ஒன்பதாம் திருமொழி


ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:

ஸ்ரீ திருமங்கையாழ்வார் அருளிச்செய்த

பெரிய திருமொழி – மூன்றாம் பத்து – ஒன்பதாம் திருமொழி

1228 சலங்கொண்ட இரணியன தகல்மார்வம் கீண்டு
தடங்கடலைக் கடைந்தமுதங் கொண்டுகந்த காளை,
நலங்கொண்ட கருமுகில்போல் திருமேனி யம்மான்
நாடோறும் மகிழ்ந்தினிது மருவியுறை கோயில்,
சலங்கொண்டு மலர்சொரியும் மல்லிகையொண் செருந்தி
சண்பகங்கள் மணநாறும் வண்பொழிலி னூடே,
வலங்கொண்டு கயலோடி விளையாடு நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்குமட நெஞ்சே.
9.1

 

1229 திண்ணியதோ ரரியுருவாய்த் திசையனைத்தும் நடுங்கத்
தேவரொடு தானவர்கள் திசைப்ப,இரணியனை
நண்ணியவன் மார்வகலத் துகிர்மடுத்த நாதன்
நாடோறும் மகிழ்ந்தினிது மருவியுறை கோயில்,
எண்ணில்மிகு பெருஞ்செல்வத் தெழில்விளங்கு மறையும்
ஏழிசையும் கேள்விகளு மியன்றபெருங் குணத்தோர்,
மண்ணில்மிகு மறையவர்கள் மலிவெய்து நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்குமட நெஞ்சே.
9.2

 

1230 அண்டமுமிவ் வலைகடலு மவனிகளு மெல்லாம்
அமுதுசெய்த திருவயிற்றன் அரன்கொண்டு
திரியும், முண்டமது நிறைத்தவன்கண் சாபமது நீக்கும்
முதல்வனவன் மகிழ்ந்தினிது மருவியுறை கோயில்,
எண்டிசையும் பெருஞ்செந்ந லிளந்தெங்கு கதலி
இலைக்கொடியொண் குலைக்கமுகொ டிகலிவளம் சொரிய
வண்டுபல விசைபாடமயிலாலு நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்குமட நெஞ்சே.
9.3

 

1231 கலையிலங்கு மகலல்குல் அரக்கர்க்குலக் கொடியைக்
காதொடுமூக் குடனரியக் கதறியவ ளோடி,
தலையிலங்கை வைத்துமலை யிலங்கைபுகச் செய்த
தடந்தோளன் மகிழ்ந்தினிது மருவியுறை கோயில்,
சிலையிலங்கு மணிமாடத் துச்சிமிசைச் சூலம்
செழுங்கொண்ட லகடிரியச் சொரிந்தசெழு முத்தம்,
மலையிலங்கு மாளிகைமேல் மலிவெய்து நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்குமட நெஞ்சே.
9.4

 

1232 மின்னனைய _ண்மருங்குல் மெல்லியற்கா யிலங்கை
வேந்தன்முடி யொருபதும்தோ ளிருபதும்போ யுதிர
தன்நிகரில் சிலைவளைத்தன் றிலங்கைபொடி செய்த
தடந்தோளன் மகிழ்ந்தினிது மருவியுறை கோயில்,
செந்நெலொடு செங்கமலம் சேல்கயல்கள் வாளை
செங்கழுநீ ரொடுமிடைந்து கழனிதிகழ்ந்
தெங்கும், மன்னுபுகழ் வேதியர்கள் மலிவெய்து நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்குமட நெஞ்சே.
9.5

 

1233 பெண்மைமிகு வடிவுகொடு வந்தவளைப் பெரிய
பேயினது உருவுகொடு மாளவுயி ருண்டு
திண்மைமிகு மருதொடுநற் சகடமிறுத் தருளும்
தேவனவன் மகிழ்ந்தினிது மருவியுறை கோயில்,
உண்மைமிகு மறையொடுநற் கலைகள்நிறை பொறைகள்
உதவுகொடை யென்றிவற்றி னொழிவில்லா,
பெரிய வண்மைமிகு மறையவர்கள் மலிவெய்து நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்குமட நெஞ்சே.
9.6

 

1234 விளங்கனியை யிளங்கன்று கொண்டுதிர வெறிந்து
வேல்நெடுங்க ணாய்ச்சியர்கள் வைத்ததயிர் வெண்ணெய்
உளங்குளிர அமுதுசெய்திவ் வுலகுண்ட காளை
உகந்தினிது நாடோறும் மருவியுறை கோயில்,
இளம்படிநற் கமுகுகுலைத் தெங்குகொடிச் செந்நெல்
ஈன்கரும்பு கண்வளரக் கால்தடவும் புனலால்,
வளங்கொண்ட பெருஞ்செல்வம் வளருமணி நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்குமட நெஞ்சே.
9.7

 

1235 ஆறாத சினத்தின்மிகு நரகனுர மழித்த
அடலாழித் தடக்கையன் அலர்மகட்கும் அரற்கும்,
கூறாகக் கொடுத்தருளும் திருவுடம்பன் இமையோர்
குலமுதல்வன் மகிழ்ந்தினிது மருவியுறை
கோயில், மாறாத மலர்க்கமலம் செங்கழுநீர் ததும்பி
மதுவெள்ள மொழுகவய லுழவர்மடை யடைப்ப,
மாறாத பெருஞ்செல்வம் வளருமணி நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்குமட நெஞ்சே.
9.8

 

1236 வங்கமலி தடங்கடலுள் வானவர்க ளோடு
மாமுனிவர் பலர்கூடி மாமலர்கள் தூவி,
எங்கள்தனி நாயகனே எமக்கருளாய் என்னும்
ஈசனவன் மகிழ்ந்தினிது மருவியுறை கோயில்,
செங்கயலும் வாளைகளும் செந்நெலிடைக் குதிப்பச்
சேலுகளும் செழும்பணைசூழ் வீதிதொறும் மிடைந்து,
மங்குல்மதி யகடுரிஞ்சு மணிமாட நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்குமட நெஞ்சே.
9.9

 

1237 சங்குமலி தண்டுமுதல் சக்கரமுனேந்தும்
தாமரைக்கண் நெடியபிரான் தானமரும்
கோயில், வங்கமலி கடலுலகில் மலிவெய்து நாங்கூர்
வைகுந்த விண்ணகர்மேல் வண்டறையும் பொழில்சூழ்,
மங்கையர்தம் தலைவன்மரு வலர்தமுடல் துணிய
வாள்வீசும் பரகாலன் கலிகன்றி சொன்ன,
சங்கமலி தமிழ்மாலை பத்திவைவல்லார்கள்
தரணியொடு விசும்பாளும் தன்மைபெறு வாரே.
9.10

ஸ்ரீ திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்!