ஸ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த நாச்சியார் திருமொழி
1. தையொரு திங்கள்
| 504 | தையொரு திங்களும் தரைவிளக்கித் தண்மண் டலமிட்டு மாசிமுன்னாள், ஐயநுண் மணற்கொண்டு தெருவணிந்து அழகினுக் கலங்கரித் தனங்கதேவா, உய்யவு மாங்கொலோ வென்றுசொல்லி உன்னையு மும்பியை யும்தொழுதேன், வெய்யதோர் தழலுமிழ் சக்கரக்கை வேங்கட வற்கென்னை விதிக்கிற்றியே. |
1 |
| 505 | வெள்ளைநுண் மணற்கொண்டு தெருவணிந்து வெள்வரைப் பதன்முன்னம் துறைபடிந்து, முள்ளுமில் லாச்சுள்ளி யெரிமடுத்து முயன்றுன்னை நோற்கின்றேன் காமதேவா, கள்ளவிழ் பூங்கணை தொடுத்துக்கொண்டு கடல்வண்ண னென்பதோர் பேரெழுதி, புள்ளினை வாய்பிளந் தானென்பதோர் இலக்கினில் புகவென்னை யெய்கிற்றியே. |
2 |
| 506 | மத்தநன் னறுமலர் முருக்கமலர் கொண்டுமுப் போதுமுன் னடிவணங்கி, தத்துவ மிலியென்று நெஞ்செரிந்து வாசகத் தழித்துன்னை வைதிடாமே, கொத்தலர் பூங்கணை தொடுத்துக்கொண்டு கோவிந்த னென்பதோர் பேரேழுதி, வித்தகன் வேங்கட வாணனென்னும் விளக்கினில் புகவென்னை விதிக்கிற்றியே. |
3 |
| 507 | சுவரில் புராணநின் பேரேழுதிச் சுறவநற் கொடிகளும் துரங்கங்களும், கவரிப் பிணாக்களும் கருப்புவில்லும் காட்டித்தந் தேன்கண்டாய் காமதேவா, அவரைப் பிராயந் தொடங்கிஎன்றும் ஆதரித் தெழுந்தவென் தடமுலைகள், துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத் தொழுதுவைத் தேனொல்லை விதிக்கிற்றியே. |
4 |
| 508 | வானிடை வாழுமவ் வானவர்க்கு மறையவர் வேள்வியில் வகுத்தஅவி, கானிடைத் திரிவதோர் நரிபுகுந்து கடப்பதும் மோப்பதும் செய்வதொப்ப, ஊனிடை யாழிசங் குத்தமர்க்கென்று உன்னித் தெழுந்தவென் தடமுலைகள், மானிட வர்க்கென்று பேச்சுப்படில் வாழகில் லேன்கண்டாய் மன்மதனே. |
5 |
| 509 | உருவுடை யாரிளை யார்கள்நல்லார் ஓத்துவல் லார்களைக் கொண்டு,வைகல் தெருவிடை யெதிர்கொண்டு பங்குனிநாள் திருந்தவே நோற்கின்றேன் காமதேவா, கருவுடை முகில்வண்ணன் காயாவண்ணன் கருவிளை போல்வண்ணன், கமலவண்ணத் திருவுடை முகத்தினில் திருக்கண்களால் திருந்தவே நோக்கெனக் கருளுகண்டய். |
6 |
| 510 | காயுடை நெல்லொடு கரும்பமைத்துக் கட்டி யரிசி யவலமைத்து, வாயுடை மறையவர் மந்திரத்தால் மன்மத னே.உன்னை வணங்குகின்றேன், தேயமுன் னளந்தவன் திரிவிக்கிரமன் திருக்கைக ளாலென்னைத் தீண்டும்வண்ணம், சாயுடை வயிறுமென் தடமுலையும் தரணியில் தலைப்புகழ் தரக்கிற்றியே. |
7 |
| 511 | மாசுடை யுடம்பொடு தலையுலறி வாய்ப்புரம் வெளுத்தொரு போதுமுண்டு, தேசுடை திறலுடைக் காமதேவா. நோற்கின்ற நோன்பினைக் குறிக்கொள்கண்டாய், பேசுவ தொன்றுண்டிங் கெம்பெருமான் பெண்மையைத் தலையுடைத் தாக்கும்வண்ணம் கேசவ நம்பியைக் கால்பிடிப்பாள் என்னுமிப் பேறெனக் கருளுகண்டாய். |
8 |
| 512 | தொழுதுமுப் போதுமுன் னடிவணங்கித் தூமலர் தூய்த்தொழு தேத்துகின்றேன், பழுதின்றிப் பாற்கடல் வண்ணனுக்கே பணிசெய்து வாழப் பெறாவிடில்நான், அழுதழு தலமந்தம் மாவழங்க ஆற்றவு மதுவுனக் குறைக்குங்கண்டாய், உழுவதோ ரெருத்தினை நுகங்கொடுபாய்ந்து ஊட்டமின் றித்துரந் தாலொக்குமே. |
9 |
| 513 | கருப்புவில் மலர்க்கணைக் காமவேளைக் கழலிணை பணிந்தங்கோர் கரியலற, மருப்பினை யொசித்துப்புள் வாய்பிளந்த மணிவண்ணற் கென்னை வகுத்திடென்று, பொருப்பன்ன மாடம்பொ லிந்துதோன்றும் புதுவையர் கோன்விட்டு சித்தன்கோதை, விருப்புடை யின்தமிழ் மாலைவல்லார் விண்ணவர் கோனடி நண்ணுவரே. |
10 |

