பெரியாழ்வார் திருமொழி- முதல் பத்து 


முதல் பத்து 

இரண்டாம் திருமொழி

வண்ண மாடங்கள் சூழ் *திருக்கோட்டியூர்*

கண்ணன் கேசவன்* நம்பி பிறந்தினில்*

எண்ணெய் சுண்ணம்* எதிரெதிர் தூவிடக்*

கண்ணன் முற்றம்* கலந்து அளராயிற்றே. (2)  1.2.1.

 

ஓடுவார் விழுவார்* உகந்தாலிப்பார்*

நாடுவார் நம்பிரான்* எங்குத்தான் என்பார்*

பாடுவார்களும்* பல்பறை கொட்டநின்று*

ஆடுவார்களும் * ஆயிற்று ஆய்ப்பாடியே.    1.2.2.

 

பேணிச் சீருடைப்* பிள்ளை பிறந்தினில்*

காணத்தாம் புகுவார்* புக்குப்போதுவார்*

ஆணொப்பார் * இவன் நேரில்லைகாண்* திரு-

வோணத்தான்* உலகாளும் என்பார்களே.   1.2.3.

 

உறியை முற்றத்து* உருட்டி நின்றாடுவார்*

நறுநெய் பால்தயிர் *நன்றாகத் தூவுவார்*

செறிமென் கூந்தல்* அவிழத் திளைத்து *எங்கும்-

அறிவழிந்தனர்* ஆய்ப்பாடி ஆயரே.   1.2.4.

 

கொண்டதாளுறி *கோலக் கொடுமழு*

தண்டினர்* பறியோலைச் சயனத்தர்*

விண்டமுல்லை* அரும்பன்ன பல்லினர்*

அண்டர் மிண்டிப் புகுந்து நெய்யாடினார்.   1.2.5.

 

கையும் காலும் நிமிர்த்துக் *கடார நீர்*

பையவாட்டிப்* பசுஞ்சிறு மஞ்சளால்*

ஐயநாவழித் தாளுக்கு * அங்காந்திட*

வையம் ஏழும் கண்டாள் * பிள்ளை வாயுளே.   1.2.6.

 

வாயுள் வையகம் கண்ட * மட நல்லார்*

ஆயர் புத்திரன் அல்லன் * அருந்தெய்வம்*

பாயசீருடைப்* பண்புடைப் பாலகன்*

மாயன் என்று * மகிழ்ந்தனர் மாதரே.    1.2.7.

 

பத்துநாளும் கடந்த *இரண்டாநாள்*

எத்திசையும் *சயமரம் கோடித்து*

மத்த மாமலை*தாங்கிய மைந்தனை*

உத்தானம் செய்து* உகந்தனர் ஆயரே.     1.2.8.

 

கிடக்கில் தொட்டில் *கிழிய உதைத்திடும்*

எடுத்துக் கொள்ளில்* மருங்கையிறுத்திடும்*

ஒடுக்கிப்புல்கில் *உதரத்தே பாய்ந்திடும்*

மிடுக்கிலாமையால் *நான் மெலிந்தேன் நங்காய்.  1.2.9.

 

செந்நெலார் வயல்சூழ்* திருக்கோட்டியூர்*

மன்னு நாரணன் *நம்பி பிறந்தமை*

மின்னுநூல்* விட்டுசித்தன் விரித்த *இப்-

பன்னுபாடல் வல்லார்க்கு* இல்லை பாவமே. (2)  1.2.10.

 

மூன்றாம் திருமொழி

சீதக்கடலுள்* அமுதன்ன தேவகி*

கோதைக் குழலாள்* அசோதைக்குப் போத்தந்த*

பேதைக் குழவி* பிடித்துச் சுவைத்துண்ணும்*

பாதக் கமலங்கள் காணீரே* பவள வாயீர்! வந்து காணீரே. (2) 1.3.1.

 

முத்தும் மணியும்* வயிரமும் நன்பொன்னும்*

தத்திப் பதித்துத் *தலைப் பெய்தாற்போல் * எங்கும் –

பத்து விரலும்* மணிவண்ணன் பாதங்கள்*

ஒத்திட்டு இருந்தவா காணீரே* ஒண்ணுதலீர்! வந்து காணீரே.  1.3.2.

 

பணைத்தோள் இளவாய்ச்சி *பால் பாய்ந்த கொங்கை*

அணைத்தார உண்டு *கிடந்தஇப்பிள்ளை*

இணைக்காலில் வெள்ளித்தளை நின்றிலங்கும்*

கணைக்கால்இருந்தவா காணீரே* காரிகையீர்! வந்து காணீரே.   1.3.3.

 

உழந்தாள் நறுநெய்* ஓரோர்தடாவுண்ண*

இழந்தாள் எரிவினால்* ஈர்த்து எழில்மத்தின்*

பழந்தாம்பாலோச்சப்* பயத்தால்தவழ்ந்தான்**

முழந்தாள்இருந்தவாகாணீரே* முகிழ்முலையீர்! வந்து காணீரே.   1.3.4.

 

பிறங்கிய பேய்ச்சி* முலை சுவைத்து உண்டிட்டு*

உறங்குவான்போலே *கிடந்த இப்பிள்ளை*

மறங்கொள் இரணியன் *மார்பை முன்கீண்டான்*

குறங்குவளை வந்து காணீரே* குவிமுலையீர்! வந்து காணீரே.   1.3.5.

 

மத்தக்களிற்று* வசுதேவர்தம்முடை*

சித்தம் பிரியாத* தேவகிதன்வயிற்றில்*

அத்தத்தின் பத்தாநாள் *தோன்றிய அச்சுதன்*

முத்தம் இருந்தவா காணீரே* முகிழ்நகையீர்! வந்து காணீரே.  1.3.6.

 

இருங்கை மதகளிறு* ஈர்க்கின்றவனை*

பருங்கிப் பறித்துக் கொண்டு* ஓடுபரமன்தன்*

நெருங்குபவளமும் *நேர்நாணும்முத்தும்*

மருங்கும்இருந்தவாகாணீரே* வாணுதலீர்! வந்துகாணீரே.   1.3.7.

 

வந்தமதலைக்* குழாத்தை வலிசெய்து*

தந்தக் களிறுபோல் *தானே விளையாடும்*

நந்தன் மதலைக்கு *நன்றுமழகிய*

உந்திஇருந்தவாகாணீரே* ஒளியிழையீர்! வந்துகாணீரே.  1.3.8.

 

அதிரும் கடல்நிறவண்ணனை *ஆய்ச்சி-

மதுரமுலையூட்டி* வஞ்சித்து வைத்து*

பதரப்படாமே* பழந்தாம்பாலார்த்த*

உதரம்இருந்தவா காணீரே* ஒளிவளையீர்! வந்துகாணீரே.   1.3.9.

 

பெருமாவுரலில்* பிணிப்புண்டிருந்து* அங்கு-

இருமா மருதம்* இறுத்தஇப்பிள்ளை*

குருமாமணிப்பூண்* குலாவித்திகழும்*

திருமார்புஇருந்தவாகாணீரே* சேயிழையீர்! வந்துகாணீரே.   1.3.10.

 

நாள்களோர் நாலைந்து *திங்களளவிலே*

தாளை நிமிர்த்துச் *சகடத்தைச் சாடிப்போய்*

வாள்கொள் வளையெயிற்று *ஆருயிர்வவ்வினான்*

தோள்கள் இருந்தவா காணீரே* சுரிகுழலீர்! வந்துகாணீரே.  1.3.11.

 

மைத்தடங்கண்ணி* யசோதைவளர்க்கின்ற*

செய்த்தலை நீல நிறத்துச் * சிறுப்பிள்ளை*

நெய்த்தலை நேமியும்* சங்கும் நிலாவிய*

கைத்தலங்கள் வந்து காணீரே* கனங்குழையீர்! வந்துகாணீரே. 1.3.12.

 

வண்டமர்பூங்குழல் *ஆய்ச்சிமகனாகக்*

கொண்டு வளர்க்கின்ற* கோவலக்குட்டற்கு*

அண்டமும் நாடும்* அடங்க விழுங்கிய*

கண்டம் இருந்தவா காணீரே* காரிகையீர்! வந்துகாணீரே.   1.3.13.

 

எந்தொண்டை வாய்ச்சிங்கம்* வாவென்று எடுத்துக்கொண்டு*

அந்தொண்டை வாய்* அமுது ஆதரித்து* ஆய்ச்சியர் –

தம்தொண்டை வாயால் *தருக்கிப்பருகும்* இச்-

செந்தொண்டை வாய்வந்து காணீரே* சேயிழையீர்! வந்துகாணீரே.  1.3.14.

 

நோக்கி யசோதை* நுணுக்கிய மஞ்சளால்*

நாக்கு வழித்து *நீராட்டும் இந்நம்பிக்கு*

வாக்கும் நயனமும்* வாயும் முறுவலும்*

மூக்கும் இருந்தவா காணீரே* மொய்குழலீர்! வந்துகாணீரே.  1.3.15.

 

விண்கொளமரர்கள்* வேதனைதீர* முன்-

மண்கொள் வசுதேவர்* தம் மகனாய் வந்து*

திண்கொள் அசுரரைத் *தேய வளர்கின்றான்*

கண்கள் இருந்தவா காணீரே* கனவளையீர்! வந்துகாணீரே.   1.3.16.

 

பருவம் நிரம்பாமே* பாரெல்லாம்உய்ய*

திருவின் வடிவொக்கும்* தேவகி பெற்ற*

உருவு கரிய *ஒளிமணிவண்ணன்*

புருவம் இருந்தவா காணீரே* பூண்முலையீர்! வந்துகாணீரே.  1.3.17.

 

மண்ணும் மலையும் *கடலும் உலகேழும்*

உண்ணுந்திறத்து* மகிழ்ந்துண்ணும் பிள்ளைக்கு*

வண்ணமெழில்கொள் *மகரக்குழையிவை*

திண்ணம் இருந்தவா காணீரே* சேயிழையீர்! வந்துகாணீரே.    1.3.18.

 

முற்றிலும் தூதையும் *முன்கைம்மேல்பூவையும்*

சிற்றிலிழைத்துத்* திரிதருவோர்களை*

பற்றிப்பறித்துக்கொண்டு *ஓடும்பரமன்தன்*

நெற்றிஇருந்தவாகாணீரே* நேரிழையீர்! வந்துகாணீரே.  1.3.19.

 

அழகிய பைம்பொன்னின்*கோல் அங்கைக்கொண்டு*

கழல்கள் சதங்கை *கலந்துஎங்குமார்ப்ப*

மழகன்றினங்கள் *மறித்துத்திரிவான்*

குழல்கள்இருந்தவாகாணீரே* குவிமுலையீர்! வந்துகாணீரே.   1.3.20.

 

சுருப்பார்குழலி *யசோதைமுன்சொன்ன*

திருப்பாதகேசத்தைத்* தென்புதுவைப்பட்டன்*

விருப்பாலுரைத்த* இருபதோடொன்றும்-

உரைப்பார்போய்* வைகுந்தத்து ஒன்றுவர்தாமே. (2)   1.3.21.

 

நான்காம் திருமொழி

மாணிக்கம்கட்டி *வயிரம்இடைகட்டி*

ஆணிப்பொன்னால்செய்த *வண்ணச்சிறுத்தொட்டில்*

பேணிஉனக்குப்* பிரமன்விடுதந்தான்*

மாணிக்குறளனே! தாலேலோ* வையமளந்தானே! தாலேலோ. (2) 1.4.1.

 

உடையார்கனமணியோடு*ஒண் மாதுளம்பூ*

இடைவிரவிக்கோத்த *எழில் தெழ்கினோடு*

விடையேறுகாபாலி *ஈசன்விடுதந்தான்*

உடையாய்! அழேல்அழேல்தாலேலோ* உலகமளந்தானே! தாலேலோ.  1.4.2.

 

என்தம்பிரானார் *எழில்திருமார்வர்க்கு*

சந்தமழகிய* தாமரைத்தாளர்க்கு*

இந்திரன்தானும் *எழிலுடைக்கிண்கிணி*

தந்துஉவனாய்நின்றான்தாலேலோ* தாமரைக்கண்ணனே! தாலேலோ. 1.4.3.

 

சங்கின்வலம்புரியும் *சேவடிக்கிண்கிணியும்*

அங்கைச்சரிவளையும் *நாணும்அரைத்தொடரும்*

அங்கண்விசும்பில் *அமரர்கள்போத்தந்தார்*

செங்கண்கருமுகிலே! தாலேலோ* தேவகிசிங்கமே! தாலேலோ.  1.4.4.

 

எழிலார்திருமார்வுக்கு *ஏற்குமிவையென்று*

அழகியஐம்படையும்* ஆரமும்கொண்டு*

வழுவில்கொடையான் *வயிச்சிரவணன்*

தொழுதுவனாய் நின்றான் தாலேலோ* தூமணிவண்ணனே! தாலேலோ. 1.4.5.

 

ஓதக்கடலின்* ஒளிமுத்தின் ஆரமும்*

சாதிப்பவளமும்* சந்தச்சரிவளையும்*

மாதக்கவென்று* வருணன்விடுதந்தான்*

சோதிச்சுடர்முடியாய்! தாலேலோ* சுந்தரத்தோளனே! தாலேலோ. 1.4.6.

 

கானார் நறுந்துழாய்* கைசெய்த கண்ணியும்*

வானார் செழுஞ்சோலைக் *கற்பகத்தின் வாசிகையும்*

தேனார்மலர்மேல் *திருமங்கை போத்தந்தாள்*

கோனே! அழேல்அழேல்தாலேலோ* குடந்தைக்கிடந்தானே! தாலேலோ. 1.4.7.

 

கச்சொடுபொற்சுரிகை *காம்பு கனகவளை*

உச்சிமணிச்சுட்டி *ஒண்தாள்நிரைப்பொற்பூ*

அச்சுதனுக்கென்று* அவனியாள்போத்தந்தாள்*

நச்சுமுலையுண்டாய்! தாலேலோ* நாராயணா! அழேல்தாலேலோ.  1.4.8.

 

மெய்திமிரும் நானப் * பொடியோடு மஞ்சளும்*

செய்ய தடங்கண்ணுக்கு *அஞ்சனமும் சிந்துரமும்*

வெய்ய கலைப்பாகி * கொண்டுஉவளாய் நின்றாள்*

அய்யா! அழேல்அழேல்தாலேலோ* அரங்கத்தணையானே! தாலேலோ. 1.4.9.

 

வஞ்சனையால் வந்த* பேய்ச்சி முலையுண்ட*

அஞ்சனவண்ணனை* ஆய்ச்சி தாலாட்டிய*

செஞ்சொல் மறையவர்சேர்* புதுவைப்பட்டன்சொல்*

எஞ்சாமை வல்லவர்க்கு* இல்லைஇடர்தானே. (2)   1.4.10.

 

ஐந்தாம் திருமொழி

தன்முகத்துச்சுட்டி* தூங்கத் தூங்கத் தவழ்ந்துபோய்*

பொன்முகக் கிண்கிணியார்ப்பப்* புழுதியளைகின்றான்*

என்மகன் கோவிந்தன்* கூத்தினை இளமாமதீ!*

நின்முகம் கண்ணுளவாகில்* நீஇங்கேநோக்கிப்போ. (2) 1.5.1.

 

என்சிறுக்குட்டன்* எனக்கோர் இன்னமுது எம்பிரான்*

தன்சிறுக்கைகளால்* காட்டிக் காட்டி அழைக்கின்றான்*

அஞ்சன வண்ணேனாடு* ஆடலாட உறுதியேல்*

மஞ்சில் மறையாதே* மாமதீ! மகிழ்ந்தோடிவா.   1.5.2.

 

சுற்றும் ஒளிவட்டம் * சூழ்ந்து சோதி பரந்தெங்கும்*

எத்தனை செய்யினும்* என்மகன் முகம்நேரொவ்வாய்*

வித்தகன் வேங்கடவாணன்* உன்னை விளிக்கின்ற*

கைத்தலம் நோவாமே* அம்புலீ! கடிதோடிவா.     1.5.3.

 

சக்கரக்கையன்* தடங்கண்ணால் மலரவிழித்து*

ஒக்கலைமேலிருந்து* உன்னையே சுட்டிக்காட்டும்காண்*

தக்கதறிதியேல்* சந்திரா! சலம்செய்யாதே*

மக்கட்பெறாத* மலடன் அல்லையேல் வா கண்டாய்.     1.5.4.

 

அழகியவாயில்* அமுதவூறல் தெளிவுறா*

மழலைமுற்றாத இளஞ்சொல்லால்* உன்னைக் கூவுகின்றான்*

குழகன்சிரீதரன்* கூவக்கூவ நீபோதியேல்*

புழை இலவாகாதே* நின்செவி புகர் மாமதீ!    1.5.5.

 

தண்டொடுசக்கரம்* சார்ங்கம் ஏந்தும் தடக்கையன்*

கண்துயில் கொள்ளக்கருதிக்* கொட்டாவி கொள்கின்றான்*

உண்ட முலைப்பாலறா கண்டாய்* உறங்காவிடில்*

விண்தனில் மன்னிய* மாமதீ! விரைந்தோடிவா.    1.5.6.

 

பாலகனென்று* பரிபவம்செய்யேல்* பண்டொருநாள்-

ஆலினிலை வளர்ந்த* சிறுக்கனவன் இவன்*

மேலெழப் பாய்ந்து* பிடித்துக்கொள்ளும் வெகுளுமேல்*

மாலைமதியாதே* மாமதீ! மகிழ்ந்தோடிவா.     1.5.7.

 

சிறியனென்று என்* இளஞ் சிங்கத்தை இகழேல்கண்டாய்*

சிறுமையின் வார்த்தையை* மாவலியிடைச்சென்றுகேள்*

சிறுமைப் பிழை கொள்ளில்* நீயும்உன் தேவைக்குரியை காண்*

நிறைமதீ! நெடுமால்* விரைந்து உன்னைக்கூவுகின்றான். 1.5.8.

 

தாழியில் வெண்ணெய்* தடங்கையார விழுங்கிய*

பேழைவயிற்று எம்பிரான்* கண்டாய் உன்னைக்கூவுகின்றான்*

ஆழிகொண்டு உன்னை எறியும்* ஐயுறவு இல்லைகாண்*

வாழவுறுதியேல்* மாமதீ! மகிழ்ந்தோடிவா.     1.5.9.

 

மைத்தடங்கண்ணி* யசோதை தன் மகனுக்கு* இவை-

ஒத்தனசொல்லி* உரைத்த மாற்றம்* ஒளிபுத்தூர்-

வித்தகன் விட்டுசித்தன்* விரித்ததமிழிவை*

எத்தனையும் சொல்ல வல்லவர்க்கு* இடரில்லையே. (2) 1.5.10.

 

ஆறாம் திருமொழி

உய்யஉலகு படைத்துண்ட மணிவயிறா!*

            ஊழிதோறூழி பலஆலினிலை அதன்மேல்*

பையஉயோகு துயில்கொண்ட பரம்பரனே!*

            பங்கய நீள்நயனத்து அஞ்சனமேனியனே!*

செய்யவள் நின்னகலம் சேமமெனக்கருதிச்*

            செல்வு பொலிமகரக் காது திகழ்ந்திலக*

ஐய! எனக்கு ஒருகால் ஆடுகசெங்கீரை*

            ஆயர்கள்போரேறே! ஆடுகஆடுகவே. (2)   1.6.1.

 

கோளரியின் உருவங்கொண்டு அவுணனுடலம்*

            குருதி குழம்பியெழக் கூருகிரால் குடைவாய்!*

மீளஅவன் மகனை மெய்ம்மை கொளக்கருதி*

            மேலையமரர்பதி மிக்கு வெகுண்டுவர*

காளநன்மேகமவை கல்லொடு கால்பொழியக்*

            கருதி வரைக்குடையாக் காலிகள்காப்பவனே!*

ஆள! எனக்கு ஒருகால் ஆடுகசெங்கீரை*

            ஆயர்கள்போரேறே! ஆடுகஆடுகவே.  1.6.2.

 

நம்முடைநாயகனே! நான்மறையின்பொருளே!*

            நாவியுள் நற்கமல நான்முகனுக்கு* ஒருகால்-

தம்மனையானவனே! தரணிதலமுழுதும்*

            தாரகை இன்னுலகும் தடவிஅதன்புறமும்*

விம்மவளர்ந்தவனே! வேழமும்ஏழ்விடையும்*

            விரவியவேலைதனுள்வென்றுவருமவனே!*

அம்ம! எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை*

            ஆயர்கள்போரேறே! ஆடுகஆடுகவே.     1.6.3.

 

வானவர்தாம்மகிழ வன்சகடம் உருள*

            வஞ்சமுலைப்பேயின் நஞ்சமதுஉண்டவனே!*

கானக வல்விளவின் காயுதிரக்கருதிக்*

            கன்றதுகொண்டெறியும் கருநிறஎன்கன்றே!*

தேனுகனும் முரனும் திண்திறல்வெந்நரகன்*

            என்பவர்தாம் மடியச் செருவதிரச்செல்லும்*

ஆனை! எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை*

            ஆயர்கள்போரேறே! ஆடுகஆடுகவே.    1.6.4.

 

மத்தளவும் தயிரும் வார்குழல் நன்மடவார்*

            வைத்தன நெய் களவால் வாரிவிழுங்கி* ஒருங்கு-

ஒத்தஇணைமருதம் உன்னியவந்தவரை*

            ஊருகரத்தினொடும் உந்தியவெந்திறலோய்!*

முத்தினிள முறுவல் முற்ற வருவதன்முன்*

            முன்னமுகத்தணியார் மொய்குழல்களலைய*

அத்த! எனக்கு ஒருகால் ஆடுகசெங்கீரை*

            ஆயர்கள்போரேறே! ஆடுகஆடுகவே.    1.6.5.

 

காயமலர்நிறவா! கருமுகில்போலுருவா!*

            கானக மாமடுவில் காளியன் உச்சியிலே*

தூயநடம் பயிலும் சுந்தர என்சிறுவா!*

            துங்கமதக்கரியின் கொம்புபறித்தவனே!*

ஆயமறிந்து பொருவான் எதிர்வந்தமல்லை*

            அந்தரமின்றி அழித்தாடிய தாளிணையாய்!*

ஆய! எனக்கு ஒருகால் ஆடுகசெங்கீரை*

            ஆயர்கள்போரேறே! ஆடுகஆடுகவே.   1.6.6.

 

துப்புடை ஆயார்கள் தம்சொல்வழுவாது ஒருகால்*

            தூயகருங்குழல் நல்தோகைமயிலனைய*

நப்பினைதன் திறமா நல்விடை ஏழவிய*

            நல்ல திறலுடைய நாதனும் ஆனவனே!*

தப்பின பிள்ளைகளைத் தனமிகுசோதிபுகத்*

            தனியொரு தேர்கடவித் தாயொடுகூட்டிய* என்-

அப்ப! எனக்கு ஒருகால் ஆடுகசெங்கீரை*

            ஆயர்கள்போரேறே! ஆடுகஆடுகவே.   1.6.7.

 

## உன்னையும் ஒக்கலையில் கொண்டு தமில்மருவி*

            உன்னொடு தங்கள் கருத்தாயின செய்துவரும்*

கன்னியரும் மகிழக் கண்டவர் கண்குளிரக்*

            கற்றவர் தெற்றிவரப் பெற்ற எனக்குஅருளி*

மன்னுகுறுங்குடியாய்! வெள்ளறையாய்!* மதிள்சூழ்-

            சோலைமலைக்கரசே! கண்ணபுரத்தமுதே!*

என்னவலம்களைவாய்! ஆடுகசெங்கீரை*

            ஏழுலகும்முடையாய்! ஆடுகஆடுகவே. (2) 1.6.8.

 

பாலொடு நெய்தயிர் ஒண்சாந்தொடு சண்பகமும்*

            பங்கயம் நல்ல கருப்பூரமும் நாறிவர*

கோலநறும்பவளச் செந்துவர்வாயினிடைக்*

            கோமள வெள்ளிமுளைப்போல் சிலபல்லிலக*

நீலநிறத்தழகார் ஐம்படையின்நடுவே*

            நின்கனி வாயமுதம் இற்றுமுறிந்துவிழ*

ஏலுமறைப்பொருளே! ஆடுகசெங்கீரை*

            ஏழுலகும்முடையாய்! ஆடுகஆடுகவே.   1.6.9.

 

செங்கமலக்கழலில் சிற்றிதழ்போல்விரலில்*

            சேர்திகழ் ஆழிகளும்கிண்கிணியும்* அரையில்-

தங்கிய பொன்வடமும் தாளநன்மாதுளையின்*

            பூவொடு பொன்மணியும் மோதிரமும் கிறியும்*

மங்கலஐம்படையும் தோல்வளையும்குழையும்*

            மகரமும் வாளிகளும் சுட்டியும்ஒத்திலக*

எங்கள்குடிக்கரசே! ஆடுகசெங்கீரை*

            ஏழுலகும்முடையாய்! ஆடுகஆடுகவே. 1.6.10.

 

அன்னமும் மீனுருவும் ஆளரியும் குறளும்*

            ஆமையுமானவனே! ஆயர்கள்நாயகனே!*

என்அவலம்களைவாய்! ஆடுகசெங்கீரை*

            ஏழுலகும்முடையாய்! ஆடுக ஆடுகவென்று*

அன்னநடைமடவாள் அசோதை உகந்தபரிசு*

            ஆனபுகழ் புதுவைப்பட்டன் உரைத்ததமிழ்*

இன்னிசை மாலைகள் இப்பத்தும் வல்லார்* உலகில்-

            எண்திசையும் புகழ்மிக்கு இன்பமது எய்துவரே. (2)  1.6.11.

 

ஏழாம் திருமொழி

மாணிக்கக்கிண்கிணியார்ப்ப* மருங்கின்மேல்*

ஆணிப்பொன்னால்செய்த* ஆய்பொன்னுடைமணி*

பேணிப்பவளவாய் முத்திலங்க* பண்டு-

காணிகொண்டகைகளால்சப்பாணி* கருங்குழல்குட்டனே! சப்பாணி. (2) 1.7.1.

 

பொன்னரைநாணொடு* மாணிக்கக்கிண்கிணி*

தன்னரையாடத்* தனிச்சுட்டிதாழ்ந்தாட*

என்னரைமேல்நின்றிழிந்து* உங்கள் ஆயர்தம்*

மன்னரைமேல்கொட்டாய்சப்பாணி* மாயவனே! கொட்டாய்சப்பாணி. 1.7.2.

 

பன்மணிமுத்து* இன்பவளம் பதித்தன்ன*

என்மணிவண்ணன்!* இலங்குபொற்றேட்டின்மேல்*

நின்மணிவாய்முத்திலங்க* நின்னம்மைதன்*

அம்மணிமேல்கொட்டாய்சப்பாணி* ஆழியங்கையனே! சப்பாணி.  1.7.3.

 

தூநிலாமுற்றத்தே* போந்துவிளையாட*

வானிலாஅம்புலீ!* சந்திரா! வாவென்று*

நீநிலாநின்புகழா* நின்றஆயர்தம்*

கோநிலாவக் கொட்டாய்சப்பாணி* குடந்தைக்கிடந்தானே! சப்பாணி. 1.7.4.

 

புட்டியில்சேறும்* புழுதியும்கொண்டுவந்து*

அட்டியமுக்கி* அகம்புக்கறியாமே*

சட்டித்தயிரும்* தடாவினில்வெண்ணெயும்உண்*

பட்டிக்கன்றே! கொட்டாய்சப்பாணி* பற்பநாபா! கொட்டாய்சப்பாணி.  1.7.5.

 

தாரித்துநூற்றுவர்* தந்தைசொல்கொள்ளாது*

போருய்த்துவந்து* புகுந்தவர்மண்ணாள*

பாரித்தமன்னர்படப்* பஞ்சவர்க்கு* அன்று-

தேருய்த்தகைகளால்சப்பாணி* தேவகிசிங்கமே! சப்பாணி.   1.7.6.

 

பரந்திட்டுநின்ற* படுகடல்தன்னை*

இரந்திட்டகைம்மேல்* எறிதிரைமோத*

கரந்திட்டுநின்ற* கடலைக்கலங்க*

சரந்தொட்டகைகளால்சப்பாணி* சார்ங்கவிற்கையனே! சப்பாணி. 1.7.7.

 

குரக்கினத்தாலே* குரைகடல்தன்னை*

நெருக்கிஅணைகட்டி* நீள்நீரிலங்கை*

அரக்கர்அவிய* அடுகணையாலே*

நெருக்கியகைகளால்சப்பாணி* நேமியங்கையனே! சப்பாணி.   1.7.8.

 

அளந்திட்டதூணை* அவன்தட்ட* ஆங்கே-

வளர்ந்திட்டு* வாளுகிர்ச்சிங்கவுருவாய்*

உளந்தொட்டிரணியன்* ஒண்மார்வகலம்*

பிளந்திட்டகைகளால்சப்பாணி* பேய்முலையுண்டானே! சப்பாணி. 1.7.9.

 

அடைந்திட்டுஅமரர்கள்* ஆழ்கடல்தன்னை*

மிடைந்திட்டுமந்தரம்* மத்தாகநாட்டி*

வடம்சுற்றி* வாசுகிவன்கயிறாக*

கடைந்திட்டகைகளால்சப்பாணி* கார்முகில்வண்ணனே! சப்பாணி. 1.7.10.

 

ஆட்கொள்ளத்தோன்றிய* ஆயர்தன் கோவினை*

நாட்கமழ்பூம்பொழில்* வில்லிபுத்தூர்ப்பட்டன்*

வேட்கையால்சொன்ன* சப்பாணிஈரைந்தும்*

வேட்கையினால்சொல்லுவார்* வினைபோமே. (2) 1.7.11.

 

எட்டாம் திருமொழி

தொடர் சங்கிலிகை சலார்பிலாரென்னத்* தூங்கு பொன்மணியொலிப்ப*

படுமும் மதப்புனல்சோர வாரணம்பைய* நின்றுஊர்வதுபோல்*

உடன்கூடிக் கிண்கிணியாரவாரிப்ப* உடைமணி பறைகறங்க*

தடந்தாளிணைகொண்டு சார்ங்கபாணி* தளர்நடைநடவானோ. (2)   1.8.1.

 

செக்கரிடை நுனிக்கொம்பில் தோன்றும்* சிறுபிறை முளைப்போல்*

நக்கசெந்துவர் வாய்த் திண்ணை மீதே* நளிர்வெண் பல் முளையிலக*

அக்கு வடமுடுத்து ஆமைத் தாலிபூண்ட* அனந்தசயனன்*

தக்க மாமணிவண்ணன் வாசுதேவன்* தளர்நடைநடவானோ.  1.8.2.

 

மின்னுக் கொடியும் ஓர்வெண்திங்களும்* சூழ்பரி வேடமுமாய்*

பின்னல் துலங்கும் அரசிலையும்* பீதகச் சிற்றாடையொடும்*

மின்னில் பொலிந்ததோர் கார்முகில்போலக்* கழுத்தினில் காறையொடும்*

தன்னில் பொலிந்த இருடீகேசன்* தளர்நடைநடவானோ.   1.8.3.

 

கன்னல்குடம் திறந்தால் ஒத்து ஊறிக்* கணகண சிரித்துவந்து*

முன்வந்து நின்று முத்தம்தரும்* என் முகில்வண்ணன் திருமார்வன்*

தன்னைப் பெற்றேற்குத் தன்வாயமுதம்தந்து* என்னைத் தளிர்ப்பிக்கின்றான்*

தன் எற்று மாற்றலர் தலைகள் மீதே* தளர்நடைநடவானோ.  1.8.4.

 

முன்னலோர் வெள்ளிப் பெருமலைக்குட்டன்* மொடுமொடு விரைந்தோட*

பின்னைத் தொடர்ந்ததோர் கருமலைக்குட்டன்* பெயர்ந் தடியிடுவதுபோல்*

பன்னியுலகம் பரவியோவாப் புகழ்ப்* பலதேவனென்னும்*

தன் நம்பியோடப்பின் கூடச்செல்வான்* தளர்நடைநடவானோ.  1.8.5.

 

ஒருகாலில்சங்கு ஒருகாலில்சக்கரம்* உள்ளடி பொறித்தமைந்த*

இருகாலும்கொண்டு அங்கங்கு எழுதினாற்போல்* இலச்சினை படநடந்து*

பெருகா நின்ற இன்பவெள்ளத்தின்மேல்* பின்னையும் பெய்துபெய்து*

கருகார்க் கடல்வண்ணன் காமர்தாதை* தளர்நடைநடவானோ.  1.8.6.

 

படர் பங்கயமலர் வாய்நெகிழப்* பனிபடு சிறு துளிபோல்*

இடங்கொண்ட செவ்வாயூறி யூறி* இற்றிற்று வீழநின்று*

கடுஞ் சேக்கழுத்தின் மணிக் குரல்போல்* உடைமணி கணகணென*

தடந்தாளினை கொண்டு சார்ங்கபாணி* தளர்நடைநடவானோ.   1.8.7.

 

பக்கம் கருஞ் சிறுப்பாறை மீதே* அருவிகள் பகர்ந்தனைய*

அக்குவடம் இழிந்தேறித் தாழ* அணி அல்குல்புடைபெயர*

மக்களுலகினில் பெய்தறியா* மணிக் குழவியுருவின்*

தக்க மாமணிவண்ணன் வாசுதேவன்* தளர்நடைநடவானோ.   1.8.8.

 

வெண்புழுதிமேல் பெய்து கொண்டு அளைந்ததோர்* வேழத்தின் கருங்கன்று போல்*

தெண் புழுதியாடித் திரிவிக்கிரமன்* சிறுபுகர் படவியர்த்து*

ஒண் போதலர் கமலச்சிறுக்கால் * உறைத்து ஒன்றும்நோவாமே*

தண்போது கொண்ட தவிசின்மீதே* தளர்நடைநடவானோ.   1.8.9.

 

திரைநீர்ச் சந்திரமண்டலம் போல்* செங்கண்மால்கேசவன்* தன் –

திருநீர் முகத்துத் துலங்கு சுட்டி* திகழ்ந்தெங்கும் புடைபெயர*

பெருநீர்த் திரையெழு கங்கையிலும்* பெரியதோர் தீர்த்த பலம்-

தருநீர்* சிறுச் சண்ணம் துள்ளம்சோரத்* தளர்நடைநடவானோ. 1.8.10.

 

ஆயர்குலத்தினில் வந்துதோன்றிய* அஞ்சனவண்ணன் தன்னை*

தாயர்மகிழ ஒன்னார்தளரத்* தளர்நடை நடந்ததனை*

வேயர்புகழ்விட்டுசித்தன்* சீரால் விரித்தன உரைக்க வல்லார்*

மாயன்மணிவண்ணன் தாள்பணியும்* மக்களைப்பெறுவர்களே.  1.8.11.

 

ஒன்பதாம் திருமொழி

பொன்னியல்கிண்கிணி* சுட்டிபுறம்கட்டி*

தன்னியலோசை* சலஞ்சலன் என்றிட*

மின்னியல் மேகம்* விரைந்தெதிர் வந்தாற்போல்*

என்னிடைக்கோட்டரா அச்சோவச்சோ* எம்பெருமான்! வாரா அச்சோவச்சோ. 1.9.1.

 

செங்கமலப்பூவில்* தேனுண்ணும் வண்டேபோல்*

பங்கிகள்வந்து* உன் பவளவாய் மொய்ப்ப*

சங்கு வில் வாள் தண்டு* சக்கரமேந்திய*

அங்கைகளாலேவந்து அச்சோவச்சோ* ஆரத்தழுவா வந்துஅச்சோவச்சோ. 1.9.2.

 

பஞ்சவர்தூதனாய்ப்* பாரதம்கைசெய்து*

நஞ்சுமிழ் நாகம்* கிடந்த நல்பொய்கை புக்கு*

அஞ்சப்பணத்தின்மேல்* பாய்ந்திட்டுஅருள்செய்த*

அஞ்சனவண்ணனே! அச்சோவச்சோ* ஆயர்பெருமானே! அச்சோவச்சோ. 1.9.3.

 

நாறிய சாந்தம்* நமக்கிறைநல்கென்ன*

தேறிஅவளும்* திருவுடம்பில்பூச*

ஊறியகூனினை* உள்ளேயொடுங்க* அன்று-

ஏறவுருவினாய்! அச்சோவச்சோ* எம்பெருமான்! வாராஅச்சோவச்சோ. 1.9.4.

 

கழல்மன்னர்சூழக்* கதிர்போல்விளங்கி*

எழலுற்று மீண்டே* இருந்துஉன்னைநோக்கும்*

சுழலைப்பெரிதுடைத்* துச்சோதனனை*

அழல விழித்தானே! அச்சோவச்சோ* ஆழியங்கையனே! அச்சோவச்சோ. 1.9.5.

 

போரொக்கப்பண்ணி* இப்பூமிப்பொறைதீர்ப்பான்*

தேரொக்கவூர்ந்தாய்!* செழுந்தார் விசயற்காய்*

காரொக்கும்மேனிக்* கரும்பெருங்கண்ணனே!*

ஆரத் தழுவா வந்துஅச்சோவச்சோ* ஆயர்கள்போரேறே! அச்சோவச்சோ. 1.9.6.

 

மிக்கபெரும்புகழ்* மாவலிவேள்வியில்*

தக்கதி தன்றென்று* தானம்விலக்கிய*

சுக்கிரன்கண்ணைத்* துரும்பால்கிளறிய*

சக்கரக்கையனே! அச்சோவச்சோ* சங்கமிடத்தானே! அச்சோவச்சோ. 1.9.7.

 

என்னிதுமாயம்?* என்னப்பன்அறிந்திலன்*

முன்னையவண்ணமே* கொண்டு அளவாயென்ன*

மன்னுநமுசியை* வானில்சுழற்றிய*

மின்னுமுடியனே! அச்சோவச்சோ* வேங்கடவாணனே! அச்சோவச்சோ.  1.9.8.

 

கண்டகடலும்* மலையும்உலகேழும்*

முண்டத்துக் காற்றா* முகில்வண்ணா ஓ! என்று*

இண்டைச் சடைமுடி* ஈசன் இரக்கொள்ள*

மண்டை நிறைத்தானே! அச்சோவச்சோ* மார்வில்மறுவனே! அச்சோவச்சோ. 1.9.9.

 

துன்னியபேரிருள்* சூழ்ந்து உலகைமூட*

மன்னியநான்மறை* முற்றும்மறைந்திட*

பின்னிவ்வுலகினில்* பேரிருள்நீங்க* அன்று-

அன்னமதானானே! அச்சோவச்சோ* அருமறைதந்தானே! அச்சோவச்சோ. 1.9.10.

 

நச்சுவார்முன்னிற்கும்* நாராயணன்தன்னை*

அச்சோவருகவென்று* ஆய்ச்சியுரைத்தன*

மச்சணிமாடப்* புதுவைகோன்பட்டன்சொல்*

நிச்சலும்பாடுவார்* நீள்விசும்பாள்வரே. (2)   1.9.11.

 

பத்தாம் திருமொழி

வட்டுநடுவே* வளர்கின்ற* மாணிக்க –

மொட்டுநுனையில்* முளைக்கின்றமுத்தேபோல்*

சொட்டுச்சொட்டென்னத்* துளிக்கத்துளிக்க* என்-

குட்டன்வந்துஎன்னைப்புறம்புல்குவான்* கோவிந்தன்என்னைப்புறம்புல்குவான். 1.10.1.

 

கிங்கிணிகட்டிக்* கிறிகட்டி கையினில்*

கங்கணமிட்டுக்* கழுத்தில்தொடர்கட்டி*

தன்கணத்தாலே* சதிராநடந்துவந்து*

என்கண்ணன்என்னைப்புறம்புல்குவான்* எம்பிரான்என்னைப்புறம்புல்குவான்.  1.10.2.

 

கத்தக்கதித்துக்* கிடந்தபெருஞ்செல்வம்*

ஒத்துப்பொருந்திக்கொண்டு* உண்ணாதுமண்ணாள்வான்*

கொத்துத்தலைவன்* குடிகெடத்தோன்றிய*

அத்தன்வந்துஎன்னைப்புறம்புல்குவான்* ஆயர்களேறுஎன்புறம்புல்குவான்.   1.10.3.

 

நாந்தகமேந்திய* நம்பிசரணென்று*

தாழ்ந்த தனஞ்சயற்காகி* தரணியில் –

வேந்தர்களுட்க* விசயன்மணித்திண்தேர்*

ஊர்ந்தவன்என்னைப்புறம்புல்குவான் உம்பர்கோன்என்னைப்புறம்புல்குவான்.  1.10.4.

 

வெண்கலப் பத்திரம் கட்டி* விளையாடி*

கண்பலசெய்த* கருந்தழைக்காவின்கீழ்*

பண்பலபாடிப்* பல்லாண்டிசைப்ப* பண்டு-

மண் பல கொண்டான் புறம்புல்குவான்* வாமனன்என்னைப்புறம்புல்குவான்.  1.10.5.

 

சத்திரமேந்தித்* தனியொருமாணியாய்*

உத்தரவேதியில்* நின்றஒருவனை*

கத்திரியர்காணக்* காணிமுற்றும்கொண்ட*

பத்திராகாரன் புறம்புல்குவான்* பாரளந்தான்என்புறம்புல்குவான்.    1.10.6.

 

பொத்த வுரலைக் கவிழ்த்து* அதன்மேலேறி*

தித்தித்தபாலும்* தடாவினில்வெண்ணெயும்*

மெத்தத் திருவயிறு* ஆர விழுங்கிய*

அத்தன்வந்துஎன்னைப்புறம்புல்குவான்* ஆழியான்என்னைப்புறம்புல்குவான். 1.10.7.

 

மூத்தவை காண* முது மணற் குன்றேறி*

கூத்துஉவந்தாடிக்* குழலால் இசைபாடி*

வாய்த்த மறையோர் வணங்க* இமையவர்-

ஏத்த வந்து என்னைப்புறம்புல்குவான்* எம்பிரான்என்னைப்புறம்புல்குவான்.  1.10.8.

 

கற்பகக் காவு* கருதிய காதலிக்கு*

இப்பொழுது ஈவதென்று* இந்திரன் காவினில்*

நிற்பனசெய்து* நிலாத் திகழ் முற்றத்துள்*

உய்த்தவன்என்னைப்புறம்புல்குவான்* உம்பர்கோன்என்னைப்புறம்புல்குவான். 1.10.9.

 

ஆய்ச்சி அன்றாழிப்பிரான்* புறம்புல்கிய*

வேய்த்தடந்தோளிசொல்* விட்டுசித்தன்மகிழ்ந்து*

ஈத்ததமிழிவை* ஈரைந்தும்வல்லவர்*

வாய்த்தநன்மக்களைப்பெற்று* மகிழ்வரே.(2) 1.10.10.