ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ திருமங்கையாழ்வார் அருளிச்செய்த
பெரிய திருமொழி – மூன்றாம் பத்து – மூன்றாம் திருமொழி
| 1168 | வாட மருதிடை போகி மல்லரைக் கொன்றொக்க லிட்டிட்டு, ஆடல்நல் மாவுடைத் தாயர் ஆநிரைக் கன்றிடர் தீர்ப்பான், கூடிய மாமழை காத்த கூத்த னெனெவரு கின்றான், சேடுயர் பூம்பொழில் தில்லைச் சித்திர கூடத்துள் ளானே. |
3.1 |
| 1169 | பேய்மகள் கொங்கைநஞ் சுண்ட பிள்ளை பரிசிது வென்றால், மாநில மாமகள் மாதர் கேள்வ னிவனென்றும், வண்டுண் பூமகள் நாயக னென்றும் புலங்கெழு கோவியர் பாடி, தேமலர் தூவ வருவான் சித்திர கூடத்துள் ளானே. |
3.2 |
| 1170 | பண்டிவன் வெண்ணெயுண் டானென் றாய்ச்சியர் கூடி யிழிப்ப எண்டிசை யோரும்வ ணங்க இணைமரு தூடு நடந்திட்டு, அண்டரும் வானத் தவரு மாயிர நாமங்க ளோடு, திண்டிறல் பாட வருவான் சித்திர கூடத்துள் ளானே. |
3.3 |
| 1171 | வளைக்கை நெடுங்கண் மடவா ராய்ச்சிய ரஞ்சி யழைப்ப, தளைத்தவிழ் தாமரைப் பொய்கைத் தண்தடம் புக்கண்டர் காண, முளைத்த எயிற்றழல் நாகத் துச்சியில் நின்றது வாட, திலைத்தமர் செய்து வருவான் சித்திர கூடத்துள் ளானே. |
3.4 |
| 1172 | பருவக் கருமுகி லொத்து முட்டுடை மாகட லொத்து, அருவித் திரள்திகழ் கின்ற வாயிரம் பொன்மலை யொத்து, உருவக் கருங்குழ லாய்ச்சி திறத்தின மால்விடை செற்று, தெருவில் திளைத்து வருவான் சித்திர கூடத்துள் ளானே. |
3.5 |
| 1173 | எய்யச் சிதைந்த திலங்கை மலங்க வருமழை காப்பான், உய்யப் பருவரை தாங்கி ஆநிரை காத்தானென் றேத்தி, வையத் தெவரும் வணங்க அணங்கெழு மாமலை போலே, தெய்வப்புள் ளேறி வருவான் சித்திர கூடத்துள் ளானே. |
3.6 |
| 1174 | ஆவ ரிவைசெய் தறிவார்? அஞ்சன மாமலை போலே, மேவு சினத்தடல் வேழம் வீழ முனிந்து,அழ காய காவி மலர்நெடுங் கண்ணார் கைதிழ வீதி வருவான், தேவர் வணங்குதண் தில்லைச் சித்திர கூடத்துள் ளானே. |
3.7 |
| 1175 | பொங்கி யமரி லொருகால் பொன்பெய ரோனை வெருவ, அங்கவனாக மளைந்திட் டாயிரந் தோளெழுந் தாட, பைங்க ணிரண்டெரி கான்ற நீண்ட எயிற்றொடு பேழ்வாய், சிங்க வுருவில் வருவான் சித்திர கூடத்துள் ளானே. |
3.8 |
| 1176 | கருமுகில் போல்வதோர் மேனி கையன வாழியும் சங்கும், பெருவிறல் வானவர் சூழ ஏழுல கும்தொழு தேத்த, ஒருமக ளாயர் மடந்தை யொருத்தி நிலமகள், மற்றைத் திருமக ளோடும் வருவான் சித்திர கூடத்துள் ளானே. |
3.9 |
| 1177 | தேனமர் பூம்பொழில் தில்லைச் சித்திர கூட மமர்ந்த, வானவர் தங்கள் பிரானை மங்கையர் கோன்மரு வார், ஊனமர் வேல்கலி கன்றி யொண்டமி ழொன்பதோ டொன்றும், தானிவை கற்றுவல் லார்மேல் சாராதீவினைதானே. |
3.10 |
ஸ்ரீ திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்!

