பெரிய திருமொழி ஆறாம் பத்து


ஆறாம் பத்து

முதல் திருமொழி – வண்டுணுநருமலர்

 

1448:##

வண்டுணுநறுமலர் இண்டைகொண்டு* பண்டைநம் வினைகெடஎன்று*அடிமேல் தொண்டரும் அமரும் பணியநின்று* அங்கு அண்டமொடு அகலிடம் அளந்தவனே*

ஆண்டாய் உனைக் காண்பதோர்* அருளெனக்கு அருளுதியேல்*

வேண்டேன் மனைவாழ்க்கையை* விண்ணகர் மேயவனே*       (6.1.1)

 

1449:

அண்ணல்செய்து அலைகடல் கடைந்து*அதனுள்கண்ணுதல் நஞ்சுண்ணக் கண்டவனே!*

விண்ணவர்அமுதுண அமுதில்வரும்* பெண்ணமுதுண்ட எம்பெருமானே!*

ஆண்டாய்!உனைக் காண்பதோர்* அருளெனக்கு அருளுதியேல்*

வேண்டேன் மனைவாழ்க்கையை* விண்ணகர் மேயவனே       (6.1.2)

 

1450:

குழல்நிறவண்ண! நின்கூறுகொண்ட* தழல்நிறவண்ணன் நண்ணார்நகரம்விழ*

நனிமலைசிலை வளைவுசெய்து* அங்கழல்நிற அம்பதுவானவனே!*

ஆண்டாய்!உனைக் காண்பதோர்* அருளெனக்கு அருளுதியேல்*

வேண்டேன் மனைவாழ்க்கையை* விண்ணகர் மேயவனே       (6.1.3)

 

1451:

நிலவொடுவெயில் நிலவிஇருசுடரும்* உலகமும் உயிர்களும் உண்டொருகால்*

கலைதரு குழவியின் உருவினையாய்* அலைகடல் ஆலிலை வளர்ந்தவனே!*

ஆண்டாய்!உனைக் காண்பதோர்* அருளெனக்கு அருளுதியேல்*

வேண்டேன் மனைவாழ்க்கையை* விண்ணகர் மேயவனே       (6.1.4)

 

1452:

பாரெழு கடலெழு மலையெழுமாய்ச்* சீர்கெழும் இவ்வுலகேழுமெல்லாம்*

ஆர்கெழுவயிற்றினில் அடக்கிநின்று* அங்குஓரெழுத்தோர் உருவானவனே!*

ஆண்டாய்!உனைக் காண்பதோர்* அருளெனக்கு அருளுதியேல்,

வேண்டேன் மனைவாழ்க்கையை* விண்ணகர் மேயவனே       (6.1.5)

 

1453:

கார்கெழு கடல்களும் மலைகளுமாய்* ஏர்கெழும் உலகமுமாகி*

முதலார்களும் அறிவருநிலையினையாய்ச்* சீர்கெழு நான்மறையானவனே!*

ஆண்டாய்!உனைக் காண்பதோர்* அருளெனக்கு அருளுதியேல்*

வேண்டேன் மனைவாழ்க்கையை* விண்ணகர் மேயவனே       (6.1.6)

 

1454:

உருக்குறு நறுநெய்கொண்டு ஆரழலில்* இறுக்குறும் அந்தணர் சந்தியின்வாய்*

பெருக்கமொடு அமரர்கள் அமரநல்கும்* இருக்கினில் இன்னிசையானவனே!*

ஆண்டாய்!உனைக் காண்பதோர்* அருளெனக்கு அருளுதியேல்*

வேண்டேன் மனைவாழ்க்கையை* விண்ணகர் மேயவனே       (6.1.7)

 

1455:

காதல்செய்து இளையவர் கலவிதரும்* வேதனை வினையது வெருவுதலாம்*

ஆதலின்உனதடி அணுகுவன்நான்!* போதலார் நெடுமுடிப் புண்ணியனே!*

ஆண்டாய்!உனைக் காண்பதோர்* அருளெனக்கு அருளுதியேல்*

வேண்டேன் மனைவாழ்க்கையை* விண்ணகர் மேயவனே       (6.1.8)

 

1456:

சாதலும் பிறத்தலும் என்றிவற்றைக்* காதல்செய்யாது உனகழல்அடைந்தேன்*

ஓதல்செய் நான்மறையாகி* உம்பர்ஆதல்செய் மூவுருவானவனே!*

ஆண்டாய்!உனைக் காண்பதோர்* அருளெனக்கு அருளுதியேல்*

வேண்டேன் மனைவாழ்க்கையை* விண்ணகர் மேயவனே!      (6.1.9)

 

1457:##

பூமரு பொழிலணி* விண்ணகர்மேல்*

காமருசீர்க்* கலிகன்றிசொன்ன*

பாமருதமிழிவை* பாடவல்லார்*

வாமனன்அடியிணை* மருவுவரே*  (6.1.10)

 

இரண்டாம் திருமொழி – பொறுத்தேன்

 

1458:##

பொறுத்தேன் புன்சொல்நெஞ்சில்* பொருளின்பமென இரண்டும்இறுத்தேன்*

ஐம்புலங்கட்கிடனாயின* வாயிலொட்டிஅறுத்தேன்*

ஆர்வச்செற்றம் அவைதம்மை* மனத்தகற்றி வெறுத்தேன்*

நின்னடைந்தேன்* திருவிண்ணகர் மேயவனே       (6.2.1)

 

1459:

மறந்தேன் உன்னைமுன்னம்* மறந்த மதியின் மனத்தால்*

இறந்தேன் எத்தனையும்* அதனால் இடும்பைக்குழியில்*

பிறந்தே எய்த்தொழிந்தேன்* பெருமான்! திருமார்பா!*

சிறந்தேன் நின்னடிக்கே* திருவிண்ணகர் மேயவனே       (6.2.2)

 

1460:

மானேய் நோக்கியர்தம்* வயிற்றுக்குழியில் உழைக்கும்*

ஊனேராக்கை தன்னை* உதவாமை உணர்ந்துணர்ந்து*

வானே! மானிலமே!* வந்துவந்து என்மனத்திருந்த தேனே*

நின்னடைந்தேன்* திருவிண்ணகர் மேயவனே      (6.2.3)

 

1461:

பிறிந்தேன் பெற்றமக்கள்* பெண்டிரென்றிவர் பின்னுதவாதுஅறிந்தேன்*

நீபணித்த அருளென்னும்* ஒள்வாளுருவி எறிந்தேன்*

ஐம்புலங்கள் இடர்த்தீர* எறிந்துவந்து செறிந்தேன்*

நின்னடிக்கே* திருவிண்ணகர் மேயவனே       (6.2.4)

 

1462:

பாண்தேன் வண்டறையும்குழலார்கள்* பல்லாண்டிசைப்ப*

ஆண்டார் வையமெல்லாம்* அரசாகி*முன்னாண்டவரே-

மாண்டாரென்று வந்தார்* அந்தோ! மனைவாழ்க்கைதன்னை வேண்டேன்*

நின்னடைந்தேன்* திருவிண்ணகர் மேயவனே       (6.2.5)

 

1463:

கல்லா ஐம்புலங்கள்அவை* கண்டவாறு செய்யகில்லேன்*

மல்லா! மல்லமருள் மல்லர்மாள* மல்லடர்த்தமல்லா!*

மல்லலம் சீர்* மதிள்நீரிலங்கையழித்த வில்லா*

நின்னடைந்தேன்* திருவிண்ணகர் மேயவனே       (6.2.6)

 

1464:

வேறாயானிரந்தேன்* வெகுளாது மனக்கொள்எந்தாய்!*

ஆறா வெந்நரகத்து* அடியேனை இடக்கருதி*

கூறாஐவர் வந்துகுமைக்கக்* குடிவிட்டவரை*

தேராது உன்னடைந்தேன்* திருவிண்ணகர் மேயவனே       (6.2.7)

 

1465:

தீவாய வல்வினையார்* உடன்நின்று சிறந்தவர்போல்*

மேவா வெந்நரகத்திட* உற்று விரைந்துவந்தார்*

மூவா வானவர்தம் முதல்வா!* மதிகோள் விடுத்ததேவா*

நின்னடைந்தேன்* திருவிண்ணகர் மேயவனே       (6.2.8)

 

1466:

போதார் தாமரையாள்* புலவிக்குல வானவர்தம்கோதா*

கோதில் செங்கோல்* குடைமன்னரிடை நடந்ததூதா*

தூமொழியாய்! சுடர்ப்போல்* என் மனத்திருந்தவேதா*

நின்னடைந்தேன்* திருவிண்ணகர் மேயவனே       (6.2.9)

 

1467:##

தேனார் பூம்புறவில்* திருவிண்ணகர் மேயவனை*

வானாரும் மதில்சூழ்* வயல்மங்கையர்க்கோன் மருவார்*

ஊனார்வேல் கலியன்* ஒலிசெய் தமிழ்மாலைவல்லார்*

கோனாய் வானவர்தம்* கொடிமாநகர் கூடுவரே     (6.2.10)

 

 

மூன்றாம் திருமொழி – துறப்பேன்

 

1468:##

துறப்பேன் அல்லேன்* இன்பம் துறவாது*

நின்னவரும் மறப்பேனல்லேன்* என்றும்மறவாது*

யான்உலகில்பிறப்பேனாக எண்ணேன்* பிறவாமை பெற்றது*

நின்திறத்தேன் ஆதன்மையால்* திருவிண்ணகரானே      (6.3.1)

 

1469:

துறந்தேன் ஆர்வச்செற்றச்* சுற்றம் துறந்தமையால்*

சிறந்தேன் நின்னடிக்கே* அடிமை திருமாலே*

அறந்தானாய்த் திரிவாய்* உன்னைஎன் மனத்தகத்தே*

திறம்பாமல் கொண்டேன்* திருவிண்ணகரானே    (6.3.2)

 

1470:

மானேய் நோக்குநல்லார்* மதிபோல் முகத்துஉலவும்*

ஊனேய் கண்வாளிக்கு* உடைந்தோட்டந்து உன்னடைந்தேன்*

கோனே! குறுங்குடியுள்குழகா!* திருநறையூர்த் தேனே*

வருபுனல்சூழ்* திருவிண்ணகரானே      (6.3.3)

 

1471:

சாந்தேந்து மென்முலையார்* தடந்தோள் புணரின்பவெள்ளத்து ஆழ்ந்தேன்*

அருநகரத்தழுந்தும்* பயன்படைத்தேன்*

போந்தேன் புண்ணியனே!* உனையெய்தி என்தீவினைகள் தீர்ந்தேன்*

நின்னடைந்தேன்* திருவிண்ணகரானே      (6.3.4)

 

1472:

மற்றோர் தெய்வமெண்ணேன்* உன்னை என்மனத்துவைத்துப் பெற்றேன்*

பெற்றதுவும்* பிறவாமை எம்பெருமான்*

வற்றா நீள்கடல்சூழ்* இலங்கை இராவணனைச்செற்றாய்*

கொற்றவனே!* திருவிண்ணகரானே      (6.3.5)

 

1473:

மையொண் கருங்கடலும்* நிலனும் மணிவரையும்*

செய்ய சுடரிரண்டும்* இவையாய நின்னை*

நெஞ்சில் உய்யும்வகை உணர்ந்தேன்* உண்மையால் இனி*

யாதும் மற்றோர்தெய்வம் பிறிதறியேன்* திருவிண்ணகரானே      (6.3.6)

 

1474:

வேறே கூறுவதுண்டு* அடியேன் விரித்துரைக்குமாறே*

நீபணியாது அடை* நின் திருமனத்து*

கூறேன் நெஞ்சுதன்னால்* குணங்கொண்டு*

மற்றோர்தெய்வம் தேறேன் உன்னையல்லால்* திருவிண்ணகரானே      (6.3.7)

 

1475:

முளிதீந்த வெங்கடத்து* மூரிப் பெருங்களிற்றால்*

விளிதீந்த மாமரம்போல்* வீழ்ந்தாரை நினையாதே*

அளிந்தோர்ந்த சிந்தை* நின்பால் அடியேற்க்கு*

வானுலகம் தெளிந்தே என்றுஎய்துவது?* திருவிண்ணகரானே      (6.3.8)

 

1476:

சொல்லாய் திருமார்வா!* உனக்காகித் தொண்டுபட்ட நல்லேனை*

வினைகள் நலியாமை* நம்புநம்பீ*

மல்லா! குடமாடி!* மதுசூதனே*

உலகில் செல்லா நல்லிசையாய்!* திருவிண்ணகரானே      (6.3.9)

 

1477:##

தாரார் மலர்க்கமலத்* தடஞ்சூழ்ந்த தண்புறவில்*

சீரார் நெடுமறுகில்* திருவிண்ணகரானை*

காரார் புயல்தடக்கைக்* கலியனொலிமாலை*

ஆரார் இவைவல்லார்* அவர்க்கு அல்லல்நில்லாவே    (6.3.10)

 

நான்காம் திருமொழி – கண்ணும்சுழன்று

 

1478:##

கண்ணும் சுழன்று பீளையோடு* ஈளைவந்தேங்கினால்*

பண்ணின் மொழியார்* பையநடமின்என்னாதமுன்*

விண்ணும் மலையும்* வேதமும் வேள்வியுமாயினான்*

நண்ணு நறையூர்* நாம்தொழுதும் எழுநெஞ்சமே     (6.4.1)

 

1479:

கொங்குண் குழலார்* கூடியிருந்து சிரித்து*

நீரிங்கென் இருமி* எம்பால்வந்ததென்று இகழாதமுன்*

திங்களெரிகால்* செஞ்சுடராயவன் தேசுடை*

நங்கள் நறையூர்* நாம்தொழுதும் எழுநெஞ்சமே.     (6.4.2)

 

 

1480:

கொங்கார் குழலார்* கூடியிருந்து சிரித்து*

எம்மை எங்கோலம் ஐயா!* என்இனிக்காண்பது என்னாதமுன்*

செங்கோல் வலவன்* தான்பணிந்தேத்தித் திகழுமூர்*

நங்கோன் நறையூர்* நாம்தொழுதும் எழுநெஞ்சமே.     (6.4.3)

 

1481:

கொம்பும் அரவமும்* வல்லியும்வென்ற நுண்ணேரிடை*

வம்புண்குழலார்* வாசலடைத்து இகழாதமுன்*

செம்பொன் கமுகினம்தான்* கனியும்செழுஞ்சோலைசூழ்*

நம்பன்நறையூர்* நாம்தொழுதும் எழுநெஞ்சமே.     (6.4.4)

 

1482:

விலங்கும் கயலும்* வேலும்ஒண்காவியும் வென்றகண்*

சலங்கொண்டசொல்லார்* தாங்கள் சிரித்துஇகழாதமுன்*

மலங்கும் வராலும்* வாளையும்பாய்வயல்சூழ்தரு*

நலங்கொள் நறையூர்* நாம்தொழுதும் எழுநெஞ்சமே.     (6.4.5)

 

1483:

மின்னேரிடையார்* வேட்கையை மாற்றியிருந்து*

என்நீர்இருமி* எம்பால்வந்தது என்றுஇகழாதமுன்*

தொன்னீரிலங்கை மலங்க* விலங்கெரி ஊட்டினான்*

நன்னீர்நறையூர்* நாம்தொழுதும் எழுநெஞ்சமே     (6.4.6)

 

1484:

வில்லேர்நுதலார்* வேட்கையை மாற்றிச் சிரித்து*

இவன்பொல்லான் திரைந்தானென்னும்* புறனுரை கேட்பதன்முன்*

சொல்லார் மறைநான்கோதி* உலகில் நிலாயவர்*

நல்லார் நறையூர்* நாம்தொழுதும் எழுநெஞ்சமே.     (6.4.7)

 

1485:

வாளொண்கண் நல்லார்தாங்கள்* மதனனென்றார்தம்மை*

கேண்மின்கள் ஈளையோடு* ஏங்குகிழவன் என்னாதமுன்*

வேள்வும் விழவும்* வீதியில் என்றும்அறாதவூர்*

நாளும்நறையூர்* நாம்தொழுதும் எழுநெஞ்சமே.     (6.4.8)

 

1486:

கனிசேர்ந்திலங்கு நல்வாயவர்* காதன்மை விட்டிட*

குனிசேர்ந்துடலம்* கோலில்தளர்ந்து இளையாதமுன்*

பனிசேர் விசும்பில்* பால்மதிகோள் விடுத்தானிடம்*

நனிசேர்நறையூர்* நாம்தொழுதும் எழுநெஞ்சமே.     (6.4.9)

 

1487:##

பிறைசேர் நுதலார்* பேணுதல்நம்மை இலாதமுன்*

நறைசேர் பொழில்சூழ்* நறையூர்தொழு நெஞ்சமே!என்ற*

கறையார் நெடுவேல் மங்கையர்கோன்* கலிகன்றிசொல்*

மறவாதுஉரைப்பவர்* வானவர்க்கு இன்னரசாவாரே (6.4.10)

 

ஐந்தாம் திருமொழி- கலங்க முந்நீர்

 

1488:##

கலங்கமுந்நீர் கடைந்து* அமுதம்கொண்டு*

இமையோர் துலங்கல்தீர* நல்குசோதிச் சுடராய*

வலங்கையாழி இடங்கைச்சங்கம்* உடையானூர்*

நலங்கொள்வாய்மை* அந்தணர்வாழும் நறையூரே.      (6.5.1)

 

1489:

முனையார்சீயமாகி* அவுணன் முரண்மார்வம்*

புனைவாளுகிரால்* போழ்படஈர்ந்த புனிதனூர்*

சினையார் தேமாஞ்செந்தளிர்க்கோதிக்* குயில்கூவும்*

நனையார் சோலை சூழ்ந்து* அழகாய நறையூரே.        (6.5.2)

 

1490:

அனைப்புரவி தேரொடுகாலாள்* அணிகொண்ட*

சேனைத் தொகையைச்சாடி* இலங்கை செற்றானூர்*

மீனைத் தழுவி வீழ்ந்தெழும்* மள்ளர்க்கு அலமந்து*

நானப் புதலில்* ஆமையொளிக்கும் நறையூரே*     (6.5.3)

 

1491:

உறியார் வெண்ணெய் உண்டு* உரலோடும் கட்டுண்டு*

வெறியார் கூந்தல்* பின்னைபொருட்டுஆன் வென்றானூர்*

பொறியார் மஞ்ஞை* பூம்பொழில் தோறும் நடமாட*

நறுநாண்மலர்மேல்* வண்டிசைபாடும் நறையூரே.       (6.5.4)

 

1492:

விடையேழ் வென்று* மென்தோளாய்ச்சிகு அன்பனாய்*

நடையால் நின்ற* மருதம் சாய்த்த நாதனூர்*

பெடையோடு அன்னம்* பெய்வளையார் தம்பின்சென்று*

நடையோடியலி* நாணி ஒளிக்கும் நறையூரே.     (6.5.5)

 

1493:

பகுவாய்வன்பேய்* கொங்கைசுவைத்து ஆருயிருண்டு*

புகுவாய் நின்ற* போதகம்வீழப் பொருதானூர்*

நெகுவாய் நெய்தல்* பூமதுமாந்திக் கமலத்தின்*

நகுவாய் மலர்மேல்* அன்னமுறங்கும் நறையூரே*     (6.5.6)

 

1494:

முந்துநூலும் முப்புரிநூலும்* முன்னீந்த*

அந்தணாளன் பிள்ளையை* அஞ்ஞான்று அளித்தானூர்*

பொந்தில் வாழும் பிள்ளைக்காகிப்* புள்ளோடி*

நந்துவாரும்* பைம்புனல்வாவி நறையூரே.        (6.5.7)

 

1495:

வெள்ளைப் புரவைத் தேர்விசயற்காய்* விறல்வியூகம்விள்ள*

சிந்துக் கோன்விழ* ஊர்ந்த விமலனூர்*

கொள்ளைக் கொழுமீன்* உண்குருகுஓடிப் பெடையோடும்*

நள்ளக் கமலத்* தேறலுகுக்கும் நறையூரே.   (6.5.8)

 

1496:

பாரையூரும் பாரம்தீரப்* பார்த்தன்தன்-

தேரையூரும்* தேவ தேவன் சேருமூர்*

தாரையூரும்* தண்தளிர் வேலிபுடைசூழ*

நாரையூரும்* நல்வயல் சூழ்ந்த* நறையூரே.   (6.5.9)

 

1497:##

தாமத்துளப* நீண்முடி மாயன் தான்நின்ற*

நாமத்திரள் மாமாளிகை சூழ்ந்த* நறையூர்மேல்*

காமக்கதிர்வேல் வல்லான்* கலியனொலிமாலை*

சேமத்துணையாம்* செப்புமவர்க்குத் திருமாலே.   (6.5.10)

 

ஆறாம் திருமொழி – அம்பரமும்

 

1498:##

அம்பரமும் பெருநிலனும் திசைகளெட்டும்*அலைகடலும் குலவரையும் உண்டகண்டன்*

கொம்பமரும் வடமரத்தினிலைமேல்* பள்ளிகூடினான் திருவடியே கூடிகிற்பீர்*

வம்பவிழும் செண்பகத்தின் வாசம்உண்டு* மணிவண்டு வகுளத்தின் மலர்மேல்வைகு*

செம்பியன்கோச்செங்கணான் சேர்ந்தகோயில்* திருநறையூர் மணிமாடம்சேர்மின்களே.

 

1499:

கொழுங்கயலாய் நெடுவெள்ளம் கொண்டகாலம்*

குலவரையின்மீதோடி அண்டத்தப்பால்*

எழுந்துஇனிதுவிளையாடும் ஈசன்எந்தை*

இணையடிக்கீழ் இனிதிருப்பீர்! இனவண்டாலும்*

உழும்செறுவில் மணிகொணர்ந்து கரைமேல்சிந்தி*

உலகெல்லாம் சந்தனமும் அகிலும்கொள்ள*

செழும்பொன்னி வளங்கொடுக்கும் சோழன்சேர்ந்த*

திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.

 

1500:

பவ்வநீருடை ஆடையாகச் சுற்றிப்* பாரகலம் திருவடியாப் பவனம்மெய்யா*

செவ்விமா திரமெட்டும் தோளா* அண்டம் திருமுடியா நின்றான்பால் செல்லுகிற்பீர்*

கவ்வைமா களிறுந்தி விண்ணியேற்ற* கழல்மன்னர் மணிமுடிமேல் காகமேற*

தெய்வவாள் வலங்கொண்ட சோழன் சேர்ந்த* திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.

 

1501:

பைங்கண் ஆளரியுருவாய் வெருவநோக்கிப்* பருவரைத்தோள் இரணியனைப் பற்றிவாங்கி*

அங்கைவாள் உகிர்நுதியால் அவனதாகம்* அங்குருதி பொங்குவித்தான் அடிக்கீழ்நிற்பீர்*

வெங்கண்மா களிறுந்தி விண்ணியேற்ற* விறல்மன்னர் திறலழிய வெம்மாவுய்த்த*

செங்கணான் கோச்சோழன் சேர்ந்த கோயில்* திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே. 

 

1502:

அன்றுலக மூன்றினையும் அளந்து*

வேறோர்அரியுருவாய் இரணியனதாகம்கீண்டு*

வென்றவனை விண்ணுலகில் செலவுய்த்தாற்கு*

விருந்தாவீர்!மேலெழுந்து விலங்கல்பாய்ந்து*

பொன்சிதறி மணிகொணர்ந்து கரைமேல்சீந்திப்*

புலம்பரந்து நிலம்பரக்கும் பொன்னிநாடன்*

தென்தமிழன் வடபுலக்கோன் சோழன் சேர்ந்த*

திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே. (6.6.5)

 

1503:

தன்னாலே தன்னுருவம் பயந்ததானாய்த்* தயங்கொளிசேர் மூவுலகும் தானாய்வானாய்*

தன்னாலே தன்னுருவின் மூர்த்தி மூன்றாய்த்* தானாயனாயினான் சரணென்றுய்வீர்*

மின்னாடுவேலேந்து விளைந்தவேளை* விண்ணேறத் தனிவேலுய்த்து உலகமாண்ட*

தென்னாடன் குடகொங்கன் சோழன்சேர்ந்த* திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே 

 

1504:

முலைத்தடத்த நஞ்சுண்டு துஞ்சப் பேய்ச்சி*

முதுதுவரைக் குலபதியாக்காலிப்பின்னே*

இலைத்தடத்த குழலூதிஆயர்மாதர்*

இனவளைகொண்டான் அடிக்கீழ்எய்தகிற்பீர்*

மலைத்தடத்த மணிகொணர்ந்து வையம்உய்ய*

வளங்கொடுக்கும் வருபுனலம் பொன்னி நாடன்*

சிலைத்தடக்கைக் குலச்சோழன் சேர்ந்த கோயில்*

திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே. (6.6.7)

 

1505:

முருக்கிலங்கு கனித்துவர்வாய்ப் பின்னை கேள்வன்*

மன்னெல்லாம் முன்னவியச்சென்று*

 

வென்றிச்செருக்களத்துத் திறலழியச் செற்ற வேந்தன்*

சிரந்துணிந்தான் திருவடி நும் சென்னிவைப்பீர்*

இருக்கிலங்கு திருமொழிவாய் எண்தோளÖசற்கு*

எழில்மாடம்எழுபது செய்துஉலகமாண்ட*

திருக்குலத்து வளச்சோழன் சேர்ந்த கோயில்*

திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே (6.6.8)

 

1506:

தாராளன் தண்ணரங்கவாளன்* பூமேல்தனியாளன்முனியாளர் ஏத்தநின்ற பேராளன்*

ஆயிரம்பேருடைய வாளன்* பின்னைக்கு மணவாளன் பெருமைகேட்பீர்*

பாராளர் இவரிவரென்று அழுந்தையேற்ற* படைமன்னருடல் துணியப் பரிமாவுய்த்த*

தேராளங்கோச்சோழன் சேர்ந்தகோயில்* திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே 

 

1507:##

செம்மொழிவாய் நால்வேத வாணர்வாழும்* திருநறையூர்மணிமாடச் செங்கண்மாலை*

பொய்ம்மொழி ஒன்றில்லாத மெய்ம்மையாளன்* புலமங்கை குலவேந்தன் புலமையார்ந்த*

அம்மொழிவாய்க்கலிகன்றி இன்பப்பாடல்* பாடுவார்வியனுலகில் நமனார்பாடி*

வெம்மொழிகேட்டு அஞ்சாதே மெய்ம்மை சொல்லில்* விண்ணவர்க்கு விருந்தாகும்

                                                                                                            பெருந்தக்கோரே.       

 

ஏழாம் திருமொழி – ஆளும்பணியும்

 

1508:##

ஆளும் பணியும் அடியேனைக் கொண்டான்* விண்ட நிசாசரரை*

தோளும் தலையும் துணிவெய்தச்* சுடுவெஞ்சிலைவாய்ச் சரம்துரந்தான்*

வேளும் சேயும் அனையாரும்* வேற்கணாரும் பயில்வீதி*

நாளும்விழவினொலியோவா* நறையூர்நின்றநம்பியே       (6.7.1)

 

1509:

முனியாய்வந்து மூவெழுகால்* முடிசேர்மன்னர் உடல்துணிய*

தனிவாய்மழுவின் படையாண்ட* தாரார்த்தோளான் வார்புறவில்*

பனிசேர் முல்லை பல்லரும்ப* பானல்ஒருபால் கண்காட்ட*

நனிசேர் கமலம் முகங்காட்டும்* நறையூர்நின்றநம்பியே.      (6.7.2)

 

1510:

தெள்ளார் கடல்வாய் விடவாய* சினவாளரவில் துயிலமர்ந்து*

துள்ளாவருமான் வீழவாளி துரந்தான்* இரந்தான் மாவலிமண்*

புள்ளார்புறவில் பூங்காவி* புலங்கொள் மாதர் கண்காட்ட*

நள்ளார் கமலம் முகங்காட்டும்* நறையூர்நின்றநம்பியே.       (6.7.3)

 

1511:

ஒளியா வெண்ணெயுண்டானென்று* உரலோடாய்ச்சி ஒண்கயிற்றால்*

விளியாஆர்க்க ஆப்புண்டு* விம்மியழுதான் மென்மலர்மேல்*

களியாவண்டு கள்ளுண்ணக்* காமர்தென்றல் அலர்தூற்ற*

நளிர்வாய்முல்லை முறுவலிக்கும்* நறையூர் நின்ற நம்பியே.       (6.7.4)

 

1512:

வில்லார் விழவில் வடமதுரை* விரும்பி விரும்பா மல்லடர்த்து*

கல்லார்திரள்தோள் கஞ்சனைக்காய்ந்தான்* பாய்ந்தான் காளியன்மேல்*

சொல்லார் சுருதிமுறையோதிச்* சோமுச்செய்யும் தொழிலினோர்*

நல்லார்மறையோர் பலர்வாழும்* நறையூர்நின்றநம்பியே.       (6.7.5)

 

1513:

வள்ளிகொழுநன் முதலாய* மக்களோடு முக்கண்ணான் வெள்கியோட*

விறல்வாணன்* வியன்தோள்வனத்தைத் துணித்துகந்தான்*

பள்ளிகமலத்து இடைப்பட்ட* பகுவாயலவன் முகம்நோக்கி*

நள்ளியூடும் வயல்சூழ்ந்த* நறையூர்நின்றநம்பியே.       (6.7.6)

 

1514:

மிடையாவந்தவேல் மன்னர்வீய* விசயன் தேர்கடவி*

குடையா வரை ஒன்றெடுத்து* ஆயர்க்கோவாய்நின்றான் கூராழிப்படையான்*

வேதம் நான்கு ஐந்துவேள்வி* அங்கம் ஆறு இசையேழ்*

நடையாவல்ல அந்தணர்வாழ்* நறையூர்நின்றநம்பியே.       (6.7.7)

 

1515:

பந்தார்விரலாள் பாஞ்சாலி* கூந்தல்முடிக்கப் பாரதத்து*

கந்தார்க்களிற்றுக் கழல்மன்னர்க்கலங்கச்* சங்கம் வாய்வைத்தான்*

செந்தாமரைமேல் அயேனாடு* சிவனும்அனையபெருமையோர்*

நந்தாவண்கை மறையோர்வாழ்* நறையூர்நின்றநம்பியே       (6.7.8)

 

1516:

ஆறும் பிறையும் அரவமும்* அடம்பும் சடைமேலணிந்து*

உடலம் நீறும்பூசியேறூரும்* இறையோன் சென்று குறையிரப்ப*

மாறொன்றில்லா வாசநீர்* வரைமார்பகலத்து அளித்துகந்தான்*

நாறும் பொழில்சூழ்ந்தழகாய* நறையூர்நின்றநம்பியே.       (6.7.9)

 

1517:##

நன்மையுடைய மறையோர்வாழ்* நறையூர் நின்ற நம்பியை*

கன்னிமதிள்சூழ் வயல்மங்கைக்* கலியனொலிசெய் தமிழ்மாலை

பன்னியுலகில் பாடுவார்* பாடுசாரா பழவினைகள்*

மன்னிஉலகம் ஆண்டுபோய்* வானோர் வணங்க வாழ்வாரே       (6.7.10)

 

எட்டாம் திருமொழி – மான்கொண்ட

 

1518:##

மான்கொண்டதோல்* மார்வின்மாணியாய்*

மாவலிமண் தான்கொண்டு* தாளால் அளந்த பெருமானை*

தேன்கொண்டசாரல்*  திருவேங்கடத்தானை*

நான் சென்று நாடி* நறையூரில் கண்டேனே*  (6.8.1)

 

1519:

முந்நீரை முன்னாள்* கடைந்தானை*

மூழ்த்தநாள் அந்நீரைமீனாய்* அமைத்த பெருமானை*

தென்னாலிமேய* திருமாலை எம்மானை*

நன்னீர் வயல்சூழ்* நறையூரில் கண்டேனே.        (6.8.2)

 

1520:

தூவாய புள்ðர்ந்துவந்து* துறைவேழம்*

மூவாமை நல்கி* முதலை துணித்தானை*

தேவாதி தேவனைச்* செங்கமலக் கண்ணானை*

நாவாயுளானை* நறையூரில் கண்டேனே   (6.8.3)

 

1521:

ஓடாஅரியாய்* இரணியனைஊனிடந்த*

சேடார் பொழில்சூழ்* திருநீர் மலையானை

வாடா மலர்த்துழாய்* மாலை முடியானை*

நாடோறும்நாடி* நறையூரில் கண்டேனே   (6.8.4)

 

1522:

கல்லார்மதில்சூழ்* கடியிலங்கைக் காரரக்கன்*

வல்லாகம்கீள* வரிவெஞ்சரம் துரந்த வில்லானை*

செல்வவிபீடணற்கு* வேறாக*

நல்லனை நாடி* நறையூரில் கண்டேனே   (6.8.5)

 

1523:

உம்பருலகோடு* உயிரெல்லாம் உந்தியில்*

வம்புமலர்மேல்* படைத்தானை மாயோனை*

அம்பன்ன கண்ணாள்* அசோதைதன் சிங்கத்தை*

நம்பனைநாடி* நறையூரில் கண்டேனே.   (6.8.6)

 

1524:

கட்டேறுநீள்சோலைக்* காண்டவத்தைத் தீமூட்டிவிட்டானை*

மெய்யம்அமர்ந்தபெருமானை*

மட்டேறு கற்பகத்தை* மாதர்க்காய்*

வண்துவரை நட்டானைநாடி* நறையூரில் கண்டேனே  (6.8.7)

 

1525:

மண்ணின்மீபாரம்கெடுப்பான்* மறமன்னர்*

பண்ணின்மேல் வந்த* படையெல்லாம் பாரதத்து*

விண்ணின்மீதேற* விசயன்தேரூர்ந்தானை*

நங்கோனை நாடி* நறையூரில் கண்டேனே. (6.8.8)

 

1526:##

பொங்கேறு நீள்சோதிப்* பொன்னாழி தன்னோடும்*

சங்கேறு கோலத்* தடக்கைப் பெருமானை*

கொங்கேறுசோலைக்* குடந்தைக்கிடந்தானை*

நங்கோனைநாடி* நறையூரில் கண்டேனே   (6.8.9)

 

1527:##

மன்னுமதுரை* வசுதேவர் வாழ்முதலை*

நன்னறையூர்* நின்ற நம்பியை*

வம்பவிழ்தார்கன்னவிலும் தோளான்* கலியனொலிவல்லார்*

பொன்னுலகில் வானவர்க்குப்* புத்தேளிர் ஆகுவரே    (6.8.10)

 

ஒன்பதாம் திருமொழி – பெடையடர்த்த

 

1528:##

பெடையடர்த்த மடவன்னம்* பிரியாது*

மலர்க்கமலம்மடலெடுத்து மதுநுகரும்* வயலுடுத்த திருநறையூர்*

முடையடர்த்த சிரமேந்தி* மூவுலகும் பலிதிரிவோன்*

இடர்கெடுத்த திருவாளன்* இணையடியே அடைநெஞ்சே!    (6.9.1)

 

1529:

கழியாரும் கனசங்கம்* கலந்துஎங்கும் நிறைந்தேறி*

வழியார முத்தீன்று* வளங்கொடுக்கும் திருநறையூர்*

பழியாரும் விறலரக்கன்* பருமுடிகள்அவைசிதற*

அழலாறும் சரந்துரந்தான்* அடியிணையே அடைநெஞ்சே!  (6.9.2)

 

1530:

சுளைகொண்ட பலங்கனிகள்* தேன்பாய*

கதலிகளின் திளைகொண்டபழம்கெழுமு* திகழ்சோலைத் திருநறையூர்*

வளைகொண்ட வண்ணத்தன்* பின்தோன்றல்*

மூவுலகோடுஅளைவெண்ணெய் உண்டான்தன்* அடியிணையே அடைநெஞ்சே!        

 

1531:

துன்றோளித்துகீற்படலம்* துன்னிஎங்கும் மாளிகைமேல்*

நின்றார வான்மூடும்* நீள்செல்வத் திருநறையூர்*

மன்றாரக் குடமாடி* வரையெடுத்து மழைதடுத்த*

குன்றாரும் திர்ள்தோளன்* குரைகழலே அடைநெஞ்சே!       (6.9.4)

 

1532:

அகிற்குறடும் சந்தனமும்* அம்பொன்னும் மணிமுத்தும்*

மிகக்கொணர்ந்து திரையுந்தும்* வியன்பொன்னித் திருநறையூர்*

பகல்கரந்த சுடராழிப்* படையான் இவ்வுலகேழும்*

புகக்கரந்த திருவயிற்றன்* பொன்னடியே அடைநெஞ்சே!   (6.9.5)

 

1533:

பொன்முத்தும் அரியுகிரும்* புழைக்கைம்மா கரிக்கோடும்*

மின்னத்தண் திரையுந்தும்* வியன்பொன்னித் திருநறையூர்*

மின்னொத்த நுண்மருங்குல்* மெல்லியலை*

திருமார்பில் மன்னத்தான் வைத்துகந்தான்* மலரடியே அடைநெஞ்சே!       

 

1534:

சீர்தழைத்த கதிர்ச்செந்நெல்* செங்கமலத் திடையிடையின்*

பார்தழைத்துக் கரும்போங்கிப்* பயன்விளைக்கும் திருநறையூர்*

கார்தழைத்த திருவுருவன்* கண்ணபிரான் விண்ணவர்கோன்*

தார்தழைத்த துழாய்முடியன்* தளிரடியே அடைநெஞ்சே!   (6.9.7)

 

1535:##

குலையார்ந்த பழுக்காயும்* பசுங்காயும் பாளைமுத்தும்*

தலையார்ந்த இளங்கமுகின்* தடஞ்சோலைத் திருநறையூர்*

மலையார்ந்த கோலம்சேர்* மணிமாடம் மிகமன்னி*

நிலையார நின்றான்தன்* நீள்கழலே அடைநெஞ்சே!    (6.9.8)

 

1536:

மறையாரும் பெருவேள்விக்* கொழும்புகைபோய் வளர்ந்துஎங்கும்*

நிறையார வான்மூடும்* நீள்செல்வத் திருநறையூர்*

பிறையாரும் சடையானும்* பிரமனும்முன் தொழுதேத்த*

இறையாகி நின்றான்தன்* இணையடியே அடைநெஞ்சே!      (6.9.9)

 

1537:##

திண்களக மதிள்புடைசூழ்* திருநறையூர் நின்றானை*

வண்களக நிலவெறிக்கும்* வயல்மங்கை நகராளன்*

பண்களகம் பயின்றசீர்ப்* பாடலிவை பத்தும்வல்லார்*

விண்களகத்து இமையவராய்* வீற்றிருந்து வாழ்வாரே.      (6.9.10)

 

பத்தாம் திருமொழி – கிடந்தநம்பி

 

1538:##

கிடந்தநம்பி குடந்தைமேவிக்* கேழலாய்உலகை இடந்தநம்பி*

எங்கள் நம்பி* எறிஞரரணழிய*

கடந்தநம்பி கடியாரிலங்கை* உலகைஈரடியால்*

நடந்தநம்பி நாமம்சொல்லில்* நமோநாராயணமே.      (6.10.1)

 

 

1539:

விடந்தானுடைய அரவம்வெருவச்* செருவில் முனநாள்*

முன்தடந்தாமரைநீர்ப் பொய்கைபுக்கு* மிக்கதாடாளன்*

இடந்தான் வையம் கேழலாகி* உலகை ஈரடியால்*

நடந்தானுடைய நாமம் சொல்லில்* நமோநாராயணமே.      (6.10.2)

 

1540:

பூணாதனலும்* தறுகண் வேழம்மறுக*

வளைமருப்பைப் பேணான் வாங்கி* அமுதம் கொண்டபெருமான்திருமார்வன்*

பாணாவண்டு முரலும்கூந்தல்* ஆய்ச்சி தயிர்வெண்ணெய்*

நாணாதுஉண்டான் நாமம்சொல்லில்* நமோநாராயணமே.      (6.10.3)

 

1541:##

கல்லார்மதிள்சூழ்* கச்சி நகருள்நச்சிப்*

பாடகத்துள் எல்லா உலகும்வணங்க* இருந்தஅம்மான்*

இலங்கைக்கோன் வல்லாளாகம்* வில்லால் முனிந்த எந்தை*

விபீடணற்கு நல்லானுடைய நாமம்சொல்லில்* நமோநாராயணமே      (6.10.4)

 

1542:

குடையா வரையால்* நிரைமுன் காத்த பெருமான்*

மருவாத விடைதானேழும் வென்றான்* கோவல் நின்றான்*

தென்னிலங்கை அடையாஅரக்கர்வீயப்* பொருது மேவிவெங்கூற்றம்*

நடையா உண்ணக் கண்டான்நாமம்* நமோநாராயணமே      (6.10.5)

 

1543:

கானஎண்கும் குரங்கும்* முசுவும்படையா*

அடலரக்கர் மானமழித்து நின்ற* வென்றியம்மான்*

எனக்கென்றும் தேனும்பாலும்அமுதுமாய* திருமால் திருநாமம்*

நானும் சொன்னேன் நமரும்உரைமின்* நமோநாராயணமே      (6.10.6)

 

1544:

நின்றவரையும் கிடந்தகடலும்* திசையும் இருநிலனும்*

ஒன்றுமொழியா வண்ணம்எண்ணி* நின்ற அம்மானார்*

குன்று குடையா எடுத்த* அடிகளுடைய திருநாமம்*

நன்றுகாண்மின் தொண்டீர்!சொன்னேன்* நமோநாராயணமே      (6.10.7)

 

1545:

கடுங்கால்மாரி கல்லேபொழிய* அல்லேஎமக்கென்று படுங்கால்*

நீயே சரணென்று* ஆயரஞ்ச அஞ்சாமுன்*

நெடுங்கால்குன்றம் குடையொன்றேந்தி* நிரையைச் சிரமத்தால்*

நடுங்காவண்ணம் காத்தான்நாமம்* நமோநாராயணமே      (6.10.8)

 

1546:

பொங்குபுணரிக் கடல்சூழாடை* நிலமாமகள் மலர்மாமங்கை*

பிரமன்சிவன்இந்திரன்* வானவர் நாயகராய*

எங்களடிகள் இமையோர்* தலைவருடைய திருநாமம்*

நங்கள்வினைகள் தவிரஉரைமின்* நமோநாராயணமே      (6.10.9)

 

1547:##

வாவித்தடஞ்சூழ் மணிமுத்தாற்று* நறையூர் நெடுமாலை*

நாவில்பரவி நெஞ்சில்கொண்டு* நம்பி நாமத்தை*

காவித்தடங்கண் மடவார்க்கேள்வன்* கலியனொலிமாலை*

மேவிச்சொல்ல வல்லார் பாவம்* நில்லாவீயுமே  (6.10.10)