ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ திருமங்கையாழ்வார் அருளிச்செய்த
பெரிய திருமொழி – ஐந்தாம் பத்து – ஆறாம் திருமொழி
| 1398 | கைம்மான மழகளிற்றைக் கடல்கிடந்த கருமணியை, மைம்மான மரகதத்தை மறையுரைத்த திருமாலை, எம்மானை எனக்கென்று மினியானைப் பனிகாத்த வம்மானை, யான்கண்ட தணிநீர்த் தென் னரங்கத்தே |
6.1 |
| 1399 | பேரானைக் குறுங்குடியெம் பெருமானை, திருதண்கால் ஊரானைக் கரம்பனூர் உத்தமனை, முத்திலங்கு காரார்த்திண் கடலேழும் மலையேழிவ் வுலகேழுண்டும், அராதென் றிருந்தானைக் கண்டதுதென் னரங்கத்தே |
6.2 |
| 1400 | ஏனாகி யுலகிடந்தன் றிருநிலனும் பெருவிசும்பும், தானாய பெருமானைத் தன்னடியார் மனத்தென்றும் தேனாகி யமுதாகித் திகழ்ந்தானை, மகிழ்ந்தொருகால் ஆனாயன் ஆனானைக் கண்டதுதென் னரங்கத்தே |
6.3 |
| 1401 | வளர்ந்தவனைத் தடங்கடலுள் வலியுருவில் திரிசகடம், தளர்ந்துதிர வுதைத்தவனைத் தரியாதன் றிரணியனைப் பிளந்தவனை, பெருநிலமீ ரடிநீட்டிப் பண்டொருநாள் அளந்தவனை, யான்கண்ட தணிநீர்த்தென் னரங்கத்தே |
6.4 |
| 1402 | நீரழலாய் நெடுநிலனாய் நின்றானை, அன்றரக்கன் ஊரழலா லுண்டானைக் கண்டார்பின் காணாமே, பேரழலாய்ப் பெருவிசும்பாய்ப் பின்மறையோர் மந்திரத்தின், ஆரழலா லுண்டானைக் கண்டதுதென் னரங்கத்தே |
6.5 |
| 1403 | தஞ்சினத்தைத் தவிர்த்தடைந்தார் தவநெறியை, தரியாது கஞ்சனைக்கொன் றன்றுலக முண்டுமிழ்ந்த கற்பகத்தை, வெஞ்சினத்த கொடுந்தொழிலோன் விசையுருவை யசைவித்த, அஞ்சிறைப்புட் பாகனையான் கண்டதுதென் னரங்கத்தே |
6.6 |
| 1404 | சிந்தனையைத் தவநெறியைத் திருமாலை, பிரியாது வந்தெனது மனத்திருந்த வடமலையை, வரிவண்டார் கொந்தணைந்த பொழில்கோவ லுலகளப்பா னடிநிமிர்த்த அந்தணனை, யான்கண்ட தணிநீர்த்தென் னரங்கத்தே |
6.7 |
| 1405 | துவரித்த வுடையார்க்கும் தூய்மையில்லச் சமணர்க்கும், அவர்கட்கங் கருளில்லா அருளானை, தன்னடைந்த எமர்கட்கு மடியேற்கு மெம்மாற்கு மெம்மனைக்கும், அமரர்க்கும் பிரானாரைக் கண்டதுதென் னரங்கத்தே |
6.8 |
| 1406 | பொய்வண்ணம் மனத்தகற்றிப் புலனைந்தும் செலவைத்து, மெய்வண்ணம் நினைந்தவர்க்கு மெய்ந்நின்ற வித்தகனை, மைவண்ணம் கருமுகில்போல் திகழ்வண்ண மரதகத்தின், அவ்வண்ண வண்ணனையான் கண்டதுதென் னரங்கத்தே |
6.9 |
| 1407 | ஆமருவி நிரைமேய்த்த அணியரங்கத் தம்மானை, காமருசீர்க் கலிகன்றி யொலிசெய்த மலிபுகழ்சேர் நாமருவு தமிழ்மாலை நாலிரண்டோ டிரண்டினையும், நாமருவி வல்லார்மேல் சாராதீ வினைதாமே |
6.10 |
ஸ்ரீ திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்!

