ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ திருமங்கையாழ்வார் அருளிச்செய்த
பெரிய திருமொழி – இரண்டாம் பத்து – எட்டாம் திருமொழி
| 1118 | திரிபுர மூன்றெரித் தானும்மற்றை மலர்மிசை மேலய னும்வியப்ப, முரிதிரை மாகடல் போல்முழங்கி மூவுல கும்முறை யால்வணங்க, எரியன கேசர வாளெயிற்றோ டிரணிய னாக மிரண்டுகூறா, அரியுரு வாமிவ ரார்க்கொலென்ன அட்ட புயகரத் தேனென்றாரே. |
8.1 |
| 1119 | வெந்திறல் வீரரில் வீரரொப்பார் வேத முரைத்திமை யோர்வணங்கும், செந்தமிழ் பாடுவார் தாம்வணங்கும் தேவ ரிவர்கொல் தெரிக்கமாட்டேன், வந்து குறளரு வாய்நிமிர்ந்து மாவலி வேள்வியில் மண்ணளந்த, அந்தணர் போன்றிவ ரார்க்கொலென்ன அட்ட புயகரத் தேனென்றாரே. |
8.2 |
| 1120 | செம்பொ னிலங்கு வலங்கைவாளி திண்சிலை தண்டொடு சங்கமொள்வாள், உம்ப ரிருசுட ராழியோடு கேடக மொண்மலர் பற்றியெற்றே, வெம்பு சினத்தடல் வேழம்வீழ வெண்மருப் பொன்று பறித்து,இருண்ட அம்புதம் போன்றிவ ரார்க்கொலென்ன அட்ட புயகரத் தேனென்றாரே. |
8.3 |
| 1121 | மஞ்சுயர் மாமணிக் குன்றமேந்தி மாமழை காத்தொரு மாயவானை யஞ்ச,அதன்மருப் பொன்றுவாங்கும் ஆயர்கொல் மாய மறியமாட்டேன், வெஞ்சுட ராழியும் சங்குமேந்தி வேதமு னோதுவர் நீதிவானத்து, அஞ்சுடர் போன்றிவ ரார்க்கொலென்ன அட்ட புயகரத் தேனென்றாரே. |
8.4 |
| 1122 | கலைகளும் வேதமும் நீதிநூலும் கற்பமும் சொற்பொருள் தானும்,மற்றை நிலைகளும் வானவர்க் கும்பிறர்க்கும் நீர்மையி நாலருள் செய்து,நீண்ட மலைகளும் மாமணி யும்மலர்மேல் மங்கையும் சங்கமும் தங்குகின்ற, அலைகடல் போன்றிவ ரார்க்கொலென்ன அட்ட புயகரத் தேனென்றாரே. |
8.5 |
| 1123 | எங்ஙனும் நாமிவர் வண்ணமெண்ணில் ஏது மறிகிலம், ஏந்திழையார் சங்கும் மனமும் நிறைவுமெல்லாம் தம்மன வாகப் புகுந்து,தாமும் பொங்கு கருங்கடல் பூவைகாயாப் போதவிழ் நீலம் புனைந்தமேகம், அங்ஙனம் போன்றிவ ரார்க்கொலென்ன அட்ட புயகரத் தேனென்றாரே. |
8.6 |
| 1124 | முழுசிவண் டாடிய தண்டுழாயின் மொய்ம்மலர்க் கண்ணியும்,மேனியஞ்சாந்- திழிசிய கோல மிருந்தவாறும் எங்ஙனஞ் சொல்லுகேன். ஓவிநல்லார், எழுதிய தாமரை யன்னகண்ணும் ஏந்தெழி லாகமும் தோளும்வாயும், அழகிய தாமிவ ரார்க்கொலென்ன அட்ட புயகரத் தேனென்றாரே. |
8.7 |
| 1125 | மேவியெப் பாலும்விண் ணோர்வணங்க வேத முரைப்பர்முந் நீர்மடந்தை தேவி,அப் பாலதிர் சங்கமிப்பால் சக்கரம் மற்றிவர் வண்ணமெண்ணில், காவியொப் பார்க்கட லேயுமொப்பார் கண்ணும் வடிவும் நெடியராய்,என் ஆவியொப் பாரிவ ரார்க்கொலென்ன அட்ட புயகரத் தேனென்றாரே. |
8.8 |
| 1126 | தஞ்ச மிவர்க்கென் வளையும்நில்லா நெஞ்சமும் தம்மதே சிந்தித்தேற்கு, வஞ்சி மருங்குல் நெருங்கநோக்கி வாய்திறந் தொன்று பணித்ததுண்டு, நஞ்ச முடைத்திவர் நோக்கும்நோக்கம் நானிவர் தம்மை யறியமாட்டேன் அஞ்சுவன் மற்றிவ ரார்க்கொலென்ன அட்ட புயகரத் தேனென்றாரே. |
8.9 |
| 1127 | மன்னவன் தொண்டையர் கோன்வணங்கும் நீள்முடி மாலை வயிரமேகன், தன்வலி தன்புகழ் சூழ்ந்தகச்சி அட்ட புயகரத் தாதிதன்னை, கன்னிநன் மாமதிள் மங்கைவேந்தன் காமரு சீர்க்கலி கன்றி,குன்றா இன்னிசை யால்சொன்ன செஞ்சொல்மாலை யேத்தவல் லார்க்கிடம் வைகுந்தமே. |
8.10 |
ஸ்ரீ திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்!

