழிதொறும்,*

எதிர்சூழல்புக்கு எனைத்தோர் பிறப்பும்* எனக்கே அருள்கள் செய்ய,*

விதி சூழ்ந்ததால் எனக்கேல் அம்மான்* திரிவிக்கிரமனையே.            2.7.6

 

2973:

திரிவிக்கிரமன் செந்தாமரைக்கண்* எம்மான் என் செங்கனிவாய்*

உருவில் பொலிந்த வெள்ளைப் பளிங்கு* நிறத்தனனென்றென்று,* உள்ளிப்

பரவிப் பணிந்து* பல்லூழியூழி நின்பாதபங்கயமே,*

மருவித் தொழும் மனமே தந்தாய்* வல்லைகாண் என் வாமனனே.            2.7.7

 

2974:

வாமனன் என் மரதகவனன்* தாமரைக் கண்ணினன்

காமனைப்பயந்தாய்,* என்றென்ற் உன்கழல் பாடியே பணிந்து,*

தூமனத்தனனாய்* பிறவித்துழதிநீங்க,* என்னைத்

தீமனங்கெடுத்தாய் *உனக்கென்செய்கேன்? என்சிரீதரனே.            2.7.8

 

2975:

சிரீஇதரன் செய்யதாமரைக்கண்ணன்* என்றென்று இராப்பகல்வாய்

வெரீஇ,* அலமந்து கண்கள் நீர்மல்கி* வெவ்வுயிர்த்துயிர்த்து,*

மரீஇயதீவினைமாள இன்பம்வளர* வைகல்வைகல்

இரீஇ,* உன்னை என்னுள் வைத்தனை* என் இருடீகேசனே.  2.7.9

 

2976:

இருடீகேசன் எம்பிரான்* இலங்கை அரக்கர்க்குலம்,*

முருடு தீர்த்தபிரான் எம்மான்* அமரர் பெம்மானென்றென்று,*

தெருடியாகில் நெஞ்சேவணங்கு* திண்ணம் அறி அறிந்து,*

மருடியேலும் விடேல்கண்டாய்* நம்பி பற்பநாபனையே.      2.7.10

 

2977:

பற்பநாபன் உயர்வறவுயரும்* பெருந்திறலோன்,*

எற்பரன் என்னையாக்கிக்கொண்டு* எனக்கே தன்னைத்தந்த

கற்பகம்,* என்னமுதம் கார்முகில்போலும்* வேங்கடநல்

வெற்பன்,* விசும்போர்பிரான்* எந்தை தாமோதரனே.           2.7.11

 

2978:

தாமோதரனைத் தனிமுதல்வனை* ஞாலம் உண்டவனை,*

ஆமோதரமறிய* ஒருவர்க்கென்றெ தொழுமவர்கள்,*

தாமோதரன் உருவாகிய* சிவற்கும் திசைமுகற்கும்,*

ஆமோதரமறிய* எம்மானை என் ஆழிவண்ணனையே.         2.7.12

 

2979:

வண்ணமாமணிச்சோதியை* அமரர் தலைமகனை,*

கண்ணனை நெடுமாலைத்* தென்குருகூர்ச்சடகோபன்,*

பண்ணிய தமிழ்மாலை* ஆயிரத்துள் இவை பன்னிரண்டும்,*

பண்ணிற் பன்னிருநாமப் பாட்டு* அண்ணல்தாள் அணைவிக்குமே.            2.7.13

 

எட்டாம் திருமொழி

 

2980:

அணைவது அரவணைமேல்* பூம்பாவையாகம்

புணர்வது,* இருவரவர் முதலும்தானே,*

இணைவனாம்* எப்பொருட்கும் வீடுமுதலாம்,*

புணைவன்* பிறவிக்கடல் நீந்துவார்க்கே.            2.8.1

 

2981:

நீந்தும் துயர்ப் பிறவி* உட்பட மற்றெவ்வெவையும்,*

நீந்தும் துயரில்லா* வீடு முதலாம்,*

பூந்தண் புனல் பொய்கை* யானை இடர்க்கடிந்த,*

பூந்தண்துழாய்* என்தனிநாயகன்புணர்ப்பே.    2.8.2

 

2982:

புணர்க்கும் அயனாம்* அழிக்கும் அரனாம்,*

புணர்த்த தன்னுந்தியோடு* ஆகத்துமன்னி,*

புணர்த்த திருவாகித்* தன்மார்வில்தான்சேர்,*

புணர்ப்பன் பெரும்புணர்ப்பு* எங்கும்புலனே.   2.8.3

 

2983:

புலனைந்துமேயும்* பொறியைந்தும் நீக்கி,*

நலமந்தமில்லது ஓர்* நாடு புகுவீர்,*

அலமந்து வீய* அசுரரைச் செற்றான்,*

பலமுந்துசீரில்* படிமின் ஓவாதே.   2.8.4

 

2984:

ஓவாத் துயர்ப் பிறவி* உட்பட மற்றெவ் வெவையும்,*

மூவாத் தனிமுதலாய்* மூவுலகும் காவலோன்,*

மாவாகி ஆமையாய்* மீனாகி மானிடமாம்,*

தேவாதி தேவபெருமான்* என்தீர்த்தனே.  2.8.5

 

2985:

தீர்த்தன் உலகளந்த* சேவடிமேல்பூந்தாமம்,*

சேர்த்தி அவையே* சிவன்முடிமேல் தான்கண்டு,*

பார்த்தன் தெளிந்தொழிந்த* பைந்துழாயான் பெருமை,*

பேர்த்தும் ஒருவரால்* பேசக்கிடந்ததே?.    2.8.6

 

2986:

கிடந்திருந்து நின்றளந்து* கேழலாய்க்கீழ்புக்கு

இடந்திடும்,* தன்னுள் கரக்கும் உமிழும்,*

தடம் பெருந்தோள் ஆரத்தழுவும்* பாரென்னும்

மடந்தையை,* மால் செய்கின்ற* மால் ஆர் காண்பாரே?.      2.8.7

 

2987:

காண்பாரார்? எம்மீசன்* கண்ணனை என்காணுமாறு,?*

ஊண்பேசில் எல்லா* உலகும் ஓர் துற்றாற்றா,*

சேண்பாலவீடோ* உயிரோ மற்றெப் பொருட்கும்,*

ஏண்பாலும் சோரான்* பரந்துளனாம் எங்குமே. 2.8.8

 

2988:

எங்கும்முளன் கண்ணனென்ற* மகனைக்காய்ந்து,*

இங்கில்லையாலென்று* இரணியன் தூண்புடைப்ப,*

அங்கு அப்பொழுதே* அவன் வீயத் தோன்றிய,* என்

சிங்கப்பிரான் பெருமை* ஆராயும்சீர்மைத்தே. 2.8.9

 

2989:

சீர்மைகொள்வீடு* சுவர்க்கநரகீறா,*

ஈர்மைகொள் தேவர்*நடுவா மற்றெப் பொருட்கும்,*

வேர்முதலாய் வித்தாய்ப்* பரந்து தனிநின்ற,*

கார்முகில்போல் வண்ணன்* என் கண்ணனை நான் கண்டேனே.            2.8.10

 

2990:

கன் தலங்கள் செய்ய* கருமேனியம்மானை,*

வண்டலம்பும்சோலை* வழுதிவளநாடன்,*

பந்தலையில் சொன்னதமிழ்* ஆயிரத்து இப்பத்தும் வல்லார்,*

விண் தலையில் வீற்றிருந்தாள்வர்* எம்மாவீடே.           2.8.11

 

 

ஒன்பதாம் திருமொழி

2991:

எம்மாவீட்டுத்* திறமும்செப்பம்,* நின்

செம்மா பாதபற்புத்* தலைசேர்த்து ஒல்லை,*

கைம்மாதுன்பம்* கடிந்தபிரானே,*

அம்மா அடியேன்* வேண்டுவது ஈதே.         2.9.1

 

2992:

ஈதே யானுன்னைக்* கொள்வது எஞ்ஞான்றும்,* என்

மைதோய்சோதி* மணிவண்ண எந்தாய்,*

எய்தா நின்கழல்* யானெய்த,* ஞானக்

கைதா* காலக் கழிவு செய்யேலே.   2.9.2

 

2993:

செய்யேல் தீவினையென்று* அருள்செய்யும்,* என்

கையார்ச் சக்கரக்* கண்ணபிரானே,*

ஐயார் கண்டம் அடைக்கிலும்* நின்கழல்

எய்யாது ஏத்த,* அருள் செய் எனக்கே.         2.9.3

 

2994:

எனக்கேயாட்செய்* எக்காலத்தும் என்று,* என்

மனக்கே வந்து* இடைவீடின்றிமன்னி,*

தனக்கேயாக* எனைக்கொள்ளும் ஈதே,*

எனக்கே கண்ணனை* யான்கொள்சிறப்பே.      2.9.4

 

2995:

சிறப்பில் வீடு* சுவர்க்கம் நரகம்,*

இறப்பில் எய்துக* எய்தற்க,* யானும்

பிறப்பில்* பல்பிறவிப் பெருமானை,*

மறப்பொன்றின்றி* என்றும் மகிழ்வேனே.           2.9.5

 

2996:

மகிழ்கொள் தெய்வம்* உலோகம் அலோகம்,*

மகிழ்கொள் சோதி* மலர்ந்த அம்மானே,*

மகிழ்கொள் சிந்தை* சொல் செய்கை கொண்டு,* என்றும்

மகிழ்வுற்று* உன்னை வணங்கவாராயே.            2.9.6

 

2997:

வாராய்* உன் திருப்பாத மலர்க்கீழ்,*

பேராதே யான் வந்து* அடையும்படி

தாராதாய்,* உன்னை என்னுள்* வைப்பில் என்றும்

ஆராதாய்,* எனக்கு என்றும் எக்காலே.       2.9.7

 

2998:

எக்காலத்தெந்தையாய்* என்னுள்மன்னில்,* மற்று

எக்காலத்திலும்* யாதொன்றும் வேண்டேன்,*

மிக்கார் வேத* விமலர்விழுங்கும்,* என்

அக்காரக்கனியே* உன்னையானே.            2.9.8

 

2999:

யானே என்னை* அறியகிலாதே,*

யானே என்தனதே* என்றிருந்தேன்,*

யானேநீ* எனÛனுடைமையும் நீயே,*

வானேயேத்தும்* எம்வானவரேறே.  2.9.9

 

3000:

ஏறேல் ஏழும்* வென்று ஏர்க்கொளிலங்கையை,*

நீறேசெய்த* நெடுஞ்சுடர்ச்சோதி,*

தேறேல் என்னை* உன் பொன்னடிச்சேர்த்து* ஒல்லை,

வேறேபோக* எஞ்ஞான்றும் விடலே.            2.9.10

 

3001:

விடலில் சக்கரத்து *அண்ணலை,மேவல்*

விடலில் வண்குருகூர்ச்* சடகோபன்சொல்,*

கெடலில் ஆயிரத்துள்* இவைபத்தும்,*

கெடலில் வீடுசெய்யும்* கிளர்வார்க்கே.    2.9.11

 

பத்தாம் திருமொழி

 

3002:

கிளரொளியிளமை* கெடுவதன் முன்னம்,*

வளரொளி மாயோன்* மருவிய கோயில்,*

வளரிளம் பொழில்சூழ்* மாலிருஞ்சோலை,*

தளர் விலராகிச்* சார்வதுசதிரே.      2.10.1

 

3003:

சதிரிள மடவார்* தாழ்ச்சியை மதியாது,*

அதிர் குரல் சங்கத்து* அழகர்தம்கோயில்,*

மதிதவழ்குடுமி* மாலிருஞ்சோலை,*

பதியது ஏத்தி* எழுவது பயனே.         2.10.2

 

3004:

பயனல்ல செய்து* பயனில்லை நெஞ்சே,*

புயல்மழை வண்ணர்* புரிந்துறைகோயில்,*

மயல்மிகு பொழில்சூழ்* மாலிருஞ்சோலை,*

அயன்மலை அடைவது* அதுகருமமே.       2.10.3

 

3005:

கருமவன்பாசம்* கழித்துழன்றுய்யவே,*

பெருமலையெடுத்தான்* பீடுறைகோயில்,*

வருமழை தவழும்* மாலிருஞ்சோலை,*

திருமலையதுவே* அடைவதுதிறமே.          2.10.4

 

3006:

திறமுடை வலத்தால்* தீவினை பெருக்காது,*

அறமுயலாழிப்* படையவன் கோயில்,*

மறுவில் வண்சுனை சூழ்* மாலிருஞ்சோலை,*

புறமலை சாரப்* போவதுகிறியே.    2.10.5

 

3007:

கிறியென நினைமின்* கீழ்மை செய்யாதே,*

உறியமர் வெண்ணெய்*  உண்டவன் கோயில்,*

மறியொடு பிணைசேர்* மாலிருஞ்சோலை,*

நெறிபட அதுவே* நினைவதுநலமே.           2.10.6

 

3008:

நலமென நினைமின்* நரகழுந்தாதே,*

நிலமுனமிடந்தான்* நீடுறை கோயில்,*

மலமறுமதிசேர்* மாலிருஞ்சோலை,*

வலமுறையெய்தி* மருவுதல் வலமே.         2.10.7

 

3009:

வலம்செய்து வைகல்* வலங்கழியாதே,*

வலம்செய்யும் ஆய* மாயவன் கோயில்,*

வலம்செய்யும் வானோர்* மாலிருஞ்சோலை,*

வலம்செய்து நாளும்* மருவுதல் வழக்கே. 2.10.8

 

3010:

வழக்கென நினைமின்* வல்வினை மூழ்காது,*

அழக்கொடியட்டான்* அமர் பெருங் கோயில்,*

மழக்களிற்றினம் சேர்* மாலிருஞ்சோலை,*

தொழுக் கருதுவதே* துணிவது சூதே.        2.10.9

 

3011:

சூதென்று களவும்* சூதும் செய்யாதே,*

வேதமுன் விரித்தான்* விரும்பிய கோயில்,*

மாதுறு மயில்சேர்* மாலிருஞ்சோலை,*

போதவிழ் மலையே* புகுவது பொருளே.   2.10.10

 

3012:

பொருளென்று இவ்வுலகம்* படைத்தவன் புகழ்மேல்,*

மருளில் வண்குருகூர்* வண்சடகோபன்,*

தெருள்கொள்ளச் சொன்ன* ஓராயிரத்துள் இப்பத்து,*

அருளுடையவன் தாள்* அணைவிக்கும் முடித்தே.         2.10.11