திருவாய்மொழி ஏழாம் பத்து
முதல் திருமொழி
3453:##
உண்ணிலாவிய ஐவரால் குமைதீற்றி* என்னை உன் பாத பங்கயம்,*
நண்ணிலா வகையே* நலிவான் இன்னும் எண்ணுகின்றாய்,*
எண்ணிலாப் பெருமாயனே! இமையோர்கள் ஏத்தும்* உலக மூன்றுடை,*
அண்ணலே! அமுதே! அப்பனே!* என்னை ஆள்வானே! (2) 7.1.1
3454:
என்னையாளும் வன்கோ ஓரைந்திவைபெய்து* இராப்பகல் மோது வித்திட்டு,*
உன்னை நான் அணுகாவகை* செய்து போதி கண்டாய்,*
கன்னலே! அமுதே! கார்முகில்வண்ணனே!*கடல் ஞாலம் காக்கின்ற,*
மின்னு நேமியினாய்!* வினையேனுடை வேதியனே! 7.1.2
3455:
வேதியா நிற்கும் ஐவரால்* வினையேனை மோதுவித்து,* உன் திருவடிச்
சாதியாவகை* நீ தடுத்து என்பெறுதியந்தோ,*
ஆதியாகி அகலிடம்படைத்து* உண்டுமிழந்து கடந்திடந்-
திட்ட,*சோதி நீள்முடியாய்!* தொண்டனேன் மதுசூதனனே! 7.1.3
3456:
சூது நான் அறியாவகை* சுழற்றியோர் ஐவரைக் காட்டி,* உன்னடிப்போது-
நான் அணுகாவகை* செய்து போதி கண்டாய்,*
யாதும் யாவரும் இன்றி நின்னகம்பால் ஒடுக்கி*ஓராலின் நீளிலை,*
மீதுசேர்குழவி!* வினையேன் வினைதீர் மருந்தே! 7.1.4
3457:
தீர்மருந்தின்றி ஐந்து நோயடும்* செக்கிலிட்டுத் திரிக்கும் ஐவரை,*
நேர்மருங்குடைத்தாவடைத்து* நெகிழிப்பான் ஒக்கின்றாய்,*
ஆர்மருந்து இனியாகுவர்?* அடலாழி ஏந்தி அசுரர் வன்குலம்,*
வேர்மருங்கு அறுத்தாய்!* விண்ணுளார் பெருமானேயோ! 7.1.5
3458:
விண்ணுளார் பெருமாற்கு அடிமைசெய்வாரையும் செறும்* ஐம்புலனிவை,*
மண்ணுள் என்னைப் பெற்றால்* என்செய்யாமற்று நீயும்விட்டால்?*
பண்ணுளாய்! கவி தன்னுளாய்!* பத்தியினுள்ளாய்! பரமீசனே,* வந்தென்-
கண்ணுளாய்! நெஞ்சுளாய்!* சொல்லுளாய்! ஒன்று சொல்லாயே. 7.1.6
3459:
ஒன்று சொல்லி ஒருத்தினில் நிற்கிலாத* ஓரைவர் வன்கயவரை,*
என்றுயான் வெல்கிற்பன்* உன் திருவருளில்லையேல்?,*
அன்று தேவர் அசுரர் வாங்க* அலைகடல் அரவம் அளாவி,* ஓர்
குன்றம் வைத்த எந்தாய்!* கொடியேன் பருகு இன்னமுதே! 7.1.7
3460:
இன்னமுதெனத் தோன்றி* ஓரைவர் யாவரையும் மயக்க,* நீவைத்த-
முன்ன மாயமெல்லாம்* முழு வேரரிந்து,* என்னையுன்-
சின்னமும் திருமூர்த்தியும்* சிந்தித் தேத்திக் கைதொழவே அருள் எனக்கு,*என்னம்மா! என்கண்ணா!* இமையோர்தம் குலமுதலே! 7.1.8
3461:
குலமுதலடும் தீவினைக்* கொடுவன் குழியினில் வீழ்க்கும் ஐவரை*
வலமுதல் கெடுக்கும்* வரமே தந்தருள் கண்டாய்,*
நிலமுதலினி எவ்வுலகுக்கும்* நிற்பன செல்வனேன,* பொருள்-
பல முதல் படைத்தாய்!* என் கண்ணா! என் பரஞ்சுடரே! 7.1.9
3462:
`என்பரஞ் சுடரே!‘ என்றுன்னை அலற்றி* உன் இணைத்தாமரைகட்கு,*
அன்புருகி நிற்கும்* அதுநிற்கச் சுமடு தந்தாய்,*
வன்பரங்கள் எடுத்து ஐவர்* திசைதிசை வலித்தெற்றுகின்றனர்:*
முன்பரவை கடைந்து* அமுதம் கொண்ட மூர்த்தியோ! 7.1.10
3463:##
கொண்ட மூர்த்தி ஓர் மூவராய்க்* குணங்கள் படைத்தளித்துக் கெடுக்கும்,*அப்
புண்டரீகப் கொப்பூழ்* புனற் பள்ளி அப்பனுக்கே,*தொண்டர்
தொண்டர் தொண்டர் தொண்டன்* சடகோபன் சொல்லாயிரத்துள் இப்பத்தும்,*
கண்டு பாடவல்லார்* வினைபோம் கங்குலும் பகலே. (2) 7.1.11
இரண்டாம் திருமொழி
3464:##
கங்குலும் பகலும் கண் துயிலறியாள்* கண்ணநீர் கைகளால் இறைக்கும்,*
சங்கு சக்கரங்களென்று கை கூப்பும்* `தாமரைக் கண்‘ என்றே தளரும்,*
`எங்ஙனே தரிக்கேன் உன்னைவிட்டு‘ என்னும்* இருநிலம் கை துழாவிருக்கும்,*
செங்கயல் பாய்நீர்த் திருவரங்கத்தாய்!* இவள்திறத்து என் செய்கின்றாயே?'(2)
3465:
‘என் செய்கின்றாய் என் தாமரைக் கண்ணா! என்னும்*
கண்ணீர்மல்க இருக்கும்,*
`என் செய்கேன் எறிநீர்த் திருவரங்கத்தாய்?’என்னும்*
வெவ்வுயிர்த்துயிர் உருகும்:*
`முன்செய்த வினையே! முகப்படாய்‘ என்னும்*
முகில்வண்ணா!தகுவதோ?’ என்னும்,*
முன்செய்து இவ்வுலகம் உண்டுமிழந்தளந்தாய்!*
என்கொலோமுடிகின்றது இவட்கே?
3466:
வட்கிலள் இறையும் `மணிவண்ணா!‘ என்னும்* வானமே நோக்கும் மையாக்கும்,*
`உட்குடை அசுரர் உயிரெல்லாம் உண்ட* ஒருவனே!‘ என்னும் உள்ளுருகும்,*
`கட்கிலீ! உன்னைக் காணுமாறு அருளாய்* காகுத்தா! கண்ணனே!‘ என்னும்,*
திட்கொடி மதிள்சூழ் திருவரங்கத்தாய்!* இவள்திறத்து என் செய்திட்டாயே?
3467:
இட்டகால் இட்ட கைகளாய் இருக்கும்*
எழுந்துலாய் மயங்கும் கை கூப்பும்,*
`கட்டமே காதல்!‘ என்று மூர்ச்சிக்கும்*
`கடல்வண்ணா! கடியைகாண்‘ என்னும்,*
`வட்டவாய் நேமி வலங்கையா!‘ என்னும்*
`வந்திடாய்‘ என்றென்றே மயங்கும்,*
சிட்டனே! செழுநீர்த் திருவரங்கத்தாய்!*
இவள்திறத்து என் சிந்தித்தாயே?
3468:
சிந்திக்கும் திசைக்கும் தேறும் கை கூப்பும்*
`திருவரங் கத்துள்ளாய்!‘ என்னும் –
வந்திக்கும்,* ஆங்கே மழைக் கண்ணீர் மல்க*
வந்திடாய்‘ என்றென்றே மயங்கும்,*
அந்திப்போது அவுணன் உடலிடந்தானே!*
அலைகடல் கடைந்த ஆரமுதே,*
சந்தித்து உன் சரணம் சார்வதே வலித்த*
தையலை மையல் செய்தானே!
3469:
`மையல்செய்து என்னை மனம்கவர்ந்தானே!‘ என்னும்*
`மா மாயனே!‘ என்னும்,*
`செய்யவாய் மணியே!‘ என்னும்*
`தண் புனல்சூழ் திருவரங்கத்துள்ளாய்!‘என்னும்,*
`வெய்யவாள் தண்டு சங்குசக்கரம் வில்லேந்தும்*
விண்ணோர் முதல்!‘ என்னும்,*
பைகொள் பாம்பணையாய்! இவள் திறத்தருளாய்*
பாவியேன் செயற்பாலதுவே.
3470:
`பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய்!*
பற்றிலார் பற்றநின்றானே,*
காலசக்கரத்தாய்! கடலிடங் கொண்ட*
கடல்வண்ணா! கண்ணணே!‘ என்னும்,*
`சேல்கொள் தண்புனல்சூழ் திருவரங்கத்தாய்!‘என்னும்*
`என்தீர்த்தனே!‘ என்னும்,*
கோலமா மழைக்கண் பனிமல்க இருக்கும்*
என்னுடைக் கோமளக் கொழுந்தே.
3471:
`கொழுந்து வானவர்கட்கு‘என்னும்*
குன்றேந்திக் கோநிரை காத்தவன்! என்னும்,*
அழுந்தொழும் ஆவி அனலவெவ்வுயிர்க்கும்*
`அஞ்சன வண்ணனே!‘என்னும்,*
எழுந்துமேல் நோக்கி இமைப்பிலள் இருக்கும்*
எங்ஙனே நோக்குகேன்?’ என்னும்,*
செழுந்தடம் புனல்சூழ் திருவரங்கத்தாய்!*
என்செய்கேன் என்திருமகட்கே? 7.2.8
3472:##
`என்திருமகள் சேர்மார்வனே! என்னும்* என்னுடை ஆவியே!‘ என்னும்,*
`நின்திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட* நிலமகள் கேள்வனே!‘ என்னும்,*
`அன்றுருவேழும் தழுவி நீ கொண்ட* ஆய்மகள் அன்பனே!‘ என்னும்,*
தென் திருவரங்கம் கோயில்கொண்டானே!* தெளிகிலேன் முடிவு இவள்தனக்கே.
3473:
`முடிவு இவள் தனக்கொன்றறிகிலேன்‘ என்னும்*
`மூவுலகாளியே!‘ என்னும்,*
`கடிகமழ் கொன்றைச் சடையனே!‘ என்னும்*
`நான்முகக் கடவுளே!‘ என்னும்,*
`வடிவுடை வானோர் தலைவனே!‘ என்னும்*
`வண் திருவரங்கனே!‘ என்னும்,*
அடியடையாதாள் போலிவள் அணுகி அடைந்தனள்*
முகில்வண்ணன் அடியே.
3474:##
முகில்வண்ணன் அடியைஅடைந்து அருள் சூடி உய்ந்தவன்*
மொய்புனல் பொருநல்,*
துகில்வண்ணத்தூநீர்ச் சேர்ப்பன்*
வண்பொழில்சூழ் வண்குருகூர்ச் சடகோபன்,*
முகில்வண்ணன் அடிமேல் சொன்னசொல்மாலை*
ஆயிரத்து இப்பத்தும் வல்லார்,*
முகில்வண்ண வானத்து இமையவர் சூழ இருப்பர்*
பேரின்ப வெள்ளத்தே. (2)
மூன்றாம் திருமொழி
3475:##
வெள்ளைச் சுரிசங்கொடு ஆழி ஏந்தித்*
தாமரைக் கண்ணனென் நெஞ்சினூடே,*
புள்ளைக் கடாகின்றவாற்றைக் காணீர்*
என்சொல்லிச் சொல்லுகேன் அன்னைமீர்காள்,*
வெள்ளச் சுகமவன் வீற்றிருந்த*
வேத ஒலியும் விழா ஒலியும்,*
பிள்ளைக் குழா விளையாட்டொலியும் அறாத்*
திருப்பேரையில் சேர்வன் நானே! (2)
3476:
நானக் கருங்குழல் தோழிமீர்காள்!* அன்னையர்காள்!அயல் சேரியீர்காள்*,
நானித் தனிநெஞ்சம் காக்க மாட்டேன்* என்வசம் அன்றிதிராப்பகல்போய்,*
தேன்மொய்த்த பூம்பொழில் தண்பணைசூழ் * தென்திருப் பேரையில் வீற்றி ருந்த,*
வானப்பிரான் மணிவண்ணன் கண்ணன்* செங்கனி வாயின் திறத்ததுவே. 7.3.2
3477:
செங்கனி வாயின் திறத்ததாயும்* செஞ்சுடர் நீண்முடித் தாழ்ந்ததாயும்,*
சங்கொடு சக்கரம் கண்டுகந்தும்* தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்தும்,*
திங்களும் நாளும் விழாவறாத* தென்திருப்பேரையில் வீற்றிருந்த,*
நங்கள்பிரானுக்கென் னெஞ்சம் தோழி!* நாணும் நிரையும் இழந்ததுவே. 7.3.3
3478:
இழந்த எம்மாமை திறத்துப் போன* என்னெஞ்சினாரும் அங்கே ஒழிந்தார்,*
உழந்து இனியாரைக் கொண்டெனுசாகோ?* ஓதக் கடலொலி போல* எங்கும்,
எழுந்தநல் வேதத்தொலி நின்றோங்கு* தென்திருப்பேரையில் வீற்றிருந்த,*
முழங்கு சங்கக்கையன் மாயத்தாழ்ந்தேன்* அன்னையர்க்காள்! என்னை
என்முனிந்தே?
3479:
முனிந்து சகடம் உதைத்து மாயப் பேய்முலையுண்டு* மருதிடைபோய்,*
கனிந்த விளவுக்கு கன்றெறிந்த* கண்ண பிரானுக்கென் பெண்மை தோற்றேன்,*
முனிந்தினி என்செய்தீர் அன்னைமீர்காள்!* முன்னியவன் வந்து வீற்றிருந்த,*
கனிந்த பொழில் திருப்பேரையிற்கே* காலம் பெறவென்னைக் காட்டுமினே.
3480:
காலம் பெறவென்னைக் காட்டுமின்கள்* காதல் கடலின் மிகப் பெரிதால்,*
நீலமுகில்வண்ணத்து எம்பெருமான்* நிற்குமுன்னே வந்தென் கைக்கும் எய்தான்*
ஞாலத்தவன் வந்து வீற்றிருந்த* நான்மறையாளரும் வேள்வி ஓவா,*
கோலச் செந்நெற்கள் கவரி வீசும்* கூடுபுனல் திருப்பேரையிற்கே. 7.3.6
3481:
பேரெயில் சூழ்கடல் தென்னிலங்கை* செற்றபிரான் வந்து வீற்றிருந்த,*
பேரையிற்கே புக்கென்நெஞ்சம் நாடிப்* பேர்த்து வரவெங்கும் காண மாட்டேன்,*
ஆரை இனிங்குடையம் தோழி!* என்னெஞ்சம் கூவ வல்லாரும் இல்லை,*
ஆரை இனிக்கொண்டு என் சாதிக்கின்றது* என்னெஞ்சம் கண்டதுவே கண்டேனே
3482:
கண்டதுவே கொண்டெல்லாருங் கூடிக்* கார்க்கடல் வண்ணேனாடு எந்திறத்துக்
கொண்டு* அலர் தூற்றிற்றது முதலாக்* காண்டவென் காதல் உரைக்கில் தோழி*
மண்திணி ஞாலமும் ஏழ்கடலும்* நீள்விசும்பும் கழியப் பெரிதால்,*
தெண்திரை சூழ்ந்தவன் வீற்றிருந்த* தென்திருப்பேரையில் சேர்வன சென்றே.7.3.8
3483:
சேர்வன்சென்று என்னுடைத்தோழிமீர்காள்!*அன்னையர்க்காள்!என்னைத்தேற்ற வேண்டா,*
நீர்கள் உரைக்கின்றது என்னிதற்கு?* நெஞ்சும் நிறைவும் எனக்கிங்கில்லை,*
கார்வண்ணன் கார்க்கடல் ஞால முண்ட* கண்ண பிரான்வந்து வீற்றிருந்த,*
ஏர்வள ஒண்கழனிப் பழனத்து* தென்திருப்பேரையின் மாநகரே. 7.3.9
3484:
நகரமும் நாடும் பிறவும் தேர்வேன்* நாணெனக் கில்லையென் தோழி மீர்காள்,*
சிகரம் அணிநெடு மாடம் நீடு* தென்திருப் பேரையில் வீற்றிருந்த,*
மகர நெடுங்குழைக் காதன் மாயன்* நூற்றுவரை அன்று மங்க நூற்ற,*
நிகரில் முகில்வண்ணன் நேமியான் என்* நெஞ்சம் கவர்ந்தெனை ஊழியானே?
3485:##
ஊழிதோறூழி உருவம் பேரும் செய்கையும்* வேறவன் வையங் காக்கும்,*
ஆழிநீர் வண்ணனை அச்சுதன்னை* அணிகுரு கூர்ச் சடகோபன் சொன்ன,*
கேழில் அந்தாதி ஓராயிரத்துள் இவை* திருப்பேரையில் மேய பத்தும்,*
ஆழியங்கையனை ஏத்த வல்லார்* அவரடிமைத் திறத்து ஆழியாரே. (2) 7.3.11
நான்காம் திருமொழி
3486:##
ஆழியெழச்* சங்கும் வில்லுமெழ,* திசை
வாழியெழத்* தண்டும் வாளுமெழ,* அண்டம்
மோழையெழ* முடி பாதமெழ,* அப்பன்
ஊழியெழ* உலகம் கொண்டவாறே. (2) 7.4.1
3487:
ஆறு மலைக்கு* எதிர்ந்தோடும் ஒலி,* அர
வூறு சுலாய்* மலை தேய்க்கும் ஒலி,* கடல்
மாறு சுழன்று* அழைக்கின்ற ஒலி,* அப்பன்
சாறுபட* அமுதங்கொண்ட நான்றே. 7.4.2
3488:
நான்றிலஏழ்* மண்ணும் தானத்தவே,* பின்னும்
நான்றில ஏழ்* மலை தானத்தவே,* பின்னும்
நான்றில ஏழ்* கடல் தானத்தவே,* அப்பன்
ஊன்றி இடந்து* எயிற்றில் கொண்ட நாளே. 7.4.3
3489:
நாளுமெழ* நில நீருமெழ* விண்ணும்
கோளுமெழ* எரி காலுமெழ,* மலை
தாளுமெழச்* சுடர் தானுமெழ,* அப்பன்
ஊளியெழ* உலகமுண்ட ஊணே. 7.4.4
3490:
ஊணுடை மல்லர்* ததர்ந்த ஒலி,* மன்னர்
ஆணுடை சேனை* நடுங்கும் ஒலி,* விண்ணுள்
ஏணுடைத் தேவர்* வெளிப்பட்ட ஒலி,* அப்பன்
காணுடைப் பாரதம்* கையறைப் போழ்தே. 7.4.5
3491:
போழ்து மெலிந்த* புன் செக்கரில்,* வான்திசை
சூழு மெழுந்து* உதிரப்புனலா,* மலை
கீழ்து பிளந்த* சிங்கமொத்ததால்,* அப்பன்
ஆழ்துயர் செய்து* அசுரரைக் கொல்லுமாறே. 7.4.6
3492:
மாறு நிரைத்து* இரைக்கும் சரங்கள்,* இன
நூறு பிணம்* மலை போல் புரள,* கடல்
ஆறு மடுத்து* உதிரப்புனலா,* அப்பன்
நீறுபட* இலங்கை செற்ற நேரே. 7.4.7
3493:
நேர்சரிந்தான்* கொடிக் கோழிகொண்டான்,* பின்னும்
நேர்சரிந்தான்* எரியும் அனலோன்,* பின்னும்
நேர்சரிந்தான்* முக்கண் மூர்த்திகண்டீர்,* அப்பன்
நேர்சரி வாணன்* திண்தோள் கொண்ட அன்றே. 7.4.8
3494:
அன்றுமண் நீரெரிகால்* விண் மலைமுதல்,*
அன்று சுடர்* இரண்டு பிறவும்,* பின்னும்
அன்று மழை* உயிர் தேவும் மற்றும்,* அப்பன்
அன்று முதல்* உலகம் செய்ததுமே. 7.4.9
3495:
மேய்நிரை கீழ்புக* மாபுரள,* சுனை
வாய்நிறை நீர்* பிளிறிச்சொரிய,* இன
ஆநிரை பாடி* அங்கேயொடுங்க,* அப்பன்
தீமழை காத்துக்* குன்றம் எடுத்தானே. 7.4.10
3496:##
குன்றம் எடுத்தபிரான்* அடியாரொடும்,*
ஒன்றிநின்ற* சடகோபனுரைசெயல்,*
நன்றி புனைந்த* ஓராயிரத்துள் இவை*
வென்றி தரும்பத்தும்* மேவிக் கற்பார்க்கே. (2) 7.4.11
ஐந்தாம் திருமொழி
3497:##
கற்பார் இராம பிரானை அல்லால்* மற்றும் கற்பரோ?,*
புற்பா முதலாப்* புல்லெறும்பாதி ஒன்றின்றியே,*
நற்பால் அயோத்தியில் வாழும்* சராசரம் முற்றவும்,*
நற்பாலுக்கு உய்த்தனன்* நான்முக னார்பெற்ற நாட்டுளே. (2) 7.5.1
3498:
நாட்டில் பிறந்தவர்* நாரணற்கு ஆளன்றி யாவரோ,*
நாட்டில் பிறந்து படாதன பட்டு* மனிசர்க்கா,*
நாட்டை நலியும் அரக்கரை* நாடித் தடிந்திட்டு,*
நாட்டை அளித்துய்யச் செய்து* நடந்தமை கேட்டுமே? 7.5.2
3499:
கேட்பார்கள் கேசவன் கீர்த்தியல்லால்*மற்றூம் கேட்பரோ,*
கேட்பார் செவிசுடு* கீழ்மை வசவுகளே வையும்,*
சேட்பால் பழம்பகைவன்* சிசு பாலன்,* திருவடி
தாட்பால் அடைந்த* தன்மை அறிவாரை அறிந்துமே? 7.5.3
3500:
தன்மை அறிபவர்* தாம் அவற்கு ஆளன்றி யாவரோ,*
பன்மைப் படர்பொருள்* ஆதுமில்பாழ் நெடுங்காலத்து,*
நன்மைப் புனல்பண்ணி* நான்முகனைப்பண்ணி, தன்னுள்ளே*
தொன்மை மயக்கிய தோற்றிய* சூழல்கள் சிந்தித்தே? 7.5.4
3501:
சூழல்கள் சிந்திக்கில்* மாயன் கழலன்றிச் சூழ்வரோ,*
ஆழப் பெரும்புனல்* தன்னுள் அழுந்திய ஞாலத்தை,*
தாழப் படாமல்*தன் பாலொரு கோட்டிடைத் தான்கொண்ட,*
கேழல் திருவுருவாயிற்றுக்* கேட்டும் உணர்ந்துமே? 7.5.5
3502:
கேட்டும் உணர்ந்தவர்* கேசவற்கு ஆளன்றி யாவரோ,*
வாட்டமிலா வண்கை* மாவலி வாதிக்க வாதிப்புண்டு,*
ஈட்டங்கொள் தேவர்கள்* சென்றிரந்தார்க்கு இடர் நீக்கிய,*
கோட்டங்கை வாமனனாய்ச்* செய்த கூத்துகள் கண்டுமே? 7.5.6
3503:
கண்டும் தெளிந்தும் கற்றார்* கண்ணற்கு ஆளன்றி யாவரோ,*
வண்டுன் மலர்த்தொங்கல்* மார்க்கண்டேயனுக்கு வாழுநாள்*
இண்டைச் சடைமுடி* ஈசனுடன்கொண்டு உசாச்செல்ல,*
கொண்டங்குத் தன்னொடும் கொண்டு* உடன்சென்றது உணர்ந்துமே? 7.5.7
3504:
செல்ல உணர்ந்தவர்* செல்வன்தன் சீரன்றிக் கற்பரோ,*
எல்லை யிலாத பெருந்தவத்தால்* பல செய்மிறை,*
அல்லல் அமரரைச் செய்யும்* இரணியன் ஆகத்தை,*
மல்லல் அரியுருவாய்ச்* செய்த மாயம் அறிந்துமே? 7.5.8
3505:
மாயம் அறிபவர்* மாயவற்கு ஆளன்றி யாவரோ,*
தாயம் செறும் ஒரு நூற்றுவர் மங்க* ஓரைவர்க்காய்,*
தேசம் அறிய ஓர் சாரதியாய்ச் சென்று* சேனையை
நாசம் செய்திட்டு,* நடந்த நல் வார்த்தை அறிந்துமே? 7.5.9
3506:
வார்த்தை அறிபவர்* மாயவற்கு ஆளன்றி யாவரோ,*
போர்த்த பிறப்பொடு நோயோடு மூப்பொடு* இறப்பிவை
பேர்த்து,* பெருந்துன்பம் வேரற நீக்கித்* தன் தாளின்கீழ்ச்
சேர்த்து,* அவன் செய்யும்* சேமத்தையெண்ணித் தெளிவுற்றே? (2) 7.5.10
3507:##
தெளிவுற்று வீவின்றி* நின்றவர்க்கு இன்பக்கதிசெய்யும்,*
தெளிவுற்ற கண்ணனை* தென்குருகூர்ச் சடகோபன்சொல்,*
தெளிவுற்ற ஆயிரத்துள்* இவை பத்தும் வல்லாரவர்,*
தெளிவுற்ற சிந்தையர்* பாமரு மூவுலகத்துள்ளே. (2) 7.5.11
ஆறாம் திருமொழி
3508:##
பாமரு மூவுலகும் படைத்த* பற்ப நாபாவோ,*
பாமரு மூவுலகும் அளந்த* பற்ப பாதாவோ,*
தாமரைக் கண்ணாவோ!* தனியேன் தனியாளாவோ,*
தாமரைக் கையாவோ!* உன்னை என்றுகொல் சேர்வதுவே? (2) 7.6.1
3509:
என்றுகொல் சேர்வது அந்தோ* அரன் நான்முகன் ஏத்தும்,* செய்ய
நின் திருப்பாதத்தை* யான்நிலம் நீரெரி கால்,* விண்ணுயிர்
என்றிவை தாம்முதலா* முற்றுமாய் நின்ற எந்தாயோ,*
குன்றெடுத்து ஆநிரை மேய்த்து* அவை காத்த எங்கூத்தாவோ! 7.6.2
3510:
காத்த எங்கூத்தாவோ!* மலையேந்திக் கன்மாரி தன்னை,*
பூத்தண் துழாய்முடியாய்!* புனை கொன்றையஞ் செஞ்சடையாய்,*
வாய்த்த என் நான்முகனே!* வந்தென் ஆருயிர் நீயானால்,*
ஏத்தரும் கீர்த்தியினாய்!* உன்னை எங்குத் தலைப்பெய்வனே? 7.6.3
3511:
எங்குத் தலைப்பெய்வன் நான்?* எழில் மூவுலகும் நீயே,*
அங்கு உயர் முக்கண்பிரான்* பிரம பெருமான் அவன்நீ,*
வெங்கதிர் வச்சிரக் கை* இந்திரன் முதலாத் தெய்வம்நீ,*
கொங்கலர் தண்ணந் துழாய்முடி* என்னுடைக் கோவலனே! 7.6.4
3512:
என்னுடைக் கோவலனே!* என் பொல்லாக் கருமாணிக்கமே,*
உன்னுடை உந்தி மலர்* உலகம் அவைமூன்றும் பரந்து,*
உன்னுடைச் சோதிவெள்ளத்து அகம்பால்* உன்னைக் கண்டுகொண்டிட்டு,*
என்னுடை ஆருயிரார்* எங்ஙனேகொல் வந்தெய்துவரே? 7.6.5
3513:
வந்தெய்து மாறறியேன்* மல்கு நீலச் சுடர்தழைப்ப,*
செஞ்சுடர்ச் சோதிகள் பூத்து* ஒரு மாணிக்கம் சேர்வதுபோல்,*
அந்தரமேல் செம்பட்டோடு* அடி உந்திகை மார்வுகண்வாய்,*
செஞ்சுடர்ச் சோதி விடவுறை* என்திரு மார்பனையே. 7.6.6
3514:
என்திரு மார்பன் தன்னை* என் மலைமகள் கூறன்தன்னை,*
என்றும் என்னாமகளை* அகம்பால்கொண்ட நான்முகனை,*
நின்ற சசிபதியை* நிலங்கீண்டு எயில் மூன்றெரித்த,*
வென்று புலம்துரந்த* விசும்பாளியைக் காணேனோ! 7.6.7
3515:
ஆளியைக் காண்பரியாய்*அரிகாண் நரியாய்,*அரக்கர்
ஊளையிட்டு அன்று இலங்கைகடந்து* பிலம்புக்கொளிப்ப,*
மீளியம் புள்ளைக்கடாய்* விறல் மாலியைக் கொன்று,*பின்னும்
ஆளுயர் குன்றங்கள் செய்து* அடர்த்தானையும் காண்டுங்கொலோ? 7.6.8
3516:
காண்டுங்கொலோ நெஞ்சமே!*கடிய வினையே முயலும்,*
ஆண்திறல் மீளிமொய்ம்பின்* அரக்கர் குலத்தைத் தடிந்து,*
மீண்டும் அவன் தம்பிக்கே* விரி நீரிலங்கையருளி,*
ஆண்டு தன் சோதிபுக்க* அமரர் அரியேற்றினையே? 7.6.9
3517:
ஏற்றரும் வைகுந்தத்தை* அருளும் நமக்கு,* ஆயர்குலத்து
ஈற்றிளம் பிள்ளையொன்றாய்ப்புக்கு* மாயங்களே இயற்றி,*
கூற்றியல் கஞ்சனைக் கொன்று*ஐவர்க்காய் அக்கொடுஞ்சேனைதடிந்து,*
ஆற்றல் மிக்கான் பெரிய* பரஞ்சோதி புக்க அரியே. 7.6.10
3518:##
புக்க அரியுருவாய்*அவுணனுடல் கீண்டுகந்த,*
சக்கரச் செல்வன்தன்னைக்* குருகூர்ச் சடகோபன் சொன்ன,*
மிக்க ஓராயிரத்துள்* இவைபத்தும் வல்லார் அவரை,*
தொக்குப் பல்லாண்டிசைத்துக்* கவரி செய்வர் ஏழையரே. (2) 7.6.11
ஏழாம் திருமொழி
3519:##
ஏழையர் ஆவியுண்ணும்* இணைக் கூற்றங்கொலோ அறியேன்,*
ஆழியுங் கண்ணபிரான்* திருக்கண்கள் கொலோ அறியேன்,*
சூழவும் தாமரை நாண்மலர் போல்*வந்து தோன்றும்கண்டீர்,*
தோழியர்காள்! அன்னைமீர்!* என்செய்கேன் துயராட்டியேனே? (2) 7.7.1
3520:
ஆட்டியும் தூற்றியும் நின்று*அன்னைமீர் என்னை நீர்நலிந்தென்?*
மாட்டுயர் கற்பகத்தின்*வல்லியோ கொழுந்தோ?அறியேன்,*
ஈட்டிய வெண்ணெயுண்டான்*திருமூக்கு எனதாவியுள்ளே,*
மாட்டிய வல்விளக்கின்* சுடராய்நிற்கும் வாலியதே. 7.7.2
3521:
வாலியதோர் கனிகொல்* வினையாட்டியேன் வல்வினைகொல்,*
கோலம் திரள்பவளக்* கொழுந்துண்டங்கொலோ அறியேன்,*
நீல நெடுமுகில்போல்* திருமேனி அம்மான் தொண்டைவாய்,*
ஏலும் திசையுளெல்லாம்*வந்து தோன்றும் என்இன்னுயிர்க்கே. 7.7.3
3522:
இன்னுயிர்க்கு ஏழையர்மேல்*வளையும் இணை நீலவிற்கொல்,*
மன்னிய சீர்மதனன்* கருப்புச் சிலை கொல்,*மதனன்
தன்னுயிர்த் தாதை*கண்ணபெருமான் புருவமவையே,*
என்னுயிர் மேலனவாய்* அடுகின்றன என்று நின்றே. 7.7.4
3523:
என்று நின்றேதிகழும்* செய்ய வீன்சுடர் வெண்மின்னுக்கொல்,*
அன்றி என்னாவியடும்* அணி முத்தங்கொலோ அறியேன்,*
குன்றம் எடுத்தபிரான்* முறுவல் எனதாவியடும்*,
ஒன்றும் அறிகின்றிலேன்* அன்னைமீர்! எனக்கு உய்விடமே. 7.7.5
3524:
`உய்விடம் ஏழையர்க்கும்* அசுரர்க்கும் அரக்கர்கட்கும்*
எவ்விடம்?’ என்றிலங்கி*மகரம் தழைக்கும் தளிர்கொல்,*
பைவிடப் பாம்பணையான்* திருக்குண்டலக் காதுகளே?*
கைவிடல் ஒன்றுமின்றி* அடுகின்றன காண்மின்களே. 7.7.6
3525:
காண்மின்கள் அன்னையர்காள்*!என்று காட்டும் வகையறியேன்,*
நாண்மன்னு வெண்திங்கள் கொல்!* நயந்தார்கட்கு நச்சிலைகொல்,*
சேண்மன்னு நால்தடந்தோள்* பெருமான்தன் திருநுதலே?,*
கோள்மன்னி ஆவியடும்*கொடியேன் உயிர் கோளிழைத்தே. 7.7.7
3526:
கோளிழைத் தாமரையும்* கொடியும் பவளமும் வில்லும்,*
கோளிழைத்தண் முத்தமும்* தளிரும் குளிர்வான் பிறையும்,*
கோளிழையாவுடைய* கொழுஞ்சோதி வட்டங்கொல்,* கண்ணன்,
கோளிழை வாண் முகமாய்க்* கொடியேன் உயிர் கொள்கின்றதே? 7.7.8
3527:
கொள்கின்ற கோளிருளைச்* சுகிர்ந்திட்ட கொழுஞ்சுருளின்,*
உள்கொண்ட நீல நன்னூல் தழைகொல்?*அன்று மாயன் குழல்,*
விள்கின்ற பூந்தண்துழாய்* விரைனாற வந்து என்னுயிரை,*
கள்கின்றவாறு அறியீர்* அன்னைமீர்! கழறாநிற்றிரே. 7.7.9
3528:
`நிற்றி முற்றத்துள்‘என்று*நெரித்த கையராய்*
என்னைநீர்ச்சுற்றியும் சூழ்ந்தும்* வைதிர்சுடர்ச் சோதி மணிநிறமாய்,*
முற்ற இம்மூவுலகும்* விரிகின்ற சுடர்முடிக்கே*,
ஒற்றுமைக் கொண்டது உள்ளம்*அன்னைமீர்! நசையென் நுங்கட்கே? 7.7.10
3529:##
கட்கரிய பிரமன் சிவன்* இந்திரன் என்றிவர்க்கும்,*
கட்கரிய கண்ணனைக்* குருகூர்ச் சடகோபன் சொன்ன,*
உட்குடை ஆயிரத்துள்* இவையுமொரு பத்தும்வல்லார்,*
உட்குடை வானவரோடு* உடனாய் என்றும் மாயாரே. (2) 7.7.11
எட்டாம் திருமொழி
3530:##
மாயா! வாமனனே!* மதுசூதா! நீயருளாய்,*
தீயாய் நீராய் நிலனாய்* விசும்பாய்க் காலாய்,*
தாயாய் தந்தையாய்* மக்களாய் மற்றுமாய் முற்றுமாய்,*
நீயாய் நீநின்றவாறு* இவை என்ன நியாயங்களே! (2) 7.8.1
3531:
அங்கண் மலர்த்தண் துழாய்முடி* அச்சுதனே!அருளாய்,*
திங்களும் ஞாயிறுமாய்ச்* செழும்பல் சுடராய் இருளாய்,*
பொங்கு பொழிமழையாய்ப்* புகழாய் பழியாய்ப் பின்னும்நீ,
வெங்கண் வெங்கூற்றமுமாம்* இவை என்ன விசித்திரமே! 7.8.2
3532:
சித்திரத் தேர்வலவா!* திருச்சக்கரத்தாய்!அருளாய்,*
எத்தனையோருகமும்* அவையாய் அவற்றுள் இயலும்,*
ஒத்தவொண் பல்பொருள்கள்* உலப்பில்லன வாய்வியவாய்,*
வித்தகத்தாய் நிற்றி நீ* இவை என்ன விடமங்களே! 7.8.3
3533:
கள்ளவிழ் தாமரைக்கண்* கண்ணனே! எனக்கொன்றருளாய்,*
உள்ளதும் இல்லதுமாய்* உலப்பில்லன வாய்வியவாய்,*
வெள்ளத் தடங்கடலுள்*விட நாகணை மேல்மருவி,*
உள்ளப்பல் யோகுசெய்தி* இவை என்ன உபாயங்களே! 7.8.4
3534:
பாசங்கள் நீக்கி* எனÛனை உனக்கே அறக் கொண்டிட்டு,*நீ
வாச மலர்த்தண் துழாய்முடி* மாயவனே!அருளாய்,*
காயமும் சீவனுமாய்க்* கழிவாய்ப் பிறப்பாய்ப் பின்னும்நீ,*
மாயங்கள் செய்துவைத்தி* இவையென்ன மயக்குகளே! 7.8.5
3535:
மயக்கா! வாமனனே!* மதியாம் வண்ணம் ஒன்றருளாய்,*
அயர்ப்பாய்த் தேற்றமுமாய்*அழலாய்க் குளிராய்வியவாய்,*
வியப்பாய் வென்றிகளாய்*வினையாய்ப் பயனாய்ப் பின்னும்நீ,*
துயக்காய் நீநின்றவாறு* இவை என்ன துயரங்களே! 7.8.6
3536:
துயரங்கள் செய்யுங்கண்ணா!*சுடர் நீண்முடியாய் அருளாய்,*
துயரம்செய் மானங்களாய்*மதனாகி உகவைகளாய்,*
துயரம்செய் காமங்களாய்த்*துலையாய் நிலையாய் நடையாய்,*
துயரங்கள் செய்துவைத்தி* இவையென்ன சுண்டாயங்களே. 7.8.7
3537:
என்னச்சுண்டாயங்களால்* நின்றிட்டாய் என்னையாளும்கண்ணா,*
இன்னதோர் தன்மையை என்று* உன்னையாவர்க்கும் தேற்றரியை,*
முன்னிய மூவுலகும்*அவையாய் அவற்றைப்படைத்து,*
பின்னும் உள்ளாய்!புறத்தாய்*!இவை என்ன இயற்கைகளே! 7.8.8
3538:
என்ன இயற்கைகளால்* எங்ஙனே நின்றிட்டாய் என்கண்ணா,*
துன்னு கரசரணம் முதலாக* எல்லாவுறுப்பும்*
உன்னு சுவையொளி* ஊறொலி நாற்றம் முற்றும்நீயே,*
உன்னை உணரவுறில்* உலப்பில்லை நுணுக்கங்களே. 7.8.9
3539:
இல்லை நுணுக்கங்களே* இதனில் பிறிதென்னும் வண்ணம்*
தொல்லை நன்னூலில் சொன்ன* உருவும் அருவும் நீயே:*
அல்லித் துழாயலங்கல்*அணிமார்ப! என் அச்சுதனே,*
வல்லதோர் வண்ணம்சொன்னால்*அதுவே உனக்கு ஆம்வண்ணமே. 7.8.10
3540:##
ஆம்வண்ணம் இன்னதொன்றென்று* அறிவதரிய அரியை,*
ஆம்வண்ணத்தால்*குருகூர்ச் சடகோபன் அறிந்துரைத்த*
ஆம்வண்ண ஒண்தமிழ்கள்* இவை ஆயிரத்துள் இப்பத்தும்,*
ஆம்வண்ணத்தால் உரைப்பார்* அமைந்தார் தமக்கென்றைக்குமே. (2) 7.8.11
ஒன்பதாம் திருமொழி
3541:##
என்றைக்கும் என்னை* உய்யக்கொண்டு போகிய,*
அன்றைக்கன்றென்னைத்* தன்னாக்கி என்னால் தன்னை,*
இன்தமிழ் பாடிய ஈசனை* ஆதியாய்-
நின்ற என் சோதியை,* என் சொல்லி நிற்பேனா? (2) 7.9.1
3542:
என்சொல்லி நிற்பன்* என் இன்னுயிரின் ஒன்றாய்,*
என்சொல்லால் யான்சொன்ன* இன்கவி யென்பித்து,*
தன்சொல்லால் தான்தன்னைக்* கீர்த்தித்த மாயன்,*என்
முன்சொல்லும்* மூவுருவாம் முதல்வனே. 7.9.2
3543:
ஆம்முதல்வன் இவனென்று*தன் தேற்றி,*என்
நாமுதல் வந்து புகுந்து* நல்லின்கவி,*
தூமுதல் பத்தர்க்குத்* தான்தன்னைச் சொன்ன,*என்
வாய்முதல் அப்பனை* என்று மறப்பேனா? 7.9.3
3544:
அப்பனை என்று மறப்பன்* என்னாகியே,*
தப்புதலின்றித்* தனைக் கவி தான்சொல்லி,*
ஒப்பிலாத் தீவினையேனை* உய்யக்கொண்டு*
செப்பமே செய்து* திரிகின்ற சீர்கண்டே? 7.9.4
3545:
சீர்கண்டு கொண்டு* திருந்து நல்லின்கவி,*
நேற்பட யான்சொல்லும்* நீர்மை இலாமையில்,*
ஏர்விலா என்னைத்* தன்னாக்கி எனÛனால் தன்னை,*
பார்பரவின்கவி* பாடும் பரமரே. 7.9.5
3546:
இன்கவி பாடும்* பரம கவிகளால்,*
தன்கவி தான் தன்னை* பாடுவியாது இன்று*
நன்கு வந்து என்னுடனாக்கி* என்னால் தன்னை,*
வன்கவி பாடும்* என் வைகுந்த நாதனே. 7.9.6
3547:
வைகுந்த நாதன்*என் வல்வினை மாய்ந்தறச்,*
செய்குந்தன் தன்னை* என்னாக்கி என்னால்தன்னை,*
வைகுந்தனாகப்* புகழ வண் தீங்கவி,*
செய்குந்தன் தன்னை* என்னாள் சிந்தித்தார்வேனா! 7.9.7
3548:
ஆர்வேனா ஆழியங்கை* எம்பிரான்புகழ்,*
பார்விண்நீர் முற்றும்* கலந்து பருகிலும்,*
ஏர்விலா என்னைத்* தன்னாக்கி என்னால் தன்னை,*
சீர்பெற இன்கவி* சொன்ன திறத்துக்கே? 7.9.8
3549:
திறத்துக்கே துப்புரவாம்* திருமாலின்சீர்,*
இறப்பு எதிர்காலம்* பருகிலும் ஆர்வேனா,*
மறப்பிலா என்னைத்* தன்னாக்கி என்னால் தன்னை,*
உறப்பல இன்கவி* சொன்ன உதவிக்கே? 7.9.9
3560:
உதவிக் கைம்மாறு* என்னுயிர் என்ன உற்றெண்ணில்,*
அதுவும் மற்றாங்கவன்* தன்னது என்னால் தன்னை,*
பதவிய இன்கவி* பாடிய அப்பனுக்கு,*
எதுவும் ஒன்றுமில்லை* செய்வது இங்குமங்கே. 7.9.10
3551:##
இங்கும் அங்கும்* திருமாலன்றி இன்மைகண்டு,*
அங்ஙனே வண்குருகூர்ச்* சடகோபன்,*
இங்ஙனே சொன்ன* ஓராயிரத்து இப்பத்தும்,*
எங்ஙனே சொல்லினும்* இன்பம் பயக்குமே. (2) 7.9.11
பத்தாம் திருமொழி
3552:##
இன்பம் பயக்க எழில்மலர் மாதரும்* தானும் இவ்வேழுலகை,*
இன்பம் பயக்க இனிதுடன் வீற்றிருந்து* ஆள்கின்ற எங்கள்பிரான்,*
அன்புற்று அமர்துறைகின்ற* அணிபொழில் சூழ் திருவாறன்விளை,*
அன்புற்று அமர்ந்து வலம்செய்து* கைதொழும் நாள்களும் ஆகுங்கொலோ! (2)
3553:
ஆகுங்கொல் ஐயமொன்றின்றி* அகலிடம் முற்றவும் ஈரடியே*
ஆகும் பரிசு நிமிர்ந்த* திருக்குறள் அப்பன் அமர்ந்துறையும்,*
மாகம் திகழ்கொடி மாடங்கள் நீடு* மதிள்திருவாறன்விளை,*
மாகந்த நீர்கொண்டு தூவி வலஞ்செய்து* கைதொழ கூடுங்கொலோ! 7.10.2
3554:
கூடுங்கொல் வைகலும்* கோவிந்தனை மதுசூதனைக் கோளரியை,*
ஆடும் பறவை மிசைக்கண்டு* கைதொழுதன்றி அவனுறையும்,*
பாடும் பெரும்புகழ் நான்மறை வேள்வியைந்து* ஆறங்கம் பன்னினர்வாழ்,*
நீடு பொழில் திருவாறன் விளைதொழ* வாய்க்குங்கொல் நிச்சலுமே! 7.10.3
3555:
வாய்க்குங்கொல் நிச்சலும்* எப்பொழுதும் மனத்து ஈங்கு நினைக்கப்பெற*
வாய்க்கும் கரும்பும் பெருஞ்செந்னெலும்*வயல்சூழ் திருவாறன்விளை,*
வாய்க்கும் பெரும்புகழ் மூவுலகீசன்* வட மதுரைப் பிறந்த,*
வாய்க்கும் மணிநிறக் கண்ணபிரான் தன்* மலரடிப் போதுகளே. 7.10.4
3556:
மலரடிப் போதுகள் என்னெஞ்சத்து எப்பொழுதும்*இருத்தி வணங்க,*
பலரடியார் முன்பருளிய* பாம்பணையப்பன் அமர்ந்துறையும்,*
மலரில் மணிநெடு மாடங்கள் நீடு* மதிள்திருவாறன் விளை,*
உலகம் மலிபுகழ் பாட* நம்மேல் வினை ஒன்றும் நில்லாகெடுமே. 7.10.5
3557:
ஒன்றும் நில்லா கெடும் முற்றவும்* தீவினை உள்ளித் தொழுமின் தொண்டீர்,*
அன்றங்கமர் வென்றுருப்பிணி நங்கை* அணி நெடுந்தோள்புணர்ந்தான்,*
என்றும் எப்போதும் என்னெஞ்சம் துதிப்ப* உள்ளே இருக்கின்றபிரான்,*
நின்ற அணி திருவாறன் விளையென்னும்* நீள் நகரமதுவே. 7.10.6
3558:
நீணகர மதுவே மலர்ச் சோலைகள் சூழ்*திருவாறன்விளை,*
நீணகரத்துறைகின்றபிரான்* நெடுமால் கண்ணன் விண்ணவர்கோன்*
வாண புரம்புக்கு முக்கட்ப்பிரானை தொலைய* வெம்போர்கள்செய்து,*
வாணனை ஆயிரந்தோள் துணித்தான்* சரணன்றி மற்றொன்றிலமே. 7.10.7
3559:
`அன்றிமற்றொன்றிலம் நின்சரணே!‘என்று* அகலிரும் பொய்கையின்வாய்,*
நின்றுதன் நீள் கழலேத்திய* ஆனையின் நெஞ்சிடர் தீர்த்தபிரான்,*
சென்றங்கு இனிதுறைகின்ற* செழும்பொழில் சூழ் திருவாறன்விளை,*
ஒன்றி வலஞ்செய்ய ஒன்றுமோ?* தீவினை உள்ளத்தின் சார்வல்லவே. 7.10.8
3560:
தீவினை உள்ளத்தின் சார்வல்லவாகித்* தெளிவிசும்பேறலுற்றால்,*
நாவினுள்ளும் உள்ளத் துள்ளும்* அமைந்த தொழிலினுள்ளும் நவின்று,*
யாவரும் வந்து வணங்கும் பொழில்*திருவாறன் விளையதனை,*
மேவி வலஞ்செய்து கைதொழக் கூடுங்கொல்* என்னுமென் சிந்தனையே. 7.10.9
3561:
சிந்தை மற்றொன்றின் திறத்தது அல்லாத்தன்மை* தேவ பிரானறியும்,*
சிந்தையினால் செய்வதானறியாதன* மாயங்கள் ஒன்றுமில்லை,*
சிந்தையினால் சொல்லினால் செய்கையால்* நிலத் தேவர் குழுவணங்கும்,*
சிந்தை மகிழ் திருவாறன் விளையுறை* தீர்த்தனுக்கு அற்றபின்னே. 7.10.10
3562:##
தீர்த்தனுக்கு அற்றபின்* மற்றோர் சரணில்லை என்றெண்ணி,* தீர்த்தனுக்கே
தீர்த்த மனத்தனனாகிச்* செழுங் குருகூர்ச் சடகோபன் சொன்ன,*
தீர்த்தங்கள் ஆயிரத்துள்* இவை பத்தும் வல்லார்களை,* தேவர்வைகல்
தீர்த்தங்களேயென்று பூசித்து நல்கி உரைப்பர்* தம் தேவியர்க்கே.(2) 7.10.11

