பெரியாழ்வார் அருளிச்செய்த
நான்காம் பத்து –முதல் திருமொழி – கதிராயிரம்
(ஸர்வேஸ்வரனைக் காணவேணுமென்று தேடுவார் சிலரும், கண்டார் சிலருமாகக் கூறுதல்)
| 328: | கதிராயிரமிரவி கலந்தெரித்தாலொத்தநீள்முடியன் எதிரில்பெருமைஇராமனை இருக்குமிடம்நாடுதிரேல் அதிரும்கழற்பொருதோள் இரணியனாகம்பிளந்துஅரியாய் உதிரமளைந்தகையோடிருந்தானை உள்ளவாகண்டாருளர். |
1 |
| 329 | நாந்தகம்சங்குதண்டு நாணொலிச்சார்ங்கம்திருச்சக்கரம் ஏந்துபெருமைஇராமனை இருக்குமிடம்நாடுதிரேல் காந்தள்முகிழ்விரல்சீதைக்காகிக் கடுஞ்சிலைசென்றிறுக்க வேந்தர்தலைவஞ்சனகராசன்தன் வேள்வியில்கண்டாருளர். |
2 |
| 330 | கொலையானைக்கொம்புபறித்துக் கூடலர்சேனைபொருதழிய சிலையால்மராமரமெய்ததேவனைச் சிக்கெனநாடுதிரேல் தலையால்குரக்கினம்தாங்கிச்சென்று தடவரைகொண்டடைப்ப அலையார்கடற்கரைவீற்றிருந்தானை அங்குத்தைக்கண்டாருளர். |
3 |
| 331 | தோயம்பரந்தநடுவுசூழலில் தொல்லைவடிவுகொண்ட மாயக்குழவியதனைநாடுறில் வம்மின்சுவடுரைக்கேன் ஆயர்மடமகள்பின்னைக்காகி அடல்விடையேழினையும் வீயப்பொருதுவியர்த்துநின்றானை மெய்ம்மையேகண்டாருளர். |
4 |
| 332 | நீரேறுசெஞ்சடைநீலகண்டனும் நான்முகனும் முறையால் சீரேறுவாசகஞ்செய்யநின்ற திருமாலைநாடுதிரேல் வாரேறுகொங்கைஉருப்பிணியை வலியப்பிடித்துக்கொண்டு தேரேற்றி சேனைநடுவுபோர்செய்யச் சிக்கெனக்கண்டாருளர். |
5 |
| 333 | பொல்லாவடிவுடைப்பேய்ச்சிதுஞ்சப் புணர்முலைவாய்மடுக்க வல்லானை மாமணிவண்ணனை மருவுமிடம்நாடுதிரேல் பல்லாயிரம்பெருந்தேவிமாரொடு பௌவம்ஏறிதுவரை எல்லாரும்சூழச்சிங்காசனத்தே இருந்தானைக்கண்டாருளர். |
6 |
| 334 | வெள்ளைவிளிசங்குவெஞ்சுடர்த்திருச்சக்கரம் ஏந்துகையன் உள்ளவிடம்வினவில் உமக்குஇறைவம்மின்சுவடுரைக்கேன் வெள்ளைப்புரவிக்குரக்குவெல்கொடித் தேர்மிசைமுன்புநின்று கள்ளப்படைத்துணையாகிப் பாரதம்கைசெய்யக்கண்டாருளர். |
7 |
| 335 | நாழிகைகூறிட்டுக்காத்துநின்ற அரசர்கள்தம்முகப்பே நாழிகைபோகப்படைபொருதவன் தேவகிதன்சிறுவன் ஆழிகொண்டுஅன்றுஇரவிமறைப்பச் சயத்திரதன்தலையை பாழிலுருளப்படைபொருதவன் பக்கமேகண்டாருளர். |
8 |
| 336 | மண்ணும்மலையும்மறிகடல்களும் மற்றும்யாவுமெல்லாம் திண்ணம்விழுங்கியுமிழ்ந்ததேவனைச் சிக்கெனநாடுதிரேல் எண்ணற்கரியதோரேனமாகி இருநிலம்புக்கிடந்து வண்ணக்கருங்குழல்மாதரோடு மணந்தானைக்கண்டாருளர். |
9 |
| 337 | கரியமுகில்புரைமேனிமாயனைக் கண்டசுவடுரைத்து புரவிமுகம்செய்துசெந்நெலோங்கி விளைகழனிப்புதுவை திருவிற்பொலிமறைவாணன்பட்டர்பிரான் சொன்னமாலைபத்தும் பரவுமனமுடைப்பத்தருள்ளார் பரமனடிசேர்வர்களே. |
10 |

