ஆண்டாள்


ஆண்டாள்

பிறந்த இடம் : ஸ்ரீவில்லிப்புத்தூர்
தந்தை : பெரியாழ்வார் (வளர்ப்புத்தந்தை)
பிறந்த காலம் : 9ம் நூற்றாண்டு நள ஆண்டு ஆடி மாதம்
நட்சத்திரம் : ஆடி பூரம் (வளர்பிறை சதுர்த்தசி திதி)
கிழமை : செவ்வாய்
எழுதிய நூல் : திருப்பாவை, நாச்சியார் திருவாய்மொழி
பாடிய பாடல் : 173

பூமிப்பிராட்டியாம்சம், கோதைப்பிராட்டி, சூடிக்கொடுத்த நாச்சியார்
ஸ்ரீ வில்லிபுத்தூர் நந்தவனத்தில் ஒரு துளசி செடியின் அடியில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தில் மகாலட்சுமியே ஆண்டாளாக அவதாரம் செய்தார். பெரியாழ்வார் இந்த நந்தவனத்திற்கு வந்தபோது, ஆண்டாளை எடுத்து சுரும்பார் குழற்கோதை என்ற பெயரிட்டு வளர்த்து வந்தார். அந்த நந்தவனத்தின் மலர்களை தினமும் பறித்து மாலையாக தொடுத்து ரெங்கமன்னாருக்கு வழங்குவது ஆழ்வாரின் முக்கியப்பணியாகும். மாதவனின் தோளைத் தழுவும் அந்த மாலையை அவர் மீது கொண்ட காதலால் ஆண்டாள் தம் கழுத்தில் அணிந்து அழகு பார்த்து அதன் பின் பெருமாளுக்கு அனுப்பி வைப்பாள்.
ஒருமுறை பெருமாள் அணிந்திருந்த மாலையில் நீண்ட முடி இருப்பதை கண்ட அர்ச்சகர்கள் அதை எறிந்து விட்டு வேறுமாலை கொண்டு வரும்படி ஆழ்வாரிடம் கூறிவிட்டனர். பகவானின் சேவையில் தவறு வந்து விட்டதே என்று ஆழ்வார் வருந்தினார். மறுநாளும் மாலை தொடுத்து ஆண்டவனுக்கு அனுப்பும் சமயத்தில், அந்த மாலையை ஆண்டாள் அணிவதை கண்டார். ஆண்டாளை கண்டித்தார். அன்று இரவே பெருமாள் ஆழ்வாரின் கனவில் தோன்றி, ஆண்டாள் சூடிய மாலையையே தனக்கு அணிவிக்கும்படி கூறினார். அது முதல் ஆண்டாள் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள் பூமாலை மட்டுமின்றி பாமாலையும் சூடி மகிழ்ந்தாள்.
ஸ்ரீ ரங்கப்பெருமாளை திருமணம் செய்வதற்காக ஆண்டாள் மார்கழியில் நோன்பிருந்து பக்தியின் சாரமாக திருப்பாவையும். காதலின் வரமாக நாச்சியார் திருமொழியையும்  பாடினார். தன தந்தையிடமும் இந்த தெய்வீக திருமணம் பற்றி கூறினார்.
ஆழ்வாரும் ஆண்டாளை பல்லக்கில் ஏற்றி வந்தார்.  பங்குனி உத்திரநன்னாளில் ஆண்டாள் ரெங்கநாதர் திருமணம் சிறப்பாக நடந்தது.

பெருமாளின் 108 திருப்பதிகளில் ஆண்டாள் பிற ஆழ்வார்களுடன் சேர்ந்து மொத்தம் 10 கோயில்களை மங்களாசாசனம் செய்துள்ளார்.