ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ திருமங்கையாழ்வார் அருளிச்செய்த
பெரிய திருமொழி – ஐந்தாம் பத்து – நான்காம் திருமொழி
| 1378 | உந்தி மேல்நான் முகனைப் படைத்தான் உல குண்டவன் எந்தை பெம்மான், இமையோர்கள் தாதைக்கிட மென்பரால், சந்தி னோடு மணியும் கொழிக்கும்புனல் காவிரி, அந்தி போலும் நிறத்தார் வயல்சூழ்தென் னரங்கமே |
4.1 |
| 1379 | வையமுண் டாலிலை மேவு மாயன்மணி நீண்முடி, பைகொள் நாகத் தணையான் பயிலுமிட மென்பரால், தையல் நல்லார் குழல்மா லையும்மற்றவர் தடமுலை, செய்ய சாந்தும் கலந்திழி புனல்சூழ்தென் னரங்கமே |
4.2 |
| 1380 | பண்டிவ் வைய மளப்பான் சென்றுமாவலி கையில்நீர் கொண்ட ஆழித் தடக்கைக் குறளனிட மென்பரால், வண்டு பாடும் மதுவார் புனல்வந்திழி காவிரி அண்ட நாறும் பொழில்சூழ்ந்து அழகார்தென் னரங்கமே |
4.3 |
| 1381 | விளைத்த வெம்போர் விறல்வா ளரக்கன்நகர் பாழ்பட, வளைத்த வல்வில் தடக்கை யவனுக்கிட மென்பரால், துளைக்கை யானை மருப்பு மகிலும்கொணர்ந் துந்தி,முன் திளைக்கும் செல்வப் புனல்கா விரிசூழ்தென் னரங்கமே |
4.4 |
| 1382 | வம்புலாம் கூந்தல் மண்டோதரி காதலன் வான்புக, அம்பு தன்னால் முனிந்த அழகனிட மென்பரால், உம்பர் கோனு முலகேழும் வந்தீண்டி வணங்கும், நல் செம்பொ னாரும் மதிள்சூழ்ந்து அழகார்தென் னரங்கமே |
4.5 |
| 1383 | கலையு டுத்த அகலல்குல் வன்பேய்மகள் தாயென, முலைகொ டுத்தா ளுயிருண் டவன்வாழுமிட மென்பரால், குலையெ டுத்த கதலிப் பொழிலூடும் வந்துந்தி, முன் அலையெ டுக்கும் புனற்கா விரிசூழ்தென் னரங்கமே |
4.6 |
| 1384 | கஞ்சன் நெஞ்சும் கடுமல் லரும்சகடமுங்காலினால், துஞ்ச வென்ற சுடராழி யான்வாழுமிட மென்பரால், மஞ்சு சேர்மா ளிகைநீ டகில்புகையும், மறையோர் செஞ்சொல் வேள்விப் புகையும் கமழும்தென் னரங்கமே |
4.7 |
| 1385 | ஏன மீனா மையோடு அரியும்சிறு குறளுமாய், தானு மாயத் தரணித் தலைவனிட மென்பரால், வானும் மண்ணும் நிறையப் புகுந்தீண்டி வணங்கும்,நல் தேனும் பாலும் கலந்தன் னவர்சேர்த்தென் னரங்கமே |
4.8 |
| 1386 | சேய னென்றும் மிகப்பெரியன் நுண்ணேர்மையி னாய, இம் மாயையை ஆரு மறியா வகையானிட மென்பரால், வேயின் முத்தும் மணியும் கொணர்ந்தார்ப்புனற் காவிரி, ஆய பொன்மா மதிள்சூழ்ந் தழகார்தென் னரங்கமே |
4.9 |
| 1387 | அல்லி மாத ரமரும் திருமார்வ னரங்கத்தை, கல்லின் மன்னு மதிள்மங் கையர்கோன்கலி கன்றிசொல், நல்லிசை மாலைகள் நாலி ரண்டுமிரண் டுமுடன், வல்லவர் தாமுல காண்டு பின்வானுல காள்வரே |
4.10 |
ஸ்ரீ திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்!

