ஐந்தாம் திருமொழி


688 தருதுயரம் தடாயேலுன் சரணல்லால் சரணில்லை
விரைகுழுவு மலர்ப்பொழில்சூழ் விற்றுவக்கோட் டம்மானே
அரிசினத்தா லீன்றதாய் அகற்றிடினும் மற்றவள்தன்
அருள்நினைந்தே யழும்குழவி அதுவேபோன் றிருந்தேனே .
1

 

689 கண்டா ரிகழ்வனவே காதலன்றான் செய்திடினும்
கொண்டானை யல்லா லறியாக் குலமகள்போல்
விண்டோ ய் மதிள்புடைசூழ் விற்றுவக்கோட் டம்மாநீ
கொண்டாளா யாகிலுமுன் குரைகழலே கூறுவனே .
2

 

690 மீன்நோக்கும் நீள்வயல்சூழ் விற்றுவக்கோட் டம்மாஎன்
பால்நோக்கா யாகிலுமுன் பற்றல்லால் பற்றில்லேன்
தான்நோக்கா தெத்துயரம் செய்திடினும் தார்வேந்தன்
கோல்நோக்கி வாழும் குடிபோன்றி ருந்தேனே .
3

 

691 வாளா லறுத்துச் சுடினும் மருத்துவன்பால்
மாளாத காதல்நோ யாளன்போல் மாயத்தால்
மீளாத் துயர்தரினும் விற்றுவக்கோட் டம்மாநீ
ஆளா வுனதருளே பார்ப்ப னடியேனே .
4

 

692 வெங்கண்திண் களிறடர்த்தாய் விற்றுவக்கோட் டம்மானே
எங்குப்போ யுய்கேனுன் னிணையடியே யடையலல்லால்
எங்கும்போய்க் கரைகாணா தெறிகடல்வாய் மீண்டேயும்
வங்கத்தின் கூம்பேறும் மாப்பறவை போன்றேனே .
5

 

693 செந்தழலே வந்தழலைச் செய்திடினும் செங்கமலம்
அந்தரஞ்சேர் வெங்கதிரோற் கல்லா லலராவால்
வெந்துயர்வீட் டாவிடினும் விற்றுவக்கோட் டம்மாஉன்
அந்தமில்சீர்க் கல்லா லகங்குழைய மாட்டேனே .
6

 

694 எத்தனையும் வான்மறந்த காலத்தும் பைங்கூழ்கள்
மைத்தெழுந்த மாமுகிலே பார்த்திருக்கும் மற்றவைப்போல்
மெய்த்துயர்வீட் டாவிடினும் விற்றுவக்கோட் டம்மாஎன்
சித்தம்மிக வுன்போலே வைப்ப னடியேனே .
7

 

695 தொக்கிலங்கி யாறெல்லாம் பரந்தோடி தொடுகடலே
புக்கன்றிப் புறம்நிற்க மாட்டாத மற்றவைபோல்
மிக்கிலங்கு முகில்நிறத்தாய் விற்றுவக்கோட் டம்மாஉன்
புக்கிலங்கு சீரல்லால் புக்கிலன்காண் புண்ணியனே .
8

 

696 நின்னையே தான்வேண்டி நீள்செல்வம் வேண்டாதான்
தன்னையே தான்வேண்டும் செல்வம்போல் மாயத்தால்
மின்னையே சேர்திகிரி விற்றுவக்கோட் டம்மானே
நின்னையே தான்வேண்டி நிற்ப னடியேனே .
9

 

697 விற்றுவக்கோட் டம்மாநீ வேண்டாயே யாயிடினும்
மற்றாரும் பற்றில்லே னென்றுஅவனைத் தாள்நயந்த
கொற்றவேல் தானைக் குலசே கரஞ்சொன்ன
நற்றமிழ்பத் தும்வல்லார் நண்ணார் நரகமே .
10